சந்தானம் தனது தாய்க்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்துள்ளார். சந்தானம் தாய் சொல்லைத் தட்டாதவர். அவர் என்ன சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் நடப்பாராம்.
படங்களில் சந்தானம் இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் பயன்படுத்துவார் என்பது அனைவரும் அறிந்ததே.
கிருத்திகா உதயநிதி இயக்கும் வணக்கம் சென்னை படத்தில் சந்தானம் நடிக்கிறார். என் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கூடவே கூடாது என்று கிருத்திகா சந்தானத்திடம் கறாராக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் சந்தானத்தின் வசனங்கள் அவரது தாய்க்கும் பிடிக்கவில்லை போலும். இதையடுத்து இனி தான் நடிக்கும் படங்களில் அருவெறுப்பான வசனங்களை பேசவே மாட்டேன் என்று சந்தானம் தனது தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.
வவுனியா, மன்னார், மாங்குளம் பொலிஸ் பிரிவுகளைச்சேர்ந்த 62 பொலிஸார் தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்து வெளியெறியுள்ளனர்.
கடந்த 5 மாதகாலமாக வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற இப்பயிற்சி நெறியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் இடம்பெற்றிருந்தது.
தமிழ் பிரதேசங்களில் பணியாற்றும் சிங்கள மொழியிலான பொலிஸ் அதிகாரிகள் தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளை அறிந்து செயற்படவும் அவர்களது தேவைகளை இலகுவான முறையில் பூர்த்தி செய்து கொடுக்கும் முகமாகவும் இப்பயிற்சி நெறி இடம்பெற்று வருகின்றது.
இறுதி நாள் நிகழ்வின் போது தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வுக்கு வவுனியா, மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் எச். விக்கிரமசிங்க, உதவி பொலிஸ் அதிதியட்சகர் சமுத்திர ஜீவா, வவுனியா பொலிஸ் நிலைய கணக்கு ஆய்வாளர் எஸ். இரவிச்சந்திரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்கங்களின் தரிசனம் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் பிரமகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வழிபாட்டில் சோமநாத், விஸ்வநாத், திரியம்பகேஸ்வரர், வைத்யாநாத், நாகேஸ்வர், இராமேஸ்வரம், கிருஸ்ணேஸ்வர், பீமாசங்கர், கேதார்நாத், ஓங்காரேஸ்வரர், மகாகாளேஸ்வரர், மல்கார்ஜூன் ஆகிய 12 ஜோதி லிங்கங்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.
பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மகிமை வாய்ந்த 12 சிவத்தலங்களை சேர்ந்த ஜோதி லிங்கங்களை சிவ பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசித்து வழிபட வேண்டியே இலங்கை பிரமகுமாரிகள் இராஜயோக நிலையம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ள இத் தரிசனத்தில் பாடசாலை மாணவாகள், இந்து மதத்தவர்கள் உட்பட பலரும் வருகை தந்து வழிபாடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளமை குறிப்படத்தக்கது.
கௌதம் மேனன் படத்தில் சூர்யாவுக்கு பதில் சரத்குமார் நடிப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. சிங்கம் 2 படத்தையடுத்து சூர்யாவிடம் இயக்குனர்கள் கௌதம் மேனன், லிங்குசாமி கால்ஷீட் கேட்டிருந்தனர்.
யாருக்கு கால்ஷீட் தருவார் என்பதில் இழுபறி நிலவியது. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது தொடர்பாக தொழில் நுட்ப சிக்கல் இருப்பதால் அதை சரி செய்துவரும்படி சூர்யா கூறினார்.
இதனால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் லிங்குசாமி படத்தில் நடிக்க முதலில் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சூர்யா.
அதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் சூர்யாவுக்கு பதிலாக சரத்குமாரை நடிக்க வைக்க கௌதம் மேனன் எண்ணி இருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இதுபற்றி கௌதம் மேனன் கூறும்போது, இன்னும் சில நாள் பொருத்திருந்தால் அனைத்து விவரங்களையும் தருகிறேன் என்றார். துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கிறீர்களா? என்று சரத்குமாரிடம் கேட்டதற்கு, அப்படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் அடுத்த வருடம் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க உள்ளேன்.
இது மிகவும் ரசனையான ஸ்கிரிப்ட். கடந்த வருடமே இது பற்றி இருவரும் பேசி இருக்கிறோம். விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன் என்றார்.
ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத் நடித்திருக்கிறார்.
இங்கிலாந்து– அவுஸ்திரேலியா மோதும்2–வது ஆசஷ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில்361 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 128 ஓட்டங்களும் எடுத்தன. 233 ஓட்டங்கள் முன்னிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 எ ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
நேற்று 3–வதுநாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர் ஜோ ரூட் அபாரமாக ஆடி சதம் அடித்தார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்களை எடுத்து இருந்தது. ஜோரூட் 178 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் உள்ளார். பெல் 74 ஓட்டங்களையும் எடுத்தார்.
இங்கிலாந்து அணி 566 ஓட்டங்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. கைவசம் 5 விக்கெட் உள்ளது. இன்னும் 2 நாள் ஆட்டம் இருக்கிறது.
கொலிவுட்டில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் டிராப் ஆகிவிட்டது என்று சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு ரஜினிகாந்தின் செயலாளர் படம் நிச்சயமாக வெளியாகும் என்று கூறியுள்ளார்.
கோச்சடையான் படத்தின் ட்ரைலர், ரஜினிக்கு திருப்தி அளிக்காத காரணத்தினால் தான் இன்னும் வெளியிடவில்லை.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு படம் இல்லை என்பதால் இந்தப் படத்தை கைவிட்டு விடும் முடிவுக்கு ரஜினிகாந்த் வந்து விட்டார் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதனால் கோச்சடையான் படம் டிராப் ஆகி விட்டது என்று ஊடகங்களிலும் வெளியானது.
இந்த செய்தி குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்தின் செயலாளர், கோச்சடையான் படம் நிச்சயம் வெளியாகும்.
தனது பகுதிக்கான டப்பிங்கை ரஜினிகாந்த் பேசி முடித்து விட்டார் என்றும் ரஜினிகாந்துக்கு படம் பிடிக்கவில்லை என்றால் அவர் ஏன் டப்பிங் பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த வவுனியா யுவதி ஒருவரை ஏமாற்றி கற்பழித்த பஸ் சாரதியொருவரும், நடத்துனரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது தாயுடன் சண்டை பிடித்துக்கொண்டு தனியார் பஸ்ஸொன்றில் கொழும்புக்கு பயணித்துள்ளார். இதற்கிடையே நைசாகப் பேசி அந்த யுவதியின் நிலை அறிந்து கொண்ட பஸ் சாரதியும் நடத்துனரும் அவரை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட யுவதியின் முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்திய பொலிசார் குறித்த சாரதியையும் நடத்துனரையும் கைது செய்திருந்தனர்.
கொழும்பு நீதிமன்ற நீதவான் நிரோசா பெர்னாண்டோ முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட யுவுதி அவர்கள் இருவரையும் அடையாளம் காட்டியுள்ளார்.
எனினும் சந்தேக நபர்கள் இருவரையும் ஐந்து இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்துள்ளார்.
மேலும் சந்தேக நபர்கள் இருவரும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கோட்டை பொலிஸ் நிலையத்தில் சமுகம் அளித்து கையொப்பம் இட வேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பசிஃபிக் தீவுத் தேசமான நவ்றுவில் அவுஸ்திரேலியா நடத்தும் தஞ்க் கோரிக்கையாளர் தடுப்பு முகாமில் கலவரம் வெடித்ததை அடுத்து அங்கு பொலிசார் தலையிட்டு ஒழுங்கை ஏற்படுத்தினர்.
வெள்ளிக்கிழமையன்று அம்முகாமின் கட்டிடங்கள் பலவற்றுக்கு தீ வைக்கப்பட்டதகாகவும், முகாமின் மருத்துவ மையம் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தஞ்சக் கோரிக்கையாளர்கள் 150 பேர் இந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
படகில் அவுஸ்திரேலியாவுக்கு வர முற்படும் தஞ்சக் கோரிக்கையாளர்களைத் தடுப்பதற்கான கடுமையான புதிய நடவடிக்கைகள் பற்றி ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் அறிவித்த சில மணி நேரங்களில் இந்தக் கலவரம் ஆரம்பித்தது.
பெரும்பாலும் ஈரானியர்கள் அடங்கிய தஞ்சக் கோரிக்கையாளர்கள் கூட்டம் ஒன்று தடுப்பு முகாமில் இருந்து தப்பிக்க முயன்றபோது இந்த கலவரம் வெடித்தது.
கலவரம் ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் தடுப்புக் காவல் மையத்தின் கட்டுப்பாட்டை தஞ்சக் கோரிக்கையாளர்கள் கைப்பற்றினர் என பெயர் குறிப்பிட விரும்பாத காவல் பணி ஊழியர் ஒருவரை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய செய்தி நிறுவனமான ஏபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
சமயலறையில் பயன்படுத்தப்படும் கத்திகளை கையிலெடுத்துக்கொண்டு தஞ்சக்கோரிக்கையாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் இலங்கை அகதிகளும் அடங்குவர்.
அப்போது நடந்த சண்டையில், தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் குறைந்தது நான்கு பேரும், காவல் பணியாளர்கள் பலரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
கலவரம் செய்யும் தஞ்சக் கோரிக்கையாளர்களை பொலிசார் அடக்க முயன்றபோது, இரும்புக் குழாய்களையும், வெட்டுக் கத்திகளையும் ஏந்தி வந்து உள்ளூர்வாசிகள் பலர் உதவியிருந்தனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளுக்கு உதவ பெருந்திரளான உள்ளூர் வாசிகள் வந்து குவிந்ததை அடுத்து நான்கு மணி நேரம் நடந்த கலவரம் முடிவுக்கு வந்தது என்று உள்ளூர் செய்திப் புகைப்பட கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த இடத்தில் அமைதி நிலவுவதாகவும், கலகம் செய்யும் விதமாக தஞ்சக் கோரிக்கையாளர் எவரும் தற்போது இல்லை என்றும் அவுஸ்திரேலிய குடிவரவு கட்டுப்பாட்டுத் துறை தெரிவிக்கிறது.
தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் சிலர் கலவரத்தின்போது தப்பிக்க முயன்றிருந்தாலும் தற்போது அனைவரும் கணக்கில் வந்து விட்டார்கள் என்று குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு படகில் வரும் எவரும் அவுஸ்திரேலியாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்கள் பப்புவா நியு கினீக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் பிரதமர் ரட் வெள்ளியன்று அறிவித்திருந்தார்.
அவுஸ்திரேலியாவில் குடியேறும் கனவுடன் ஆபத்துமிக்க கடல் பயணத்தை மேற்கொள்வதை மக்கள் நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவை தான் அறிவிப்பதாக அவர் கூறியிருந்தார்.
அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் விரைவில் வரவுள்ள சூழ்நிலையில் அந்நாட்டின் தஞ்சக் கோரிக்கையாளர் கொள்கையை மாற்றியமைப்பது பற்றிய அறிவிப்புகளை அவர் செய்திருந்தார்.
13வது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள குறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசருமான சிவி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து இந்த திருத்தத்தை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் தற்போது நிலைகொண்டுள்ள 1,50,000 இராணுவத்தால் மக்களுக்கு அசௌகரியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மக்கள் ஒரே மொழியை பயன்படுத்துவதால் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதில் என்ன தவறு என விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தான் நீதியரசராக இருந்த காலத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் குறித்து தான் ஓய்வுபெற்று ஓரிரு வருடங்களில் கதைத்தால் எவருக்கும் அதனை விசாரணை செய்ய முடியும்.
ஆனால் ஓய்வு பெற்று 10 வருடங்களின் பின் கதைத்தால் அது என்னை அச்சுறுத்துவதற்காகவே என தான் நினைப்பதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதான விதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வான் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றும் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
கடல்நீரில் இருந்து குடிநீர் தயாரிக்கப்படுகிறது. அதேபோன்று வியர்வையில் இருந்து குடிநீர் தயாரிக்கும் வழிவகையும் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான இயந்திரத்தை சுவீடனின் ஸ்டாக் ஹோமை சேர்ந்த பொறியியலாளர் அன்ட்ரஸ் ஹம்மர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த இயந்திரம் பில்டர் மற்றும் டிரையருடன் கூடிய அதி நவீன தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
வியர்வையுடன் கூடிய துணிகளை டிரையரில் போட வேண்டும். பின்னர் இயந்திரத்தை இயங்க செய்ய வேண்டும்.
அவை சலவை இயந்திரம் போன்று வியர்வை துணியை முறுக்கி பிழியும். அதில் இருந்து வெளியாகும் வியர்வையில் அல்ட்ரா வயலட் கதிர்கள் பாய்ச்சப்பட்டு அதி நவீன பில்டர் மூலம் வடிகட்டப்படுகிறது.
இதனால் பக்டீரியாக்கள் மற்றும் உப்புசத்துகள் அகற்றப்பட்டு குடிநீராக மாறுகிறது.
தென்னாபிரிக்க அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி அமோக வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று பகலிரவு போட்டியாக இடம்பெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 180 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி குமார் சங்கக்காரவின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 137 பந்துகளில் 18 நான்கு ஓட்டங்கள், 6 சிக்சர்கள் அடங்கலாக 169 ஓட்டங்களைப் பெற்றார். இதுவே சங்ககார ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். மேலும் தரங்க 43 ஜயவர்த்தன 42 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 31.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 180 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. தென்னாபிரிக்கா சார்பில் துடுப்பாட்டத்தில் குறிப்பிடும்படியாக எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை.
பந்துவீச்சில் இலங்கை அணியின் திசார பெரேரா, ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் தில்ஷான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.
இதன்படி 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி வரும் 23ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸமைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
ஸ்மார்ட் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலமான வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அதே தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
இப்போட்டியில் Emopulse எனும் நிறுவனம் ஏனைய நிறுவனங்களினது ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை விடவும் முற்றிலும் வித்தியாசமான கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இது Linux AI இயங்குதளத்தினைக் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதுடன் அப்பிளின் iPhone 4S இன் திரைக்கு நிகரான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
மேலும் இதில் 2 GB பிரதான நினைவகம் காணப்படுவதுடன் 128 அல்லது 256 GB கொள்ளளவுடைய சேமிப்பு வசதியும் தரப்பட்டுள்ளது. இவை தவிர 12 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.