50 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி : ஒருவர் படுகாயம்!!

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் கிளங்கன் பகுதியில், நேற்று இரவு லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

லொறியின் சாரதியே இதன்போது, படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைகளுக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியிலிருந்து ,பொகவந்தலாவிற்கு கோழி ஏற்றிச்சென்ற லொறியே, இவ்வாறு பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வேக கட்டுப்பாட்டை இழந்தமையே குறித்த விபத்திற்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனிந்த காதல், கசந்தது திருமணம் : 10 மாதத்தில் புதுப்பெண் எடுத்த சோக முடிவு!!

புதுப்பெண் எடுத்த சோக முடிவு

ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் திருமணமான 10 மாதத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தூர் தாலுகா ஹிரேபண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா என்ற இளம்பெண் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள நபரை காதலித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பின்னரும் திவ்யா, ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை திவ்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த சமயத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தங்கள் மகள் சாவுக்கு அவளுடைய கணவரின் குடும்பத்தினர் தான் காரணம் என திவ்யாவின் பெற்றோர் புத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். பொலிசார் வழக்குப்பதிவு செய்து திவ்யாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியா புதூர் பகுதியில் பதற்றம் : இராணுவத்தினர் குவிப்பு!!

 

புதூர் பகுதியில் பதற்றம்

வவுனியா புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது தப்பியோடிய நிலையில் அவரது பையில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து அப்பகுதியில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பதுங்கியிருந்துள்ளனர்.

இதன்போது இரவு 10 மணியளவில் அங்கு வந்த ஒருவரை மறித்து சேதனையிட முற்பட்ட போது குறித்த நபர் தான் கொண்டு வந்த பையை வீசிவிட்டு அப்பகுதியில் இருந்து காட்டுக்குள் ஓடியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பையில் இருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் அதன் கூடு உட்பட மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.


இந் நிலையில் குறித்த நபரை தேடியறியும் முகமாகவும் மேலும் காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற வகையிலும் புதூர் முதல் கனகராயன்களம் வரையுமான காட்டுப்பகுதி மற்றும் கிராமங்களை உள்ளடக்கி இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியும் நாடப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருவதுடன் யுத்த நிறைவின் பின்னர் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதி மக்களின் இயல்பு நிலையும் பாதிப்படைந்துள்ளது.

வவுனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களால் பதற்றம் : பெருமளவு பொலிஸார் குவிப்பு!!

 

வவுனியா – புதூர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டொன்று காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இனந்தெரியாதோரால் புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்கு செல்லும் பகுதியில் உள்ள புகையிரத கடவைக்கு அருகாமையிலேயே இவ் ஆயுதங்கள் கைவிடப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் நூறிற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு மற்றும் தேடுதலுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரிக்கு எதிராக சிறுமியின் செயற்பாடு : நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்!!

ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கும் வகையில் 14 வயதான சிறுமி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தான் தங்கியிருக்கும் இடத்தின் பிரச்சினையை தீர்த்து தனது ஊனமுற்ற தந்தை மற்றும் தாய்க்கு சுதந்திரமாக வாழ வழி ஏற்படுத்துமாறு குறித்த சிறுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சிறுமி அம்பாறை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

“ஜனாதிபதி அவர்களே நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமா?” என்ற பதாகை ஒன்றையும் அவர் ஏந்தியிருந்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் அம்பாறை நகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவ்விடத்திற்கு வருகைத்தந்து இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அறிவித்துள்ளனர்.

இந்த சிறுமியின் தந்தை ஊனமடைந்த ஒருவராவார். அவரும் தாயும் தந்தையும் அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படை நிலையத்திற்கு அருகில் வீடு ஒன்றை அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

எனினும் அந்த காணி வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமானதென கூறி குறித்த குடும்பத்தினர் அவ்விடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் குறித்த சிறுமியின் தாய்க்கு எதிராக வனவிலங்கு திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கமைய அவர் கைது செய்யப்பட்டு 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குறித்த 7 நாட்களும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் குறித்த சிறுமி தனது தந்தையை பார்த்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தங்களுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் அவர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

புத்தாண்டில் யாழ்ப்பாணத்தில் தர்ம அடி வாங்கிய இளைஞர் குழுவினர்: வசமாக மாட்டிக் கொண்ட நால்வர்!!

யாழ். கொக்குவில் பகுதியில் வழமை போன்று வன்முறையில் ஈடுபட முயற்சித்த ஆவாக் குழுவினருக்கு அப்பகுதி இளைஞர்கள் தர்ம அடி கொடுத்து அனுப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையம் முன்பாக சுமார் 90 பேருக்கும் அதிமான இளைஞர்கள் மோட்டார் வண்டியில் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர். எனினும் புத்தாண்டு ஆகையால், பெரும்பாலான இளைஞர்கள் வீடுகளில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமாக வந்த 90 பேர் அடங்கிய இளைஞர்கள் குழுவை வழிமறித்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.

இதனையடுத்து சுதாகரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஆனால் அகப்பட்டவர்கள் மீது அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, அதில் நான்கு பேர் வசமாக மாட்டிக் கொண்டனர்.

தப்பியோடியவர்களில் சிலரின் மோட்டார் சைக்கிள்களும் சிக்கியுள்ளன. இதேவேளை மாட்டிக் கொண்டவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் வாகனத்தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டு விநியோகம்!!

வவுனியா வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயரில் வாகனத் தரிப்பிட குத்தகையாளர் என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்ட வாகனத்தரிப்பிடத்தின் பற்றுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு எதிராக நகரசபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரசபையினருக்குச் சொந்தமான நகரப்பகுதிகளிலுள்ள வாகனத்தரிப்பிடத்தினை கேள்வி கோரல் மூலம் பெற்றுக்கொண்ட ஒப்பந்ததாரர் ஒருவர் அதனை வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயரில் மாற்றி பற்றுச்சீட்டு அச்சடிக்கப்பட்டு இன்று முதல் வாகனத்தரிப்பிடத்தில் வைத்து வாகனங்கள் நிறுத்துவோருக்கு போலி பற்றுச்சீட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து பொதுமகன் ஒருவரினால் இன்று மதியம் நகரசபைத்தலைவரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகரசபை அதிகாரிகள் குறித்த வாகனத்தரிப்பிடத்தின் குத்தகையைப் பெற்றுக்கொண்ட நபருடன் தொடர்புகொண்டு உங்களது பெயரில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனத்திப்பிட குத்தகையை நலன்புரிச்சங்கத்தின் பெயரில் பற்றுச்சீட்டு அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதை உடனடியாக தடை செய்யுமாறும் குத்தகைக்காரரின் பெயரில் பற்றுச்சீட்டினை அச்சடித்து வாகனத்தரிப்பிடத்தில் வைத்து விநியோகம் மேற்கொள்ளுமாறு குத்தகைதாரருக்கு பணிக்கப்பட்டுள்ளது.

குறித்த குத்தகைதாரர் வர்த்தகர் நலன்புரிச்சங்கம் பதிவு செய்யப்படவில்லை இதனாலேயே அதன் உறுப்பினரான எனது பெயரில் கேள்வி கோரல் மூலம் வாகனத்தரிப்பிடம் பெற்றுக்கொள்ளப்படடுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயரைத் தொடர்ந்து பாவித்து வாகனத்தரிப்பிடத்திற்கான பற்றுச்சீட்டு விநியோகம் மேற்கொள்வதற்கு நகரசபையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று முதல் வாகனத்தரிப்பிடத்தில் வாகனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ள வர்த்தகர் நலன்புரிச்சங்கத்தின் பெயர் பொறிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள் அனைத்தையும் மீளப் பெற்றுக்கொண்டு புதிய பற்றுச்சீட்டு அச்சடிக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்வதாக நகரசபையினருக்கு குத்தகைதாரரால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள் : வவுனியாவில் குப்பைகள் போராட்டம்!!

வவுனியா நகரசபையிடம் குப்பைகள் கோரிக்கை விடுவது போன்று பாதாதையொன்று குப்பைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட குப்பைகளுக்கு நடுவில் நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள் என எழுதப்பட்ட பாதாதை ஒன்று இன்று (01.01.2019) பிற்பகல் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் அன்மைக்காலமாக பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக நகரில் கூட கழிவுகளை சீராக அகற்றவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பதாதை வைக்கப்பட்டுள்ளது.

வைரவப்புளியங்குளம் வீதி , கதிரேசன் வீதி, வைரவர் கோவில் அருகே போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக நகரசபையினரால் குப்பைகள் அகற்றப்படாமையினால் குப்பைகள் வீதி முழூவதும் சிதறிக்கிடப்பதினை காணக்கூடியதாகவுள்ளது.

வவுனியாவில் புதுவருடத்தை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள்!!

 

புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.

அந்தவகையில் வவுனியா குடியிருப்பு தூய ஆவியானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.

இதன்போது அதிகாலை 12 மணிக்கு புதிய ஆண்டை வரவேற்றும், இந்த ஆண்டு சிறப்பானதாக அமைய வேண்டியும் வழிபாடுகள் இடம்பெற்றதுடன், ஒவ்வொருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாற்றிக் கொண்டனர். இதில் பலரும் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்றனர்.

வவுனியாவில் முச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்கள் கைது!!

வவுனியாவில் நேற்று(31.12) இரவு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன் முச்சக்கர வண்டியிலிருந்து வாள், கத்தி என்பன மீட்க்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நேற்று இரவு 10.30 மணியளவில் கோவில்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனை செய்தபோது முச்சக்கரவண்டிக்குள் வாள், கத்திகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஆச்சிபுரம், எல்லப்பர்மருதங்குளத்தைச் சேர்ந்த 23,23,24 வயதுடைய மூவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா நகரில் ஆறு கடைகளில் தொடர் திருட்டு!!

வவுனியா நகரப் பகுதியில் உள்ள மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள 6 வியாபார நிலையங்களில் தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (31.12) இரவு 8 – 9.30 மணிக்கிடையில் இந்த தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள மொத்த மரக்கறி விற்பனை நிலையத் தொகுதிக்குள் அமைந்துள்ள 6 கடைகளின் கூரைகளைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கு உள்ள காசுப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பணங்களைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சீசீடீவி கமரா பொருத்தப்பட்டிருந்த கடைகளில் நுழைந்த திருடர்கள் அவற்றை செயிழக்கச் செய்த பின் திருட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தொகுதியில் 35 வர்த்தக நிலையங்கள் தொடர்ச்சியாக அமைந்துள்ள நிலையில் பிற்பகல் 7 மணியளவில் பூட்டப்பட்ட வர்த்தக நிலையங்களின் கூரைகள் பிரிக்கப்பட்டு திருடர்கள் உள்நுழைந்துள்ளனர்.

இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற போது அத் தொகுதியில் உள்ள சில கடைகள் திறந்து காணப்பட்டுள்ளது. குறித்த கடைகளில் இருந்தவர்கள் கடைகள் உடைக்கப்பட்டதை அவதானித்து கடை உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் இது தொடர்பாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து சீசீடீவி கமராக்களின் உதவியுடன் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக் கடைகளில் இருந்த சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரையிலான பணமே திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு கவலையான செய்தி!!

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் விடுமுறைகள் குறைந்த ஆண்டாக 2019ம் ஆண்டு காணப்படுகின்றது.

23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வாரஇறுதி நாட்களில் வருவதனால் விடுமுறை தினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டு சனி, ஞாயிறு தினங்களில் வருவதுடன், வெசாக், பௌர்ணமி விடுமுறையும் சனி, ஞாயிறு தினங்களில் வருகின்றன.

பௌணமி தினங்கள், தீபாவளி பண்டிகை, நபிகளின் பிறந்த நாள் உள்ளிட்ட சில விடுமுறைகளும் ஞாயிறு தினங்களில் அமைந்துள்ளது.

20 வர்த்தக விடுமுறைகளில் எட்டு விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டில் 26 பொது விடுமுறை நாட்களில் நான்கு நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்களில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் மிக மோசமான பெறுமதியை பதிவு செய்த இலங்கை ரூபா!!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா நேற்று மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 180.72 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் விற்பனை விலை 184.69 ரூபாவாக பதிவாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி டொலர் ஒன்றின் விற்பனை விலை 152.85 ரூபாவாக காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் 184.69 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய ஒரு வருட காலப்பகுதியில் டொலருக்கு எதிராக 31.84 வீதத்தில் டொலர் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும் 2005ஆம்ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 28.93 வீதத்திலேயே ரூபாய் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

வறுமையான பகுதியில் இருந்து தமிழ் மாணவி சாதனை : குவியும் வாழ்த்துக்கள்!!

க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் கிளி.கோணாவில் மகாவித்தியாலய மாணவி ஆனந்தகுமார் நிலா இரண்டாம் இடத்தினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இவ்வாண்டு நடந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி.கோணாவில் மகா வித்தியாலயத்திலிருந்து வணிகப் பிரிவில் தோற்றிய மேற்படி ஆனந்தகுமார் நிலா மூன்று ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப்பாடசாலையிலிருந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மேலும் இருவர் கலைப் பிரிவில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுள்ளனர்.

கலைப்பிரிவில் ந.தட்சா மாவட்ட நிலை 27, த.தயானுஜா மாவட்ட நிலை 38 ஆகிய இருவருடன் மேற்படி பாடசாலையிலிருந்து மூவர் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் போக்குவரத்து உட்பட்ட வசதி வாய்ப்புக்களற்ற பிரதேசமான கோணாவில் பகுதியிலுள்ள மேற்படி கிளி.கோணாவில் மகாவித்தியாலய மாணவி மாவட்டத்தில் இரண்டாம் நிலையினையும் பெற்றுள்ளமை பாரிய சாதனையாகவே கருதப்படுகின்றது. மேலும், மாணவிக்கு பல்வேறு பகுதியில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரை வானில் தென்படவுள்ள அதிசயம்!!

2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15 வருடங்கள் கழிந்த ஒருநாளில் இந்த கிரகணம் தென்படவுள்ளது.

இந்த சூரியக்கிரகணம், இலங்கையில் யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும்.

ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கிரகணத்தின்போது சூரியன், மறைக்கப்பட்டு சிறிய வளையம் ஒன்றைப்போல காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வாகனங்களை சேதமாக்கிய கார்விபத்து : சுற்றுலாப் பயணி உட்பட மூவர் படுகாயம்!!

சுற்றுலாப் பயணியை அழைத்துச்சென்ற காரொன்று வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் மாத்தளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதிக்கு காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்போனதால் மாத்தளை – கலேவெல கலஹகெலே பிரதேசத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லொறி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மீது மோதி வீதிக்கருகில் இருந்த கால்வாய் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ஜப்பானிய பிரஜையும் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு நபர்களும் கலேவெல வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலங்க பெர்னாந்துவின் ஆலோனையின் கீழ்போக்குவரத்து பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி ஹரிச்சந்திர மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்.