வவுனியா உட்பட நாடு முழுவதும்கலைஞர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்புறுதித்திட்டம்!!

இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் பொருளாதார ரீதியான நன்மைகளை உள்ளடக்கவுள்ளதுடன்,

கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்புறுதித்திட்டம் என்பவற்றையும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி நிசாந்தி ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அமைச்சின் செயற்பாடுகள் குறித்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அமைச்சானது புதிதாக விடயப் பரப்புக்களை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அமைச்சு. அதனால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது. அதனால் உள்ள நிதியைக் கொண்டு இயலுமான வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கலைஞர்களுக்கான அடையாள அட்டை தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போதும் கூட பல பிரதேச செயலங்கள் ஊடாக கலைஞர்களுக்கான அடையாள அட்டைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அடையாள அட்டைகளை பயனற்ற அட்டைகளாக நாங்கள் கருதுகின்றோம். கலைஞர்களுக்கான அடையாள அட்டையைப் பெறும் போது அதில் ஒரு பிரயோசனம் இருக்க வேண்டும். மதிப்பும், மகிமையும் இருக்க வேண்டும்.

அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற அடையாள அட்டை பயனுள்ளதாக, புகழ் மிக்கதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதனை செப்பனிட்டு வருகின்றோம்.

குறித்த அடையாள அட்டையானது கலைஞர்களுக்கு புகழ் தரும் அதேவேளை, பொருளாதார ரீதியாகவும் நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

காகில்ஸ் அல்லது பல்பொருள் அங்காடி, வைத்தியசாலை என்பவற்றுக்கு செல்லும் போது அந்த அடையாள அட்டையை காட்டினால் அதற்கு அவர்கள் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் ஒரு கழிவு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு பெறுமானம் நிறைந்த அடையாள அட்டையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டையினை வழங்குவதற்கான தரவுகளை சேகரித்து வருகின்றோம். இலங்கையில் இருக்கின்ற அனைத்து கலைஞர்களின் விபரங்களும் தற்போது இல்லை.

கலைஞர்களின் தகவல்களைப் பெறுவதற்காக பிரதேச செயலங்கள் ஊடாக படிவம் ஒன்றை வழங்கியுள்ளோம். இரண்டு வாரங்களின் பின் தரவுத் தளத்தில் பிரவேசித்து பார்வையிட முடியும் என்பதுடன், பதிவு செய்வதற்கும் முடியும்.

தரவுத் தளத்தில் பதிவதன் மூலம் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் கலைஞர்களுக்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம்.

கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்புறுதி திட்டங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் பேசப்பட்டாலும் கூட அதனை நடைமுறைப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எங்களுக்கு கிடைத்த ஓதுக்கீடுகளுக்கு ஏற்ப அரசாங்க அதிபர்களிடம் காப்புறுதி திட்டம் வழங்கக் கூடிய கலைஞர்களை தெரிவு செய்து தருமாறு கேட்டுள்ளோம். அடுந்த நிதி ஆண்டில் இன்னும் பல வேலைத்திட்டங்களை செய்வதற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார் எனத் தெரிவித்தார்.

வவுனியா ஓமந்தை ஆரம்ப சுகாதார சேவைகள் நிலையம் பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்வு!!

ஓமந்தை வைத்தியசாலை..

வவுனியா, ஓமந்தை ஆரம்ப சுகாதார சேவைகள் நிலையம் பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஓமந்தையின் பல்வேறு கிராமங்களை உள்ளடக்கி காணப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு வைத்தியர்கள், கிராம மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கையை முன் வைத்து வைத்தனர்.

அதற்கமைவாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நிலக்சன் கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரைடாலில் குறித்த விடயத்தினை முன்வைத்து தமது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இது தொடர்பில் குறித்த கலந்துரையாடலில் ஆராய்ந்த சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், ஓமந்தை ஆரம்ப சுகாதர சேவைகள் நிலையத்தை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். அதற்கமைவாக, குறித்த வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலையாக தொழிற்படவுள்ளது.

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை : வெளியான பெண்ணின் புகைப்படம்!!

கொழும்பில்..

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த சடலம் இன்றைய தினம் பெண்ணின் கணவர் மற்றும் 2 பிள்ளைகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் மொஹமட் சாஷி மும்டாஸ் என்ற 42 வயதுடைய பெண் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கொழும்பு 10 ரம்யா பிரதேசம், மாளிகாவத்தை வீட்டு தொகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 28ஆம் திகதி இந்த பெண் தனது மருமகளுடன் முச்சக்கர வண்டியில் மாளிகாவத்தை பிரதேசம் நோக்கி சென்றுள்ளார். அன்று முதல் அவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லாமையினால் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய முச்சக்கர வண்டியில் சென்ற மற்ற பெண்ணிடம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவராகும். எனினும் தான் மோதரை பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி நடந்து சென்றதாக மருமகள் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் உண்மை தகவலை அறிய பொலிஸார் சிசிரிவி காட்சிகளை சோதனையிட்ட போது அதில் அவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகவில்லை என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் கடுமையாக சூதாட்டத்திற்கு அடிமையாகியிருந்தார் எனவும், காணாமல் போன தினத்தன்று காலை சூதாட்டக்காரர்களுடன் அவர் இருந்தார் என தெரியவந்துள்ளது.

இந்த சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சீனா முழுவதும் மீண்டும் கொரோனா அலை : கட்டுப்படுத்துவதில் சிரமம் என்கிறது சுகாதார துறை!!

கொரோனா..

சீனா முழுவதும் பரவ ஆரம்பித்துள்ள புதிய கோவிட் அலையை கட்டுப்படுத்துவது சிரமமாக இருப்பதாக சீன சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் 31 மாகாணங்களில் 19 மாகாணங்கள் முழுவதும் கோவிட் 19 புதிய அலை பரவியுள்ளது. இந்த புதிய கோவிட் அலைக்கு காரணம் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வைரஸ் திரிபுகள் என கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஹூஹான் பிராந்தியத்தை மையமாக கொண்டு கோவிட் 19 வைரஸ் பரவல் ஆரம்பித்தது. அப்போது இந்த வைரஸ் குறித்த சரியான புரிதல் இல்லாத காரணத்தினால், அதனை கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது. இதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான தொற்றாளர்களும் மரணங்களும் ஏற்பட்டதாக சீன சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி!!

மூன்றாவது தடுப்பூசி..

வவுனியாவில் சுகாதாரத் துறையினருக்கு மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் முன்னிலை பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கொவிட் தடுப்பூசி வழங்க நாடு பூராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (05.11.2021) வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

வவுனியாவில் மேலும் ஒரு ஆரம்பப் பிரிவு மாணவனுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று (05.11) உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஓமந்தை, அரசமுறிப்பு பகுதியைச் சேர்ந்த தரம் 3 மாணவன் ஒருவரின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து, மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவனை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், மாணவனுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆரம்ப பிரிவு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வவுனியாவில் 6 ஆரம்ப பிரிவு மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

எல்லப்பர் மருதங்குளம்..

வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீட்டிற்கு சென்ற அயலவர்கள் இளைஞன் வீட்டில் தூங்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதை அவதானித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், குறித்த இளைஞனின் மரணம் கொலையா, தற்கொலையா என சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நகரில் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!

வங்கி ஊழியர்கள்..

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினை சார்ந்த வவுனியா தனியார் மற்றும் அரச வங்கி ஊழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியா ஏ9 வீதி புட்சிட்டிக்கு முன்பாக இன்று (05.11.2021) மதியம் முன்னெடுக்கப்பட்டது.

அரச வங்கிகளின் கூட்டு உடன்படிக்கையினை உடனடியாக கைச்சாத்திடுக, அத்தியாவசிய வங்கிக்சேவைக்கு கூட்டு உடன்படிக்கைகள் தேவையில்லையா? ஆகிய இரு வாசகங்களை தாங்கிய தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் 30 நிமிடங்கள் இடம்பெற்றிருந்ததுடன் வவுனியா மாவட்டத்தில் இயங்கும் தனியார் மற்றும் அரச வங்கிகளின் உத்தியோகத்தர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா செட்டிக்குளத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் புகையிரத்துடன் மோதுண்டு பலி!!

செட்டிக்குளம்..

வவுனியா செட்டிக்குளம் தெற்கு பிரதேசசபைக்குட்ட மெனிக்பாம் கல்லாறு பாலம் பகுதியில் இ்ன்று (05.11.2021) காலை 8.05 மணியளவில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் புகையிரத்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனார்.

மன்னார் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் நோக்கி காலை மணியளவில் பயணத்தினை ஆரம்பித்த புகையிரதம் மெனிக்பாம் கல்லாறு பாலத்தினை அண்மித்துள்ளது இதன் போது கல்லாறு பாலத்தில் இரு இளைஞர்கள் செல்பி எடுத்துக்கொண்டிருந்துள்ளனர்.

புகையிரம் வருகின்றமையினை அவதானித்த ஓர் இளைஞன் ஆற்றினுள் குதித்ததுடன் மற்றைய இளைஞன் புகையிரத்தில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் செட்டிக்குளம் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் 21 வயதுடைய முருங்கன் பகுதியினை சேர்ந்த சுரேஸ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு!!

உக்குளாங்குளம் பகுதியில்..

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற பெண் ஒருவரிடம் சங்கிலியை அறுத்துக் கொண்டு இருவர் தப்பிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (03.11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்வதற்காக பெண் ஒருவர் சென்றுள்ளார்.

இதன்போது ஒரு மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் அந்தப் பெண்ணை ஆலயம் அருகில் வழிமறித்து ஒருவரிடைய பெயரைக் கூறி ஆலயத்தில் குறித்த நபர் உள்ளராக எனக் கேள்வி எழுப்பிய போது, அவர் பதில் அளிக்க முற்படுகையில் அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு குறித்த இருவரும் தப்பிச் சென்றுளளனர்.

குறித்த பெண் அணிந்திருந்த மூன்று பவுண் தங்கச் சங்கிலியே இதன்போது அறுத்துச் செல்லப்பட்டுன்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று!!!

கொரோனா..

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு (03.11) வெளியாகின.

அதில் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயதுடைய இரு சிறுவர்களுக்கும், பரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது சிறுவன் ஒருவருக்கும் என 4 சிறுவர்கள் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்றாளர்களை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!!

விபத்து..

வவுனியா – வைரவபுளியங்குளத்தில் இன்று (03.11.2021) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா புகையிரத நிலைய வீதியிலிருந்து குருமன்காடு நோக்கி ஒரே பகுதியால் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதிய சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி இருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் முச்சக்கரவண்டி ஒன்றில் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

வவுனியா வடக்கு வலயப் பாடசாலை ஒன்றில் இரு ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா..

வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் இரு ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 1 மற்றும் தரம் 5 மாணவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து அவர்களின் பெற்றோர் குறித்த இருவரையும் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று இன்று (03.11) அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறித்த இரு மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

6 மாதங்களின் பின் வவுனியாவை வந்தடைந்தது யாழ்தேவி புகையிரதம்!!

யாழ்தேவி..

கொழும்பு – காங்கேசன்துறை யாழ் தேவி புகையிரதம் 6 மாதங்களின் பின் இன்று (03.11) வவுனியா புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.

நாட்டில் கொவிட் பரம்பல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன்போது மாகாணங்களுக்கு இடையிலான புகையிரதப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொழும்பில் இருந்து காலை 5.55 இற்கு காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட யாழ்தேவி புகையிரதம் வடமாகாணத்தின் முதலாவது மாவட்டமாக வவுனியாவை மதியம் 12 மணிக்கு வந்தடைந்தது. அங்கிருந்து தனது பயணத்தை யாழ் நோக்கி ஆரம்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொரோனா அச்சத்திலும் தீபாவளிக்கு தயாராகும் மக்கள்!!

தீபாவளிக்கு தயாராகும் மக்கள்..

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நாட்டில் கோவிட்-19 இன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் வவுனியாவில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நகரில் புத்தாடைகள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தீபாவளி பண்டிகை நாளைய தினம் (04.11.2020) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தீபாவளி பண்டிகை புத்தாடை வியாபாரங்கள் ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

அத்துடன் கடந்த வருடம் கோவிட் – 19 அதிகரித்து காணப்பட்ட சூழ் நிலையில் குறைந்தளவு வியாபாரம் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த வருடத்தினை விட இம்முறை அதிகளவிலான மக்கள் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளிலும் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!

ஆர்ப்பாட்டம்..

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைகளுக்கு முன்னால் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டமானது கொட்டும் மழைக்கு மத்தியிலும் இன்று (03.11) மதியம் இறம்பைக்குளம் மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் சிறீராமபுரம் திருஞான சம்பந்தர் வித்தியாலயம் , தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம் , பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரி என்பவற்றில் முன்பாகவும் போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டோர் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்து வை, இலவசக் கல்வியை வியாபாரமாக்காதே, கொத்தலாவ சட்டமூலத்தை நிறுத்து,

சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்து, இலவசக கல்விக்கு 6 வீதத்தை ஒதுக்கு உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டங்களில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.