யுவதியைக் காப்பாற்றச் சென்ற இளைஞனுக்கு காதலனால் நேர்ந்த கொடூரம்!!

காலி நகரத்தில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் யுவதியொருவரைக் காப்பாற்ற முயன்ற இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகிய இளைஞனின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞனை கத்தியால் குத்தி விட்டு யுவதியை அழைத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் சென்றபோது பொலிஸார், யுவதியைக் காப்பாற்றி முச்சக்கர வண்டி சாரதி மற்றும் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

தொடந்துவ கட்டுதேம்பே பிரதேசத்தைச் சேர்ந்த மருதனை படைமுகாமில் பணிபுரியும் இராணுவச் சிப்பாய் மற்றும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஆகியாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான குறித்த யுவதி காலி நகரில் அமைந்துள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்துள்ளார்.

2008ம் ஆண்டு தொடந்துவ பிரதேசத்தைச்சேர்ந்த குறித்த இராணுவச் சிப்பாயை காதலித்துள்ளார் .

இந்த நிலையில் 2009ம் ஆண்டு குறித்த நபர் படையணியில் இணைந்துள்ள நிலையில் 2013ம் ஆண்டு யுவதி இளைஞருடனான தொடர்பை துண்டித்துள்ளார்.

ஆனால் 2015 ல், இருவரும் மீண்டும் நண்பர்கள் ஆகியுள்ளனர். எனினும் இருவருக்குமிடையில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதன் விளைவாக, யுவதி ஒக்டோபர் மாதம் மீண்டும் இளைஞனுடனான தொடர்பை நிறுத்தியுள்ளார்

அதன் பின்னர் குறித்த சிப்பாய் தன்னை பல முறை அச்சுறுத்தியதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை வியாபார நிலையத்திற்கு சென்று வியாபார நிலையம் திறக்கப்படும் வரை யுவதியுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

சந்தேக நபர் கத்தியைக்கொண்டு வந்து யுவதியின் தலை முடியைப் பிடித்து இழுத்து மூன்று சக்கர வண்டியில் தள்ளியுள்ளார்.

யுவதியின் சத்தத்தை கேட்ட வியாபார நிலையத்தில் இருந்த இளைஞன் காப்பாற்ற முயன்றபோது குறித்த நபர் இளைஞனைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் எக்வெல்ல வீதியில் மினுவங்கொட பிரதேசத்தில் வைத்து குறித்த யுவதியை மீட்டுள்ளதுடன், சந்தேக நபரையும் முச்சக்கர வண்டி சாரதியையம் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் குடித்துவிட்டு பொலிசாருக்கு பயந்து குளத்தில் வீழ்ந்த நபருக்கு நேர்ந்த கதி!!

வவுனியா போக்குவரத்துப் பொலிசார் குடித்துவிட்டு சென்றவர்களை விரட்டிச் சென்றபோது குளத்தில் வீழ்ந்த நபர் நேற்று (31.12.2018) காலை கரையொதுக்கி வீடு திரும்பிய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரத்தில் அமைந்துள்ள மதுபான நிலையில் நேற்று முன்தினம் (30.12.2018) இரவு 9.30மணியளவில் இருவர் மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிலில் பயணித்துள்ளனர்.

இவர்கள் மதுபோதையில் பயணிப்பதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் மறித்துள்ளனர். எனினும், குறித்த இரு இருவரும் பொலிஸாரின் கட்டளையைத் தாண்டி முன்னோக்கி பயணித்ததன் காரணமாக அவர்களை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் குடியிருப்பு குளக்கட்டில் குறித்த இளைஞர்கள் பயணிக்கும்போது பொலிஸாரின் மோட்டார் சைக்கில் அவர்கள் மீது மோதி அவர்களுள் ஒருவர் குளத்திற்குள் வீழ்ந்துள்ளார்.

மற்றுமொருவர் குளக்கட்டின்மீது விழுந்த நிலையில் அவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கைது செய்தனர்.

எனினும் குளத்திற்குள் வீழ்ந்த வரை மீட்கும் நடவடிக்கையில் இளைஞர்களும் பொதுமக்களும் சுமார் நான்கு மணித்தியாலத்திற்கு மேலாக ஈடுபட்டனர். ஆனாலும் இரவு நேரம் என்பதினால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

குளத்தில் வீழ்ந்த நபர் நேற்று காலை கரையொதுங்கி வீடு திரும்பிய சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குறித்த நபர்கள் இருவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மாலை பொலிஸார் ஆஜர்படுத்தினார்கள்.

இதன் போது எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குளத்தில் வீழ்ந்த நபர் குளத்தில் நீந்திச் செய்வதற்காகவே குளக்கரையில் தனது மேலாடையினை கழற்றிவிட்டு சென்று குளத்தின் மறுகரையில் இரவு முழுவதும் நின்றுள்ளதாக அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : 12 ராசிகளுக்கும்!!

 

2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

சொந்த ஊரை விட்டு கடல் கடந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலருக்கும் விருப்பம் இருக்கும். கிரகங்களின் சஞ்சாரம், தசாபுத்தியின் அடிப்படையிலேயே மேற்படிப்பு யோகமும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும்.

பிறக்கப்போகும் 2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும் என்றும் படிப்பிற்காக விமானம், கப்பலில் செல்லும் யோகம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

வெளிநாடு செல்லும் யோகத்தினை தீா்மானிக்கும் கிரகங்கள் சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும். சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர்.

ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கோள்கள். இவைகள் மட்டுமின்றி 9ஆம் அதிபதி, 12ஆம் அதிபதிகளின் நிலைமையை பொருத்தும் வெளிநாடு பயணம் அமைகிறது. 2019ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனி ஒன்பதாம் இடமான தனுசு ராசியில் அமர்ந்துள்ளார். தற்போது எட்டாம் வீட்டில் விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் குருவும் அதிசாரமாக சென்று அமரப்போகிறார்.

பின்னர் வக்கிரமடைந்து விருச்சிகத்திற்கு சென்று அக்டோபர் இறுதியில் தனுசு ராசிக்கு செல்வார். ராகு கேது சஞ்சாரமும் மார்ச் மாதம் நிகழப்போகிறது. கடகம் ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ராகுவும், மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரக மாற்றம் எந்தெந்த ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகத்தை அளிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம் : மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. திரைகடல் ஓடி திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். இதனால் உங்கள் சமுதாய அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும், உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது.

ஆண்டு துவக்கத்தில் ஜனவரி, பிப்ரவரியில் சாதாரணமாக இருந்தாலும் மார்ச் மாதம் நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சி அளவு கடந்த நன்மைகளைத் தரப்போகிறது. ராகுவினால் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அடிக்கடி விமானத்தில் பறக்கப் போகிறீர்கள்.

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். கேது பகவான் இந்த வருடம் மார்ச் மாதம் பத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு வருகை புரிவது சிறப்பாகும். இதுவரை பத்தில் இருந்து வேலையில் அலைச்சல்களை, அடிக்கடி தொழில் மாற்றங்களை தொழில் நஷ்டங்களை தந்து வந்த கேது,இந்த வருடம் ஒன்பதாம் பாவத்துக்கு வருவது நல்லது.

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள குரு பெயர்ச்சி சில சாதகமான பலன்களை தரப்போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்திருந்தவர்களின் கனவு நனவாகப் போகிறது. சனிபகவான் ஒன்பதாம் வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். தற்போது எட்டாம் வீட்டில் அமர்ந்துள்ள குரு அக்டோபரில் சனியோடு இணையப்போகிறார். இந்த சேர்க்கை உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரப்போகிறது.

அயல்நாட்டு வியாபாரம் சூடுபிடிக்கும். வருமானமும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். படித்து விட்டு அரசு வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு கப்பல், விமானம், ராணுவம், தீயணைப்புத்துறையில் வேலை கிடைக்கும்.

ரிஷபம் : சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இது அஷ்டம சனிக்காலம். 2019ஆம் ஆண்டு முழுவதும் சனிபகவான் எட்டாம் வீட்டில்தான் குடியிருக்கிறார். தற்போது குரு ஏழாம் வீட்டில் அமர்ந்து உள்ளார். அக்டோபர் மாதம் குருபகவானும் அஷ்டம ஸ்தானத்திற்குச் செல்கிறார்.

அயல்நாடு வியாபாரம் கைகூடி வரும் என்றாலும் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. இந்த காலங்களில் புதிய தொழில் முயற்சிகள் வேண்டாம். பேராசை படவேண்டாம். அகலக்கால் வைப்பது ஆபத்து. கல்வியில் இருந்த மந்த நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெற முடியும்.

விளையாட்டுத்தனமாக இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அஷ்டமச்சனியிலிருந்து பாதிப்பை குறைத்து கொள்ள காலபைரவரை சனிக்கிழமை சனிக்கிழமை சென்று வழிபட்டு வரலாம். சனி காலபைரவர் சொன்னால் தான் கேட்பார். சனியின் குருநாதர் இந்த காலபைரவர்.ஆஞ்சநேயருக்கும் சனிக்கிழமை சனிக்கிழமை நெய்விளக்கு போட்டு வர சனியால் வரக்கூடிய அத்துனை தொல்லைகளையும் விலக்க முடியும்.

மிதுனம் : புத்திசாலியான புதனை ஆட்சி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே… வரப்போகும் புத்தாண்டு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சமூக அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதாரம் உயரும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். ராகு ஜென்ம ராசியில் அமர்வதால் திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் சென்று ராகு,கேதுக்களுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். அருகில் உள்ள புற்றுக்கோவிலுக்கு சென்று வர ராகு ,கேதுவால் வரக்கூடிய தோஷங்கள் விலகும்.
பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து புளியோதரை படைத்து வணங்கலாம்.

கடகம் : சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே… அலுவலகத்தில் பதவிஉயர்வு, சம்பள உயர்வு என கொண்டாட்டமான, குதூகலமான ஆண்டாகவே 2019 இருக்க போகின்றது. ஆண்டுகிரகங்களான ராகு, கேது,சனி,குரு போன்ற கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நற்பலன்களை தர காத்திருக்கின்றன.

தொழில் செய்பவர்களுக்கு தொழில் சிறக்கும். சிறிய அளவிலான முயற்சிக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். தடைபட்ட பணி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.

மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும்.

சிம்மம் : சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கப்பெரும் வருடமாக இந்த 2019 இருக்க போகின்றது. குருபகவான் நான்கில் இருந்து பத்தை பார்ப்பதால் தொழில் சிறக்கும். தொழிலில் அபாரமான லாபமும் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து விடும். பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், தொழில் பாராட்டுகளும் ,பேரும் புகழும் கிடைக்கும்.

உங்களுக்கு தரப்பட்ட டார்கெட்டை எட்டி நீங்கள் வேலை செய்யும் இடத்தில் புகழப்படுவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் உண்டாகும். ராகு பதினொன்றில் இருப்பதால் வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். குரு எட்டாம் வீட்டினை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

குருபகவான் நீர் ராசியில் இருந்து, இன்னொரு நீர் ராசியான தன்னுடைய எட்டாம் வீடான மீனத்தை பார்த்து, தனது ஒன்பதாம் பார்வையால் ராசிக்கு பன்னிரண்டாம் இடமான கடகத்தை பார்த்து எட்டு பன்னிரண்டாம் வீடுகளும் குருவின் பார்வையால் சுபத்தன்மை அடைவதால் வெளிநாடு உத்யோகம் கிடைக்கும். மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகம் வைத்து கொள்ள முடியாத நிலை உண்டாகும். மதிப்பெண்கள் குறைய கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சற்றே நிம்மதி அளிக்கும். நல்ல நண்பர்களின் உறவு நன்மை தரும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துவது அவசியம்.

கன்னி : அறிவின் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு 2019ஆம் ஆண்டு சற்றே போராட்டங்கள் நிறைந்த ஆண்டுதான் காரணம் அர்த்தாஷ்டம சனி ஒரு யுகத்திற்கான போராட்டத்தை ஏற்படுத்துவார். சில போட்டி பொறாமைகளை சந்தித்தாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி விடுவீர்கள்.

மேலதிகாரிகள், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்க சிரமம் ஏற்படும். அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது மூலம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பதால் கல்வியில் முழுகவனம் செலுத்த முடியும். நல்ல நண்பர்களின் சேர்க்கை நற்பலன்களைத் தரும்.

துலாம் : காதல் நாயகன் சுக்கிரனை ராசிநாதனக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த புத்தாண்டில் குருபகவான் இரண்டாம் இடத்தில் இருந்து உங்களுக்கு நல்ல சுபபலன்களை வாரி வழங்க காத்து கொண்டு இருக்கிறார். குருபகவான் இரண்டாம் இடத்திலே சஞ்சாரம் செய்யும் போது லட்சுமி கடாட்சம் உண்டாகும்… லட்சுமி கடாட்சத்தால் பணம் நிறைய வரும்.

அரசாங்க உதவி, மேலிடத்து அனுகூலம், பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். இதுநாள் வரை தடைபட்டு வந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.

சிலருக்கு வேண்டிய இட மாற்றங்ககளும் கிடைத்து குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும். மாணவர்களுக்கு மந்தநிலை மறையும். நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேலும் சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். அரசு உதவியும் சலுகைகளும் கிடைக்கும்.

விருச்சிகம் : 2019ஆம் ஆண்டு உங்களுக்கு பாதசனி, ஜென்ம குரு காலம் என்பதால் சிரமங்களை ஏற்படுத்தும் என்றாலும் உங்களுக்கு இந்த ஆண்டு எல்லாமே நல்ல நேரம் தான். குரு உங்கள் ராசிக்கு வந்து அமர்ந்து அங்கிருந்து 5,7,9 ம் இடங்களை பார்த்து இந்த இடங்களுக்கு நன்மை செய்கிறார்.

2019 மார்ச் மாதத்தில் ராகு 8ஆம் வீட்டிலும் ,கேது 2ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். ராகு எட்டில் மறைவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் ஆகும். தொழில் ஸ்தானத்திற்கு பதினொன்றாம் இடம் இந்த எட்டாம் இடம். எனவே செய்யும் தொழில் சிறக்கும். தொழிலில் ராகுவால் லாபங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு யோகமான ஆண்டாக அமையும் சிலருக்கு மேல்படிப்பு யோகம் அமையும். வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம்.

தனுசு : இளைய சகோதரர்களால் நன்மைகள் இருக்கும் ஆண்டாக 2019 ஆம் ஆண்டு இருக்க போகின்றது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும், தைரியத்துடன் சமாளிப்பீர்கள். சனி ராசியிலே சஞ்சரிப்பதால் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். ஈசியாக முடியக்கூடிய வேலைகள் கூட இழுத்தடிக்கும் என்றாலும் எதையும் சமாளிப்பீர்கள்.

ஜென்ம சனி நடக்கும் காலம் என்பதால் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக்கூடாது. வேலைப்பளு கண்டிப்பாக அதிகமாக இருக்கும் என்பதால் டார்கெட் பிரச்சனை இருக்கும் என்பதால் அதிகமாக உழைக்க தயாராக இருங்கள். இந்த ஆண்டில் எதற்காகவும் அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் கவனமுடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைய முடியும்.

மகரம் : 2019ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு பொற்கால ஆண்டாக அமையப்போகிறது. குருபகவான் பதினொன்றில் இருந்து உங்களுக்கு சாதகமான பலன்களை தந்து கொண்டு உள்ளார். வாகனம் வாங்கக்கூடிய யோகமும், லட்சுமி கடாட்சத்தால் பொன், பொருள் சேர்க்கையும், அரசாங்க உதவியும் கிடைக்கும். தொழில் இடமாற்றம் ஏற்படும்.

இடைப்பட்ட வயதில் இருப்பவர்கள் பொங்கு சனி மூலம் ஆதாயம் அடைவார்கள். ஏந்த முயற்சி எடுத்தாலும் தடங்கள் எற்பட்டு வெற்றி பெரும். அலுவலகத்தில் அலைச்சல் எற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வேலை இடமாற்றம் கிடைத்தால் விரும்பி ஏற்று கொண்டு சென்றால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

அக்டோபர் மாதம் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் நிறைய சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் வரும். உயர் பதவியும்,சம்பளமும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். படிப்பில் மிகுந்த கவனம் தேவைப்படும் காலம். மாணவ மாணவிகள் நன்கு படிப்பர். நல்ல மதிப்பெண்கள் பெரும் காலம். கடைசி நேரத்தில் விரும்பிய படிப்பு கிடைக்காமல் போகும் என்பதால் சுதாரித்துக்கொள்ளது நல்லது.

கும்பம் : சனியை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே… இந்த ஆண்டு உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பது யோகமான ஆண்டாக அமைந்துள்ளது. குருபகவான் பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு பத்தில் வரும் போது பதவி பறிபோகும் என்ற கூற்று உள்ளது.

அதன்படி சிலருக்கு வேலைப்பளு கூடும். சிலருக்கு விரும்பிய இடங்களுக்கு பணி இடமாற்றம் இருக்கும். ராசிநாதன் உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பதால் எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் நீங்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியும். சமாளித்து விடுவீர்கள்.

மாணவர்களுக்கு இது நன்மை தரக்கூடிய ஆண்டாக அமைகிறது. அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். மேற்படிப்பு யோகம் அமையும் காரணம் குரு உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டினை பார்க்கிறார். கேட்ட இடத்தில் கல்விக்காக வங்கிக் கடன் கிடைக்கும்.

மீனம் : குருவை ராசிநாதனாகக் கொண்ட 2019 ஆண்டில் உங்களின் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும் ஆண்டாக அமையப்போகிறது. யோகமான ஆண்டாகவும் அமையப்போகிறது. இந்த ஆண்டில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டு உள்ளார்.

உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பது யோகம். ஒன்பதாம் இடத்து குரு உங்களுக்கு நல்ல பெயரையும், தொழிலில் லாபங்களையும் அள்ளித்தரப்போகிறார். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் இளைஞர்கள் வெளிநாடு செல்ல முடியும். மீனம் நீர் ராசி.

குரு நீர் ராசியில் இருந்து நீர் ராசியை பார்த்து கொண்டு இருப்பதாலும், சனி பத்தில இருந்து பன்னிரண்டாம் வீட்டைப் பார்ப்பதாலும், ஒன்பதாம் இடம் மற்றும் பன்னிரண்டாம் இடம் வலுப்பெறுவதால் வெளிநாடு சென்று இளைஞர்கள் வேலை பார்க்க முடியும். ராகு கேது பெயர்ச்சியும் நல்ல முறையில் அமைந்துள்ளது.

மார்ச் முதல் நான்காம் வீட்டில் ராகுவும், பத்தாம் வீட்டில் கேதுவும் அமரப்போவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். பத்தில் ஒரு பாவி வேண்டும் என்பார்கள் சனி, கேது என இரண்டு பாவிகள் சஞ்சரிப்பது நல்லது. கேதுவால் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும்.

சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். குரு உங்கள் வீட்டினை பார்ப்பதால் மாணவர்கள் தேர்ச்சி பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் அமையும்.

வவுனியா ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் : அஞ்சலா கோகிலகுமார்!!

வவுனியா – ஓமந்தை, அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் மதுபான விற்பனை நிலையம் அமையப் பெறுவதால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்படும். எனவே இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா கோகிலகுமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா, மருதமடு பெரியமடு பகுதியில் இன்று வீதி புனரமைப்பு பணியை ஆரம்பித்த பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது,

ஓமந்தை அம்மாச்சி உணவகத்திற்கு அருகில் முன்பு வெதுப்பகம் அமைந்திருந்த காணி ஒன்றில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நடவடிக்கையானது ஓமந்தைப் பகுதியிலுள்ள கூலித் தொழிலாளர்களை மேலும் வறுமைப்படுத்தும் நடவடிக்கையாகவும், குடும்ப வன்முறைகள் அதிகரிக்க செய்யும் நடவடிக்கையே.

இதனைத் தடுத்து நிறுத்தி இப்பகுதியிலுள்ள பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பதற்கான சகல நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

இப்பகுதியில் மதுபான நிலையத்தை அமைப்பதற்கு பெண்களாகிய நாங்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளதுடன் மதுபானம் அருந்தும் கணவர்களினால் கடந்த காலங்களில் பெண்கள் பலர் தற்கொலைகளையும் செய்துள்ளனர்.

இதனையும் மீறி இப்பகுதியில் மதுபான விற்பனை நிலையம் அமைக்கும் பணிகள் இடம்பெறுமாக இருந்தால் அதனைத்தடுத்து நிறுத்த அனைத்துப் பெண்களையும், பெண் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படும்.

குறித்த பகுதிகளில் வைத்தியசாலை, ஓமந்தை மத்திய கல்லூரி, கமநல கேந்திர நிலையம், ஓமந்தை புகையிரத நிலையம், பெண்கள் பணிபுரியும் பூ தொழிற்சாலை, தனியார் கல்வி நிலையம், ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சமய வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

இதனால் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை பாதிப்படையவுள்ளது.

எனவே, இப்பகுதியில் மதுபான நிலையம் அமைவதால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படும். எனவே, இந்நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

தவறான கூகுள் தேடலினால் 1 லட்சத்தை இழந்த பெண்!!

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் 1 இலட்சம் இந்திய ரூபாய்களை கூகுளில் கிடைக்கபெற்ற சில தவறான தகவல்கள் காரணமாக இழந்துள்ளார்.

அவர் தனது e-wallet கணக்கில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முனைந்துள்ளார். எனினும் தொலைபேசி இலக்கம் தெரியாததனால் கூகுளில் தேடியுள்ளார்.

அப்போது கிடைக்கப்பெற்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தனது பிரச்சினையை தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரச்சினையை தீர்ப்பதற்காக அவருடைய அவருடைய கார்ட் தொடர்பான தகவல்கள் கேட்கப்படவே அனைத்தையும் வழங்கியுள்ளார்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவரது கணக்கில் இருந்த ஒரு இலட்சம் இந்திய ரூபாய்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னரே தான் அழைப்பை ஏற்படுத்திய இலக்கம் தவறானது என்பதையும் அது ஒரு சைபர் மோசடிக்குரிய இலக்கம் என்பதையும் புரிந்துகொண்டார்.

பல நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்கள் இலகுவாக தொடர்புகொள்வதற்கான தகவல்களை கூகுளில் வழங்குகின்றனர்.

இதனை சாதகமாகப் பயன்படுத்தி சைபர் மோசடி செய்பவர்கள் அந்த நிறுவனங்களைப் போன்ற தோற்றத்தில் கணக்குகளை உருவாக்கி போலியான தகவல்களை கொடுத்து இவ்வாறு மோசடி செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விரக்தியில் நடிகை எடுத்த விபரீத முடிவு!!

 

நடிகை அனாமிகா

ஹரியானாவில் மொழி பாடகியும் நடிகையுமான அனாமிகா, விஷம் குறித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் பேசப்படும் ஹரியானாவி மொழி பாடகியும், நடன கலைஞரான அனிகா பாவா (30) இதுவரை 2500 பாடல்கள் பாடியும், 4000க்கும் அதிகமான பாடல்களில் நடித்தும் இருக்கிறார்.

இவர் கடந்த சனிக்கிழமையன்று எலி மருந்து சாப்பிட்டதால், ஹிசார் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் விசாரணை நடத்துவதற்காக அனாமிகாவின் வீட்டிற்கு சென்றனர்.

பொலிஸார் விசாரணையில் 12 வருடங்களாக பாடகராக பணியாற்றி வந்த அனாமிகா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஷாஹ்கார் கன்னாவை சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் பச்சை கொடி காட்டியதால் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.

இதற்கிடையில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால், அனாமிகா கோபித்துக்கொண்டு ஹிஸார் நவிதிப் காலனியில் இருக்கும் தாய் வீட்டில் தங்கியுள்ளார்.


இந்த நிலையில் சனிக்கிழமையன்று கணவரின் பிறந்தநாள் வந்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கணவர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ காட்சியினை அனாமிகாவிற்கு அனுப்பியதோடு, கன்னாவை விவாகரத்து செய்யுமாறும் அந்த பெண் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்து தான் தற்கொலைக்கு முயன்றதாக அனாமிகா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

எரித்துக் கொல்லப்பட்ட15 வயது பாடசாலை மாணவி : சகோதரரே கொன்றது அம்பலம்!!

 

பாடசாலை மாணவி

இந்தியாவில் 10ஆம் வகுப்பு மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது ஒன்றுவிட்ட சகோதரரே காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆக்ராவைச் சேர்ந்த சஞ்சாலி சாணக்யா (15) என்பவர் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சஞ்சாலி அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றால், உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த உத்தரப்பிரதேச பொலிசார் 10ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, அவரது ஒன்றுவிட்ட சகோதரரே காரணம் என்று கூறியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சாலியின் பெற்றோர், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சிறந்த சட்டத்தரணியாக வருவதே எதிர்கால இலக்கு : மன்னாரில் முதலிடம் பிடித்த மாணவி மேரி வினோதினி!!

 

மேரி வினோதினி

எதிர்காலத்தில் சிறந்த சட்டத்தரணியாக வருவதே தனது இலக்கு என க.பொ.த உயர்தர பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் கலை பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற மாணவி ஜே.மேரி வினோதினி தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார், வங்காலை புனித ஆனாள் பாடசாலை மாணவி ஜே.மேரி வினோதினி, கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தனது வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், எதிர் காலத்தில் சிறந்த சட்டத்தரணியாக வருவதே எனது இலக்கு ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு பரீட்சைகளில் மேலதிகமாக 10 புள்ளிகள் : மகிழ்ச்சியான அறிவிப்பு!!

ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாடசாலைகளில் அறநெறி வகுப்புக்கள் கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இந்த நடைமுறை பௌத்த மாணவர்களுக்கு மாத்திரம் அல்ல. இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஏற்கனவே இதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதற்கு இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

இதேவேளை அறநெறி வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு க.பொ.த சாதாரணத்தர மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 10 புள்ளிகளை மேலதிக மாகவழங்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உடன்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறந்த மகப்பேற்று நிபுணராக வர வேண்டும் என்பதே எதிர்கால இலக்கு : முதலிடம் பெற்ற மன்னார் மாணவி!!

 

ஏ.ஆர்.ரைஷா பர்வின்

நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியின் மாணவி உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் ஏ.ஆர்.ரைஷா பர்வின் என்ற மாணவியே மாவட்ட நிலையில் முதலிடத்தினையும், தேசிய ரீதியில் 666ஆம் இடத்தினையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த மாணவி கருத்து தெரிவிக்கையில், சிறந்த மகப்பேற்று நிபுணராக வர வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம்.

எனது கல்வி செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் மேலாக கடவுளை நினைவில் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

30 வயது இளைஞருடன் நடந்த திருமணம் : 17 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில் 17 வயது சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் திருமணம் நடந்த நிலையில் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் காவ்யா (18). இவருக்கும் ஆகுலா சுருஜன் (30) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. அதாவது காவ்யா 17 வயது மைனராக இருக்கும் போது திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் தனது கணவர் சுருஜன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை உணர்ந்த காவ்யா அதிர்ச்சியடைந்தார். இதன்பின்னர் சுருஜனும் அவர் குடும்பத்தாரும் காவ்யாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இந்நிலையில் காவ்யா மீது திருட்டுப்பட்டம் கட்டி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். பின்னர் பாட்டி வீட்டில் தங்கியிருந்த காவ்யாவுக்கு சமீபத்தில் 18 வயது ஆனது.

இதையடுத்து பெண்கள் அமைப்பு உதவியுடன் கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது காவ்யா பொலிஸ் புகார் அளித்துள்ளார். இது குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தாயை துடிதுடிக்க கொலை செய்த மகன் எடுத்த சோக முடிவு!!

சென்னை தேனாம்பேட்டையில் 22 வயது இளைஞர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயை கோபத்தால் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடேசன் என்பவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் தாமஸ் சாலையிலேயே தனித்தனியாக வசித்து வருகின்றனர். நடேசனின் இரண்டாவது மனைவி சுந்தரவல்லி(48) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவரது மகன் விக்னேஷ்(22).

சுந்தரவல்லிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் தானாக பேசிக் கொண்டே இருப்பார். இதனால் அருகில் உள்ளவர்கள் யாரும் சுந்தரவல்லி குடும்பத்தினரிடம் இருந்து விலகியே இருந்துள்ளனர்.

தந்தையும் கைவிட்ட நிலையில், மகன் விக்னேஷ் தனது தாய் சுந்தரவல்லியை மருத்துவமனைக்கு அழைத்து ெசன்று சிகிச்சை அளித்து பராமரித்து வந்தார்.

விக்னேஷ் ஐடி நிறுவனத்தில் உணவு விடுதியில் வேலை செய்து வந்தார். மேலும், மாலை நேரத்தில் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு விக்ேனஷ் பணிமுடிந்து வீட்டிற்கு வந்ததும் தூங்க முயன்றார். அப்போது சுந்தரவல்லி மகன் விக்னேஷை தூங்க விடாமல் எழுப்பியபடியே இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது தாயை தலையணையால் முகத்தை அழுத்தியும், கழுத்தை நெரித்துள்ளார். சுந்தரவல்லி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத விக்னேஷ் அதிர்ச்சியில் அழுது துடித்துள்ளார்.

தனது முன்கோபத்தால் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டோமே என அதிர்ச்சியடைந்த விக்னேஷ், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இறப்பதற்கு முன்பு தனது நண்பர்களுக்கு “நாளை நல்ல செய்தி சொல்கிறேன்” என்று குறுஞ் ெசய்தி அனுப்பி உள்ளார். வழக்கமாக விக்னேஷை வேலைக்கு அழைத்து செல்லும் நண்பர் இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் கதவு திறந்த கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது அவரது தாய் இறந்து கிடந்தார். அருகிலேயே விக்னேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தற்போது இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

சிறந்த கணக்காளராக வர வேண்டும் என்பதே எதிர்கால இலக்கு : அன்ரன் பெனில்டஸ்!!

சிறந்த கணக்காளராக வர வேண்டும் என்பதே தனது எதிர்கால இலக்கு என வர்த்தகப் பிரிவில் மன்னார் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட மாணவன் ஏ.அன்ரன் பெனில்டஸ் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி மாணவன் செல்வன் ஏ.அன்ரன் பெனில்டஸ் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

குறித்த மாணவன் மாவட்ட நிலையில் முதலிடத்தினையும், தேசிய ரீதியில் 319ஆம் இடத்தினையும் பெற்று மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதன்போது தனது வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது : வவுனியாவில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி!!

கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி

ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதாலேயே மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற டிலாஜினி சண்முகேஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த டிலாஜினி சண்முகேஸ்வரராஜா 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார். தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து வவுனியா நெற் இணையத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளியாகிய பரீட்சைப் பெறுபேற்றில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றமை மகிழ்ச்சியாக இருக்கின்றது. சென்ற வருடம் பரீட்சை எழுதியவர்களின் பெறுபேறு வந்த போது நானும் அடுத்த முறை முதலாவதாக வர வேண்டும் என நினைத்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினேன். இந்த வெற்றிக்கு எனது தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களும் காரணம். அவர்களது வழிகாட்டுதல்களையே பின்பற்றினேன். பாடசாலை ஆசிரியர்களும் உதவியிருந்தார்கள். சட்டத்துறையில் படித்து ஒரு சட்டத்தரணியாக பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

நான் இந்த நிலைக்கு வர வழிகாட்டிய ஆசரியர்கள், அப்பா, அம்மா, அண்ணா என அனைவருக்கும் எனது நன்றிகள் எனத் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் மாவட்டத்தில் மூன்று பிரிவுகளில் முதலிடம்!!

 

மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது என அதிபர் ரி.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

                                                            அ.உதிஸ்டிரன்

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் வவுனியா மாவட்டத்தில் எமது பாடசாலை சிறந்த பெறுபேற்றினை பதிவு செய்துள்ளது.

                                                                 து.யுவதீஸ்வரன்

கலைப்பிரிவில் ச.டிலாஜினி, வர்த்தகப் பிரிவில் து.யுவதீஸ்வரன், விஞ்ஞானப் பிரிவில் அ.உதிஸ்டிரன் ஆகியோர் முதல் நிலைகளை மாவட்ட மட்டத்தில் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்கள். கடந்த ஆண்டு மாவட்ட மட்டத்தில் முதல்நிலைகளை அடையாத நிலை காணப்பட்ட போதும் இந்த ஆண்டு நாம் அடைந்திருக்கின்றோம்.

                                                                         ச.டிலாஜினி

மாவட்ட மட்டத்தில் முதல் 10 பேரில் உயிரியல் விஞ்ஞானத்துறையில் பிரிவில் 6 பேரையும், கணிதப் பிரிவில் 6 பேரையும், கலைப்பிரிவில் ஒருவரையும், வர்த்தகப் பிரிவில் 4 பேரையும் எமது பாடசாலை கொண்டுள்ளது. இதனால் இந்த அடைவு மட்டம் குறித்து நாம் மகிழ்ச்சியான நிலையில் இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மாவட்ட ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த மாணவர் விபரம் வருமாறு..

 

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்த்த மாணவர்கள் அனைவரையும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்..

இலங்கையில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றங்கள்!!

இலங்கையில் நாளை முதல் புதிய நடைமுறை அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இலத்திரனியல் அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு என்பன அறிமுகம் செய்யப்படவுள்ளதாக துறைசார் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் பயணிக்க கூடிய கடவுச்சீட்டுக்களின் விநியோக நடடிக்கைகள் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை முதல் மத்திய கிழக்கு நாடுக்கு மாத்திரம் பயணிக்கும் விதத்தில் விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட மாட்டாது.

மாறாக நாளை முதல் அனைத்து நாடுகளுக்கும் பயணிக்கும் விதத்திலான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படும்.

இந்த கடவுச்சீட்டினூடாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பயணிக்க முடியும் என, குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அடையாள அட்டையை பரீட்சார்த்தமாக முன்னெடுக்கும் நடவடிக்ககை மேல், சப்ரகமுவ மாகாணங்களில் வழங்கும் பணி கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியடைந்திருப்பதால் இந்த வேலைத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.