சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை என்றால் ஆபத்தான நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் ஆபத்தான மற்றுமொரு கொவிட் அலை உருவாக கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவிந்த டி செய்ஸா தெரிவித்துள்ளார்.
நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான ஒரு படியாக கொவிட் சுகாதார வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும், சரியான கட்டுப்பாடு இல்லாமல் செய்தால் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு சில சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சுகாதார வழிகாட்டுதல்களில் இருந்து விலகி சாதாரணமாக செயல்பட்டால் நாடு மீண்டும் முடக்க நிலைக்கு செல்வதனை தடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான இன்று விஜய தசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் விஜயதசமி பூஜையும், ஏடுதொடக்குதலும் சிறப்பாக இடம்பெற்றது.
கல்வி, செல்வம், வீரம் வேண்டி சரஸ்வதி, லக்சுமி, துர்க்கை ஆகிய மூன்று தேவியருக்கும் நவராத்தி பூஜை இடம்பெற்று வந்தது. அந்தவகையில் நவராத்திரி பூஜையின் இறுதி நாளான இன்று விஜயதசமி மற்றும் ஏடு தொடக்குதல் என்பன இடம்பெற்றன.
குறிப்பாக ஆலங்களில் இன்று (15.10) காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பெருமளவான மக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கினர்.
அந்த வகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, தமிழருவி சிவகுமாரன் அவர்களினால் சிறுவர்களுக்கு ஏடு தொடக்கி வைக்கப்பட்டது.
மாகாணங்களுக்கு இடையில் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மேலும் இறுக்கமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இணையவழியூடாக இன்று இடம்பெற்ற கோவிட் ஒழிப்புக்கான தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வரும் விடுமுறையுடன் ஆரம்பமாகும் நீண்ட வார இறுதி விடுமுறைகள் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான எல்லைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (15.10) மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில் இருந்து ஏ9 வீதி ஊடாக வவுனியா நகரை நோக்கி பயணித்த மகேந்திரா பட்டா ரக வாகனம் வவுனியா விவசாய பண்ணை முன்பாக பயணித்துக் கொண்டிருந்த போது கார் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டது.
இதன்போது வவுனியா நகரில் இருந் ஏ9 வீதி ஊடாக ஓமந்தை நோக்கி பயணித்த மோட்டர் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சீனி, உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியனவற்றின் விலைகள் உயரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சினி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கின் விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளைச் சீனி 130 ரூபா வரையில் உயர்ந்துள்ளதாகவும், இதனால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 150 முதல் 160 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதனால் சில்லறை விலை 200 ரூபா வரையில் உயர்வடைந்துள்ளது.
உள்நாட்டு வெங்காய உற்பத்திகள் சந்தைக்கு கிடைக்கப்பெறும் காலம் என்பதனால் இந்த மாதங்களில் வெங்காயத்தின் விலை உயர்வாகக் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு உருளைக் கிழங்கின் சில்லறை விலை 200 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாகவும்,இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கின் விலை 160 ரூபா வரையில் உயர்ந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பால், முட்டையின் விலைகளையும் அதிகரிக்க நடவடிக்கை : இலங்கையில் பால் மற்றும் முட்டை என்பனவற்றின் விலைகள் இன்று அல்லது நாளை உயரும் என துறைசார் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.
திரவ பால் விலையை அதிகரிக்குமாறு விவசாய சங்கங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதாகவும், திரவ பாலின் விலையை சந்தையில் உள்ள பால் விலையுடன் ஒப்பிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய உள்ளூர் பால் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பால் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் உள்ளமையினால் மில்கோ நிறுவனம் திரவப் பாலின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வலையமைப்பினை மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் தமது தொலைபேசி இலக்கத்தை மாற்றாது அதே இலக்கத்திற்கு,
வேறு ஓர் வலையமைப்பிற்கு மாறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய நியதியின் கீழ் எந்தவொரு தொலைபேசி வாடிக்கையாளருக்குத் தேவையான இலக்கங்களை மாற்றாது வேறும் ஓர் வலையமைப்பில் அதே இலக்கத்தில் சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் குறுகிய காலப்பகுதியில் மீண்டும் எரிவாயு விலையை அதிகரிக்க நேரிடும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிக்கவில்லை என்றால், உலகச் சந்தையில் நிலையாக இருப்பது கடினம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நுகர்வோர் விவகார ஆணையம் இது தொடர்பாக செயல்பட்ட காலத்தின் அடிப்படையில் விலை உயர்வு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எரிவாயு விலைகள் தொடர்பான ஒரு நிலையான திட்டம் எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதிகரித்த விலைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பராமரிக்கப்படும்.
விலைகளைக் குறைப்பதற்கு முறையான நிர்வாகத்தில் கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தின் நிலை பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படக் கூடாது.
இவ்வாறு மறைக்கப்படுவதால், இலங்கையில் எழும் பொருளாதாரப் பிரச்சினைகளில் பொதுமக்கள் பெரும்பாலும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். எனவே, இந்த நாட்டின் படித்த மற்றும் அறிவார்ந்த மக்கள் இந்த நேரத்தில் இந்த பொருளாதார நிலையை உணர்வுபூர்வமாக புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
எதிர்காலத்தில் அதிகரித்த விலைகள் உடனடியாக குறைக்கப்படும் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிக்க விரும்பவில்லை. எனினும் எரிவாயு விலையை நிலையான விலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அவ் இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியை, யாழிலிருந்து மின்கம்பங்கள் ஏற்றிவந்த வாகனம் மோதியுள்ளது.
மின்சார சபை வாகனம் மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக தனிமைபபடுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் நடமாடித் திரிவதாக வவுனியா சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து அவர், கைது செய்யப்பட்டு கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சிவபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைக்காக அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த கொரோனா தொற்றாளர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி கொரோனா தொற்றுடன் வீட்டில் இருந்து வெளியேறி பல்வேறு வேலைகளில் ஈடுபடுவதாகவும், நடமாடித் திரிவதாகவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து குறித்த நபரை தேடி விசேட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது சிறிய ரக உழவு இயந்திரத்தில் கல் ஏற்றிச் சென்ற நிலையில் குறித்த கொரோனா தொற்றாளர் சுகாதாரப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் உடனடியாகவே வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதரப் பிரிவினர் தெரிவித்தனர்.
நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்திற்குள் நுழையும் அபாயம் உள்ளதால், நாட்டை பச்சை வலயத்தில் தொடர்ந்தும் பேணுவது மக்களின் கடமையாகும் என சுகாதார அமைச்சின் தொழிநுட்ப சேவைகள் பணிப்பாளர் நாயகம் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இலங்கை சிவப்பு வலயத்திலிருந்து பச்சை வலயத்துக்கு முன்னேறியுள்ளது. கோவிட் தொற்றுப் பரவலைக் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தும் நாடுகள் பச்சை வலயத்தில் சேர்க்கப்படும். எனினும், நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்துக்கு நுழையும் அபாயம் உள்ளது.
எனவே, நாட்டை பச்சை வலயத்தில் தொடர்ந்தும் பேணுவது மக்களின் கடமையாகும். நாட்டில் பதிவாகும் நாளாந்தக் கோவிட் உயிரிழப்பு மற்றும் தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் சுகாதார ஸ்தாபனம் உட்படப் பல சர்வதேச அமைப்புகள் இலங்கையை மீண்டும் பச்சை வலயத்துக்குள் அனுமதித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இன்று (14.10.2021) காலை இராணுவ வாகனம் – பாரவூர்தி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கப்பல் ஒன்றினை இழுத்து சென்ற இராணுவ வாகனமும் சீமெந்து மூடைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தியும் கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தினை அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் தீயில் எரிந்து குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், சந்தேகத்தில் குறித்த பெண்ணின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று காலை (14.10) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கற்பகபுரம், நான்காம் ஒழுங்கையில் வீடு ஒன்றின் கூரை மற்றும் யன்னல் ஊடாக நெருப்பு மற்றும் புகை என்பன வெளிவந்ததைத் தொடர்ந்து,
அயலவர்கள் சென்ற போது வீட்டின் அறைப்பகுதியில் குறித்த வீட்டில் வசித்து வந்த பெண் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து அயலவர்கள் கதவினை உடைத்து தண்ணீர் விசிறி தீயிணை அணைக்க முயற்சித்துள்ளனர்.
இருப்பினும் குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்ப பெண் முற்றாக தீயில் எரிந்து மரணமடைந்துள்ளதுடன், அறை ஒன்றும் முழுமையாக எரிந்து உடமைகளும் அழிவடைந்துள்ளன.
இதனையடுத்து அயலவர்கள் கிராம அலுவலர் ஊடாக பூவரசன்குளம் பொலிசாருக்கு வழங்கி தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பூவரசன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது குறித்த குடும்பத்தின் கணவர் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணி புரிவதாகவும், மனைவிக்கும் அவருக்கும் இடையில் கடந்த பல மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இன்று (14.10) காலை கணவர் வேலைக்கு செல்லாது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த மூன்று மகன்களில் ஒருவர் வேலைக்கும், ஒருவர் கடைக்கும் சென்ற நிலையில் மற்ற மகன் மலசலகூடத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது அந்த மகன் வெளியில் வராத வகையில் மலசல கூடம் வெளியில் பூட்டப்பட்ப்பட்டுள்ளது. இதன்போதே வீட்டில் குறித்த பெண் மீது தீ பற்றியுள்ளது. வீடு தீயில் எரிவதைக் கண்டு அயலவர்கள் வருகை தந்த போது வீட்டில் கணவன் இருக்கவில்லை.
அயலவர்கள் தண்ணீர் விசிறி தீயிணை அணைக்க முற்பட்ட போதும் அது பலனின்றி, குறித்த பெண் தீயில் எரிந்து மரணமடைந்துள்ளார். வீட்டின் அறையும் முழுமையாக தீயில் எரிந்து உடமைகளும் நாசமாகியுள்ளன. குறித்த சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த ரஜேந்திரன் அனற்றா (வயது 43) என்பவரே தீயில் எரிந்து மரணமடைந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பில் கணவனின் செயற்பாட்டில் சந்தேகம் அடைந்த பொலிசார் அவர் நெளுக்குளம் பகுதியில் நின்றிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பூவரசங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா நகரசபையின் பொதுவான நடவடிக்கைகள் அனைத்தும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தமையுடன் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளும் நகரசபையினால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
அந்த வகையில் மக்களின் பொருளாதார இடர்களை கருத்திற்கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆதனவரி செலுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் ஆதனவரியினை செலுத்துமாறும் கேட்டுக்கொள்வதுடன் மேலதிக விபரங்களுக்கு 024 -2228790 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைபர் (Viber) என்னும் தொடர்பாடல் செயலியை பயன்படுத்தும் இலங்கை பயனர்களுக்கு அந்த நிறுவனம் உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளது. தரவு பாதுகாப்பு மற்றும் தரவு அந்தரங்கத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என நிறுவனம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
வைபரின் புதிய உற்பத்தியொன்றை அறிமுகம் செய்யும் இணைய வழி நிகழ்வு ஒன்றில் அந்த நிறுவனத்தின் அபிவிருத்தி அதிகாரி அனா ஸனாமென்ஸ்காயா (Anna Znamenskaya) தெரிவித்துள்ளார்.
வைபர் லென்ஸ்களை இலங்கையில் அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார். வைபர் ஊடாக பரிமாறப்படும் தகவல்கள் மறைகுறியாக்கப்பட்ட (encrypted) அடிப்படையில் பகிரங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
எனவே இந்த தகவல்களை மூன்றாம் தரப்பு ஒருவரினால் பார்வையிடவோ செவிமடுக்கவோ முடியாது என இலங்கை பயனர்களுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைபர் நிறுவனத்தின் அதிகாரிகளினாலும் இரு நபர்களுக்கு இடையிலான அந்தரங்க தகவல் பரிமாற்றத்தை பார்வையிட முடியாது என தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் வழிபாட்டு இடங்களில் புதிய கொத்தனி உருவாகலாம் என வவுனியா சுகாதாரப் பிரிவு கவலை தெரிவித்துள்ளதாக வவுனியா பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வரசர்மா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களில் தற்போது முக்கிய வழிபாட்டு நிகழ்வு சரஸ்வதி பூஜை இடம்பெற்று வருவதுடன், கேதார கௌரி விரதம், கந்தசஷடி, பிள்ளையார் கதை, திருவெம்பாவை போன்றவையும் நடைபெறவுள்ளது.
வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் வழிபாட்டு இடங்களில் புதிய கொத்தனி உருவாகலாம் என வவுனியா சுகாதார பிரிவு கவலை தெரிவித்துள்ளது எனவே இந்து ஆலயங்களில் பூசைகளில் அதிகளவில் மக்களை உள்வாங்காது பொது நலனில் அக்கறை செலுத்துங்கள் இல்லையேல் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
‘பயங்கரமான கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் உங்கள் பாதுகாப்பே எங்கள் நோக்கம்’ என வவுனியா பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வரசர்மா மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த பல வருடங்களான இயங்கி வரும் பிரபல வர்த்தக நிறுவனத்தினர் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 200 குடும்பத்தினருக்கு உலர் உணவு பொதிகள் அடங்கிய நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 200 குடும்பத்தினருக்கு வவுனியா மாவட்டத்தில் இயங்கி வரும் லாவண்யா நகையக உரிமையாளரினால் நிவாரணப்பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தினர் கடந்த சில காலங்களாக வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை சிறப்பம்சமாகும்.