விமான விபத்தில் 17 நாட்களுக்கு பின் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 4 சிறுவர்கள்!!

அமேசான் காட்டில்..

கொலம்பிய அமேசான் காட்டில் விமான விபத்தில் பெற்றோர் உயிரிழந்த நிலையில் பச்சிளம் குழந்தை உட்பட 4 பேர் 17 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் மே 01-05-2023 திகதி அன்று இடம்பெற்றுள்ளது.

தற்போது, அந்த அடர்ந்த காட்டிற்குள் இருந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 11 மாத குழந்தை உட்பட 4 பழங்குடியின குழந்தைகள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ நேற்றைய தினம் (17-05-2023) தெரிவித்துள்ளார்.

இதனை, “நாட்டிற்கு மகிழ்ச்சி” என்று கூறியதோடு, இராணுவத்தின் கடினமான தேடல் முயற்சிகளுக்கு பின் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பெட்ரோ தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மே மாதம் முதலாம் திகதியன்று விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் பயணித்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் பயணம் செய்த குழந்தைகள் உயர் தப்பியுள்ளனர்.

இவர்களை, அமேசான் காட்டிற்குள் தேட, 100 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை மோப்ப நாய்களுடன் சென்றுள்ளனர். தேடுதலின் போது குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை, 3 சிறுவர்/சிறுமிகள் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் காதலர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!!

இலங்கையில்..

நாடளாவிய ரீதியில் பதிவாகும் பல்வேறு துஷ்பிரயோக சம்பவங்களை கருத்தில் கொண்டு இளம் காதலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வடமேற்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அண்மைய நாட்களில் நாடளாவிய ரீதியில் இளம் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்ததாக ஜயலத் தெரிவித்தார்.

விசேடமாக பாடசாலை அல்லது டியூஷன் வகுப்புகளுக்கு செல்வது போன்று பாவனை செய்து குருநாகல் நகருக்கு காதலர்களை தேடி வரும் பாடசாலை மாணவிகள் மீது துஷ்பிரயோக சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயலத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் குருநாகலில் இருந்து வெகு தொலைவில் வசிக்கும் மாணவிகள் எனவும், சில மாணவிகள் தமது காதலனை திடீரென அடையாளம் காணும் போது அவரின் பெயரையோ அல்லது அவர் யார் என்றுக் கூட தெரியாத அளவிற்கு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமணமானவர்களுடன் காதல் உறவு சில மாணவிகள் திருமணமான பெரியவர்களுடன் காதல் உறவில் ஈடுபடுவதாகவும், அவ்வாறானவர்களால் அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டு குருநாகலுக்கு வரும் இளம் காதலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜயலத் தெரிவித்தார்.

அதற்கமைய, குருநாகலுக்கு வரும் பாடசாலைக் காதலர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் அந்தத் தகவலை பெற்றோருக்கு தெரியப்படுத்துவதுடன் காதலர்களின் பாதுகாப்பிற்காக சோதனைச் சாவடியை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

11 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை.. இலங்கையில் பதிவான மாற்றம்!!

இலங்கையில்..

இலங்கையில், தங்கத்தின் விலையில் இன்றும்(18.05.2023) வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 11 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இன்றைய தினம்(18.05.2023) தங்க அவுன்ஸின் விலை 611,266 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,570 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 158,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,780 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,880 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 151,000 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

பேஸ்புக் மூலம் அறிமுகமான இளைஞனை சந்திக்க சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி!!

பெந்தோட்டையில்..

பெந்தோட்டை பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட இளைஞனை முதல் முறையாக நேரில் சந்திக்க சென்ற யுவதியின் லட்ச கணக்கு பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட இளைஞனின் அழைப்பின் பேரில் பெந்தோட்டை பிரதேசத்திற்கு சென்ற 20 வயது யுவதிக்கு இளைஞன் ஒருவர் ஒரு வகையான போதை பானம் குடிக்க கொடுத்துள்ளார்.

அதனை குடித்த யுவதி மகயக்கமடைந்தவுடன் அவரது 2 லட்சம் பெறுதியான தங்க சங்கிலி, பெண்டன், மோதிரம் உள்ளிட்ட தங்க நகையை திருடியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆதாவளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இந்த யுவதி, சில காலமாக கையடக்கத் தொலைபேசியில் உரையாடிய அளுத்கம கலவில பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனைச் சந்திப்பதற்காக பெந்தோட்டை பிரதேசத்தைத் தெரிவு செய்துள்ளார்.

அங்கு இருவரும் கடற்கரை அருகே சந்தித்து பேசிவிட்டு உணவகத்திற்கு சென்று அந்த இளைஞன் கொடுத்த பானத்தை குடித்து சில மணித்தியாலங்களின் பின்னர் தான் அணிந்திருந்த தங்க பொருட்கள் காணாமல் போனதை அறிந்து அந்த பெண் அங்கிருந்தவர்களிடம் உதவி கோரியுள்ளார்.

பின்னர் தனது கைத்தொலைபேசியில் இருந்த இளைஞனின் புகைப்படத்தை சுற்றியிருந்தவர்களிடம் காண்பித்துள்ளார். அவர் கலாவில பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் பெந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றதால், யுவதி பெந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தனது தாயுடன் முறைப்பாடு செய்துள்ளார். பெந்தோட்டை பொலிஸார் சம்பந்தப்பட்ட இளைஞரைக் கண்டுபிடித்து அவரது வீட்டுக்குச் சென்ற போது ​​அவர் வீட்டை விட்டு ஓடியமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பதில் அளிக்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு இளைஞனின் தந்தைக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர். சம்பவத்திற்கு முகம் கொடுத்த யுவதியின் தங்க நகைகள் அளுத்கம பிரதேசத்தில் உள்ள தனியார் அடகுக் கடையில் அடகு வைத்து பெறப்பட்ட பணத்துடன் சந்தேகநபர் வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரின் தந்தை தங்கத்தை திருப்பி தருவதாக உறுதியளித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான இளைஞரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமை : மூன்று இளைஞர்களை தேடும் பொலிஸார்.!!

குருநாகலில்..

குருநாகல் நகரிலிருந்து காத்தான்குடி செல்ல வழிதெரியாமல் நின்றிருந்த சிறுவனை மூன்று இளைஞர்கள் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் (19.05.2023) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடியில் இருந்து குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக 14 வயது சிறுவன் ஒருவர் நேற்று முன்தினம் (17.05.2023) தனியாக குருநாகல் வந்துள்ளார்.

எனினும் திரும்பிச் செல்லும் போது அவருக்குச் சிங்கள மொழி தெரியாத காரணத்தினால், மட்டக்களப்பு பேருந்துக்குப் பதில் வாரியபொலை ஊடாக அனுராதபுரம் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டுள்ளார்.

இடைவழியில் டிக்கெட் எடுக்கும் போது விடயமறிந்த நடத்துநர் குறித்த சிறுவனை யந்தம்பலாவ நகரில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். அங்கிருந்து குருநாகல் வர வழி தெரியாமல், சிங்கள மொழியும் தெரியாமல் தவித்த குறித்த சிறுவன், கடைசியில் யந்தம்பலாவை நகரில் இருந்த லீசிங் நிறுவனம் ஒன்றின் முன் நின்று கொண்டிருந்த இளைஞர்களிடம் சென்று தமிழில் வழி கேட்டுள்ளார்.

நிறுவனத்தின் உள்ளே அச்சிறுவனை அழைத்துச் சென்ற அங்கிருந்த மூன்று வாலிபர்களும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அவனை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

கடுமையான வலியுடன் பாதைக்கு வந்த சிறுவன் அங்கு வந்த முஸ்லிம் இளைஞர்களிடம் நடந்ததை விவரித்துள்ளார். அவர்கள் நகரின் ஐக்கிய வர்த்தகர் சங்கம் ஊடாக குறித்த நிதி நிறுவனத்துக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எனினும் பொலிஸார் வருவதற்கு ஏற்பட்ட தாமதத்தைப் பயன்படுத்தி சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

என் அம்மாவை கொலை செய்த மாதிரி அப்பாவையும் கொல்லுங்க.. போலிஸ் மீது புகார் தெரிவித்த சிறுவன்!!

ஐதராபாத்தில்..

விவாகரத்து கேட்டு மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது வனஸ்தலிபுரம் என்ற கிராமம்.

இங்கு ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். அங்கிருக்கும் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் இவர், உயர் நீதிமன்றத்தில் காவல் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சோபனா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த சூழலில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை ராஜ்குமார் கை நீட்டி அடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராஜ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் இரகசிய தொடர்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனாலே இவர்கள் இருவருக்குள்ளும் அடிபிடி சண்டை நடந்து வந்துள்ளது. மேலும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ராஜ்குமார் கொடுமை செய்து வந்துள்ளார். ஆனால் மனைவி சோபனாவோ விவாகரத்து கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த விவகாரம் இரு வீட்டாருக்கு தெரிந்து பெரிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே பெண் வீட்டார் பஞ்சாயத்து செய்து சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும் ராஜ்குமார் தனது மனைவியை மேலும் கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனை தனது பிறந்த வீட்டில் மனைவி சோபனா சொல்லி அழவே, அவருக்கு ஞாயம் கேட்டு, அவரது சகோதரர் ராஜ்குமார் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சண்டையிட்டுள்ளார். இதனால் பெருத்த அவமானம் அடைந்துள்ளார் ராஜ்குமார்.

இந்த ஆத்திரத்தில் வீட்டுக்கு சென்ற ராஜ்குமார், தனது மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையை அவரது 15 வயது மகன் தடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை. மாறாக சிறுவனுக்கும் காயத்தை ஏற்படுத்தி, மனைவியை தாக்கியுள்ளார் ராஜ்குமார். இதனால் பயந்து வீட்டை விட்டு ஓட முயன்ற சோபனாவை, ஆத்திரம் அடங்காமல் பின்தொடர்ந்து கத்தியை கொண்டு கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த சோபனாவின் சடலத்தை கண்டதும், ராஜ்குமார் அங்கிருந்து தப்பித்து ஓடினார். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரது 15 வயது மகன் வாக்குமூலம் கொடுத்தார். மேலும் தனது அம்மாவை கொன்றது போல், தனது அப்பாவையும் கொல்ல வேண்டும் என்று ஆக்ரோஷமாக கூறியுள்ளார் சிறுவன்.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள காவலர் ராஜ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விவாகரத்து கேட்டு மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை கொன்று விட்டேன்.. போலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் கண்ணங்காடு அருகே காதலியை கொலை செய்து விட்டு, அருகிலிருந்த காவல் நிலையத்தில் சரணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணங்காடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், ஒப்பனை கலைஞரான தேவிகா(34) என்ற பெண்ணை கொலை செய்து விட்டு, அவரது காதலன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவிலுள்ள தங்கும் விடுதியில், சரியாக மதியம் 1.30 மணிக்கு, சதீஸ் என்பவர் தேவிகாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் விடுதி அறை கதவை சாத்தி விட்டு, நேராக அருகிலிருந்த கண்ணங்காடு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இது பற்றி கண்ணங்காடு பொலிஸ் அதிகாரி பால கிருஷ்ணன் நாயர் கூறியதாவது ’ மாலை 5 மணிக்கு காவல்நிலையத்திற்கு வந்த அவர் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்’ என்றார்.

பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் தேவிகா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து குற்றவாளி விசாரிக்கப்பட்ட போது , சதீஸ் அந்த விடுதியில் சில மாதங்களாக தங்கி வந்துள்ளார்.

அப்போது கண்ணங்காட்டில் நடைபெற்ற மாநில அளவிளான ஒப்பனை கலைஞர்கள் அமைப்பினர் நடத்திய கூட்டத்திற்கு செல்லும் போது சதீஸை சந்தித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் தேவிகாவிற்கு திருமணமாக இரண்டு குழந்தைகள் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் சதீஸிக்கு கல்யாணமாகி குழந்தை உள்ளது. இதனிடையே ஒப்பனை கலைஞரான தேவிகாவும் , சதீஸும் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளனர்.

சதீஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தேவிகாவை வற்புறுத்தியுள்ளார். தேவிகா அதனை தொடர்ந்து மறுக்க, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் சதீஸ் தேவிகாவை கொலை செய்தார் என பொலிஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

3 வயதில் ஆசிட் வீச்சால் சிதைந்த முகம்..15 வயதில் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி!!

சண்டிகரில்…

3 வயதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட சிறுமி 10ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து அனைவருக்கும் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக உருவெடுத்துள்ளார்.

வாழ்க்கையில் தோல்வி அடைந்தாலோ அல்லது பாதிப்பு ஏற்பட்டாலோ வாழ்க்கை முடிந்து விட்டது என பலரும் அப்படியே வீட்டில் முடங்கி விடுகின்றனர். இந்நிலையில் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக சண்டிகரைச் சேர்ந்த 10ம் வகுப்பு சிறுமி உருவெடுத்துள்ளார்.

சண்டிகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி கஃபி. இவர் 3 வயது இருக்கும் போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மூன்று பேரால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ளார். இதில் அவரது முகம் முழுவதும் சிதைந்துள்ளது. பல மாதம் சிகிச்சைக்கு பிறகு மீண்டுள்ளார். இருப்பினும் அவரது அழகிய முகம் சிதைந்துவிட்டது.

இதனால் துவண்டு அப்படியே வீட்டில் முடங்கி விடாமல் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். பல கேலி கிண்டல்களுக்கு ஆளானாலும் படிப்பைக் கைவிடவில்லை கஃபி.

8 வயதில் ஹிசார் பார்வையற்றோர் பள்ளியில் படிக்க தொடங்கினார் கஃபி. பின்னர் சண்டிகருக்கு அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. சவால்கள் மற்றும் வளங்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும், காஃபியின் படிப்பின் மீதான ஆர்வம் ஒருபோதும் குறையவில்லை.

அவர் எப்போதும் கல்வியில் சிறந்து விளங்கினார் மற்றும் சண்டிகரில் உள்ள பார்வையற்றோர் நிறுவனத்தில் பிரிவு 26 இல் 6 ஆம் வகுப்புக்கு நேரடியாக அனுமதி பெற்றார்.

இவரின் இந்த நம்பிக்கை தான் தற்போது சிறுமி காபியை 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 95% மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடத்தை பிடிக்க வைத்துள்ளது. இதன் மூலம் சிறுமி அனைவருக்கும் நம்பிக்கையின் எடுத்துக் காட்டாக உருவெடுத்துள்ளார்.

வவுனியாவில் போரினால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நினைவு : சிங்கள மக்களும் கலந்து கொண்டனர்!!

போரினால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நினைவு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (18.05.2023) மாலை இடம்பெற்றிருந்தது. போரினால் உயிரிழந்த உறவுகளின் ஒழுங்கமைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நினைவேந்தலில்,

போரின் போது உயிரிழந்த சிங்கள, தமிழ், முஸ்ஸிம் மக்களின் நினைவாக மத்தலைவர்கள் இணைந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் ஆரம்பமாகியதுடன்,

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களது அருகேயிருந்த சுடர்களை ஏற்றியிருந்தனர். அத்துடன் சமாதானத்தினை வலியுறுத்தி மதத்லைவர்களினால் புறாக்களும் பறக்கவிடப்பட்டன

இன் நினைவேந்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.பி.நடராஜா, இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட செயலாளர் என்.கருணாநிதி,

சிவசேனை அமைப்பினர், வர்த்தக சங்க தலைவர், முச்சக்கரவண்டி சங்க தலைவர், வவுனியா கந்தசாமி கோவில் நிர்வாகத்தினர், ஐக்கிய தேசியக் கட்சியினர், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் கட்சி, இன, மத வேறுபாடின்றி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, இதில், அதிகளவிலான சிங்கள மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இனி வீட்டிலிருந்தவாறே கடவுச்சீட்டு பெறலாம் : வெளியான தகவல்!!

கடவுச்சீட்டு..

எதிர்வரும் ஜீன் மாதம் முதல், பொதுமக்கள் தங்களுக்கான கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பி வைக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமைவான கட்டணம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், வங்கிக் கணக்கில் வைப்பிலிடலாம்.

அத்துடன், பிரதேச செயலக காரியாலயங்களில், கைவிரல் அடையாளங்களைப் பதிவுசெய்ய முடியும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மூன்று நாட்களின் பின்னர், பதிவுத் தபால் மூலம், விண்ணப்பதாரரின் வீட்டுக்கே, கடவுச்சீட்டு அனுப்பிவைக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் Surprise Gift ஆல் மனைவியை இழந்த ஐரோப்பிய வாழ் கணவன்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டில் உள்ள கணவர், மனைவியின் பிறந்த நாளுக்கு அனுப்பிய ‘Surprise Gift கொடுக்கச் சென்ற இளைனுடன் குடும்பப் பெண் ஒருவர் மாயமான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

வலிகாமத்தை சேர்ந்த ஒருவர் தென்மராட்சியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து சிறிது காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மனைவியின் பிறந்த நாளுக்கு ‘சப்பிறைஸ்’ கொடுக்க விரும்பியுள்ளார்.

பின்னர் ஒரு தொகை பணத்தை அவருக்கு அனுப்பிவைத்து, மனைவியின் பிறந்த நாள் அன்று சப்றைஸ் கொடுக்குமாறு இளைஞனிடம் கணவர் தெரிவித்ததையடுத்து, இளைஞர் அவரது சென்றுள்ளார்.

அதன் பின்னர் ‘Surprise Gift Delivery’ செய்ய வந்த இளைஞனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்களின் பின் கணவன் அனுப்பிய பணத்தில் சீட்டு போட்ட காசுடன் குறித்த இளைஞனுடன் சென்ற நிலையில், நண்பரை நம்பி மனைவிக்கு ‘Surprise Gift கொடுக்க நினைத்த கணவர் கடைசியில் மனைவியை இழந்ததுதான் மிச்சம்.

வானிலை குறித்து எச்சரிக்கை.. இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

இலங்கையில்..

நாட்டில் நிலவும் கடும் வெப்பம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வடக்கு, வட கிழக்கு, வட மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில்,

உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவுவதாக வானிலை திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் போதுமானளவு நீரை அருந்துமாறும், இயலுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இயலுமானவரை வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தென்னிலங்கையில் காணாமல்போன யாழ் இளைஞன் : ஊடகங்களை நாடிய தாயார்!!

தென்னிலங்கையில்..

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பு- புறக்கோட்டையில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணாமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே காணாமல்போயுள்ளார்.

இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக (2022.10.13) அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவித்துள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார், ஏழு மாதங்களாகத் தேடியும் குறித்த இளைஞனைக் கண்டுபிடிக்க இயலாத நிலையில் ஊடகங்களை நாடுவதாகக் கூறியுள்ளார்.

குறித்த இளைஞன் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் 077-5988204, 077-5547218 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

கணவரின் சடலத்திற்கு 11 நாட்களாகியும் இறுதிக் கிரிகைகள் செய்ய முடியாமல் தவிக்கும் மனைவி!!

மஹகெதர தோட்டத்தில்..

நீர்ச்சத்து குறைபாடு மற்றும் போசாக்கின்மை காரணமாக ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 75 வயதான கணவரின் சடலம் 11 நாட்களாகியும் இறுதிக்கிரியைகள் செய்ய மனைவியிடம் பணம் இல்லாத நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

திக்வெல்ல பதிகம, மஹகெதர தோட்டத்தில் தேங்காய் உடைத்து பிழைப்பு நடத்தி வந்த புஸ்ஸல ஹேவகே வீரசேன (வயது 75) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது மரண விசாரணையின் போது, ​​அவரது மனைவி நவுருன்னகே சோமாவதி (77) கூறுகையில், தனக்கு பிள்ளைகள் இல்லை எனவும் தென்னந்தோப்பு உரிமையாளர் கொடுத்த சிறிய வீட்டில் கணவருடன் வசித்து வருவதாகவும், அயலவர்கள் தனக்கும் தனது கணவருக்கும் உணவு கொடுத்ததாகவும், தனது கணவர் பத்கம அரச மருத்துவமனையில் இருந்து மாத்தறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர், பணம் இல்லாததால் அவரை பார்க்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, கணவரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய தன்னிடம் பணம் இல்லாததால், அரச செலவில் இறுதிச் சடங்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட மாத்தறை பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி டி.டி. இடது நுரையீரலில் நிமோனியா நோயுடன் ஆஸ்துமா அதிகரித்ததன் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, அரச செலவில் சடலத்தை அடக்கம் செய்ய முடியுமா என மாத்தறை மாநகரசபை மரண விசாரணை அதிகாரி லலித் டி சில்வா பாடிகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் நிஷாதி ரஷானி மத்மியாவை கேட்டுள்ளார்.

எனினும் உயிரிழந்தவரின் மனைவி இருப்பதால், அரச செலவில் இறுதிச் சடங்குகள் செய்ய உயிரிழந்தவரின் உடலை ஏற்க முடியாது என கிராம அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்குள்ளான மனைவி கணவனின் உடலை அடக்கம் செய்ய பல்வேறு உதவியை நாடி போராடி தோல்வியடைந்துள்ளார்.

இது தொடர்பில் திக்வெல்ல பிரதேச செயலாளர் சுசந்த அத்தநாயக்க தெரிவிக்கையில், யாருமில்லாதவர்களுக்கு மாத்திரம் அரச செலவில் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள முடியும்.

மனைவி உயிருடன் உள்ளதால், கிராம அதிகாரியால் உடலை பொறுப்பேற்று அரச செலவில் இறுதி சடங்கு செய்ய முடியாது என்றும், கிராமத்துடன் சேர்ந்து அதனை செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

தென்னிலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை!!

தென்னிலங்கையில்..

மாத்தறை வெலிகம பகுதியில் ஐந்தரை வயதான மகளை சலவை இயந்திரத்தில் போட்டு தந்தை கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் திலுஷிகா லியோன் என்ற ஐந்தரை வயது சிறுமியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி பாடசாலையில் செய்த மோசமான செயல்களுக்காக அவரது அம்மா வழக்கம் சிறுமியை போல் தண்டித்துள்ளார். இருப்பினும், இந்த முறை அப்பா மகளுக்கு சிறந்த பாடம் கற்பிக்க வேண்டும் என எண்ணி சிறுமியை சலவை இயந்திரத்தில் போட்டுள்ளார்.

இதன்போது குழந்தை சத்தம் போட்டு அழுத போதிலும் தந்தை அந்த பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு நிலையில் சிறுமியின் தாய், 9 வயதான மற்றைய மகளுடன் விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரம் கழித்து, சிறுமி திலுஷிகா இயந்திரத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டாார். அப்போது, அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் “எங்களுக்கு எதிர்காலத்திலாவது கஷ்டம் வராது” என்று சந்தேகநபரான தந்தை தாயிடம் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சிறுமி திலுஷிகா இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்ததாக அயல் வீட்டுக்காரர்களிடமும், பொலிஸாரிடமும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், உயிரிழந்த சிறுமியின் அக்கா தந்தை செய்த காரியத்தை கூற உண்மை வெளிச்சத்திற்கு வந்ததாகவும், இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் மர்மமான முறையில் மரணம்!!

வெலிக்கடையில்..

கொழும்பு – வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் தங்க நகை திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி வெலிக்கடை பொலிஸாரினால் 42 வயதான ஆர்.ராஜகுமாரி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தமது வீட்டில் பணிபுரிந்த போது தங்க நகையைத் திருடியதாக குறித்த பெண் மீது தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரான சுதர்மா ஜயவர்தன வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு குறித்த பெண் வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், அவர் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்ததாக அவரின் கணவர் செல்வதுறை யேசுராஜ் குறிப்பிட்டுள்ளார். பொலிஸாரின் அறிக்கையின் பிரகாரம் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் தொடர்பில் பகிரங்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம் கடந்த 12ஆம் திகதி உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், 13ஆம் திகதி பதுளை தெமோதரையில் சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தனது மனைவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.