அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஷேன் வோன் ஓய்வு..!

warneஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோன் 2007–ம் ஆண்டுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இருப்பினும் அவர் முதலாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடினார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் போட்டியில் வோன் தொடர்ந்து விளையாடி வந்தார். அந்த போட்டியில் இருந்து விடைபெறுவதாக ஷேன் வோன் நேற்று அறிவித்துள்ளார்.

தான் விடைபெற இதுவே சரியான தருணம் என்று தெரிவித்துள்ள அவர் தொழில் மற்றும் வர்ணனையாளர் பணியை கவனித்து கொண்டு விளையாடுவது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறினார்.

43 வயதான ஷேன் வோன் 145 டெஸ்டில் விளையாடி 708 விக்கெட்டும், 194 ஒருநாள் போட்டியில் ஆடி 293 விக்கெட்டும் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது

பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ். விஜயம்..!

ukஇலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற குழு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை இன்று மேற்கொள்ளவுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்ற கன்ஸவேட்டிவ் மற்றும் தொழில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட குழுவினர் அடங்கிய குழுவினர் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.

இக்குழுவினர் எதிர்வரும் 26ஆம் திகதிவரை இலங்​கையில் தங்கியிருப்பர்.

இக்காலப் பகுதியில் இந்த குழுவினர் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

அத்துடன் இலங்கையின் தற்போதைய மீளமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் அந்த குழு முழுமையான ஆராய்வினை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரித்தானியாவின் வெளிவிவகார திணைக்கள செயலாளர் எலஸ்டயார் பர்ட் இந்த முறை மனித உரிமை விடயங்களில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்த தவறினால் எதிர்வரும் மனித உரிமைகள் மாநாட்டில் அது தொடர்பில் பிரித்தானியா உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எச்சரித்திருந்தார்.

முன்னேஸ்வரம் ஆலய கொடியேற்றம் நாளை..!

Munneswaramசிலாபம் – முன்னேஸ்வரம் முன்னை நாதப் பெருமான் தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்ற விழா நாளை 24 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும்.

இவ்வாலய உற்சவம் 29 தினங்களாகக் கொண்டாடப்படும். இக்காலங்களில் நாட்டிலிருந்து வருகை தரும் அடியார்களின் நன்மை கருதி போக்குவரத்துச் சேவைகள் சுகாதார வசதிகள் குடிதண்ணீர் ஏற்பாடுகள் புதிய மின் இணைப்புக்கள் கழிவறைகள் என்பனவற்றுடன் புதிய வாகன தரிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

அத்துடன் பாதுகாப்பை முன்னிட்டு விசேட தற்காலிக பொலிஸ் நிலையமும் வழமை போல் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இங்கு நடைபெறும் முக்கிய உற்சவங்களான எதிர்வரும் 2013.08.15 ஆம் திகதி தீமிதிப்பு உற்சவமும் அதைத் தொடர்த்து 63 சிவனடியார்களின் விழாவும், 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிச்சாடன உற்சவமும், 17 ஆம் திகதி நடேசர் உற்சவமும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை5.00 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 19 ஆம் திகதி திங்கள் தேர் உலாவும் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சிலாபம் மாயவன் ஆற்றில் தீர்த்த உற்சவமும் கொண்டாடப்படும்.

ஆனையிறவில் 15 மில்லியனில் புதிய ரயில் நிலையம்!

ainaiyiravu15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர் மாணிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நிதியுதவி மூலம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புதிய ரயில் நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வ மாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

வட மாகாணம் உட்பட ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

யுத்தம் காரணமாக சேதமடைந்த வட வகுதிக்கான ரயில் பாதை புதிதாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சுமார்23 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக ஆணையிறவுக்கான ரயில் நிலையம் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட பகுதி மக்களின் நலனை கருத்திற்கொண்டு கிழக்கு உட்பட எட்டு மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவ, மாணவிகள், ஆசிரியர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 15மில்லியன் ரூபா செலவிலேயே இந்த புதிய ரயில் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை, பாடசாலை மாணவர்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பவற்றின் பிரதிபலிப்பாகவே கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிதி சேகரிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் ஆணையிறவு ரயில் நிலையம் அமைந்திருந்த அதே இடத்திலேயே புதிய ரயில் நிலையமும் நிர்மாணிக்கப்படவுள்ளது என்று தெரிவித்த அவர், இவ்வாண்டு இறுதிக்குள் அதன் நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ளது என்றார்.

ஏனைய எட்டு மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்களுடன் பாடசாலை மாணவர்கள் வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் சுமார் 1000 பேரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்தோற்சவம் நாளை..!

thanthamalaiமட்டக்களப்பு அருள்மிகு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவத்தின் தீர்தோற்சவம் நாளை இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பெரிதும் மக்களால் பேசப்படுகின்ற மலைக் கோயில்களில் தாந்தா மலை முருகன் ஆலயமும் ஒன்றாகும்.

பழமையும், வரலாற்று முக்கியத்துவமும் நிறைந்த கதிர்காம முருகன் ஆலயத்துடன் தாந்தாமலை முருகன் ஆலயத்தையும் மக்கள் இணைத்துப் போற்றி வருகின்றனர்.

கடந்த 3ம் திகதி ஆரம்பமாகி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இவ்வாலயத்தின் மகோற்சவம் நாளை காலை 6மணியளவில் நடைபெற இருக்கும் புண்ணிய தீர்தோற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

இத் தீர்தோற்சவம் காரணமாக நாளை நடைபெற இருந்த மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளின் பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை..!

williamஇளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

நேற்று  மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தை மூன்றரை கிலோ எடையுடன் பிறந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கேம்பிரிட்ஜ் இளவரசன் என்று அறியப்படவிருக்கும் இந்த ஆண் குழந்தை, பிரிட்டிஷ் சிம்மாசனத்துக்கு காலப்போக்கில் வர உரிமையுள்ள வாரிசுகளில் மூன்றாவதாக இருக்கும்.

15 பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியையும் அது வகிக்கும்.

பிரிட்டிஷ் அரசியும், அவரது கணவர் எடின்பரோ கோமகனும் இந்தச் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இந்த அரச குடும்ப குழந்தைப் பிறப்பை, நாட்டின் வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றும், அதைவிட, இது ஒரு நேசமுடனும் பாசமுடனும் இருக்கும் ஒரு தம்பதியருக்குக் கிட்டியுள்ள மிக அற்புதமான தருணம் என்றும் கூறினார்.

என் காதலி போலவே..

Kaathali

உன்னால் நொந்துதான்
காலணி செய்தார்கள்
உன்னை நீக்கியே
மீனினை உண்பார்கள்..

உன்மேல் அழகுறும்
மலர்தனைக் கொய்வார்கள்
உன்னைப் பிரித்துதான்
சுளைதனை சுவைப்பார்கள்..

உன்னை விலக்கியே
எலுமிச்சம் கனிதனைப்
பறிப்பார்கள்
தாகம் நீக்கிடும்
பானமும் செய்வார்கள்..

உன்னை கிளையுடன்
வெட்டி வேலி அமைப்பார்கள்
பயிர்களைக் காத்துதான்
பயன் பல பெறுவார்கள்..

நீ
இருக்கும் இடமெலாம்
இன்பமும் இனிமையும்
இருக்கும் இருந்தும்
நீ முள்ளு
என் காதலி போலவே..

திசா.ஞானசந்திரன்

சீண்டிய இளைஞனை கொலை வெறியோடு துரத்தும் யானை!(வீடியோ)

சாதுவான மிருகங்களுள் ஒன்றான யானை அதனை சீண்டியவர்களை சும்மா விடாது.தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்காமல் பசியாற்றிக்கொண்டிருந்த யானையை சீண்டியதால் நேர்ந்த கதியைப் கொஞ்சம் பாருங்கள்..

ஆணியே புடுங்க வேண்டாம் – ஒஸ்கர் முடிவு!

mariyanதனுஷ் – பார்வதி நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மரியான். பரத்பாலா இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஒஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்து உள்ளார்.

சூடான் நாட்டில் வேலை செய்த ஒரு இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே மூச்சில் 50 அடி ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவராக தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு நீச்சலும் தெரியாது, நீருக்குள் மூச்சு பிடித்து மூழ்குவதும் முடியாது.

எனவே, வெளிநாட்டில் இருந்து இதற்காக சிறப்பு பயிற்சி கொடுப்பவர்களை வரவழைத்து, அவர்களிடம் கற்றுக் கொண்டு தனுஷ் இப்படத்தில் நடித்தார். 50 அடி ஆழ்கடலில் ஒட்சிசன் இல்லாமல் உப்புத் தண்ணீரில் கண்ணாடிகூட போடாமல் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார் தனுஷ்.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் மாக் கோனிக்ஸ் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். இசை அமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ்பெற்றவர். எனவே மரியான் படத்தின் இந்தி உரிமையை புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று 5 கோடி ரூபாய்க்கு விலைபேசி உள்ளது. ஒஸ்கர் ரவிச்சந்திரனும் இதற்கு ஒப்புக் கொண்டார்.

இதை அறிந்த தனுஷ் தனக்கு அதில் இரண்டு கோடி ரூபாய் வேண்டும் என்றாராம். ஏ.ஆர்.ரஹ்மானும் தனக்கு இரண்டு கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

தனக்கு ஒரு கோடி ரூபாய் மட்டுமே வரும் என்று தெரிந்ததும், “ஆணியே புடுங்க வேணாம்” என ரீமேக் உரிமையை விற்க மறுத்துவிட்டாராம் ஒஸ்கர் ரவிச்சந்திரன்.

தமன்னா வாய்ப்பை தட்டிப்பறித்த ஸ்ருதிஹாசன்..!

shrutiஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்த்தை வைத்து எடுத்த மிகப்பெரிய வெற்றிப் படமான ரமணாவை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். தமிழில் வானம் படத்தை இயக்கிய கிரீஷ் இயக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.

தமிழில் விஜயகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் அக்ஷகுமார் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருப்பதாக முதலில் பேசப்பட்டது.

ஆனால் தமன்னாவை விட தற்போது மார்க்கெட்டில் இருக்கும் நடிகையை தெரிவு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழு.

இதனையடுத்து ரமணா இந்தி ரீமேக்கில் நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

இதன் மூலம் தமன்னாவுக்கு வந்த வாய்ப்பு ஸ்ருதிஹாசன் பக்கம் திரும்பியுள்ளது.

அண்மையில் இந்தியில் இவர் நடிப்பில் வெளியான டி-டே மற்றும் ராமையா வாத்சாவய்யா ஆகிய படங்கள் பரவலான வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

4வது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி..!

CRICKET-WIS-PAKமேற்கிந்திய தீவுகள் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வத் லுயிஸ் முறையில் 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்கோர் விபரம்

49 ஓவா்களுக்கு மட்டுபடுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய மேற்கிந்திய அணி 7 விக்கட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸாமுவேல்ஸ் 106 ஓட்டங்களை பெற்றார்.

தொடர்ந்து மலை குறுக்கிட்டதால் பாகிஸ்தான் அணிக்கு 31 ஓவா்களில் 189 என்கின்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன் படி துடுப்படுத்தாடிய பாகிஸ்தான் மிஸ்பாஹ், ஹபிஸ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை அடைந்தது. மிஸ்பாஹ் 53 ஆ.மி, ஹபிஸ் 59.

போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்திய அணியின் ஸாமுவேல்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

சிம்புவுக்கு போட்டியாக களம் இறங்கும் சிவகார்த்திகேயன்..!

sivaசின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருகின்றார்.
சின்னத்திரையில் பார்த்த சிவகார்த்திகேயனை நடிகராக ஏற்றுக்கொண்ட மக்கள் இப்போது பாடகராகவும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடலை யு-டியூப்பில் வெளியிட்டுள்ளதால் இப்பாடலானது சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இந்த ஹிட்டைப் பார்த்து சிவகார்த்திகேயனே ஆச்சர்யப்பட்டுப் போனாராம். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு பல பாடங்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இப்போதுள்ள நடிகர்களில் சிம்பு தான் எல்லா கதாநாயகர்களுக்கும் பாடுகின்றார். விஜய், தனுஷ் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே பாடுகின்றார்கள்.

எனவே, சிம்புவுக்குப் போட்டியாக தானும் களத்தில் குதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

ஆஷஸ்: இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அபார வெற்றி..!

ashesஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 18–ந் திகதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 361 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா128 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 233 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3–வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு333 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 178ஓட்டங்களுடனும், பேர்ஸ்டோ 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பேர்ஸ்டோ20 ஓட்டங்களுடன் விக்கெட் கீப்பர் ஹேடினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழநதார். இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் மேற்கொண்டு 2 ஓட்டம் மட்டுமே சேர்த்த நிலையில், ரையான் ஹாரிசின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 180 ஓட்டங்களுடன் (338 பந்து, 18 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். அத்துடன் இங்கிலாந்து அணி தனது இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு583 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாருமே சேசிங் செய்திராத இமாலய இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா 2–வது இன்னிங்சை தொடங்கியது. இந்த முறையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் ‘பிடி’யில் சிக்கி அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் சிதறி போனார்கள்.

அவுஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 235 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 347ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3–வது டெஸ்ட் போட்டி வருகின்ற1–ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

பரீட்சை தினத்துக்கு 05 நாட்களுக்கு முன் டியூசன் வகுப்புக்கள் தடை..!

seminarபரீட்சை தினத்திலிருந்து 05 நாட்களுக்கு முன் டியூசன்இ கருத்தரங்குகளை நிறுத்தல்
வர்த்தமானி நேற்று வெளியானது

க.பொ.த சாதாரண தரம்- உயர்தரம்- 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன்னரேயே டியூஷன் வகுப்புக்கள்- கருத்தரங்குகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் தொடர்பான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பகிரங்கப் பரீட் சைகள் சட்டத்தின் 22வது பந்தியின் கீழ் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்படி மூன்று பரீட்சைகளும் ஆரம்பமாகும் தினத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்னிருந்து பரீட்சைகள் முடிவடையும் திகதிவரை டியூஷன் வகுப்புக்கள்- கருத்தரங்குகள்- மீட்டல் வகுப்புக்கள் எதுவும் நடத்தப்படக் கூடாது.

அதேபோன்று- பரீட்சைகளுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள் தயாரித்தல்- அச்சிடல்- பகிர்ந்தளித்தல்- போஸ்டர்கள்- பனர்கள்- துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல்- மின்னஞ்சல்கள் அனுப்புதல் அல்லது இவற்றை அருகில் வைத்திருத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம். என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

சீனாவில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம்! – 11 பேர் பலி..!

chinaசீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள சனஅடர்த்தி மிக்க கன்சூ மாகாணத்தில் தையான்சூயி பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேர் மரணமானதாகவும், 81 பேர் காயமடைந்ததாகவும், முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2.7 மில்லியன் மக்கள் வசிக்கும் கட்டடங்கள் செறிவான பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சேதங்கள் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மன்னார், வவுனியா ஆசன பங்கீட்டில் குழப்பம்..!

tnaதமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என நேற்று காலை வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட போதும் கூட்டு கட்சிகளுக்கு ஆசனங்களை பகிர்வது குறித்து இன்னும் இணக்கம் ஏற்படவில்லை.சிக்கலில் இருந்த யாழ். மாவட்டத்தில் போட்டியிட கூட்டுக் கட்சிகளுக்கு ஆசனங்கள் இணக்கப்பாட்டுடன் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படவுள்ளார். எனவே எஞ்சியுள்ள 18 ஆசனங்களில் தமிழரசுக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிக்கு 4 ஆசனங்களும், ரெலோவுக்கு 3 ஆசனங்களும், புளொட் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பவற்றுக்கு தலா 2 ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி, ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டதுடன், கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 33 வேட்பாளர்களை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஆசன பங்கீடு குறித்து இறுதி முடிவு நேற்று எடுக்கப்படவில்லை.

அதற்கு காரணம் தமிழர் விடுதலை கூட்டணி இவ்விரு மாவட்டங்களிலும் அதிக ஆசனங்களை கோரி வருவதாக கூட்டமைப்பின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால் நேற்றைய கூட்டம் இறுதி முடிவு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.