முல்லைத்தீவில் இராணுவ அதிகாரி பலி : ஒருவர் படுகாயம்!!

இராணுவ அதிகாரி பலி

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (16.04.2019 ) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு 03ஆம் கட்டைப்பகுதியில் முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை நோக்கி பயணித்த கன்டர் வாகனம் ஒன்று வற்றாப்பளையில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோத முற்பட்ட வேளை அதை தவிர்ப்பதற்காக வீதியினை விட்டு விலகி ஓராமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது வீதியின் ஓரமாக கடமையில் நின்ற இராணுவ பொலிஸ் பிரிவை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் மீது கன்டர் வாகனம் மோதிக்கொண்டதில் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய முள்ளியவளை குமாரபுரம் பகுதியினை சேர்ந்த கன்டர் வாகனத்தின் சாரதியை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்த விபத்தின் போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகத்தை சேர்ந்த 22 வயதுடைய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பத்திரன என்ற இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளதுடன் பொலநறுவையைச் சேர்ந்த 32 வயதுடைய திசாநாயக்க என்ற இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.

திருகோணமலையில் ஒரு பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள் : கழுத்தறுக்கப்பட்ட இளைஞன்!!

கழுத்தறுக்கப்பட்ட இளைஞன்

திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை தபால் நிலைய வீதியை வசிப்பிடமாகக்கொண்ட தங்கதுரை தனுசன் (21 வயது) என்பவரே நேற்று செவ்வாய்க்கிழமை காலை இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக்காணிக்கு கொலையாளியும் குறித்த இளைஞனும் மோட்டார் வண்டியில் சென்றுள்ளனர். இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றவேளை வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து குறித்த கொலையாளி கூரிய ஆயுதம் ஒன்றினால் இளைஞனின் கழுத்தில் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து காயப்பட்டவர் தான் தப்பித்துக்கொள்வதற்காக வெற்றுக்காணியிலிருந்து ஓடிச்சென்று கடற்படைத்தளத்திற்கு முன்பாக விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்றபோதே அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த கொலையின் சந்தேகநபர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடத்தப்பட்டு சவுதி அரேபியாவில் விற்கப்பட்ட பெண்கள்!!

கடத்தப்பட்டு விற்கப்பட்ட பெண்கள்

மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று 14 இந்திய பெண்களை சவுதி அரேபியாவில் விற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திரிபுராவைச் சேர்ந்த ஒரு பெண் துபாய்க்கு கடத்தப்படவிருந்த நிலையில் அப்பெண்ணை உத்தரபிரதேச காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த சூழலில், துபாயில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி அப்பெண்ணை கடத்திய ருமானா பேகம் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மனித கடத்தல் சம்பவத்தில் ருமானா பேகம் முக்கிய நபராக செயல்பட்டது மட்டுமல்லாமல், இதற்கு முன்பு 14 பெண்களை கடத்தியிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

தற்போது மீட்கப்பட்ட பெண்ணுக்கு 20,000 ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக இவர் உறுதியளித்திருக்கிறார். இதே போல், கடத்தப்பட்ட பிற பெண்களிடம் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி அரபு நாடுகளில் அப்பெண்களை மனித கடத்தல் கும்பல் விற்றிருக்கிறது.

சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அப்பெண்களை அழைத்து சென்றவுடன் கடவுச்சீட்டை பறித்துக்கொண்டு பாலியல் மற்றும் உடல் ரீதியான சுரண்டலில் பெண்களை ஈடுபடுத்தியதாக கூறப்படுகின்றது. 2016ல் மனித கடத்தல் தொடர்பாக வெளியான அமெரிக்க அரசின் அறிக்கையில், கட்டாய வேலை மற்றும் மனித கடத்தல் உள்ளிட்டவை நடக்கும் இடமாக இந்தியா இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மனித கடத்தலை குறைந்தபட்சமாக களைவதற்கான ஒழுங்குமுறைக்கூட இந்தியாவிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் முதன் முறையாக மனித கடத்தலுக்கு எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டிருந்தாலும், அது இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பிலேயே இருக்கின்றது.

அதற்கு, மோடி தலைமையிலான அரசு போதிய அளவு முன்னுரிமை அளிக்கவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!!

கோர விபத்து

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (17ஆம் திகதி) அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையிலிருந்து தியதலாவ நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் மஹியங்கனையிலிருந்து பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தில், வேனில் பயணித்த 12 பேர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று பெண்களும் அடங்குகின்றனர். உயிரிழந்தவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மேலும் இரண்டு பெண்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வீதியின் பிழையான பகுதியில் பயணித்துள்ளார். இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை மைதானத்தில் வெளிச்சம் இன்மையால் விளையாட்டு வீரர்கள் அவதி!!

விளையாட்டு வீரர்கள் அவதி

வவுனியா நகரசபை மைதானத்தில் மாலை நேரங்களில் வெளிச்சம் இன்மையால் விளையாட்டு வீரர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை மைதானத்தை மாலை நேரங்களில் விளையாட்டு வீரர்கள் உட்பட பொதுமக்கள் உடற்பயிற்சிக்காக பயன்படுத்திவரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக மாலை 6 மணிக்கு மேல் மின்விளக்குகள் போடப்படாமையினால் மைதானம் இருண்டு காணப்படுவதாக விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.

வவுனியா நகரசபையில் நிரந்தரமாக எலற்றீசியன் (மின் இணைப்புக்களை பழுது பார்ப்பவர்) ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் மைதானம் மற்றும் சில உள்ளக விளையாட்டு அரங்குகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் இருளடைந்து காணப்படுவதுடன் மாலை நேரப்பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்கள் இருட்டில் தமது பயிற்சிகளை சிரமத்தின் மத்தியில் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாணவர்கள் வடமாகாண விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை!!

அண்மையில் நடைபெற்றவட மாகாண விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலய மாணவர்கள் முதல் நான்கு நிலைகளை பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்கள்.

தேசியமட்ட பரீட்சைக்கு வட மாகாணத்தில் தெரிவு செய்யப்படும் முதல் 12 மாணவர்களில் 07 மாணவர்கள் வவுனியா தெற்கு கல்விவலய மாணவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இதில் முதலாம் இடத்தினை வவுனியா தமிழ் மத்திய ம.வி மாணவன் செல்வன் எம்.யதுர்சன், இரண்டாம் இடத்தினை இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவி செல்வி ஜெ.சாகித்தியா, மூன்றாமிடத்தினை வவுனியா தமிழ் ம.ம.வி மாணவன் செல்வன் எஸ். சன்சய்,

நான்காமிடத்தினை சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி செல்வி ரி.கபிசா பெற்றுக்கொண்டதுடன் ஆறாமிடத்தை வவுனியா தமிழ் ம.ம.வி மாணவன் செல்வன் எஸ்.கரிஸ், பத்தாம் மற்றும் பதினோராம் நிலைகளை இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகளான செல்வி எஸ்.ஆரபி, செல்வி எஸ்.சப்தகி ஆகியோர் தமதாக்கி தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.

இவர்களை வவுனியா மாவட்ட விஞ்ஞான கள கற்கை நிலைய முகாமையாளர் அ.ஜெய்கீசன், வவுனியா தெற்கு கல்வி வலய விஞ்ஞான ஆசிரியஆலோசகர் இ.மாதவன், ஓய்வுநிலை விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.இந்திரலிங்கம், மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்றுவித்திருந்தனர்.

வவுனியா மடுக்குளத்தில் சிறுபோகத்திற்கான தண்ணீரை நபரொருவர் தடுத்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!!

விவசாயிகள் குற்றச்சாட்டு

வவுனியா மடுக்குளத்தில் சிறுபோகத்திற்கு குளத்திலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நபரொருவர் அடாத்தாக தடுத்து நிறுதியுள்ளதாக மடுக்குளம் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வவுனியா மடுக்குளம் கிராமத்தில் சிறுபோக நெற்செய்கைக்காக நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தால் ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் நெற்செய்கை காணியில் குறித்த நபர் கிராம மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 13 ஏக்கர் வயல் நிலத்திற்கு அலியா மருதமடுக்குளத்திலிருந்து தண்ணீர் திறந்து விடாமல் அடாத்தாக தடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த நபரின் அடாவடித்தனம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கும் மடுக்குளம் விவசாயிகள் இப்பிரச்சனை தொடர்பாக நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்ட செயலகத்திலும் எழுத்து மூலம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அரச திணைக்களத்தின் முடிவுகளை மீறி அடாவடித்தனமாக செயற்பட்டுவரும் குறித்த நபரின் செயற்பாடு காரணமாக கிராமத்தில் சிறுபோக நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாகவும் கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் கிராமத்தின் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த அதிசய பெண் : வியக்கும் வைத்தியர்கள்!!

அதிசய பெண்

அமெரிக்காவில் வாழும் இலங்கை பெண் ஒருவர் மரணத்தை போராடி வென்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. கண்டி வத்தேகமவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வாழும் ஷவினி பெர்ணான்டோ என்ற பெண்ணே இவ்வாறு மரணத்தை வென்றுள்ளார்.

அவரை அமெரிக்க வைத்தியர்கள் அதிசய பெண்மனி என்றே அழைக்கின்றனர். 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஷவினி தனது நண்பர்களுடன் வில்பத்து காட்டிற்கு சென்றுள்ளார். இதன் போது திடீரென ஷவினியின் உடல் முழுவதும் நீல நிறமாகியுள்ளது.

சீஸ் சாப்பிட்டதனால் அவ்வாறு ஏற்பட்டிருக்கும் என நண்பர்கள் கூறினார்கள். வீட்டிற்கு வந்தவுடன் கண்டியில் உள்ள வைத்தியசாலையின் பிரதான வைத்தியரை சந்தித்துள்ளனர். வைத்தியரின் அறிக்கையை பார்க்கும் போது அவரது இதயத்தில் துளை இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவர் இன்னும் 2 வருடங்கள் தான் வாழ்வதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

வேறு நாட்டிற்கு சென்றாலும் இந்த நிலைமையை மாற்ற முடியாதென வைத்தியர் குறிப்பிட்டார். எனக்கு கவலையாகவும் கோபமாகவும் இருந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மீண்டும் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷவினியின் தங்கை அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார். அங்கு ஷவினி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். “நான் விமானத்தில் செல்லும் போதும் ஒக்சிஜன் அணிந்தே சென்றேன். அமெரிக்காவில் அவசியமான சிகிச்சை பெற்று வந்தேன்.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போது Eisenmenger’s Syndrome என்ற அரிய வகை நோய் ஒன்று தாக்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறப்பு முதல் காணப்பட்ட இதயம் தொடர்பான நோய் காரணமாக இந்த அரிய வகை நோய் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

33 வருடங்களாக இலங்கை வைத்தியர்களால் இந்த நோயை கண்டுபிடிக்க முடியாமல் போனது. அமெரிக்கா சென்ற பின்னர் 6 வாரங்கள் சிகிச்சை பெற்றேன். தற்போது 2000 அடிக்கு மேல் என்னால் நடக்க முடிகின்றது.

அமெரிக்கா செல்வதற்கு முன்னர் பிரித்தானிய Portsmouth பலக்கலைகழகத்தல் பொறியியல் பட்டதாரி கற்கையை மேற்கொண்டேன். அதன் பின்னர் அவுஸ்திரேலிாவில் Edith Cowan பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்றேன். அமெரிக்காவில் சிகிச்சை பெறும் சந்தர்ப்பத்தில் தொழில்நுட்பம் தொடர்பான பிரிவில் பட்டம் பெற்றேன்.

ஒரு நான் திடீரென மீண்டும் எனது உடல் நீளமானது. எனது மூளைக்கு செல்லும் ஒக்ஸிஜன் அளவு குறைந்து காணப்பட்டதனை என்னால் உணர முடிந்தது. 3 நிமிடங்கள் மாத்திரமே என்னால் உயிர் வாழ முடியும் என நான் உணர்ந்தேன். என்னால் முடிந்த அளவு நெஞ்சின் மீது அடித்துக் கொண்டேன். மீண்டும் மரணத்தில் இருந்து மீண்டேன்.

அன்று சிறிய ஒக்ஸிஜன் குழாய் ஒன்றுடனே சென்று வர ஆரம்பித்தேன். இந்நிலையில் எனக்கு ஒரு நாடமாடும் ஒக்ஸிஜன் ஆடை போன்று ஒன்றை தயாரிக்கும் யோசனை ஏற்பட்டு அதனை வைத்தியரிடம் கூறினேன். யாரும் அதனை முயற்சிக்கும் முன்னர் என்னை தயாரிக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

அதற்கமைய OxiWear என்ற ஒன்றை தயாரித்தேன். அது தொலைபேசியுடன் தொடர்புபடும் வகையில் தயாரிக்கப்பட்டது. யாராவது ஒருவர் ஆபத்தான நிலைக்குள்ளாகினால் நெருக்கமானவர்களுக்கு தகவல் செல்லும் வகையில் இதனை நிர்மாணித்தேன்.

அதனை தயாரித்து போட்டி ஒன்றிலும் வெற்றி பெற்று 3500 டொலர் வெற்றி பெற்றேன். அத்துடன் தனக்கு ஒரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளவுள்ளது. அதற்காக நடந்தே சென்று நிதி சேகரித்தேன். ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை சேகரித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை…. ஆனால் திடீரென குழந்தை பெற்ற பெண்!!

திடீரென குழந்தை பெற்ற பெண்

லண்டனை சேர்ந்த இளம்பெண் தான் கர்ப்பமாக இருப்பது தெரியாமலேயே இருந்த நிலையில் அவருக்கு குளியல் தொட்டியில் ஆரோக்கியமான குழந்தை பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லண்டனை சேர்ந்தவர் சார்லேட் டுபார்ட் (24). இவர் தனது கணவர் மிகுல் ஏஞ்சல் (28) உடன் வசித்து வந்தார். சார்லேடுக்கு கடந்த ஜனவரி மாதம் இறுதியில் திடீரென எடை கூடியது.

ஏன் இப்படி திடீரென எடை கூடியது என அவர் குழம்பி வந்த நிலையில் ஜனவரி 29ஆம் திகதி குளியல் தொட்டியில் சார்லேட் குளித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.அப்போது தான் சார்லேட் கர்ப்பமாக இருந்ததை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அப்போது மிகுல் வெளியில் இருந்த சூழலில் பின்னர் வீட்டுக்கு வந்தார், தனக்கு குழந்தை விடயத்தை சார்லேட் கணவரிடம் கூற அவர் நம்பவில்லை. அதோடு, சாலையில் கிடந்த குழந்தையை சார்லேட் தூக்கி கொண்டு வந்துவிட்டதாக கூறினார்.

இதன்பின்னர் ஒருவழியாக கணவரை சார்லேட் சமாதானப்படுத்தி குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது குழந்தையுடன் சார்லேட் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவர் கூறுகையில், ஜனவரியில் என் உடல் எடை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

பின்னர் திடீரென ஒருநாள் குழந்தை பிறந்தது, இதை என்னால் நம்பவே முடியவில்லை, குழந்தை பிறக்கும் சில காலத்துக்கு முன்னர் தான் என் வயிறு பெரிதானது. இது எனக்கு பிறந்த குழந்தை தான், சாலையில் இருந்து எடுத்த குழந்தை கிடையாது என என் கணவரை நம்பவைக்க மிகவும் கஷ்டப்பட்டேன்.

கர்ப்பமாக இருப்பது என தெரியாததால் மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற விடயங்களை நான் செய்தேன். ஆனால் அதெல்லாம் குழந்தையை பாதிக்காமல் இருந்தது அதிசயம் தான்.

எல்லாவற்றையும் விட கர்ப்பமாக இருந்த சமயத்தில் கருத்தடை மாத்திரைகளை நான் சாப்பிட்டேன், அதே போல 9 மாதங்களுக்கு என் மாதவிடாய் சரியாகவே வந்தது. எல்லாவற்றையும் மீறி எனக்கு குழந்தை பிறந்தது அற்புதமாகவே கருதுகிறேன், குழந்தை பிறந்த பின்னர் தொப்பிள் கொடியை நானே அறுத்தேன் என கூறியுள்ளார்.

வவுனியா பூந்தோட்டத்தில் சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா!!

சித்திரை விளையாட்டுவிழா

சித்திரை புதுவருடபிறப்பை முன்னிட்டு பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய கலை கலாச்சார கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் பெருவிழா கழகத்தின் தலைவர் லி.சிவச்செல்வன் தலைமயில் நேற்றுமுன்தினம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

சமுக ஒற்றுமையை முன்நிறுத்தி மிக பிரமான்டமாகவும் பெருமையுடனும் நடைபெற்ற கலைகலாச்சார விளையாட்டு பெருவிழா காலை 9.30 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை நடைபெற்றிருந்தது.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான நிகழ்ச்சிகளுடன், முட்டி உடைத்தல், கரப்பந்தாட்டம், தலையணைச் சண்டை, பனிஸ் உண்ணுதல், கயிறு இழுத்தல் மற்றும் சங்கீதக் கதிரை, சாக்கோட்டம் போன்ற பல்வேறுபட்ட கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வில்சிறப்பம்சமாக 2019ம் ஆண்டிற்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டியும் வெகு விமரிசையாக இடம்பெற்றிருந்தது.போட்டியில் மருதநிலா அணியை வீழ்த்தி, 786அணி வெற்றிக்கிண்ணத்தைத் சுவீகரித்துகொண்டது.

மேலும் இந் நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களிற்கு சிறப்பு பரிசில்களும், வெற்றிக் கிண்ணங்களும், காசோலைகளிம் வழங்கி மகிழ்விக்கப்பட்டது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர்களான த.பரதலிங்கம், பா.பிரசன்னா, உதைபந்தாட்டசங்க செயலாளர் க.நாகராஜன் மருத்துவர் சூர்யகுமார், செ.மதுரகன், பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்திற்கான புதிய பிரதானவாயில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கபட்டது.

லண்டனில் வசிக்கும் இ.மகேந்திரராஜாவின் நிதிஉதவியில் குறித்த பிரதானவாயில் அமைக்கபட்டு புதுவருட தினமான நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.

கழகத்தின் தலைவர் லி.சிவசெல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மருத்துவர்களான எஸ்.சூரியகுமார், செ.மதுரகன், நிதிபங்களிப்பு வழங்கியவரின் குடும்ப உறவினர்கள் கலந்துகொண்டனர்.

பேச மறுத்த இளம்பெண்ணை 15 இடங்களில் சரமாரியாக குத்திய இளைஞனின் வெறிச்செயல்!!

இளைஞனின் வெறிச்செயல்

சென்னையில் தன்னுடன் பேச மறுத்த காதலியை, வாலிபர் ஒருவர் 15 இடங்களில் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியைச் சேர்ந்தவர் கவின்(24). இவரும் வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த காவ்யா(22) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் காவ்யாவுக்கு வேலை கிடைத்த நிலையில், கவின் வேலைக்கு செல்லாமலும், பொறுப்பில்லாமலும் நடந்துகொண்டுள்ளார்.

இதனால் காவ்யா அவருடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது கவினுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, காதலிக்கும்போது பரிமாறிக் கொண்ட பரிசுப்பொருட்களை திருப்பி கொடுத்துவிடலாம் என்று கூறி காவ்யாவை வரவழைத்துள்ளார் கவின்.

தன்னை சந்திக்க வந்த காவ்யாவை பேனாக்கத்தியால் கழுத்து, வயிறு, கை என 15 இடங்களில் சரமாரியாக கவின் குத்தியுள்ளார். இதனால் காவ்யா அலறியதைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் திரண்டு கவினைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் காவ்யா அடையாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கவின் பொதுமக்களிடம் சிக்கியபோது தனது கை மணிக்கட்டை அறுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் காவ்யாவிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், ‘கவினின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் ஒரு மாசமாக நான் கவினிடம் பேசுவதை தவிர்த்தேன். நேற்று மாலை கூட நான் பேசவில்லை. அதனால் தான் ஆத்திரமடைந்து, என் கூட பேசமாட்டியா என்று கேட்டு கேட்டு கத்தியால் குத்தினார்’ என தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்த சிறுமி : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

தீக்குளித்த சிறுமி

திருவாரூர் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி, பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமையன்று பெற்றோர் வெளியில் சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை அறிந்துகொண்ட அப்பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியை அடித்து, துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி பெற்றோரின் கண்முன்னே தீக்குளித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தாஸ், விஜய், அஜீத், முருகேஷ் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாரிஸில் தேவாலயம் தீப்பற்றி எரிந்த போது, வீதி வீதியாக மக்கள் கதறி அழுத சோகக் காட்சிகள்!!

மக்கள் கதறி அழுத சோகக் காட்சிகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிபத்திற்கு உள்ளாகிய ‘நோட்ரேடேம் கேதட்ரல் (Notre-Dame-de)’ தேவாலயம் பேரழிவைச் சந்தித்தபோது, வீதிகள்தோறும் பாரிஸ் மக்கள் அழுது புலம்பிய காட்சி உலகையே சோகத்தில் ஆழ்த்திவருகின்றது.

கிறிஸ்தவர்களின் புனிதவெள்ளிக்கு இன்னமும்3 நாட்கள் உள்ள நிலையில் இடம்பெற்ற இந்த தீவிபத்தால் மத யாத்திரிகர்கள் பெரும் வருத்தத்தில் மூழ்கியுள்ளனர்.

இன்று காலை ஆலயத்துக்கு அப்பால் உள்ள வீதிகளில் பக்தர்கள் முழந்தாழிட்டு பிரார்த்தனைகளை செய்துவருகின்ற காட்சிகளும் தற்பொழுது வெளியாகிவருகின்றன.

யாழ்ப்பாணத்தில் மூவரின் உயிரைப் பறித்த மின்னல்!!

மூவரின் உயிரைப் பறித்த மின்னல்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு மயிலங்காடு (ஜே. 218) மின்னல் தாக்கி மூன்று பேர் இறந்துள்ளனர். புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர்.

இதன்போது ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோரில் ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் வேலைசெய்துகொண்டிருந்த போது திடீரென மழை பெய்த காரணத்தினால் அருகில் இருந்த தென்னைமரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர்.

இதன் போது இடி மின்னல் குறித்த தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். உணவு எடுக்கச் சென்றவர் திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் வயது 48, கந்தசாமி மைனாவதி வயது 52 மற்றும், ரவிக்குமார் சுதா வயது 38 ஆகியோரே பலியாகியுள்ளனர்.

13 வயதிலிருந்து தாயிடம் அனுபவித்த கொடுமை : ரகசியத்தை கொட்டிய பிரபல நடிகை!!

நடிகை சங்கீதா

13 வயதில் இருந்து தன்னை தன் தாய் நிம்மதியாக வாழவிடவில்லை என்கிறார் நடிகை சங்கீதா. நடிகை சங்கீதா பாடகர் க்ரிஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் தனது தாய் பற்றி ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அன்புள்ள அம்மா, என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. என் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு 13 வயதில் இருந்து வேலை செய்ய வைத்ததற்கு நன்றி. அனைத்து பிளான்க் செக்குகளில் கையெழுத்திட வைத்ததற்கு நன்றி.

வாழ்நாளில் வேலைக்கே செல்லாத உங்களின் குடிகார, போதைப் பொருளுக்கு அடிமையான மகன்களுக்காக என்னை பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி. உங்களின் முடிவுகளை ஏற்காததால் எங்கள் வீட்டிலேயே எங்களை டார்கெட் செய்வதற்கு நன்றி.

நான் போராடும் வரை எனக்கு திருமணம் செய்து வைக்காததற்கு நன்றி. அடிக்கடி என் கணவரை தொந்தரவு செய்து என் குடும்ப நிம்மதியை கெடுப்பதற்கு நன்றி. ஒரு தாய் எப்படி இருக்கக் கூடாது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. அனைத்து பொய் புகார்களுக்காக நன்றி. ஒரு நாள் நீங்கள் உங்கள் ஈகோவை விட்டுவிட்டு என்னை பார்த்து பெருமைப்படுவீர்கள் என்று சங்கீதா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சங்கீதாவின் ட்வீட்டை பார்த்த கணவர் க்ரிஷ், நீ பட்ட கஷ்டம் எனக்கு தெரியும், உன் குடும்பத்திற்காக நீ செய்தது அனைத்தும் தெரியும், உனக்கு நான் இருக்கிறேன். அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு, வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு.. என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்த கணவனின் நண்பரை கொலை செய்த இளம்பெண்!!

கொலை செய்த இளம்பெண்

பெங்களூரில் பாலியல் தொல்லை கொடுத்த கணவரின் நண்பரை இளம்பெண் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். பெங்களூரை சேர்ந்த மோகன் (30) என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ரம்யா (24) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். அதேபோல, மோகனின் தூரத்து உறவினரும், நண்பருமான டிரைவர் மது (24) என்பவரும் நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன் வீட்டில் மது இறந்த நிலையில் கிடப்பதாக அவருடைய சகோதரன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் தப்பியோட முயற்சித்த மோகன் மற்றும் ரம்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மோகனின் நண்பன் என்கிற முறையில் ரம்யாவிடம் சாதாரணமாக பேசி வந்துள்ளார். நாளடைவில் மதுவின் பேச்சு மாறிப்போய், ஆபாசமாக படுக்கைக்கு அழைத்துள்ளார்.

இதனை மோகனுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என நினைத்த ரம்யா, மதுவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆனால் மது, ரம்யாவின் சகோதரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் வற்புறுத்த ஆரம்பித்துள்ளார்.

இதில் மனமுடைந்த ரம்யா வெள்ளிக்கிழமையன்று தன்னுடைய கணவரிடம் நடந்தவை குறித்து கூறியுள்ளார். உடனே மோகனும், மதுவை வீட்டிற்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மது, அங்கு நின்று கொண்டிருந்த ரம்யாவின் சகோதரியை தாக்கியதோடு, மோகன் சட்டையை பிடித்தும் இழுத்துள்ளார்.

இதனை பார்த்த ரம்யா, அங்கிருந்த இரும்புக்கம்பி ஒன்றை வைத்து, மதுவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பின்னர் மோகனும் அந்த இரும்புக்கம்பியை வாங்கி தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த மது சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.