சிறந்த இலத்திரனியல் பொறியியலாளராகுவதே தனது எதிர்கால இலக்கு என கணித பிரிவில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மாணவன் எஸ்.அன்று பேடினன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி மாணவன் எஸ்.அன்று பேடினன் கணித பிரிவில் மாவட்ட ரீதியில் முதல் இடத்தினை பெற்றுள்ளார்.
அத்துடன் அன்று பேடினன் தேசிய ரீதியில் 546ஆம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் இன்று (31.12.2018) காலை 7.30 மணியளவில் கிணற்றிலிருந்து 24 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அதிகாலை வேளை தந்தை வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயத்தில் வீட்டில் மகனை காணவில்லையென தேடிய போது கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.
இதனையடுத்து அயலவர்களுக்கு சம்பவத்தினை தெரியப்படுத்தியதையடுத்து அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 24 வயதுடைய ஜெகமோகன் எனவும் மரணத்திற்கான விசாரணைகளை முன்னேடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தனது இரு கண்களை இழந்தபோதும், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றி மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்று யாழ். மாணவன் சாதனைப் படைத்துள்ளார்.
யாழ். யூனியன் கல்லூரி மாணவன் தவராசா அன்ரூ ஜெக்சன், கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் மூன்றாவது இடத்தைப்பெற்று இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.
தனது 15ஆவது வயதில் கிரிக்கெட் விளையாடும்போது, பந்து நெற்றியில் பட்டதால் இரு கண்களின் பார்வையையும் அவர் இழந்துள்ளார்.
சிகிச்சைகள் காரணமாக இரண்டு வருடங்கள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டாலும் அவரது அயராத முயற்சியின் காரணமாக சிறந்த பெறுபேறினைப்பெற்று இன்று அவர் தனது குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் பெறுமை சேர்த்துள்ளார்.
அவர் கல்வி பொதுத்தராதர சாதாரண தரத்திலும் சிறந்த பெறுபேறினைப்பெற்று ஜனாதிபதியிடம் இருந்து பரிசில்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
யாழ். சுன்னாகத்தில் அமைந்துள்ள விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகத்தில் தங்கியிருந்து, யாழ். யூனியன் கல்லூரியில் கல்வி பயின்று இவர் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இவரது தந்தை கடற்தொழிலாளியாகவும், தாய் வீட்டுப்பணிப்பெண்ணாகவும் உள்ளதுடன் நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூன்றாமவராக இவர் உள்ளார். இது குறித்து ஜெக்சன் குறிப்பிடுகையில்,
எனது ஆசை சட்டத்தரணியாவதே, அதற்கு பாரிய முயற்சியும் பொருளாதார வசதியும் தேவை. முயற்சி என்னிடம் உள்ளது, போதிய பொருளாதார வசதி என்னிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியிலான மேசைப்பந்தாட்ட போட்டியில் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் கிளிநொச்சி மாணவி பாலகிருஷ்ணன் தனுசிகா மீண்டும் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் தேசிய ரீதியிலான மேசை பந்தாட்ட போட்டி இடம்பெற்றது. போட்டியில் 15 வயது பிரிவு மகளீருக்கான போட்டியில் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவியே குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
காலிறுதிப் போட்டியில் கேகாலை மாவட்டப் போட்டியாளரையும், அரையிறுதி போட்டியில் கொழும்பு மாவட்ட போட்டியாளரையும், இறுதி போட்டியில் அனுராதபுரம் மாவட்ட போட்டியாளரையும் வெற்றிகொண்டே தேசிய ரீதியில் வெற்றியாளர் ஆனார்.
கடந்த வருடம் தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டியின் போதும் தேசிய ரீதியில் முதலிடத்தை இந்த வீராங்கனை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மீன்பிடிப்படகு ஒன்று முல்லைத்தீவு வலைஞர்மடம் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு சேதமாகி கவிழ்ந்த நிலையில் ஆழ்கடலில் இருந்து கரைநோக்கி நேற்று பிற்பகல் கரைஒதுங்குவதை அந்தப்பகுதி மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாருக்க தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வலைஞர்மடம் கடற்பகுதிக்கு சென்ற பொலிஸார் குறித்த படகு தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
மேலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பொதுமக்களும் ஒன்றிணைந்து இந்தப் படகை கடலில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுவதினால் கடலில் உள்ள குறித்த படகை தரைக்கு கொண்டுவருவதற்கு சுமார் 3 மணித்தியாளங்கள் முயற்சித்திருந்தனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் வெளியாகியிருந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இதற்கான கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன. எதிர்வரும் தினங்களில் இவற்றை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தக் கையேட்டை சரியான முறையில் விளங்கிக் கொண்டு தாம் விண்ணப்பிக்கக் கூடிய ஆகக்கூடிய கற்கை நெறிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது முக்கியமானது.
சில மாணவர்கள் இரண்டு நெறிக்கு அல்லது 3 கற்கை நெறிகளுக்கு மாத்திரம் விண்ணப்பிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு பொருத்தமான கற்கை நெறி இல்லாமல் போகின்றது.
ஆரம்பத்திலேயே சரியான கோரிக்கையை முன்வைக்காமையால் பின்னர் அந்த கற்கை நெறிக்கு விண்ணப்பிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, 2019ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதுடன், சில புதிய கற்கைநெறிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் பல விபத்துகளை ஏற்படுத்திய கார் ஒன்றை அப்பகுதி இளைஞர்கள் மிக நீண்ட தூரம் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் வரையில் அந்த காரை துரத்திச் சென்று இளைஞர்கள் பிடித்த போதிலும், காரின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “யாழ். சுண்டுக்குளி பகுதியில் இந்த கார் முதலில் விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதனை அவதானித்த அந்தப் பகுதி இளைஞர்கள் காரை துரத்திச் சென்ற போது, நல்லூர், முடாமவடி, கோப்பாய் பகுதிகளில் வைத்து இந்த கார் பல விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது.
இறுதியாக குறித்த கார் இணுவில் புகையிரத நிலையப் பகுதியில் நிறுத்திவிட்டு காரின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துகளின் போது பெண் ஒருவர் மற்றும் சிறுவர் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து காரின் சாரதியை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று நள்ளிரவு பொலிஸாரின் செயற்பாட்டால் நபர் ஒருவர் குடியிருப்பு குளத்தில் வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குளக்கட்டு பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரத்தில் அமைந்துள்ள நிலையத்தில் நேற்றையதினம் (30.12.2018) இரவு 9.30 மணியளவில் இருவர் மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிலில் பயணித்துள்ளனர்.
இவர்கள் மதுபோதையில் பயணிப்பதனை அவதானித்த போக்குவரத்துப் பொலிஸார் மறித்துள்ளனர். எனினும், குறித்த இரு இளைஞர்களும் பொலிஸாரின் கட்டளையைத் தாண்டி முன்னோக்கி பயணித்ததன் காரணமாக அவர்களை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் குடியிருப்பு குளக்கட்டில் குறித்த இளைஞர்கள் பயணிக்கும்போது பொலிஸாரின் மோட்டார் சைக்கில் அவர்கள் மீது மோதி அவர்களுள் ஒருவர் குளத்திற்குள் வீழ்ந்துள்ளார்.
மற்றுமொருவர் குளக்கட்டின்மீது விழுந்த நிலையில் அவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கைது செய்துள்ளனர். எனினும் குளத்திற்குள் வீழ்ந்தவரை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவில்லை.
இதன் காரணமாக குளத்திற்குள் வீழ்ந்த இளைஞர் குளத்தின் ஆழத்திற்குச் சென்றுள்ள நிலையில் அவரை மீட்கும் பணியில் அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் சுமார் நான்கு மணித்தியாலத்திற்கு மேலாக ஈடுபட்டனர். ஆனாலும் இரவு நேரம் என்பதினால் அந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.
குளக்கட்டு பகுதியில் வீழ்ந்த இளைஞனின் தலைக்கவசம் மற்றும் மேலாடை கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் இளைஞனை காணவில்லை. பொலிஸார் அங்கிருக்கும் தடயப் பொருட்களை மட்டும் மீட்டெடுத்துள்ளனர்.
தற்போது குடியிருப்பு குளத்திற்கு அருகே பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மதியம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வழ்வாதார அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் – பாலித தெவரப்பெரும குழுவினர் கிணறுகளை சுத்தப்படுத்தி வருகின்றனர்.
கிளிநொச்சியில் கடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ளத்தினால் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் சுகாதாரமான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் பிரதி அமைச்சர் தலையிலான குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று பரந்தன் பகுதியில் உள்ள கிணறுகளை மாலை வரை துப்பரவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வசதிகள் குறைந்த பிரதேச பாடசாலையான பூவரசன்குளம் மகாவித்தியாலயத்திலிருந்து முதல்முறையாக கலைப் பிரிவில் 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி திவானி விஜேந்திரன் 2AB சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 6ம் இடத்தையும், கெளசல்யா உலகநாதன் 2AB சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 7ம் இடத்தையும், யுலக்சனா சதீஷ்குமார் 2AC சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 19ம் இடத்தையும், டனுஷாந்தி கோணேசலிங்கம் A2C சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 25ம் இடத்தையும், பவித்திரா பலராம் ABC சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 51ம் இடத்தையும், பிரியதர்ஷினி பெரியசாமி 2AC சித்திகளுடன் மாவட்ட ரீதியில் 79ம் இடத்தையும் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 5 மாணவர்கள் புவியியல் பாடத்தில் A சித்திகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இவர்களுக்கு கல்வி கற்பித்த புவியியல் ஆசிரியர் சிவானந்தம் கமலேஸ்வரன், தமிழ் ஆசிரியை திருமதி சுஜாதா வாசுதேவன், இந்துநாகரீக ஆசிரியை கலாவதி செல்லத்துரை, தகவல் தொழிநுட்ப ஆசிரியை திருமதி ரேவதி பரமானந்தம், விவசாய தொழில்நுட்ப ஆசிரியை செல்வி ஜெசிக்கா, கிறிஸ்தவ நாகரீக ஆசிரியை திருமதி பெர்னாண்டோ ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
இம் மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.
வகுப்புக்களுக்கு ஒழுங்கான முறையில் சென்று படித்ததனால் தான் கணிதத் துறையில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கணிதத்துறையில் முதலிடம் பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெககுமாரன் பூஜிதா தெரிவித்துள்ளார்.
வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 14 ஆவது இடத்தையும் பெற்றமை குறித்து வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெ.பூஜிதா கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் மாவட்டத்தில் முதல் நிலை பெற்றமை மகிழ்ச்சியாகவுள்ளது. நான் இந்த நிலையை அடைவதற்கு காரணமான எனது பெற்றோர், என்னை வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கு நன்றிகள். நான் வகுப்புக்களுக்கு ஒழுங்காகச் சென்று ஆசிரியர்கள் தரும் விடயங்களை அவதானித்து ஒழுங்காக படித்தமையினாலேயே இந்த நிலையை அடைய முடிந்தது.
வருங்காலத்தில் ஒரு பொறியியலாளராக வந்து சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் எனத் தெரிவித்தார்.
அம்பாறை – நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15ஆம் கிராமத்தை சேர்ந்த மாணவன் முருகமூர்த்தி கிருஷாந் க.பொ.த உயர் தரத்தில் மாவட்ட ரீதியில் 13ஆம் இடத்தை பெற்று பிரதேசத்தில் வைத்தியதுறைக்கு தெரிவான முதல் மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கல்லோயா குடியேற்ற கிராமங்களை உள்ளடக்கிய நாவிதன்வெளி பிரதேசத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 1 ஏ, 2 B சித்திகளையும் பெற்று குறித்த மாணவன் வைத்தியதுறைக்கு தெரிவாகியுள்ளார்.
இந்த மாணவன் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் உயர் கல்வியை கற்றுள்ளார். இது தொடர்பில் முருகமூர்த்தி கிருஷாந் கருத்து தெரிவிக்கையில்,
பெற்றோரும், ஆசிரியர்களும், சக தோழர்களும் கொடுத்த ஊக்குவிப்பும் பக்கபலமும் தான் நான் வெற்றி பெற காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் வைத்தியதுறைக்கு தெரிவான முதலாவது மாணவனான முருகமூர்த்தி கிருஷாந்திற்கு தவிசாளர் மலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை அப்பகுதி மக்கள் அனைவரும் குறித்த மாணவனுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியராகி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என வட மாகாணத்தில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா மாணவன் அருட்செல்வம் உதிஷ்ரன் தெரிவித்துள்ளார்.
வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் 3A சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் 24 ஆவது இடத்தையும், வடமாகாணத்தில் முதலாவது இடத்தையும், வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்ற தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் அருட்செல்வன் உதிஷ்ரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் கஸ்ரப்பட்டு படித்ததன் காரணமாக வடமாகாணத்தில் முதலிடத்தைப் பெற முடிந்தது. இதேபோல் இனியும் கஸ்ரப்பட்டு படித்து வைத்தியராக வருவேன். வைத்தியராக வந்து நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
நான் இவ்வாறு சிறந்த பரீட்சைப் பெறுபேற்றைப் பெற எனக்கு வழிகாட்டிய எனது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் எனது பெற்றோருக்கு இந்த இடத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எனது மேற்படிப்பை தொடவுள்ளேன் எனத் தெரிவித்தார்.
இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.
இந்தியாவின் விசித்திர நோய் காரணமாக ஏலியன் உருவத்துடன் வாழும் இளைஞரை பலரும் அந்த பெயரை வைத்தே அழைத்து வருகிறார்கள்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அன்சூ குமார் (22). இவருக்கு சிறுவயதிலிருந்தே விசித்திர நோய் ஏற்பட்ட காரணத்தில் இவரின் கண்கள் விரிவடைந்து, தலை மட்டும் பெரிதாக என பார்ப்பதற்கு அப்படியே ஏலியன் போலவே உள்ளார்.
இது குறித்து அன்சூகுமார் கூறுகையில், நான் பிறக்கும்போதே இப்படி தான் பிறந்தேன், அப்போது இந்த நோய்க்கு மருந்துகள் இல்லை என மருத்துவர் என் பெற்றோரிடம் கூறிவிட்டார்.
நான் 9 மணி நேரம் தொழிற்சாலையில் வேலை செய்கிறேன், எனக்கு மாதம் £50 தான் வருமானம் வருகிறது. இதை வைத்து என்னால் மருத்துவம் பார்க்கமுடியவில்லை, என்னை பலரும் வேற்று உலகை சேர்ந்தவன் என நினைத்து விடுகிறார்கள்.
எனக்கு ஏலியன் என்பது தான் பட்டப்பெயர், என் மருத்துவ செலவுக்கு அரசு தான் உதவி செய்யவேண்டும். எனக்கும் எல்லோரையும் போல சாதாரண மனிதனாக இருக்க வேண்டும் என்பது தான் எண்ணம்.
என்னுடையை பிரச்சனை சீக்கிரம் சரியாகி, நான் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதே என் உச்சக்கட்ட கனவு என கூறியுள்ளார்.
சென்னையில் 6 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து தீவைத்து எரித்த தாயை பொலிசார் கைது செய்தனர். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி என்பவரும், சரவணன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெயகாந்தன் என்ற 6 வயது மகன் இருந்தார்.
கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு, தனது பிறந்த வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு மீனாட்சி செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதுபோல நேற்று முன் தினமும் கணவனுடன் சண்டையிட்டு பெற்றோர் வீட்டுக்கு மீனாட்சி சென்றுள்ளார். ஆனால் பெற்றோர் அவரை வீட்டில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து வீட்டின் பின்புறம் உள்ள மோட்டோர் ரூம் போன்ற அறையில் தனது மகனுடன் மீனாட்சி தங்கியுள்ளார். இன்று காலையில் மீனாட்சி மாயமான நிலையில், வீட்டின் கழிவுநீர் தொட்டியில் இருந்து உடல் எரிந்து போன துர்நாற்றம் வரவே பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து சென்ற பொலிசார் அந்த தொட்டியில் இருந்து எரிந்த நிலையில் மீனாட்சியின் மகன் ஜெயகாந்தன் உடலை மீட்டனர். இந்த நிலையில், மொட்டை அடித்த படி வீட்டிற்கு திடீரென வந்த மீனாட்சி தனது மகனைக் கொலை செய்தது தான் தான் என கூறி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
உறங்கிக் கொண்டிருந்த ஜெயகாந்தனை கழுத்தை நெறித்து விட்டு கொன்று விட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தொட்டியில் போட்டதாக மீனாட்சி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தானும் தற்கொலை செய்ய முடிவெடுத்த போது பயமாக இருந்ததால், தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று மீனாட்சி கூறியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மகனைக் கொலை செய்து விட்டு, மாங்காடு சென்று கோவிலில் அவர் மொட்டை அடித்துள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர். மீனாட்சியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.