சிக்ஸ் பேக்கில் தனுஷ்!!

vellayillapattathariவேலையில்லா பட்டதாரி படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக் அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். சினிமா உலகில் ஆக்‌ஷன் ஹீரோ என நிரூபிக்க கதாநாயகர்கள் எடுக்கும் புதுவகையான அஸ்திரம் தான் சிக்ஸ்பேக்.

அந்த வகையில் சூர்யா, தனுஷ், விஷால், லேட்டஸ்ட்டாக பரத் உட்பட பலரும் ஒருமுறை தங்களது படங்களில் சிக்ஸ்பேக் காட்டிவிட்டார்கள்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தற்போது தான் நடித்துவரும் வேலையில்லா பட்டதாரி படத்துக்காக இந்த அவதாரம் எடுத்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தின் டீஸர் ஜனவரி 1ம் திகதியும், இசை காதலர்தினமான பிப்ரவரி 14ம் திகதியும் வெளியாகவுள்ளது.

தனுஷ் ஏற்கனவே பொல்லாதவன் படத்திலேயே சிக்ஸ்பேக் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரெஸ்டாரண்ட் நடத்தி பிழைப்பேன் : ஜீவா!!

jeevaபடங்கள் ஓடவில்லையென்றால் ரெஸ்டாரண்ட் வைத்து பிழைப்பேன் என்று கூறியுள்ளார் ஜீவா. முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் படங்களின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார் ஜீவா.

ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக இரண்டும் படங்கள் பெயர் எடுத்துக்கொடுக்கவில்லை. அதன்பிறகு என்றென்றும் புன்னகை, யான் என்ற இரணடு படங்களில் நடித்து வந்தார். அதில் என்றென்றும் புன்னகை ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், என்றென்றும் புன்னகைன்னு டைட்டீல் வச்சிட்டு, படம் முழுக்க என்னை சிடுமூஞ்சியாவே காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இந்த படத்தில் நடித்தபோது இயக்குனரிடம் இதுபற்றி அடிக்கடி சொன்னேன். ஆனால் படம் ரிலீசாகும்போது இதோட ரிசல்ட் தெரியுமுன்னாரு. அதே மாதிரி படமும் இப்ப வெற்றி பெற்றிருக்கு.

மேலும், ஒருவேளை இந்த படமும் ஓடலேன்னா ஏதாச்சும் ரெஸ்டாரென்ட் நடத்தி பொழைச்சிக்கலாம்னு நெனச்சிருந்தேன். நல்லவேளையா படம் ஓடி, என்னை சினிமாவுல தொடர்ந்து நடிக்கிறதுக்கு ஒரு வழி காமிச்சிருக்கிறார் என்றும் இனிமே இந்தவெற்றியை தக்க வைச்சிக்கிற மாதிரியான கதைகளா தெரிவு செய்து நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

 

பாக். நடிகை வீணாமாலிக் தொழில் அதிபரை மணந்தார்!!

Veena-Malik

பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் மும்பையில் சில காலம் தங்கி இந்தி டி.வி. சனல் ஒன்றின் பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். இதன்மூலம் வீணா மாலிக் இந்தியாவில் பிரபலம் ஆனார். இந்த நிலையில் வீணா மாலிக் துபாயைச் சேர்ந்த ஆசாத்பஷிர்கான் காத்தக் என்பவரை திடீர் திருமணம் செய்தார்.

தொழில் அதிபரான ஆசாத்பஷீர்கான் துபாயிலும் அமெரிக்காவிலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவர் வீணாமாலிக்கின் தந்தையின் நண்பரின் மகன் ஆவார். திருமணம் பற்றி வீணா மாலிக் கூறுகையில், இது பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண் நானாகத்தான் இருப்பேன்.

இந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாள். மற்ற விவரங்களை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை துபாய், பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் வீணா மாலிக் தெரிவித்தார்.

 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு முதல் பயணிகள் கப்பல்!!

mv-voyagerஇலங்கையின் ஹம்பாந்தோட்டை மாகம் ருகுனுபுர மஹிந்த ராஜபக்ச துறைமுகத்துக்கு முதல் தடவையாக பயணிகள் கப்பல் ஒன்று சென்றுள்ளது. கடந்த 21 ஆம் திகதின்று இந்த துறைமுகத்துக்கு சென்ற இந்த கப்பலே துறைமுகம் திறக்கப்பட்ட பின்னர் சென்ற முதலாவது கப்பலாக இருந்தது.

எம்வி வேயேஜர் என்ற இந்த கப்பலில் 365 பயணிகளும் 224 பணியாளர்களும் பயணித்தார்கள். இந்த கப்பல் ஹம்பாந்தோடை துறைமுகத்தில் சுமார் 11 மணித்தியாலங்கள் தரித்திருந்தது. இந்த கப்பல் துபாய், ஓமான், இந்தியாவின் ஊடாகவே ஹம்பாந்தோட்டைக்கு சென்றது.

இதற்கு முன்னதாக இந்தக்கப்பல் டிசம்பர் 18 ஆம் திகதியன்று கொழும்பு துறைமுகத்துக்கு சென்று இரண்டு நாட்கள் அங்கு நங்கூரமிட்டிருந்தது.

 

குடாநாட்டில் இந்து ஆலயங்களில் நிர்வாக முரண்பாடுகள் அதிகம் : யாழ் அரச அதிபர்!!

சுந்தரம் அருமைநாயகம்யாழ்ப்பாணத்திலுள்ள பல இந்து ஆலயங்களில் தோன்றியுள்ள நிர்வாக முரண்பாடுகள் கவலையளிப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இத்தகைய முரண்பாடுகள் குறித்து மாவட்டச் செயலகத்துக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஆலய நிர்வாக முரண்பாடுகள் குறித்து அதிகளவான முறைப்பாடுகள் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றன. எந்தவொரு நிர்வாகங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் ஏற்படுவது நியதியே. அதுகுறித்து நிர்வாகங்களுக்கிடையிலையே பேசித் தீர்க்கப்பட வேண்டும். ஆலயத்துக்கு வெளியே முரண்பாடுகள் வரக்கூடாது.

ஆலங்களிற்கென தனித்துவமான சிறப்புக்களும் புனிதமும் இருக்கின்றது. அவற்றை பாதுகாத்து பேணுகின்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மிடத்தே உள்ளது.

மேலும் கலாசார பண்புடைய சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பிலுள்ள ஆலய நிர்வாகங்கள் தமக்குள் மோதிக்கொள்ளாது சமூகத்தைக் கட்டியெழுப்பவேண்டும்.

ஆலயங்களின் நிர்வாகங்கள் மக்களுடைய கருத்துக்களையும் உள்வாங்கி நீதி, நியாயத்துடன் செயற்பட்டால் எந்தப் பிரச்சினைகளும் ஏற்படாது. ஆலயங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பாதுகாக்கப்படும் என்றார்.

 

 

வவுனியா நீதிமன்றத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்!!

Kaithiவவனியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டிருந்த கைதியொருவர் நேற்று (26.12) தப்பியோடியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிதம்பரபுரத்தைச் சேர்ந்த செல்வநாயகம் ரவிக்குமார் என்ற கைதியே நீதிமன்றத்தில் வைத்து தப்பியோடி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பியோடியுள்ள கைதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்திலும் வழக்குகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் கைதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவத்தனர்.

 

கதை கூறி கடத்தல்காரர்களை மடக்கியப் பிடித்த பொலிசார்!!

Thefசென்னையில் கடத்தல் கும்பலினை கதை கூறி பொலிசார் மடக்கி பிடித்துள்ள ருசிகரத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சாஸ்திரிநகர் 12வது அவென்யூவை சேர்ந்த தொழிலதிபரின் மகள் கடந்த திங்கட்கிழமை மர்மகும்பலால் காரில் கடத்திச்செல்லப்பட்டார்.

மாணவியை பொலிசார் பத்திரமாக மீட்டாலும், அவர் மீட்கப்படவும், கடத்தல்காரர்கள் தங்களது பிடிவாதத்தை தளர்த்தியதற்கும் பொலிசார் ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

மாணவி கடத்தப்பட்டதில் இருந்து எவ்வித சாப்பாடும் சாப்பிடாமல் அடம் பிடித்தார். இதனாலும் சாப்பிடச்சொல்லி அவரை கடத்தல்காரர்கள் அடித்து துன்புறுத்தியதால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு விட்டது.

இதைப்பார்த்து கடத்தல்காரர்கள் பயந்து மாணவி மயக்கம் போட்டு விழுந்த தகவலை அவரது தந்தையிடம் போனில் கூறியுள்ளனர். அவரது தந்தையும், பொலிசார் அறிவுரையின் பேரில், கடத்தல்காரர்களை கலங்கவைக்கும் ஒரு கதையை அவிழ்த்து விட்டார்.

மாணவிக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது அவள் வேளா, வேளைக்கு சாப்பிடாவிட்டால் மயக்கம் வரும் என்றும், மயக்கம் வந்தால் உடனடியாக ஒரு மாத்திரை சாப்பிடுவாள் எனவே அந்த மாத்திரையை கொடுக்காவிட்டால், வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் கூறியுள்ளார்.

இந்த கதையை கேட்டு கலங்கிய கடத்தல் கும்பல் மாத்திரை பெயரை சொல்லும்படி கேட்டுப்பார்த்துள்ளனர். அந்த மாத்திரை எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்காது, குறிப்பிட்ட மருந்து கடையில் மட்டுமே கிடைக்கும் என்று தந்தை கூறியுள்ளார்.

அதுவரை மிரட்டி வந்த கடத்தல்காரர்கள், இதற்கு பிறகு தங்களது பிடிவாதத்தை தளர்த்திவிட்டு 2 கோடி வேண்டாம் என்றும் 50 லட்சம் தந்தால் போதும் என கூறி குறிப்பிட்ட மாத்திரையுடன் ராமாவரம் என்ற பகுதிக்கு வரச்சொல்லியுள்ளனர்.

இதை சாதகமாக பயன்படுத்திய பொலிசார் தங்களது வியூகத்தை அமைத்து ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கடத்தல்காரர்களை மடக்கி பிடித்துவிட்டனர்.

அதுவரை பல இடங்களுக்கு தந்தையை வரச்சொல்லி அலைக்கழித்த கடத்தல்காரர்கள், அதன்பிறகு அலைக்கழிக்காமல் ராமாவரத்திற்கு சொன்னபடி வந்து மாட்டிக் கொண்டனர்.

 

சீனாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறார் போதி தர்மர்!!

bodhiதமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் போதி தர்மருக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்த போதி தர்மர், சுமார் 1500 வருடங்களுக்கு முன் இந்தியாவை விட்டு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பணயம் செய்து இறுதியாக சீனா சென்றார்.

அங்கு அவர் சீன பாரம்பரிய வரலாற்றில் புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட சான் புத்த மதத்தின் முதல் தலைவராகவும், மகாயண புத்த மதத்தின் 28வது தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

கி.பி 6ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்த சீனத் துறவியும், சுற்றுப்பயணியுமான யீ ஜங் எழுதியுள்ள குறிப்புகளில் தாமு தென்னிந்திய நகரமான காங்-சியிருந்து சீனாவுக்கு வந்தபோது அவர் போதி தர்மர் என்று அழைக்கப்பட்டதாகவும், அவர் அங்கு மகாயண புத்த மதத்தை பரப்பியதாகவும் கூறியுள்ளார்.

சீனாவின் ஹெனன் மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் “குங்பூ” என்ற தற்காப்பு கலையை அவர் பயிற்றுவித்து வந்ததாகவும் ஜங் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மண்ணிலிருந்து சென்ற இத்துறவி தனது போதனைகளின் மூலம் சீன, ஜப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தார்.

இந்நிலையில் சீனத்துறவியும், ஷோலின் கோயிலின் நிர்வாக இயக்குனருமான ஷி யான் லின் தலைமையில் ஒரு குழு சில தினங்களுக்கு முன் காஞ்சி நகருக்கு வந்தது.

அப்போது சீனா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அளிக்கும் நிதியுதவியின் மூலம் போதி தர்மருக்கு நினைவிடம் அமைக்க முயன்று வரும் சென்னையை சேர்ந்த பண்டைய கல்வி ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரான ஜான் சாமுவேலுடன் ஷி யான் லின் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இத்திட்டம் முடிவடைந்தால் உலகத்தரம் வாய்ந்த புத்த மத தத்துவ மையமாக இது உருவெடுக்கும் என ஜான் சாமுவேல் தெரிவித்துள்ளார்.

இந்த நினைவிடத்தில் சீனாவின் சோங்ஷான் மலையில் 9 வருடங்கள் தியானம் செய்த போதி தர்மருக்கு அந்த மலையிலிருந்து செதுக்கப்பட்ட அவரது திருவுருவ சிலையை நிறுவப்போவதாக லின் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிலிந்து இங்கு வந்து இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் டோக்கியோ பல்கலைக்கழக விரிவுரையாளர் ட்சுட்டோம்பு காம்பே தலைமையிலான குழுவினர் ஜப்பானில் வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் ஒன்றை இங்கு நிறுவ உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷோலின் கோயிலில் போதி தர்மர் பயிற்றுவித்த சீன தற்காப்புக் கலை, குங்பூ மற்றும் தியான வகுப்புகள் இம்மையத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நின்றுகொண்டே பாடம் படிங்கள் : அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்!!

Ausஅவுஸ்திரேலியாவில் மாணவர்கள் குண்டாவதை தவிர்க்க புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் இளம் வயதில் ஏற்படும் நீரிழிவு நோய்க்கான காரணங்கள் குறித்த ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில், பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்கள் அதிக நேரம் அமர்ந்த வண்ணம் பாடங்களை கற்பதால் அவர்களுக்கு உடல் எடை அதிகரித்து, நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்று மாணவர்கள் நின்ற வண்ணம் பாடம் கற்கும் வகையில் வகுப்பறையை அமைத்துள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாக அதிகாரி கூறுகையில், மாணவர்களுக்கு உயரத்தை அதிகரித்தும், குறைத்தும் பயன்படுத்தும் வகையிலான மேசைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மேசைகளின் உதவியுடன், மாணவர்கள் குறிப்பிட்ட, சில மணி நேரம் கண்டிப்பாக நின்றபடியே பாடங்களை கவனிக்க வேண்டும்.
விருப்பப்படும் மாணவர்கள் முழு நேரமும் நின்றபடியே பாடங்களை கவனிக்கலாம்.

மாணவர்கள் நீண்ட நேரம் அமர்ந்த வண்ணம் பாடங்களை கவனிப்பதால் அவர்களின் தசைகளின் செயல்பாடு குறைந்து விடுகிறது. நின்றபடி பாடங்களை கவனிப்பதாலும், பிற வேலைகளில் ஈடுபடுவதாலும் தசைகளின் வலிமை அதிகரிப்பதால் கொழுப்பு குறைக்கப்பட்டு உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

இந்த முறையை பின்பற்றும் மாணவர்களின் செயல்திறன், ஞாபகசக்தி, உடல் எடை மாற்றம், உடலில் ஏற்படும் வேறு சில மாற்றங்கள் போன்றவை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்யப்படும்.

மாணவர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்தைப் பொருத்து இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், கணனி மூலம் பாடம் நடத்தும் நடைமுறையும், தேவைக்கு அதிகமான அளவில் உண்பதும், உடற்பயிற்சிக்கென நேரம் ஒதுக்காததுமே மாணவர்களின் உடல்எடை அதிகரிப்பதற்கு காரணம்.

அதனை தவிர்க்க திட்டம் தீட்டாமல், நின்றபடியே பாடம் படிக்க சொல்வது நகைப்புக்கு உரியது என கருத்து தெரிவித்துள்ளனர்.

 

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை முந்தும் சீனா!!

china2030ம் ஆண்டாகும் போது ஐரோப்பாவின் மிகச் சிறந்த பொருளாதார பின்னணியை கொண்ட நாடாக சீனா பரிணமிக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

த கார்டியன் இணையத்தளம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி 2028ம் ஆண்டாகும் போது சீனாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவின் வளர்ச்சியையும் கடந்துச் செல்லும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியா, பிரேசில் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் நிலையான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜப்பான் பிரதமருக்கு சீனா கடும் கண்டனம்!!

jappanஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கும் யசுகுனி போர் நினைவிடத்திற்கு, ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே நேற்று விஜயம் செய்தார்.

அந்நாட்டின் ராணுவ ஆக்கிரமிப்பு வரலாற்றினை பெருமைப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்திற்கு பிரதமர் சென்றதை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.

இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரான குவின் கங் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

ஜப்பானின் ராணுவ ஆக்கிரமிப்பு, காலனித்துவ ஆட்சி போன்ற வரலாறுகளை அழகுபடுத்தும் விதத்திலேயே ஜப்பானியத் தலைவர்கள் யசுகுனி நினைவிடத்திற்கு செல்லுகின்றனர். பிரதமரின் இந்த விஜயம் சீன மற்றும் ஆசிய மக்களின் உணர்வுகளை மிருகத்தனமாக மிதிப்பதுபோல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 1930களில் ஜப்பான் தங்கள் நாட்டின் மீது கொடூரமான படையெடுப்பை நடத்தியதன் உணர்வுகளை மக்களிடையே தட்டி எழுப்புவதன் மூலம் தங்கள் எதிர்ப்பிற்கான பொது ஆதரவை பெற நினைக்கின்றது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கிழக்கு ஆசியாவிலுள்ள பல நாடுகளை ஜப்பான் ஆக்கிரமித்தது.

அப்போது பொதுமக்களிடமும், போர் கைதிகளிடமும் ஜப்பான் ராணுவம் நடந்துகொண்டவிதம் மிகவும் மோசமாக சித்தரிக்கப்பட்டது. நான்ஜிங் படுகொலை போன்ற சம்பவங்கள் ஜப்பானின் அட்டூழியங்களுக்கு சாட்சியமாயின.

ஜப்பான் நடத்திய போர்களில் இறந்த வீரர்களுக்கு நினைவிடமாக 1970ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட யசுகுனி நினைவிடம் 2.5 மில்லியன் போர்வீரர்களுக்கு மட்டுமின்றி போர்க்குற்றங்களுக்காக மரணதண்டனை அளிக்கப்பட்ட பல உயர்மட்ட அதிகாரிகளுக்கும் நினைவிடமாக உள்ளது.

இந்தப் போர்களின் விளைவாக சீனா 20.6 மில்லியன் மக்களை இழந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்போதுகூட, ஜப்பான் தனது விரிவாக்கத்தின் தொடர்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் சீனத் தீவுகள் பிரச்சினையும் இதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே ஆகும் என்ற கருத்து நிலவுகின்றது.

 

ஓய்வு பெறுகிறாரா ஹர்பஜன் சிங்?

Harbajanஇந்திய அணியில் இடம்பெறாத காரணத்தால் ஓய்வு பெற ஹர்பஜன் சிங் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்(33).

இதுவரையிலும் 101 டெஸ்ட் போட்டிகள்(413 விக்கெட்டுகள்), 229 ஒருநாள் போட்டிகள்(259 விக்கெட்டுகள்), 25 20-20 (22 விக்கெட்டுகள்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இவர் கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடந்த மார்ச் மாதம் பங்கேற்றார். தற்போது ரஞ்சி கிண்ண போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியில் பங்கேற்று விளையாட முடியாத காரணத்தால் ஓய்வு முடிவில் உள்ளதாக கூறப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில் ரஞ்சி கிண்ண தொடரில் பஞ்சாப் அணிக்காக முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட் வீழ்த்தினேன், இதன் பிறகு தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினேன்.

அவ்வப்போது காயம் தொல்லைகள் தந்தாலும் அதிலிருந்து மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன். இந்திய அணியில் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் பங்கேற்று அதிக விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதே தனது எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.

 

தமிழக வீரர் அஸ்வினுக்கு பாலி உம்ரிகர் விருது!!

Aswinஇந்திய கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் இந்திய அளவில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது. இதன்படி 2012-13-ம் ஆண்டுக்கான விருது பட்டியலை கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டது.

இதில் பாலி உம்ரிகர் விருதுக்கு சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்குரிய காலக்கட்டத்தில் (2012 அக்டோபர் 1 முதல் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 30ம் திகதி வரை) அஸ்வின் எட்டு டெஸ்ட் போட்டிகளில் 43 டெஸ்ட் விக்கெட்டுகளும் 263 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

இதே போல் ஒரு நாள் போட்டியில் 24 விக்கெட்டுகளும், 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். அது மட்டுமின்றி 80 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கடந்த இந்தியர் என்ற சாதனையும் இந்த காலக்கட்டத்தில் அவர் படைத்திருந்தார்.

அவருக்கு பாலி உமர்ரிகர் விருதுடன் ஐந்து இலட்சம் காசோலையும் வழங்கப்படும். இந்த விருதை ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் (2 முறை), ஷேவாக், கௌதம் கம்பீர், ராகுல் டிராவிட், விராட் கோலி பெற்றிருக்கிறார்கள்.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு வழங்கப்படும் திலிப் சர்தேசாய் விருதை ரோகித் ஷர்மா (5 லட்சம் பரிசு), ரஞ்சி கிரிக்கெட்டில் சகலதுறை ஆட்டக்காரராக ஜொலித்த அபிஷேக் நாயர் லாலா அமர்நாத் விருதையும் (2½ லட்சம்) பெறுகிறார்கள்.

சிறந்த வீராங்கனைக்கான எம்.ஏ.சிதம்பரம் விருதை தமிழகத்தை சேர்ந்த திருஷ்காமினி வாங்குகிறார். அவருக்கு விருதுடன் 50 ஆயிரம் ரூபாவும் கிடைக்கும். இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக முன்னாள் வீரர்கள் ஆர்.ஜி. பாபு நட்கர்னி, பரூக் என்ஜினீயர், மறைந்த ஏக்நாத் சோல்கர் ஆகியோருக்கு நினைவுப்பரிசுடன் தலா 5 லட்சம் ரூபா வழங்கப்படுகிறது.

வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதுக்கு கபில்தேவின் பெயர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. விருது வழங்கும் விழா ஜனவரி 11ம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது.

 

 

பெண்கள் கழிவறையில் கமரா : விசாரணைக்கு விசேட குழு!!

CCTVஅனுராதபுரம் வைத்தியசாலையின் பெண்கள் கழிவறையில் வீடியோ கமரா பொருத்தப்பட்டிருந்தமை ஊழியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலை பெண் ஊழியர்கள் பாவிக்கும் கழிவறையொன்றில் சிறிய வீடியோ கமரா பொருத்தப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டமை குறித்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் விஜேதாச அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது யாருடைய வேலை எனத் தெரியவில்லை எனினும், சுகாதார அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் முன் எடுக்கப்பட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஐநா தீர்மானம் தொடர்பான நடவடிக்கை பற்றி மதிப்பாய்வு செய்ய அமெரிக்க நிஷா தேசாய் இலங்கை வருகிறார்!!

Nisha Desaiஇலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வுக்கு முன்னர் இந்த மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே புதிதாக நியமனம் பெற்றுள்ள உதவிச் செயலாளர் நிஷா தேசாயை அமெரிக்கா அனுப்பவுள்ளது.

ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலங்கை வரவுள்ள நிஷா தேசாய், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் பேசவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அனுசரணையில் இலங்கை தொட்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டு வந்த தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் பேசவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

மனித உரிமைகள் தொடர்பில் எந்த நாடும் இலங்கையை அச்சுறுத்தவில்லை : கருணாதிலக!!

Karunathilakaஇலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து அதன் எந்தவொரு நட்புறவு நாடும் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவில்லையென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.

ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எதிராக ஏதேனும் தீர்மானம் கொண்டு வரப்படலாமென இலங்கையின் நட்புறவு நாடுகள் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையெனவும் அவர் கூறினார்.

மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனை சமாளிக்க நாம் தயாராகவேயுள்ளோம்.

அமர்வுகளின்போது அரசாங்கம் என்ற வகையில் எம்மிடையே எழுப்பக்கூடிய வினாக்களை அவற்றுக்கான விடைகளை தயார்படுத்தி வருகின்றோம்.

மோதல்களுக்குப் பின்னர் மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே அபிவிருத்தி மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் செயற்பாடுகள் கட்டியெழுப்பப்படுகின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றச் செயற்பாடுகளை விளக்கமளிப்பது குறித்து நாம் தீர்க்கமாக ஆராய்ந்துள்ளோமெனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் எந்தவொரு நாட்டிடமிருந்தோ எமக்கு அழுத்தமோ அச்சுறுத்தலோ ஏற்படுத்தப்படவில்லை.

ஜெனீவா கூட்டத் தொடரிற்கு சமுகமளிப்பதற்கு முன்னதாக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கொழும்பிலும் ஜெனீவாவிலுமுள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்களையும் நேரில் சந்தித்து இலங்கை அரசாங்கத்தின் அரசியல் மற்றும் அபிவிருத்தி நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பார்.

அத்துடன் எமது முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையினை எமது தூதரகம் மற்றும் உயர்ஸ்தானிகராலயமூடாக அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்வோம்.

இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றச் செயற்பாடுகள் குறித்து உலக நாடுகள் தெளிவான விளக்கத்தினை பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்குமெனவும் அவர் கூறினார்.