அமெரிக்காவில் தெற்கு கரோலினா அருகேயுள்ள சுமேடர் நகரை சேர்ந்த லெஸி என்ற 9 வயது சிறுமி அங்குள்ள ஒரு தனியார் பாடசாலையில் படித்து வருகிறாள்.
பிறப்பிலேயே இருதய கோளாறினால் பாதிக்கப்பட்ட இவளால் ஒழுங்காகப் பாடசாலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் இவளது பாடங்கள் பாதிக்காமல் இருக்க அவரது பெற்றோர் புதுவிதமான ரோபோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.
தற்போது அந்த ரோபோ தான் லெஸிக்கு பதிலாக பபாடசாலைக்கு சென்று பாடங்களை படித்து வருகிறது. “வி.ஜி.ஓ.” என அழைக்கப்படும் இந்த ரோபோ 4 அடி உயரமும் 18 பவுண்ட் எடையும் கொண்டது.
இதனது முகத்தில் வீடியோ ஸ்கிரீன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் கேமரா மற்றும் இண்டர்நெட் வசதியும் உள்ளது. பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் லெஸி ரோபோவை வீட்டில் இருந்த படியே கம்ப்யூட்டரில் மவுஸ் மூலம் இயக்குகிறாள்.
வகுப்பறைக்கு செல்லும் ரோபோவின் வீடியோ திரை வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் தெரிகிறது. அதே வேளையில், வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை படம் பிடிக்கும் ரோபோ அதை வீடியோவில் பதிவு செய்து வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் ஒளிபரப்பும்.
அதன் மூலம் லெஸி தனது வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களையும் பார்த்து தெரிந்து கொள்கிறாள்.இதை வைத்து வீட்டில் இருந்த படியே பாடம் படித்து பரீட்சை எழுதி வருகிறாள்.
இந்த ரோபோவுக்கு ஆடை உடுத்தி லெஸி அழகு பார்க்கிறாள். அதை தன்னுடனேயே தூங்க வைக்கிறாள். அதற்கு “இளவரசி வி.ஜி.ஓ.” என அன்புடன் பெயரிட்டும் இருக்கிறாள்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை விட விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக விராத் கோலி உருவெடுத்துள்ளார். இவரை வைத்து விளம்பரங்களை ஒளிபரப்பத்தான் இப்போது விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றனவாம். சூதாட்ட சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும் கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பரம் தேடும் விளம்பர நிறுவனங்களும் அதிகரித்தபடிதான் உள்ளது.
சமீப காலம் வரை டோணிதான் விளம்பரதாரர்களால் அதிகம் விரும்பப்பட்ட பிரபலமாக இருந்தார். ஆனால் தற்போது மெதுவாக அவரை விஞ்ச ஆரம்பித்துள்ளார் விராத் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக வர்ணிக்கப்படுபவர் விராத் கோலி இப்படிச் சொல்லிச் சொல்லியே அவரைப் பிரபலமாக்கி விட்டனர். இதனால் விளம்பரதாரர்களும் கோலி பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விராத் கோலி இடம் பெற்ற டிவி விளம்பரங்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
தற்போது விராத் கோலி 13 விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தி வருகிறாராம்.விளம்பரங்கள் மூலம் கோலிக்குக் கிடைக்கும் வருவாயும் உயர்ந்தவண்ணம் உள்ளதாம். அதாவது தற்போது அவர் ரூ. 40 கோடி வரை விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறாராம்.
கடந்தஆண்டு வரை ஒரு நிருவனத்திற்கு அவர் விளம்பரதாரராக இருக்க வருடாந்திர கட்டணமாக 3 கோடி வாங்கினார். தற்போது இது 6 கோடியாக உயர்ந்துள்ளது.டோணியை விட இளையவர் என்பதும், டோணிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் என்பதும் கோலிக்கு கூடுதல் தகுதிகளாக அமைந்துள்ளதாம்.
மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார்.
ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்தபோது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அந்தக் கட்சிக்காக நீதியின் போர்வாள் என்ற பத்திரியை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகிக் கொண்டார்.
ஆனால் வைகோ குறித்து உயர்வாகவே பேசி வந்தார் மணிவண்ணன். இயக்குநர் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தபோது அவரை ஆதரித்து நாம் தமிழர் மேடைகளில் பேசி வந்தார். தீவிர ஈழ ஆதரவாளர். பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர்.
தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை. சமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், “நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன். தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன்.
என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடிவருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக் கூடாது. என் உடம்பை தம்பி சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். என் சடலத்தின் மீது விடுதலைப் புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை,” என்று கூறினார்.
இலங்கையிலிருந்து இயங்கி வரும் இணைய தளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களுக்காக ஒழுக்க விதிகள் அறிமுகம் செய்ய உள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இலங்கையிலிருந்து இயங்கி வரும் இணைய ஊடகங்களுக்காக புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 67 இணைய தளங்கள் மட்டுமே பதிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைய தளங்களுக்கு எதிராகவோ அல்லது பதிவு செய்யப்படாத இணைய தளங்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
எனவே, இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட உள்ளது. சட்டத்தை உருவாக்கும் நோக்கில் பிரதிநிதிகள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தலைமையில் இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளது.
இத்தூதுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன். எஸ். சுமந்திரன், பொன். செல்வராஜா, செல்வம் அடைக்கல நாதன் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்கிறது.
இக் குழுவினர் இந்தியாவில் தங்கியுள்ள நாட்களில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி- இந்திய வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.
லண்டனிலும் புறநகர்ப் பகுதியிலும் 500000 லட்சம் (பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்) பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களை திருடிய திருடர்கள் தொடர்பில் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதியில் ஆசிய நாட்டுக்காரர்களின் தங்க மோதிரங்கள் கைச்சங்கிலி மாலைகள், வளையல்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் லண்டன் மாநகரிலிருந்து திருடப்பட்டுள்ளன.
கொலைக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் தலைமையில் நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பொழுது கெண்ட் மற்றும் எசெக்ஸ் பகுதிகளிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பல நகைகள் அதாவது 510 000 பவுண்ட் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டன.
லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட கைப்பை திருட்டு சம்பவங்களின் தொடர்சியாகவே இவ்வாறு நகைதிருட்டு ஆரம்பிக்கப்பட்டதாக ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட புலனாய்வு அதிகாரி ஸ்டிவொர்ட் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்
இவ்வாறு நகைகளை திருடிய இத்திருடர்கள தங்களுடைய ஓய்வுக்கால வருமானத்திற்காக இந்நகைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்திருப்பார்கள் என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், கைப்பற்றப்பட் இந்நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். நீங்கள் உங்களுடைய நகைகளை சரிவர அடையாளம் கண்டிருப்பீர்களாயின் கெண்ட் பொலிஸ்நிலை தொலைபேசி 101 இலக்கத்துடன் தொடர்புக்கொள்ளவும் என்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு குறித்து இந்தியா மீது தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.
நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்லவிருக்கும் இவ்வேளையிலேயே இந்தியா மீது தமது அதிருப்தியையும் கவலையையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்று மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா மற்றும் பா. அரியநேந்திரன் ஆகியோர் இந்திய உதவி வீட்டுத் திட்டம், அண்மையில் இந்து ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைகள் உட்பட மாவட்டத்தில் தற்போதைய நிலைகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
இந்திய வீட்டுத்திட்டம் எல்லைகளில் சிங்களக் குடியேற்றத்துக்கு வழி செய்கிறது
போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவினால் அறிவிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில் இடம்பெயராமல் தமது கிராமத்திலே வாழ்ந்த சிங்கள குடும்பங்களும் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல எல்லைகளில் அத்து மீறிய சிங்களக் குடியேற்றத்திற்கும் இந்த வீட்டுத் திட்டம் உதவுவதாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் இங்கு கூறினார்.
ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடக்கிய குழுவினாலேயே பயனாளிகள் தெரிவு இடம்பெறும் என்ற உறுதி மொழியை இந்திய வழங்கியிருந்ததாக கூறும் அவர் தன்னைப் பொறுத்தவரை இந்தியாவின் செயற்பாடுகள் இரட்டை வேடமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் இந்தியா மீது கடும் விமர்சனங்களை முன் வைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.
சீனாவுக்கு எதிராக இலங்கையைத் திருப்திப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்தியா மாத்திரம் வீடுகளை வழங்கவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளும் வீடுகளை வழங்கி வருகின்றன. எந்த வித அரசியல் தலையீடுகளுமின்றி பயனாளிகளுக்கு அவை வழங்கப்படுகின்றன. ஆனால் இந்திய வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் அதற்கு மாறாகவே உள்ளன. சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவு காரணமாக இலங்கையை திருப்திபடுத்தும் வகையிலேயே இந்தியா நடந்து கொள்கின்றது. இந்தியாவின் உறுதிப்பாடற்ற நிலை காரணமாகவே ராஜீவ் – ஜே. ஆர் ஒப்பந்தம் என கூறப்படும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தற்போது பாதுகாக்க முடியாமல் திண்டாடி கொண்டிருக்கின்றது என யோகேஸ்வரன் கூறினார்.
இது தான் சார்ந்த கட்சியின் கருத்து அல்ல என்றும் மக்களால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் வெளியிடப்பட்ட தனது கருத்து என்றும் அவர் கூறினார்.
அதே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தற்போது நடைமுறையிலுள்ள 13வது அரசியல் யாப்பு திருத்தத்தில் இலங்கை அரசு கொண்டுவரவுள்ள மாற்றங்கள் மற்றும் அதன் மூலம் மாகாண சபைக்குரிய அதிகாரங்களை நீக்குதல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இந்தியவுடன் ஆராய்வதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி பயணமாகவுள்ள இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஆ.ம. சுமந்திரன், பொன். செல்வராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் இடம்பெறுகின்றார்கள்.
புது டெல்லியிலிருந்து கிடைத்த அழைப்பின் பேரில் செல்லும் இக்குழுவினர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு தரப்பு பேச்சுக்களில் கலந்து கொள்வார்கள் என தெரியவருகின்றது.
இயக்குனர் மணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பிற்கு காரணமே இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
பாரதிராஜாவிடமிருந்து வந்து மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குனர்கள் இருவர்தான். ஒருவர் கே.பாக்யராஜ். மற்றவர் மணிவண்ணன். இதை பலமுறை பாரதிராஜாவே கூறியுள்ளார். மணிவண்ணன் மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் வேகத்துக்கு படப்பிடிப்பில் யாராலும் ஈடு கொடுக்க முடியாது.
அதே நேரம் மிக இளகிய மனம் படைத்தவர். தன்னிடம் பழகிய அனைவரிடமுமே வெளிப்படையாக நடந்து கொள்பவர்.
எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருந்தாலும் தான் பெரிதும் மதிப்பவர்கள் தன்னை அவதூறாகப் பேசினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். ஆயிரம் கருத்து பேதங்கள் இருந்தாலும், தான் மதிக்கும் ஒருவரை எப்போதும் மரியைதைக் குறைவாக அழைத்ததில்லை மணிவண்ணன்.
ஈழப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதியை தீவிரமாக விமர்சித்தாலும் அவரை எப்போதும் தலைவர் கலைஞர் என்றே குறிப்பிட்டு வந்தார்.
இயக்குனர் பாரதிராஜா மீதும் மணிவண்ணனுக்கு வருத்தங்கள் உண்டு. அவர் தன்னை நடத்திய விதம் அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மணிவண்ணன் எள்ளலுடன் பேசினாலும், “பாரதிராஜா என் தகப்பனைப் போன்றவர். அவரில்லா விட்டால் இன்று திரையுலகில் நான் இல்லை. என்னை இரண்டாம் முறை ஈன்றவர். அவருக்கு என் மீது அன்பிருக்கிறதோ இல்லையோ, எனக்கு எப்போதும் உண்டு. நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால்கூட மன்னிச்சிடுங்கப்பா” என்று வெளிப்படையாகப் பேசியவர் மணிவண்ணன்.
ஆனால் பாரதிராஜாவுக்கோ அந்த பெருந்தன்மை துளியும் இல்லை. தன்னைவிட 12 வயது இளையவரான மணிவண்ணன் பற்றி பாரதிராஜா சமீபத்தில் ஆனந்த விகடனில் எழுதியிருந்ததைப் படித்த அத்தனைப் பேருமே முகம் சுளித்ததோடு பாரதிராஜாவை சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர்.
அத்தனை கேவலமான எழுத்து. இதைப் படித்த மணிவண்ணன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவரிடம் பலரும் கருத்துக் கேட்க முயன்றனர். கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது அவரது அலைபேசி. ஆனால் அவர் யாருக்கும் பதிலோ விளக்கமோ சொல்லவில்லை. ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரை இந்த மனஅழுத்தமே கொன்றுவிட்டது என்பதுதான் பேச்சாக உள்ளது.
பாரதிராஜா விகடனில் மணிவண்ணன் குறித்து தெரிவித்தவை
“மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு.
அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம். ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம்.
அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனேனு சட்டுனு கேட்டுட்டான்.
அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். ´ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டி வெச்சுடலாம்னு அவங்க சொன்னாங்க.
ஒரு வருஷம் போனது மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்கனு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான்.
சரினு முடிவெடுத்து அந்தப் பொண்ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுண் நகை போட்டு அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன்.
அப்புறம் காதல் ஓவியம் படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன்.
நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்னு சொன்னான். உடனே மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன். மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி.
என்ன ஒண்ணு வாயைத் திறந்தா எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும். ஒரு ராஜா கதை இருக்குமே வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா.
ஆனா அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்கனு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு.
அப்பிடி மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்.- இப்படிக் கூறியுள்ளார்.
இலங்கையின் கொழும்புச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
இந்த தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர்களைப் பார்வையிடுவதற்காக அவர்களது உறவினர்கள் கொழும்பு வர பல சிரமங்களை எதிர்கொள்வதுடன் சிறைச்சாலை அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கும் அவர்களது குடும்பத்தினர் ஆளாவதாக அந்த அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
அத்துடன் இந்தக் கைதிகளின் குடும்பத்தினர் பெரும் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர் ஆகவே அந்த கைதிகளை அவர்களது குடும்பத்தினர் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.இது தொடர்பாக தாம் பல தடவைகள் நீதிமன்றங்களைக் கேட்டிருக்கின்ற போதிலும் அவை தம்மை இது தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகங்களிடம் பேசுமாறு கூறியிருப்பதாகக் கூறியுள்ள நாமல் ராஜபக்ஷ அவர்கள், ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் இந்தக் கோரிக்கைக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆகவே இது தொடர்பாக அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் வெலிங்டன் இராணுவ முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் இராணுவ முகாம், இராணுவ பயிற்சி மையம் மற்றும் 27 கிராமங்கள் உள்ளன. 7 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இராணுவ பயிற்சி மையத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு பயிற்சி பெற கடந்த 27ம் திகதி இலங்கையை சேர்ந்த விங் கமாண்டர் எம்.எஸ்.பந்தாரா தசநாயக, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திர ஹெட்டியராச்சி ஆகியோர் வந்தனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்க முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைதாகினர். இந்நிலையில், முகாமிலுள்ள இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கான 10 மாத பயிற்சி திட்டமிட்டபடி துவங்கி றடைபெற்று வருகிறது. இதற்கு இடையூறு ஏற்படாத வகையில் வெலிங்டன் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மினி பஸ், அரசு பஸ், உள்ளூர் வாகனங்கள் மட்டும் தணிக்கைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன. வெளி மாவட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடந்த பொங்கல் விழா இன்று (15.06.2013) அன்று மிகச் சிறப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதி வழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தன.
இரவு நிகழ்ச்சிகளாக “சுண்ணாகம் ஷ்ருதிலயா” இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி,கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகள் அனைத்தையும் எமது வவுனியா நெற் இணையத்தளம் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.
பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். சென்னை நெசபாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது.
மணிவண்ணன் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவர் 400க்கு மேல்திரைப்படங்களில் நடித்துள்ள தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரின் இயக்கத்தில் 45 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன.
மேலும் இவர் நடிகர் சத்தியராஜின் கல்லூரி நண்பர் ஆவார், நடிகர் சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார். மணிவண்ணன் சிறந்த இயக்குனர் மட்டுமின்றி மிகப்பெரிய நடிகராகவும் திகழ்ந்தவர்.
மேலும் ஈழ மக்களிற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறப்பு திரை உலகினருக்கு மட்டுமன்றி ஈழ மக்களுக்கும் பேரிழப்பாகும்..
வடக்கில் வன்முறைச் சம்பவங்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல்களை சுயாதீனமாக நடாத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
வடக்கு தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் கோரப்பட்டதன் பின்னரே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது குறித்து தீர்மானிக்க முடியும். வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
யார் என்ன சொன்னாலும் வட மாகாணசபைத் தேர்தலை சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயத்தை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டமை பேரதிர்ச்சி தரும் விடயமாகும் என்று கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் முகாமைத்துவ தர்ம கர்த்தாவும் எம்.பி.யுமான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஓர் ஆலயம் அமைக்கப்படுவதற்கு முன்னர் அத்திபாரம் இடப்படும். இதற்கு பிள்ளையார், வைரவர் வழிபாடு செய்யப்படுகிறது. ஆலயம் அமைக்கப்பட்டதன் பின்னர் சிவாகம முறைக்கமைய விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று பூசைகள் ஆரம்பமாகின்றன.
பூசைகள் நடைபெறும் ஆலயங்களில் திருத்தங்கள் அல்லது வேறு காரணங்களுக்காக ஆலயத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாயின் ஆகம முறைக்கு அமைய விக்கிரங்கள் பாலஸ்தாபனம் செய்யப்பட்ட பால ஆலயத்தில் (சிறு ஆலயம்) வைக்கப்பட்டு பூசைகள் செய்வதே முறையானது. நாம் விரும்பும் வேளையில் உடனே விக்கிரகத்தை எடுப்பது தேவ குற்றம் தேவ சாபம் ஏற்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக பூசை நடைபெற்று வரும் தொழிலாளர்களுக்கே அமைக்கப்பட்ட தேனி பூமாரி அம்மன் ஆலயத்தை உடனே அப்புறப்படுத்த நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளமையைக் கேள்வியுற்று அதிர்ச்சியும் கவலையும் கொண்டேன்.
நகர அபிவிருத்தி அதிகார சபையில் உள்ளவர்கள் எம்மைப் போல் மனிதர்கள் அவர்களுக்கும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. அந்த வழிபாட்டுத் தலங்களை உடனே எடு எனக் கூற முடியுமா? கடவுள் இல்லையா? இந்துக்கோவில் என்பதால் உடனே எடு எனக் கூறுவது இந்து தர்மத்திற்கு முரணானது.
ஏனைய மதங்களுக்கும் அப்படியே நகர அபிவிருத்தி புனர்நிர்மாணம் எம் எல்லோருக்கும் தேவையே. நாம் எல்லோருமே கொழும்பு நகர வாசிகளே. ஆனால் வணக்கத் தலங்கள் உடனே அப்புறப்படுத்து எனக் கூற முடியாது.
1930ம் ஆண்டு முதல் பூஜிக்கப்பட்ட புனித பூமி காலா காலத்திற்கு அமைய மாற்றங்கள் ஏற்படலாம். அதற்கும் விதி பிரமாணங்கள் உண்டு. எனவே ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அப்புறப்படுத்தப்படுவதாயின் சிவாகம முறைக்கமைய கீழ்வரும் முறைகளை அனுசரிக்க வேண்டும்.
புதிய ஆலயம் அமைக்க உகந்த உரிய இடத்தை தெரிவு செய்ய வேண்டும்.
அதிலே ஆலய அமைப்பு முறைகளுக்கு அமைய ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.
தற்பொழுது உள்ள ஆலயம் பாலஸ்தாபனஞ் செய்யப்பட்டு பாலஸ்தாபன கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும்.
புதிய ஆலயம் அமைக்கப்பட்ட பின்னர் பால விக்கிரங்கள் ஆகம முறைகளுக்கு அமைய பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் செய்து வழிபடுவதே சிவாகம முறையாகும்.
இது எல்லா ஆலயங்களுக்கும் பொருத்தமானது நினைத்த உடனே இந்த பொம்மை (விக்கிரகம்) எடுக்கப்படல் வேண்டும் என எந்த மனிதனாலும் கூற முடியாது. நாம் தேவ ஆசியை வேண்டி வழிபடுபவர்கள்.
எமது பரம்பரை வளர வேண்டுமென வழிபாடுகளை மேற்கொண்டு வருபவர்கள் எமக்குத் தேவசாபம் வேண்டவே வேண்டாம். எல்லோரும் வாழ வேண்டும் நாட்டு மக்கள் அனைவரும் அருள் பெற்ற நல்ல வாழ்வை பெற வேண்டும் என்பதையே நாம் கூறுகின்றோம்.
கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய முகாமைத் தர்மகர்த்தாவும் நாட்டுச் சுதந்திரத்திற்குத் தம்மையே அர்ப்பணித்த சேர்.பொன்னம்பலம் இராமநாதன் சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களின் உறவினரும் ஆகிய நான் கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயம் உரிய முறையில் அமைக்கப்படல் வேண்டும் என அறிவுரை கூறுகின்றேன்.
ஈழத் தமிழர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு அளித்து வருவது இலங்கை அரசை கலக்கமடையச் செய்துள்ளது என பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கொத்தலாவல இராணுவ பல்கலைக் கழகத்தில் நேற்று முன்தினம் கோத்தபாய உரையாற்றிய போது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இருப்பது, இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே தமிழக அரசியலில் இலங்கை தமிழர் விவகாரம் மிக முக்கியமான அம்சமாக இருப்பதுதான். குறிப்பாக தேர்தல் சமயத்தில் இலங்கை விவகாரம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது.
சமீபகாலமாக இலங்கை அரசை சர்வதேச தளத்தில் எதிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு நெருக்குதல் அளித்து வருகிறார். இது இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.
இலங்கையில் வாழும் சில தமிழர்கள் தங்களுக்குள்ள நெருக்கத்தின் மூலம் தமிழகம் வழியாக வெளிநாடுகளில் வாழும் தமிழர் ஆதரவு அமைப்புகள் மூலம் தனித்தமிழ் ஈழம் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஆயுதம் கடத்தப்படும் அச்சுறுத்தலும் உள்ளது. இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கத்துக்கு குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் ஆதரவு மூலம் கடல்மார்க்கமாக ஆயுதம் கடத்துவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இது இலங்கை அரசுக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் நுழைவதைத் தடுப்பதில் தீவிரம் காட்டுவதன் நோக்கமே, இத்தகையோர் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதே என்றார்.
இந்திய எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் இலங்கைக்கு மறைமுக ஆபத்தாக அமையும் என்று குறிப்பிட்டார். மிகப் பெரும் பொருளாதார வல்லரசாக சீனா உருவாகி வருகிறது. அதன் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவின் தயவை இந்தியா நாட வேண்டியிருக்கும்.அத்தகைய நிலையில் இப்பிராந்தியத்தில் உள்ள இலங்கைக்கு அது பெரும் பாதிப்பாக அமையும் என்று குறிப்பிட்டார்.
மாலைதீவில் தளம் அமைக்க நடக்கும் முயற்சி இப்பிராந்தியத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2028ஆம் ஆண்டளவில் சீனாவை விஞ்சி உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
அந்த சமயத்தில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளின் சனத்தொகையும் 145 கோடியாக இருக்கும் என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
போகப்போக சீனாவின் சனத்தொகை மெதுவாக குறைந்துகொண்டு வரும் ஆனால் இந்தியாவின் சனத்தொகையானது 2050ஆம் ஆண்டுவரை அதிகரித்துக்கொண்டே போகும் என இந்த அறிக்கை கணித்துள்ளது.
தற்போது 700 கோடியாகவுள்ள உலகின் சனத்தொகை 2050ஆம் ஆண்டளவில் 940 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பெரும்பான்மையான சனத்தொகை அதிகரிப்புக்கு வளர்ந்துவரும் நாடுகளே காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே கணிக்கப்பட்ட சனத்தொகை அதிகரிப்புகளை அதிகமான பெருக்கம் ஏற்படும் என்று தற்போது கணிக்கப்படுகிறது.