மீனவர்களுக்கு கட்டாயக் காப்புறுதி – இல்லையேல் கடலுக்குள் செல்ல முடியாது..

fisherman

இலங்கையின் தென்பகுதி மற்றும் தென் மேற்குக் கரையோரங்களில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை, கடற்காற்று காரணமாக 48 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் காப்புறுதி செய்யாமல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, சீரற்ற காலநிலையின்போது காணாமல் போயிருப்பவர்களில் 17 பேரைக் கண்டு பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் மீனவர்கள் காப்புறுதி செய்திருப்பதாகவும், இது தென்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதாகவும் மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் பெனடிக்ற் சகாயநாதன் மிராண்டா கூறுகின்றார்.

அண்மையில் வீசிய கடும் காற்று மற்றும் சீரற்ற கடல் நிலை காரணமாக பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் உயிரிழந்திருப்பதையடுத்தே, மீனவர்கள் கட்டாயம் காப்புறுதி செய்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருப்பதாகவும் மிராண்டா தெரிவித்தார்.

காப்புறுதி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கடற்தொழில் திணைக்களம் இந்த காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. வருடாந்தம் 750 ரூபா மற்றும் 1500 ரூபா என இரண்டு வகையாகப் பணம் செலுத்த வேண்டிய வகையில் வைத்திய தேவைக்கான கொடுப்பனவு, உயிரிழப்புக்கான கொடுப்பனவு என்ற வகையில் இந்தக் காப்புறுதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் மன்னார் கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் மிராண்டா கூறினார்.

இருந்த போதிலும் யுத்த மோதல்கள் தீவிரமாக இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்வாதார முயற்சிகள் இன்னும் சீராக இடம்பெறாத காரணத்தினால், வறுமை காரணமாக மீனவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே காப்புறுதி செய்திருகின்றார்கள்.

வறுமை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் தமது பகுதியில் காப்புறுதி செய்து கொள்ள முடியாதிருப்பதாக முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளரான சிவராசா கிருபாகரன் கூறுகின்றார்.

-BBC தமிழ்-

 

கோட்டபாய ராஜபக்ஷ்வை கொல்ல முயன்ற 6 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.

குண்டொன்றை வெடிக்க வைத்து பாதுகாப்புச்செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ்வை கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் 6 பேரையும் கொழும்பு சிரேஷ்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்ணிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் உரிய பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சந்தேகநபர்களை நீதவான் ஜூன் 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறுவோம்- குமார் சங்கக்கார..

Kumar Sangakkara

சம்பியன்ஸ் A குழுவில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்று இலங்கை அணியின் அனுபவ வீரர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்துடன் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது .

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இது குறித்து சங்கக்கார கூறியதாவது: நான் விளையாடிய மிகச் சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று. இந்த சதம் அணியின் வெற்றிக்கும், அரை இறுதி வாய்ப்பை தக்கவைக்கவும் உதவியதில் கூடுதல் மகிழ்ச்சி. ஜெயவர்தன சிறப்பாக ஒத்துழைத்தார். கடைசி கட்டத்தில் குலசேகர அதிரடியாக விளையாடி எனக்கு நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொண்டார். ஸ்வான்,ப்ரோட் ஓவர்களில் அடித்து ஆடியது ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக்கியது.

அடுத்து நடப்பு சம்பியன் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள கடைசி ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம். அந்த போட்டியில் வென்று அரை இறுதிக்கு முன்னேற முடியும் என நம்புகிறேன். இவ்வாறு சங்கக்கரா கூறியுள்ளார்.

எதிர்வரும் 17ம் திகதி இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதிபெறும்.

~கேசா~

 

அரையிறுதியில் தென் ஆப்ரிக் அணி..

south africa

மேற்கிந்திய தீவு , தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது . நேற்று நடைபெற்ற இப்போட்டி, கனமழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. தலா 31 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தனர். நாணய சுழற்சியில் வென்றமேற்கிந்திய தீவு அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது .

தென் ஆப்ரிக்க அணி 31 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி 26.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்ளஸ் லூயிஸ் முறைப்படி ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் தென் ஆப்ரிக்கா அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

ஏற்கனவே B குழுவிலிருந்து இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

~கேசா~

 

கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!!

பொதுவாக கடல் உயிரினங்களான மீன்- நண்டு போன்றவற்றை பார்த்தவுடன் நம்மில் பலருக்கு நாக்கில் எச்சில் ஊரும். ஆனால் இங்கு தட்டில் படைக்கப்பட்டிருப்பவை உணவுகள் அல்ல. ஓவியங்கள் என்றால் நம்ப முடிகிறதா?

உயிரோட்டமான ஓவியங்கள் மனித கண்களை ஏமாற்றுவதில் முக்கியமானவை. சிங்கப்பூரை சேர்ந்த கெங்லே என்ற கலைஞர் இதுபோன்ற ஓவியங்களி வரைவதையே தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். அவரின் ஓவியங்களில் சில உங்களின் பார்வைக்கு!!

 

a1 art-2 art-3 art-4 art-5 art-6 art-7

கின்னஸ் புத்தகத்தில் இலங்கை மூதாட்டியின் பெயர்..

guiness

இலங்கையைச் சேர்ந்த சேர்ந்த 116 வயது மூதாட்டியை உலகின் மிகவும் வயதான மனிதராக கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது.

உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா (Jiroemon Kimura) கடந்த 12ம் திகதி மரணமானதையடுத்தே, இலங்கையைச் சேர்ந்த அப்புலானந்த உக்கு உலகின் மூத்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அப்புலாந்த உக்கு என்ற இந்த மூதாட்டி கேகாலை மாவட்டத்தில் இல.82 ஏ, புலத்கமுவ, மாவனல்ல என்ற இடத்தில் வசித்து வருகிறார்.இவர் 1897ம் ஆண்டு ஓகஸ்ட் 22ம் திகதி பிறந்தவர். இவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் – 977960037V ஆகும்.

இவருக்கு எட்டு பிள்ளைகளும் 80இற்கும் அதிகமான பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவரையடுத்து, உலகின் அடுத்த வயதான நபராக ஜப்பானின் மிசாகா ஒகாவா ( Misaka Okawa) இருந்து வருகிறார், அவர் 1898இல் பிறந்தவர்.

 

ஆலய உடைப்பை கண்டித்து யாழில் பேரணி செல்ல பொலிஸார் அனுமதி மறுப்பு

hindu

யாழில் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்து நடைபெற இருந்த பேரணி பொலிஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் கைவிடப்பட்டுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினால் இன்று காலை 9.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட இருந்த பேரணிக்கு பொலிஸார் அனுமதி மறுத்ததால் அப்பேரணி கைவிடப்பட்டது.

அண்மைக்காலமாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் ஆலயங்களில் உள்ள பெறுமதி மிக்க பொருட்கள் சூறையாடப்பட்டமை என்பவற்றை கண்டித்தே இப் பேரணி நடைபெற இருந்தது.

பேரணியை கைவிட்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் யாழ். அரச அதிபர் ஊடாக ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்க யாழ் செயலகத்திற்கு சென்றிருந்தனர். அங்கு அரச அதிபரோ மேலதிக உதவி அரசாங்க அதிபரோ இல்லாத காரணத்தால் அங்கிருந்த பதவி நிலை அதிகாரி ஒருவரிடம் மகஜரை கையளித்து சென்றுள்ளனர்.

 

 

நண்பன் மனதில் காதல் உள்ளது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது??

friendship

காதல் என்ற உணர்வு எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் வரா வேண்டிய நேரத்தில் மட்டும் சரியாக வந்துவிடும். அவ்வாறு காதல் வந்து விட்டால் சிலர் கண்மூடித்தனமாக காதலிப்பார்கள். அதிலும் பெண்களை விட ஆண்கள் காதலில் அதிகம் மூழ்கி விடுவார்கள். பெரும்பாலான ஆண்கள் காதலை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.

அதற்கு பதிலாக உணர வைப்பார்கள். அதில் ஆண்கள் கில்லாடிகள். அதிலும் நட்புறவில் ஆரம்பித்து தான் காதலானது மலர ஆரம்பிக்கும். அவ்வாறு நட்பில் இருக்கும் போது காதல் வந்தால் சில ஆண்கள் வாயில் சொல்வதை விட, உணர்ச்சியின் மூலம் வெளிப்படுத்துவார்கள்.

குறிப்பாக இந்த மாதிரியான செயலில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் காதலில் சிக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு சிக்கிக் கொள்வதை விட அதனை வெளியே சொல்லாமல் அதற்கான செய்கையை மட்டும் வெளிப்படுத்துவார்கள். அந்த மாதிரி உங்கள் நண்பன் காதலை வைத்துக் கொண்டு பழகுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?படித்து பாருங்கள்.

* ஆண்கள், நண்பர்களாக இருக்கும் போது செய்யும் போனை விட காதல் வந்த பின்னர் அடிக்கடி போன் செய்வார்கள்.

* நட்பாக பழகும் போது வெளியே அழைத்தால் வராமல் காரணம் சொல்லும் ஆண்கள் காதல் வந்துவிட்டால் ஒரு நாள் கூட பிரிந்திருக்க முடியாத நிலையில் விடுமுறை நாட்களில் தேடி வந்து வெளியே செல்லலாம் என்று அழைப்பார்கள்.

* பிறந்த நாள் வந்தால் எதிர்பார்க்காத வகையில் நீண்ட நாள் ஆசையாக மனதில் வைத்திருக்கும் பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பார்கள்.

* அடிக்கடி கோபப்படுவார்கள். உதாரணமாக, ஒருநாள் அவர்களை பார்க்க முடியாதவாறு வந்தாலோ அல்லது வெளியே எங்கேனும் செல்வதாக இருந்தாலோ அதனை அவர்களிடம் சொல்லாமல் சென்றால் கோபத்துடன் அக்கறையாக பேசுவார்கள்.

* அடிக்கடி வீட்டிற்கு வந்து குடும்பத்தினரிடம் அக்கறையாக பேசி அனைவரது மனதிலும் நல்ல இடத்தைப் பிடிக்க முயற்சிப்பார்கள். அதிலும் உங்களால் செய்ய முடியாதவற்றையும் அவர்கள் கஷ்டப்பட்டு செய்து முடிப்பார்கள்.

* எப்போதும் “உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்” என்று சொல்வார்கள். அதிலும் அப்போது தான் அவர்களை விட்டு வந்திருப்பீர்கள். அந்த நேரம் இதைச் சொல்வார்கள். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி உன்னைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்று சொல்வார்கள். இதுப் போன்று பல உள்ளன.

உங்கள் நண்பன் இதுப் போல் நடக்கிறார்களா? அப்படியெனில் அவர்களிடம் வெளிப்படையாக கேளுங்கள்.

நட்பிலும் இத்தகைய கோபம், அக்கறை, பரிசு போன்றவை இருக்கும். ஆனால் காதல் இருந்தால்,எமக்கே நம்ப முடியாதவாறு சிறிய விஷயங்களுக்கு கூட உணர்ச்சிவசப் பட்டு பேசுவார்கள். எனவே வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு நடப்பது நல்லது.

 

 

 

எஸ்.ஆர்.எம்(SRM) பல்கலைக்கழகத்தில் திரைப்படப்பாடல்கள் எழுத புதிய பட்டயப்படிப்பு..

srm

கவிதை எழுதும் திறமை கொண்டவர்கள் திரைப்படப் பாடல் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே திரைப்படப் பாடல் இயற்றுநர் என்ற புதிய பட்டயப்படிப்பை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் சிவாஜிகணேசன் திரைப்படக்கல்லூரியில் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்கிறது.

உலகில் முதன் முதலாக ஒட்டுமொத்த உலகின் அத்தனைக்கோடித் தமிழ்த்திரை ரசிகர்களும் ரசிக்கும் ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் படைப்பது.. திரைத்துறையின் இருபதுக்கும் குறைவான பாடலாசிரியர்களே. காரணம் வசப்பட்ட படைப்புச் சூட்சுமம்.எனவே பாடல்கள் எழுத பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் பிரியன் முயற்சியில்.. ஒருங்கிணைப்பில்.. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.. உலக வரலாற்றில் முதல்முறையாக.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).

 

 

 

காதலை விட வாழ்க்கை பெரிது.. ஷாருகான்

sharuk

மும்பை நடிகை ஜியா கான் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருகான் காதலுக்காக உயிரை நீத்துக் கொள்வது தவறு என்று வலியுறுத்தியுள்ளார். 25 வயதான ஜியா கான் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு பொலிவூட் ஒட்டுமொத்தமாக வருத்தமும் இரங்கலும் தெரிவித்தது. இந்த நிலையில் ஜியா கானின் தற்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஷாருக் கான். இதுகுறித்து ஷாருக் கான் கூறியிருப்பதாவது…

காதலை விட வாழ்க்கை பெரியது காதலை விட வாழ்க்கைதான் முக்கியமானது பெரியது.

ஒவ்வொருவருக்கும் காதல் குறித்த கருத்துக்கள் இருக்கலாம். காதல் என்பது சர்வதேச விஷயம்.

நான் கூட காதலராக நடித்தவன்தான் நான் கூட பல படங்களில் காதலராக நடித்தவன்தான். ஆனால் அதெல்லாம் மற்றவர்கள் எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசி நடித்த நடிப்பு. ஆனால் என்னைப் பொறுத்தவரை காதலை விட வாழ்க்கைதான் பெரியது, முக்கியமானது.

தைரியமாக சந்தியுங்கள் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கடினமான சூழ்நிலைகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அதை தைரியமாக சந்திக்க வேண்டும். வாழ்க்கையை மதிக்க வேண்டும்.

நம்பிக்கையை விடாதீர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க முயற்சிக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை வேண்டும். நம்பிக்கையை எந்தக் கட்டத்திலும் விட்டு விடக் கூடாது என்றார் ஷாருகான்.

 

 

மேலும் 41 இலங்கை அகதிகள் இன்று நாடு கடத்தல்..

aus

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற மேலும் ஒரு தொகுதி இலங்கை அகதிகள் இன்று நாடு கடத்தப்படுவதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

41 இலங்கை அகதிகள் இவ்வாறு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஒகஸ்ட் தொடக்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் 30வது அகதிகள் விமானம் இதுவாகும்.

குறித்த காலத்தில் 1247 அகதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதுடன் அதில் 1035 பேர் சுய விருப்பின் பேரில் நாடு திரும்பியவர்களாவர்.

 

சென்னையில் இருந்து வந்த இலங்கையர் உடல் முழுதும் தங்கம்!

gold

இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வந்த இலங்கையர் ஒருவரின் உடலில் 32 தங்கத் தகடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு சுங்கப் பிரிவினர் அவரை கைது செய்தனர்.

அதன்பின் சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட போது உடம்பில் 32 தங்கத் தகடுகள் இருப்பது தெரியவந்ததாக சுங்க வருமான பிரிவு பணிப்பாளர் தெரிவித்தார்.

வத்தளை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 

எண்ணெய் வழியும் முகம் உங்கள் அழகை கெடுக்கின்றதா?

oily-skin

எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவரா நீங்கள்? வெயில் உங்கள் எண்ணெய்ப் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுக்கிறதா? எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க சில குறிப்புகள்.

* வெள்ளரிக்காயை தினம் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாகக் எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச் சாறுடன் பாற் பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.

* தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

*பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் கரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும்.

* வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.

* சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து கத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய்ப்பசை நீங்கும்.

* எண்ணெய்ப் பசை சருமத்தினர் வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

*எலுமிச்சைச் சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சைச் சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

* பப்பாளிக் கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப் பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

 

 

யாழ் உடுவில் நல்லாயன் தேவாலயத்தின் மீது நள்ளிரவில் மர்மக் குழுவினர் தாக்குதல்..

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் அமைந்துள்ள நல்லாயன் தேவாலயத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு கறுப்பு உடையணிந்த 4 பேர் கொண்ட மர்மக் குழுவினர் ஆலயத்தின் உள்ளே நுழைந்து ஆலயத்தின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அங்கிருந்த சில பொருட்களையும் உடைத்து இவர்கள் நாசம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இவர்கள் நால்வரும் சிங்கள மொழியில் உரையாடல்களையும் மேற்கொண்டுள்ளனர். காவலாளிகள் சத்தமிட்டதைத் தொடர்ந்து இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை இத்தேவாலயத்தின் குருவிற்கும் தொடர்ச்சியாக இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல்கள் விடுத்து வருகின்றனர்.
தெற்கில் கிறிஸ்த தேவாலயங்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுவரும் நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளதால் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று மக்கள் அஞ்சி வருகின்றனர்.

 

43 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது..

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 43 இலங்கையர்களை இந்தோனேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இந்தோனேசியாவின் சியான்ஜுர் பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜாவா தீவின் கடல் ஊடாக அவர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கு தயாரான நிலையிலேயே அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், தற்போது அவர்கள் அனைவரும் இந்தோனேசியாவின் குடிவரவுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விமானம் மூலம் இந்தோனேசியாவுக்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்து படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

மலையகத்தில் இயற்கையின் சீற்றம் தொடர்கிறது..மண்சரிவு அபாயத்தினால் மக்கள் இடம்பெயர்வு..

கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் பழையத் தோட்டக் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் நான்காம் இலக்க தோட்டக்குடியிருப்பு மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ளதால் இந்தக் குடியிருப்பினைச் சேர்ந்த 9 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரை தற்காலிக இடமொன்றுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பெய்த கடும் மழையின் போது இந்தக் குடியிருப்புப் பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டு குடியிருப்புச் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.

இந்தக்குடியிருப்பைச் சேர்ந்தவர்களை சீன் தமிழ் பாடசாலையில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை பூண்டுலோயா ஹெரோல் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் மழையினாலும் கடுங்காற்றினாலும் தனி வீடொன்று சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.

சேத விபரங்கள் குறித்து நுவரெலியா மாவட்ட இடர்முகாமைத்து மத்திய நிலையத்தின் இணைப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை கடுங்காற்றினால் கொட்டகலை யுலிபீல்ட் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புக்களின் கூரைகள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. மேலும் சீரற்ற கால நிலையினால் டிக்கோயா காசல்ரீ தோட்டப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் மின்பாவனையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் நாவலப்பிட்டி மின் பொறியிலாளர் பகுதியில் நேற்று இரவு 11.30 மணி முதல் ஏற்பட்ட மின்சார தடை இன்று காலை 9 மணிவரை நீடித்ததால் மின்பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.