புனே மைதானத்தில் நேற்று அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணியின் ஹக்ஸ் 53 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்தார். பின்ச் அதிரடியாக ஆடி 79 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் 8 நான்கு ஓட்டங்களுடன் 72 ஓட்டங்களை குவித்தார். அவருடன் 82 பந்துகளில் பெய்லி ஜோடி சேர்ந்து 85 ஓட்டங்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 31 ஓட்டங்களையும் பால்க்னர் 27 ஓட்டங்களையும் குவித்தனர்.
50 ஓவர் இறுதியில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் எடுத்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.
305 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 61 ஓட்டங்கள், ரோஹித் சர்மா 42 ஓட்டங்கள், சுரேஷ் ரெய்னா 39 ஓட்டங்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் மிகக்குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ள பிரித்தானியாவின் இளவரசர் சார்ள்ஸ் அந்நாட்டுப் பிரஜை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பவுள்ளார்.
இலங்கையின் தென் பகுதியான ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் வைத்து பிரித்தானியைவைச் சேர்ந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் குராம் செய்க் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளவரசர் சார்ள்ஸ் கேள்வி எழுப்புவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது. இக் கொலை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகள் தொடர்பில் பிரித்தானியா தொடர்ந்தும் அதிருப்தி வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் இலங்கை வரும் பிரித்தானிய இளவரசர், இச்சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் செய்யப்படும் பரிந்துரைகள் இரண்டு வாரங்களில் அமுல்படுத்தப்பட வேண்டும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அப்படி செய்யத் தவறினால் உரிய நிறுவன பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு விடுக்கும் பரிந்துரைகளை சில அரச நிறுவன பிரதானிகள் செயற்படுத்தாது புறக்கணிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென அவர் கூறினார். அந்த முறைப்பாடுகள் குறித்து தனியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என ஆணைக்குழு கூறியுள்ளது.
இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் பிரியந்த பெனாண்டோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துள்ள இத்தீர்மானத்தை சட்ட மூலத்தில் உள்வாங்கிக் கொள்ளவென அது சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீச்சல் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமி ஜெ. திவ்ய பிரபா சாதனை படைத்துள்ளார். சிறு வயதிலேயே கடலில் நீந்தி சாதனை புரிந்துள்ள இந்த மாணவிக்கு குற்றாலீஸ்வரன்போல சாதனை படைக்க வேண்டும் என்பது ஆசை.
திருநெல்வேலி, சீனிவாசநகரைச் சேர்ந்த ஜெகன் செல்வகுமார், ஸ்ரீரங்கநாச்சியார் தம்பதியின் மகளான திவ்ய பிரபா, பாளையங்கோட்டை மகாராஜநகர் ஸ்ரீ ஜயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மேல்நிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது மகளுக்கு நீச்சல் கற்றுத்தருவதற்காக நான்கரை வயதில் திவ்ய பிரபாவை நீச்சல்குளத்துக்கு அழைத்துச் சென்றார் ஜெகன் செல்வகுமார். பயமே இல்லாமல் அசாத்தியமாக திவ்ய பிரபா நீந்தியதைக் கண்டு பயிற்சியாளர்கள் அவரை ஊக்குவித்தனர்.
இதையடுத்து தினமும் காலையில் ஒரு மணி நேரம், இரவு 2 மணி நேரம் என நீச்சல் கற்று முதன்முதலாக 2012-ல் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்றார். இதில், 3 பிரிவுகளில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
அக்டோபர் 2012-ல் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்று ஒரு பிரிவில் தங்கமும், மற்றொரு பிரிவில் வெண்கலமும் வென்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் 2-ஆவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு பென்டத்லான் அமைப்பும் கடந்த பிப்ரவரியில் நடத்திய போட்டியில் பங்கேற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றார்.
கோவாவில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் 4-ஆவது இடம் பிடித்து சர்வதேச அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
சைப்ரஸ் நாட்டில் லிமஷாயில் சர்வதேச பயத்லான் போட்டிகள் அக்டோபர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதிவரை நடைபெற்றன. இதில் பெற்றோருடன் பங்கேற்கச் சென்ற திவ்ய பிரபாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இதுவரை நீச்சல் குளத்தில் நடைபெற்ற போட்டிகளில் மட்டுமே நீந்தியதால் தங்களது மகளால் கடலில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க முடியுமா என யோசித்தனர்.
ஆனால், திவ்ய பிரபா சந்தோஷமாக நீந்தத் தயாரானதால் அவருக்கு 2 நாள் மட்டும் கடலில் நீந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடந்த சர்வதேச பயத்லான் போட்டியில் 19 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் கலந்துகொண்டு 13-ஆவது இடம் பிடித்தார்.
இந்திய அளவில் 6 வயதில் உலக சாதனை புரிந்த மாணவி என்ற பெருமையையும் சேர்த்துள்ளார். இந்த மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் இயக்குநர் ஜெயேந்திரன் வி. மணி, முதல்வர் ஏ. ஜெயந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
நீச்சல் மட்டுமல்லாமல் பாட்டு, பரதம் உள்ளிட்டவற்றையும் திவ்ய பிரபா ஆர்வத்துடன் கற்பதாக பெற்றோர் பெருமிதம் தெரிவித்தனர். கடலில் நீந்தி பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய குற்றாலீஸ்வரன் போல ஆக வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார் திவ்ய பிரபா.
மத்தியப் பிரதேச மாநில தட்டியா மாவட்டத்தின் ரத்னாகர் பகுதியில் மந்துளா தேவி கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி பூஜை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெறும். இவ்விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்த வருட நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளான இன்று நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதிகாலையில் இருந்து வழக்கம்போல் பக்தர்கள் இன்று கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர். கோவிலுக்கு வரும் வழியில் சிந்து நதியைக் கடப்பதற்கு குறுகலான பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் வரும்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முயன்றதில் காலில் மிதிபட்டும், ஆற்றில் தவறி விழுந்தும் 70 பேர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்த இடம் தலைநகர் தட்டியாவிலிருந்து50 கி.மீ தொலைவில் உள்ளது. சம்பவப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் பாதிக்கப்பட்டோர்களை உடனடியாக தட்டியா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டில் அருகிலுள்ள சிவபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிகண்டா அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது. அப்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்35-க்கும் மேற்பட்ட யாத்ரிகர்கள் அடித்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரே படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றாலே தாங்காது. ஆனால் ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கும் நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக பத்து நாயகிகள் நடிக்கிறார்களாம்.
நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர் அப்படத்தை தயாரிக்கிறாராம்.
ஏற்கனவே 2005-ல் நோ என்ட்ரி என்ற பெயரில் ஒரு படத்தில் நடித்திருந்தார் சல்மான்கான். அப்படத்தில் ஒவ்வொரு பெண்ணின் பின்னால் அவர் சுற்றிக்கொண்டிருப்பது போன்ற கதையாம்.
அதே பாணியை கதையை இப்போது இன்றைய நவீன யுக்திகளுடன் அதன் இரண்டாம் பாகமாக தயாரிக்கிறாராம் போனிகபூர்.
இதில் சல்மான்கானுடன் போனிகபூரின் சகோதரர் அனில்கபூரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். இவர்களுடன் இணைந்து நடிக்கும் பத்து கதாநாயகிகளை தேர்வு செய்யும் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறதாம்.
8 வயது பாடசாலை சிறுமியை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சாலியவெவ – துனுமடலேவ கிராமத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 15ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று சிறுமி மாத்திரமே வீட்டில் இருந்துள்ளார்.
அங்கு வந்த சந்தேகநபர் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு அவரிடம் 20 ரூபா பணத்தை கொடுத்து நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டுச் சென்றதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி தனக்கு நடந்தவற்றை தனது பாடசாலை நண்பியிடம் கூறியதும் குறித்த நண்பி தனது தாயிடம் அதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின் நண்பியின் தாய், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் சம்பவத்தை தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் முன் பாய்ந்து தாய் மற்றும் மகள் பலியாகியுள்ளனர்.
வெயங்கொட மற்றும் பல்லேபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் கீனவல பிரதேசத்தில் இச்சம்பவம் இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாய் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் இவ்வாறு ஓடும் ரயில் முன் பாய்ந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்போது தாயும் ஒரு மகளும் ரயிலுடன் மோதி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் தப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இருவரின் சடலமும் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சஹிவால் மாவட்டத்தை சேர்ந்த ஆபித்ஹீசேன் (20) அதே பகுதியில் வசிக்கும் ஷீபா மசி (19) என்ற கிருஸ்துவ பெண்ணை உயிருக்குயிராக காதலித்து வந்தார்.
இந்த மதம்மாறிய காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் கடும் எதிரிப்பு தெரிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்னர் ஷீபாவின் பெற்றோர் தங்கள் மதத்தை சேர்ந்த வேறொருவருக்கு ஷீபாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து, தங்களது காதல் நிறைவேறாத துக்கத்தில் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
கடந்த வியாழக்கிழமை தனிமையான ஓரிடத்திற்கு சென்ற அவர்கள் ஒருவரையொருவர் துப்பாக்கியால் மாறி,மாறி சுட்டுக்கொண்டனர்.
குண்டு பாய்ந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த காதல் ஜோடியை அவ்வழியாக சென்றவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
தங்களது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வருவதை அறிந்த ஆபித் ஆத்திரமடைந்து அவளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை நாடகம் ஆடுவதாக ஷீபாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளர். இது தொடாபாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மெரினா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், அதன்பிறகு நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள் வரை சும்மா ஊரை சுற்றிக்கொண்டு திரியும் பையனாகத்தான் நடித்திருந்தார். அதனால் அவருக்கான கெட்டப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை.
ஆனால், இப்போது ஹன்சிகாவுடன் அவர் நடித்து வரும் மான்கராத்தே படத்தில் வழக்கத்தில் இருந்து மாறுபட்டு டீசன்டான பையனாக நடிக்கிறாராம். அதனால் அவரது ஹேர் ஸ்டைல், காஸ்டியூம் என்று எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறார்களாம். கூடவே ஹன்சிகாவுக்கு இணையாக அவரது கெட்டப்பில் பிரமாண்டம் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு பந்தாவான பையனாக அணிகலன்களைக்கொண்டே பக்காவாக மாற்றியிருக்கிறார்களாம்.
அதனால், பாடல் காட்சிகளில் மட்டுமின்றி, கேசுவலான காட்சிகளிலும்கூட ஹன்சிகாவுக்கு பொருத்தமான நடிகராக தன்னை புதுப்பித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும், விஜய்யின் துப்பாக்கியில் நடித்த வில்லன் வித்யுத் ஜாம்வாலே இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறாராம். அவருக்கும்,சிவகார்த்திகேயனுக்கும் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளதாம்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விடயம் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட்களுக்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து இந்திய தலைவர் தோனி என்ன கூறுவார் என்பதே.
கடைசியாக தோனி நேற்று சச்சின் ஓய்வுபற்றி மனம் திறந்து கூறிவிட்டார்.
சச்சின் பற்றி அவர் கூறியிருப்பதாவது,
“எனக்கு தெரியும் இது (ஓய்வு அறிவிப்பு) வரும் என்று. நான் அவரது முடிவை மதிக்கிறேன், அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக ஒரு கிரிக்கெட் வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.
கிரிக்கெட் காலம் முழுதும் டாப் பொசிஷனிலேயே இருந்திருக்கிறார். 23 ஆண்டுகளாக அவர் முதன்மை நிலையிலேயே இருந்துள்ளார்.
இந்திய இரசிகர்கள், தங்களது எதிர்பார்ப்புகளை உயர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் சச்சின் அவர்களது எதிர்பார்ப்புகளை தன்னுடனேயே சுமந்து சென்றார்.
இத்தனை சுமைகளையும் தாங்கி, பூர்த்தி செய்து இவ்வளவு சாதனைகளை செய்திருப்பது உண்மையில் அசாத்தியமானது, அபூர்வமானது.
இந்தத் தருணத்தில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளை அவர் முழுதும் மகிழ்ச்சியுடன் எந்த வித எதிர்பார்ப்புகளின் சுமைகள் இல்லாமல் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்தத் தருணத்தில் இந்த டெஸ்ட் போட்டிகளுக்கு ஸ்டேடியம் நிரம்பி வழிவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இப்போது கூட்டத்தை நான் டெஸ்ட் போட்டிகளில் பார்க்க முடியவில்லை எனில் அடுத்த 25- 30 ஆண்டுகளுக்கு ஃபுல் ஸ்டேட்டியம் நிரம்பி வழியும் ஒரு டெஸ்ட் போட்டியை நான் பார்க்கமாட்டேன் என்றே நினைக்கிறேன்.
ஒரு அணியின் டாப் பேட்ஸ்மெனாக இருக்கும்போது அதுவும் ஒரு நீண்ட காலத்திற்கு இருக்கும்போது அனைவரும் ஒருவரது ஆட்டத்திறனை ஆய்வு செய்வார்கள், கேள்வி கேட்பார்கள். நீங்கள் ஓட்டங்கள் அடித்தாலும் சரி அடிக்காவிட்டாலும் சரி.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை ஒட்டியுள்ள ஜகாவ் சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர் ஒருவரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் 5 படகுகளுடன் 30 மீனவர்களையும் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடுக்கடலில் இந்திய மீனவர்களின் படகுகளை வழிமறித்து பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் கண்மூடித் தனமாக இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதில் நரன் சோசா என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் துப்பாக்கி முனையில் மீனவர்களின் 5 படகுகளையும் பறித்துக்கொண்டு அதிலிருந்த 30 மீனவர்களையும் அவர்கள் கடத்தி சென்றதாக தப்பி வந்த ஒரு மீனவர் போர்பந்தர் மீனவர் சங்கத்திலும், பொலிஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனியிடம் பேசிய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, மத்திய அரசு விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் விபுலானந்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் மாலை யாழ். நகரை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதே திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 59 வயதான நபரொருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபுலானந்த வீதியைச் சேர்ந்த ஜே.பத்மநாதன் என்பவரே விபத்தில் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மற்றையநபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இன்றையதினம் வவுனியாவில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வவுனியா மாவட்டம் சார்பாக இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய சுப்பையா சுதர்சன் தலைமையில் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலய மாணவர்களுடன் வவுனியா பொலிஸாரும் இணைந்து இவ் விழிப்புணர்வு செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மக்களுக்கு டெங்கு ஒழிப்பு தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இச்செயற்திட்டம் வவுனியா மாவட்ட சுகாதார திணைக்களம், தேசிய இளைஞர்கள் பேரவை, மற்றும் கூமாங்குளம் இளைஞர் கழகம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.