நடிகர் பெரியார்தாசன் காலமானார்..!

periyarthasanபாரதிராஜாவின் `கருத்தம்மா´, `காதலர் தினம்´ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன்.

இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் 38 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பட்டிமன்றம், கருத்தரங்குகளில் பங்கேற்று வந்தார்.

ம.தி.மு.க. நிர்வாகியான இவர் அந்த கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். பெரியார்தாசன் வீடு திருவேற்காடு மகாலட்சுமி நகர் 6-வது தெருவில் உள்ளது.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கல்லீரல் கோளாறு காரணமாக குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு1.25 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.

அவரது உடல் திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெரியார்தாசனுக்கு வசந்தா (62) என்ற மனைவியும்,வளவன் (35), சுரதா (35) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

பெரியார்தாசன் உயிருடன் இருக்கும் போதே தனது கண்களை தானம் செய்து இருந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் கிடைத்ததும் சங்கர நேத்ராலயா மருத்துவ குழுவினர் வந்து அவரது கண்களை தானமாக பெற்றுக் கொண்டனர்.

 

அதேபோல் பெரியார்தாசன் விருப்பப்படி அவரது உடலும் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட இருப்பதாக அவரது மூத்த மகன் வளவன் தெரிவித்தார்.

காதலித்த பெண்ணையே கரம்பிடிக்கிறார் பரத்..!

barathசங்கர் இயக்கிய போய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் பரத். பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இதுவரை அவர் 24 படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஐந்து ஐந்து ஐந்து’ இவருடைய 24-வது படமாகும். பரத்தும், துபாயில் பல் வைத்தியராக இருக்கும் ஜெஸ்லி என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

இவர்கள் காதலை இரண்டு பேர்களின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து பரத்-ஜெஸ்லி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ம் திகதி சென்னையில் நடக்கிறது. செப்டம்பர் 14-ம் திகதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.

காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நடிகர் பரத் தமிழக ஊடகம் ஒன்றுக்கு கூறியதாவது….

“ஜெஸ்லியை சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது, தற்செயலாக சந்தித்தேன். 2 பேரும் நட்புடன் பழக ஆரம்பித்தோம். பின்னர் அதுவே காதலாக மாறியது. 2 பேரும் காதலை பகிர்ந்து கொண்டோம். திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தோம்.

எங்கள் திருமணத்திற்கு 2 குடும்பங்களை சேர்ந்தவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் நானும், ஜெஸ்லியும் திருமணம் செய்து கொள்கிறோம். ஜெஸ்லி பி.டி.எஸ். படித்தவர்.

துபாயில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். திருமணத்துக்கு பின் எம்.டி.எஸ். படிக்க முடிவு செய்திருக்கிறார்.”

இவ்வாறு பரத் கூறினார்.

விமானியாவதற்கு கனவுகண்ட அப்துல் கலாம்..!

kalamஅப்துல் கலாம் எழுதி ‘மை ஜர்னி: டிரான்ஸ்பார்மிங்க் ட்ரீம்ஸ் இன்டூ ஆக்ஷன்ஸ்’ (‘எனது பயணம்: கனவுகளை செயல்களாக மாற்றுதல்’) என்று தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

இந்த புத்தகத்தில் இந்தியா இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்திய காலகட்டத்தில் அறிவி யல் ஆலோசகராக பணியாற்றியபோது தான் சந்தித்த எண்ணற்ற சவால்கள், கற்றுக்கொண்ட விஷய ங்கள், ஓய்வு பெற்றது, அதன்பின்னர் கற்பித்தலில் தன்னை அர்ப்பணித்தது, ஜனாதிபதி பதவியில் அமர்ந்தது தொடர்பான சம்பவங்களை சுவைபட மனம் திறந்து எழுதி இருக்கிறார். அதில்தான் தன் நிறைவேறாத கனவு பற்றி அப்துல் கலாம் கூறி இருக்கிறார்.

போர் விமானத்தின் விமானி ஆவதற்குத்தான் அப்துல் கலாம் கனவு கண்டிருக்கிறார். இந்த கனவை அவர் வெகு காலமாக வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த கனவு நிறைவேறாமல் போய் விட்டது என இனம்புரியாத ஒரு வருத்தத்துடன் அப்துல் கலாம் குறிப்பிட்டிருக்கிறார்.

டேராடூனில் இந்திய விமானப்படையில் இருந்து அப்துல் கலாமுக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பும் வந்து இருக்கிறது. 25 பேர் அதில் பங்கேற்றிருக்கின்றனர். 8 விமானிகள் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு அது. ஆனால் அதில் அப்துல் கலாம் 9–வதாக வந்துள்ளார். இதனால் அவர் தேர்வு பெற முடியவில்லை.

காதல் கல்யாணம் தான் எனக்கு செட் ஆகும் – த்ரிஷா..!

thrishaபத்து ஆண்டுகளாக சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளமைக்கு இயக்குனர்களுக்கு தான், நன்றி கூற வேண்டும் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்

எனக்கு அமைந்த கதைகள், இரசிகர்களுக்கு பிடித்திருந்தது தான், இதற்கு முக்கிய காரணம். இப்போதும், தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ரொம்ப பிசியா இருக்கேன். இதைத் தாண்டி, என் கடுமையான உழைப்புக்கும், இதில் பங்கு உண்டு.

கடந்த, 10 ஆண்டுகளில், 50 படங்களில் நடிச்சிருக்கேன். கில்லி படத்தை பார்த்து, விஜயும், நானும் நல்ல ஜோடி என, பேசப்பட்டது. அப்புறம், சாமி படம் பார்த்து விக்ரம் ஜோடி நல்லாயிருக்குன்னு சொன்னாங்க.

இதைத் தொடர்ந்து, விண்ணை தாண்டி வருவாயா படம் பார்த்திட்டு, சிம்பு நல்ல ஜோடின்னு சொல்றாங்க. இப்படி படங்களும், நாயகர்களும் மாறுவது உண்டு. நல்ல கதை அமைந்தால், எந்த நடிகருடனும், கெமிஸ்ட்ரி ஒர்க் – அவுட் ஆகும்.

தமிழில் வேணும்னு படம் பண்ணாம இருக்கிறது இல்லை. சரியான கதை அமையவில்லை என்றால், படம் பண்ண மாட்டேன். சும்மா இருக்கலாமே தவிர, லாஜிக் இல்லாத படம் பண்ண விரும்பமாட்டேன், இரண்டு மாதம், மூன்று மாதம் படம் இல்லைனாலும், காத்திருந்து, நல்ல கதை வந்தால் தான் நடிக்கிறேன்.

இதனால் தான், என்னுடைய பெரும்பாலான படங்கள், வெற்றி அடைந்திருக்கின்றன. என்றார்.

மேலும் அவருடைய திருமணம் குறித்து கேட்டதற்கு இந்த வருஷம் தான், கல்யாணம் செய்துக்கணும் இந்த வருஷம் தான், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் எல்லாம், எனக்கு இல்லை. அதில், எனக்கு நம்பிக்கையும் கிடையாது.

எனக்கு, எப்ப சரி என்று படுகிறதோ, எனக்கு பொருத்தமானவர் எப்ப அமைவாரோ, அப்போது உடனடியாக, டும் டும் டும் தான்.

கண்டிப்பாக, காதல் கல்யாணம் தான், எனக்கு செட் ஆகும். நான், கல்யாணம் செய்யும் நபர், என்னைப் பற்றி, தெரிஞ்சவரா இருக்கணும். என்னை, நல்லா பார்த்துக் கொள்பவராக இருக்கணும். இதெல்லாம் நடக்கணும்ன்னா, காதல் கல்யாணம் தான், சரியாக வரும். என்றவரிடம் நீங்க, 3 பிளேட் பிரியாணி சாப்பிடுவீங்களாமே? என்றதற்கு

“உண்மை தான். மூன்று பிளேட் இல்லை; அதுக்கும் மேலே சாப்பிடுவேன். பிரியாணி பிரியை நான். சாப்பாட்டு விஷயத்தில் என்னை யாரும், அடிச்சுக்க முடியாது” என்றார்.

குத்துப் பாடலுக்கு களம் இறங்கும் முன்னாள் கனவுக் கன்னிகள்..!

mathuriகுத்துப் பாடலுக்கு ஆடுவதற்கு முன்னாள் கனவுக் கன்னிகளை தேடி வருகிறார்களாம் இயக்குனர்கள்.

பாலிவுட்டில் இந்த புதிய பழக்கம் தற்போது புதுக்கதையாகியுள்ளது.

பல பிரபல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் மூத்த நடிகைகளை ஒரு பாட்டுக்கு ஆட வைக்கும் முயற்சிகளில் தீவிரமாகி விட்டனராம்.

ஐஸ்வர்யா ராய் ராம்லீலா படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடவிருப்பது இந்த புதிய தேடலின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா படத்தில் ஐஸ்வர்யா ராய் ஒரு பாட்டுக்கு ஆடவுள்ளார். இந்த செய்தி சமீபத்தில்தான் உறுதியானது.

இந்த வரிசையில் இப்போது இணையவுள்ளார் கஜோல். இவரும் குத்துப்பாட்டுக்கு ஆடுவதில் ஆர்வமாக இருக்கிறாராம்.

இந்த ஆசையை அவரே வாய் விட்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் கனவுக் கன்னியான மாதுரி தீட்சித், தான் கதாநாயகியாக நடித்த படத்திலேயே ஐட்டம் நடனம் ஆடிய அனுபவம் கொண்டவர்.

தற்போது யெ ஜவானி ஹைய் தீவானி படத்தில் காக்ரா என்ற பாடலுக்கு அவர் போட்ட குத்துப் பாட்டு புது ரகமாக அமைந்துள்ளது.

இதுதான் அவர் முதல் முறையாக ஆடிய முழு அளவிலான குத்துப் பாட்டாகும். மாதுரிக்கு வயது 46.

இந்தப் பாடலில் கதாநாயகர் ரன்பீர் கபூருடன் இணைந்து, அவருக்கு இணையாக ஆடி அசத்தியிருப்பார் மாதுரி.

பரினீதா படத்தில் முன்னாள் நாயகி ரேகா ஒரு ஐட்டம் பாட்டுக்கு ஆடினார். கெய்சி பஹலி ஜிந்தாகனி என்ற பாடல் அவரது கவர்ச்சிக்கு இன்னும் மவுசு இருப்பதை உணர்த்தியது.

இன்னும் பல மூத்த நடிகைகள் விரைவில் இந்த வரிசையில் சேருவதற்கு தயாராகி வருகிறார்களாம்.

38 ஆண்டுகளை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார்..!

rajiniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா திரையுலகிற்கு நடிக்க வந்து இன்றோடு 38 வருடங்கள் நிறைவாகியுள்ளது.

ரஜினியின் முதல்படமான அபூர்வ ராகங்கள் இதே நாளில் தான் 1975ம் ஆண்டு வெளியானது.

பெரும்பாலும் தன் திரைஉலக பிறந்தநாளில் தனது முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்தை டிவியில் குடும்பத்துடன் பார்த்து ரசிப்பது சூப்பர்ஸ்டாரின் வழக்கம்.

கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக வாழ்க்கையை தொடங்கியவர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அவருக்குள் இருந்த நடிப்புத் திறமையைக் கண்டு கொண்ட அவரது நண்பர்கள், அவரை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து மேலும் நடிப்புப் பயிற்சி பெற வைத்தனர்.

எதேச்சையாகக் கிடைத்த கே பாலச்சந்தரின் அறிமுகத்தால், சினிமா பிரவேசம் சாத்தியமானது.

அபூர்வ ராகங்கள் கதாபாத்திரத்திற்காக ஆள் தேடிக் கொண்டிருந்த பாலச்சந்தருக்கு ரஜினி ஞாபகம் வர, ஏற்கனவே தமிழ் சினிமாவில் திலகம் சிவாஜி இருப்பதால், ஒரு ஹோலி பண்டிகை அன்று சிவாஜி ராவ், ´ரஜினிகாந்த்´ ஆனார்.

அபூர்வ ராகங்கள் திரைப்படம் 1975ம் ஆண்டு ஒகஸ்ட் 18ம் திகதி வெளியானது. முதல் காட்சியிலேயே பெரிய கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைவார் ரஜினி. அக்கதவுகள் ரஜினியை திரைஉலகிற்குள் வரவேற்பது போல் அமைந்திருந்தது எதிர்பாராமல் கடவுள் அமைத்துக் கொடுத்தது.

இன்றோடு அந்த படம், வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. தற்போது கோச்சடையான் படவேலைகளில் பிசியாக இருக்கிறார் சூப்பர்ஸ்டார்.

சமூக வலைதளங்களிலும் பிற வழிகளிலும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. வில்லனாக திரை வாழ்வைத் தொடங்கி, இன்று அனைவராலும் சூப்பர்ஸ்டார் என ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரே நடிகர் ரஜினி தான்.

30 அடி உயர புத்தகத்தை வெளியிட்ட உலகின் குள்ளமான பெண்..!

shortestஜெய்ப்பூரைச் சேர்ந்த குள்ளமான பெண், “மெகா’ சைஸ் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் உயரம் 30 அடி, அகலம் 24 அடி, எடை 2,000 கிலோ. முனி ஸ்ரீ தருண் சாகர் எழுதிய இந்தப் புத்தகத்தை 25 அங்குலம் உயரமுள்ள ஜோதி ஆம்கே வெளியிட்டார்.

“இந்த மெகா சைஸ் புத்தகத்தை நான் வெளியிட்டுள்ளது மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்தப் புத்தகம் நன்றாக உள்ளது. ஜெய்ப்பூர் மக்கள் விருப்பத்தக்கவர்கள்’ என ஜோதி ஆம்கே தெரிவித்தார்.

இந்தப் புத்தகம் 1500 கிலோ இரும்பு, 100 லிட்டர் வண்ணச்சாயம் மற்றும் 400 கிலோ ஆளி விதை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத் மற்றும் நாசிக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட 10 பேர் 4 நாள்களில் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த சாதனையைப் பாராட்டி முனி ஸ்ரீ தருண் சாகர், ஜோதி ஆம்கேவுக்கு லிம்கா புக் சாதனை புத்தக நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடந்தாண்டு ஜூலை 28ஆம் தேதி ஆமதாபாதில் 25 அடி உயரம் 17 அடி அகலம் கொண்டு உருவாக்கப்பட்ட புத்தகமே சாதனையாக இருந்தது.

இது முனி ஸ்ரீ தருண் சாகர் எழுதிய புத்தகத்தின் 7ஆவது தொகுதியாகும்.

இதுவரை வெளிவந்துள்ள 6 தொகுதியும் சுமார் 60 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. இப்போது வெளியாகியுள்ள மெகா சைஸ் புத்தகத்தை சிறிய வடிவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளனர்.

தினமும் 10 சிகரெட்களை ஊதித்தள்ளும் ஆமை(படங்கள் இணைப்பு)..!

சீனாவில், வீட்டில் வளர்க்கப்படும் ஆமை ஒன்று,ஒரே நாளில், 10 சிகரெட்டுகளை ஊதித் தள்ளுகிறது. எஜமானர் சிகரெட் தர மறுத்தால், வினோத ஒலியை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறது. சீனாவின், சேங்சுன் நகரைச் சேர்ந்த ஒருவர், சில ஆமைகளை வளர்க்கிறார்.

சில தினங்களுக்கு முன், ஒரு ஆமையின் கழுத்துப் பகுதியில், ஏதோ சிக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆமையின் வாயை பெரிதுபடுத்தி பார்த்த போது, உணவின் சிறு பகுதி, தொண்டையில் சிக்கியிருப்பது தெரிந்தது. இதனால், தொண்டையில் புண் ஏற்பட்டு, ஆமை உணவு உண்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆமையின் தொண்டையில் சிக்கிய உணவை அகற்ற முயன்ற போது, வலி தாங்க முடியாமல், உரிமையாளரின் கையை கடித்துவிட்டது.

அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், ஆமையை திசை திருப்பி, அதன் வாயிலிருந்து, தன் கை விரல்களைக் காப்பாற்றிக் கொள்ள, தன் கையில் இருந்த சிகரெட்டை,ஆமையின் வாயில் வைத்தார். சிகரெட்டை வாயில் பிடித்த ஆமை, உரிமையாளரின் கையை, தன் பிடியிலிருந்து விட்டு விட்டது.

சிகரெட்டின் போதையில் ஆமை இருந்த போது, அதன் தொண்டையில் சிக்கிய உணவையும் உரிமையாளர் அகற்றிவிட்டார்.

அன்று இரவு, உரிமையாளரின் கையில் சிகரெட்டை பார்த்த ஆமை, வினோதமான குரல் எழுப்பியது. திடீரென ஒலியை அதிகரித்தது.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், அதன் வாயில் மீண்டும் சிகரெட்டை வைத்தார். ஆமையும் தன் சத்தத்தை நிறுத்திக் கொண்டது.

இதை தொடர்ந்து, ஆமையின் கண் முன்னால் சிகரெட் பிடிப்பதை நிறுத்திக் கொண்டாலும், தினமும், சிகரெட் கேட்டு ஆமை தொந்தரவு செய்யத் துவங்கியது. சிகரெட் கேட்டு வினோத ஒலி எழுப்பும் ஆமை, சிகரெட் கிடைக்காத வரை உணவு சாப்பிடவும் மறுக்கிறது.

இவ்வாறு தினமும், 10 சிகரெட்டுகளை சர்வ சாதாரணமாக ஊதித் தள்ளுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆமையின் உரிமையாளர், ஆமை சாப்பிட வேண்டும் என்பதற்காகவே, தினமும் சிகரெட் கொடுக்கிறார்.

turtle1turtle2

ஆரோக்கியமாக வாழும் 123 வயது ஆதிவாசி மனிதன்..!

bolivia_man_003பொலிவியா நாட்டில் ஆதிவாசி மனிதன் ஒருவர் 123 வயதுடன் வாழ்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பொலிவியாவின் பிரேஸ்குயா என்ற மலைப்பிரதேசத்தில் கார்னிலோ புளோரஸ் லாவூரா என்பவர் வாழ்ந்து வருகிறார்.

கடந்த 1890ம் ஆண்டு ஜீலை மாதம் 16ம் திகதி பிறந்த கார்னிலோவுக்கு, 3 பிள்ளைகள், 16 பேரன்- பேத்திகள், 39 கொள்ளுப்பேரன்- பேத்திகள் இருக்கிறார்கள்.

பற்களை இழந்தாலும் கூட நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படும் கார்னிலோ, எவ்வித உதவியும் இன்றி வெகுதூரம் நடக்கிறார்.

இவருடைய நீண்டகால ரகசியம் பற்றி கூறுகையில், நரி, கீரி இறைச்சியை அதிகம் விரும்பி சாப்பிடுவது, நீண்டதூரம் நடப்பது ஆகியவை தான் என்கிறார்.

மேலும் புரதசத்துள்ள தானியங்கள் அவ்வப்போது பன்றி, ஆட்டு இறைச்சி உண்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இவருக்கு பிறந்தநாள் சான்று இல்லை என்பதால், வெறும் வாய்மொழி தகவல் மூலம் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
bolivia_man_003bolivia_man_002bolivia_man_004

 

பல சாதனைகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது உலக தடகள சாம்பியன்ஷிப்..!

athleticதடகள ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 14-வது உலக தடகள சாம்பியன்ஷிப் மெய்வல்லுநர் போட்டி ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நேற்று கோலகலமாக முடிந்தது.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3 புதிய உலக சாதனைகள் படைக்கப்பட்டன.

இந்தப் போட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கடந்த 10-ம் தேதி தொடங்கியது.

இப்போட்டியில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரே குடும்பத்தைப் போல மாஸ்கோவில் ஒன்று கூடி பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

இவர்களில் சிலர் தங்களின் கடந்த உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். பலர் புதிய உலக சாம்பியன்களாக உருவெடுத்தனர்.

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கை மற்றும் இந்தியா சார்பில் பல வீரர்கள் இடம்பெற்றிருந்த போதும்  யாரும் பதக்கம் வெல்லவில்லை.

தடகளப் போட்டிகளில் 100, 200 மற்றும் 4×100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் ஜமைக்கா வீரர், வீராங்கனைகளே எப்போதும் ஆதிக்கம் செலுத்துவர். அது, இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் நடந்துள்ளது.

100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டிகளில் ஆடவர் பிரிவில் உசேன் போல்டும், மகளிர் பிரிவில் ஃப்ரேஸர்-பிரைஸம் தங்கம் வென்றிருந்தனர்.

இந்த நிலையில், 4ஷx100 மீட்டர் ஓட்டப் பந்தயம் கடைசி நாளான நேற்று நடைபெற்றது.

மகளிர் பிரிவில் ஜமைக்கா வீராங்கனைகள் தங்கம் வென்றதுடன் புதிய உலக சாதனைகளையும் படைத்தனர். அவர்கள் 41.29 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து சாதனை புத்தகத்தில் தங்கள் பெயர்களைப் பதித்தனர்.

இதையடுத்து நடைபெற்ற இப்பிரிவின் ஆடவர் ஓட்டப் பந்தயப் போட்டியிலும் உசேன் போல்ட் அடங்கிய ஜமைக்கா அணி தங்கம் வென்றது.

அந்த அணியினர் 37.36 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றனர். அவர்களைத் தொடர்ந்து வந்த அமெரிக்க அணி 37.66 விநாடிகளில் வெள்ளியும், பிரிட்டன் அணியினர் 37.92 விநாடிகளில் வெண்கலமும் வென்றனர்.

இந்த சாம்பியன்ஷிப்பில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 மீட்டர் போட்டியில் ஜமைக்காவின் ஃப்ரேஸர்-பிரைஸ் தங்கம் வென்றார். 3 விதப் போட்டிகளிலும் தங்கம் வென்ற முதல் ஜமைக்கா பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை ஓபர்க்ஃபால் 69.05 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றனர். அவுஸ்திரேலிய வீராங்கனை மிக்லி வெள்ளிப் பதக்கமும், ரஷ்ய வீராங்கனை அபகுமோவா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கென்யாவின் ஜோப்கோச் ஜம் 1 நிமிடம் 57.38 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். ரஷ்ய வீராங்கனை சவிநோவா வெள்ளியும், அமெரிக்க வீராங்கனை மார்ட்டின்ஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஆடவர் பிரிவு 1500 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் கென்யாவின் கிப்ரோப் தங்கம் வென்றார். அவர், 3 நிமிடம் 36.28 விநாடிகளில் இலக்கை எட்டினார். இவர் இப்போட்டியின் மற்றொரு ஓட்டப் பந்தயத்திலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் மும்முறைத் தாண்டுதலில் பிரான்ஸ் வீரர் டாம்கோ 18.04 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். கியூபாவின் பிச்சார்டோ (17.68 மீ.) வெள்ளியும், அமெரிக்காவின் கிளேய் (17.52 மீ.) வெண்கலமும் வென்றனர்.

புதிய உலக சாதனை

ஒவ்வொரு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும், தங்கப் பதக்கம் வெல்லும் லட்சியத்துடன், புதிய உலக சாதனை படைக்க வேண்டும் என்று வீரர்கள் செயல்படுவர். அதன்படி 2013 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 3 உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உயரம் தாண்டுதல் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த போடன் பான்டரென்கோ 2.41 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரரானார்.

சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் ரஷ்ய வீராங்கனை டட்யனா இùஸன்கோ 78.80 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்துள்ளார்.

4×100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் ஜமைக்காவின் மகளிர் அணியினர் 41.29 விநாடிகளில் இலக்கை எட்டி சாதனை படைத்தனர்.

இதேபோல், 2011-ம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 3 உலக சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த உலக சாம்பியன்ஷிப்

15-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் (22-30 தேதி) நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் பெய்ஜிங் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் சைமன் கெரிகன் மற்றும் கிறிஸ் வோக்ஸ்..!

ashesஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சைமன் கெரிகன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரிவன் பின்னும் 14 பேர் கொண்ட இங்கிலாந்து குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

ரிம் பிரஸ்னன் மற்றும் கிரஹம் ஒனியன் ஆகியோர் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சைமன் கெரிகன் இதுவரை சர்வதேச போட்டிகள் எதிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் 3-0 என்ற ஆட்டக்கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

கம்பீருக்கு வாய்ப்பை விட்டுக் கொடுத்த ஷேவாக்..!

cricketகவுதம் கம்பீருக்காக தன்னை தேடி வந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளார் வீரேந்திர ஷேவாக்.

தற்போதைய நிலையில் கம்பீரும், ஷேவாக்கும் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இருவருக்கும் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற சந்தேகமும் உள்ளது.

இந்த நிலையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சக டெல்லி வீரரான கம்பீருக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.

அதாவது, இங்கிலாந்தின் எஸ்ஸக்ஸ் கவுண்டி அணிக்காக சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் கவுதம் கம்பீர்.

இதுமுதலில் ஷேவாக்கிற்கு வந்ததும், அவர் தான் கம்பீரின் பெயரை பரிந்துரை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், எஸ்ஸக்ஸ் அணிக்கு விளையாட கிடைத்த வாய்ப்பை ஷேவாக், கம்பீருக்கு திருப்பி விட்டுள்ளார்.

ஷேவாக் கிடைக்காததால்தான் கம்பீரை நாடியதாக எஸ்ஸக்ஸ் பயிற்சியாளர் பால் கிரேசன் கூறியிருப்பது கவனத்துக்குறியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷேவாக் ஏன் மறுத்தார் என்பதற்கான காரணத்தை தன்னால் கூற முடியாது என்றும் கிரேசன் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டிற்கு மன்மோகன் சிங் வருவார் – பீரிஸ்..!

perisகொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை பெரிதும் விரும்புவதாகவும், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது, கச்சத்தீவை இந்தியாவுக்கு திருப்பி தரும் பேச்சுக்கே இடமில்லைஎன அதன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரை அழைப்பதற்காக புதுடில்லி சென்றுள்ள பேராசிரியர் ஜீஎல் பீரீஸ், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த போதே இதைத் தெரிவித்தார்.

ஆசியாவில் 24 ஆண்டுகளுக்கு பிறகு பொதுநலவாய மாநாடு ஒன்று நடைபெறும் சூழலில், அந்த அமைப்பிலேயே அதிகமான மக்கட்தொகை கொண்ட நாடு என்கிற வகையிலும் இந்தியா அதில் கலந்து கொள்வதற்கான காரணங்கள் உள்ளன என்றும் கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான இருதரப்பு உறவுகள் வலுவாக உள்ளதையும் அவர் அந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

பொதுநலவாய அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் 53 நாடுகளில் இதுவரை யாரும் கொழும்பு மாநாட்டுக்கு வரப் போவதில்லை என்று கூறவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

கனடா கூட அந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் என்று பொதுநலவாய அமைப்புக்கான கனடாவின் சிறப்புத் தூதர் ஹ்யூ சீகல் தெரிவித்துள்ளதையும் பேராசிரியர் பீரீஸ் சுட்டிக்காட்டினார்.

நவநீதம்பிள்ளை வருகை

ஒருவார கால பயணமாக இலங்கைக்கு வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளையின் விஜயம் ஆக்கபூர்வமாக இருக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னரே அவரை இலங்கைக்கு வருமாறு அரசு அழைத்தது என்றும், இந்தப் பயணம் அவருக்கு இலங்கை குறித்த ஒரு யதார்தமான, ஆக்கபூர்வமான புரிதலோடு ஒரு நிலைப்பாட்டை எடுக்க உதவும் என்றும் தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கச்சதீவை திருப்பி ஒப்படைக்க முடியாது!- பீரிஸ் திட்டவட்டம்

கச்சதீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுகே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரீஸ் தெரிவித்தார்.

கச்சதீவு ஒப்பந்தம் தொடர்பாக தமிழகக் கட்சிகள் பிரச்சினை எழுப்புவது சரியல்ல. அது முடிந்து போன விவகாரம்.

கச்சதீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப்படி அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திதான் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி, சர்வதேச எல்லைக்குள்பட்ட கச்சதீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மேலும், ஒப்பந்தத்தில் இலங்கை மீனவர்களுக்கும் இலங்கைக்கும் கச்சத்தீவில் உள்ள உரிமைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் இந்திய அரசின் நிலை தெளிவாக உள்ளது.

எனவே, கச்சதீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மீனவர்கள் பேச்சு நடத்த வேண்டும்:

இலங்கை கடல் பகுதிக்கு வெகு அருகே, கரையில் இருந்து 700 மீட்டர் தொலைவு அளவுக்குத் தமிழக மீனவர்கள் வந்து மீன்பிடிக்கின்றனர்.

போருக்குப் பின்பு அவர்கள் சார்ந்துள்ள கடல் பகுதிக்குத் தமிழக மீனவர்கள் வருவதால், தங்களின் மீன்பிடி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எங்கள் நாட்டு மீனவர்கள் கருதுகின்றனர்.

மனிதாபிமானம் தொடர்புடைய இரு நாட்டு மீனவர்கள் விஷயத்தில் இரு தரப்பும் தங்களுக்குள்ளாகவே பரஸ்பரம் பேச்சு நடத்தி தீர்வு காண முயல வேண்டும் என்றார் பீரீஸ்.

பொதுநலவாய மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும்..!

commonwealthஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டுகக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உகு உள்ளிட்ட, 17 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிச்சர்ட் உகு, இந்த முறை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும்.

எந்த ஒருநாடும் இதனை புறக்கணிக்காது என்று தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு, இந்த மாநாட்டை கனடா புறக்கணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.

எனினும் கனடாவும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டயானா இறந்தது குறித்த புதிய தகவல் – இங்கிலாந்தில் புதிய சர்ச்சை..!

accidentஇளவரசி டயானா இறந்தது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவல்கள் உண்மைதானா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று இங்கிலாந்து பொலிசார் கூறியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு தனது நண்பர் டோடி பயட்டுடன், பாரிசில் உள்ள ஹோட்டலுக்கு சென்றிருந்தார்.

அவர்களை படம் பிடிக்க ´பாப்பராசி´ என்றழைக்கப்படும் புகைப்படக் கலைஞர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்களின் கண்ணில் படாமல் இருக்க ஹோட்டலின் மற்றொரு வழியாக டயானா, பயட் இருவரும் சொகுசு காரில் அவசரமாக புறப்பட்டு சென்றனர்.

டயானாவின் சாரதி காரை ஓட்டி சென்றார். டயானா வெளியில் செல்வதை பார்த்துவிட்ட புகைப்பட கலைஞர்கள் அவர்களை துரத்தினர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க அதிவேகமாக சென்ற போது ஒரு பாலத்தில் கார் பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது. இதில் டயானா, பயட் ஆகியோர் இறந்தனர்.

இந்த விபத்து குறித்து ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிசார் விசாரித்து வந்தனர். கடந்த 2008ல் பிரித்தானிய நீதிமன்றத்தில் டயானா இறப்பு குறித்து விசாரணை நடந்தது.

அப்போது, டயானா தனது நண்பர் பயட்டுடன் சென்ற போது புகைப்பட கலைஞர்களிடமிருந்து தப்பிக்க சாலை விதிமுறைகளை மீறி கார் வேகமாக புறப்பட்டு சென்றது. சாரதி போதையில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது இளவரசி டயானா மரணம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது என்று இங்கிலாந்து பொலிசார் தெரிவித்துள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், டயானா இறப்பு தொடர்பாக சில புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவை பொருத்தமானவைதானா, நம்பத்தகுந்த தகவலா என்று சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் என்றனர்.

ஆனால், என்ன தகவல் கிடைத்துள்ளது என்பதை தெரிவிக்க பொலிசார் மறுத்துவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மிஸ்கோலால் சீரழிந்த இளம் பெண்ணின் வாழ்க்கை..!

missedcallதன் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த மிஸ்கோல் (Missed call) இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட இளம் பெண் ஒருவர் தனது வாழ்க்கையையே தொலைத்துள்ள சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.

திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று காலை ஒரு இளம்பெண் அனாதையாக சுற்றிக் கொண்டிருந்தார். ரோந்து பொலிசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர், தனது ஊர் திருவனந்தபுரம் ஆற்றிங்கல் என்று கூறினார். பொலிசார் ஆற்றிங்கல் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு அந்த பெண் பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.

அங்குள்ள பொலிசார் இதுபற்றி விசாரித்தபோது, அந்த பெண்ணை காணவில்லை என அவரது பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்த விவரத்தை தெரிவித்ததோடு அந்த பெண்ணை ஆற்றிங்கல் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த பெண் கூறியதாவது…

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு மிஸ்கோல் வந்தது. அதை தொடர்பு கொண்டு பேசியபோது, திருவனந்தபுரம் பீமாபள்ளி பகுதியைச் சேர்ந்த ஷானு (வயது 20) என்பவர் பேசினார்.

அவரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தேன்.

அப்போது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி 2 நாட்களுக்கு முன்பு அவரோடு சென்றேன். ஒரு காரில் என்னை அழைத்துச்சென்ற ஷானு திருவனந்தபுரத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றி திரிந்தார்.

பின்னர் நாங்கள் கோவளம் கடற்கரைக்கு வந்து தங்கினோம். அங்கு ஷானு என்னுடன் உல்லாசமாக இருந்தார். அதன் பிறகு செலவுக்கு பணம் இல்லை என்று கூறி எனது 4 பவுன் செயினையும் வாங்கிக் கொண்டார்.

அதை பணமாக்கி வருவதாக கூறி சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை தேடி அலைந்த போது, என்னை ஏமாற்றிச் சென்றது தெரியவந்தது.

இவ்வாறு பொலிசாரிடம் தெரிவித்தார்.

பொலிசார் அந்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த இலக்கத்தை கொண்டு ஷானுவின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். நேற்று ஷானு கைது செய்யப்பட்டார். அவரை ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொலிசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.