இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக நீடிப்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது என்று டோனி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி சிம்பாவேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.
ஒருநாள் போட்டிகள் ஹராரேயில் வருகிற 11, 13, 15 ஆகிய திகதிகளிலும், 20 ஓவர் போட்டி அதே மைதானத்தில் 18, 20, 22 ஆகிய திகதிகளிலும் நடக்கிறது.
சிம்பாவே போட்டி தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்கள் விராட்கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் அணியில் அதிக அளவில் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி, மும்பையில் இருந்து நேற்று சிம்பாவே புறப்பட்டது. முன்னதாக தலைவர் டோனி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது..
இந்த போட்டி தொடர் எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஏறக்குறைய ஒரே பிரிவு வீரர்களுடன் நான் விளையாடி வந்து இருக்கிறேன். இந்த போட்டி தொடரில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுடன் தற்போது தான் முதல்முறையாக இணைந்து விளையாட உள்ளேன்.
எனவே வீரர்களின் பலம், பலவீனத்தை விரைவில் ஆராய்ந்து அதற்கு தகுந்த படி அணியில் வீரர்களை இடம் பிடிக்க செய்ய வேண்டியது அவசியமானதாகும். முடிந்த அளவுக்கு சரியான இடத்தில் உரிய நபர்களை பயன்படுத்த வேண்டும். அணியின் ஒருங்கிணைப்பு நேர்த்தியாக அமைந்தால் அணி நன்றாக இருக்கும்.
சிம்பாவேயில் பகல் போட்டியில் நாணயசுழற்சி முக்கிய பங்கு வகிக்கும். சூழ்நிலைக்கு தகுந்த படி நமது அணுகுமுறையை மாற்றி, அதற்கு தகுந்தபடி செயல்படுவது கூடுதல் பலமாக அமையும்.
சர்வதேச போட்டியில் விளையாடுவது என்பது சிறிது வித்தியாசமானதாகும். இந்திய அணிக்காக விளையாடுகையில் வித்தியாசமான நெருக்கடி இருக்க தான் செய்யும். அத்துடன் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்திய அணியில் திறமையான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் இந்திய அணி நன்றாக உள்ளது.
எனது வருங்காலம் குறித்து கேட்கிறீர்கள். நான் எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாடி வருகிறேன். தலைவர் பதவியில் தொடர்வது குறித்து இந்திய கிரிக்கெட் சபைதான் முடிவு செய்ய முடியும். இந்த விடயத்தில் நான் முடிவு செய்ய முடியாது.
இந்திய அணியின் பயிற்சியாளராக சிறந்த நபரை நியமிக்க வேண்டும். அவர் நமது கலாசாரத்தை நன்கு புரிந்தவராக இருக்க வேண்டும். இந்தி பேச தெரிந்து இருக்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல. ஆங்கிலத்தில் வீரர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தலைவர் டோனி கூறினார்.
உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக தொடர்ந்து ஆறாவது முறையாக தேர்வாகியுள்ளார் ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல்.
அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் 11வது முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலை வெளியிட்டு உள்ளது இதில் ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்த்ல் உள்ளார். ஏஞ்சலா கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி 6 முறை இந்த பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இந்த பட்டியலில் முதன் முறையாக இடம் பிடித்துள்ள ஸ்கொட்லாந்து அரசியல்வாதியான நிக்கோலா ஸ்டர்ஜியன் 50வது இடத்தில் உள்ளார்.
ஏஞ்சலா மெர்கலுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்புகள் உள்ள ஹிலாரி கிளிண்டன் உள்ளார். மூன்றாவது இடத்தில் இருப்பவர் அமெரிக்க மத்திய வங்கிகளுக்கான முதன்மை அதிகாரியாக பணியாற்றிவரும் ஜேனட் யெல்லென்.
4வது மற்றும் 5வது இடங்களில் மெலிண்டா கேட்ஸ் மற்றும் ஜெனரல் மோட்டோர் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான மேரி பர்ரா ஆகியோர் உள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மீச்செல் 13வது இடத்திலும், இவரை அடுத்து 14 வது இடத்தில் இந்திரா நூயி உள்ளார். இந்தியாவில் ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் அருந்ததி பட்டாச்சார்யா 25 வது இடத்தில் உள்ளார். மியான்மர் ஆங் சான் சூ கி 26 வது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து மகாராணியார் 29வது இடத்திலும் உள்ளனர். ராணி எலிசபெத் கடந்த ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில் 49வது இடத்தில் இருந்தார்.
பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா 36 வது இடத்தில் உள்ளார்.
சென்னை தரமணியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் தமிழில் சிறந்த அறிஞர்களுக்கு செம்மொழி தமிழுக்கான குடியரசு தலைவர் விருதுகளை (2013-2014) அறிவித்துள்ளது.
தொல்காப்பியர் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது. அவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் புலமை பெற்றவர். 45 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பிற கல்வி நிறுவனங்களிலும் ஆய்வுப்பணி ஆற்றியவர். இவருக்கு இந்த விருதுடன் 5 லட்சம் வழங்கப்படுகிறது.
இளம் அறிஞர் விருது முனைவர் உல.பாலசுப்பிரமணியன், முனைவர் கலை.செழியன், முனைவர் சோ.ராஜலட்சுமி, முனைவர் த.மகாலட்சுமி, முனைவர் சவ்.பா.சாலாவாணி ஸ்ரீ ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளுடன் தலா 1 லட்சம் கொடுக்கப்படுகிறது.
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (07.06.2016) இரவு 11.45 அளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில், மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தை சேர்ந்த 49 வயது மதிக்கதக்க செல்வசுந்தரம் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக, தெரியவந்துள்ளது.
இவர் சுகயீனம் காரணமாக நேற்று மாலையே சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கேசன்துறை கடற்பகுதியில் பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 158 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக, காங்கேசன்துறை பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்பகுதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், பாறைகளுக்கு நடுவில் பொதிகள் இருப்பதை அவதானித்து அருகில் சென்று பார்த்த போது, அவற்றில் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது.
மேலும், இவை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட நிலையில், பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சிரிப்பு ஒரு ஆரோக்கியமான தொற்று, ஒருவர் சிரித்தால் உடன் இருப்பவரும் சிரிப்பார் இந்த சிரிப்பு ஆரோக்கியமான உடலினை தருகிறது அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியினை தந்து உடல் வலியினையும், மன உளைச்சலையும் நீக்குகின்றது.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பதற்கு அமைய மனிதனுக்கு செலவில்லா எளிய மருந்து சிரிப்புதான் என்பது உண்மை.
இன்று தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவை என்றே சொல்லலாம்.
கடுமையான, கொடுமையான நிகழ்ச்சிகளை பார்க்கும் மனம், சோகத்திலேயே இருக்கும் அதனையே தொடர்ந்து நினைப்பது ஒரு வழக்கமாகி விடும்.
அதனால் எவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பிறரையும் மகிழ்ச்சியாக வைக்க முடியாது முடிவில் சோகத்திலேயே பழகும் ஒரு மனிதன் நிரந்தர நோயாளியாகவே ஆகி விடுகின்றான். சிரிக்கத் தெரிந்த மனிதனுக்கு இயற்கையாகவே ஆரோக்கியம் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்.
இது தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் சர்க்கரை நோயாளிகளை உணவுக்குப் பின் இரு பிரிவாக பிரித்து ஒரு பிரிவினரை சிரிப்பு மிகுந்த நாடகம் ஒன்றினை பார்க்கச் செய்தனர்.
மற்றொரு பிரிவினரை சற்று திகிலான நாடகத்தினை பார்க்க செய்தனர் அவர்களின் சர்க்கரை அளவினை பரிசோதித்த பொழுது நகைச்சுவை நாடகத்தை பார்த்தவர்களின் சர்க்கரை அளவு சரியான அளவில் இருந்தது.
திகில் நாடகத்தினை பார்த்தவர்களின் சர்க்கரை அளவு அதிகரித்து இருந்தது. ஆகவேத்தான் சர்க்கரை நோயாளிகளை எப்பொழுதும் டென்ஷன் இன்றி மகிழ்ச்சியுடன் இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும்,
இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும்,
இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும்,
இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும்,
விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று ‘பஞ்சாங்க சாஸ்திரம்’ சொல்கிறது. பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.
நற்பலன் தரும் கனவுகள்.
ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.
எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.
சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கைமிகும்.
சுப சொப்பனங்கள்.
பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல், ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும்.
வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு.
தீ புகைந்தும், நெருப்புப் பொறிகள் பறந்தும் அந்த வஸ்திரம் எரிந்து போவதாகக் கனவு கண்டால் தொழில், விவசாயம் இவற்றில் நஷ்டம் ஏற்படலாம்.
தீப்பிடித்து எரிந்து சாம்பலாவதுபோலக் கனவு கண்டால் கஷ்டம், நோய்கள் ஏற்படக் கூடும்.
புகையும், நெருப்புப் பொறிகளும் இல்லாமல் நன்றாக எரிவது போலக் கனவு கண்டிருந்தால் சொத்து சேரும், அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கும். இருக்கும் பிணிகள் மருத்துவம் செய்யாமலேயே பறந்துவிடும்.
நீர் நிலை கனவுகள்
நீர் நிலைகளை கனவில் பார்த்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடல் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும்.
நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப்போகிறார் என்பதை இந்த கனவு தெரிவிக்கிறது.
வெள்ளை நாகம் கனவில் வந்தால்,இந்தக் கனவு ஒரு ஆபத்தை முன் கூட்டியே அறிவிக்கும் ஒரு முன்னோடியாகவே தோன்றுகிறது.
வெள்ளை நாகம் என்பது பொதுவாகவே எதிர்காலத்தை குறிக்கும். ஆகவே எந்த வித புது முயற்சிகளையும் மேற்கொள்ளும்போது ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுங்கள்.
இறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?
இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம்,பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.
இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.
தீய பலன் தரும் கனவுகள்.
பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.
குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.
குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.
குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும்.
அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.
அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்டமும் உண்டாகும்.
எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும்.
அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம்.
வெண்பட்டு ஆடை உடுத்தியிருப்பதாகக் காண நேரின் பெண்களின் சேர்க்கையும் அதனால், இலாபமும் நேரும் தன்னை யாரோ
ஏமாற்றிவிட்டதாகக் கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம்.
நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர். எலுமிச்ச மரத்தைக் காண்பது நல்லது.
அதில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
அதுவே பழமாக இல்லாது காயாக இருப்பின் பண வரவு ஏற்படும். ஆனால் மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.
எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும்.
அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.
காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும்.
தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.
சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார்.
ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர் உண்மை.
நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், முளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன.
இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான். அவற்றில் உண்மை கிடையாது. `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போலத்தான்.
கனவுகள் தொடர்பான பலன்களும்! நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீயபலனுக்கும்!
பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம். பாலூட்டி இன மிருகமே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன. அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம்.
கனவு பற்றிய மேலும் சில உண்மைத் தகவல்கள்:
பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம்பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி கைக் குழந்தைகளும் கனவு காண்கின்றன.ஏன்
தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது.
மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன அடைய நினைக்கும் உயர்நிலையை நம் எண்ணங்களை வாக்கியங்களாய் அமைத்து நம் பார்வையில் படும்படி வைப்பது நல்ல பலனைத் தரும்.
ஏனெனில் எது கண்களில் படுகின்றதோ அது மனதில் ஆழமாகப் பதிகின்றது. மனம், தொடர்ந்து எதை நினைக்கின்றதோ அதுவாகவே நாம் ஆகிறோம்.
வெற்றியின் முதல் கட்டம் நம்மை நாமே வெற்றியாளராக பார்ப்பதுதான். இதுமட்டும் வெற்றிக்கான காரணி ஆகிவிடாது. கனவில் கண்டு மகிழ்ந்த காட்சியும் கண்முன்னே தெரியும் வாசகங்களும் நிஜம் பெற சரியான திட்டம் தேவை.
சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம்நேற்றைய தினம் 06.06.2016 திங்கட் கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவங்கள் ஆலயத்தில் இடம் பெறவுள்ளது. 14 ஆம் திகதி செய்வாய்க்கிழமை 108 சங்குகளால் அம்பாளுக்கு பால் அபிஷேகமும் 15 ஆம் திகதி புதன்கிழமை பகல் சிவபூசையுடன் இரவு திருமஞ்சமும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் விசேட கருட பூசையும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு பெரிய சப்பரத்திருவிழாவும் மறுதினமான 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தேர்த்திருவிழாவும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை தெற்பத்திருவிழாவுடன் ஆலயத்தினது உற்சவங்கள் யாவும் நிறைவடையும்.
வவுனியா புளியங்குளம் இராமனூர் தனிநாயகம் அடிகளார் வித்தியாலயத்தில் நேற்று (06.06.2016) இரவு காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன.
வவுனியா ஏ9 வீதிக்கு அருகே காணப்படும் புளியங்குளம் இராமனூர் தனிநாயகம் அடிகளார் வித்தியாலயத்தில் நேற்று இரவு காட்டுயானைகள் பாடசாலை வாளகத்திற்குள் புகுந்து பயன்தரு மரங்களை சேதப்படுத்தியதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குதல் தினசரி அதிகரித்தே காணப்படுகின்றன. அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித பலனும் இல்லை என விசனம் தெரிவித்தார்.
கொழும்பு – கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை பார்வையிடும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இதன்படி நாளை முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அனைவருக்கும், ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்டன் பூங்காவைப் பார்வையிட முடியும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 29 ஆளுனர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள் இருந்த குறித்த மாளிகை வரலாற்றில் முதன் முறையாக மக்கள் பார்வைக்கு திறக்கப்படவுள்ளது என்பது விஷேட அம்சமாகும்.
இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களை 077 30 86 366 என்ற கைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
12 பேரை கொன்ற யானை ஒன்று இன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவாய – தேவகிரிகந்த பிரதேசத்தில் வைத்தே இந்த யானை பிடிபட்டுள்ளது.
குறித்த யானையானது அம்பேகமுவ, பலஹருவ, உனகந்த, வெஹரயாய, எத்திலிவௌ, சிறிபுர ஆகிய பிரதேசங்களில் பல அட்டூழியங்களை புரிந்த யானை என்றும், குறித்த பிரதேசங்களில் 12 நபர்களை கொன்ற யானை என்றும் நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சின் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிடிக்கப்பட்ட யானையானது ஹொரவப்பொத்தான யானைகள் தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா எக்காளத்தொனி பூரண சுவிசேச சபைக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியா யாழ் வீதி எக்காளத்தொனி பூரண சுவிசேச சபைக்கு பிளாஸ்ரிக் கதிரைகளை எக்காளத்தொனி பூரண சுவிசேச சபைபோதகரிடம் வழங்கினார்.
நடந்து முடிந்த மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4ற்குரிய கவிதை ஆக்கப் போட்டியில் வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவி செல்வி.ச.டிலக்சி 1ம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் 2013ம் ஆண்டு உயர்தரம் கற்று மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உடற்கல்வி பாடநெறிக்கு தெரிவு செய்யபட்டு ஆரம்ப செலவிற்க்கு கூட வசதியற்றவர்களாக இருந்த சுதர்சினி ,சுதனலோஜினி ஆகிய இரு மாணவிகளுக்கும் கல்மடு மகாவித்தியாலய அதிபர் எஸ்.அமராவதி அவர்கள் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பிரித்தானியா தமிழ் தேசிய செயற்பாட்டு குழுவால் இரு மாணவிகளுக்குமான பொருட்கள், போக்குவரத்து செலவுக்கான பணம் என்பன நேற்று (06.06.2016) வழங்கப்பட்டன.
பிரித்தானியா தமிழ் தேசிய செயற்பாட்டு குழுவால் வழங்கப்பட்ட இந்த உதவிகளை அதிபர் எஸ்.அமராவதி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயாலாளர் மாணிக்கம் ஜெகன், பாடசாலை ஆசிரியை திருமதி சீவரட்ணம் ஆகியோர் பாடசாலை அதிபர் காரியாலயத்தில் வைத்து வழங்கினர்.
இலங்கையில் முன்னணி நிறுவனத்தின் வருடாந்த வெளிநாட்டு சுற்றுலாவிற்கு தாய்லாந்திற்குச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விபத்து சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடபகுதியில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு வியாபார முகாமையாளராக கடமையாற்றிய அ.நிர்மலராஜன்(37)(யூலி) கடந்த 04.06.2016 அன்று தாய்லாந்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதாகவும் இச்சுற்றுலாவிற்கு நிறுவனத்தில் பணிபுரிந்த சக பணியாளர்களுடன் சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இரவது சடலத்தினை இலங்கைக்கு எடுத்துவருவதற்கு குறித்த நிறுவனம் ஏற்பாடுகளை செய்துவருவதாகவும் மேலும் தெரியவருகின்றது. இவர் மன்னாரை பிறப்பிடமாகவும் தற்போது திருகோணமலையில் வசித்தவருவதும் குறிப்பிடத்தக்கது.
கானா நாட்டில் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட மணப்பெண் ஒருவரின் புகைப்படங்களுக்கு இணையத்தளத்தில் கிடைத்த கிண்டல் பதிவுகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில்(Ghana) Mzznaki Tetteh என்ற பெண்ணின் Kojo Amoah என்பவர் காதலித்து எதிர்வரும் யூன் 23ம் திகதி திருமணம் செய்துக் கொள்ள உள்ளனர்.
காதலி அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். காதலன் ஒரு கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இருவரின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் உற்சாகத்துடன் நிகழ்ந்துள்ளது. காதலி மற்ற பெண்களை விட அளவுக்கு அதிகமான எடையுடன் உடல் பெருத்து காணப்பட்டாலும், காதலன் அதனை பெரிதாக கருதாமல் இருவரும் அன்பாகவே பழகி வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை காதலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஒருசில விஷமிகள் மணப்பெண்ணின் உடல் தோற்றத்தை மோசமாக விமர்சித்து கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘என்ன செய்வது? இதுபோன்ற தம்பதியையும் இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பது வருந்தத்தக்கது.
மணப்பெண் உடனடியாக உணவை கட்டுப்படுத்தும் பயிற்சியை எடுக்க வேண்டும். இதே உருவத்தில் மணப்பெண் திருமண உடுப்புகளை அணிந்தால் மிகவும் அறுவெறுப்பாக தான் இருக்கும். இந்த தம்பதியை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
இதைவிட மோசமாக மற்றொரு நபர் பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்த தம்பதியை பார்த்தால் எனக்கு பொறாமையாக இல்லை. ஆனால், மணமகனின் பாதுகாப்பை நினைத்து தான் கவலைப்படுகிறேன்.
ஏனெனில், ஒரு புகைப்படத்தில் மணப்பெண்ணை தூக்க முடியாமல் மிகவும் போராடுகிறார். பாவம், அவரது எதிர்காலம் இருண்டு விடுமோ என்று தான் அச்சப்படுகிறேன்’ என அநாகரீகமாக பதிவிட்டுள்ளார்.
ஆனால், இந்த கிண்டல் பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டு மணப்பெண் கூலாக ஒரு பதில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘உங்களது கிண்டலான, முட்டாள்த்தனமான பதிவுகள் எங்கள் இருவரின் மகிழ்ச்சியை கெடுத்துவிடாது. நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம்.
இதே நம்பிக்கையுடன் நாங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவோம்.எங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்த மற்ற நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிலளித்து கிண்டல் செய்தவர்களின் வாயை அடைத்துள்ளார்.