நீண்ட நாட்களுக்கு பின்னர் யாழில் தளர்த்தப்படும் ஊரடங்கு : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

யாழில் தளர்த்தப்படும் ஊரடங்கு..

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சமூக இடைவெளியை பின்பற்றி யாழ்ப்பாண மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் வைத்தே அவர் குறித்த கோரிக்கையினை விடுத்துள்ளார். மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் நாளை ஊரடங்கு சட்டம் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு பிற்பாடு இந்த ஊரடங்கு தளர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு தளர்வின் போது பொது மக்கள் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து தங்களுடைய தனிமைப்படுத்தலையும், சமூக இடை வெளியினையும் பேணி அவர்கள் நடந்து கொள்வது மிக மிக அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இன்று காலை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

நாளை முதல் வட மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட உள்ளது. ஆனாலும் நாட்டில் கொரோனா தொற்றும் வாய்ப்புள்ள அசாதாரண நிலை நிலவுவதன் காரணமாக பொது மக்கள் பின்வரும் விடயங்களை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

1. யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர ஏனையவர்கள் இயலுமானவரை வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

மேலும் நாட்டில் கொரோனா அபாயம் முற்றாக நீங்கும் வரை ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று வெளியில் நடமாடுவதை இயன்றவரை குறைத்துக் கொள்ளுங்கள். மிகவும் அவசியமான தேவைகளற்று வெளியில் செல்வது, சிறு சிறு விடயங்களுக்காக பல தடவை வெளியில் செல்வது போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. மக்கள் நெருக்கமான இடங்கள், மக்கள் நெருக்கமான போக்குவரத்துச் சேவைகள் போன்றவற்றை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத இடத்து அத்தியாவசிய தேவை கருதி வெளியில் செல்வதாயின் கட்டாயமாக ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்.

3. பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்கள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசிப் பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களையும் தினமும் கிருமித் தொற்று நீக்கத்துக்கு உட்படுத்தவும்.

4. அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், ஏனைய பொது மக்கள் அல்லது பணியாளர்கள் எனப் பலர் கூடக்கூடிய இடங்களில் பொருத்தமான, உரிய கைகழுவும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் அவற்றைக் கட்டாயமாக்கிக் கொள்ளவும் மேலும் தனிநபர்களுக்கிடையிலான சமூக இடைவெளியை பேணுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

5. ஒன்று கூடல்கள், கூட்டங்கள், சுற்றுலாக்கள், சமய நிகழ்வுகள், பொது வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள், வீட்டு வைபவங்கள் போன்றவை மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

6. நீண்ட நாள்களுக்குப் பின் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதால் பெருமளவானோர் முடி திருத்தகங்களை நாடவேண்டியிருக்கும். இங்கும் சமூக இடைவெளியைப் பேணவும்.

7. வெளியில் சென்று, வீட்டுக்குத் திரும்பும்போதெல்லாம் நன்றாக குளித்தல் நல்லது. ஆகக்குறைந்தது கைகளையாவது சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரம் கொண்டு கழுவுங்கள். வீட்டில் உள்ளபோதும் அடிக்கடி கைகளை உரிய முறையில் கழுவுங்கள். மேலும் கண், மூக்கு, வாய், முகம் போன்றவற்றை கைகளால் தொடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

8. உங்களுக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகளாகிய தொண்டை நோ, வறட்டு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதும் ஏற்பட்டால் முகக் கவசம் அணிந்து கொண்டு உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை அணுகுங்கள்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா அபாயம் : மேலும் 15 பேருக்கு தொற்று உறுதி!!

கொரோனா..

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 15 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை269 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குறித்த 15 கொரோனா தொற்றாளர்களும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிப் பழகிய நிலையில், கொழும்பு பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 91 பேர்முற்றாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இன்றைய தினம் 5 பேர் கொரோனா தொற்றில் இருந்துகுணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 171 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்திலேயே அதிக அளவிலானவர்கள்கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 74 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 31 பேரும் கொரோனாதொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் 11 மாவட்டங்கள் தொடர்ந்தும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அற்ற மாவட்டங்களாக காணப்படுவதுடன், 7 மாவட்டங்களில் 2 அல்லது அதற்கும் குறைவான கொரோனாதொற்று உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களை கண்காணிப்பதற்கு கை வளையல்!!

தனிமைப்படுத்தலுக்கு..

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களைக் கண்காணிப்பதற்காக பாதுகாப்பான கை வளையல் தொடர்பாக பிரதம மகிந்த ராஜபக்ச கவனம் செலுத்தியுள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும் நபர்களைக் கண்காணிப்பதற்குப் பயன்படுத்த முடியுமான உபகரணமொன்றைப் பன்னிபிட்டியவைச் சேர்ந்த அமில சமீர ரத்நாயக்க என்பவர் உருவாக்கியுள்ளார்.

கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய தயாரிப்பு நேற்று பிரதம மகிந்த ராஜபக்ச அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. கை வளையலாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த உபகரணத்தை உயர்ந்த முடிவாக்கத்துடன் தயாரிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறும்,

இந்த தயாரிப்புக்கு காப்புரிமை அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வழிகாட்டலை வழங்குமாறும் ஏற்புடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய பிரதமர், இந்த உபகரணத்தை இராணுவ தளபதியின் கண்காணிப்புக்கு சமர்ப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

கொரோனாவால் அபாயத்தில் சிக்கவுள்ள ஏழை நாடுகள் : ஐ.நா விடுத்துள்ள எச்சரிக்கை!!

கொரோனாவால்..

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா சபையின் துணைத்தலைவர் அமினா முகமது இது தொடர்பில் தெரிவிக்கையில்,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என அனைத்தும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து நின்றுள்ளன.

குறிப்பாக ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் வளர்ச்சியடைந்த நாடுகள் திணறி வருகின்றன.

இதனால் அவை ஏழை நாடுகளுக்கு எப்படி உதவும் என தெரியவில்லை. கொரோனாவால் ஏழை நாடுகள் கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நீடித்த திட்டம் தேவை.

காலநிலை மாற்றத்தை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதிலும் ஏற்ற தாழ்வுகளை சரி செய்வதிலும் வறுமையை ஒழிப்பதிலும் உலகம் ஏற்கனவே பின்தங்கியுள்ளது.

இப்போது இதில் கொரோனா தொற்றும் சேர்ந்துள்ளது. இதிலிருந்து உலகை மீட்டு ஏழை நாடுகள் மற்றும் பூமியை காப்பாற்ற நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.

தூக்கி எறியப்படும் முகக்கவசங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல் : மக்களுக்கு நிபுணர்கள் அவசர எச்சரிக்கை!!

நிபுணர்கள் அவசர எச்சரிக்கை..

கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் முகக்கவசங்களால் கொரோனா பரவும் அபாயமும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பயன்படுத்திய முகக்கவசங்களை பொது மக்கள் சாதாண குப்பைகளில் அப்படியே தூக்கி எறிந்து விடுகிறார்கள். சிலர் தெருக்களிலேயே வீசி விடுகிறார்கள் என்று துப்புரவுப் பணியாளர்கள் குற்றச்சாட்டை முன்வைப்பதாக அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறியும் முகக்கவசங்கள், நிச்சயம் கொரோனாவைப் பரப்பும் காரணிகளாக மாறும் என்று நிபுணர்கள் அவசர எச்சரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர். மேலும், இவ்வாறு தெருவில் வீசும் ஒரு முகக்கவசத்தில் கொரோனா தொற்று இருந்தால் அதன் மூலம் சுமார் 10 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

ஒரு கொரோனா தொற்று இருக்கும் நபர் மூலம் சுமார் 416 பேருக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு, கொரோனா தொற்றினால் பாதித்த ஒருவர் வீசும் ஒரு முகக்கவசத்தால் 10 பேருக்கு கொரோனா பரவும் என்றால்..

ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் முகக்கவசங்கள், ஒவ்வொரு கொரோனா நோயாளி பயன்படுத்திய முகக்கவசங்களும் எத்தனை பேருக்கு கொரோனாவை பரப்பும் என்று கணக்கிட்டால் அது நிச்சயம் நிலைமையை மேலும் விபரீதமாக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு கொரோனா இல்லை, பாதுகாப்புக்காகத்தான் முகக்கவசம் அணிகிறார், அவர் தூக்கி எறியும் முகக்கவசத்தால் எப்படி கொரோனா பரவும் என்று கேட்கலாம்.. அதாவது, அவர் அருகில் நின்றவர் இருமியோ அல்லது தும்மியோ இருந்தால், இந்த நீர்த்திவலை மூலம் முகக்கவசத்தில் கொரோனா தொற்றிக் கொண்டிருக்கலாம். அதைத் தூக்கி எறிந்தால் கொரோனா பரவும்.

அவ்வாறு இல்லாமல், சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பலருக்கும், அதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதுதான். எனவே, ஒருவர் பாதிக்கப்பட்டவரோ இல்லையோ, முகக்கவசங்களை நாம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

நமக்காக சுகாதாரப் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நம்மால் நிச்சயம் கொரோனா பரவி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய திட்டம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்..

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என விமான நிலையத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் வைத்தே பயணிகளிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயணிகளின் சளி மாதிரிகளைப் பெற்றுக் கொண்டு அவற்றைக் கொண்டு பரிசோதனை நடாத்தி அவை குறித்த அறிக்கைகள் களஞ்சியப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சர்வதேச குடிப்பெயர் அமைப்பு ஆகியனவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தங்கியுள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக வெளிநாட்டு தூதரகங்களின் ஊடாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் விமான நிலையத்திலேயே பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தக்கூடிய ஆய்வகம் ஒன்றை உருவாக்கும் புதிய திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பயணி ஒருவர் நாட்டுக்குள் செல்வதற்கு முன்னதாகவே அவர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதனை கண்டறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அரச, தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

முக்கிய அறிவிப்பு..

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனத்திலும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் யார்? கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

ஒரு நாளில் பணிக்கு சமூகமளிக்கும் முன்றில் ஒரு பகுதியினர் மற்றும் 50 வீதமானவர்களுக்கு பதிலாக அடுத்த நாளில் வேறு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும், தனியார் துறை நிறுவனங்கள் காலை 10 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய எண்ணிக்கை மற்றும் யார் சமூகமளிக் வேண்டும் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.  இந்நிறுவனங்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

அலுவலக புகையிரத சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்!!

புகையிரத சேவைகள்..

கொரோனா முடக்க நிலையை நீக்கும் வகையில் அலுவலக தொடரூந்து சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.

அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சேவைகளின் அரச மற்றும் தனியார் துறையினர் மட்டும் இந்த சேவைகளை பயன்படுத்த முடியும் என தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த 18 மாவட்டங்களின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த 18 மாவட்டங்களிலும் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே அலுவலக தொடரூந்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளன.

மின்னல் தாக்கத்தினால் சிறுமி உயிரிழப்பு!!

மின்னல்..

பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஊவா மாளிகா கிராமத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று மாலை தனது வீட்டிற்கு அருகிலுள்ள மரமொன்றின் கீழ் மழைக்காக ஒதுங்கி நின்றிருந்த சமயம் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த, இவ்வாண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மோகன்ராஜ் ருக்‌ஷி என்ற 10 வயது சிறுமியே மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!!

பாடசாலைகளை திறப்பது தொடர்பில்..

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன. இதன்போது ஏப்ரல் 20 ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தன.

என்ற போதும் நாட்டில் தற்போது உள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலையை கருத்தில் கொண்டு பாடசாலைகளை திறக்கும் திகதி மே மாதம் 11ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கொரோனா நோய் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டே பாடசாலைகளை திறப்பது பற்றி தீர்மானிக்கப்படும்.

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் சுகாதாரத்துறையினரின் பூரண அனுமதியுடன் தீர்மானங்கள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மக்கள் கூடும் வகையிலான அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை!!

அனைத்து நிகழ்வுகளுக்கும்..

மக்கள் கூடும் வகையிலான அனைத்து நிகழ்வுகளுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானம் எடுத்துள்ளது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தில் பரவுவதனை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு பொது நிகழ்வுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுக் கூட்டங்கள், சுற்றுலாக்கள், பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் கூட்டமாக குழுமியிருக்கக் கூடிய நிகழ்வுகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இலங்கையில், 248 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடக், ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மாத காலத்தில் காலிமுகத்திடலில் ஏற்பட்ட மாற்றம்!!

காலிமுகத் திடல்

ஒரு மாத காலம் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் நீண்டகாலத்திற்கு பின்னர் கொழும்பு காலிமுகத் திடல் புற்களால் நிறைந்து பச்சையாக காட்சியளிக்கின்றது. காலிமுகத் திடல் மைதானம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1800ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

அந்த காலத்தில் பொது மக்கள் பெருமளவில் அங்கு செல்வதில்லை என்பதால், மைதானத்தில் புற்கள் மனிதர்களின் கால் படாது பச்சை நிறமாகவே இருந்து வந்தது.

எனினும் அதற்கு பின்னர் காலிமுகத் திடல் பொழுது போக்கும் இடம் என்பதால், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம், இதனால், திடலில் உள்ள புல் மக்களின் நடமாட்டம் காரணமாக ஆங்காங்கே காணாமல் போயிருந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத கால ஊரடங்குச் சட்டம் காரணமாக மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்ட காலிமுகத்திடலின் சுமார் ஒரு கிலோ மீற்றர் பகுதி புற்கள் நிறைந்து பச்சை நிறமாக காட்சியளிப்பதை காணமுடிகிறது.

இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் முழுமையாக நீங்கவில்லை : இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!!

கொரோனா தொற்று..

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் முழுமையான அளவில் நீங்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இன்றைய தினம் அறிவித்துள்ளார்.

சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டது போன்று கொரோனா வைரஸ் தொற்று முழு அளவில் நீங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்கு இடையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை வரையறுத்துள்ளதாகவும், அடையாளம் காணப்பட்டவர்கள் சமூகத்துடன் தொடர்பு கொள்வது தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மக்களின் இயல்பு வாழ்க்கை முன்னெடுக்கப்பட்டாலும் வைரஸ் தொற்று பரவுவதனை தடுப்பதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

ஊரடங்கு நடைமுறைகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான முக்கிய செய்தி!!

ஊரடங்கு நடைமுறைகள்..

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த 18 மாவட்டங்களின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த 18 மாவட்டங்களிலும் எதிர்வரும் 20ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொட, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏனைய காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 20 ஆம் முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில காவல்துறை பிரிவுகள் தவிர்ந்த ஏனைய காவல்துறை பிரிவுகளில் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை, கிரேன்பாஸ், பம்பலபிட்டி, வாழைத் தோட்டம், மருதானை, கொத்தட்டுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸை, தெஹிவளை மற்றும் கொஹூவளை காவல்துறை பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ காவல்துறை பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். புத்தளம் மாவட்டத்தில் புத்தளம், மாரவில மற்றும் வென்னப்புவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, பயாகல, பேருவளை மற்றும் அளுத்கம காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரம் பேருந்துகள், 400 புகையிரதங்களை சேவையிலீடுபடுத்த அரசு தீர்மானம்!!

20ஆம் திகதிக்குப் பின்னர்..

எதிர்வரும் 20ஆம் திகதிக்குப் பின்னர் பேருந்துகள் மற்றும் புகையிரதங்களை பொதுப்போக்குவரத்துப் சேவையில் ஈடுபடுத்த அரசு தீர்மானித்துள்ளது.

அதற்கமைவாக 5 ஆயிரம் அரச பேருந்துகளும், 400 புகையிரதங்களும் சேவையில் ஈடுபடும் என்று போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளின் கீழ் வரும் தனியார் மற்றும் பொது நிறுவவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் பொதுப்போக்குவரத்தை இயக்க போக்குவரத்து அமைச்சில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தும்போது, சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் இந்தக் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனைய நபர்களை பேருந்துகள் மற்றும் புகையிரதங்களில் ஏற்றாதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

கொழும்பில் கொரோனா தொற்று 55 ஆக அதிகரிப்பு!!

கொரோனா தொற்று..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 28 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், கண்டி மாவட்டத்தில் 07 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும்,

குருநாகல், கேகாலை, மாத்தறை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் வீதமும், காலி,மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 38 பேரும், வெளிநாட்டுப் பிரஜைகள் 03 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று பிற்பகல் ஒரு மணிவரை 244 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 77 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனைய 160 நோயாளர்களில் 84 பேர் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்புவைத்தியசாலையிலும், 41 பேர் வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையிலும், 20 பேர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும், 15 பேர் சிலாபம் – இரணவில கொரோனா சிகிச்சை நிலையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைவிட நாடளாவிய ரீதியில் 24 வைத்தியசாலைகளில் மேலும் 103 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.