நாளை நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய மணமகன் : வெளியான காரணத்தால் அதிர்ந்த பெண்வீட்டார்!!

தமிழ்நாட்டின் திருச்சியில் நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாக இருப்பவர் மகேந்திரன்.

இவருக்கும் ஆசிரியை சுகந்தி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 17-ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக 50 சவரன் நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் 22-ஆம் திகதி இரு வீட்டாரும் பெண்ணுக்கு முகூர்த்தப்பட்டு எடுக்க கடைக்கு சென்றனர்.

அப்போது தங்களது பெண்ணுக்கு 30 ஆயிரம் ரூபாயில் புடவை எடுத்துதர வேண்டும் என பெண் வீட்டார் கேட்க மாப்பிள்ளை வீட்டாரோ 20 ஆயிரத்துக்கு எடுப்போம் என கூறினர்.

இதனால் இரு தரப்புக்கும் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் 22 ஆயிரம் ரூபாய் மதிப்பில் முகூர்த்தப் பட்டு வாங்கினர்.

இந்நிலையில் திருமணத்துக்கு இரு நாட்களுக்கு முன்னர் மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்கு 100 சவரன் நகை வேண்டும் என தடாலடியாக கூறினார்.

ஆனால் ஏற்கனவே பேசியது 50 சவரன் தானே என பெண் வீட்டார் பேசிய நிலையில், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் மாப்பிள்ளை மகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

தலைமைறைவாக உள்ள அவர் குடும்பத்தார் தேடப்பட்டு வருகிறார்கள்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், 100 சவரன் வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டாரால் மட்டும் திருமணம் நின்று போகவில்லை, பட்டுச் சேலையில் கறார் காட்டி மனக்கசப்பை ஆரம்பித்து வைத்த பெண் வீட்டாரின் பிடிவாதமும் ஒரு காரணம் என கூறியுள்ளனர்.

நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும்போதே உயிரிழந்த பிரபலம் : அதிர்ச்சி வீடியோ!!

பிரபல எழுத்தாளர் ரீட்டா ஜிதேந்திரா நேரலை நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளரும், எழுத்தாளருமான ரீட்டா ஜிதேந்திரா தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், நேரலையாக ஒளிபரப்பாகும் ‘குட் மார்னிங் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

காலை 8.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சியில் நன்றாக பேசிக்கொண்டிருந்த ரீட்டாவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

மேலே பார்த்தபடியே மூச்சு விட திணறிய ரீட்டா அடுத்த சில வினாடிகளில் உயிரிழந்தார். தூர்தர்ஷன் தொலைக்காட்சி வரலாற்றில் நேரலையில் ஒருவர் இறப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த சம்பவமானது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எஸ்.எம்.ஹெச்.எஸ். மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சலீம் தக் கூறுகையில், இதயத்துடிப்பு திடீரென தாறுமாறாக துடித்திருக்கலாம். அதனால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பார் என தெரிவித்துள்ளார்.

எனக்கு மன்னிப்பே கிடையாது.. தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன் : சிறையில் கதறி அழுத அபிராமி!!

குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள அபிராமி, தினம் தினம் தூங்காமல் செத்துக்கொண்டிருக்கிறேன் என தன்னை சந்தித்த வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.

குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளக்காதலன் சுந்தரத்துடன் சேர்ந்து வாழ தனது இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அபிராமியை சிறைக்கு சென்று அவரின் வழக்கறிஞர் சந்தித்து பேசியுள்ளார்.

இது குறித்து கூறிய வழக்கறிஞர், என்னிடம் சில விடயங்களை அபிராமி பேசினார். அதாவது, நான் விஜய்யை காதலித்துதான் திருமணம் செய்தேன்

3500 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருந்த நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். அடிக்கடி குடும்பத்தோடு ஜாலியாக வெளியில் செல்வோம். அப்போது ஒருநாள் சுந்தரம் இருக்கும் பிரியாணி கடைக்கு சென்றோம்.

அவர் என்னை ஸ்பெஷலாக கவனித்தார். அதன்பின்னர் அடிக்கடி பிரியாணி ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து சுந்தரம் கொடுப்பார்.
இப்படி தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

சுந்தரத்தின் பழக்கத்தை என்னால் விடமுடியவில்லை. அவர் சொல்படி நடந்தேன். அவருடன் சேர்ந்து வாழ விருப்பப்பட்டு தான் அந்தத் தவறை செய்துவிட்டேன் என கூறினார்.

குழந்தைகள் கொலையில் சுந்தரத்துக்கு தொடர்புண்டா?’ என்ற கேள்விக்கு, சிறிது நேரம் யோசித்த அபிராமி, இல்லை என்றார்.

அந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாமல் ஒவ்வொரு நாள் இரவும் தூங்க முடியாமல் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன் என கூறியதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் முகத்தில் பதற்றம் தெரிகிறது. தூங்காமல் அவரின் கண்கள் சிவப்பாக காணப்படுகின்றன.

குழந்தைகளைக் கொலை செய்த எனக்கு மன்னிப்பே கிடையாது என அபிராமி அடிக்கடி கூறியதாகவும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

என் மனைவியிடம் அவர் அப்படி நடந்து கொண்டதால் கொன்றேன் : கணவர் வாக்குமூலம்!!

தமிழ்நாட்டின் கடலூரில் டிராக்டர் ஓட்டுனர் தனது முதலாளியை கொலை செய்தது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (31). என்பவர் டிராக்டர் வைத்துள்ளார். இந்த டிராக்டரில் சக்திவேல் (24) என்பவர் ஓட்டுனராக வேலை பார்த்தார்.

முருகனும் அடிக்கடி டிராக்டரை ஓட்டிய நிலையில் ஒருமுறை மணல் கடத்தியுள்ளார். அப்போது பொலிசார் முருகனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த அவர் அங்குள்ள பாலத்தின் கீழ் சடலமாக கிடந்தார்.

இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் முருகனின் ஓட்டுனர் சக்திவேல் மீது சந்தேகம் உள்ளதாக முருகனின் மனைவி வளர்செல்வி கூறினார்.

இதையடுத்து பொலிசார் சக்திவேலிடம் விசாரித்த போது, முருகனை தான் கொலை செய்ததாக அவர் ஒப்பு கொண்டார். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், முருகன் என்னிடம் நன்றாக பழகினார்.

திடீரென என் வீட்டுக்கு வந்து வேலை பற்றி சொல்லுவார். நான் இல்லாத நேரத்திலும் என் வீட்டுக்கு அவர் வருவதாக தெரியவந்த போதும் நான் அவரை சந்தேகப்படவில்லை.

ஆனால் அதை முருகன் தவறாக பயன்படுத்தி கொண்டார். எனது மனைவியிடம் ஆசை வார்த்தை கூறி அவர் கையில் போட்டு கொண்டதால் அவர்களுக்குள் தவறான நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரையும் நான் கண்டித்தும் அவர்கள் கூடாநட்பை விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நான் முருகனை கொல்ல முடிவெடுத்தேன்.

அதன்படி அவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டேன் என கூறியுள்ளார். விசாரணை முடிந்ததும் சக்திவேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

காதலனின் பிறந்த நாளை கொண்டாட காதலி செய்த திடுக்கிடும் செயல்!!

தமிழகத்தில் காதலன் பிறந்த நாளை கொண்டாட பெண் ஒருவர் இளைஞரை ஏமாற்றி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலியை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் நேற்று காலை ஏழு கிணறு பகுதியில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த பெண் ஒருவர் அவரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

இதனால் தினேஷ் இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது, அந்த பெண் தான் இதே பகுதியில் தான் வசிப்பதாகவும், தன்னுடைய தாயின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வண்டி வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் தினேஷ் தன்னுடைய வண்டியை கொடுப்பதற்கு தயக்கம் காட்டியுள்ளார். உடனே அந்த பெண் தன்னுடைய மொபைல் நம்பரை கொடுத்துள்ளார். அதை தினேஷ் சோதித்து பார்த்த போது, அந்த பெண்ணின் போனில் ரிங் அடித்துள்ளது.

இதையடுத்து அப்பெண்ணிற்கு தனது இருசக்கர வாகனத்தை தினேஷ் கொடுத்து அனுப்பியுள்ளார். வண்டியை வாங்கிச் சென்ற பெண் அரைமணி நேரத்தில் வருவதாக கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வராததால், அச்சமடைந்த தினேஷ் அந்த மொபைல் நம்பருக்கு கால் செய்துள்ளார். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அதன் பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அந்த நம்பரை ட்ராக் செய்து பார்த்தபோது, அது தடா எல்லைப்பகுதியில் இருந்துள்ளது.

திரும்பவும் சில மணி நேரங்களுக்குப் பிறகு சென்னை எல்லைக்குள் வந்துள்ளது. உடனே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், இளைஞர் ஒருவருடன் வந்த அப்பெண்ணை பிடித்தனர்.

அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, தன்னுடைய காதலனுக்கு பிறந்த நாள் என்றும், அவருடன் தடா செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் தங்களிடம் வண்டி ஏதும் இல்லாத காரணத்தினால் தினேஷை ஏமாற்றி வண்டியை பெற்றுச்சென்றதாக கூறியுள்ளார்.

பின்னர் தினேஷ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அப்பெண் மற்றும் அவரது காதலனை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைச்சங்கம் முன்னெடுக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஊடக அறிக்கை.

இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைச்சங்கம் முன்னெடுக்கும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில்  வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் ஊடக அறிக்கை வெளியிடபட்டுள்ளது . மேற்படி  அறிக்கையில்

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்

Northern Province Development Officers’ Union

இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைச்சங்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி புதன்கிழமை நாடு முழுவதும் கீழ்வரும் கோரிக்கைகளோடு முன்னெடுக்கும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தனது பூரண ஆதரவை வழங்கி நிற்கிறது.

1. ஏற்கனவே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள மற்றும் ஆட்சேர்ப்பு செய்து கல்வித் தகைமைக்கு இணையாக அரச மற்றும் மாகாண அரச சேவை MN 4 பட்டதாரிகள் MN 5 சம்பளதரத்திற்கு உள்வாங்கப்படல் வேண்டும்.

2. மத்திய மற்றும் மாகாண அரச சேவை பட்டதாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய உயர்வுச் செயன்முறையை தயாரித்தல் வேண்டும்.

3. 06/2006 மற்றும் 5/2016 சம்பள சுற்றறிக்கை ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ள சம்பள ஏற்ற இறக்கங்களை நீக்கி பட்டதாரிகளுக்கு நியாயமான அடிப்படைச் சம்பளம் மற்றும் சம்பள உயர்வு அலகை அதிகரித்தல்.

4. தகைமை அற்ற தொழில்களை நியமிப்பதை நிறுத்தி தகைமையுடைய மற்றும் நியாயமான செயன்முறையை பெற்றுக்கொடுத்தல்.

5. இரண்டாம் மொழி ஆற்றல் தொடர்பாக எழுத்து, பேச்சு பரீட்சைகளுக்கு பதிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மணித்தியாலங்கள் கொண்ட கற்கை நெறிகளை பெற்றுக்கொடுத்தல்.

6. ஒருங்கிணைந்த படிகள் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் பணி வெற்றிடம்

சம்பந்தமாக பதில் கடமை கண்காணிப்பதற்கு மாத்திரம் ஈடுபடுத்துதல், மற்றும் பதில் கடமை கண்காணிப்புக்கு உரிய கொடுப்பனவு உட்பட சகல வெளிக்கள உத்தியோத்தினர்களினதும் பிரயாணச் செலவு கொடுப்பனவுகளை உயர்த்துதல்,

7. வெளிக்கள உத்தியோகத்தர் சம்பந்தமாக பெற்றுக்கொண்ட கட்டண வரி இன்றிய இரு சக்கர வண்டிகளின் உரிமையில் குறைப்புக்கள் இன்றி உடனடியாக பெற்றுக்கொடுத்தல்.

8. 2016.01.01 முதல் அரசு ஊழியர்களுக்காக நீக்கப்பட்டுள்ள தற்போதைய ஓய்வூதியம் சம்பளக் கொடுப்பனவு முறையானது மீண்டும் வழங்குதல்.

மேற்படி கோரிக்கைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் செப்டம்பர் 12ம் திகதி புதன்கிழமை சேவையில் அறிக்கையிடுவதைத் தவிர்த்து போராட்டத்தை வெற்றியடைச் செய்ய ஒத்துழைக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

அன்றைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற உள்ள போராட்டத்தில் ஒன்றிணைவோம்.

உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஒன்றிணைந்து சுமூகமாக போராட்டத்தை நடத்துவோம்.

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்

Northern Province Development Officers’ Union

 

வவுனியாவில் உலக தற்கொலை தினத்தில் விழிப்புணர்வுப் பேரணி!!

உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று தற்கொலையை தடுப்பதற்கு ஒன்றிணைவோம் எனும் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று(11.09.2018) காலை 10 மணியளவில் உளநலப்பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா பிராந்திய சுகாதாரப்பணிமனையிலிருந்து ஆரம்பமாகி நகரசபை கலாச்சார மண்டபத்தில் நிறைவடைந்துள்ளது.

இவ்விழிப்புணர்வுப் பேரணியானது மன்னார் வீதியிலுள்ள பிராந்திய சுகாதாரப்பணிமனையில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதிவழியாக ஹொறவப்பொத்தான வீதிவழியாக பஸார் வீதியூடாக மணிக்கூட்டுக்கோபுரம் சென்று அங்கிருந்து நகரசபை மண்டபத்தைச் சென்றடைந்து நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வவுனியா வைத்தியசாலை உளநல சேவைகள் பணிப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர் எம். எம்.ஹனீபா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பசுபதிராஜா, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், பொது சுகாதாரப்பரிசோதகர்கள், பொது வைத்தியசாலை உளநல வைத்திய நிபுனர், உத்தியோகத்தர்கள், தாதிய கல்லூரி மாணவர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், கல்வியற்கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், வர்த்தக சங்கப்பிரதிநிதிகள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், வரோட் நிறுவனத்தினர், விஷேட தேவைக்குட்பட்டோர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் 15 வயதுச் சிறுமியை பலவந்தமாக அழைத்துச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுச் சிறுமியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பலவந்தமாக அழைத்துச் சென்ற இளைஞனை நேற்று பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை பலவந்தமாக அழைத்துக்கொண்டு சென்று அனுராதபுரம் பகுதியில் இருவரும் தங்கியிருந்துள்ளனர்.

சிறுமியின் உறவினர்கள் இவர்கள் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து அனுராதபுரம் சென்று சிறுமியை அழைத்து வந்துள்ளதுடன் நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் தமது மகளை பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு ஒன்றினையும் சிறுமியின் பெற்றோர் மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து நேற்று வவுனியா சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனைக் கைது செய்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கனகராயன்குளம் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : பொலிஸார் குவிப்பு!!

வவுனியா கனகராயன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக இன்று (11.09.2018) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது.

கனகராயன்குளம் வர்த்தக சங்கம், பொது அமைப்புக்கள், கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிவில் உடையில் சென்று இரண்டு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் மேல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கனகராயன்குளம் பொலிசாரே கட்டப்பஞ்சாயத்தா! லஞ்சம் வாங்கவா வஞ்சம் தீர்த்தீர்கள், கொத்து ரொட்டிக்காகவா சிறுமி வயிற்றில் குத்தினீர்கள், பொலிசின் சிறப்பு பயிற்சியை சிறுவர் மீது காட்டாதே, ஏழைகளின் சொத்துக்களை ஏப்பம் விடாதே, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை உடனடியாக மாற்று போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குளம், ஓமந்தை மற்றும் கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டதுடன் வவுனியாவிலிருந்து பேரூந்து மூலம் விசேட பொலிஸ் அணியினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இவ் போராட்டத்தின் முடிவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னக்கோன், வன்னி பாராளுமன்றற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

குறித்த குடும்பத்தினன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் முடிவில் அவருக்கான தண்டனை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இப் போராட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் மற்றும் பொதுமக்கள், கனகராயன்குளம் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பொலிஸாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கனகராயன்குளம் வர்த்தகர்கள் கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் ஆபத்தான உணவுகள்!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்வதேச ரீதியாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய சில முந்திரி பருப்பால் இலங்கையின் தேசிய விமான சேவை, சர்ச்சையில் சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் உடனான தனது பயணம் ஒன்றின் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சில முந்திரிப்பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முறைப்பாடு செய்துள்ளார்.

அவை நாய்களுக்கு கூட தகுதியானவை அல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தது ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் உள்ள விமான நிறுவனம் மீது ஜனாதிபதி வெளிப்படுத்திய கருத்து பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்த விமான நிறுவனம் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தற்போது விசேட ஜனாதிபதி விசாரணை பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், இந்த முந்திரிபருப்பில் உள்ள ஆபத்து தொடர்பில் இன்னமும் தெளிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வாரம் நேபாள தலை நகரம் கத்மாண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இவ்வாறு பொருத்தமற்ற முந்திரி பருப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நான் நேபாளத்தில் இருந்து திரும்பிய போது, விமானத்தில் சில முந்திரி பருப்புகள் வழங்கப்பட்டன. அது மனிதர்களுக்கு அல்லது நாய்களுக்கு கூட பொருத்தமானதல்ல. யார் இவற்றினை அனுமதிக்கின்றார்கள்? என ஜனாதிபதி வினவியுள்ளார்.

வவுனியாவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் குருக்கள்புதுக்குளம் பூவரசங்குளம் பகுதியில் இன்றையதினம் (11.09) கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி கட்டுதுப்பாக்கியுடன் காட்டுப் பகுதிக்கு வேட்டையாடச் சென்றிருப்பதாக விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூவரசங்குளம் காட்டுப் பகுதியில் பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக கட்டுத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில் சாந்தகுமார் லூகஸ் (வயது 25) என்பவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பிரான்ஸில் பலரை வியப்பில் ஆழ்த்தி சாதனை படைத்த இலங்கை தமிழ்ப் பெண்!!

சர்வதேச அழகுக் கலை போட்டியில் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் இரண்டாம் இடத்தை தன்வசப்படுத்தி சாதனை படைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பிரான்ஸில் நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த போட்டியில் கலந்து கொண்ட ஜெயபிரகாஷ் கயல்விழி எனும் பெண்ணே குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இலங்கையில் கயல்விழி அழகுக் கலை துறையில் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதுடன், அவர் பல்வேறுபட்ட சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கயல்விழிக்கு நேற்றிரவு வெற்றிக்கான பரிசு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை சார்பில் பங்கேற்ற அவரின் இந்த சாதனைக்கான அடையாளமாக வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்ப் பெண்ணான கயல்விழி கொழும்பு இராமநாதன் இந்துக் கல்லூரியின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்திலிருந்து மிகிந்தலை நோக்கி கேரள கஞ்சாவினை கடத்திச் சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று (10.09) இரவு 9.30 மணியளவில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் – மிகிந்தலை பேருந்தை நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அப் பேருந்தில் பயணித்த மிகிந்தலையைச் சேர்ந்த நபர் 2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ரயில் முன் பாய்ந்து தந்தை மற்றும் இரு மகன்கள் தற்கொலை!!

பொலன்னறுவை – வெலிகந்த பிரதேசத்தில் தந்தையொருவர் தனது பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த அனைவரும், வெலிகந்த – போவத்தை பகுதியிலேயே ரயில் முன்னால் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 வயதான நபரும், அவரது 11 மற்றும் 5 வயதான மகன்களுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் மூத்த மகன் கொழும்பில் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு இலங்கைத் தாயாரின் பரிதாபக் கதை!!

கடந்த மாதம் ஒண்டாரியோவின் 650 Parliament அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பிடித்த தீ, பலரின் வாழ்வை அடியோடு மாற்றிவிட்டது.

தனது பிள்ளைகளுடன் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த இலங்கையைச் சேர்ந்த பிரவீணா மகேந்திரனும் அவர்களில் ஒருவர்.

இப்போது கனடாவின் செஞ்சிலுவைச் சங்கம் அமைத்துள்ள முகாம் ஒன்றில் தனது பிள்ளைகளுடன் தங்கியிருக்கிறார் அவர். இன்றைய நிலவரப்படி, பிரவீணா தற்காலிகமாக குடியிருக்க ஒரு வீட்டைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்,

ஆசிரியர்களையும், சமூக சேவகர்களையும் தேடி ஓடுகிறார், வீட்டைத் துறந்த பிற குடும்பங்களுடன் துணிகள் வாங்குவதற்காக செல்கிறார், இலவசமாக கொடுக்கப்பட்ட கிஃப்ட் கார்டுகளுடன் மளிகைப் பொருட்கள் வாங்கச் செல்கிறார்.

வீடு தீப்பிடித்ததிலிருந்தே கிட்டத்தட்ட 16 வாரங்களாக இதேதான் நடக்கிறது. ஆகஸ்டு மாதம் 21ஆம் திகதி தனது பிள்ளைகள் படுக்கையில் இருக்க, திடீரென்று மின்சாரம் தடைபடுகிறது.

வீட்டு வேலைகளை இன்னும் முடிக்காத பிரவீணாவின் காதுகளில் ஒரு சிறுமி தீ, தீ, யாராவது உதவுங்கள் என்று கத்தும் சத்தம் கேட்கிறது.

சில துணிமணிகளை மட்டும் அள்ளிக்கொண்டு வீட்டை விட்டு குழந்தைகளுடன் வெளியேறுகிறார் அவர். அன்று அவர் கால் பிளாடர் அறுவை சிகிச்சை ஒன்றிற்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நாள். தவிர்த்துப் பார்த்தவரால் வலி பொறுக்க இயலவில்லை.

மருந்துகள் வாங்க மருத்துவமனைக்கு சென்றால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் மருத்துவர்கள்.

உடனே அறுவை சிகிச்சை, மறு நாள் முதல் ஹோட்டல் அறை ஒன்றில் 10 நாட்கள் தங்கல். உதவ யாருமில்லை, ஏனென்றால் அவரது உறவினர்களும் அதே கட்டிடத்தில் வசித்தவர்கள், அவர்களும் முகாம்களில்தான் இருக்கிறார்கள். அறுவை சிகிச்சை முடிந்து பிரவீணா இன்னும் ஓய்வெடுக்கவில்லை.

எப்படியாவது ஒரு தற்காலிக வீட்டைப் பிடிக்க வேண்டும், பின்னர் எப்படியாவது தனது சொந்த அடுக்குமாடிக் கட்டிடத்திற்கு சென்றுவிட வேண்டும், அவ்வளவுதான் பிரவீணாவின் தற்போதைய ஆசைகள்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்த உற்சவம் மற்றும் கொடியிறக்கம்!(படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா நேற்று  ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார் , மற்றும் அம்மன் சமேதரராய் காலை 07 மணிக்கு ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தீர்த்த திருவிழாவின் போதும் வேல் பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார்.

இன்றைய தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர்.

மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 25 தினங்கள் இடம்பெற்று நேற்று கொடியிறக்கத்துடன் முடிவுற்றது.

மாலை ஆரம்பமான பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்று முருகன் வள்ளி – தெய்வானை சமேதரராக வெளி வீதியுலா வந்தார்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்