வவுனியா ஓமந்தையில் சுகாதார அறிவுறுத்தலை மீறி கும்பாபிசேகம் : அன்டிஜன் பரிசோதனையில் ஆலய குருக்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று!!

ஓமந்தைப் பகுதியில்..

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி கும்பாபிசேகம் இடம்பெற்ற நிலையில், சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டவர்களிடம் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஆலய குருக்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாவிசேகம் நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரப் பிரிவினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

தற்போதைய கோவிட் பரவல் நிலையை அடிப்படையாக கொண்டு ஆலய நிர்வாகத்தினர், உபயகாரர் என 9 பேருக்கே சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

ஆனால், குறித்த ஆலயத்தில் 20 பேருக்கு மேல் நிற்பதாகவும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து அங்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி ஆலயத்தில் நின்ற 20 பேரிடமும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் ஆலய குருக்கள் உட்பட 6 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆலயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொற்றாளர்களும், அவர்களுடன் தொடர்புடையவர்களும் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் திறக்கப்படட மதுபானசாலைகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன!!

மதுபானசாலைகள்..

வவுனியாவில் திறக்கப்பட்டு சுகாதார நடைமுறைகளின்றி வியாபாரத்தில் ஈடுபட்ட 4 மதுபானசாலைகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் சில மதுபானசாலைகள் நேற்று (17.09) மாலை திறக்கப்பட்டன.

அந்தவகையில், வவுனியாவில் சில மதுபானசாலைகள் திறக்கப்பட்டமையால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தையும் மீறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மதுபானசாலைகள் முன்பாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது திரண்டு இருந்தனர்.

இதனையடுத்து சுகாதாரப் பிரிவினர் குறித்த மதுபான சாலைகளை மூடுமாறு பணித்துடன், அங்கு நின்றவர்களையும் பொலிசாரின் உதவியுடன் வெளியேற்றினர்.

அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பேணாது வியாபாரத்தில் ஈடுபட்ட வவுனியா நகரில் கண்டி வீதியில் உள்ள மதுபானசாலை, பூவரசன்குளம் பகுதியில் உள்ள மதுபானசாலை, ஓமந்தையில் உள்ள மதுபானசாலை, மரக்காரம்பளையில் உள்ள மதுபானசாலை என 4 மதுபானசாலைகள் தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.

வவுனியா உட்பட 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை..

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு இடி,மழையுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது திடீர் காற்றும் வீசக்கூடும். எனவே, பொது மக்கள் புயல் மற்றும் மின்னலுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா..

வவுனியாவில் மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர்,

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (17.09) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 78 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் மரணம்!!

கொரோனா..

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இன்று (17.09) 05 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 05 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

நேரியகுளம், செட்டிக்குளம், சின்னபுதுக்குளம், கணேசபுரம், பூந்தோட்டம் ஆகிய பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றால் மரணித்தவர்களாவார்கள்.

இந்நிலையில் மரணித்த 5 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பல லட்சங்களை சுருட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த டிக் டாக் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் வெளிநாட்டில் இருக்கும் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான இடம் வாங்கித்தருவதாக கூறி, டிக்டாக் தம்பதி பல லட்சம் ரூபயை மோசடி செய்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

சமூகவலைத்தளங்களில் டிக் டாக் மாமி என்று அழைக்கப்படுபவர் காயத்ரி. இவர் கோகவரம் பாஜக கட்சி தலைவராக உள்ளார். இவர் தன்னுடைய கணவரான ஸ்ரீதருடன் இணைந்து செய்யும் வீடியோக்களை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிடுவார்.

இவர்களின் வீடியோவிற்கு என்றே தனி ரசிகர்களின் கூட்டம் உள்ளது. இந்நிலையில், இந்த டிக் டாக் பிரபல ஜோடி அந்த பிரபலத்தை வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

அதாவது சமூகவலைத்தளத்தில் இவர்களின் வீடியோ மற்றும் அவர்கள் இருக்கும் கெட்டப்பைக் கண்டு, இவர்கள் ஏதோ பெரிய இடத்து ஆள் என்று நினைத்து, தமிழகத்தின் ஏலூரை சேர்ந்த கவுரிசங்கர் என்பவர் தனது மகளை வெளிநாட்டு மருத்துவ கல்லூரியில் படிக்க வைக்க உதவ வேண்டும் என கேட்டுள்ளார்.

அப்போது இந்த தம்பதி, தங்களுக்கு வெளிநாடுகளில் பல கல்லூரிகளில் பழக்கம் இருப்பதாக கூறியும், நிச்சயம் இடம் வாங்கித்தருவதாக கூறியும், பல லட்சம் ரூபாய்களை கொஞ்சம், கொஞ்சமாக வாங்கியுள்ளனர்.

அதன் படி தற்போது 44 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ள இந்த தம்பதி, இதுவரை மருத்துவ படிப்பிற்கான இடம் வாங்கித் தரவில்லை. இதே போன்று இந்த தம்பதி, தங்களின் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரிசி ஆலை தொடங்குவதற்கு வங்கியில் கடன் பெற்று தருவதாக 4 பேரிடம் இருந்து தலா 4 லட்சம் ரூபாய் வசூலித்ததாகவும்,

மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றுத் தருவதாக கூறி தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து பல லட்சங்களை வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

இப்படி பணத்தை பெற்றுக் கொண்டு ஆட்டம் காட்டிய இந்த டிக்டாக் தம்பதி மீது பாதிக்கப்பட்டவர்கள் பொலிசில் புகார் அளித்ததால், பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பொலிசார் இது போன்று டிக் டாக்கில் யாரையும் நம்பி தங்கள் சொந்த பிரச்சனைகளையோ அல்லது வேறு எதையுமோ நம்பி முடிவெடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு தாமரை கோபுரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தாமரை கோபுரம்..

உலக நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், சுகாதார துறையை சேர்ந்த அனைவரையும் கௌரவிக்கும் முகமாகவும் கொழும்பு தாமரை கோபுரத்தில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, இன்றைய தினம் மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இவ்வாறு மின்விளக்குகள் ஒளிரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவி கேட்ட ஒரு வார்த்தை : கணவன் செய்த கொடூரம்!!

கோவை…

இந்தியாவில், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பேசுவதை தட்டி கேட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி செல்வி(45). இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

ஆனந்தகுமார் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை குடிபோதையில் இருந்த ஆனந்தகுமார் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது தனது கணவர் வேறு ஒரு பெண்ணிடம் பேசுவது செல்விக்கு தெரிய வந்துள்ளதால் அந்த பெண்ணை பற்றி கணவருடன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமார்,

கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ஆனந்தகுமார் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

15 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் இளைஞரின் சடலம் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!

கேரளா..

இந்திய மாநிலம் கேரளாவில் 6 மாதங்களுக்கு முன்பு மாயமான இளைஞர் 15 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த இளைஞர் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் தாயாருடன் வங்கிக்கு சென்றுள்ளார். 17 வயதேயான அமல் கிருஷ்ணா என்பவர் அதன் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்பது மட்டுமல்ல,

அவரை தேடும் நடவடிக்கையில் பொலிசாருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த நிலையில் சுமார் 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த குடியிருப்பு ஒன்றில் அமல் கிருஷ்ணாவின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தூக்கிட்ட நிலையில் காணப்பட்ட சடலத்தின் அருகாமையில், அவர் பயன்படுத்திய மொபைல், சிம் அட்டை, அவரது புகைப்படம் உள்ளிட்டவையும், அவர் மாயமாகும் போது அணிந்திருந்த உடையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இளைஞரின் சடலத்தின் அருகே ப்ளூ டூத் ஹெட்போன் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமது மகனை கொலை செய்துள்ளார்கள் எனவும், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தாம் நம்பவில்லை எனவும் தாயார் ஷில்பா தெரிவித்துள்ளார்.

மாயமாகி 6 மாதங்களுக்கு பிறகு தமது மகனை இந்த பாழடைந்த வீட்டில் கொண்டு சேர்த்த மர்ம நபர்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஷில்பா தெரிவித்துள்ளார்.

மேலும், அமல் கிருஷ்ணாவின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாயமான விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஷில்பா ஏற்கனவே பொலிசாரை நாடியிருந்தார்.

பணம் மாயமானத்தில் அமல் மனமுடைந்து காணப்பட்டார் எனவும், அந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குடும்பத்தினர் சார்பில் பொலிசாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

“இந்த மூஞ்சை எப்படி TVல பாக்குறது” : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கண்ணீர் பேட்டி!!

தீபிகா…

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தீபிகா அளித்த பிரத்தியேக பேட்டியில் பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் ரசிகர்கள் பலரும் “இந்த மூஞ்ச பாரு.. இந்த மூஞ்ச எப்படிடா டிவில பாக்குறது?” என்று பேசியதாகவும்,

கல்லூரி பெண்ணாக நடிக்கும் தன் கேரக்டருக்கு திருமணம் நடப்பது போல் கதை அமைந்ததால் இன்னும் விமர்சனங்கள் வந்தபடி இருந்ததாகவும் தீபிகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பலரும் தன் வெளித்தோற்றத்தை சொல்லி, சொல்லி “நாம நல்லா இல்லயோ” என்கிற உணர்வு வந்ததாகவும் பின்னர் அதனை கடந்துவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தொடர்ந்து மேக்-அப் இல்லாத போட்டோக்களை போஸ்ட்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்ததாகவும் தற்போது பலரும் தன்னுடைய தன்னம்பிக்கையை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளர்.

மேலும் பல்வேறு ஆடிஷன்களை கொடுத்து வந்தபோதுதான், தனக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆடிஷன் வந்ததாகவும், தொடர்ந்து கண்ணனுக்கு (பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரம்) ஜோடியாக நடிக்கும் கேரக்டர் மாற்றப்பட்டே வந்ததால், பயமாக இருந்ததாகவும் கண்ணனை கிண்டல் செய்ததாகவும் ஜாலியாக கூறுகிறார்.

இதனிடையே டஇந்த சீரியலில் தீபிகா மாற்றப்பட்டு சாய் காயத்ரி நடிக்கத் தொடங்கியுள்ளார். ஆனாலும் சாய் காயத்ரி தீபிகாவை குறிப்பிட்டு பாசிடிவான பதிவை பகிர்ந்துள்ளார்.

இதற்கு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ள தீபிகா, தன் அம்மா, அப்பா குறித்த நெகிழ்வான விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். தீபிகா பேசும் முழு வீடியோவையும் இணைப்பில் காணலாம்.

வேலை முடிந்து திரும்பிய தந்தையின் கண் முன்னே மகளுக்கு அரங்கேறிய அவலம்!!

கேரளா..

இந்திய மாநிலம் கேரளாவில் தந்தையின் கண் முன்னே ஒன்பதாவது மாடியில் இருந்து சிறுமி ஒருவர் குதித்து த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றி வருபவர் ஆனந்த் சிங். வியாழக்கிழமை மதியம் தாமதமாக குடியிருப்புக்கு திரும்பியுள்ளார் ஆனந்த் சிங்.

இந்த வேளை அ.லறியபடி அவரது மனைவி குடியிருப்புக்கு வெளியே செல்வதை அறிந்த ஆனந்த் சிங் பதறிப்போய் அவரும் கீழே சென்றுள்ளார். இந்த நிலையிலேயே தங்களது ஒன்பதாவது மாடி குடியிருப்பில் இருந்து,

மகள் பவ்யா(16) குதித்து த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதை ஆனந்த் சிங் தெரிந்து கொண்டுள்ளார். ஆனந்த் சிங் மற்றும் அவரது மனைவி, இரு மகள்களுடன் ஒன்பதாவது மாடியில் குடியிருந்து வந்துள்ளார்.

தமது வாகனத்தில் இருந்து வெளியேறி, குடியிருப்பின் லிஃப்டில் ஆனந்த் சிங் நுழைந்த அதே வேளை, அவரது மகள் பவ்யா கீழே கு.தித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டாரா அல்லது கால் தடுக்கி விழுந்தாரா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

2 சிறுவர்களின் வங்கி கணக்கில் 900 கோடி ரூபா பணம் : அதிர்ந்துபோன கிராம மக்கள்!!

இந்தியா..

இந்தியாவில் 6-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் வரவு வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் வசிக்கும் மற்றவர்களும் தங்கள் வங்கிக்கணக்கு அறிக்கையை சரிபார்க்க ஏடிஎம்கள் மற்றும் வங்கிகளுக்கு விரைந்தனர். இந்திய மாநிலம் பீகாரின் கதிஹாரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் இரண்டு 6-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள், பள்ளி சீருடையை வாங்குவதற்கும் அது தொடர்பான செலவுகளுக்கும் அரசாங்கத் திட்டத்தின் கீழ் சிறிது பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

அந்த உதவித்தொகை தங்கள் வங்கி கணக்கு வந்துவிட்டதா என்பதை பார்ப்பதற்காக அவர்கள் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து, கிராமத்தில் உள்ள ஒரு பொது இணைய மையத்திற்கு சென்று சோதித்தனர். அப்போது, அவர்களின் அறிக்கையை சரிபார்த்தபோது, ​​அவர்கள் கணக்கில் பல கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதில், ஆஷிஷ் (Ashish) என்ற சிறுவனின் கணக்கில் ரூ. 6.2 கோடியும், மற்றோரு சிறுவன் சரன் விஸ்வாஸின் (Guru Charan Vishwas) கணக்கில் நமபமுடியாத அளவில் ரூ. 900 கோடி இருந்துள்ளது.

இந்த விடயம் வெளியே தெரிந்ததும், கிராமத் தலைவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த வங்கி பரிவர்த்தனை தொடர்பாக உரிய அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இதேபோல் பீகாரில் மற்றோரு சமத்துவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதில், பாட்னாவின் புறநகரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் தவறுதலாக அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ. 5 லட்சத்திற்கு மேலான பணத்தை திருப்பித் தராததால் சிறைக்கு அனுப்பப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய அரசு நிவாரணம் என்று கூறி அந்த நபர் வங்கிக்கு பணத்தை திருப்பி தர மறுத்துவிட்டார்.

இலங்கையில் கறுப்பு பூஞ்சை பரவல் : சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

கறுப்பு பூஞ்சை..

கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றுமொருவருக்கு பரவாதென சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்கள் இந்த பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இலங்கையில் மிக குறைவாக எண்ணிக்கையிலானோரே உள்ளனர்.

கொழும்பு, குருணாகல், இரத்தினபுரி பிரதேசங்களில் கொவிட் தொற்றுக்குள்ளான சிலர இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நோய் தோல், மூக்கு, மூளை, கண்கள், நுரையீரல் மற்றும் உடலின் உட்புற உறுப்புகளின் எந்தப் பகுதியையும் பாதிக்கலாம். ஒருவருக்கு இந்த நோய் ஏற்படும் இடத்தை வைத்தே அறிகுறிகள் தீர்மானிக்கப்படும் என் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நோயின் ஆரம்பம் நச்சு அடங்கிய பூஞ்சையாகும். அது சூழலில் இருப்பதாகவும் தொற்ற நோயாக பரவாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போலிச் செய்தியால் மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்!!

போலிச் செய்தியால்..

நாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுபானசாலைகள் திறந்தவுடன் பொது மக்கள் மதுபானம் கொள்வனவு செய்வதற்காக பெருமளவில் திரண்டுள்ளனர். எனினும் மதுபானசாலைகளை திறந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் போலியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று மதுவரித் திணைக்கள ஆணையாளரிடம் கேள்வி எழுப்பியபோது, மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என்பதுடன் அவ்வாறு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி இவ்வாறு அசமந்தப் போக்குடன் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் மதுபான சாலைகள் முன் திரண்ட மதுப் பிரியர்களுக்கு நேர்ந்த கதி!!

வவுனியாவில்..

கோவிட் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நேரத்தில் வவுனியா மதுபானசாலைகளின் முன்னால் அதிகளவினான மதுப்பிரியர்கள் குவிந்த நிலையில் சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து 13 பேரை கைது செய்துள்ளனர்.

நாடு பூராகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானசலைகளை திறப்பதற்கு மது வரித் திணைக்களம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகள் முன்பாக அதிகளவிலான மதுப் பிரியர்கள் திரண்டிருந்தனர்.

அத்துடன் நகரின் கண்டி வீதியில் அமைந்திருந்த மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. அங்கு சென்று சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் மதுபானசாலை முன்பாக நின்றோர், வீதிகளில் சென்றோர் வானங்கள், மோட்டர் சைக்கிள்கள் மறிக்கப்பட்டு சோதனை செய்ததுடன், 13 பேரை கைது செய்தனர்.

சம்பவ இடத்திற்கு மதுவரி திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து மதுபானசாலைகளை திறப்பதற்கு தாம் அனுமதி வழங்கியதாகவும், திறக்க முடியும் எனவும் தெரிவித்தனர்.

ஆனால், சுகாதாரப் பிரிவினர் அதிகளவிலானவர்கள் சுகாதார நடைமுறைகளை மீறி திரண்டு இருந்தமையால் அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்து,

விபாரத்தில் ஈடுபட்ட மதுபானசாலை சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டதுடன், மதுபானசாலை முன் நின்றோர், வீதிகளில் சென்றோர் என 13 பேர் பெலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள் : நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள்!!

நீண்ட வரிசையில்..

மதுபானக் கடைகளைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மலையக தோட்டப் பகுதிகளில் இன்று (17.09) மதுபானங்களை வாங்குவதற்கு ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்ட போதிலும் மதுப்பிரியர்கள் பெருமளவில் திரண்டு காணப்பட்டனர்.

ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும், மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சில மதுபானக் கடைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்,

மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள மதுப்பிரியர்கள் சரியான சுகாதார நடைமுறைகளைக் கூட பின்பற்றாமல் மதுபானங்களை வாங்க திரண்டனர். அந்தவகையில், அட்டன் நகரிலும் இவ்வாறான ஒரு நிலைமையே காணப்பட்டது.