அதிகஷ்ட பாடசாலையான றாணமடு அகத்தியர் வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவியொருவர் சித்தி பெற்று பெருமையை தேடி தந்துள்ளார்.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் கடந்த ஐந்தாம் திகதி வெளிவந்தன.
இந்த நிலையில் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி, மத்தியமுகாம் – 5 கமு/சது அகத்தியர் வித்தியாலயத்தில் முதல்முறையாக தமிழ் மாணவியொருவர் சித்தியடைந்துள்ளார்.
மத்தியமுகாம் – 6இனை சேர்ந்த சுதாகர் சபஸ்சிகா என்ற மாணவியே 172 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.
இந்த பாடசாலையானது 2012ஆம் ஆண்டுஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 6 வருடங்களில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் எந்தவொரு சித்தியும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மணிக்கு 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் எனவும், அந்த கடல் பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோர் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரபிய கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் LUBAN என்ற சூறாவளியாக மாறியுள்ள நிலையில் வட அகலக்கோட்டின் 12.3இலும், கிழக்கு அகலக்கோட்டின் 62.4இலும் நிலை கொண்டுள்ளது.
அது கொழும்பில் இருந்து 2000 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலைமை காற்றழுத்தம் மேலும் அதிகரித்து 24 மணித்தியாலத்திற்குள் பாரிய சூறாவளியாக அதிகரிக்கும் எனவும், அது வடமேற்கு நோக்கி பயணிக்கும் எனவும் கூறப்படுகின்றது.
இது நிலை கொண்டுள்ள பிரதேசத்தில் இருந்து 100 – 200 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதோடு, கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வடமாகாண ஆணழகன் போட்டியில் வவுனியா இளைஞன் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வடமாகாண ரீதியில் கடந்த 06.10.2018 அன்று வடமாகாண உடற்பயிற்சி சங்கத்தினரால் இலங்கை கலைக்கல்லூரியில் நடாத்தப்பட்ட வடமாகாண ஆணழகன் போட்டியில் வவுனியா ஆச்சபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய குமாரசுவாமி நிசாந்தன் 55 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.
மேலும் முதலாம் இடத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற இளைஞன் பெற்றிருந்தார்.
வவுனியாவில் 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவில் 60 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
கடந்த ஆறு வருடங்களின் பின்னர் பாடசாலைக்குக்கிடைத்த உயர் புள்ளியாக பதிவாகியுள்ளது.
இதேவேளையில் 193 புள்ளிகளைப் பெற்று தமிழ்மொழியில் ஜெகநாதன் லதுர்ஷன் என்ற மாணவன் செல்வி சூசைப்பிள்ளை ஹெலன் ராஜேஸ்வரி ஆசிரியரின் வழிநடத்தலில் சித்தியடைந்துள்ளார்.
இன்று காலை பாடசாலை அதிபர் மற்றும் ஆரம்பப்ரிவு பிரதி அதிபர்கள் தமது வாழ்த்துக்களை மாணவர்களுக்குத் தெரிவித்திருந்தார்கள்.
திருத்துறைப்பூண்டியில் நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணை முன்னாள் காதலன் திடீரென வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நெடுபலம் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் அரவிந்தியா பட்டபடிப்பினை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், சிங்காளந்தி பகுதியைச் சேர்ந்த முத்தரசன் என்பவர் திடீரென வீடு புகுந்து அரவிந்தியாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
இதனை தடுக்க முயன்ற அரவிந்தியாவின் அம்மாவையும் கத்தியால் குத்திவிட்டு முத்தரசன் தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த அரவிந்தியா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் குற்றவாளி முத்தரசனை தேடி வருகின்றனர். இதுசம்மந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில், முத்தரசனும், அரவிந்தியாவும் முன்னாள் காதலர்கள் எனவும், அரவிந்தியா திருமணத்திற்கு மறுத்ததும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் திருவெறும்பூரில் மனைவியின் தலையை துண்டித்துக் கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். பிலோமினாள்புரம் முதல்தெருவை சேர்ந்த சங்கர் சகாயராஜ். இவருக்கும் தஞ்சையைச் சேர்ந்த ஜெசிந்தாஜோஸ்பின் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சங்கர்சகாயராஜுக்கும், ஜெசிந்தாஜோஸ்பினுக்கும் இடையே மீண்டும் தகறாறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சங்கர்சகாயராஜ், ஜெஸ்சிந்தாஜோஸ்பின் தலையை அரிவாளால் வெட்டி தனியாக துண்டித்துள்ளார்.
பின்னர் இரவு முழுவதும் சடலத்துடனேயே தங்கியிருந்த சங்கர்சகாயராஜ், காலையில் ரத்தகரையோடு வெளியில் வந்தார்.
இது குறித்து தகவலறிந்து சென்ற பொலிசார் சங்கர் சகாயராஜைக் கைது செய்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மும்பையில் தாயை குளியலறையில் தள்ளி கொலை செய்த விவகாரத்தில், மொடலிங் நடிகரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
லோகந்த்வாலா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில், லக்சயா சிங் என்ற விளம்பர நடிகரும், அவரது தாயார் சுனிதாவும் வசித்து வந்தனர். மது போதைக்கு அடிமையான இவருக்கும் தாய்க்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, ஏற்பட்ட கைகலப்பில் தாய் சுனிதாவை, நடிகர் லக்சயா சிங் குளியலறையில் தள்ளியதாக கூறப்படுகிறது.
வாஸ்பேஷினில் தலை மோதி, ரத்த வெள்ளத்தில் சரிந்த சுனிதாவை கவனிக்காத அவரது மகன், கதவை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
காலையில் குளியலறை கதவை திறந்தபோது, தாய் சுனிதா சடலமாக கிடந்ததை கண்ட லக்சயா சிங், பொலிசுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பொலிசார் அங்கு வந்த நிலையில் யாரோ மந்திரம் செய்து தாயை கொன்றுவிட்டதாக லக்சயா கூறியுள்ளார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் லக்சயா தான் அவரது தாய் சுனிதாவை கொன்றது உறுதியானது. இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் இரட்டை குழந்தைகளை தாய் ஒருவர் கொடூரமாக தாக்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்த Mohammad Torabi (31) – Tina Torabi (30) தம்பதியினருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 13 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். ஆனால் Tina-வின் போதை பழக்கத்தால் அவரிடம் இருந்து பிரிந்த Mohammad, இரட்டை குழந்தைகளுடன் தனியாக இருந்து வந்துள்ளார்.
மேலும் தன்னுடைய குழந்தைகளை Tina நெருங்கக்கூடாது எனவும் கட்டளையிட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று Mohammad வீட்டிற்கு சென்ற Tina இரட்டை குழந்தைகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த Mohammad வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால் அவருடைய உடல் இரண்டு நாட்களுக்கு பின்னர் ஏசி மாட்டப்பட்டிருந்த ஒரு பெட்டியின் மேல் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
இதற்கிடையில் வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகளையும் மீட்ட பொலிஸார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தைக்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக Tina-வை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த மனைவி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்தவர் ஜேம்ஸ் ரோசேண்டேல் (34). இவருக்கு ஜொடி (35) என்ற மனைவி உள்ளார்.
ஜேம்ஸ், ராணுவத்தில் குதிரைப்படையில் பணிபுரிந்த நிலையில் உடன் பணிபுரியும் கோலிட் (34) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கோலிட்டை தனது வீட்டுக்கு ஜேம்ஸ் அழைத்து வந்த நிலையில் ஜேம்ஸின் மனைவி ஜொடி கோலிட்டுடன் நட்பாகியுள்ளார்.
இந்நிலையில் நட்பையும் தாண்டி ஜேம்ஸுக்கும், கோலிடுக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கனடாவுக்கு இருவரும் வேலை பயிற்சி விடயமாக சென்ற போது இருவரும் அதிகமாக நெருக்கமாகியுள்ளனர்.
இது குறித்து அங்கிருந்தவர்கள் மூலம் அறிந்துள்ளார் ஜேம்ஸின் மனைவி ஜொடி. இதையடுத்து கணவருடன் சண்டை போட்ட அவர், ஜேம்ஸை வீட்டை விட்டு வெளியேற சொன்னதோடு, ராணுவ குடியிருப்பில் தங்கி கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஜேம்ஸ், கோலிட்டின் தொடர்பு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரிந்த நிலையில் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும், இருவரும் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படலாம் எனவும் தெரியவந்துள்ளது.
சென்னையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 மாத ஆண் குழந்தையை, அதன் தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியில் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தம்பதி வெங்கண்ணா-உமா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கள் குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டார்கள் என பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
அதில், புழுக்கம் காரணமாக வீட்டை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில், குழந்தையை யாரோ தூக்கிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்தனர். அதில் இரவு 2 மணியளவில் நைட்டி அணிந்த பெண்ணொருவர் கையில் குழந்தையுடன் நடந்து சென்றது தெரிந்தது.
அதன் பின்னர், ஏரி ஒன்றில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குழந்தையின் தாய் உமாவின் மீது சந்தேகமடைந்த பொலிசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, குழந்தைக்கு பாலூட்டும் போது மார்பில் அதிக வலி இருந்த பிரச்சனையால், குழந்தையை கொன்றதாக அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பின்னர் பொலிசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்-பாப்பம்மாள் தம்பதியினர்.
கட்டிடத் தொழிலாளியான மாரியப்பனுக்கு, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். இதில் இளைய மகனான திருப்பதிக்கு திருமணம் ஆகவில்லை.
திருப்பதிக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக திருப்பதி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பதி இறந்துவிட்ட தகவலை அறிந்த அவரின் தந்தை மாரியப்பன் ஆசையா வளர்த்த மகனை பறிகொடுத்துட்டேனே!. எனக் கூறி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மாரியப்பனின் உயிர் பிரிந்தது.
இருவரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டன.
மனைவியை குடும்ப உறவிற்கு அழைத்த போது, சண்டை ஏற்பட்டதால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என்று கொலையாளி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் திருவெறும்பூர் அருகே காட்டூர் பிலோமினாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ். எல்.ஐ.சி. முகவராகப் பணியாற்றிய இவருக்கும், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெசிந்தா ஜோஸ்பின் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
சங்கருக்கு கடன் பிரச்சனை இருந்ததால், அதை அடைப்பதற்காக திருமணத்தின் போது ஜெசிந்தாவுக்கு கொடுக்கப்பட்ட நகைகளில் சிலவற்றை அடகு வைத்துள்ளார்.
இந்த விவகாரம் ஜெசிந்தாவுக்கு தெரியவர அவர் உடனடியாக சண்டையிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஜெசிந்தா தன்னுடைய பெற்றோரின் வீட்டில் சென்று தங்கியுள்ளார்.
இருப்பினும் காயராஜின் பெற்றோர், மருமகளை மீண்டும் தனது மகனுடன் சேர்த்து வைப்பதற்காக சமாதானம் பேசியுள்ளனர். புகுந்த வீட்டினரின் சொல்லை தட்ட முடியாமல் கணவருடன் சேர்ந்து வாழ ஜெசிந்தா சம்மதித்துள்ளார்.
இந்நிலையில் அதிகாலை தேவாலயத்திற்கு செல்வதற்காக கீழ்தளத்தில் வசிக்கும் மகன் மற்றும் மருமகளை எழுப்புவதற்காக சகாயராஜின் தாய் சகாயமேரி சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் கதவை திறந்த போது, சங்கர் ரத்தக் கறையுடன் வந்து கதவை திறந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாயமேரி உள்ளே சென்று பார்த்த போது, ஜெசிந்தா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அலறியுள்ளார்.
இந்த சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்த மக்கள் உடனடியாக அங்கு வரவே, சங்கர் அங்கிருந்து தப்பியுள்ளார். தப்பிய அவர் சகாயராஜ் வி.ஏ.ஓ. முன் சரண் அடைந்தார். பின்னர் திருவெறும்பூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், ஜெசிந்தா வீட்டிற்கு வந்த பின்னும், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சகாயராஜ் குடும்ப உறவிற்கு அழைத்தத போது சண்டை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த சகாயராஜ் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை நெறித்து தலையணையால் அழுத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
ஆனால் ஜெசிந்தா விழித்துக் கொண்டு சத்தமிட்டதால், காய்கறி நறுக்கும் கத்தியால் அவரின் கழுத்தில் சங்கர் வெட்டியுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரின் உதடுகள் முணுமுணுத்ததால், ஆத்திரத்தில் அரிவாளால் தலையை துண்டித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சடலத்திற்கு அருகிலேயே தலையை வைத்து விட்டு சிறிது நேரம் படுக்கையிலேயே இருந்ததாகவும், பின்னர் தாய் எழுப்பவும் அங்கிருந்து தப்பி வந்து சரண் அடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் காணாமல் போன இளம்காதல் ஜோடி 4 நாட்களுக்கு பின் காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் டிகாம்பை கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து ஜெனா (17). அப்பகுதியில் உள்ள கல்லூரியில் BNMA கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரும் ஜிதனாக கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சித்தாரணி பிரதானவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் வீட்டில் தெரிந்து விடவே, இருவரின் வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் இருவரும் கடந்த 3-ம் திகதியன்று இரவு வீட்டிலிருந்து மாயமாகியுள்ளனர். தினபந்து தன்னுடைய மகளை கடத்தி சென்றுவிட்டதாக சித்தாரணியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், டோலாசாஹி பஜார் பகுதியில் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு அருகே இரண்டு பேரின் சடலங்கள் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இறப்பிற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை காப்பாற்ற முயன்றபோது கணவனும் தீயில் கருகி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் காட்டுமன்னார் கோவில் அருகே மேலகஞ்சன் கொல்லை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நளினி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த சுரேஷ் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவும் மது குடித்துவிட்டு நளினியிடம் சுரேஷ் சண்டையிட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த நளினி சுரேஷ் உறங்கியதும் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். நளினியின் அலறல் சத்தம் கேட்டு விழித்த சுரேஷ் வேகமாக ஓடி சென்று நளினியை காப்பாற்ற முயன்றார். அப்போது சுரேஷ் மீதும் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து பலத்த தீக்காயங்களுடன் அவர்களை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அடுத்தடுத்து இருவருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்காதலுக்காக தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி புழல் சிறை வளாகத்திற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அபிராமிக்கும் பிரியாணிக் கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால், இரண்டு குழந்தைகளையும் பாலில் மாதவிடாய் மாத்திரங்கள் கலந்து கொடுத்தும், மூச்சை நிறுத்தியும் கொலை செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கள்ளக்காதலுடன் தப்ப முயன்ற அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமி புழல் சிறையில் அவமானத்தால் தற்கொலைக்கு முயன்றதாகவும், சிறையில் இருந்த மற்ற கைதிகள் அவரை மீட்டு,சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை வாக்குமூலம் ஒன்றை வழங்கச் சென்ற போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் “மீண்டும் விடுதலைப் புலிகளின் கைகள் ஓங்க வேண்டும்” என அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மத்தியில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இவருடைய இக்கருத்து தென்னிலங்கையில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதுடன், இவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
இந்த சர்ச்சைகளை அடுத்து விஜயகலா மகேஸ்வரன் தனது மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்திருந்தார்.
இதையடுத்து விஜயகலா மகேஸ்வரன் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு 25க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில் விஜயகலா மகேஸ்வரன், குற்றவியல் சட்டத்தின் 120ம் சரத்துக்கு அமைய குற்றமிழைத்துள்ளார் எனவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுதந்தரவுக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
அத்துடன், அரசியலமைப்பின் 157வது அத்தியாயத்தை மீறியுள்ளதாகவும், அது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.