அவதூறு செய்தி : நடிகை குத்து ரம்யாவுக்கு 50 லட்சம்!!

தமிழில் குத்துப்படம் மூலம் பிரலமான நடிகை ரம்யா என்றழைக்கப்படும் திவ்யா ஸ்பந்தனா குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட தொலைகாட்சி நிறுவனங்கள் அவருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பெங்களூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல கன்னட நடிகையுமான திவ்யா ஸ்பந்தானவுக்கு ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக ஏசியாநெட் நியூஸ் மற்றும் சுவர்ணா நியூஸ் சேனல்கள் 2013ம் ஆண்டு மே 31ம் திகதி செய்தி வெளியிட்டனர்.

குறித்த அவதூறு செய்திக்கு எதிராக பெங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் திவ்யா ஸ்பந்தனா வழக்கு தொடர்ந்தார். மேலும், தவறான செய்தி வெளியிட்டதற்காக ரூ. 10 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்று தனது மனுவில் திவ்யா ஸ்பந்தனா குறிப்பிட்டார்.

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான செய்தியில் திவ்யா ஸ்பந்தனா குறித்து எந்த வகையிலும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என தொலைக்காட்சி நிறுவனங்கள் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

வழக்கின் விசாரணைக்குப் பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் தூதராக திவ்யா இருந்திருந்தாலும், 2013-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். எனவே, திவ்யா ஸ்பந்தனா சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.

ஊடகங்கள் இதழியல் நெறிகளை மீறிவிட்டன. அவருடைய புகழுக்குக் களங்கம் விளைவித்துள்ளன. இரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இனியும் ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற செய்திகளை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்தார் மைத்திரியின் புதல்வர்!!

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேனவின் திருமண வைபவம் இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

எல்கார்டோ நிறுவனத்தின் உரிமையாளரான ரொஹான் வீரரத்னவின் புதல்வியான நிபுனி என்ற பெண்ணை தஹாம் சிறிசேன திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த திருமணம் கொழும்பு ஷெங்கீரிலா ஹோட்டலில் நடத்தப்படவிருந்தது. அந்த ஹோட்டல் ஈஸ்டர் தினத்தில் பயங்கரவாத குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால், திருமண வைபவம் ஹில்டன் ஹோட்டலில் நடத்தப்பட்டது.

திருமணத்தை முன்னிட்டு ஹோட்டலுக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. தண்ணீர் தாரை தாக்குதல் நடத்தும் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த பாதுகாப்பு திட்டம் காரணமாக கொழும்பு கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வவுனியா கூட்டுறவு பயிற்சி கல்லூரியை அகதி முகாமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது : ப.சத்தியலிங்கம்!!

வவுனியாவில் அமைந்துள்ள கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியை அகதி முகாமாக மாற்ற அனுமதிக்க முடியாது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவிற்கு விஜயம் செய்த வெளிவிவகார
அமைச்சர், பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து வேறு நாடுகளுக்கு செல்வதற்காக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தாபனத்தில் பதிவுகளை மேற்கொண்டு காத்திருப்போர் நீர்கொழும்பில் தங்கியிருந்ததாகவும், பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அவர்கள் வசித்த வீட்டில் இருந்து வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்றியிருப்பதனால் அவர்கள் தற்போது நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தங்கியிருப்பதால் அவர்களை தற்காலிகமாக வெவ்வேறு பிரதேசங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்வதாகவும் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் வவுனியாவில் தற்போது புனர்வாழ்வு நிலையமாக இயங்கி வரும் கூட்டுறவு பயிற்சி கல்லூரியில் 169 பேரை குறுகிய காலம் தங்க வைப்பதற்கு திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே நாம் அவரிடம் கூட்டுறவு பயிற்சி கல்லூரி என்பது வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் நடத்துவற்கான ஒரே ஒரு பயற்சி கல்லூரியாகும். இதனை ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதாக வைத்துள்ளனர்.

10 வருடங்களாக இவ்வாறு உள்ளது. இது மாகாணசபைக்குரிய கட்டிடம் எனவே இதனை எந்த தாமதமும் இன்றி எம்மிடம் ஒப்படைக்க வேண்டும். தற்போது அங்கு மீண்டும் அகதிகளை கொண்டு வந்து தங்க வைத்து கட்டிடத்தினை கையளிப்பதில் காலதாமதம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளோம். இதனை அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயற்பட முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

படிப்பில்லை ஆனாலும் மனைவிக்காக பிரம்மாண்ட அரண்மனை கட்டிய கணவன் : மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் மனைவிக்காக கணவர் அரண்மனையை கட்டியுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த படிக்காத கட்டடக் கலை நிபுணர் கனகவேல். கட்டிடக்கலையின் மீது தீராத ஆர்வம் கொண்ட கனகவேல் தனது மனைவிக்காக முகலாய கட்டடக் கலை நுணுக்கத்தில் அரண்மனை ஒன்றை கட்டி வியக்க வைத்துள்ளார்.

3 ஆயிரத்து 600 சதுர அடியில் ரூபாய் 75 லட்சம் செலவில், ஒன்றரை ஆண்டுகளில் இந்த பிரமாண்ட அரண்மனை கட்டப்பட்டுள்ளது.

வீட்டினுள் நுழைந்தவுடன் முப்பரிமாண புத்தர் சிலை, இளைப்பாற பொன்னூஞ்சல் இடம்பெற்றுள்ளது. மணிச்சித்திரத்தாழுடன் வீட்டின் உள்பகுதியில் 18 இசைத்தூண்கள், ஆண்கள் பேசுவது மட்டும் எதிரொலிக்கும் விதமாக 36 டிகிரி கோணத்தில் பெண்கள் குரல் எதிரொலிக்காத வண்ணம் தர்பார் ஹால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் உறக்கத்திற்கு ஏற்ற அமைதியான மனச்சூழலை தரும் சந்தனம், செம்மரம், கடுக்காய், வாகை எனும் 5 வகையான மூலிகையை பயன்படுத்தி கட்டிலும், ராணிகள் பயன்படுத்தும் பன்னீர், கழுதைப்பால்,ரோஜாப்பூ மற்றும் தண்ணீர் ஆகியவை சேர்த்து நீராடும் குளியல் தொட்டியும் பழங்கால அமைப்பிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தை கட்டி முடிக்க ஒன்றரை வருடங்கள் தேவைப்பட்டது என்றும், தமது மனைவின் ஆசைக்காக மட்டுமே இந்த வீடு கட்டப்பட்டது என்றும் கனகவேல் தெரிவித்துள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த மருமகள் மற்றும் மாமியார் : நள்ளிரவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் மாமியாரும், மருமகளும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் நபீனா பேகம் (55). இவர் மருமகள் தயீப் (25).

இருவரும் இரு தினங்களுக்கு முன்னர் தங்கள் வீட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் இரண்டு பெண்கள் வீட்டில் சடலமாக கிடப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த நபீனா மற்றும் தயீப்பின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இந்த கொலைக்கான காரணம் இன்னும் இன்னும் தெரியவில்லை, சம்பவ இடத்தில் சில கைரேகைகள் கிடைத்துள்ளன.

இருவரையும் கனமான பொருளை கொண்டு தலையில் தாக்கியுள்ளனர், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.

கணவர் சடலத்தை பார்த்து கதறி அழுது மயங்கிய மனைவி : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

புதுச்சேரியில் கணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையை பொலிசார் கைப்பற்றிய நிலையில் அதில் 35 வயது நபரின் சடலம் இருந்தது.

விசாரணையில் அவரின் பெயர் கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதை பார்த்த அவர் மனைவி ஸ்டெல்லா கதறி அழுது மயங்கி விழுந்தார்.

ஆனால் ஸ்டெல்லாவின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட பொலிசார் அவரிடம் விசாரித்தபோது, கணவர் குடிபோதையில் கால்வாயில் விழுந்து உயிரிழந்திருப்பார் என்றும், தற்கொலை செய்திருப்பார் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

அவரது வீட்டில் ஆய்வு செய்தபோது, அங்கு அரிசி மூட்டை சாக்குகள் சிதறிக் கிடந்தன. இதற்கிடையே பிரேத பரிசோதனையில், தலையில் அடிபட்டு உயிரிழந்த கமலகண்ணனின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு இருப்பதும், பெண்ணின் கால்களால் அவரது முகம் மிதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஸ்டெல்லாவிடம் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

தினமும் குடித்து விட்டு தொல்லை தந்த கணவர் கமல கண்ணனுடன் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் கணவரை ஸ்டெல்லா அடித்து கீழே தள்ளியதாகவும், அதில் கமலக்கண்ணன் தலை சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாகவும் கூறப்படுகின்றது.

கொலையையும் சடலத்தையும் மறைக்க தனது சகோதரி ஜெரினாவிடம் யோசனை கேட்டுள்ளார் ஸ்டெல்லா. ஜெரினாவோ தனது ஆண் நண்பரான பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த தமிழ் மணி என்பவரை வரவழைத்துள்ளார்.

சாக்கு மூட்டைக்குள் அடைத்து சடலத்தை தூக்கி வீச முடிவு செய்துள்ளனர். அதன்படி வீட்டில் இருந்த அரிசி சாக்கு ஒன்றில் கமலக்கண்ணனின் சடலத்தை போட்டுள்ளனர். அதற்குள் தலையை அடைக்க முடியாத நிலையில் அவரது கழுத்தை காலால் மிதித்து முறித்து மூட்டைக்குள் அடைத்துள்ளார் ஸ்டெல்லா.

பின்னர் தமிழ்மணியுடன் இரு சக்கர வாகனத்தில் சடலத்தை கொண்டு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கழிவுநீர்க் கால்வாயில் வீசி சென்றதாக ஸ்டெல்லா பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து கமலகண்ணனின் மனைவி ஸ்டெல்லா, அக்கா ஜெரினா, அவரது ஆண் நண்பர் தமிழ்மணி ஆகிய 3 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சகல ஊடக நிறுவனங்களுக்கும் அரசின் அவசர அறிவிப்பு!!

நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்படும் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் சகல ஊடக நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையின் மூலம் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இது போன்ற காணொளி பதிவுகள் ஊடக நிறுவனங்களில் காணப்பட்டால் அவற்றை ஒளிபரப்ப வேண்டாம் என்பதே அரசாங்கத்தின் கோரிக்கை என அதன் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

360 இற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை!!

நாட்டில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களின் பின் மதங்களுக்கு இடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை இட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 360 இற்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படவுள்ளதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை செய்யும் குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் பெரும்பாலனவை, தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுடையது என தெரியவந்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான பிரச்சாரங்களை பரப்புவோரைக் கண்டறிவதற்கு 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறான கணக்குகளை முடக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!!

பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை குறைக்கும் வகையில் பாதுகாப்பு தொடர்பான போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்களின் வருகையை கவனத்தில் கொள்ளாது அனைத்து ஆசிரியர்களையும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அறிவித்துள்ளார்.

மாணர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வருகையில் காணப்படும் குறைபாடு காரணமாக பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் காத்திருந்த பெற்றோர் : கொழும்பில் மகளின் உயிரை பறித்த IS பயங்கரவாதம்!!

கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Chelsea Decaminada என்ற பெண் அதிகாரி கடந்த 4ம் திகதி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Chelsea மீண்டு வருவார் என மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. எனினும் அவரை இழந்து விட்டோம். இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என அவரது பெற்றோருக்காக பிரார்த்தனை செய்வதாக அமெரிக்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொதுத்துறை ஆலோசகரின் அலுவலகத்தின் வணிக சட்ட மேம்பாட்டு திட்டத்தில் Chelsea திறமையான சர்வதேச திட்ட நிபுணராக செயற்பட்டு வந்தார் என்று அமெரிக்க வர்த்தக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர் தனது வாழ்க்கையை பொது பணிக்காக அர்ப்பணித்த ஒருவராகும். அத்துடன் அவர் தனது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியா பசார் வீதியில் வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல்!!

குறித்த வியாபார நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் பல முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அருகில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்

இதேவேளை குறித்த கடையின் உட்பகுதியில் “ட்ரோன்” ரக கமெரா ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக கடையின் உரிமையாளரிடம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை மின்னொழுக்கினால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என அறியப்படுவதுடன் பகுப்பாய்வு அறிக்கையின் பின்பே உறுதியாக ஏதும் கூறமுடியும் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம் : சந்தேகநபர் கைது!!

மட்டக்களப்பில் சிசுவின் சடலம் ஒன்று நேற்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு – வாழைச்சேனை, வாகனேரி குடாமுனைக் கல் பகுதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட 11 வயதான சிறுமியின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சிறுமி இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மற்றுமொரு பாரிய ஆயுத களஞ்சியம் கண்டுபிடிப்பு!!

மாவனெல்லையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆயுத களஞ்சியசாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹிங்குல பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 700 கிலோ கிராம் வெடி மருந்துக்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் அமைப்புக்கு சொந்தமான இறுவட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன.

கேகாலை இராணுவ முகாமிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஆயுத களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான ஆயுதங்கள் மற்றும் உடமைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

மட்டக்களப்பில் விபத்து : இருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு – காத்தான்குடி, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள மின்கம்பத்தில் மினிரக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெயர் பலகையும், மின்கம்பமும் சேதமடைந்துள்ளது.

மினிரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த வாழைச்சேனையைச் சேர்ந்த 30 வயதுடைய நௌசாத், 29 வயதுடைய இர்ஷாத் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் விஷேட அதிரடிபடையினரின் சுற்றிவளைப்பில் மூவர் கைது!!

வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று (08.05) மதியம் 12.30 மணியளவில் நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா குளத்தில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தலுக்காக தடை செய்யப்பட்ட சட்ட விரோதமான தங்கூசி வலைகளை வைத்திருந்த குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலுவலகத்தின் மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர் யோகநாதன் நிசாந்தன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களுடனும், மடுகந்தை விஷேட அதிரடிபடையின் பொறுப்பதிகாரி இன்ஸ் பெக்டர் அமுனுபுர நெறிப்படுத்தலில் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட வலை மற்றும் நபர்களை 16.05 அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

வவுனியா நகரசபையின் விசேட அமர்வு : குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!!

வவுனியா நகரசபையின் விசேட அமர்வு இன்று (08.05) நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் நான்கு பேர் பணியின்போது மரணித்திருந்த நிலையில் அவர்களின் குடும்பங்களுக்க நிதியுதவி வழங்குவதற்கான விசேட கூட்டம் நடைபெற்றிருந்தது.

இவ் விசேட அமர்வில் மரணமாக சுகாதார ஊழியர்களின் குடும்பங்களுக்கு தற்காலிகமாக தலா ஒன்றரை இலட்சம் ரூபா நகரசபையால் வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டதுடன், நகரசபை உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் நிதி திரட்டி பாதிக்கப்ட்ட குடும்பங்களுக்கு வழங்குவதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

நகரசபை உறுப்பினர் சேனாதிராஜா பணியின் போது மரணித்த சுகாதாரத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அதே நேரம் அவர்களுடைய மரணம் தொடர்பாக முழுமையான விசாரணை ஒன்று மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நகரசபை தவிசாளர் இ.கௌதமன் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார்.

நகரசபை விசேட அமர்வில் உரையாற்றிய நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) பணியின் போது இறந்த நகரசபை சுகாதாரத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்க கூடிய வகையில் சபை பரீசிலிக்க வேண்டும் வர்த்தமானியிலும் அவ்வாறான ஒரு சரத்து இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

பணியின் போது மரணித்த சுகாதாரத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 25 இலட்சம் ரூபா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நகரசபை உறுப்பினர் பாலசிங்கம் பிரசன்னா முன்வைத்திருந்ததுடன் அதற்கான முயற்சியை சபை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட பொது மக்களுக்கு சபையில் உறுப்பினர்களால் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.