கவர்ச்சியான கண்களுக்கு அழகு குறிப்பு..!

eyesஇன்றைய காலத்தில் மேக்கப் இல்லாத பெண்களை பார்க்கவே முடியாது. கண்களுக்கு செய்யும் மேக்கப் சரியில்லையெனில், அந்த மேக்-கப்பே வீணாகிவிடும். ஏனெனில் மேக்-கப்பில் கண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கண்களுக்கு செய்யும் மேக்கப்பால் கண்கள் நன்கு மென்மையாக அழகாகக் தெரிவதற்கு சில எளிய டிப்ஸ் இதே:

* கண் இமைகளை நன்கு அடர்த்தியாக வெளிப்படுத்துவதற்கு, கருப்பு நிற மஸ்காராவை பயன்படுத்துவது நல்லது. சிங்கிள் கோட் போதாமல் இருந்தால், டபுள் கோட் வேண்டுமானாலும் கொடுக்கலாம். மஸ்காராவை அளவுக்கு அதிகமாகவும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அது கலைந்து, அசிங்கமான தோற்றத்தை தரும். எனவே மஸ்காரா அதிகமாகிவிட்டது போல் தெரிந்தால், லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து, சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம்.

* பின்பு கண்களின் இமைகளுக்கு மேல் இருக்கும் பகுதியை காஜலை வைத்து, அடர்த்தியான கோடு வரைய வேண்டும். அதிலும் அந்த கோடு மூக்கின் பக்கத்திலிருந்து போடும் போது மெல்லியதாகவும், போக போக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.

* கண்களுக்கு போடும் ஐ-லைனர் பென்சிலாக இருப்பது நல்லது.

* மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர் ப்ரௌன் அல்லது காப்பி நிறத்தில் இருப்பது நல்லது. இதனால் மேல் இமைகளுக்கு மேலே போடப்பட்டுள்ள காஜல் சற்று அழகாக வெளிப்படும்.

* பிஸ்கட் அல்லது லைட் கலரில் இருக்கும் ஐ-ஷேடோவை பயன்படுத்துவது நல்லது. முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

– மேலே சொன்ன சில மேக்கப் டிப்ஸ்களை மனதில் கொண்டு, மேக்கப் செய்து வந்தால், கவர்ச்சிகரமாக பார்க்க மிகவும் அழகாகவும் இருக்கும்.

அனுமதி பெறாமல் கடைக்குச் சென்ற மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்..!

pistolஆப்கானிஸ்தானில் உள்ள சஹர் தாரா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னிடம் அனுமதி பெறாமல் கடைக்குச் சென்ற மனைவியை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைடாட் என்ற இந்த கொலைபாதகனின் மனைவிக்கு 24 வயதுதான் ஆகிறது. இவனது மனைவியை கடைவீதியில் தனியாக பார்த்ததாக நண்பர்கள் இவனிடம் போட்டுக் கொடுக்க உடனே வீட்டிற்கு வந்துள்ளான் அங்கு மனைவி இல்லாததைக் கண்டு ஆவேசமடைந்தான்.

சிறிது நேரம் காத்திருக்க மனைவி வீட்டிற்குள் வந்தாள். இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.

என்னுடைய அனுமதி பெறாமல் கடைக்கு எப்படிச் செல்லலாம் என்று கேட்டுவிட்டு உடனேயே சற்றும் எதிர்பாராதவிதமாக துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக்கொன்றான்.

இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாகியுள்ள கொலையாளியை பிடிக்க பொலிஸ் வலை விரித்துள்ளது.

ஒரு வயது குழந்தையின் மரணத்தில் சந்தேகம்: தாயின் கள்ள காதலனுக்கு பொலிஸ் வலைவீச்சு..!

babyஒரு வயதும் இரண்டு மாதங்களும் மட்டுமேயான பெண் குழந்தை வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (17) முற்பகல் வெலிமடை வைத்தியசாலை அதிகாரியினால் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

குழந்தையின் தாயார் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் குறித்த தாயாருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபர் காணாமற்போயுள்ளதாகவும் குழந்தையின் மரணம் தொடர்பில் அந்நபருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சீன முதலைப்பண்ணையில் 6 ராட்சத முதலைகள் தப்பித்ததால் பெரும் பரபரப்பு – பொதுமக்கள் வீடுகளை காலி செய்து ஓட்டம்..!

vavuniyaசீனாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள புட்ஜி என்ற கிராமத்தில் தனியார் முதலைப்பண்ணை இயங்கியது. அங்கு ஏராளமான ராட்சத முதலைகள் வளர்க்கப்பட்டு வந்தன.

இதை வேறு இடத்துக்கு அகற்றுவது தொடர்பாக பண்ணை உரிமையாளருக்கும், கட்டிட காண்டிராக்டர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த மோதல் விளைவு நள்ளிரவில் சிலர் சென்று முதலைப்பண்ணையில் மதில் சுவரை இடித்து தரைமட்டமாக்கினார்கள்.

இதனால் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த முதலைகள் தப்பித்து வெளியே ஓடின. இதை கேள்விப்பட்டதும் உரிமையாளரும், ஊழியர்களும் விரைந்து சென்று சில முதலைகளை பிடித்து கூண்டில் அடைத்தனர். என்றாலும் சுமார் 17 அடி நீளம் கொண்ட 6 ராட்சத முதலைகள் தப்பி விட்டன.

இவை மனிதனை அடித்து விழுங்கும் அபாயகர முதலைகள் ஆகும். எனவே முதலை தப்பிய தகவல் பரவியதும் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

பண்ணையை சுற்றி வசித்த பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டார்கள். முதலைகளை தேடும் பணியில் வனவிலங்கு காப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கைவிடப்பட்ட இலங்கைப் படகு தமிழகத்தில் கண்டுபிடிப்பு..!

boat17 அடி நீளமான சந்தேகத்துக்குரிய இலங்கையில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்று தமிழகம் நாகப்பட்டிணம் கரையில் ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய்யால் இயங்கும் இந்தப்படகை மீனவர்கள் கண்டு கரையோர காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

எனினும் இது மீன்பிடிப்படகு என்பதற்கான ஆதாரங்களை காணமுடியவில்லை என்று தெரிவிக்கப்படடுள்ளது. இந்த படகில் இருந்து தீக்குச்சிகள் மற்றும் துடைப்பு துணிகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.

வேதாரணியம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் பிரபல பெண் அரசியல்வாதி சுட்டுக்கொலை..!

najmaபாகிஸ்தானின் மதச்சார்பற்ற பெண் அரசியல்வாதிகளில் ஒருவரான நஜ்மா ஹனிப் (35) தீவிரவாதிகளால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தலிபான்கள் ஆட்சி நடத்தியபோது, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அவர்களது இராணுவ நடவடிக்கையை அவாமி நேஷனல் பரி என்ற கட்சி வெளிப்படையாக விமர்சனம் செய்தது.

அந்த கட்சியின் மூத்த உறுப்பினர் நஜ்மா ஹனிப். பாகிஸ்தானின் மதச்சார்பற்ற பெண் அரசியல்வாதிகளில் ஒருவரான இவர் பாகிஸ்தானின் பிரச்சினைக்குரிய வடமேற்குப் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு ஹனின் தனது வீட்டில் இருந்தபோது, ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அவரது வீட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளது.

சைலன்சர் பொருத்திய துப்பாக்கியால் அவர்கள் சுட்டதில் ஹனிப் இறந்தார். ஒன்று அல்லது இரண்டு பேர் வீட்டின் உள்ளே புகுந்து அவரை சுட்டிருக்கவேண்டும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி முகமது பைசல் தெரிவித்தார்.

இந்த கொலைக்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பரில் ஹனிபின் கணவர், மகன் மற்றும் அவர்களது பாதுகாவலர் ஆகியோர் தலிபானின் வெடிகுண்டு தற்கொலைப்படை வீரன் ஒருவனால் கொல்லப்பட்டனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சமீபத்தில் நடந்த தேர்தல்கள் வரை அவாமி கட்சி, ஆளும் கூட்டணியில் இருந்தது. இந்தக் கட்சியின் செயல்வீரர்கள் பலரும் தலிபான்களின் தாக்குதல்களுக்கு ஆளானார்கள். கடந்த மே மாதத் தேர்தலின்போது இந்தத் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்பட்டன.

தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான்கானின் கட்சி, இந்த மாகாணத்தில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இருந்தபோதிலும் அவாமி கட்சியின் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

உசைன் போல்ட்டுக்கு மேலுமொறு தங்கம்..!

usainஉலக தடகள போட்டிகள் ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்று 200 மீட்டர் இறுதிச்சுற்று போட்டியில் ஜமைக்காவின் உசைன் போல்ட் 19.66 செகண்டுகளில் கடந்து தங்கத்தை வென்றார்.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு பெர்லினிலும், 2011-ம் ஆண்டு தேகுவில் நடைபெற்ற 200 மீட்டர் போட்டிகளில் அவர் தங்கம் வென்று இருந்தார்.

இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து அவர் மூன்றாவது முறையாக தங்கம் வெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இதுவரை அவர் 7 தங்கம் வெற்றுள்ளார்.

இரண்டாவதாக உசைன் போல்ட்டின் அணித்தோழரான வாரென் வெர் 19.79 பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அமெரிகாவின் கர்டிஸ் மிட்செல் 20.04 செகண்டுகளில் கடந்து
வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

ஆப்கான் கட்டுமான முகாம் மீது ரொக்கெட் வீச்சு : 10 பேர் பலி

aftganஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாண கருக் மாவட்ட கட்டுமான முகாமில் தூங்கிக்கொண்டிருந்த பணியாளர்கள் மீது நேற்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

நவீன ஆயுதங்கள் மற்று ரொக்கெட் மூலம் வீசப்பட்ட கையெறிக்குண்டுகள் கொண்டு தாக்கியதில் ஒரு பொலிசார் உள்பட 10பேர் கொல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் ஆப்கன் – ஜெர்மன் இணைந்து நடத்திய சாலை கட்டுமான நிறுவனத்தின் பணியாளர்கள் ஆவர்.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாலையோரக்குண்டு வெடிப்பு, தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் வெளியேற உள்ள நிலையில் அப்பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இலங்கையில் பசளைகளின் விளம்பரங்களுக்கும் தடை..!

vavuniyaநியூஸிலாந்தின் பால் மா தொடர்பில் இலங்கையில் பிரச்சினை ஏற்பட்டு பால்மாக்கள் தொடர்பில் விளம்பரங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய விளம்பர தடை ஒன்று அமுல்செய்யப்படவுள்ளது.

இலங்கையில் தற்போது நீரிழிவு நோயின தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்கு பயிர்களுக்கு இடப்படும் பசளையும் காரணமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சில பசளைகளுக்கான விளம்பரங்களையும் தடைசெய்யவேண்டும் என்று ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.இந்த யோசனை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறைக்காவலரின் கட்டை விரலை கடித்து துப்பிய கைதி..!

prisonநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் காந்தி (31). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் தப்பினார்.

இது தொடர்பாக கே.கே. நகர் பொலிசார் 6 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். சிறை தலைமைக்காவலர் மணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று திருவாரூர் நகரையொட் டிய பகுதியில் சிறை தலைமைக்காவலர் மணி உள்ளிட்ட 2 பேர் கைதி காந்தியை பிடிக்க முயன்றனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. திடீரென தலைமைக்காவலர் மணியின் இடது கை கட்டை விரலை கடித்து காந்தி துப்பினார்.

இதனால் மணிக்கு ரத்தம் பீறி ட்டது. வலியை பொறுத்துக்கொண்டு கைதியை பிடித்து திருவாரூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

விரலை இழந்த காவலர்துண்டான விரலுடன் சிகிச்சைக்காக திருவாரூர் அரசுவைத்தியசாலைக்கு மணி சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருந்தாலும் துண்டான விரலை ஒட்ட வைக்க வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறி விட்டதாக தெரிகிறது.

காலி கோட்டை உலக வரலாற்றுத் தரத்தை இழக்கும் – யுனெஸ்கோ எச்சரிக்கை..!

galleகாலி கோட்டை உலக வரலாற்று தரத்தில் இருந்து விலக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலி கோட்டைக்குள் அமைக்கப்படும சட்டவிரோத கட்டிடங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய வரலாற்றுத்துறை அமைச்சர் ஜெகத் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் காலி மைதானத்துக்காக அமைக்கப்படும் பார்வையாளர் கூடம், கோட்டைக்குள் அமைக்கப்படும் வீடுகள், கட்டிடங்கள் என்பன தொடர்பிலேயே யுனெஸ்கோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.

‘தலைவா’ – இன்று உரிமை; நாளை ரிலீஸ் – அன்பழகன் அதிரடி..!

anbalaganவிஜய் நடித்துள்ள ‘தலைவா’ திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, தமிழகத்தில் இன்னும் படம் வெளியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் படம் வெளியானது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ‘தலைவா’ படத்திற்கு என்னதான் பிரச்னை என்பது புரியாத புதிராக இருக்கிறது.

‘விஸ்வரூபம்’ படத்தினைப் போன்று அரசாங்கம் படத்தினை வெளியிடத் தடை என்று அறிவிக்காத நிலையில், ‘தலைவா’விற்கு என்ன பிரச்னை என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம்.

இந்நிலையில், அன்பு பிக்சர்ஸ் நிறுவனரும், தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன், தனது டிவிட்டர் இணையத்தில், ” ‘தலைவா’ படத்தினை எங்களுக்கு (அன்பு பிக்சர்ஸ்) கொடுத்தால் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியிடத் தயார்” என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் சந்தோஷம் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து அன்பழகனிடம் பேசினோம். ” ‘ஆதிபகவன்’ படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்பது எனக்குத் தெரியும். ஆகையால் தான் எனது டிவிட்டர் இணையத்தில் ‘தலைவா’ படத்தினை எங்களுக்குக் கொடுத்தால் வெளியிடத் தயார் என்று கூறினேன்.

வெளிநாடு, வெளிமாநிலங்கள் என படம் வெளியானாலும், எனக்குக் கவலையில்லை. இப்போதெல்லாம் படம் வெளியான அன்று, படத்தின் சி.டி. பர்மா பஜாரில் கிடைக்கிறது. எனவே, இணையத்தில் வெளியானது பற்றியும் நான் கவலைப்படவில்லை. ‘தலைவா’ மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இன்று காலை முதலே, எனக்குத் தெரிந்த ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர்களிடமும் பேசி வருகிறேன். அவர்களும் ‘கண்டிப்பாக வாங்குங்கள், வெளியிடத் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்து வருகிறார்கள். ஆகையால், எனக்கு படத்தின் வெளியீட்டு உரிமையை அளித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

அரசாங்கம் படத்திற்கு எவ்வித தடையையும் விதிக்கவில்லை. தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களும் படத்தினை வெளியிடத் தயாராக இருக்கிறார்கள். பிறகு ஏன் நான் கவலைப்பட வேண்டும்? ‘தலைவா’ வெளியீட்டு உரிமை இப்போது எனக்கு வந்தால் கூட படத்தை நாளை காலை ரிலீஸ் செய்ய முடியும்.

அதற்காக நான் வேந்தர் மூவிஸுக்குப் போட்டியாகச் செயல்படுகிறேன் என்றில்லை. அவர்களால் முடியவில்லை என்றால் மட்டுமே கொடுங்கள், நான் வெளியிடுகிறேன் என்றுதானே கூறுகிறேன்.

ஒரு சில நபர்கள் விஜய் கால்ஷீட் தேதிக்காக பேசுகிறேன் என்று கூறுகிறார்கள். விஜய்யிடம் கால்ஷீட் குறித்து இதுவரை நான் பேசியதில்லை. நான் வேறு ஒரு முன்னணி இயக்குனரிடம் பேசி வருகிறேன். அவருடைய பணிகள் முடிந்தவுடன், எனது அன்பு பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படம் செய்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

இப்போது சொல்கிறேன்… நான் யாருடனும் போட்டி போடவில்லை. தயாரிப்பாளர் என்கிற முறையில் உதவி செய்கிறேன். என்னிடம் படத்தினைக் கொடுத்தால், நாளை வெளியிட என்னால் முடியும்” என்று அடித்துச் சொல்கிறார் அன்பழகன்.

இணையத்தில் வெளியான பிரியாணி பாடல்: சோனி நிறுவனமே வெளியிட்டது அம்பலம்..!

biriyani‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி – ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள படம் ‘பிரியாணி.

இப்படத்தின் அத்தனை பாடல்களும் இணையத்தில் வெளியாகியமை மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து விசாரித்ததில், இந்த வேலையைச் செய்தது பாடல் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள சோனி நிறுவனமே என்பது தெரிய வந்துள்ளது.

ரஜினி நடித்த சிவாஜி படத்திலிருந்துதான் இந்தப் போக்கு ஆரம்பமானது. அந்தப் படத்தின் ஒரு கூடை சன் லைட் பாடலை இப்படித்தான் இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பினர்.

அதன் பின்பு பல பெரிய படங்களின் பாடல்கள் அல்லது வீடியோக்களை தயாரிப்பாளர்கள் அல்லது இசை வெளியீட்டு நிறுவனங்கள் அல்லது இயக்குநர்களே வெளியிடுவதும், பின்னர் போலீசில் புகார் செய்து ஸ்டன்ட் அடிப்பதும் வழக்கமாகிவிட்டது.

இந்த முறை இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, பிரியாணி படத்தின் அத்தனைப் பாடல்களையும் பாடலின் வெளியீட்டு உரிமை பெற்ற சோனி நிறுவனமே வெளியிட்டுவிட்டது.

ஆனால், இது தெரியாமல் அல்லது காட்டிக் கொள்ளாமல் “அப்படியே ஷாக்காகிட்டேன்” என்று கூறியுள்ளார் யுவன்.

ஏன் இப்படி?

எல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான். இன்னொரு முக்கிய விடயம், இந்தப் பாடல்களை இணையத்தில் டவுன்லோடு செய்வதன் மூலம் பாடல் வெளியிடும் நிறுவனத்துக்கு வருமானமும் கிடைக்கிறது என்கிறார்கள்.

தங்களுக்கு இதில் எந்த நஷ்டமும் இல்லை என்பதால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று யாருமே அலட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கின்றனர்.

ஆனாலும் யுவனுக்காக அவரது பிறந்த நாளன்று பாடல் வெளியீட்டை நடத்தப் போகிறார்களாம்.

தலைவா பட தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி..!

thalaivaதலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் நடித்துள்ள தலைவா படம் ஒரு சில பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

படத்தை வெளியிட கோரி நடிகர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படம் வெளியாகவில்லை என்றால் நான் கடனாளியாகி விடுவேன் எனவும் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி காவல்துறை ஆணையரிடம் அனுமதி கோரியும், நேற்று மாலை அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் சந்திரபிரகாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தலைவா பிரச்னையால் ஏற்பட்ட மன உளைச்சலே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

திருடிய பொருட்களை மன்னிப்புக் கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த திருடர்கள்..!

robஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரத்தில் பாலியல் வன்முறை சார்ந்த சேவை மையம் ஒன்று இயங்கிக் வருகிறது.

இந்த மையத்தினுள் கடந்த 31-ம் திகதி இரவு புகுந்த திருடர்கள் அங்கிருந்த ஆறு கனணி சாதனைங்களையும், புதிய மடிக் கனணி ஒன்றினையும் திருடிச் சென்றனர்.

சோதனைக்கு வந்த காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேன்டி ஸ்டாலிங்சிடம் தொலைபேசியில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். அவர்களின் தகவல் சேகரிப்பு முழுவதும் அந்த சாதனங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததால் அவர் செய்வதறியாது திகைத்தார்.

காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டனர். கேன்டியும் தனது வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார். சிலமணி நேரம் கழித்து அவருக்கு மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அவரின் நிறுவனத்தில் நடமாட்டம் இருந்ததாகக் கூறி காவல்துறையினர் அவரை மறுபடியும் அங்கு வருமாறு அழைத்தனர். அங்கு சென்றபோது கேன்டிக்கு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

திருடர்கள் அவரது நிறுவனத்தில் இருந்து எடுத்துச்சென்றிருந்த பொருட்கள் அனைத்தையும் மீண்டும் அங்கு கொண்டுவந்து வைத்திருந்தனர். அத்துடன் ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் இணைத்திருந்தனர்.

மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிட்டட்டும் என்றும் அதில் எழுதியிருந்தனர். இந்த நிகழ்ச்சி மூலம் இவர்களின் சேவை வெளியுலகிற்குத் தெரியவர, அவர்களுக்கு நன்கொடைகளும் குவியத் தொடங்கியுள்ளன.

டாக்சி டிரைவராக மாறிய நோர்வே பிரதமர்..!

norwayநாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய நாட்டின் பிரதமரே டாக்சி டிரைவராக மாறிய சம்பவம் நோர்வே மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நோர்வே பிரதமர்- ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க். “தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற பின் இவர் நாட்டு மக்களின் வளர்ச்சியை கண்டு கொள்ளவில்லை’ என பரவலாக புகார் எழுந்துள்ளது.

அடுத்த மாதத்துடன்- இவரது ஆட்சி காலம் முடிகிறது. “ஸ்டோலன்பெர்க் மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும்- அவருக்கு வரும் தேர்தலில்- குறைந்த அளவு ஓட்டுகளே கிடைக்கும்’ என கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டோலன்பெர்க்- நாட்டு மக்களின் மனநிலையை புரிந்து- அதற்கேற்ப தேர்தல் பிரசார வியூகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளார்.

இதனால்- மக்களின் கருத்துக்களை- நேரடியாக அறிய விரும்பிய ஸ்டோலன்பெர்க்- டாக்சி டிரைவர் போல சென்று பொதுமக்களை தன் காரில் சவாரிக்கு ஏற்றினார்.

அதில் மக்களின் கருத்துக்களை பதிவு செய்ய ரகசிய கேமராவும் வைத்திருந்தார். பல பேரும் இவரை அடையாளம் காணாமல்- தாங்கள் நினைத்தவற்றை பேசினர்.

எனினும்- ஒரு சிலர் ஸ்டோலன்பர்கை அடையாளம் கண்டுவிட்டனர்; பிரதமர் என்ற முறையில்- மக்களின் கருத்துக்களை அறிய முற்பட்டதற்கு- பாராட்டுகளை தெரிவித்த அவர்கள்- நாட்டில் நடக்கும் குற்றங்கள் மற்றும் குறைகளை பிரதமரிடம் தெரிவித்தனர்.

ஸ்டோலனின் டாக்சியில் பயணித்த யாரிடமும் அவர்- பணம் வாங்கவில்லை.

இதுகுறித்து- ஸ்டோலன்பெர்க் கூறியதாவது: மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் இடம் அவர்கள் பயணிக்கும் டாக்சிகளில் மட்டுமே. டாக்சி டிரைவர்களும்- விடாமல் எதையாவது பேசிக் கொண்டேயிருப்பதால்- மக்களும் அவர்களிடம்- ஆட்சியாளர்களின் நிறை குறைகளை கொட்டித் தீர்க்கின்றனர்.

எனவே மக்களின் குறைகளையும் அவர்களின் தேவையையும் நேரடியாக அறிய பிரதமர் என்ற முகமூடியை கிழித்துவிட்டு டிரைவர் வேஷத்தில் சென்றேன்.

இந்த வேஷத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மக்கள் பலரும் தங்கள் குறைகளை மனம் திறந்து வெளிப்படுத்தினர். நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்- மக்களின் குறையை உடனடியாக தீர்த்து வைப்பேன். இவ்வாறு ஸ்டோலன்பெர்க் கூறினார்.

“பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும்- மக்களை பற்றி சிந்திக்காத அரசியல் வாதிகள்- தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது அக்கறை இருப்பது போல நடிப்பதில்- ஸ்டோலன்பெர்க்கும் விதிவிலக்கல்ல’ என சிலர் அலுத்துக் கொண்டனர்.