முல்லைத்தீவில் தொடர்ந்தும் காற்றழுத்த நிலை காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் கிலோ மீற்றருக்கு 80ற்கும் மேலிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகிற அதேவேளை கடலும் பேரலைகளுடன் நிலப்பகுதியுள் சிலமீற்றர் தூரம் முன்நகர்ந்துள்ளது.
இத்திடீர் காலநிலை மாற்றம் குறித்து முல்லை மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முல்லைக்கரையோரம் உள்ள மக்களிடம் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொக்கிளாய் தொடக்கம் மாத்தளன் வரையான கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கரையோரத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கப்பால் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முல்லைக் கரையோர மீனவர்களுக்கும் அவர்கள் உடைமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவின் கரையோரப்பகுதிகளுக்கு நேரில் சென்று மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அனர்த்த நிலைமையை பார்வை செய்து வருகிறார்.
கடற்கரையோரப் பகுதிகளில் தற்சமயம் மழை குறைந்துள்ளபோதும் கடல்நிலைமை இன்னும் சீரடையவில்லை என்று அவர் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கால்நடைகளுக்கு கால்வாய் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி தபோதினி தேவநேசன் தெரிவித்தார்.
கால்வாய் நோய் (Foot and mouth-FMD) தொற்று வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சின்னடம்பன் என்ற கிராமத்தில் ஏற்பட்டுள்ளது. இந் நோயானது யாழ்ப்பாண மாவட்டத்தில் சில கால்நடைகளில் ஏற்பட்டிருந்தது. அங்கிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மாடுகளில் இருந்தோ அல்லது எரு ஏற்றுவதற்கு வருகை தரும் லொறிகளிலிருந்தோ இந்நோய் இங்கு பறவியிருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படம் தொற்றும் நோயாகும். இந்நோய் கால்களில் குழம்பு உள்ள மிருகங்களான ஆடு, மாடு, பன்றி போன்றவற்றுக்கு ஏற்படும். இந்நோய் கால்நடைகளுக்கு ஏற்பட்டிருப்பின் காய்ச்சல், வாய், நாக்கு, கால்குழம்பு, மூக்கு, முகம் மற்றும் மடி ஆகியவற்றில் பெரிதளவான கொப்புளங்கள் ஏற்பட்டு அவை உடைந்து புண்களாக மாறும்.
பசியின்மை, வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல் போன்ற குணங்குறிகள் தோன்றும். இதனால் பால் உற்பத்தி குறையும். கன்றுகளுக்கு இதயம் தாக்கப்பட்டு இறப்பு ஏற்படும். சினைப்பட்ட பசுக்களுக்கு கருச்சிதைவு ஏற்படும். அத்துடன் பால் கறப்பவர்களின் கைவிரல்களில், உள்ளங்கையில் புண் ஏற்பட்டு தோல் களரும் நிலை ஏற்படும். என்றும் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
எனவே இந்நோய்ப் பரம்பலை தடுக்கும் முகமாக எமது கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நோய்ப் பரம்பலைத் தடுக்கும் வழிகளாக நோய்க்குரிய தடுப்பு மருந்து ஏற்றுதல் மற்றும் நோய் வந்த மாடுகளை தனியாக அடைத்து வைத்து உணவூட்டல், தொற்று ஏற்பட்ட இடங்களிலிருந்து மாடுகளை கொண்டு வருதலை தடுத்தல் போன்றவை கால்நடை வளர்ப்போர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நோயை தடுப்பதற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கடந்த வியாழக்கிழமை முதல் வவுனியா மாவட்டம் முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பிரிவு கால்நடை வைத்தியர்களுடன் தொடர்பு கொண்டு இத்தடுப்பூசியை இலவசமாக தங்களது மாடுகளுக்கு ஏற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 14 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று மாலை 3 மணிக்கு வவுனியா நகர சபை மண்டபத்தில் சி.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிவில் அமைப்பின் தலைவரும் மன்னார் மாவட்ட ஆயருமான அதி வணபிதா இராயப்பு ஜோசப் ஆண்டகையும் சிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் நா.பிரபாகரக்குருக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது மாமனிதர் குமார் பொன்னம்பலத்திறகு அதிதிகள் மற்றும் பொது மககளும் மலரஞ்சலி செலுத்தியதுடன் சிறப்பு நிகழ்வாக “தமிழர்களும் அனைத்துலக சமூகமும்” என்ற தலைப்பில் அரசியல் ஆய்வாளரும் கவிஞருமான அ.நிலாந்தனின் நினைவு பேரூரையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட செயலாளரும் விழா ஒழுங்கிணைப்பாளருமான சி.கோபாலகிருஷ்ணன் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றிருந்தது.
கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு வரையான காற்றழுத்தம் மற்றும் கடல் கொந்தளப்பு காரணமாக திருகோணமலை மீனவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கடற்றொழிலில் ஈடுபடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடர் முகாமைத்துவ நிலைய அறிவித்தல்களின் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே இம் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடவில்லை என தெரிவித்தனர்.
இந்நிலையில் திருகோணமலையில் நேற்று அதிகாலையிலிருந்து கடும்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
திருகோணமலை கடல் கொந்தளிப்பதன் காரணமாக கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவ படகுகளை உயர்வான இடங்களிற்கு மீனவர்கள் நகர்த்தியுள்ளனர்.
முல்லைத்தீவு கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து கள்ளப்பாடு, அலம்பில், செம்மலை, வட்டுவாகல் உள்ளிட்ட கரையோர கிராமங்கள் உள்ளிட்ட கரையோரங்களைச்சேர்ந்த மக்கள் மேட்டு பிரதேசங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர்.
கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளதை அடுத்தே அந்த பகுதிகளைச்சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்துள்ளனர்.
முல்லைத்தீவின் கரையோரக் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், கடல்நீர் 3 அல்லது 4 மீற்றர் தூரத்திற்கு நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
பருத்தித்துறை கடலில் நீர் மட்டம் அதிகரிப்பு
இதேவேளை, யாழ். வடமராட்சி பருத்தித்துறை கரையோரப்பகுதிகளில் கடல் நீர் மட்டம் வழமைக்கு மாறாக நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தியதையடுத்து கரையோரங்களிலுள்ள மக்கள் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் சென்றிருப்பது நல்லதென அப்பகுதி இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்தே கரையோரங்களில் இருக்கும் மக்கள் ஒரு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிய படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவர் இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காப்பாற்றப்பட்ட இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் தெரியவருகிறது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் கூறியுள்ளது.
கடற்படையினரால் காப்பற்றப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவரும் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
வடபகுதியில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அறியாமல் இவர்கள் கடலுக்குச் சென்றிருக்கலாம் எனவும், இதனாலேயே இவர்களின் படகு காற்றில் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
இவர்களிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு கடல் வழமைக்கு மாறாக இன்று காலை முதல் கொந்தளிப்பாக உள்ளமையின் காரணமாக கடற்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு இடம்பெயருமாறு தற்போது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸார் கடற் கரையோரங்களிற்கு சென்று இந்த அறிவித்தலை தற்போது விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து 100 மீற்றருக்கு உட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களே இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்பின்னதாக கரையோர மக்கள் சிலர் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் முல்லைத்தீவு கடற்பரப்பை காற்று கடக்கும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
தீத்தக்கரை, கொக்கிலாய், அலம்பில், செம்மலை, கள்ளப்பாடு கடற் பிரதேச மக்களை அவ்விடங்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தாம் அறிவித்தல் விடுத்துள்ளதாக நாகலிங்கம் வேதநாயகம் குறிப்பிட்டார்.
கடல் அலை மூன்று மீற்றர் வரை உயரக் கூடும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
ஆனையிறவு புகையிரத நிலையத்தின் பெயர் மாற்றப்படாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தன்னிடம் உறுதியளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆனையிறவு புகையிரத நிலையத்தின் புனர்நிர்மாண பணிகளுக்காக தெற்கு மக்கள் தமது உதவிகளை வழங்கியுள்ளார்கள்.
எனவே ஆனையிறவு புகையிரத நிலையம் என்ற பெயருக்கு அருகில் அடைப்புக் குறிக்குள் தெற்கிற்கும் வடக்கிற்கும் உறவுப் பாலமாக அமையும் தொனிப்பொருளில் வாசகம் ஒன்றை பொறிக்கப்படும் எனவும் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களது உரிமைகளுக்கு பாதகம் அல்லது குந்தகம் விளைவிக்கப்பட்டால் அதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம். மாறாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுப்போம்.
நாம் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம் என்பதற்காக அரசாங்கம் போடும் தாளத்துக்கெல்லாம் ஆடுகின்றவர்கள் என்று அர்த்தமில்லை. எமது மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் அநீதியிழைக்கப்படுகின்ற பட்சத்தில் அதனை தடுத்து நிறுத்துவதற்குமே நாம் அரசுடன் இணைந்திருக்கின்றோம்.
அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து கொண்டு மக்களுக்காக குரல் கொடுக்கலாம். ஆனால், வேறேதும் செய்ய முடியாது எனவே தான் அரசுடன் இணைந்து மக்களது தேவைகளை உணர்ந்து நாம் சேவையாற்றி வருகின்றோம். இது ஒரு அரசியல் சாணக்கியம்.
நான் பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் எமது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக தலையிட்டு தீர்த்து வைத்திருக்கின்றேன். அதேபோன்று மேலும் பல சேவைகளை செய்திருக்கின்றேன். அதனை மக்கள் நன்கு அறிவார்கள்.
இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து எனது மக்கள் சேவையினை தொடர்ந்துள்ளேன். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது மக்களுக்கு நீண்ட காலமாக சேவையாற்றிவரும் மிகப்பெரிய அமைப்பாகும். எனவே, அதனோடு இணைந்து சேவையாற்ற கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் இரு மாணவிகளுக்கு இடையிலான ஓரினச்சேர்க்கை உறவு வன்முறையில் போய் முடிந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள கோனனூரில் உள்ள அரசுக் கல்லூரியல் பிஏ படித்து வருபவர்கள் வாணி, ராணி. கல்லூரியில் விடுதியில் தங்கியிருந்தபோது ஒரே அறையில் தங்கியுள்ளனர்.
கணவன் மனைவி போலவே நடந்து கொண்ட இருவருக்கும் 20 வயதாகிறது. இவர்கள் குறித்து கல்லூரி முதல்வரான மோகன் கூறுகையில், இருவரும் பிஏ. 2ம் ஆண்டு படித்தபோது இருவருக்குள்ளேயும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது.
விடுதியில் ஒரே அறையில்தான் தங்குவார்கள். அவர்களுக்குள் செக்ஸ் ரீதியான உறவு இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் ராணிக்கு தான் தாலி கட்டப் போவதாக வாணி, தனது சக தோழிகளிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். ஆனால் அது நடக்காமல் போயுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் வாணி, ராணி இடையிலான நெருக்கமான நட்பு குறித்து ராணி குடும்பத்தாருக்குத் தெரியவந்து அதிர்ந்தனர்.
இதையடுத்து அவரை உடனடியாக விடுதியிலிருந்து கூட்டிச் சென்று விட்டனர். மேலும் வாணியையும் கடுமையாக எச்சரித்துப் போயுள்ளனர். அது முதலே தனது குடும்பத்தினர் துணையுடன் கல்லூரிக்கு வந்து போயுள்ளார் ராணி.
இதனால் வாணி கடும் அதிருப்தியும், விரக்தியும் அடைந்தார். இந்நிலையில்தான் சம்பவ தினத்தன்று ராணி தனியாக கல்லூரிக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த வாணி, அவர் திரும்பிச் செல்லும்போது தானும் பேருந்தில் ஏறியுள்ளார்.
பின்னர் ராணியை நெருங்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி விட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வாணியைத் தடுத்துப் பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து வாணியைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். கத்திக் குத்தில் ராணிக்கு கழுத்து, முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வாணியின் புத்தகங்களில் எல்லாப் பக்கத்திலும் ஐ லவ் யூ ராணி என்று எழுதி வைத்துள்ளாராம்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ் பணக்காரர் தரவசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
புளும்பெர்க் நிறுவனம்,2013ம் ஆண்டின், 300 பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் பில்கேட்சின் கடந்தாண்டின் சொத்து மதிப்பு 1580 கோடி டொலர் அதிகரித்து 7,850 கோடி டொலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற மே மாதம் வெளியான பட்டியலில் பில்கேட்ஸ், மெக்சிகன் தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம்மை பின்னுக்கு தள்ளி உலகின் பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டு மைக்ரோசொப்ட் நிறுவன பங்கின் விலை 40 சதவீதம் அதிகரித்ததன் மூலம் பில்கேட்ஸ் மேலும் பணக்காரராக உயர்ந்துள்ளார்.
அது மட்டுமின்றி, பில்கேட்ஸ் வைத்துள்ள 35 பொது மற்றும் தனியார் துறை நிறுவனப் பங்குகளின் விலை உயர்வாலும், சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. பில்கேட்சின் மொத்த சொத்தில் அவர் மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் கொண்டுள்ள பங்குகளின் மதிப்பு 25 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
அமெரிக்க நியூயோர்க் நகரின் முக்கியமான தீகான் அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு குட்டிவிமானம் அவசரமாக தரையிறங்கியது.
இந்த அதிவேக நெடுஞ்சாலையில் சென்ற எந்த வாகனத்திலும் மோதாமல் பத்திரமாக இறங்கியது குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.
ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட இந்த குட்டிவிமானத்தில் பயணித்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதில் ஒருவருக்கு மட்டுமே லேசான காயம் ஏற்பட்டிருந்தது.
இவர்கள் அனைவரும் கனக்டிகட் டேன்பர்ரி விமானநிலையத்திலிருந்து சுதந்திர தேவி சிலையை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். வரும் வழியில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த குட்டிவிமானம் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுகுறித்து நியூயோர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிய மற்றும் 20- 20 உலக கிண்ணப் போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. 20- 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் வருகிற மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை வங்கதேசத்தில் நடக்கவுள்ளது.
தற்போது வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ளதால் உலக கிண்ண போட்டிகள் நடைபெறுமா என்பது சந்தேகம் தான். எனவே இப்போட்டிகளை இடமாற்ற ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோன்று ஆசிய கிண்ணப் போட்டிகளையும் நடத்த விருப்பம் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை செயலாளர் நிஷந்தா ரனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இதுபற்றி முடிவு மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான சவால்களை முறியடிக்க பல நாடுகள் ஆதரவளிக்கும் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், கியூபா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரளிப்பதாக உறுதியளித்துள்ளன.
ஈராக் மற்றும் பாகிஸ்தானில் சிவிலியன்கள் கொல்லப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே இம்முறை மனித உரிமைப் பேரவை மாநாடு சர்ச்சைகள் நிறைந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 26ம் திகதி நவனீதம்பிள்ளை வெளியிட உள்ள அறிக்கைக்கு இலங்கை சவால் விடுக்க உள்ளது.
அறிக்கையின் உண்மை தன்மை குறித்து இலங்கையிடம் கேள்வி எழுப்பவில்லை என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. போர்க்குற்றச் செயல்களை நேரில் பார்த்த 2000 பேர் யார் என்பதனை வெளிப்படுத்த வேண்டுமென அரசாங்கம் கோரியுள்ளது.
சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ராதா. கடந்த மாதம் திடீர் என போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று திருவல்லிக்கேணியை சேர்ந்த பைசூல் என்பவர் திருமணம் செய்வதாக ஏமாற்றி 4 வருடம் குடும்பம் நடத்தினார் என்றும் தன்னிடம் இருந்து 50 லட்சத்தை ஏமாற்றி வாங்கி விட்டதாகவும் பரபரப்பான புகார் அளித்தார்.
வடபழனி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பைசூலை கைது செய்ய தேடினர். அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் பைசூலுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறுவதாக ராதா அறிவித்தார். தங்களுக்குள் சமரசம் ஆகிவிட்டதாகவும் கூறினார். ஆனால் ஒரிரு தினங்களுக்கு பிறகு மீண்டும் போலீசில் புகார் அளித்தார்.
பைசூல் ஆட்கள் தன்னை வீட்டுக்குள் சிறைவைத்ததால் வாபஸ் வாங்குவதாக அறிவித்தேன். இப்போது அவர்கள் பிடியில் இருந்து வந்து விட்டேன் புகாரை வாபஸ் பெற மாட்டேன். பைசூல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
அதன் பிறகு ராதாவை காணவில்லை. அவர் ஐதராபாத் சென்று விட்டதாகவும் அங்கு தலைமறைவாக இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இது குறித்து ராதாவை போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது..
நான் தலைமறைவானதாக வெளியான செய்தி உண்மை இல்லை. கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தேன். மிரட்டல்களும் வந்த வண்ணம் இருந்தது. எனவே தான் ஐதராபாத் வந்து விட்டேன். என்னை வீட்டு சிறையில் வைத்து மிரட்டியதால் அவர்கள் பிடியில் இருந்து தப்பிக்க புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்தேன்.
பைசூலை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்னிடம் இருந்து வாங்கிய 50 லட்சத்தை வாங்கித் தர வேண்டும். விரைவில் சென்னைக்கு மீண்டும் திரும்பி வருவேன். என்று ராதா கூறினார்.