வவுனியாவில் இருந்து இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ்ப் பெண்!!

இலங்கை நீதித்துறை வரலாற்றில் இளவயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் பதவியேற்கின்றார்.

வரலாற்றில் வவுனியா மாவட்டத்தில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 33வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

மதுஞ்சளா அமிர்தலிங்கம் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வவுனியாவில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 31 வயது மாதுரி நிரோசன் தெரிவாகியுள்ள நிலையில் வவுனியாவில் இருந்து 33 வயது மதுஞ்சளா அமிர்தலிங்கம் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ள நிலையில், இளவயதில் தெரிவாகிய இருவருக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

கிரிக்கெட் போட்டியொன்றில் தமிழ் மாணவனின் வியக்க வைக்கும் சாதனை!!

கொழும்பில்..

கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் ஜெயவர்த்தன மகா வித்தியாலயத்துக்கு இடையிலான 13 வயதினருக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியொன்றில் செல்வசேகரன் ரிஷியுதன் என்ற இந்துக் கல்லூரி மாணவன் சாதனையொன்றை படைத்துள்ளார்.

ஜெயவர்த்தன மகா வித்தியாலய கிரிக்கெட் அணிக்கு எதிராக பந்து வீசிய ரிஷியுதன், 9.4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டத்தினையேனும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி அணி 126 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அதன்பின்னர் பந்துவீச்சில் இந்துக் கல்லூரியின் கையே போட்டி முழுவதும் ஓங்கிநின்றது.ரிஷியுதனின் சாதனை பந்துவீச்சினால் ஜெயவர்த்தன மகா வித்தியாலய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 28 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன் மூலம் செல்வசேகரன் ரிஷியுதன், பாடசாலைக்கு பெருமை சேர்த்தது மட்டுமில்லாமல் முதல் இன்னிங்ஸில் வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

தென்னிலங்கையில் 100 ரூபாவுக்காக சிறுமிக்கு நேர்ந்த கதி!!

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் 100 ரூபாவுக்காக சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை இங்கிரிய பிரதேசத்தில் 67 வயதான முதியவர் இந்த மோசமான செயலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

100 ரூபாய் தருவதாகக் கூறி 11 வயது சிறுமியை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்தமை தெரிய வந்துள்ளது. அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் விபத்துக்குள்ளாகி ஐவர் படுகாயம்!!

வவுனியாவில்..

வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி தேங்காய்களை ஏற்றிக்கொண்டு பயணித்த பார ஊர்தி ஒன்று மூன்று பேருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதப்பெற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் தேங்காய்களை ஏற்றி பயணித்த வாகன சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் அருகே விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இருவர் உட்பட ஜந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக வவுனியா போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் இளம் குடும்பப் பெண் மாயம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி முரசுமோட்டை 2 கட்டை கோரக்கன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் இளம் குடும்ப பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண் கடந்த (15.11.2023) ஆம் திகதி தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் தற்போதுவரை குறித்த பெண் கிடைக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு முல்லைத்தீவினை சொந்த இடமாக கொண்ட குறித்த பெண் முரசுமோட்டைப்பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் குழந்தை ஒன்று உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இவர் கடந்த நான்கு மாதங்களாக கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் கடந்த (15.11.2023) ஆம் திகதி தொழிற்சாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பெண்ணை அடையாளம் காணும் பட்சத்தில் 0766041635 தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு ஏற்படுத்தி அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாபமாக மரணம்!!

மாவனெல்லவில்..

மாவனெல்ல பிரதேசத்தில் வீட்டின் அருகே சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் லொறி மோதி உயிரிழந்துள்ளார். தஸ்வத்தை ஊடாக உஸ்ஸாபிட்டிய உதுவான்கந்த வீதியில் தஸ்வத்த பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (23.11.2023) மாலை 5.20 மணியளவில் மின்சார சபைக்கு சொந்தமான லொறியில் மோதுண்டு படுகாயமடைந்த சிறுவன், மாவனெல்ல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

உஸ்ஸாபிடிய ரிவிசந்த மத்திய பாடசாலையில் 08 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் தினுவர தஸ்வத்த என்ற சிறுவனே விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருமணத்திற்கு சென்ற இடத்தில் சோகம் : நாளை பிறந்த நாள் கொண்டாட இருந்த யுவதிக்கு நேரந்த துயரம்!!

இலங்கையில்..

கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் தார் பவுசர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதி உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

நாளை பிறந்த நாள் கொண்டாட இருந்த, சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த எஸ்.எச்.லோச்சனா கவ்யாஞ்சலி என்ற பெயருடைய 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

இவர் சிறிபுர பிரதேசத்திலிருந்து குருநாகல் பிரதேசத்திற்கு திருமண வீடொன்றிற்கு குடும்பத்துடன் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றொரு யுவதியும் அவரது பெற்றோரும் படு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைகளின் டிசம்பர் மாத விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

இலங்கையில்..

எதிர்வரும் பாடசாலை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (24.11.2023) அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சமன் பிரியா ஹேரத் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும்போதே கல்வி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை இந்த விடுமுறை வழங்கப்படுவதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் துவிச்சக்கரவண்டி மீது லொறி மோதுண்டு விபத்து : ஒருவர் பலி!!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதி நகர பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று (24.11.2023) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற லொறி – துவிச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா நகரிலிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக பயணித்த லொறியும் அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியும் நகர பள்ளிவாயிலை அண்மித்த பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வவுனியா நெடுங்குளம் பகுதியினைச் சேர்ந்த 71வயதுடைய முத்துபண்டா என்பரே உயிரிழந்தவராவார்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறி சாரதியினை கைது செய்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

உலகக்கோப்பை கிரிக்கெட்டால் பறிபோன உயிர்.. தந்தையே மகனுக்கு எமனான சோகம்!!

உத்தரப்பிரதேசத்தில்..

இந்திய மாநிலம், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்த்த போது டிவியை ஆஃப் செய்த மகனை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவருடைய மகன் தீபக். கடந்த 19 -ம் திகதி உலகக்கோப்பை இறுதி போட்டியானது, இந்தியாவுக்கும் ஆன்ஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்றது.

இப்போட்டியை கணேஷ் பிரசாத், தனது வீட்டில் இருந்த டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சாப்பிடுவதற்கு உணவு சமைத்துவிட்டு கிரிக்கெட்டை பாக்குமாறு தீபக், கணேஷ் பிரசாத்திடம் கூறியுள்ளார்.மேலும், டிவியை தீபக் ஆஃப் செய்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கணேஷ் பிரசாத் செல்போன் ஜார்ஜ் வயரால் தீபக்கின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே தீபக் உயிரிழந்தார். உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் தீபக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்த தந்தை கணேஷ் பிரசாத்தை பொலிஸார் கைது செய்தனர்.

உடல் எடையை குறைக்க மெட்டபாலிசம் நிறைந்த இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்!!

உணவுகள்..

பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது அதிக உடல் எடை தான். உடல் எடையை குறைக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் அவசியம்.

அந்த வகையில் இந்த 4 உணவுகளை அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். எடையை குறைக்க, மெட்டபாலிச சத்துக்களும் முக்கிய காரணங்காக இருக்கின்றன. இந்த சத்தினை அதிகரிக்கும் சில உணவு வகைகளை இங்கு பார்க்கலாம்.

மிளகாயில் கேப்சைசின் என்ற சத்தும், தெர்மோஜெனிக் எனப்படும் சத்துக்கள் உள்ளன. இது, நம் உடலை உஷ்ணப்படுத்தி அதிகளவிலான கொழுப்பினை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க ஏதேனும் உணவை சமைக்க நினைத்தால், அதில் கொஞ்சம் மிளகாயை சேர்த்துக்கொள்ளுங்கள்.

கிரீன் டீயில் உள்ள அதிகமான ஆண்டி ஆக்ஸிடன்ஸ் சத்துக்கள் உடலில் உள்ள மெட்டபாலிச சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.

உடலில் மெட்டபாலிச சக்தியினை அதிகரிக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். பதப்படுத்தப்படாத இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடும் போது இவை செரிமானம் ஆக கொஞ்சம் அதிகமாகவே நேரம் எடுக்கும். இதனால் உடலில் உள்ள கலோரிகள் வேகமாக குறையும்.

சிட்ரஸ் வகை பழங்கள் உடல் எடையை குறைக்க எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்டவை சிட்ரஸ் வகை பழங்களுள் உதவும். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்கையில் இந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன் இந்த வகை பழங்களை சாப்பிடுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவும்.

விதவையை திருமணம் செய்து மோசடி.. சேர்ந்து வாழ 50 பவுண் நகை கேட்டு நெருக்கடி.. பாதிக்கப்பட்ட பெண் விபரீத முடிவு!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாபு -செல்வி தம்பதியின் மகள் நந்தினி (32). இவருக்கும் முனிக்குமார் என்பவருக்கும் கடந்த 2008ல் திருமணம் நடந்தது. 13 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர்.

கடந்த 2019ல் உடல் நலக்குறைவு காரணமாக நந்தினியின் கணவர் முனிக்குமார் காலமானார். தனியார் கம்பெனியில் பணிபுரிந்த நந்தினி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாகவும் இருந்துள்ளார்.

இதனால் வங்கிக்கு அடிக்கடி சென்றுள்ளார். இந்நிலையில், கடன் வழங்கும் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் கார்த்திக் என்பவருடன் கடந்த ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, தனக்கு விதவைப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் ஆசை என்றும், பெற்றோர் ஏற்க மறுப்பார்கள் என்பதால் திருமணம் முடிந்த பிறகு பொறுமையாக சொல்லிக்கொள்கிறேன் என நந்தினியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 3.7.2023 அன்று திருவள்ளூரில் உள்ள ஸ்ரீநாகாத்தம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு 11.9.2023 அன்று திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தனது செலவுக்காக ரூ.3 லட்சம் வரை நந்தினியிடம் கார்த்திக் வாங்கி உள்ளார்.

திருமணமான ஒரே வாரத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்ற கார்த்திக், ஒரு வாரம் வீட்டிற்கு வராமல் இருந்ததால் நந்தினி அதிர்ச்சி அடைந்தார். பிறகு வீட்டுக்கு வந்த கார்த்திக், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறியதால் நந்தினி நம்பியுள்ளார்.

மேலும், பெற்றோர் தன்னை மிரட்டி கட்டாயப்படுத்தி பூர்ணிமா என்ற பெண்ணுடன் 17.9.2023 அன்று திருமணம் செய்து வைத்துவிட்டனர். நான் அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த 2 மாதங்களாக இருவரும் கணவன் -மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி வேலூரில் திருமணம் செய்த பூர்ணிமா என்ற பெண்ணின் தந்தை, அண்ணன் (வேலன்) மற்றும் பலர் ஒண்டிக்குப்பத்தில் வசித்து வந்த வீட்டிற்கு வந்து நந்தினியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் கார்த்திக்கை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

அப்போது 50 சவரன் நகை எனது பெற்றோருக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் நான் உன்னுடன் வாழ்வேன் என்று சொல்லிவிட்டு சென்றதால் நந்தினி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு, தன்னை பதிவு திருமணம் செய்துவிட்டு, வேறோரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டதும், வரதட்சணையாக 50 சவரன் கொடுத்தால் சேர்ந்து வாழ்வேன் என்று கூறிவிட்டு சென்ற கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு நந்தினி புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த பூர்ணிமாவின் அண்ணன் வேலன் என்பவர் காவல் துறையில் பணியாற்றி வருவதால் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் நந்தினியை தரக்குறைவாக விமர்சித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்துள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த நந்தினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெளி நாட்டில் உயிரிழந்த தமிழர் : சொந்த நாட்டிற்கு உடலை கொண்டுவர தவிக்கும் குடும்பம்!!

தமிழகத்தில்..

தமிழக மாவட்டம், திருச்சியை சேர்ந்த ஒருவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்த நிலையில், சொந்த நாட்டிற்கு உடலை கொண்டு வரவேண்டும் என்று குடும்பமே தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக மாவட்டம், திருச்சியைச் சேர்ந்த தம்பதி ராஜ சேகர் (43) மற்றும் ரோஸ்லின் மேரி. இதில் ராஜசேகர் திருச்சியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சவுதி அரேபியாவில் தோட்ட வேலை செய்வதற்காக சென்றுள்ளார்.

அங்கு, ஒரு வருட ஒப்பந்தம் முடிந்த பிறகு, அதனை இரண்டு ஆண்டுகளாக புதிப்பித்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நவ.18 ஆம் திகதி வேலைக்கு சென்று அறைக்கு திரும்பும் போது சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் மோதி ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் நண்பர் ஒருவரின் மூலமாக, அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதனால், ராஜசேகரின் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது.

இதனையடுத்து, ராஜசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அவரது மனைவி, குழந்தைகள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால், இரண்டு நாள்கள் ஆகியும் ராஜசேகரின் நிலை குறித்த முழுமையான தகவல் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இதனால், தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தாலியை அறுத்தெறிந்து விரட்டியடித்த உறவினர்கள் : இளம்பெண் விபரீத முடிவு!!

ராஜபாளையத்தில்..

ராஜபாளையம் அருகே கட்டிய தாலியை அறுத்தெறிந்து காதல் கணவரை, உறவினர்கள் பிரித்து அழைத்து சென்றதால் மன வருத்தத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையத்தை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று ரகசியத் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இதையறிந்த உறவினர்கள், காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இளம்பெண்ணை விரட்டியடித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த இளம்பெண், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 24), தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்‌.

இவரும், சோழபுரத்தை சேர்ந்த மாரீஸ்வரி (வயது 20) என்பவரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாரீஸ்வரி தனியார் ஆலையில் கூலி வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில், இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பும் என பயந்த ஜோடிகள், கடந்த 15-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் வைத்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர்.

தொடர்ந்து, தம்பதிகளாக கொடைக்கானலுக்கு சென்ற காதல் ஜோடிகள் அங்கு இரண்டு நாள்கள் தங்கி இருந்துள்ளனர். இதன்பின் ஊர்திரும்பிய தம்பதியினர் சொந்த ஊருக்கு வராமல் தென்காசி மாவட்டம் பச்சேரியில் உள்ள சசிக்குமாரின் சித்தி முனியம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு உறவினர்களிடம் பேசிய சசிக்குமார், ‘நடந்த திருமணத்திற்கு பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கிவிட்டு தன் மனைவி மாரீஸ்வரியை அழைத்து செல்கிறேன். அதுவரை பாதுகாப்புக்காக இங்கேயே இருக்கட்டும்’ என கூறிவிட்டு தேவிப்பட்டினத்திற்கு திரும்பியிருக்கிறார்.

இதையறிந்த சசிக்குமாரின் பெற்றோர், மகனின் ரகசிய திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த சசிக்குமார், ‘தனது மனைவி மாரீஸ்வரியை அழைத்துவருவதற்காக மீண்டும் சித்தி வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது சசிக்குமாரை வீட்டில் வைத்து பூட்டிய உறவினர்கள், மாரீஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரை தாக்கி மாரீஸ்வரியின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்தெறிந்து வீட்டை விட்டு வெளியே துரத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடந்த விவரங்களை போன் மூலம் பெற்றோரிடம் எடுத்துக்கூறி மாரீஸ்வரி அழுதிருக்கிறார். இதையடுத்து பதறிப்போய் வந்த அவரின் பெற்றோர், மாரீஸ்வரியை சோழபுரத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

கணவரை பிரிந்து சோகத்தில் இருந்துவந்த மாரீஸ்வரி, மனம் உடைந்து பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் மாரீஸ்வரியை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காதல் கணவரை சசிக்குமாரை மீட்டுத்தரக்கேட்டு தளவாய்புரம் போலீஸில் மாரீஸ்வரி புகார் அளித்தார். அதன்பேரில் சசிகுமார் சித்தி முனியம்மாள், சித்தப்பா கனகராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.

சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி.. பள்ளியில் நேர்ந்த சோகம்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று. இந்த பள்ளியில் நவம்பர் 16ம் தேதி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

உணவு தயாரானதும் சாம்பார் பாத்திரத்தை பணியாளர்கள், மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு எடுத்து வந்து வைத்தனர். அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவிகளில், 2ம் வகுப்பு சிறுமி எதிர்பாராதவிதமாக கொதிக்கும் சாம்பாரில் விழுந்துவிட்டார்.

இவருடைய பெயர் மகந்தம்மா சிவப்பா . விழுந்ததும் கதறித்துடித்த சிறுமிக்கு 50 சதவீதம் அளவிற்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக மகந்தம்மாவை பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

முதலுதவி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருந்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில் விடுமுறையில் இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லாலாபி நடாஃப் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜூ ஜவான் இருவரையும் பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.

இவர்களுடன் பள்ளியின் தலைமை சமையலர் கஸ்தூர்பாய் தலக்கேறி என்பவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளியில் சிறுமி சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மூன்றே நாளில் காதலனுடன் திருமணம்… மணமகள் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் அசோக்குமார். இதே ஊரில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் ஒன்றாக படித்ததுடன் புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர்.

அத்துடன் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஐஸ்வர்யா பட்டியல் இனத்தை சேர்ந்தவர். ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், அதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே போல, சாதி வேறுபாடு காரணமாக அசோக்குமார் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ முடியாது என ஐஸ்வர்யாவிடம் அவரது பெற்றோர் கூறிவந்தனர்.

ஆனால், அசோக்குமாரை தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதம் பிடித்து பெற்றோரிடம் சம்மதம் வாங்கியுள்ளார். இந்நிலையில், அசோக்குமாருக்கும், ஐஸ்வர்யாவுக்கும நவம்பர் 23ம் தேதி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் ஐஸ்வர்யா கலந்து கொண்டார்.

இந்நிலையில் அசோக்குமார் வீட்டில் ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை சுப்பிரமணிக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யாவின் தந்தை கதறித் துடித்தார். சாதிப் பிரச்சினைக் காரணமாக தனது மகள் கொல்லப்பட்டதாக அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது பெற்றோர் உட்பட அவரது குடும்பத்தினர் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளக்கூடாது என மணமகன் குடும்பத்தினர் நிபந்தனை விதித்திருந்தனர். ஐஸ்வர்யாவின் ஆசை நிராசையாகக் கூடாது என்பதற்காக அதை ஏற்ற அவரது பெற்றோர், மணமகன் வீட்டிற்கு அவரது மகளை மட்டும் அனுப்பிவிட்டனர்.

இந்நிலையில், திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் திட்டமிட்டு ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்று முடிந்து 2 மணி நேரம் கழித்தே தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஐஸ்வர்யாவின் தந்தை கூறியுள்ளர்.

எனது மகள் தற்கொலை செய்யும் அளவிற்கு பலஹீனமானவள் கிடையாது என அவரது தந்தை கதறி துடித்தார். ஐஸ்வர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதையடுத்து அசோக்குமாரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற 3 நாட்களே இருந்த நிலையில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.