வவுனியா ஓமந்தை பாலமோட்டைப் பகுதியில் இன்று (09.06.2018) காலை 9 மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினரால் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படும் 1500 லீற்றர் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள பாலமோட்டை, ஊறாகுளம் பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்படுவதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில்,
பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் அப்பகுதியைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பரல் 1500 லீற்றர் கொண்ட கோடாவினையும் அப்பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா தரணிக்குளம் பகுதியில் 11 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து இன்று (09.06.2018) சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா தரணிக்குளம் பகுதியில் வசித்து வந்த 11 வயது பாடசாலை மாணவியை அவரது தந்தை நேற்று இரவு பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டள்ளதாக இன்று ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாய் மற்றும் சிறுமி முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.
இதையடுத்து ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபஸ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நிஜாம் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் தந்தையை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்திசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட ஈச்சங்குளம் பொலிசார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான தந்தையை இன்று பிற்பகல் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் காணாமல் போன நாம்பன் மாடு, மதவாச்சி பூனாவை பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த சிவஞானசுந்தரம் ஸ்ரீதேவி என்பவருடைய 150,000 பெறுமதியான நாம்பன் மாடு 4ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக உரிமையாளரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இன்று வவுனியா பூனாவை பகுதியில் வைத்து நாம்பன் மாட்டினை பொலிஸார் மீட்டதுடன், இது தொடர்பான விசாரணையினை மூவரிடம் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை காரணமாக மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரையில் காற்று வீசக்கூடுமென்று திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த காற்று டொனாடோ என்ற காற்றாக இருக்கலாமென தெரிவிக்கப்பட்டபோதிலும், அது தொடர்பாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக செயல்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மண்சரிவுகள் ஏற்பட்டவண்ணமுள்ளன.
இதேவேளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது.
நாட்டின் சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
கரையோரப் பிரதேசங்களில் முக்கியமாக மேற்கு, தெற்கு, மத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கண்டி – மடவல பகுதியில் விஷேட அதிரபடையினருக்கும் பாதாள உலக கோஷ்டியினருக்கும் இடையில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள உலக கோஷ்டியினர் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகத் தலைவரின் சகாக்களே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகக்குழு தலைவர் துபாயில் தலைமறைவாகி வாழ்ந்து வருகிறார்.
வவுனியா பொலிஸார் தென்பகுதி மக்களுக்கு மனிதாபிமான உதவியை மேற்கொண்டுள்ளனர்.
தென் மாகாணத்தின் மாத்தறை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இன்புளுவன்சா நோய்த்தாக்கத்தினால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்பிற்கான சுவாச பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்துள்ளனர்.
வவுனியா மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் மாத்தறை பிரதேச ஊடகவியலாளர்கள் விடுத்த கோரிக்கைக்கமைய வவுனியா வர்த்தகர் சங்கத்தின் மூலமாக 5000 சுவாச பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை வவுனியா வர்த்தகர் சங்கத்தினடம் இருந்து பெற்றுக்கொண்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் உத்தியோகத்தரின் ஊடாக குறித்த பொருட்களை மாத்தறை மாவட்ட ஊடகவியலாளர்களிடம் வழங்கி வைத்திருந்தார்.
வவுனியாவில் அண்மையில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் 8 பேரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் மற்றும் ஆணொருவர் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியலாயத்தில் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி கோரளகெதர தலைமையிலான 12 பேர் அடங்கிய பொலிஸ் பிரிவினர் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் 8 பேரை நேற்று (08.06) கைது செய்துள்ளனர்.
இவர்களில் 6 பேர் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் பிரகாரம் குழந்தையை கடத்துவதற்காக குழந்தையின் தந்தையார் வவுனியாவை சேர்ந்த நபரினூடாக பணப்பேரம் பேசியதாகவும் குழந்தையை கடத்தி வைத்திருந்த இரு பெண்களுக்கும் தொண்ணூறாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்கு தலா ஐயாயிரம் ரூபா கொடுக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் குழந்தையை இந்தியாவிற்கு கடத்தி செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளமையும் பொலிஸாரின் விசாணைகளில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கு வவுனியா பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவத்துடன் இதுவரை 13 பேர் கைது செய்ய்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு கருணை காட்டுமாறு வவுனியா வைகறை புனர்வாழ்வு நிலையத்தில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியா மாவட்டபொது வைத்தியசாலையில் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது சனத்தொகையில் குறிப்பிடத்தக்களவு மக்கள் ஏதோ ஒரு விதத்தில் இன்னொருவருடைய தேவையை எதிர்பார்த்து இருக்கின்றார்கள். இவர்களை வலு விழந்தோர் என்று அழைக்கலாம். இலங்கையைப் பொறுத்தளவில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 87 பேர் வலுவிழந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு இருகின்றார்கள்.
இது உலக சனத்தொகைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியது என்றாலும் உலகம் முழுக்கப்பார்க்கும் போது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் வலு விழந்தோர்களாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள்.
வலுவிழந்தோர் என்று சொல்லும் போது ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு பிறருடைய உதவி தேவைப்படுகின்றது. அவர்களை வலுவிழந்தோர் என்று கணிப்பிட முடியும்.
உலக அளவில் ஒரு பில்லியன் வலுவிழந்தோரில் 110 மில்லியன் பேர் கட்டாயமாக வேறு எவரும் உதவியைச் செய்தால் மட்டுமே தமது வாழ்வைக் கொண்டு செல்லக்கூடிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். இலங்கையில் அத் தொகை 1.6 மில்லியன் பேராக கணிக்கப்பட்டிருக்கின்றது.
வட மாகாணத்தைப் பொறுத்த வரையில் 25 ஆயிரம் பேர் போருக்குப் பின்னரான சூழ் நிலையில் வலுவிழந்த ஆட்களாக கணிக்கப்பட்டிருக்கின்றார்கள். வடமாகாணத்தில் சகாதாரத் திணைக்களத்தின் ஊடாக வலுவிழந்தோர் பற்றிய கருத்துக் கணிப்பு ஒன்று செயற்படுத்தப்பட்டு வருகின்றன. சில மாவட்டங்களில் அது பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது. சில மாவட்டங்களில் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
வலுவிழந்தோர் என்று சொல்லும் போது உடற் தொழிலியல் சம்மந்தமான வலுவிழந்தோராகவும் கணிக்கலாம் அல்லது மன ரீதியில் வலுவிழந்தோராகவும் கணிக்கலாம்.
மனவியல் ரீதியாக வலுவழந்தோருக்கு மனத்திடம் குறைவாக இருக்கும் சில விடயங்களை அவர்கள் எற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்களை வேறு ஒருவர் ஆறுதல்படுத்தி உதவி செய்தால் அவர்களின் வாழ்க்கையை இனிமையாகக் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.
உடலியல் ரீதியில் என்று பார்த்தால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் கை, கால்களை இழந்தவர்கள் இவ்வாறு அடையாளப்படுத்த முடியும் அதே போல கை கால்கள் இருந்தாலும் பலருக்கு கை, கால்கள் இயங்க முடியாமல் இருக்கும் ஆட்கள் போர் நடைபெற்ற சூழ்நிலையில் போர் காரணமாக அவயங்கள் பாதிக்கப்பட்டு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதியாகிக் கொண்டு இருந்தார்கள்.
ஆனால் தற்போது பார்த்தால் போர் இடம்பெற்ற சூழலைத் தவிர மிகவும் மேசமாக இருக்கின்றது. நிலையை தொற்றா நோய்களாலே பாரிச வாதம் போன்ற தொற்றா நோய்களினால் பாதிக்கப்படுகின்றவர்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது.
அதுபோல வீதி விபத்துக்களால் பாதிக்கப்பட்டு வலுவிழந்தோராக கணிக்கப்படுகின்றவர்கள் நாளாந்தம் அதிகரித்துக் காணப்படுகின்றது. அது மிகவும் ஒரு வேதனைக்குரிய சம்பவம்
ஏனேன்றால் வவுனியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் ஏ9 வீதியில் வீதி விபத்துக்கள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது. வீதி விபத்தினால்பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அவருக்குரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவருடைய உயிரைக்காப்பாற்றிய பிற்பாடு அவரை வைகறை என்ற புனர்வாழ்வு நிலையத்தில் வவுனியா வைத்தியசாலையின் நிர்வாகத்திற்குக் கீழ் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு புனர்வாழ்வு நிலையத்தை நடாத்தி வருகின்றோம்.
அதிலே அனுமதிக்கப்பட்டு அவர்களின் நாளாந்தத் தேவைகளை எவ்வாறு மேற்கொள்வது என்று விசேட பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை வீடுகளுக்குத்திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
அவர் வீட்டிற்குப் போகும்போது சமூகம் அவரை சாதாரணமாகப் பார்க்கப்படுவதில்லை. ஒன்று அவரின் உட்கட்டமைப்பு அவருக்கான விசேட மலசலகூடம் தேவை அவர் செயற்படுவதற்கு நாற்சக்கரவண்டி தேவை சாய்தளம் அமைக்கப்படவேண்டும் அவ்வாறான உட்கட்டமைப்புக்கள் எங்களுடைய சமூகத்தில் இன்று வரையில் கொண்டு வரப்படவில்லை.
நோயாளர்களை இங்கு வைத்து செயற்படுத்தப்பட்டு வீட்டிற்குக் கொண்டு சென்ற போது பெரும் பிரச்சினையாகவே காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் சமூகத்தில் விழிப்புணர்வைக் கொண்டு வர வேண்டியது கட்டாயம். அதன் முதற்கட்டமாக மோட்டி விசன் ஸ்ரீலங்காவுடன் இணைந்து தாதியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதுடன் சமூகத்திற்கும் இச் செய்திகளை வழங்கவேண்டிய நிலையில் இருக்கின்றோம் .
சமூகத்தில் இருப்பவர்கள் சகலரும் வலுவிழந்தோரை தங்களுக்குரியவர்கள் என்று பார்வையிட்டு அவர்களுக்கு தட்டிக்கொடுத்து அவர்களை வாழ்வியலில் முன்னேற்ற வேண்டும் என்பது சமூகத்திலுள்ளவர்களின் பொறுப்பு
அலுவலகங்கள், வைத்திசாலைகளில் சகல அரச சார்பற்ற நிறுவனங்களிலும் அனுகுவசதிகளை வலுவழந்தோருக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும். சட்டத்தின் மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அதிலே ஒரு பொறுப்பு இருக்கின்றது. அனைவரும் உணர்ந்து அதனை மேற்கொள்ளவேண்டும்.
வீதி விபத்துக்களினால் யாரும் அடுத்த நிமிடங்களில் வலுவழந்தோராக மாற்றக்கூடிய சந்தர்ப்பம் இந்த நாட்டிலே நிறையவே காணப்படுகின்றது. எவ்வாறு இதிலிருந்து எம்மைப் பாதுகாத்து கொள்வது எங்களுடைய அவயவங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதில் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
வைகறை புனர்வாழ்வு நிலையத்திலுள்ளவர்களுடன் வந்து ஒரு நிமிடங்கள் செலவிட்டால் அவர்களுக்கு பெரிய மன ஆறுதலாக இருக்கும் நீங்களாகவே முன் வந்து இங்கிருப்பவர்களின் குறை நிறைகளைக் கேட்டு உங்களால் இயலக்கூடிய உதவிகளை மேற்கொள்வதாலே அவர்களும் ஆறுதல்படுவார்கள்.
அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பங்களும் ஆறுதல்படும் மற்றவர்களுக்கு உதவிகள் புரிந்து இந்தச் சமூகத்தைக் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முன் வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் தன்னுடை தற்கொலைக்கு காரணம் மாமியார் மற்றும் கணவர் தான் என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்கு சுபலட்சுமி என்ற மகள் உள்ளார். 19 வயதான் இவர் தன்னுடைய இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான தர்மலிங்கம் மகன் தர்மதுரை (25) என்பவரும் காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த வேளையில், பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தர்ம துரையும்-சுபலட்சுமியும் தங்களது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அருகிலிருக்கும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு தர்மதுரையையும், சுபலட்சுமியும் அவர்களது பெற்றோர் தங்களது குடும்பத்தில் சேர்த்து கொண்டனர். தர்மதுறையின் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சுபலட்சுமியிடம், தர்மதுறையின் தாய் கலைசெல்வி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக சுபலட்சுமி தன் பெற்றோரின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். இதையடுத்து கடந்த 5-ஆம் திகதி மாமனாரின் வீட்டிற்கு சென்ற தர்மதுரை மதுஅருந்திய நிலையில் சுப லட்சுமியிடம் பிரச்சனை செய்துள்ளார்.
அப்போது அருகிலிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்ப, நேற்று முன் தினம் மீண்டும் சென்ற தர்மதுறை அங்கு சுப லட்சுமி, அவரது தந்தை ராஜாங்கம், தாய் வள்ளி யம்மை ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி விட்டு சென்றுள்ளார்.
மிகுந்த மனமுடைந்த சுபலட்சுமி நேற்று திடீரென்று வீட்டிலிருந்து பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது சுபலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.
அதில், அவர் தன்னுடைய மரணத்திற்கு காரணம் என்னுடைய மரணத்திற்கு காரணம் மாமியார் கலைசெல்வி, கணவர் தர்ம துரை, அவரது தம்பி இளையராஜா ஆகியோர் தான் என்று கூறி சில உருக்கமான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தர்மதுரை, அவரது தாய் கலைசெல்வி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை திருவள்ளூர் மாவட்டம் வயலார் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் அங்கிருக்கும் திருமழிசை பகுதியைச் சேர்ந்த எபினேசர் ராஜன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
எபினேசர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், பொலிசார் அவரை விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதைக் கண்ட சங்கீதா தற்போது ராஜன் எந்த ஒரு திருட்டு வழக்கிலும் தொடர்பு கொள்வதில்லை, இதனால் அவரை உடனடியாக என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று பொலிசாரிடம் காவல்நிலையத்தில் கெஞ்சியுள்ளார்.
ஆனால் மறுப்பு தெரிவித்த பொலிசார், அவரை திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது இதைக் கண்டித்து சங்கீதா திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இச்சமப்வத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சங்கீதாவிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்தின் முன்பு இச்சம்பவம் நடந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் முதன்முறையாக 63 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றிருப்பது மருத்துவத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணா(71)-செந்தமிழ் செல்வி(63). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், இவர்கள்சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடி 2 ஆண்டுகளாக பெற்று வந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் 3 கிலோ எடையுடன் பிறந்த இந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாதவிடாய் நின்ற 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதுவும் 63 வயதில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்திருப்பது தமிழகத்தில் இது முதல்முறை என்று கூறப்படுகிறது.
திருச்சியில் பல பேருடன் தகாத முறையில் பழகிய பெண்ணை ஒருவர் கொடூர முறையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே மணப்பாறைக்கு அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள தச்சமலை வன பகுதியில் கடந்த 29-ஆம் திகதி 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் இறந்து கிடந்திருக்கிறார்.
அந்த வழியாக சென்றவர்களால் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்ட பின் காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினர்.
ஆடைகள் கலைந்த நிலையில் முகத்தில் கல்லை போட்டு முகம் சிதைக்கப்பட்டு அந்த பெண் இறந்திருந்தார். அதனால் இறந்தவர் பற்றியும் கொன்றவர் பற்றியும் துப்பு கிடைக்காமல் காவல்துறை திண்டாடியது.
இந்நிலையில் சடலம் திண்டுக்கல் நந்தவனப்பட்டியை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி மலர்க்கொடி தான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த பெண்ணிற்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்த நிலையில் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார் . பின் சில வருடங்கள் கழித்து மலைப்பட்டி அருகே வழக்கறிஞர் தம்பி ஒருவரை மணந்திருக்கிறார்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் மாரடைப்பால் இரண்டாவது கணவரும் காலமாகி இருக்கிறார். அதன் பின் குழந்தைகளை ஆசிரமத்தில் விட்டு விட்டு முதல் மகனுடன் துபாய் சென்று அங்கு வேலை செய்தார்.
மீண்டும் தமிழ்நாடு வந்த மலர்க்கொடி திண்டுக்கல் வந்திருக்கிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகையில் உடன் பணிபுரிந்த தோழியின் கணவரின் நண்பருடன் தகாத உறவுடன் பழகியிருக்கிறார்.
இதனையடுத்து காரியப்பட்டியில் தனது வீட்டில் முருகன் மலர்கொடியை தங்க வைத்து ஒன்றாக வாழ்ந்திருக்கின்றனர். இந்நிலையில் மலர்க்கொடி வேறு சில ஆண்களோடும் தகாத உறவில் ஈடுபட முருகனுக்கு இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
ஆகவே தச்சன்குடி வனப்பகுதிக்கு மலர்கொடியை கூட்டி சென்று அங்கு உறவில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பின் மலர்க்கொடி பணம் விடயமாக ஏதோ கூற ஏற்கனவே கோபத்தில் இருந்த முருகன் அருகில் இருந்த கல்லை எடுத்து மலர்கொடியில் தலையில் போட்டு கொன்றிருக்கிறார்.
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் மலர்கொடியின் புகைப்படத்தை உள்ளூர் ஊடகங்கள் மூலம் காவல்துறையினர் ஒளிபரப்பியதால் மலர்கொடியுடன் பனி புரிந்த பெண்கள் இருவர் காவல்நிலையம் சென்று மலர்க்கொடி பற்றிய விடயங்களை கூறினார்.
அதன் பின்னர் முருகன் தான் கொலையாளி என்று அவனை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையின் போது நடந்த விடயங்களை கூறிய முருகன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
பிறந்த குழந்தை இறந்து விட்டதாக நினைத்து அடக்கம் செய்த பின்னர் பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட வேலையில் குழந்தை உயிருடன் இருந்த சம்பவம் பிரேஸில் நாட்டில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் குறித்த குழந்தையினை தோண்டி எடுக்கும் வேலையில் அழுக்குரல் ஒன்று கேட்கப்பட்டுள்ளது.குழந்தை 50cm ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வம்சாவளியினை சேர்ந்த 15 வயதுடைய இந்திய பெண் குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும் வேலையில் குறித்த குழந்தையினை பிரசவித்துள்ளார்.
குறித்த குழந்தை கிடைக்கும் போது குழந்தையின் தலை நிலத்தில் அடிப்பட்டு விட்டாத பொலிஸாரிடம் அப்பெண் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் குறித்த குழந்தைக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காது, குழந்தை இறந்து விட்டதாக நினைத்து தன் தாயிடம் தெரிவித்த வேலையில், குறித்த பெண்ணின் தாயும் குழந்தை இறந்து விட்டதாக பரிசோதித்து உறுதிப்படுத்தியதன் பின்னரே குழந்தையினை புதைத்ததாக பொலிஸாரிடம் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த குழந்தை உடலாரோக்கியத்துடன் இருப்பதாகவும், பெண்ணின் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாள் ஒன்றுக்கான நேரம் 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக எதிர்காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என அமெரிக்காவின் விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சுமார் 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. ஆனால் வருடத்திற்கு 3.82 சென்றி மீற்றர் தூரம் நிலவு பூமியின் அருகிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தது.
முதலில் இருந்ததை விட நிலவு தற்போது 44 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் பூமியை விட்டு விலகி சென்றுள்ளது. இதன் காரணமாகவே தற்போது ஒரு நாள் என்பது 24 மணி நேரமாகவுள்ளது. ஆனால் 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது 18 மணி நேரமும் 41 நிமிடங்களும் மட்டுமே இருந்தது.
எனவே நிலவு தற்போது நகரும் அளவை கணிப்பிட்டு பார்த்தால் எதிர்வரும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக கணிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது தொடர்பாக சச்சின் கூறுகையில், அர்ஜூன் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார்
சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜூன் டெண்டுல்கர். இவரும் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். நீண்ட நாட்களாக ஆடி வரும் அர்ஜூன் டெண்டுல்கர், தற்போது இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இந்நிலையில், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது தொடர்பாக சச்சின் கூறுகையில், அர்ஜூன் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்றார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் என் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜூன் வெற்றியடைய நானும், எனது குடும்பத்தினரும் பிரார்த்திப்போம். அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும் என தெரிவித்துள்ளார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் உட்பட ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதிய செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து திணைக்களங்கள், நிறுவனங்கள், பொலிஸார் மற்றும் பக்தர்களின் ஒத்துழைப்புடன் இம்முறையும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெறவுள்ளதாக புதூர் ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
புதூர் ஆலய பொங்கல் விழாவிற்கு வருடாந்தம் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றமை சிறப்பம்சமாகும்.