விக்ரம் நடிப்பு வியக்கும் ஷங்கர்!!

shankarதமிழ் திரையுலகில் தற்போது பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் படம் “ஐ”. அந்நியன் படத்தினைத் தொடர்ந்து மீண்டும் ஷங்கர் – விக்ரம் இப்படத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் “ஐ” படத்தினைப் பற்றி தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் தகவல்களை வெளியிட்டு வந்தார் இயக்குனர் ஷங்கர்.

“ஐ” படத்தினைப் பற்றி தற்போது இயக்குனர் ஷங்கர் கூறியிருப்பது “ஐ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. விக்ரமின் உடலமைப்பு மாற்றங்கள், கதாப்பாத்திரத்துக்கான ஒப்பனை உள்ளிட்ட விஷயங்களுக்காக இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. ஆனால், அந்தக் காத்திருப்பின் முழு பலனும் இப்போது கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.

கடந்த மே மாதம் நியூஸிலாந்தின் வீட்டா (Weta) வொர்க்ஷாப்பையும், அதன் இணை நிறுவனர் ரிச்சட் டெய்லர் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் சந்தித்தேன். சிற்பம் உள்ளிட்ட கலைகளில் ஈடுபட்டுவரும் ரிச்சட் டெய்லர் மற்றும் அவரது கலைஞர்களின் கலைத் திறமைகளைக் கண்டு வியந்தேன். ரிச்சர்ட் டெய்லர் வர்த்தக ரீதியிலான லாபத்தைவிட படைப்பாற்றலுக்கே முக்கியத்துவம் தருகிறார் என்பது தான் என்னை மிகவும் கவர்ந்தது.

அவர்களுடன் “ஐ” படத்துக்கான வேலைகள் நடைபெற்றது. வீட்டா அண்மையில் பங்குவகித்த படங்களின் விஷுவல்கள், மேக்கப், கலைப் பொருட்கள் முதலியவற்றைக் கண்டு வியப்புற்றேன். எந்திரனுக்காக அமெரிக்காவின் ஸ்டான் வட்ஸன் ஸ்டூடியோவுக்குச் சென்றபோதும் ஏற்பட்ட அதே அனுபவத்தை வீட்டாவும் தந்தனர்.

ஜூனில் பெங்களூரு, மைசூர் மற்றும் சென்னையில் மூன்று வாரங்களில் “ஐ” படப்பிடிப்பு நடந்தது. ஷான் ஃபுட் மற்றும் டேவினா லாமவுன்ட் ஆகியோர் விக்ரமுக்காக செய்த ஒப்பனைகள் கண்களுக்கு விருந்து படைத்தன. விக்ரம் மீண்டும் ஒரு முறை தன்னை மகத்தான நடிகர் என்று நிரூபித்துள்ளார். இப்போது, 75 சதவீத படிப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்கும்” என்று ஷங்கர் விவரித்துள்ளார்.

Firefox 22 புத்தம் புதிய பதிப்பு அறிமுகம்

firefox22

முன்னணி இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் Mozilla நிறுவனம் Firefox உலாவியின் Firefox 22 எனும் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

Windows, Mac, Android மற்றும் Linux இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இப்புதிய பதிப்பில் 3D Gaming, Voice Calls, File Sharing ஆகிய புதிய வசதிகள் உட்புகுத்தப்பட்டுள்ளன.

எனவே 3D Gaming, Voice Calls, File Sharing ஆகிய சேவைகளைப் பெறுவதற்கு மேலதிக நீட்சிகளோ அல்லது மூன்றாம் நபர் மென்பொருட்களையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்கம் செய்ய கீழே அழுத்துங்கள்..

Windows, Mac & Linux

லிங்குசாமி மீது சீமான் அளித்த புகாரால் சூர்யா கடுப்பு!!

surya1

இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி மீது இயக்குனர் சீமான் இயக்குனர் சங்கத்தில் அளித்த புகார் காரணமாக நடிகர் சூர்யா கடும் கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கௌதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “துருவ நட்சத்திரம்” படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. “துருவ நட்சத்திரம்” பட கதையில் திருப்தி இல்லாததால் கதையை மாற்றச் சொல்லி சூர்யா நிபந்தனை போட்டதால் படப்பிடிப்பு நின்று போனது.

அந்த சூழலில் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் ஒரு கதை சொல்லி சூர்யாவிடம் ஓகே வாங்கியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி.
லிங்கு சொன்ன கதை பிடித்திருந்தால் “துருவ நட்சத்திரம்” படத்திற்கு தந்த கால்ஷீட் திகதிகளை லிங்குசாமி இயக்கப்போகும் படத்திற்கு கொடுத்தார் சூர்யா.

படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருந்த நிலையில்தான் சிக்கல் ஆரம்பமானது..

பிரபல தயாரிப்பாளர் தாணு தனது நிறுவனம் சார்பில் நடிகரும், இயக்குனருமான சீமானிடம் ஒரு கதை கேட்டு படம் தயாரிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இந்த படத்திற்கு “பகலவன்” என பேரும் வைத்திருந்தார்கள். ஜெயம்ரவி நாயகனாக நடிக்கயிருந்தார். கதை விவாதம் முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் திகதியும் முடிவானது.

இந்த நிலையில்தான், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் கதையும் “பகலவன்” கதையும் ஒரே கதைதான் என்பது சீமானுக்கு தெரியவந்தது.

கடுப்பான சீமான் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் லிங்குசாமியின் மீது புகார் அளித்திருக்கிறார். இந்த விவரம் தெரிந்ததும் இருவரையும் சமாதானப்படுத்த செயலாளர் ஆர்.கே.செல்வமணியும் சில முக்கிய சங்க நிர்வாகிகளும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

புகார் விவரம் வெளியே தெரியாமல் தடுக்கவும் புகாரை மீளப் பெறவும் சீமானிடம் பிரபலங்கள் பலர் பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான “ஆனந்தம்” படமும், விக்ரமன் இயக்கத்தில் வெளியான “வானத்தைப்போல” படமும் ஒரே கதை என்றும், இதேபோல பிரச்சினை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

என் வாழ்க்கை நீயே.. மலேசிய கலைஞர்களின் முதல் படைப்பு..!

r3“என் வாழ்க்கை நீயே” எனும் புதிய காதல் படைப்பை சிவஷங்கர்  எனும் இளம் இசைக்கலைஞர் 12.07.2013 அன்று  வெளியிட்டுள்ளார்.

Rhythmic R3volutionZ சார்பாக சுதனேஷ் மற்றும் பவித்ரா பாடியுள்ள இப்பாடலுக்கு இளம் இசையமைப்பாளர் ஷங்கர் இசையமைத்துள்ளார்.

வளர்ந்துவரும் இக்கலைஞர்களின் இப்பாடலானது மலேசியாவில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருகிறது.

 

இசை: சிவஷங்கர்

பாடியோர்: சுதனேஷ் & பவித்ரா

வெளியீடு: Rhythmic R3volutionZ

இப்பாடலின் ஒளிவடிவம் உங்களுக்காக:

ஜார்க்கண்டில் 4 மாணவிகளை கடத்தி கற்பழித்த 20 வாலிபர்களுக்கு 24 மணிநேர கெடு!!

rape

இந்தியாவில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்த 20 வாலிபர்கள் 4 மாணவிகளை கடத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பகடியா என்ற மலைவாழ் இனத்தினர் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.

அந்த இனத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு உதவியுடன் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று பகுர் மாவட்டத்தில் உள்ள லிடிபாரா கிராமத்தில் பாடசாலை ஒன்றை நடத்தி வருகிறது.

மலைவாழ் இன மாணவிகள் தங்கி படிப்பதற்கு வசதியாக பாடசாலைக்கு அருகிலேயே விடுதி ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் இன மாணவிகள் தங்கியுள்ளனர்.

நேற்றிரவு அந்த விடுதிக்குள் சுமார் 20 வாலிபர்கள் திடீரென நுழைந்தனர். விடுதி வார்டனையும், ஆசிரியர்களையும் தாக்கினார்கள். பிறகு அவர்களை ஒரு அறையில் தள்ளி பூட்டினார்கள்.

அதன் பிறகு 14 வயதுடைய 4 மாணவிகளை அந்த கும்பல் கடத்திச் சென்றது. அருகில் உள்ள காட்டுக்குள் சென்றதும் 20 வாலிபர்களும் அந்த மாணவிகளை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே 4 மாணவிகள் கடத்தப்பட்ட தகவல் பரவியதும் கிராம மக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் அருகில் உள்ள காடுகளுக்குள் புகுந்து தேடினார்கள். கிராம மக்கள் திரண்டு வந்ததும் 20 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து 4 மாணவிகளையும் கிராம மக்கள் மீட்டு, மீண்டும் விடுதிக்கு அழைத்து வந்தனர். அப்போது ஒரு மாணவி கூறுகையில், ‘‘எங்களை கடத்தியவர்கள் மது அருந்தி இருந்தனர். எங்களை பலாத்காரம் செய்த பிறகு கொல்ல முயன்றனர். நல்ல வேளையாக கிராமத்தினர் வந்ததால் தப்பித்தோம்’’ என்றார்.

இதுபற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் வந்து 4 மாணவிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சோதனையில் 4 மாணவிகளும் பலவந்தமாக கற்பழிக்கப்பட்டமை உறுதியானது.

பொலிசார் வழக்குப்பதிவு செய்து 4 மாணவிகளிடமும் விசாரணை நடத்தினார்கள். அதன் மூலம் அருகில் உள்ள கிராமத்து வாலிபர்கள் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சில வாலிபர்களை பொலிசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

குற்றவாளிகள் 24 மணி நேரத்துக்குள் சரண் அடையாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் – முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி!!

SLMCஇலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ளத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.இதை அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக இது குறித்த விவாதங்கள் நடைபெற்றன என்றும் அதையடுத்து இடம்பெற்ற கட்சியின் உயர்மட்டக் கூட்டத்திலேயே தனித்து போட்டியிடுவது எனும் முடிவு எட்டப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமாக போட்டியிடுவது சாத்தியப்படாது என்று தமது உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்தே, கட்சி இம்முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் முற்றாக தீர்ந்தபாடில்லை எனும் சூழலில் ஆளும் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிடுவது தங்களது நலன்களை பாதிக்கும் என்று உயர்மட்டக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் அதை கட்சி கவனத்தில் எடுத்தது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் ஒரு அங்கமாக தமது கட்சி இருந்தாலும் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த காரணத்தாலேயே தனித்து போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் ஹஸன் அலி கூறுகிறார்.

எனினும் ஆளும் கூட்டணியிலுள்ள இதர முஸ்லிம் கட்சிகள் தனியாக ஒரு அணி அமைத்து அதன் அடிப்படையில் தேர்தலை சந்திக்க விரும்பினால் அது குறித்து ஆக்கபூர்வமாக விவாதிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாரகவுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேர்தலுக்கு பிறகே யாரை ஆதரிப்பது என்கிற முடிவு எடுக்கப்படும் எனவும் ஹஸன் அலி தெரிவித்தார்.

-BBC தமிழ்-

தமிழ்நாட்டில் மீண்டும் சாதித் தீயில் சிக்கியுள்ள புது காதல் ஜோடி!!

caste

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் இளவரசன் என்ற கல்லூரி மாணவரும், திவ்யா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறுதியாக இளவரசன் தற்கொலை செய்துகொண்டதோடு அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இதே போல் ஒரு காதல் கலப்பு திருமண ஜோடி நேற்று தஞ்சை வந்தனர். காதல் கலப்பு திருமணம் செய்த கொண்ட ஜோடியின் பெயர் செந்தமிழ்ச்செல்வி (வயது 19) விமல்ராஜ் (27).

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆகும்.

காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சை மாவட்ட பொலிஸ் அதிகாரி தர்மராஜனிடம் ஒரு மனு கொடுத்தனர்.

பின்னர் செந்தமிழ்ச்செல்வி செய்தியாளர்களிடம் “எனது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே உள்ள மணக்கரை கிராமம் ஆகும். எனது தந்தை பெயர் செல்வராஜ். நான் கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.

எனக்கும், உடையார்பாளையம் தென்கச்சி பெருமாள்நத்தம் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் விமல்ராஜ் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகிய இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தோம்.

எங்களது காதல் விவகாரம் எனது பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் சாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் வீட்டைவிட்டு வெளியேறி விமல்ராஜிடம் சென்றுவிட்டேன். அவர் என்னை கடந்த மாதம் 25 ம் திகதி பதிவுத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து நானும் என் கணவர் விமல்ராஜும் திருப்பனந்தாள் வடக்குத் தெருவில் வசித்து வருகிறோம்.

இந்த நிலையில் என்னை விமல்ராஜ் கடத்தி சென்று விட்டதாகக்கூறி என் தந்தை ஜெயங்கொண்டம் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். என்னை யாரும் கடத்தவில்லை. நான் விருப்பப்பட்டுதான் விமல்ராஜுடன் வந்து அவரை திருமணம் செய்து கொண்டேன். எனக்கும், என் கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கும் என் சமூகத்தை சேர்ந்தவர்களும் கட்சி பிரமுகர்களும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.

எங்களை பிரிக்க பார்க்கிறார்கள். எனவேதான் நாங்கள் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல்துறையினரிடம் மனு கொடுக்க வந்தோம். மேலும் பொய் புகார் அடிப்படையில் எனது மாமனார், மாமியார் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் பதிவு திருமணம் செய்து கொண்டதற்கான ஆவணங்களை பொலிசாருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

இந்த நிலையில் நானும், எனது கணவரும் தங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட திருப்பனந்தாள் பொலிஸ் நிலைய எல்லைக்குள் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்கியும், நாங்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டி இருப்பின் அதனை தாங்கள் உத்தரவுப்படி தங்கள் அதிகார வரம்பில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கிட உத்திரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

இலங்கை இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் கைது..!

arrest1இலங்கை இளைஞர்கள் இருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீசா காலாவதியான நிலையிலும் பிரித்தானியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் உணவகம் ஒன்றில் சட்டவிரோதமாக வேலை செய்துவந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ் இலங்கை இளைஞர்களை வேலைக்கமர்த்தியிருந்த உணவகத்தின் உரிமையாளருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

ஷேவாக், காம்பீர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா??

virender

இந்திய அணியின் மூத்த வீரர்கள் ஷேவாக், காம்பீர் இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவிற்கு வந்துவிட்டதாக கருத்துக்கள் பரவி வரும் நிலைமையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் தேர்வு குழு தலைவருமான கிரண்மோரே கூறும் போது,

ஷேவாக், காம்பீர், ஜாகீர்கான் ஆகியோரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடவில்லை. உள்ளூர் போட்டியில் அவர்கள் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய கிரிக்கெட்டில் தற்போது ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. திறமையாக விளையாடினால் மட்டுமே அணியில் இடம் பெற முடியும். உடல் தகுதி இல்லாத ஷேவாக், காம்பீர், ஜாகீர்கான் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களது தங்கள் திறமையை வெளிப்படுத்தி முன்னேறுவார்கள் என்று கூறினார்.

இந்திய அணிக்கு ரோகித்சர்மா, ஷிகார்தவான் தற்போது தொடக்க வீரர்களாக உள்ளனர். இருவரும் நன்றாக ஆடுவதால் ஷேவாக், காம்பீர் ஆகியோர் அணியில் இருந்து தொடர்ந்து ஒரங்கட்டப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ போனில் மின்சாரம் தாக்கி இளம் பெண் மரணம்..!

iphoneசீனாவில், ஐ போனில் மின்சாரம் தாக்கி,இளம் பெண் பலியானார். சீனாவின்,உய்குர் பகுதியைச் சேர்ந்தவர் மா, 23. இவர்,சீனாவின் விமான சேவை நிறுவனத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்து,பின் ராஜினாமா செய்தவர்.

மா தன், ஐ போனை, சார்ஜ் செய்வதற்காக, மின் இணைப்புடன் இணைத்திருந்தார். அப்போது, அதில் அழைப்பு வரவே, மின் இணைப்பைத் துண்டிக்காமல்,அப்படியே பேசினார். அப்போது, எதிர்பாராதவிதமாக, மின்சாரம் பாய்ந்ததில், அதே இடத்திலேயே,மா இறந்தார்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஐ போன் நிறுவனம், இது குறித்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என, டிவிட்டர் இணையதளத்தில், மாவின் சகோதரி தெரிவித்து உள்ளார். இது குறித்து, வருத்தம் தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனம், எல்லாவிதமான விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும்,மின்சாரம் பாய்ந்தது தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், தெரிவித்து உள்ளது.

ஆர்யாவுடன் கும்மாளமிட்ட அனுஷ்கா!!

Anushka and aarya

சிங்கம் 2 வெற்றியைக் கொண்டாட சூர்யா கொடுத்த விருந்தில் அனுஷ்கா ஆர்யாவுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்டாராம்.
சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானத்தை வைத்து ஹரி இயக்கிய சிங்கம் 2 வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றியை கொண்டாட கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சூர்யா விருந்து கொடுத்தார். விருந்திற்கு பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.

விருந்திற்கு இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குனர்கள் லிங்குசாமி, கௌதம் மேனன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், நடிகர்கள் பிரபு, தனுஷ், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா ஆகியோர் வந்திருந்தனர்.

இந்த விருந்தில் கலந்து கொள்ள அனுஷ்கா ஹைதராபாத்தில் இருந்து வந்திருந்தார். வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பமான விருந்து மறுநாள் காலை வரை நடந்துள்ளது.

விருந்து தொடங்கியதில் இருந்து முடியும் வரை அனுஷ்கா ஆர்யாவின் கையை பிடித்துக் கொண்டே சுற்றினாராம். மேலும் ஆர்யாவுடன் சேர்ந்து அதிர வைக்கும் ஆட்டமும் போட்டாராம். அவர்களுடன் சேர்ந்து லிங்குசாமியும் டான்ஸ் ஆடினாராம்.

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு – சாட்சியாகிறார் டிராவிட்..!

ipl

ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஸ்ரீநாத், அஜித் சாண்டிலா, அன்கித் சவான் ஆகியோர் கடந்த மே மாதம் 16-ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பல சூதாட்ட தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி பொலிசார் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ராஜஸ்தான் ரோயல்ஸ்அணியின் தலைவர் ராகுல் டிராவிடிடம் விசாரணை நடத்த பொலிஸ் அதிகாரிகள் குழு கடந்த 10-ம் திகதி பெங்களூர் சென்றது.

அவர்கள் டிராவிட்டின் வாக்கு மூலத்தை பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலம் சூதாட்ட வழக்கிற்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் ராகுல் டிராவிட் அரசுத் தரப்பு சாட்சியாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பட்டி உப்டோ தற்போது தென்னாபிரிக்காவில் உள்ளார். அவர் இந்தியா திரும்பியதும் அவரும் அரசு தரப்பு சாட்சியாக சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவர் கூட்டாளி சோட்டா சகில் உள்பட பலரின் பெயர் இடம் பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் 12 ஜோதி லிங்க தரிசனம்..!

பிரம்ம குமரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18-07-2013 முதல் 21-07-2013 வரை 12 ஜோதி லிங்க தரிசனம் இடம்பெறும்.

வவுனியா சுத்தானந்த இந்துளைஞர் சங்க கலாச்சார மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் இந்நிகழ்வானது குறித்த நான்கு நாட்களிலும் காலை 8.30 மணி முதல் இரவு 8 மணிவரை இடம்பெறும்.

2
1

அவுஸ்திரேலியாவுக்கு 60 பேரை அனுப்பி வைத்த மூவர் கைது..!

arrest1சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு உதவிய குற்றசச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திக்வெல்ல பிரதேசத்தில் வைத்து இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாவனல்லை, நீர்கொழும்பு மற்றும் நகுலுகமுவ பிரதேசங்களில் வசித்து வருபவங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 30 லட்சம் ரூபா பெறுமதியான காசோலை மூன்று, கடவுச் சீட்டு மற்றும் உபகரணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் கடந்த 5ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு 60 பேரை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழு இலங்கை வருகை..!

euஒருவார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தூதுக்குழுவொன்று நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய காரியாலயம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவின் தலைவரான ஜீன் லம்பேர்ட் தலைமையிலான மேற்படி தூதுக்குழுவினர் தங்களின் ஒருவார கால விஜயத்தின்போது வட புலத்திற்கு பயணிக்கவுள்ளதுடன் அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் ஏனைய குழுக்களின் முக்கியஸ்தர்களையும் சந்தித்து உரையாடவுள்ளனர். எதிர்வரும் செப்டெம்பரில் வட மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டே அவர்களின் இந்த விஜயம் அமைந்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

மேற்படி தேர்தலுக்கான ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்களை வரவழைப்பது குறித்து அரசாங்கம் இன்னமும் அறிவிக்காத நிலையில் இலங்கையில் நடைபெற்றிருந்த இறுதிக்கால கட்ட யுத்தம் குறித்து தேசிய மட்டத்திலான விசாரணைக்கு மேலாக சுயாதீனமான விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் இந்த வருட முற்பகுதியில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் மற்றும் ஊடகவிலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் பற்றிய முறைப்பாடுகளையிட்டு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் விசனமடைந்துள்ளதுடன் அவற்றுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அது ஊக்கப்படுத்துவதாகவும் ஜீன் லம்பேர்ட் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் இலங்கையில் பொறுப்புக் கூறும் கடப்பாடு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான தேவைப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தும் வகையில் ஐரோப்பிய பாராளுமன்றம் தீர்மானமொன்றையும் நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் வீசா அனுமதி வழங்குமாறு பிரிட்டன் கோரிக்கை..!

britanஇலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்ல பொதுநலவாய செயலகத்தின் அனுமதியை பெறுகின்ற எல்லா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலருக்கு இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி வழங்காது என்று கவலைகள் எழுப்பப்பட்டிருந்த சூழ்நிலையிலேயே, பிரிட்டனின் துணை வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

´சில ஊடகவியலாளர்கள் இலங்கை செல்வதற்கு வீசா கிடைக்காது என்பது போலத் தெரிவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பற்றி நாங்கள் அறிந்துள்ளோம். பொதுநலவாய செயலகத்தின் அனுமதியைப் பெறுகின்ற எல்லா ஊடகவியலாளர்களும் மாநாட்டுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவேண்டும் என்றும் அவர்கள் அங்கிருக்கும்போது இலங்கையில் சுதந்திரமாக பயணிக்கக் கூடுமாக இருக்க வேண்டும் என்றும் ஐக்கிய இராச்சியம் அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறது´ என்றார் பிரிட்டனின் துணை வெளியுறவு அமைச்சர்.

´ஊடகவியலாளர்களுக்கு பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்வதற்கான அனுமதி கிடைத்துவிட்டால் அவர்களுக்கு வேண்டும் என்று அனுமதி கொடுத்தால் அவர்களுக்கு மாநாட்டை நடத்தும் நாடு வீசா வழங்குவது என்பது தானாக நடக்கவேண்டிய ஏற்பாடு. இதில் முடிவுகளை எடுக்க வேண்டியது காமன்வெல்த் செயலகம் தான்´ என்றும் அலிஸ்டர் பர்ட் கூறினார்.

இதற்கிடையே, சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி என்பது முன்னைய பொதுநலவாய மாநாடுகளின்போது கடைப்பிடிக்கப்பட்ட பொதுநலவாய செயலகத்தின் ஒழுங்குவிதிகளின் படியே நடக்கும் என்று இலங்கை அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.

மாநாட்டை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், பொதுநலவாய செயலகத்தின் அனுமதியைப் பெற்ற சர்வதேச ஊடகவியலாளர்களின் வீசா விண்ணப்பங்களை பரிசீலிப்பது இலங்கை அரசின் பொறுப்பு என்று பொதுநலவாய மாநாட்டின் ஊடக விவகாரங்களுக்குப் பொறுப்பான இலங்கை அதிகாரி சரித்த ஹேரத் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(BBC)