கடந்த 9ம் திகதி லண்டனின் பிரென்ட் நகரில் தனது இரு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட இலங்கைத் தமிழ்ப் பெண் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகிருந்தது.
இந்நிலையில் அக்குடும்பத்தினர் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இப்புகைப்படத்தில் வல்வெட்டித்துறை நெடிகாட்டினைச் சேர்ந்த சக்திவேல் வாகீஸ்வரன், இறந்த மனைவி ஜெயவாணி, அவர்களது இறந்த குழந்தைகளான அனோபன், நதீபன் ஆகியோர் காணப்படுகின்றனர்.
இவர்களின் பரிதாப மரணம் தற்கொலை என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் இளம் வீரர் வீராத் கோலி, பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென் ஆபிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய இந்திய அணி நேற்று நியூசிலாந்து புறப்பட்டு சென்றது. அங்கு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.
இந்நிலையில் நியூசிலாந்து புறப்படுவதற்கு முன்பாக வீராத் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா புதிதாக வாங்கியிருக்கும் 3 பிளாட்டுகள் அடங்கிய வீட்டில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக சந்தித்து கொண்ட இருவரும், அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். நேற்று மற்ற வீரர்கள் கிளம்பி சென்ற பின்னர் விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் வீராட் கோலி அமர்ந்திருந்தார்.
அதற்கு அனுஷ்காவின் கார் வருவதற்கு 20 நிமிடங்கள் தாமதமானதே காரணமென கூறப்படுகிறது.
இதேபோன்று தான் தென் ஆப்ரிக்கா செல்வதற்கு முன்பாகவும் அனுஷ்காவை கோலி சந்தித்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நடந்த நாய்களுக்கான கண்காட்சியில் விதம் விதமான நாய்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டியுள்ளன.
சென்னை மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் நடத்தப்பட்ட இந்த காண்காட்சியானது வய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் 7 சுற்றுக்களில் நடைபெற்ற இந்த போட்டியில் சொல் பேச்சு கேட்பது உள்ளிட்ட பிரிவுகளில் நாய்கள் கலந்து கொண்டன.
இந்தப் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 365 நாய்கள் கலந்து கொண்டன. மொத்தம் 45 இன வகை நாய்கள் பங்கேற்றன.
இதில் நமீதாவின் சொக்லேட் நாயும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டியது. இந்த நாயானது அங்கு வந்திருந்த அனைத்து ரசிர்களையும் கவர்ந்திழுத்துவிட்டது.
அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தனது வீட்டு செர்பியன் ஹஸ்கி நாயுடன் வந்திருந்தார்.
வடகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களினால் தற்போது மேற்கொள்ளப்படும் கழிவு முகாமைத்துவமுறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படல் வேண்டுமென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியா நகர சபையில் நேற்று முன்தினம் (12.1) நடைபெற்ற நகரசுத்திகரிப்பு தொழிலாளர்களுடானான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக வவுனியா நகர சபை மற்றும் பிரதேச சபையின் ஊழியர்களால் தமக்கு நிரந்தர நியமனம் வழங்ககோரி நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடந்து பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வழங்குவதற்காக வடமாகாண சபையில் தீர்மானமொன்று சுகாதார அமைச்சரினால் கொண்டுவரப்படிருந்தது.
இந்த நிலையில் சுகாதார அமைச்சரின் வேண்டுகோளிற்கிணங்க ஊழியர்களின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களை நேற்று முன்தினம் சுகாதார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், உள்ளுராட்சி சபைகளில் வேலைசெய்யும் ஊழியர்கள் மாவட்டத்தின் சுகாதார துறையின் முன்னேற்றத்திற்கு மறைமுகமாக பெரும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டில் வவுனியாவை ஆட்டிப்படைத்த டெங்கு உயிர்க்கொல்லி நோய் பரவுவதை தடுப்பதற்கு சுகாதார ஊழியர்கள் பெரும்பங்காற்றியுள்ளனர். எனவே உங்களின் பணியானது சமூகப்பொறுப்பு வாய்ந்தது. உங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதற்கு இந்த மாகாணசபை ஒருபோதும் பின்நிற்காது.
அதேபோல் தற்போதைய கழிவு முகாமைத்துவ முறைகள் மேலும் நவீன மயப்படுத்தப்படல் வேண்டும். குறிப்பாக கடைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்டும்போது உக்கக்டையக்கூடிவை, உக்கலடையாதவை தனித்தனியாக சேகரிக்கப்டல் வேண்டும்.
அத்துடன் உக்கலடையக்கூடியவை கூட்டெருவாக மாற்றப்பட்டு பயிர்ச்செய்க்கு சேதன உரமாக பயன்படுத்தப்படுவதுடன் ஏனைய பிளாத்திக்கு போன்றவை மீள்சுழற்சிக்கு பயன்படுத்தப்படல் வேண்டும். முதற்கட்டமாக வவுனியா நகரசபையின் கழிவுமுகாமைத்துவம் நவீனமயப்படுத்தப்பட்டு ஏனைய மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வான்கூவர் பகுதியை சேர்ந்தவர் தெரசா கோடாட்(45).
இவர் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திற்கு சென்று, அங்கிருந்த இரு குழந்தைகளை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து கடந்தாண்டு ஜூன் மாதம் 26ம் திகதி வாஷிங்டனின் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தெரசா கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 9ம் திகதி குற்றவாளியான தெரசாவிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாவீரன் அலெக்ஸாண்டர் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மங்கள் தற்போது அம்பலமாகி உள்ளது.
கிரேக்க நாட்டில் 356 கி.மூ வில் மாவீர புதல்வராய் தோன்றியவர் அலெக்ஸாண்டர், இவர் மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர் எனவும் அழைக்கப்பட்டார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளை குவித்தவராக இன்றளவும் போற்றப்படுகிறார்.
தன் 32 வயது வரை பெரும் போர்களை அசாதாரணமாக மேற்கொண்டு, உலகின் பெரும்பகுதியை வென்று சாதனை படைத்துள்ளார். வரலாற்றில் தனக்கென தனி இடம் ஒன்றை பிடித்து தோல்வியே கண்டிராத இம்மாவீரரின் மரணம் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.
இது குறித்து ஒட்டாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர் லியோ செப் கூறுகையில், கேளிக்கை விருந்தின்போது அலெக்ஸாண்டர் அதிக அளவில் மது அருந்துவது வழக்கம்.
அப்படியான விருந்தொன்றின்போது, அவருக்கு வெராட்ரம் ஆல்பம் எனப்படும் மூலிகைச் செடியின் பூவில் இருந்து தயாரிக்கப்பட்ட மது வழங்கப்பட்டிருக்கிறது, வெராட்ரம் ஆல்பம் வொய்ட் ஹெல்போர் எனவும் அழைக்கப்படுகிறது.
வெள்ளை நிறப் பூவை உடைய இந்த மூலிகை, கிரேக்க பழங்கால மருத்துவத்தில் வாந்தி எடுக்கத் தூண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பூவைக் கொண்டு நொதிக்கச் செய்யப்பட்ட மதுவே, அலெக்ஸாண்டரின் உயிரைப் பறித்திருக்கிறது.
மற்ற விஷங்கள் உடனடியாகக் கொன்றிருக்கும். ஆனால், அலெக்ஸாண்டர் மரணப்படுக்கையில் 12 நாட்கள் இருந்தார்.
அவரால் நடக்கவோ, பேசவோ இயலவில்லை. மிகுந்த அவஸ்தைக்குப் பிறகு அவர் உயிர் பிரிந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் அலெக்ஸாண்டருக்கு எப்படி விஷம் கொடுக்கப்பட்டது என்பது புரியாத ஒரு விடயமாக உள்ளது எனவும் ஆய்வாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள சீனக் கப்பல்கள் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கிடைக்கும் என சீனா எச்சரித்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுவா சுன்யிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்..
எங்கள் பகுதிகளின் இறையாண்மையை பாதுகாப்பதில் அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை ஜப்பான் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த விவகாரத்தில் ஜப்பான் எங்களை சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ஜப்பான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தாது வளமும், எண்ணெய் வளமும் மிக்கதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதிகள் 2012ம் ஆண்டு வரை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தன. இந்நிலையில், அப் பகுதிகள் தங்களது எல்லைக்குட்பட்டவை என சீனா அறிவித்தது.
சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய அப்பகுதிகளை இணைத்து தனது வான் பாதுகாப்பு மண்டலமாக சீனா அறிவித்ததால், ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.
அதனையடுத்து தற்காப்புக்காக மட்டும் படைகள் என்ற கொள்கையைக் கைவிட்டு, தாக்கும் திறனை அதிகரிக்கும் வகையில் படைகளை நவீனப்படுத்தப் போவதாக ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே தெரிவித்தார்.
மேலும் இரண்டாம் உலகப்போரில், ஜப்பானின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை நினைவுபடுத்தும் யாசுகுன் போர் நினைவகத்துக்குச் சென்றும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந் நடவடிக்கைகளைக் கண்டித்த சீனா, தனது போர்க்கப்பல்களை சர்ச்சைக்குரிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியது.
அது குறித்து ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஓனோடெரா தெரிவிக்கையில் எங்கள் கடல் பகுதியில் சீனா மீண்டும் மீண்டும் அத்துமீறுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஹுவா சுன்யிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தைத் திங்கள் முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடும் தனிப்பெரும் விழா தைப் பொங்கல் விழா. இவ்விழாவின் தனித் தன்மைகள் சிலவற்றைக் இக்கட்டுரையில் காண்போம்.
சமயங்கள் கடந்த விழா..
பொதுவாக இந்து சமயச் சார்புடைய விழாக்கள் நட்சத்திரம் அல்லது திதி அடிப்படையில் அமையும். தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் முதலியவை நட்சத்திரம் அடிப்படையில் அமைந்த விழாக்கள். கந்த சஷ்டி, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி முதலியவை திதி அடிப்படையில் அமைந்த விழாக்கள். சமயச்சான்றோர்களின் பிறந்த நாளும் விழாவாகக் கொண்டாடப்படும்.
கிறிஸ்மஸ், ராம நவமி, கோகுலாஷ்டமி, ஆழ்வர்களின் திருநட்சத்திரம், நபிகள் நாயகம் பிறந்த நாள் முதலியவை இவ்வகையில் அமையும். வைகாசி விசாகம் புத்தர் ஞானம் பெற்ற நாள். ஆனால் தைப் பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாளோ இந்த அடிப்படையில் அமையவில்லை. நட் சத்திரம் அல்லது திதி அடிப்படையில் அமையும் விழா நாள்கள் அந்த அந்த ஆண்டுப் பஞ்சாங்கப்படி நிர்ணயிக்கப்படும்.
சிலவேளை மாறி வரவும் வாய்ப்புண்டு. ஆனால் பொங்கல் நாள் எப்போதும் மாறாது தை முதல் நாள் தான் வரும். மேலும் சமயத் தொடர்பான விழாக்களுக்கு ஏதேனும் புராணக் கதைத் தொடர்பு இருக்கும். தீபாவளி என்றால் நரகாசுரன் கதையும். கந்த சஷ்டி என்றால் சூரசம்காரக் கதையும் உள்ளன. ஆனால் தைப் பொங்கலுக் கென்று எந்தப் புராணக் கதையும் இல்லை.
எனவே தைப் பொங்கல் விழா ஒரு சமயச் சார்பற்ற விழா எனக் கூறலாம். தமிழர்களின் முதன்மை உணவு அரிசிச் சோறு ஆகும். எனவே தமிழர்களில் பெரும்பாலோர் வேளாண்மையைத் தம் தொழிலாகக் கொண்டவர்கள். வயல்களில் உழுது பயிரிட்டு வாழ்பவர்கள். அவர்கள் தாங்கள் ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.
அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் கதிரவனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். பொங்கல் என்னும் இந்தப் புத்தரிசிச் சோற்றுணவை மையமாக வைத்தே இந்த விழாவுக்குப் பொங்கல் என்னும் பெயர் வந்தது. பானையில் பால் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி ஆரவாரத் துடன் பொங்கல் நாளை வரவேற்பது தமிழர் மரபாகும்.
தை முதல் நாளின் சிறப்பு
தை முதல் நாளில் சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறிப் பயணம் செய்கிறான். அதாவது பூமத்திய ரேகையின் தென் பகுதியிலிருந்து வடபகுதிக்கு ஞாயிறு செல்லும் நாளே தை முதல் நாள். இதனை உத்தராயணம் என்பர். மகர சங்கராந்தி என்றும் அழைப்பர். எனவே இந்த நாளைத் தேர்ந்தெடுத்து ஞாயிற்றுக்குப் புதுப் பொங்கலைப் படைக்கும் விழாவைக் கொண்டாடினார்கள். ஞாயிறு – சூரியன் – தானே நமக்கு வெம்மையும் வெளிச்சமும் தருகிறது. சூரியனை முதன்மைக் கோளாகக் கொண்டு தானே ஏனைய கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன. சிலப்பதிகாரம் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று சூரியனை வாழ்த்தியே தொடங்குகிறது.
தைத் திங்களின் தலைமைத் தன்மை..
தைத் திங்களே தலைமைத் திங்கள் என்னும் தலைப்பில் காலம்சென்ற மொழியியல் பேரறிஞர் ச.அகத்திய லிங்கனார் விடுதலை இதழில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். தமிழில் காணப்படும் மாதங்களில் பண்டைக் கால இலக்கியங்களில் அதிலும் குறிப்பாகச் சங்க இலக்கியங்களில் தை மாதம் ஒன்றே மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ நாற்பதுக்கும் அதிகமான இடங்கள் தை என்ற சொல்லைப் பெயராகவும் வினையாகவும் (தைஇ எனும் அள பெடை நிலையில்) பயன்படுத்தியுள்ளமை காணலாம்.
இது மிகப் பண்டைக் காலம் முதலே தை என்ற சொல் தமிழ்ச் சொல்லாகப் பல்வேறு நிலையில் பயன்பட்டுள்ளமையைக் காட்டும். மீதியுள்ள திங்கட்பெயர்கள் தமிழ்ச்சொல்லாக இலது காணத்தக்கது. இலங்கையின் தட்ப வெட்ப நிலையில் மார்கழிப் பனி, குளிர் நீங்கித் தை வந்ததும் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தை மாதம் வளம் கொழிக்கும் ஒரு மாதம் என்றும் சங்க இலக்கியமாகிய புறநானூறு பேசுகிறது. உழவர் பெருமை உணர்த்தும் விழா..
உலகிலுள்ள தொழில்களிலே உழவுத் தொழிலே சிறந்ததாகும். எனவேதான் திருவள்ளுவர் தம் திருக்குறளில் உழவு என்னும் ஓரதிகாரம் வகுத்து உழவின் பெருமையை நமக்கு உணர்த்துகிறார். “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்னும் குறள் உலகம் சோறு தரும் ஏர் வழியே செல்லத் தக்கது. ஆதலால் உழவுத் தொழிலே தலை சிறந்தது என்னும் கருத்தைக் கூறுகிறது.
உலகத்தவர் களுக்கெல்லாம் உணவூட்டும் தன்மையுடைய உழவுத் தொழிலைச் செய்கின்ற உழவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்றும்,”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்றும் திருவள்ளுவர் உழவர்களைப் போற்றுகிறார். உழவர்களையும் அவர்களது உழவுத் தொழிலையும் தமிழர்கள் மிகச் சிறந்த தொழிலாகப் போற்றி வந்தார்கள்.
இப்பண்பு தமிழினத்தின் தனித் தன்மையாகும். இன்று கிடைக்கும் தமிழ் நூல்களில் பழைமையானதாகக் கருதப்படும் தொல்காப்பியத்திலேயே வேளாண்முல்லை, ஏரோர்களவழி என்றும் புறத்திணைத் துறைகளில் உழவர் பெருமை பேசப்படுவதைப் பார்க்கலாம். சங்கப் புலவர்களில் ஒருவர் பெயரே ஓரேருழவர் ஆகும். கவிச் சக்கரவர்த்தி கம்பர் ஏர் எழுபது எனும் நூல் வழி உழவர் பெருமையைப் பாடுகிறார். மேழிச் செல்வம் கோழை படாது என்னும் முதுமொழியும் உழவர் உயர்வை உணர்த்தும்.
பிற்காலத்தில் எழுந்த பள்ளு நூல்கள் உழவர் சிறப்பை உரைக்க எழுந்தவையே. பாரதியாரும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாடுகிறார். மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவர் என்பது மணிமேகலை.
இத்தகைய உழவர் பெருமையை உணர்த்தும் ஓர் ஒப்பற்ற விழாவே பொங்கல் விழாவாகும். உழவு என்பது உழைத்தல், உழைப்பு என்னும் சொற்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். மெய்வருத்தல், பாடுபடுதல் என் பது இதன் பொருள். எனவே பொதுவாக உழைப்பின் உயர்வைப் பாராட் டும் விழாவாகவும் இதனைக் கருதலாம். இக்காலத் தொழிலாளர் தினத்துடன் இதனை ஒப்பிட்டு நோக்கலாம்.
நன்றி தெரிவிக்கும் நல்விழா..
நன்றி மறப்பது நன்றன்று, செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய் வில்லை இவை வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகள். எனவே உழவர்கள் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மழை, ஞாயிறு, மாடு ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தைப் பொங்கல் விழாவை மூன்று நாள்கள் கொண்டாடுகின்றனர்.
தைப் பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பொங்கல் நாள் எனப்படும். இது போக்கி என்பதன் திரிபாகும். பழைய பொருள்களைக் கழித்து (போக்கி) புதிய பொருள்களை – புத்தாடை, புதுப்பானை, புதுவண்ணம் முதலியவற்றை கொள்ளும் நாளே போக்கி நாளாகும்.
இந்த நாளை மழைக்குப் பொங்கல் படைக்கும் நாளாகக் கொண்டாடினார்கள். மழையை வணங்கும் மரபைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று வாழ்த்துவதன் வாயிலாக அறியலாம். மேலும் அந் நூல் மழைத் தெய்வமாகிய இந்திரனுக்கு விழா எடுத்துப் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என வாழ்த்துவது பற்றியும் பேசுகிறது.
திருவள்ளுவரும் மழையின் தேவையை வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த நிலையில் வைத்துப் பேசுகிறார். மக்கள் உயிர் வாழ உணவுடன் நீரும் இன்றியமையாத பொருளல்லவா? விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பது அரிது என்பது குறள். பயிர்த் தொழிலின் உயிரே மழை தானே! அதற்கு மக்கள், சிறப்பாக உழவர்கள் நன்றி செலுத்துவது முறை தானே? தைப் பொங்கல் நாளன்று தமிழர்கள் உழவுக்கு உதவும் கதிரவனுக்குப் பொங்கல் படைத்து மகிழ்ந்தனர். மழைதரும் மேகம் உருவாவதற்குக் காரணம் கதிரவன் தரும் வெம்மை தானே. வெளிச்சம் தரும் கதிரவன் இல்லாவிடில் உலகமே இருட்டில் மூழ்கிவிடுமே, உயிர்கள் அனைத்தும் கண்ணிருந்தும் குருடாகிவிடுமன்றோ?
தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் நாள். உழவுத் தொழிலின் அடிப்படையான நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும், வண்டி இழுப்பதற்கும் உதவும் எருதுகளையும், வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்களையும் அழகுபடுத்திப் பொங்கல் ஊட்டி நன்றி தெரிவிக்கும் நாளாக இது அமைகிறது. மாடு என்றாலே செல்வம் எனக் கருதியவர்கள் தமிழர்கள். கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை என்னும் திருக்குறள் இதனை உணர்த்தும்.
இவ்வாறு மழை, சூரியன், மாடு ஆகியவற்றிற்கு; நன்றி செலுத்தும் நல்விழாவே பொங்கல் விழாவாகும். மேலை நாடுகளில் இப்போதுதானே நன்றி தெரிவிக்கும் நாள் (Thanks giving day) கொண்டாடுகிறார்கள். பொங்கல் விழாவின் நான்காம் நாள் காணும் பொங்கல் என்று இளைஞர்களும் குடும்பத்தினரும் ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்வார்கள். மேலும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஒருவர் ஒருவரைக் கண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள் வார்கள்.
நிலவுடைமையாளர்கள் உழவுத் தொழில் செய்வோர்க்கு அன்பளிப்புகள் கொடுப்பது வழக்கம். சில பகுதிகளில் கொப்பி கொட்டுதல் என்றோர் பழக்கம் உள்ளது. ஓரூரைச் சேர்ந்த பெண் மக்கள் – இளைய மகளிர் – ஓரிடத்தில் ஏற்றத் தாழ்வின்றிக் கூடி ஆடிப்பாடி உண்டு மகிழ்வர். இவ்வாறு பொங்கல் விழா உறவை மேம்படுத்தும் ஓர் ஒற்றுமைத் திருவிழாவாகவும் விளங்குகிறது.
பொங்கல் விழாவை ஒட்டி இளையர்கள் காளை மாடுகளைப் பிடித்து அடக்கும் மஞ்சுவிரட்டு என் னும் வீர விளையாட்டு தமிழகத்தின் தென்பகுதியில் நடைபெறும். இவ் விளையாட்டு சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் எனக் குறிக்கப்படுகிறது. கலித்தொகையில் முல்லைக் கலிப்பகுதி இது பற்றி விளக்கமாகப் பேசுகிறது. இடைக் குலத்தினர் தம் பெண் பிள்ளைகளுடன் எருதுகளையும் வளர்த்து வருவதும் அவற்றை அடக்கும் காளையர்க்கு அவர்களை மணமுடிப்பதும் மரபாக இருந்ததை முல்லைக்கலி நமக்குக் கூறுகிறது.
திருவள்ளுவர் நாள்..
தமிழர்கள் உலகுக்கு வழங்கிய நன்கொடைகளில் தலைசிறந்தது திருக்குறளாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டுவார் பாரதியார். இத்தகைய திருவள்ளுவரை நினைவுகூரும் நாளாகத் தமிழ்நாடு அரசு தைப்பொங்கலுக்கு அடுத்த நாளை அறிவித்துள்ளது. அன்று அரசின் சார்பில் தமிழ் அறிஞர் களுக்குத் திருவள்ளுவர், பெரியார், திரு.வி.க., கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய சான்றோர்களின் பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்களுக்குரிய பரிசுகளும் தரப்படுகின்றன.
இதனால் பொங்கல் விழா தமிழ் மொழி தழைக்க உதவும் விழாவாகவும் மிளிர்கிறது. 2009 ஆம் ஆண்டுமுதல் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் எனத் தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுவே திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாளாகவும் கருதப்படுகிறது.
இதுவரை தமிழ்ப் புத்தாண்டு எனக் கருதப்பட்டு வந்த ஏப்ரல் 14/15 இல்- சித்திரை முதல் நாளில் தொடங்கும் ஆண்டுகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை என்பதும் அவற்றின் தோற்றம் பற்றிய கதை போற்றத்தக்கதாக இல்லை என்பதும் நோக்கத்தக்கவை.
தமிழர்கள் கொண்டாடும் இந்தப் பொங்கல் விழா தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் கொண்டாடப் படுவதைக் காணமுடிகிறது. தாய்லாந்தில் சோங்கரான் என்னும் பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப் படுகிறது. தமிழர்கள் போகி நாளில் செய்வதைப் போல இவ்விழாவின் முதல் நாள் அன்று பழம் பொருள்களைக் கொளுத்துவது இங்கும் உண்டு. சோங்கரான் என்பது சங்கராந்தி என்பதன் திரிபு எனக் கொள்ள இடமுண்டு. ஜப்பானில் புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது.
ஆங்கிலப் புத் தாண்டு நடைமுறைக்கு வந்த போது இந்தப் பழைய மரபு சிறிய புத்தாண்டு KOSHOGATSU என மருவி அழைக்கப்பட்டது. தமிழரது தைப் பொங்கல் நடை முறையை ஜப்பானியருடைய புத்தாண்டு நடை முறையுடன் ஒப்பிட்டு நோக்கிய ஜப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோ பின்வரும் ஒற்றுமைக் கூறுகளைக் கூறுகிறார். தை மாதம் 14 ஆம் நாள் பழைய பொருள்களை எரித்தல், புதிய குடில்கள் மாடுகளுக்கு அமைத்தல், தை 15 ஆம் நாள் மாவிலைத் தோரணம் போலக் காகிதத் தோரணம் கட்டல், புது நீர் எடுத்தல், பயறு சேர்த்துப் பச்சரிசிப் பொங்கல் செய்தல், தெய்வத்திற்கு மடையிடல், மாடுகளை அடக்கிப் பிடித்தல், 16 ஆம் நாள் மாட்டுப் பொங்கல் படைத்தல், பணியாளர்க்குக் கொடை கொடுத்தல், தமிழர் உறவினைரைக் காணல் போல் ஜப்பானியர் கல்லறை சென்று வணங்குதல் முதலியவை அவர் காட்டும் பண்புகளாகும். பால் பொங்கும்போது தமிழர்கள் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி ஆரவாரம் செய்வது போல ஜப்பானியரும் HONGA HONGA என ஒலி எழுப்பி வாழ்த்துவதையும் அவர் சுட்டுகிறார். இத்தொடருக்கு பொலிக பொலிக என்பது பொருளாம்.
நம்பிக்கை நன்னாள்..
தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழி தைப் பொங்கல் விழா நாள் தமிழர் இல்லங்களில் திருமணம் போன்ற மங்கல நிழ்ச்சிகள் நடக்க வழி வகுக்கும் நம்பிக்கை நாள் என்பதையும் தெரிவிக்கிறது. சமயச் சார்பற்ற இத் தைப் பொங்கல் விழா பெயர்ச் சிறப்பும், காலச் சிறப்பும் கொண்ட பெருவிழா, உழவர் பெருமை உணர்த்தும் அறு வடைத் திருவிழா, நன்றி உணர்வை வெளிப்படுத்தும் நல்விழா, உறவை வலிமையாக்கும் ஒற்றுமை விழா, வீர விளையாட்டுக்குரிய வெற்றி விழா, திருவள்ளுவரை நினைத்துத் தமிழைப் போற்றும் தகைமை மிக்க விழா, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க விழா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஒளிவீசும் விழா என்று கூறத்தக்க தனித்தன்மைகளைக் கொண்டு விளங்குகிறது. தமிழர்க்குரிய அடையாளமாக விளங்கும் விழாவே தைப்பொங்கல் விழா வாகும். எனவே இதனைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வோமா.
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் சுந்தரபுரம் கிளையில் கைப்பற்றப்பட்ட காலவதியான சீனி மூடைகள் தொடர்பான வழக்கில் கிளை முகாமையாளரை ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் வவுனியா நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் சுந்தரபுரம் கிளையில் பொங்கல் காலவிற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 மூடை சீனி பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அவை காலாவதியானதாக தெரிவிக்கப்பட்டு வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ் வழக்கு நேற்று (13.1) வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளை முகாமையாளருக்கு ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டதுடன் கிளை முகாமையாளர் தான் சுற்றவாளி என தெரிவித்தமையினால் விசாரணைக்காக எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என கிளை முகாமையாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று காலமானார். அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவுக் காரணமாக அஞ்சலிதேவி, கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அஞ்சலிதேவி இன்று பிற்பகலில் உயிரிழந்தார்.
1950களில் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்த அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள பெத்தாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலி தேவியின் நிஜப்பெயர் அஞ்சனி குமார். நடிப்புத்தொழிலில் ஈடுபட சென்னைக்கு 1940களில் குடிபெயர்ந்தார்.
1936 ல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவரை எல்.வி பிரசாத் தனது கஷ்ட ஜீவி என்ற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் சில பிரச்னைகளால் முழுமை பெறவில்லை.
பின்னரே நாடகங்களில் அவரது நடிப்பை பார்த்து வியந்த பிரபல இயக்குனர் புல்லையா, தன் இயக்கத்தில் வெளியான கொல்ல பாமா படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு தந்தார். அவரே அஞ்சலிதேவிக்கு அந்தப்பெயரை சூட்டினார். அந்த படத்தின் புகழால் தொடர்ந்து பல படங்களில் நடித்த அஞ்சலிதேவி 50களில் திரையுலகின் தவிர்க்கமுடியாத நாயகியானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அஞ்சலிதேவி, தெலுங்கில் மட்டுமே 350 படங்கள் நடித்திருக்கிறார். குறும்பு, உணர்ச்சிவயமான நடிப்பு, நடனம், வீரமங்கை , இதுதான் ரசிகர்களை கட்டிப்போட காரணமான அஞ்சலிதேவியின் பன்முக சிறப்பு அம்சங்கள்.
1940 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பி.ஆதிநாராயணராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஞ்சலிதேவிக்கு, 2 மகன்கள். தன் கணவருடன் இணைந்து அஞ்சலி தேவி பிக்சர்ஸ் என்ற பெயரில் பல வெற்றிகரமான தெலுங்கு படங்களை தயாரித்தார். தெலுங்கு திரையுலகின் முதல் கலர் படமான லவகுசாவில் நடித்த பெருமைக்குரியவர் அஞ்சலிதேவி.
1950களில் நளிமான நடனம், நடிப்பு, நாகரிகமான உடையலங்காரம் என பன்முக திறைமையுடன் கலக்கிய அஞ்சலி தேவி, ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். அடுத்த வீட்டுப்பெண், கணவனே கண்கண்ட தெய்வம் உள்ளிட்ட இவரது தமிழ்ப்படங்களில் இவரது நடிப்பு அந்த கால இளைஞர்களை அசத்திப்போட்டது என்றால் அதில் மிகையில்லை.
அவர் தன் வாழ்நாளில் சிறந்த படங்களாக குறிப்பிட்டவை ஸவர்ண சுந்தரி மற்றும் அனார்கலி போன்றவை. இதில் அனார்கலி அவரது சொந்தப்படம். அதில் ஏ. நாகேஸ்வரராவுடன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த 2 திரைப்படங்களும் அஞ்சலிதேவிக்கு ரசிகர்களிடம் நிலையான இடத்தை கொடுத்த படங்கள்.
ஒரு பக்கம் சொந்த தயாரிப்புகள், இன்னொரு பக்கம் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்த அஞ்சலி, 50 மற்றும் 60 களில் திரையுலகின் அத்தனை பிரபலங்களுடன் நடித்தவர் .
மூத்த கலைஞரான அஞ்சலிதேவியின் மறைவு ரசிகர்களுக்கு பேரிழப்பு என்றால் மிகையில்லை.
கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்தபின் கடன் வழங்க அமெரிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டில் உள்ள சிறிய நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களின், பேஸ்புக், டிவிட்டர் சமூக வலைத்தளங்களில் உள்ள கணக்குகளில், சுய விவரத்தில் கூறப்பட்ட தகவல்களுடன் ஒப்பிட்டு, அவர்களுக்கு கடன் வழங்கலாமா என்பது குறித்து முடிவு செய்கின்றன.
தற்போது பெரிய நிதி நிறுவனங்களும், வங்கிகளும், இந்த முறையை பின்பற்ற துவங்கியுள்ளன. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் இந்த அணுகுமுறைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில், தங்களுடைய சுய விவரங்களை புதுப்பிப்பதில்லை. எனவே அவர்கள் பணிமாற்றம் செய்து இருந்தாலோ அல்லது பணியில்லாமல் இருந்தாலோ வங்கிகளுக்கு தெரியாது.
வாடிக்கையாளரின் பெயரில், போலி கணக்கு துவங்கப்பட்டு இருந்தாலோ அல்லது பொய்யான தகவல்களை அளித்திருந்தாலோ கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் வங்கிகளின் புதிய அணுகுமுறைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சுவாமி விவேகானந்தரின் 151வது பிறந்ததின நிகழ்வு நேற்று (12.01) வவுனியாவில்சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்திற்கு அருகாமையில் அவரின் நினைவுதூபி அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியாவின் பல்துறைசார்ந்த முக்கியஸ்தர்களால் மலர் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் கொண்டாடிய நிகழ்வில் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள் நினைவுரையாற்றினார் செல்வராசா சந்திரகுமார் (கண்ணன்) நன்றியுரையாற்றியிருந்தார்.
இன் நிகழ்வுக்கு சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தலைவர் நா.சேனாதிராசா, இலங்கை வங்கி முகாமையாளர் றோய், சிறி கணேசன், ஞானப்பிரகாசம் தேவராசா, கவிஞர் மாணிக்கம் ஜெகன், சூரியகுமார், தர்மலிங்ம் பிரதாபன், திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் பாலா மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
புதிதாக கடவுச்சீட்டுப் பெற விண்ணப்பிப்போரிடமிருந்து கைவிரல் அடையாளம் பெறும் புதிய நடைமுறை இலங்கையில் அமுலாக்கப்படவுள்ளது.
ஏப்ரலில் இருந்து புதிதாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களை சமர்ப்பிப்போரிடம் இருந்து கைவிரல் அடையாளங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்று குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா அறிவித்துள்ளார்.
கடவுச்சீட்டுக்களின் தரத்தை சர்வதேச தரத்தில் பேணும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவில் 6 வயது நிறைந்த பாடசாலை மாணவன் தனது சக மாணவியை முத்தமிட்டதால் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ நகரில் கேனன் என்ற பகுதியில் அமைந்த பள்ளி கூடம் ஒன்றில் படித்து வரும் சிறுவன் ஹன்டர் யெல்டன் (6).
இவன் சம்பவம் குறித்து தொலைக்காட்சிக்கு அளித்த தகவலின்படி தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் சேர்ந்து ஒன்றாக பாடம் படித்து கொண்டிருந்து உள்ளான். அப்பொழுது மெதுவாக குனிந்து அவளது கையில் முத்தமிட்டு உள்ளான்.
இது தான் நடந்தது என்று அவன் தெரிவித்துள்ளான். சக மாணவியின் மீது தான் அன்பு கொண்டிருந்ததாகவும், அந்த மாணவியும் பதிலுக்கு தன் மீது அன்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ள அந்த மாணவன் தற்போது பள்ளி நிர்வாகத்தின் தண்டனைக்கு உள்ளானதால் வருத்தத்துடன் உள்ளான்.
அவன் தற்போது, அவனது தாய் சாண்டர்சிடம் செக்ஸ் என்றால் என்ன என்று கேள்வி கேட்கிறான். இது 6 வயது நிறைந்த சிறுவனுக்கு அதிகப்படியான தண்டனை ஆகும் என சாண்டர்ஸ் கூறியுள்ளார்.
எனினும் மாவட்ட கல்வி அதிகாரி ரொபின் கூல்டி செய்தியாளர்களிடம் கூறும்போது ,விரும்பத்தகாத வகையில் தொடுவதற்கு எதிரான கொள்கை அடிப்படையில் மாணவன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான் என தெரிவித்துள்ளார்.
அவனது நடத்தையையே நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம். வழக்கமாக மாணவன் தனது செய்கையை நிறுத்தவே நாங்கள் முயற்சி செய்வோம். ஆனால் அது தொடர்ந்து நடந்தால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளோம். அது சில நேரங்களில் இடைநீக்கம் என்ற நிலைக்கும் சென்று விடுகிறது என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.