கைக்குழந்தையுடன் இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

அகதிகளாக..

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 08 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் நேற்று(04.07) இரவு வல்வெட்டித்துறையிலிருந்து ஒரு படகில் புறப்பட்டு இன்று(05.07) காலை 5 மணியளவில் தமிழகம் தனுஷ்கோடி பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு படையினர் இவர்களை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும் என கடலோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரையில் 103 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இலங்கையில் உச்சம் தொட்ட பொருளாதார நெருக்கடி : தங்க நகைகளை விற்க குவியும் மக்கள்!!

பொருளாதார நெருக்கடி..

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே மக்கள் தங்களிடம் உள்ள தங்க நகைகளை விற்பனை செய்வதாக அந்த சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கையும் 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக தங்க விற்பனையில் கடும் சரிவனை எதிர்நோக்கியுள்ளதாகவும், கட்டாய தேவைகளுக்காக மாத்திரமே தங்க நகை கொள்வனவில் மக்கள் ஈடுபடுவதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா கிடாச்சூரி ஸ்ரீ கண்ணகி முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா – 2022

வவுனியா கிடாச்சூரி ஸ்ரீ  கண்ணகி முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2022

 

அம்பாள் அடியார்களே!

 

இலங்கைத் திருநாட்டின் சைவசமய பாரம்பரியம் கொண்ட வவுனியா மாநகரின் கிடாச்சூரிப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள கண்ணகி ஸ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு நிகழும் மங்கள சுபகிருது வருடம் ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.2022) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11 நாட்கள் அபிஷேக ஆராதனையுடன் பூசை நடைபெறும்.

 

ஆனித்திங்கள் 27ம் நாள் (11.07.2022) திங்கட்கிழமை பெரும் பொங்கல் நடைபெறும். அன்றைய தினம் இரவு மடப்பண்டம் எடுக்கப்படும். 12.07.2022 ஆம் திகதி அதிகாலை கொடி இறக்கத்துடன் பொங்கல் நிறைவடையும் என்பதை சகல பக்த அடியார்களுக்கும் அறியத்தருளின்றோம்.

திருவிழாப் பூசை விபரம்

  • 1ஆம் திருவிழா 07.2022 வெள்ளிக்கிழமை
  • 2ஆம் திருவிழா07.2022 சனிக்கிழமை
  • 3ஆம் திருவிழா 07.2022 ஞாயிற்றுக்கிழமை
  • 4 ஆம் திருவிழா 07.2022 திங்கட்கிழமை
  • 5ஆம் திருவிழா 07.2022 செவ்வாய்க்கிழமை
  • 6 ஆம் திருவிழா 07.2022 புதன் கிழமை
  • 7ஆம் திருவிழா 07.2022 வியாழக்கிழமை
  • 8ஆம் திருவிழா 07.2022 வெள்ளிக்கிழமை
  • 9ஆம் திருவிழா 07.2022 சனிக்கிழமை
  • 10ஆம் திருவிழா 07.2022 ஞாயிற்றுக்கிழமை
  • 11ஆம் திருவிழா 07.2022 திங்கட்கிழமை பெரும் பொங்கல் அன்றைய தினம் பகல் இரவு பாற்செம்பு காவடி எடுக்கப்படும்.

குறிப்பு: அடியார்கள் விழாக்காலங்களில் வந்து அம்பாளா தரிசித்து தங்களால் இயன்ற பால், பழம், தயிர், பூக்கள், மாணலகள் மற்றும் அபிஷேகத் திரவியங்களை வழங்கி அம்பாளின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். விழாக்காலங்களில் சமய சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம் பெறும்.

 

விசேட ஒலி, ஒளி அமைக்கப்படும் நாட்களும் பகல், இரவு அன்னதானம் வழங்கப்படும்.

கிடாச்சூரி சாஸ்த்திரி கூழாங்குளம் வவுனியா.

 

யாழில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம்..

யாழ்ப்பாணம்- பொன்னாலைப் பிரதேசத்தில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் நேற்று (04.07.2022) இடம்பெற்றுள்ளது.

பொன்னாலை – சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த யசோதரன் யஸ்மிகா எனும் ஒன்றரை வயது பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த வேளை, அருகில் இருந்த 20 லீற்றர் கொள்வனவுடைய தண்ணீர் வாளிக்குள் இருந்த கரண்டி ஒன்றை எடுக்க முற்பட்டவேளை, வாளிக்குள் தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியுள்ளது.

அதை அவதானித்த வீட்டார் குழந்தையை மீட்டு மூளாய் வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனிலவு சென்ற இடத்தில் ஒரு வீடியோவால் உலகளவில் வைரலான புதுப்பெண்!!

தேனிலவு சென்ற இடத்தில்..

அமெரிக்க நடிகையும், கோடீஸ்வரியுமான அலெக்சாண்ட்ரா டாடரியோ தேனிலவு சென்ற இடத்தில் சாலையில் மேற்கொண்ட மனிதநேய செயல் மக்களின் மனதை வென்றுள்ளது.

36 வயதான அலெக்சாண்ட்ராவின் சொத்து மதிப்பு $8 மில்லியன், ஆண்ட்ரூ என்ற 53 வயது நபரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு புதுமணத்தம்பதி தேனிலவு சென்றனர்.

அங்குள்ள ஒரு பரபரப்பான சாலையில் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. அப்போது சாலைக்கு நடுவே ஆமை ஒன்று கிடந்தது, எந்த நேரத்திலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஆமை மீது ஏறி அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது.

இதை பார்த்த அலெக்சாண்ட்ரா காரில் இருந்து இறங்கி சென்று ஆமையை கையில் தூக்கினார். பின்னர் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அதை கொண்டு போய் இறக்கி கீழே விட்டார்.

இது தொடர்பான வீடியோ உலகளவில் வைரலாகியுள்ளது. இதை பார்த்த பலரும் பணமும், புகழும் பெரியளவில் அலெக்சாண்ட்ராவிடம் இருக்கிறது, ஆனால் அதை விட மனிதநேயம் அதிகம் அவரிடம் உள்ளது என பதிவிட்டுள்ளனர்.

ஆணவக் கொலையின் உச்சம் : மாப்பிள்ளையை கொன்று எரித்த மாமனார்!!

தெலுங்கானாவில்..

இந்திய மாநிலம் தெலுங்கானாவில் தனது மகளை காதலித்து திருமணம் செய்ததால், ஆத்திரத்தில் மாப்பிள்ளையை மாமனார் கொலை செய்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் போடலகொண்டப்பள்ளியைச் சேர்ந்த மென்பொறியாளர் நாராயண ரெட்டி(26), அதே ஊரைச் சேர்ந்த கந்தலா வெங்கடேஸ்வர ரெட்டியின் மகள் ரவாளியை காதலித்து வந்தார்.

ஆனால் இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் எதிர்ப்புகளை மீறி நாராயண ரெட்டி- ரவாளி ஜோடி திருமணம் செய்து கொண்டது.

அதன் பின்னர் தங்கள் மகளை வலுக்கட்டாயமாக வெங்கடேஸ்வர ரெட்டியின் தரப்பினர் தங்களுடன் கூட்டி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உதவியை நாடிய நாராயண ரெட்டி, தனது மனைவியை ஒப்படைக்குமாறு வெங்கடேஷ்வர ரெட்டியின் குடும்பத்தை கேட்டுள்ளார்.

இது குறித்து விசாரித்த நீதிமன்றம், ரவாளியை அவரது பெற்றோருடன் இருக்க அனுமதி அளித்துவிட்டது. வெங்கடேஷ்வர ரெட்டி உடனடியாக தனது மகளுக்கு வேறொரு நபருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரவாளி தனது காதல் கணவருடன் போனில் பேசிவந்துள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த வெங்கடேஷ்வர ரெட்டி, தனது உறவினர் சீனிவாச ரெட்டியை அணுகி சிலருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, நாராயண ரெட்டியை சமரசம் பேச அழைத்து மது விருந்து வைத்துள்ளார் வெங்கடேஸ்வர ரெட்டி.

அதன் பின்னர் நாராயண ரெட்டியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, ஜின்னாராம் பகுதியில் உள்ள காட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு கூட்டாளிகளுடன் வெங்கடேஸ்வர ரெட்டி தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், நாராயண ரெட்டியை காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.அப்போது நல்லுரு கிராமத்தின் புறநகர் பகுதியில் நாராயண ரெட்டியின் உடலை கைப்பற்றினர். பின்னர் வெங்கடேஸ்வர ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோரை பொலிசார் கைது செய்தனர்.

கலக்கத்துடன் கணவருக்காக காத்திருக்கும் பெண்… நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

உக்ரைன்..

உக்ரைன் தலைநகரில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் சின்னாபின்னமான வணிக வளாகத்தில் பணிக்கு சென்ற கணவருக்காக பெண் ஒருவர் கண்ணீருடன் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ள Sabina Hrytsai, அவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பதாக கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

எனது அன்பான கணவரைத் தேடுகிறேன் என குறிப்பிட்டுள்ள அவர், சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த உடை தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார். 27 வயதான Sabina Hrytsai அருகாமையில் உள்ள மருத்துவமனைகளிலும் விசாரித்துள்ளார், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. உள்ளூர் காவல்துறையாலும் இதுவரை உறுதியான தகவல் அளிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

தென்மேற்கு கீவ் நகரில் பிறந்து வளர்ந்த இருவரும் திருமணம் முடித்து, ஜூன் 11ம் திகதி தான் முதலாண்டு நிறைவடைந்துள்ளது. திங்களன்று நடந்த குறித்த தாக்குதல் சம்பவத்தில் 21 பேர் கொத்தாக கொல்லப்பட்டுள்ளதுடன், 66 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இரண்டு டசின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 4 மணியளவில் ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று தமது கணவருக்கு விடுமுறை என்ற போதும், நிர்வாகம் அழைத்ததன் பேரில் பணிக்கு சென்றதாக Sabina Hrytsai தெரிவித்துள்ளார்.

இந்த கோபத்தில் தாம் அவருடன் அப்போது சரியாக பேசிக்கொள்ளவும் இல்லை என தெரிவித்துள்ளார். ஏவுகணை தாக்குதல் சத்தம் தமக்கு கேட்டதாகவும், உடனடியாக தமது கணவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாகவும், ஆனால் முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும், அவர் உயிருடன் இருப்பார் என நம்புவதாகவும், கண்டிப்பாக அவர் திரும்பி வருவார் என எதிர்பார்ப்பதாகவும் Sabina Hrytsai உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை : கணவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

நுங்கம்பாக்கத்தில்..

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை நொளம்பூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அருந்ததி(25). கடந்த 2019ஆம் ஆண்டு அருந்ததி, சாதிக் இப்ராஹிம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தை பெற்றபின்பு கணவர் சாதிக் இப்ராஹிம் வேலை செய்ய கூறி தன்னை கொடுமைபடுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் கூறி கடந்த மாதம் 22ஆம் தேதி அருந்ததி பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து சமாதானம் ஆகி மீண்டும் அருந்ததி தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து அருந்ததி தற்கொலை செய்து கொண்டார்.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தனது மகள் அருந்ததி தற்கொலை செய்து கொண்டதாகவும், அருந்ததியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அருந்ததியின் தந்தை முருகன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியிருப்பதால் ஆர்.டி.ஓ பிரவீனா குமாரி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக அருந்ததியின் கணவரான நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சாதிக் இப்ராஹிமை (25) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாதிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வெளிநாட்டில் இருந்து வந்தவரால் யாழில் இரண்டுபட்ட குடும்பம் : மகளுடன் மாயமான தாய்!!

யாழில்..

யாழ் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான தாய் மற்றும் 18 வயதான மகளுடன் நோர்வேயிலிருந்து வந்த குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக கணவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மராட்சியில் உள்ள சமூகநிறுவனம் ஒன்றின் வெளிநாட்டு அங்கத்தவராக இருக்கும் குறித்த நோர்வே குடும்பஸ்தர் நோர்வேயில் இருந்த போது கஸ்ட நிலையில் இருந்த தனது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி வந்ததாகவும்,

தலைமறைவாகியுள்ள மூத்த மகளின் கல்வி நடவடிக்கைக்கு முழுமையான பங்களிப்பு செய்ததுடன் அவருக்கு லப்டொப் கணனியும் நோர்வே குடும்பஸ்தர் வாங்கிக் கொடுத்ததாகவும் கணவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அத்துடன் மனைவிக்கு நவீன தொலைபேசி ஒன்றை அனுப்பிய போது தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த தொலைபேசியை பறித்து விற்றபோது மனைவி தன்னுடன் முரண்பட்டதுடன் சிறிது காலம் தன்னை விட்டு பிள்ளைகளுடன் பிரிந்து இருந்துள்ளார்.

அதோடு தான் இரவில் மது போதையில் இருப்பதை காரணம் காட்டி தன்னுடன் வாழ முடியாது என அயலவர்களுக்கு கூறியதுடன் பொலிசிலும் முறையிட்டதாகவும் கணவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் நோர்வே நபர் தனது மனைவி பிள்ளைகளை வந்து சந்தித்துள்ளார். அப்போது தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவருடன் முரண்பட்டு தாக்க முற்பட்ட போது மனைவி தன்னை அடித்ததாகவும் கணவர் தெரிவித்தார்.

இதன் பின்னரே தனது மனைவி மூத்த மகளுடன் அவர் தலைமறைவாகிவிட்டார் எனவும் தற்போது இவர்கள் சிங்கப்பூர் சென்று விட்டதாக தனது இரண்டாவது மகனுக்கு அறிவித்தாகவும் கணவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். இந்நிலையில் கணவர் தற்போது தனது 15, 12 வயதான இரு ஆண் பிள்ளைகளுடன் வாழ்வதாகவும் தெரியவருகின்றது.

வாழ வழியின்றி புகையிரதத்தில் கழுத்தை வைத்து இளம் தந்தை தற்கொலை : பொருளாதார நெருக்கடியின் உச்சம்!!

மதவாச்சியில்..

மதவாச்சியில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையில்லாமல் இருந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துள்ளார்.

மதவாச்சி புகையிரதத்தில் கழுத்தை வைத்து அவர் தற்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த சுஜித் தில்ஷான் என்ற 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

குறித்த நபர் கடந்த முதலாம் திகதி இரவு 07.00 மணியளவில் வீட்டில் இருந்து எவ்வித தயக்கமும் இன்றி வந்து மன்னார் வீதி, யகாவெவ புகையிரத கடவையில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரம் சென்று புகையிரதம் வரும் வரை காத்திருந்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற புகையிரதம் எதிரே ஓடி வந்து தண்டவாளத்தில் தலையை வைத்துள்ளார். இதனால் சாரதியினால் அதனை நிறுத்த முடியாமல் போயுள்ளதாக சாரதி தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

ருக்சன்..

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று (04.07.2022) இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். இன்று மதியம் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காந்திநகர் பகுதியை சேர்ந்த ருக்சன் என்ற 33 வயது குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார். அவர் சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின் (சிறி ரெலோ) செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து காரணமாக சில மணி நேர தாமதத்தின் பின்னரே தொடரூந்து தனது பயணத்தை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டினியில் அழும் பிள்ளைகள் : வீதியில் அழுது புலம்பிய தந்தைக்கு உதவிய மக்கள்!!

பட்டினியில்..

உணவு மற்றும் பால் இன்றி தனது பிள்ளைகள் பசியில் அழுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை எனக் கூறி 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வீதியில் பதாகையை வைத்துக்கொண்டு அழுது புலம்பியுள்ளார்.

இந்த சம்பவம் ஹெம்மாத்தகம நகரில் நடந்துள்ளது. நகரில் பிரதான வீதியில் நபர் ஒருவர் அழுதுக்கொண்டிருப்பதை பார்த்த பொலிஸார், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அவருக்கு உணவு உள்ளிட்ட தேவையான பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளனர்.

ஹெம்மாத்தகம சியம்பலாவ என்ற பிரதேசத்தில் வசித்து வரும் பீ.எம்.சுசந்த குமார என்ற இந்த நபர், கட்டிட நிர்மாண தொழிலாளி எனவும் அவருக்கு 7 மற்றும் 13 வயதான ஆண் பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சீமெந்து விலைகள் அதிகரித்துள்ளதால், தனது தொழில் நின்று போயுள்ளதாக சுசந்த குமார தெரிவித்துள்ளார்.

7 வயதான மகன் பால் கேட்டு அழுகிறான். பிள்ளைகளுக்கு பால் மட்டுமல்ல குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மூன்றுவேளை சாப்பிடவும் எதுவுமில்லை. தொழில் இல்லாத என்னால், பிள்ளைகளுக்கு உணவை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

என்னை போல் பல பெற்றோர் செய்வதறியாத பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் படும் கஷ்டத்தை விபரிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

நகரின் பிரதான வீதியில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால், வீதியின் நடுவில் அமர்ந்து அழுது கொண்டிருந்த இந்த நபருக்கு விபத்து ஏதேனும் ஏற்படும் என்று பொலிஸார் தலையிட்டு அவரை வீதியோரத்தில் அமருமாறு கூறியுள்ளனர்.

அவரது கஷ்டத்தை உணர்ந்த பொலிஸார் மாத்திரமல்லது மக்களும் இன மத பேதமின்றி இந்த இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு தேவையான உணவுப்பொருட்கள், பானங்கள், மரக்கறிகள் மற்றும் தேவையான பணத்தையும் வழங்கியுள்ளனர்.

உதவிகளை பெற்றுக்கொண்ட அவர், அனைவருக்கும் நன்றி கூறியதுடன் ஹெம்மாத்தகம நகரில் தனக்கு உதவிய இந்த மக்கள் மனிதநேயத்தை அறிந்தவர்கள் எனக்கூறியுள்ளார்.

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டது : கல்வி அமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!

உயர்தரப் பரீட்சை..

2021ஆம் ஆண்டுக்கான உயிர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பான அவிறிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அளவில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (04.07) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையை ஒரு மாத காலத்திற்கு பிற்போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நடைமுறை பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை ஒரு மாத காலத்திற்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராகும் காலத்தை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் உயிரிழப்பு!!

கொழும்பில்..

கொழும்பு,ஹோமாகம – மாகமன்ன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் தரைத்தளத்தில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிகாயங்களுக்குள்ளாகி பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் வசித்து வந்த ரிதுஷி ரணசிங்க என்ற ஆறு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் ஹோமாகம மாகம்மன பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் தரைத்தளத்தில் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த ஆறு வயது குழந்தையின் தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் அறைக்குள் இருந்துள்ளதுடன், அவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது ஆறு வயது குழந்தை பொரளை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க செல்லும் போது 47 வயதான தந்தை உயிரிழந்திருந்தார். பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உயிரிழந்தவரின் மனைவியும் உயிரிழந்ததுடன், மூன்று நாட்களுக்குப் பிறகு மூத்த மகளும் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் லசந்த புத்திக 47, (தந்தை) காளிகா தேவி 35, (தாய்) மற்றும் காவிந்தி ரணசிங்க 19, (மூத்த சகோதரி) , ரிதுஷி ரணசிங்க 06 வயது ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தீக்காயங்களுக்குள்ளான ஆறு வயது குழந்தை சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதுடன், சடலத்தின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களின் உயிரிழப்புக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், வீட்டில் கொள்கலன் ஒன்றில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய பத்து வயது சிறுவன் பலி!!

யாழில்..

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை – கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் (வயது-10) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சிறுவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனை
எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெபாலசிங்கம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். சிறுவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கூடுவாஞ்சேரி..

கூடுவாஞ்சேரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஒன்பது மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 21). இவரது மனைவி கோடீஸ்வரி (வயது 21).

காதலித்து வந்த இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சய் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தினம் தோறும் குடித்துவிட்டு மனைவி கோடீஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மனமுடைந்த கோடீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்பு அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்டிஓ விசாரணையும் நடத்தப்படவுள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்ட ஒன்பது மாத கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.