அனுமதி இன்றி பால் மா விலை அதிகரிக்கும் பால்மா நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பால் மா விலை அதிகரிப்பு குறித்து பால் மா நிறுவனங்கள் அனுமதி கோரிய போதும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மஸ்ருக் தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டவிரோதமாக பால் மா விலையை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். பால் மா விலை குறித்து இன்று தொடக்கம் சோதனை நடத்தப்படும் என அவர் கூறினார்.
ஒரு கிலோ கிராம் பால் மா பைக்கற்றின் கட்டுப்பாட்டு விலை 810 ரூபாவாகவும் 400 கிராம் பால் மா பைக்கற் 325 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று அங்கு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த இலங்கை பணிப்பெண் ஒருவர் நாடு திரும்பி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொட வேவல்வத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான பாப்பாத்தி என்ற பெண் 2012ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார்.
தான் தொழிலுக்கு சென்ற நாள் தொடக்கம் வீட்டு உரிமையாளரான பெண் தன்னை சித்திரவதை செய்ததாக பாப்பாத்தி தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்கள் துன்புறுத்தப்பட்ட தான் ஒருநாள் மயக்கமடைந்ததாகவும் அப்போது வீட்டு உரிமையாளரான பெண் தன்னை வீதியில் போட்டுச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்பின் சவுதியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தன்னை நாட்டுக்கு திருப்பி அனுப்பியதாக அவர் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பணிப்பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து நேற்று பாராளுமன்றிலும் கதைக்கப்பட்டது.
தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரனின் மனைவி நடிகை ஜீவிதா, பரந்தாமரெட்டி என்பவரிடம் 34 லட்சம் கடனாக வாங்கினார். 3 மாதங்களில் திருப்பிக்கொடுப்பதாக கூறிய ஜீவிதா, பணத்தை கொடுக்கவில்லை.
அவர் ஏற்கனவே கொடுத்த காசோலையை பரந்தாமரெட்டி வங்கியில் போட்டபோது, அது பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. இதனால் பரந்தாமரெட்டி பொலீசில் புகார் செய்தார். நீதிமன்றம் இரு முறை சம்மன் அனுப்பியும் ஜீவிதா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனால் ஜீவிதாவுக்கு நேற்று ஐதராபாத் நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தது. நடிகை ஜீவிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
உயிருக்கு உயிராக காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறியதில் விரக்தி அடைந்த இந்திய வாலிபர் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றார்.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் நுழைந்த பாலாஜி பாஸ்கரன்(21) என்பவர் யாரும் எதிர்பாராத வேளையில் கத்தியால் தனது கை மணிக்கட்டில் உள்ள நரம்பை அறுத்துக்கொள்ள முயன்றார்.
அப்போது, அங்கிருந்தவர்கள் பாய்ந்து சென்று அவரை வளைத்துப் பிடித்து அசம்பாவிதம் ஏதும் நேராதபடி தடுத்தனர். இருப்பினும், கையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாலாஜி பாஸ்கரன் இதற்கு முன்னரும் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக சக பணியாளர்கள் கூறியதால் அவருக்கு மனநல சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
கோவாவில் நடக்கும் சர்வதேச பட விழா 2004ம் ஆண்டில் இருந்து வருடம் தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தடவையும் இந்தியாவில் உள்ள பிரபல நடிகர் ஒருவரை இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கம்.
கடந்த வருடம் இந்தி நடிகர் அக்சய்குமார் பங்கேற்றார். இந்த வருடம் கோவா படவிழா அடுத்த மாதம் 20ம் திகதி ஆரம்பமாகின்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்து ரஜினிக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக விழா அமைப்பாளர் விஷ்ணுவாக் தெரிவித்தார். ரஜினி பங்கேற்பது பெருமை அளிப்பதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
ஊக்கமருந்து பயன்படுத்தும் விளையாட்டு வீர, வீராங்கணைகளுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுகத்கமகே தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தி போட்டிகளில் பங்கேற்கும் வீர, வீராங்கணைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து உச்ச பட்சமாக இரண்டாண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இதற்கு மேலதிமாக ஐந்து முதல் பத்து லட்ச ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஊக்கமருந்து பயன்பாட்டை தூண்டும் நபர்களுக்கும் தண்டனை விதிக்கப்படும்.
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தல், அவற்றை விநியோகம் செய்தல், வைத்திருத்தல் போன்றனவும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்பாடு குறித்த உத்தேச சட்ட மூலமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்ப்பட்டுள்ளது. இந்த சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அலுகத்கமகே தெரிவித்துள்ளார்.
14 வயதான சிறுவன் ஒருவனை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஜோடி செருப்பைத் திருடிய குற்றத்திற்காக குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சிறுவனை, கழிவறைக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மிக மோசமான வகையில் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதுளை உயர் நீதிமன்றம் 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குற்றச் செயலுக்காக 10,000 ரூபா அபராதமும், ஒரு லட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்க வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஜயசிங்க பதிரனலாகே லலித் குமார என்ற பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த துஷ்பிரயோக சம்பவம் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றுள்ளது.
இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று அங்குள்ள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு நடவடிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
முல்லத்தீவு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்புக்கள், விவசாய, மீன்பிடிதுறை சார்ந்த அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு அரச செயலகத்தின் முன்னால் கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் வீதியோரத்தில் கூடி நின்று தமது கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
சுனாமி பேரலைகளினாலும், யுத்தத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் அமைச்சுப் பொறுப்புக்கள வழங்கப்படாமல் புறகக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், தமது மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள நான்கு மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவருக்கு ஓர் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் மகஜர் மூலம் கோரியுள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காக தமது கோரிக்கைள் அடங்கிய மகஜரை முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களாகிய டாக்டர் சிவமோகன் மற்றும் எம்.ரவிகரன் ஆகியோரிடம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.
நான்கு பேர் அடங்கிய மாகாண சபை அமைச்சரவையை அமைப்பதற்காகப் பல தடவைகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் கூடி பேச்சுக்கள் நடத்தியுள்ள போதிலும், இன்னும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாகாணசபை அமைச்சர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்களை முதலலைச்சர் சி.வி.விக்னேஸ்வன் வெளியிடுவார் என்று எதிர்பாபர்க்கப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்திலுள்ள 22 தனியார் மருந்தகங்களில் சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
பதிவு செய்யப்பட்ட மருந்தகங்கள் பலவற்றில் மருந்தாளர்கள் பிரசன்னமாகியிருக்காமை அவதானிக்கப்பட்டதாகவும் பெரும்பாலான மருந்தகங்களுக்கு ஒரு வருடகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தும் இதுவரை பதிவுகள் மேற்கொள்ளாமல் இருப்பதாகவும் தகுதி வாய்ந்த மருந்தாளர்கள் இல்லாது மருந்தகங்கள் இயங்கி வருவதாகவும் மருந்துச் சிட்டைகளின்றி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரன் தெரிவித்தார்.
இவ்வாறான குறைபாடுகளுடன் இயங்கி வரும் மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மு.மகேந்திரனின் பணிப்பின் பேரில் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எச்.எல்.எம்.அஸ்லம், உணவு மருந்த பரிசோதகர் ந.சஞ்சீவ், பிராந்திய மருந்தாளர் ந.மகேந்திரன் ஆகியோர் வவுனியாவிலுள்ள மருந்தகங்களில் திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர்.
மக்களை அணிதிரட்டுவோம், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம் என்ற தொனிப்பொருளுடன் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 35வது ஆண்டு பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியா இந்திரன்ஸ் உணவக மண்டபத்தில் நடைபெற்றது.
கட்சியின் வவுனியா மாவட்டக் கிளைச் செயலாளர் நி.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விலே கட்சியின் பல முக்கிய உறுப்பினர்களின் உரைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து “சுப்பற்ற கொல்லை” என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நாடகமும் இடம்பெற்றது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமூர்த்தி அலுவலக கணனியில் ஆபாசப் படங்களை ஏற்றி வைத்திருந்த சமூர்த்தி முகாமையாளர் ஒருவர் அங்குள்ள பெண் உத்தியோகத்தர்களை பாலியல் ரீதியாக இம்சைப்படுத்தியமை தொடர்பில் பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பிரதேச செயலர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையை யாழ்.மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் மகேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் இரண்டு சமூர்த்தி வங்கிகள் இயங்குகின்றன. இதில் ஒரு வங்கியில் பணியாற்றும் சமூர்த்தி முகாமையாளர், அந்த வங்கியில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களை பாலியல் ரீதியாக இம்சைகளுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
பெண் உத்தியோகத்தர்கள் தினமும் அணிந்து வருகின்ற ஆடைகளைப் பார்த்து வர்ணிப்பதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார்.
மேலும் சமூர்த்தி உத்தியோகத்தர்களுடன் இவர் மிகக் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாகவும் மிக அண்மித்த இடத்தில் வீடுகள் உள்ள உத்தியோகத்தர்களைக் கூட இவர் மதிய உணவிற்கு வீட்டுக்குச் செல்ல அனுமதிப்பதில்லையென்றும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் பயன்படுத்தும் அலுவலகக் கணனியில் இவர் ஆபாசப் படங்களை ஏற்றி வைத்திருந்துள்ளார்.
தமது வேலைகளைச் செய்வதற்காக கணனியைப் பயன்படுத்திய பெண்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில் இது தொடர்பில் குறித்த பிரதேச செயலருக்கு முறையிட்டுள்ளனர்.
ஆனால் சமூர்த்தி முகாமையாளருக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை எடுக்காத பிரதேச செயலர், முறைப்பாடு செய்த பெண்களில் ஒருவரை வேறு சமூர்த்தி வங்கிக்கு இடமாற்றியுள்ளதாக தெரியவருகின்றது.
இதனால் இந்த விடயம் யாழ்.மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்தச் சங்கம் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் மகேஸ்வரன் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர் ஆகியோரைக் கோரியிருந்தது.
இதன் பின்னர் குறித்த சமூர்த்தி முகாமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பிரதேச செயலர் இது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமுர்த்தி ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதேச செயலர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
உலகின் ஏல நிறுவன வரலாற்றில் முதன்முறையாக ஹாங்கொங்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அரிய வகை வைரம் ஒன்று 3 கோடி டாலர்களுக்கு ஏலம் போனது.
பிரபல சோத்பை ஏல நிறுவனம் இந்த முட்டை வடிவ வைரத்தை ஏலம்விட போவதாக அறிவித்த போது 2 கோடியே 80 லட்சம் மற்றும் 3 1/2 கோடி டாலர்களுக்கு இடையே இது விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஹொங்கொங்கில் நேற்று 6 நிமிடம் நீடித்த இந்த ஏலத்தின் போது போன் மூலம் ஏலம் கேட்ட ஒருவர் இறுதியாக 238.68 ஹொங்கொங் டாலர்களுக்கு இந்த வைரத்தை தனதாக்கி கொண்டார்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள வைர சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட போது இந்த வைரம் 299 கரட் எடை கொண்டதாக இருந்தது. பட்டை தீட்டி இந்த வடிவத்திற்கு வந்துள்ள அதன் தற்போதைய எடை 118.28 கரட் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் வசித்துவரும் சீக்கியக் குடும்பம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தனர்.அப்போது அவர்களின் 8 வயதுப் பெண்ணான குர்கிரனும் முதன்முதலாக இந்தியா வந்திருந்தார். இங்கு இருந்தபோது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியை அவரது பெற்றோர்கள் பஞ்சாபின் கன்னா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ஊசிமருந்து செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே குர்கிரன் மரணமடைந்தார்.பிரேதப் பரிசோதனைக்குப்பின் அந்தப் பெண்ணின் உடல் அவளது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் மரணத்தில் சந்தேகமடைந்த பெற்றோர்கள் இங்கிலாந்து சென்றவுடன் அங்கு மறுமுறை பிரேதப் பரிசோதனைக்கு அணுகியபோது அவளது உடல் உறுப்புகள் இல்லாதநிலையில் பரிசோதனை செய்ய மறுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பஞ்சாப் காவல்துறையினரால் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட சிறுமியின் இதயம், நுரையீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புகள் மொஹாலியில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த விபரம் தங்களுக்குத் தெரியாது என்று மறுத்த சிறுமியின் குடும்பம் அந்த உறுப்புகளை இங்கிலாந்திற்கு அனுப்புமாறு மனு அளித்தனர். அதன்பின் இந்த உறுப்புகள் முறையே பதப்படுத்தப்பட்ட நிலையில் சென்ற ஞாயிறன்று இங்கிலாந்தில் குர்கிரனின் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உடல் உறுப்புகள் இல்லாதநிலையிலேயே அவரது இறுதிச் சடங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த உடல் உறுப்புகளை இங்கிலாந்திற்கு வரவழைக்க அவரது தந்தை 6 லட்ச ரூபாய்க்கும் மேலாக செலவு செய்துள்ளார்.
ஆயினும், இதற்கான செலவை ஏற்க காப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டது. இது உணர்ச்சி மிகுந்த ஒரு போராட்டமாக மாறிவிட்டது என்று சிறுமியின் குடும்ப உறவினர்களில் ஒருவரான ஷரன்ஜித் கவுர் கூறினார்.
சித்தார்த்தும் சமந்தாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இதற்காக புதுப்படங்களில் நடிப்பதை சமந்தா நிறுத்தியுள்ளார். சமந்தா தமிழில் பானா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். சித்தார்த்தும், சமந்தாவும் தெலுங்கில் ஜாபர்தஸ்த் என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். இருவரும் கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்று பூஜை, பிராத்தனைகளிலும் ஈடுபட்டார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
இளம் நடிகர்கள் உடன் ஜோடியாக நடிக்க வேண்டாம் என்று சமந்தாவுக்கு சித்தார்த் தடை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தற்போது ஒப்பந்தமாகியுள்ள விஜய், சூர்யா படங்களை முடித்துவிட்டு நடிப்புக்கு முழுக்கு போட சமந்தா முடிவு செய்துள்ளார்.
அனுஷ்கா நடித்த அருந்ததி தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ருத்ரமாதேவி படங்களை போல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேடங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
அஜித் ஆரம்பம், வீரம் என இரு படங்களில் நடிக்கிறார். இவற்றில் ஆரம்பம் படம் முடிவடைந்து தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இதில் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அஜித் அளித்த பேட்டியில்..
நான் நடித்த பில்லா, மங்காத்தா, படங்களில் என் பாத்திரம் ஸ்டைல் ஆக அமைந்து இருந்தது. அதே போன்ற வேடத்தில் ஆரம்பம் படத்தில் வருகிறேன். வீரம் படம் வேறு மாதிரி கதை. அதில் கிராமத்து பாத்திரத்தில் நடிக்கிறேன். காதல் படங்களிலும் இளமை மற்றும் வயது முதிர்ந்த வேடங்களிலும் நிறைய படங்களில் நடித்து விட்டேன்.
ரசிகர்களை பொறுத்தவரை ஆக்ஷன் படங்களையே விரும்பி பார்க்கிறார்கள். என் படங்களை பார்க்கிறவர்கள் ஏமாறக் கூடாது என்பதால் அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடிக்கிறேன். நிறைய காதல் படங்களில் நடித்து விட்டேன். இளமையான கரக்டர்களிலும், வயது முதிர்ந்த வேடங்களிலும் நடித்துள்ளேன்.
எனக்கு திரைக்கதை மீது எப்போதும் நம்பிக்கை உண்டு. ஆனாலும் சில நேரம் கதை கை கொடுப்பது இல்லை. இயக்குனர்கள் விருப்பத்திற்கேற்ப நடித்து கொடுக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.
நடிகர்களின் திறமையை இயக்குனர்கள் தான் வெளிக் கொண்டு வருகிறார்கள். கார் மற்றும் பைக் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். விபத்து, உடல் நலம் குன்றுவது போன்றவை ஏற்பட்டாலும் வைத்தியர்கள் சிகிச்சை அளித்து குணமாக்கி விடுகின்றனர். என்று அஜித் கூறினார்.