சவுதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில், விசா காலாவதியாகியும் அந்நாட்டில் தங்கியிருந்த சுமார் 3000ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட குழுவாகவே இவர்கள் வந்துள்ளதாகவும் இன்னும் பலர் வரக்கூடும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
விசா காலாவதியாகி சவுதியில் தங்கியுள்ளவர்கள் சவுதியின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குச் சென்று தங்களை பதிவு செய்து தண்டனை இன்றி நாடு திரும்ப முடியும் என பொது மன்னிப்பு காலம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்பும் இலங்கை பணியாளர்கள் மீண்டும் சவுதிக்கு தொழில் புரிய செல்ல முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரசியன் பொது மன்னிப்பு காலம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் நவம்பர் 4ம் திகதிவரை அமுலில் இருக்கும்.
வவுனியா பூந்தோட்டம் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவத்தனர்.
பூந்தோட்டத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த முற்சக்கரவண்டி முன்னால் சென்ற துவிச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட பொது வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக முற்சக்கரவண்டியில் சென்ற நால்வரும் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியும் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளருக்கு முன்னாள் பிரதம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தகுதியானவரே என வவுனியா கல்விச்சமூகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
வட மாகாணசபைத் தேர்தல் இன்று உள்நாட்டிலும் சர்வதேச ரீரியிலும் கண்காணிக்கப்பட்டு வரும் ஓர் விடயமாக காணப்படுகின்றது. இந்நிலையில் பல வாத பிரதி வாதங்களுக்கு மத்தியில் தமிழ் தேசிக்கூட்டமைப்பு முன்னாள் பிரதம் நீதியரசரை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தமையை வரவேற்கின்றோம்.
முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்வதற்கு முதலில் பிரேரிக்கப்பட்டிருந்த மாவை சேனாதிராஜா மற்றும் சி.விவிக்னேஸ்வரன் ஆகிய இருவரும் இரு வேறு துறைகளில் சிறந்தவர்களாகவே உள்ளனர்.
குறிப்பாக மாவை சேனாதிராஜா தமிழர்களின் நீண்ட கால அரசியல் செயற்பாட்டின் முன்னின்றுழைத்த ஜனநாயகவாதியாவார். தமிழர் விடுதலைக்கு பல தியாகங்களையும் விட்டுக்கொடுப்புக்களையும் செய்து இன்றும் சிறந்த நிலையில் உள்ள அரசியல்வாதியாகவே தமிழர்கள் மத்தியில் கணிக்கப்படுபவர்.
இந்நிலையில் சி.வி.விக்னேஸ்வரன் இன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்ப்பதற்காக முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய ஒருவராக கருதப்படுபவர்.
சட்டத்தில் தன்னிறைவு கண்ட அவர் வட மாகாணத்தின் முதலமைச்சர் என்ற நாற்காலிக்கு பொருத்தமான புத்திஜீவியாவார். எனவே தமிழ் தேசிக்கூட்டமைப்பு அவரை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்தமையை வவுனியா கல்விச்சமூகம் வரவேற்கின்றது.
இந் நிலையில் வவுனியாவின் புத்திஜீவிகள் குழுவென்ற போர்வையில் சிலர் தமது அரசியல் வளர்ச்சிக்காக மனித உரிமை காப்பாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு அவரை விமர்சனம் செய்வதற்கு தகுதியானவர்களாக கருத முடியாது.
இதேவேளை சிலர் தாமாக அமைத்துக்கொள்ளும் குழுக்களுக்கு சமூகத்தின் நன் மதிப்பான பெயர்களை சூட்டி எவ்வித பதிவுகளும் இன்றி அறிக்கைகளை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியியல் குழப்பமான நிலையை தோற்றுவிப்பதை வவனியா மாவட்ட கல்விச்சமூகம் என்ற ரீதியில் நாம் ஏற்றுக்கொள்ளாததுடன் கவலையும் அடைகின்றோம் என தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக இளம் வீரர் தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உப தலைவராக லஹிரு திரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மத்தியூஸுக்கு இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் உரிய நேரத்திற்கு பந்துவீசி முடிக்காததால் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலால் இப்போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகக் கூடிய பாதிக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் சந்தானம் இருக்கிறார். அவர் இருந்தால்தான் படம் ஓடுகிறது என்ற தயாரிப்பாளரும், இயக்குநரும் நினைக்கிறார்கள்.
இதனால் சந்தானத்தின் கால்ஷீட் டயரி நிரம்பி வழிகிறது. ஒருநாளைக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கி வந்தவர் “25 நாட்கள் கால்ஷீட், 5 கோடி ரூபாய் சம்பளம், படம் முழுக்க வரவேண்டும் என அதிரடி வேட்டையைத் தொடங்கி உள்ளார்.
இருந்தாலும் சந்தானத்தின் கால்ஷீட்டுக்காகத் தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள் ஏராளம். படத்தின் ஹீரோவை முடிவு செய்வதற்கு முன்பு சந்தானத்திடம் கால்ஷீட் வாங்கி விடுகிறார்கள்.
கால்ஷீட் வாங்கும்போது படத்தின் கதையைச் சொல்ல வேண்டுமல்லவா? அப்படி படத்தின் கதையைக் கேட்கும் சந்தானம், இந்தக் கதையில் அந்த ஹீரோ நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்கிறாராம்.
இப்படித்தான் “மிர்ச்சி” சிவா – தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள “யா யா” படத்துக்கு சந்தானத்திடம் கதை சொன்னார் ராஜசேகரன். இந்தப் படத்தில் யார் ஹீரோ என சந்தானம் கேட்க, சிவகார்த்திகேயனை கேட்கலாம் என நினைத்திருக்கிறேன் என்றிருக்கிறார் ராஜசேகரன். அவரை விட “மிர்ச்சி” சிவா இந்தக் கதைக்கு பொருத்தமா இருப்பார் என சந்தானம் சொல்ல, இப்போது அந்தப் படத்தில் “மிர்ச்சி” சிவா தான் ஹீரோ.
இப்படி விஷால், சிம்பு என இன்றைய முன்னணி இளம் ஹீரோக்களுக்கான கதையை முடிவு செய்வது சந்தானம் தானாம்.
குறிப்பாக, ஒன்றிரண்டு படம் இயக்கியவர்களும், புதிதாக இயக்க வருபவர்களும் சந்தானம் சொல்வதைத்தான் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்களாம்.
ரஷ்யாவில் பெண் வீராங்கனைகள் 101 பேர் நடுவானில் இருந்து குதித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளனர். ரஷ்யாவின் “பேர்ல்ஸ் ஒப் ஸ்கைடைவர்ஸ் என்ற பராசூட் வீராங்கனைகள்” அணியின் கேப்டன் இரினா சினிட்சினா என்பவர் சாக நிகழ்ச்சியின் போது உயிரிழந்தார்.
இவரின் நினைவாக ரஷ்யாவை சேர்ந்த 101 பெண் வீராங்கனைகள் நடுவானில் இருந்து குதித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளனர். விமானத்தின் மூலம் நடுவானுக்கு சென்ற வீராங்கனைகள் 101 பேரும் அங்கிருந்து குதித்து பூ வடிவில் கீழே இறங்கினர்.
இதனை பார்த்து கொண்டிருந்த அனைவரும் சந்தோஷத்தில் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.101 பெண்கள் விண்ணில் பூ வடிவில் பாராசூட் மூலம் பறந்தது அந்நாட்டின் புதிய தேசிய சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வைரவர்புளியங்குளம் கதிரேசன் வீதியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்துள்ளார். பாடசாலை வான் ஒன்றுடன் முச்சக்கர வண்டியொன்று மோதியமையலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
வவுனியா சர்வதேச பாடசாலையிலிருந்து சிறுவர்களை ஏற்றி வந்த வாகனமே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது. இவ்விபத்தினால் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளதோடு முச்சக்கரவண்டி சாரதியும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
அதிஷ்டவசமாக பாடசாலை சிறுவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாராவது பணக்காரர் ஒருவர் என்னைத் தத்தெடுக்க முன்வந்தால் சினிமாவை விட்டே விலகிக் கொண்டு குடும்பம் குழந்தை என்றிருந்துவிடுவேன். இப்படிச் சொல்லியிருப்பவர் இயக்குநர் செல்வராகவன்.
13 ஆண்டு திரை வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் அவரது உடல்நிலையும்தான் இப்படி அவரைச் சொல்ல வைத்திருக்கிறது.
சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு என் அடுத்த படம் பற்றி நிறைய பேர் கேட்கிறார்கள். அடுத்து நான் என் தம்பியுடன் சேர்ந்து படம் பண்ணலாம். அல்லது ராணாவுடன் இணையலாம்.
ரொம்ப நாளாக தாமதமாகிக் கொண்டிருக்கும் என் இந்திப் படத்தைத் தொடங்கலாம். ஏன் நான் இந்த சினிமாவை விட்டே கூட விலகலாம். என் உடல்நிலை சரியில்லை. அதனால்தான் ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப மெதுவாகச் செய்கிறேன்.
குடும்பத்தோடு நிறைய நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. என் மகள் என்னை வீட்டைவிட்டு நகரவிடமாட்டேன் என்கிறாள். யாராவது பணக்காரர் ஒருவர் என்னைத் தத்தெடுத்துக் கொண்டு, எனது கடன்களை செட்டில் செய்ய ஒப்புக் கொண்டால் நிச்சயம் சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தோடு செட்டிலாகி இன்னும் குழந்தைகள் பெற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
பாவம் இவரைப் போன்ற ஏழையை தத்தெடுக்க யாராவது பணக்காரர்கள் முன்வருவார்களா??
இங்கிலாந்தில் தானியங்கி கார்கள் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதால் விரைவில் அவற்றை கிராமப் புற சாலைகளில் பயன் படுத்த திட்டமிட்டுள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தைத் தடுக்கும் வகையிலும் பட்டரி வாகனங்கள் மற்றும் தானியங்கி வாகனங்களைப் பயன் படுத்த முடிவு செய்துள்ளது இங்கிலாந்து அரசு.
இத்தகைய கார்களை அதிகப்படுத்துவதன் மூலம் விபத்துகள் தவிர்க்கப் படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் முயற்சிக்கு தக்கபடி, ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், ஜப்பானின் சர்வதேச வாகன உற்பத்தி நிறுவனமான நிசானுடன் இணைந்து இந்த தானியங்கி காரை வடிவமைத்துள்ளனர்.
சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள அறிவியல் பூங்கா சாலையில் இதன் சோதனை ஓட்டம் நடை பெற்றது. சோதனை ஓட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த தானியக்கி கார்களை போக்குவரத்து நிறைந்த தெருக்களில் ஓட்டிப்பார்ப்பதற்கு இங்கிலாந்து நாட்டின் போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது.
முதற்கட்டமாக கிராமப்புறம் மற்றும் புறநகர் சாலைகளில் இந்த கார்கள் ஓட்டப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட பாதையை இத்தானியங்கி கார்களில் பதிவு செய்து விட்டால் போதுமானது. அவை தொடர்ந்து அதே பாதையில் இயங்கும். ஆனால், தற்போதைக்கு சோதனை ஓட்டத்தின் போது பாதுகாப்பிற்கு ஒரு டிரைவரும் உடன் செல்வார் எனத் தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனியின் நண்பர் சந்தோஷ் லால் இன்று காலை மரணம் அடைந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனியின் நெருங்கிய நண்பர் சந்தோஷ் லால். இவரிடமிருந்து தான் டோனி ஹெலிகொப்டர் ஷாட்டை கற்றுக்கொண்டார்.
இவருக்கு கடந்த வாரம் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து ராஞ்சியில் உள்ள குருநானக் மருத்துவமனையில் கடந்த 12ம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள் கணைய வீக்கம் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட லால் இந்திரபிரஸ்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லண்டனில் விடுமுறைக் கழித்து வரும் டோனி லாலின் நிலையறிந்து அவரின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த லால், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.
கவிஞர் வாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்டத் தட்ட நாற்பது நாட்களாகிவிட்டது. இதில் சுமார் முப்பது நாட்களுக்கு மேலாக அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.
கடந்த ஜுன் 8ம் திகதி இயக்குனர் வசந்த பாலனின் “தெருக்கூத்து” படத்திற்காக அவர் பணியாற்றினார்.
இதன்பொருட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கூடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவர் சுமார் ஏழு மணி நேரம் அங்கு அமர்ந்து படம் குறித்தும், எடுக்கப்பட்ட விதம் குறித்தும் பேசியபடியே பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தாராம்.
அன்றிரவே அவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வாலி. நுரையிரல் தொற்றுதான் காரணம் என்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். இரண்டொரு நாளில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிறப்பு வாட்டுக்கு மாற்றப்பட்டார்.
அதன்பின்னர் மீண்டும் அவருக்கு உடல்நிலை மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். சுமார் முப்பது நாட்களுக்கும் மேலாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். இடையில் நடிகர் கமல் ஹாசன் மருத்துவமனைக்கு வந்து வாலியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
“விஸ்வரூபம் 2 படத்திற்கு ஒரு பாடல் எழுதணும். நாங்க வெயிட் பண்ணிகிட்டு இருக்கோம். அவரை சீக்கிரம் அனுப்பி வைங்க” என்று வாலியின் காதில் படும்படி மருத்துவரிடம் கூறிவிட்டு சென்றார் கமல்.
ஏ.ஆர்.ரஹ்மானும் வாலியை சந்திக்க வந்திருந்தார். இந்த நிலையில் நேற்றிரவு கவிஞர் வாலியின் உடல்நிலை மோசமானது. உடனடியாக அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வாலியின் உடல்நிலை பற்றி அறிந்த திரையுலகம் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
லண்டனை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் தொடர்ந்து 26 மணி நேரம் துடுப்பெடுத்தாடி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இவர் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்திலேயே இந்த சாதனையை புரிந்துள்ளார்.
அல்பி ஷாலி, எனும் இவர் திங்கட்கிழமை அன்று காலை 6.45 மணிக்கு துடுப்பெடுத்தாட தொடங்கி செவ்வாய் அன்று காலை 8.45 மணிக்கு சாதனையை நிறைவு செய்தார்.
நியூ காஸில் பல்கலைகழகத்தில் பட்டபடிப்பை முடித்துள்ள அல்பி ஷாலி, இந்த சாதனையை முடித்த அடுத்த நிமிடம் தரையில் மயங்கி விழுந்தார். 26 மணி நேரம் தொடர்ந்து துடுப்பெடுத்தாடுவதற்கு சுமார் 200 பந்துவீச்சாளர்களை சந்தித்த ஷாலிக்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் சில பந்துகளை வீசினார்.
இதற்கு முன்னர் 25 மணிநேரம் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜேட் சைல்ட் என்பவர் சாதனை புரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி நடிப்பில் இந்தியாவின் முதல் முழுநீள மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாரான கோச்சடையான் படம் கைவிடப்பட்டுள்ளது என்றால் எப்படி இருக்கும்?
பணம் போட்ட தயாரிப்பாளர்கள், வேலை செய்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் முக்கியமாக ரஜினியின் இலட்சக்கணக்கான இரசிகர்கள்… எல்லோருக்கும் எவ்வளவு பெரிய அதிர்ச்சி.
ஆனால்,படம் வெளிவரப் போவதில்லை, அதுதான் உண்மை என கோச்சடையான் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோச்சடையான் பிரமாண்டமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் ஆரம்பிக்கப்பட்டது. லண்டன் சென்று படப்பிடிப்பு நடத்தினர். அங்கு எடுத்தக் காட்சிகள் சரிவராமல் கேரளாவில் உள்ள மோகன்லாலின் ஸ்டுடியோவில் சில காட்சிகளை படமாக்கினர்.
மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்துக்கான வசதிகள் மோகன்லாலின் ஸ்டுடியோவில்தான் உள்ளது, தமிழகத்தில் இல்லை.
சென்ற வருடம் தீபாவளிக்கு படம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. ரஜினி டப்பிங் பேசினார் கடலில் டால்பின்களுடன் சண்டை போடுகிறார் என சில துணுக்கு செய்திகளுக்கு அப்பால் கோச்சடையான் நிலவரம் யாருக்கும் தெரியவில்லை.
இந்த வருட தொடக்கத்தில் கான் படவிழாவில் கோச்சடையான் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்றனர். ட்ரெய்லரும் தயாரானது. ட்ரெய்லரைப் பார்த்த ரஜினி கடும் அப்செட்.
அவர் எதிர்பார்த்த தரத்தில் ட்ரெய்லர் இல்லை. சர்வதேச திரைப்பட விழாவில் அதனை வெளியிடுவது சரியல்ல என்று ட்ரெய்லரை மேம்படுத்த கூறிவிட்டார்.
இதுவரை எடுத்தக் காட்சிகள் ரஜினியை திருப்திப்படுத்தவில்லை. இதே தரத்துடன் படத்தை வெளியிட அவருக்கு விருப்பமும் இல்லை என கூறப்படுகிறது. அதனால் படம் யாருக்கும் சொல்லாமல் கைவிடப்படலாம் என கிசுகிசுக்கிறார்கள்.
கோச்சடையானுக்கு ஒரு ரஜினி படத்துக்கான கோடிகள் கொட்டப்பட்டிருக்கிறது, ரஜினி, சௌந்தர்யா போன்றவர்களின் கனவு, இரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படம்.
கோச்சடையான் வெளியாக வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும் எதிர்பார்ப்பும். ஆனால் கோச்சடையானின் இன்றைய நிலை அதற்கு மாறாக இருப்பதுதான் உண்மை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
கயானாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 37 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது
மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன்படி கடந்த 14ம் திகதி இடம்பெற்ற முதல் போட்டியில், அப்ரிடியின் சிறப்பான ஆட்டத்தால் 126 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது பாகிஸ்தான் அணி.
இந்தப் போட்டியில் அப்ரிடி 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு ஏழு விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.
இந்தநிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற 2வது போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களைக் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் துடுப்பாட்டத்தில் டேரன் பிராவோ 54 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
233 என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சார்பில் நசீர் ஜாம்ஷெட் 54 ஓட்டங்களையும், உமர் அக்மல் 50 ஓட்டங்களையும் விலாசினர்.
முதல் போட்டியில் அசத்தியதால் அப்ரிடி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் வெளியேறினார்.
இறுதியாக 47.5 ஓவர்களில் 195 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுக்க வெற்றி மேற்கிந்திய தீவுகள் வசமானது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி, மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்கு வழிவகுத்த சுனில் நரைன் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்படி ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.
இசை இரசிகர்களுக்கு இது நிச்சயம் நல்ல செய்தியாகத்தான் இருக்கும். ஆம் இந்திய சினிமா இசையின் ஜாம்பவான்கள் இளையராஜாவும் ஏ ஆர் ரஹ்மானும் இணைந்து ஒரு பாடலை உருவாக்கப் போகிறார்கள்.
இது படத்துக்காக அல்ல இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட. இந்தத் தகவலை தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவர் சி கல்யாண் தெரிவித்தார்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக இந்தப் பாடல் இடம்பெறவிருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள்.
இருவருமே இந்தக் கோரிக்கையை புன்னகையுடன் கேட்டுக் கொண்டாலும், இன்னும் அதுகுறித்து உறுதியான பதிலைச் சொல்லவில்லையாம்.
இதுகுறித்து கல்யாண் கூறுகையில், “பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜாவும், ஏ.ஆர் ரஹ்மானும் இந் நிகழ்ச்சிக்கென சிறப்பான ஒரு பாடலை இசையமைக்க இருக்கிறார்கள். இதுகுறித்து இருவரும் இன்னும் உறுதி செய்யவில்லை.
ஆயினும், விரைவில் அந்த உன்னதமான பாடலைக் கேட்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதி நாளன்று இந்தப் பாடல் அரங்கத்தில் நிகழ்த்தப்படும்,” என்றார்.
அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி வாரத்திற்கு ஒருமுறை தங்களது இரத்தத்தை தங்களது ஜோடியுடன் பரிமாறிக் கொள்வதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் அரோ டிராவென் 38 வயதான இவர் அண்மையில் ஒரு சமூக இணையதளம் மூலம் லியா பெனின்காப் என்னும் 20 வயது பெண்ணை சந்தித்தார்.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இந்நிலையில் தங்களது உறவை அடுத்த கட்டதிற்கு கொண்டு செல்ல நினைத்த இவர்கள் ஒருவரின் இரத்தத்தை மற்றொருவர் குடிக்க தொடங்கினர். இவர்கள் இருவரும் தங்களது இரத்தத்தை ஒருவருக்கு ஒருவர் மாற்றி குடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
வாரத்தில் ஒரு முறையாவது இதுபோன்று இரத்தத்தை பரிமாறிக் கொள்ளும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தெரிவித்த இந்த ஜோடி இதுபோன்று இரத்தம் குடிப்பது எங்கள் இருவரது நட்பையும் மிகவும் நெருக்கமாக்குகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது இப்படி செய்வதை நாங்கள் வழக்கமாக கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளனர்