வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் : நள்ளிரவில் ஏற்பட்ட விபரீதம்!!

வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர். தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் அறைக்கு சென்றுள்ளனர்.

அன்றைய நாள் நள்ளிரவில் திருடன் ஒருவன் வீட்டுக்குள் புகுந்துள்ளான். பெறுமதியான பொருட்களை தேடி வீடு முழுவதும் சுற்றித் திரிந்துள்ளான்.

இதனை அவதானித்த மனைவி, கணவன் தான் சுற்றித் திரிவாக எண்ணி இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள்? இருட்டில் நடந்து விழுந்து எழும்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவருக்கு, மனைவி பேசிய சத்தம் கேட்ட போதிலும், அவர் கனவில் புலம்புகின்றார் என எண்ணியுள்ளார்.

நான் உறக்கத்தில் நடப்பதில்லை கனவில் புலம்பாமல் உறங்குமாறு சத்தமாக கூறி விட்டு அடுத்த பக்கம் புரண்டு படுத்துள்ளார் கணவர்.

அடுத்த நாள் காலை எழுந்து பார்க்கும் போது அலுமாரியில் வைக்கப்பட்ட பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. வீட்டில் இருந்த பணம் காணாமல் போயுள்ளது. பின்னர் இரவு தான் பேசியது திருடனுடன் என்பதனை மனைவி புரிந்து கொண்டுள்ளார்.

இந்த தம்பதியினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று நாடு திரும்பியமையினால் அவர்களிடம் பெருந்தொகை பணம், நகைகள் இருக்கும் என திருடன் எண்ணியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைப்பு!!

வவுனியா பூவரசன்குளம் குருக்கள் ஊர் கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் ஒருநாள் இலவச மருத்துவ முகாமில் மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (06.06) காலை 9.30 மணியளவில் இறம்பைக்குளம் ஈஸி மிசன் பூரண சுவிசே சபையின் அனுசரணையில் இடம்பெற்றது.

பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகளை வழங்கிவைத்தார்.

ஒருநாள் இலவச மருத்துவ முகாமில் மூக்குக்கண்ணாடி, மற்றும் சாதாரண நோய்களுக்கும் மருந்துகளும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது. காலை 9.30 முதல் பிற்பகல் 12 மணிவரையும் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாமில் 140ற்கும் மேற்பட்டவர்கள் மூக்குக்கண்ணாடிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இறம்பைக்குளம் ஈஸி மிசன் பூரண சுவிசேச சபையின் பிரதான பிசப், பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பம்மைமடு இராணுவ அதிகாரி எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் 160 வருட வரலாற்றை மாற்றிய ரயில் குழந்தை!!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் நேற்று இரவு ஆண் குழந்தை ஒன்று பிரசவிக்கப்பட்டுள்ளது.

160 வருட இலங்கை ரயில் வரலாற்றில் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரியவந்துள்ளது. ஓடும் ரயிலில் பிரசவ வேதனையுடன் பெண் ஒருவர் உள்ளார் என ரயில் பாதுகாப்பு அதிகாரிக்கு அறிந்து கொள்ள முடிந்துள்ளது.

உடனடியாக செயற்பட்ட அதிகாரிகள் ஹபரண பொலிஸாருக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் ஹபரண வைத்தியசாலையின் வைத்தியருக்கும் அறிவித்துள்ளனர்.

பின்னர் உடனடியாக நோய்காவு வண்டி ஒன்றும் பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றும் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து ஹபரண ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்துமாறு பொலிஸார் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ரயில் நிறுத்தப்பட்டவுடன் கர்ப்பிணி தாய்க்கு குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய உடனடியாக செயற்பட்ட சுகாதார அதிகாரிகள் நோய்காவு வண்டி ஊடாக தாயையும் குழந்தையும் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தாய் இதய நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதனால் அவர் மேலதிக சிகிச்சை மேற்கொள்வதற்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார். தற்போது தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதய பிரச்சினை காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் குழந்தை பிரசவிக்குமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர். எனினும் அதனை மீறி இந்த பெண் தனது கணவருடன் மட்டக்களப்புக்கு பயணித்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

தினமும் அவளின் சித்ரவதை தாங்கமுடியவில்லை : காதல் மனைவியை கொலை செய்த கணவன்!!

டெல்லியில் தனது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பொலிசில் சென்று சரணடைந்துள்ளார் கணவன்.

2017 ஆம் ஆண்டு யாசின் மற்றும் ஜான்வி ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆரம்பத்தில் இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. ஆனால் நாட்கள் செல்ல, தனது கணவனை சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளார் ஜான்வி.

அலுவலகம் முடிந்து யாசின் வீட்டிற்கு வந்தவுடன், அதிக பாசம் காரணமாக கேள்வி மேல் கேள்வி கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார் ஜான்வி. இது ஒரு கட்டத்தில் நரக வேதனையாக மாறியது யாசினுக்கு.

இதனால் சம்பவம் நடைபெற்ற அன்று இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது காதல் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

குற்ற உணர்ச்சி தாங்கமுடியாமல் தானாக காவல் நிலையம் சென்று, நடந்தவை குறித்து தெரிவித்து சரணடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து யாசின் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் வழியே ஆபத்தான பயணம் : 46 அகதிகள் பரிதாப பலி!!

கடல் வழியாக சோமாலியாவில் இருந்து ஏமனுக்கு தப்பி சென்ற அகதிகள் பாதி வழியிலேயே கடலில் மூழ்கி பலியான சம்பவம் நடந்துள்ளது.

சோமாலிய போன்ற எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த மக்கள் வருடந்தோறும் 10000 பேர் வரை அகதிகளாக அரபு நாடுகளில் தஞ்சம் அடைவது வழக்கம். அந்த நாட்டில் குடியுரிமைக்கு விண்ணப்பித்து விட்டு கிடைத்த வேலைகளை செய்து வருவார்கள்.

சென்ற வருடம் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடல் வழியாக அரபு நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் ஏமன் நாடு அருகில் இருப்பதால் முதலில் அந்த நாட்டுக்கு செல்வதுதான் பெரும்பான்மையான அகதிகளின் தேர்வாக இருக்கும்.

இந்நிலையில் ஏமன் நாட்டிற்கு அகதிகளாக சென்றவர்களில் 46 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். உடன் பயணித்த 54 பேரின் நிலை என்ன என்பது இன்னமும் தெரியவில்லை. அவர்களில் மேலும் 16 பேர் இறந்திருக்கலாம் எனவும் நம்பபடுகிறது.

காணாமல் போனவர்களை அமெரிக்க கடற்படையும் ஏமன் கடற்படையும் தேடி வருகின்றனர்.

நான்கு முறை உயிரிழந்து மீண்டும் உயிர் பிழைத்த நபர் : வியக்கவைக்கும் சம்பவம்!!

 

பிரித்தானியாவை சேர்ந்த நபரின் இதயம் நான்கு முறை துடிப்பதை நிறுத்தி அவர் மரணித்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக மீண்டும் உயிர் பிழைத்துள்ளார்.

பிர்மிங்கமை சேர்ந்தவர் ஜாஸ்கிரண் மதாஹர் (36). இவர் தனது மனைவி கவலுடான பத்தாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட கடந்த ஏப்ரல் மாதம் லாஸ்ஏஞ்சல்ஸுக்கு சென்றுள்ளார்.

சுற்றுலா முடிந்து ஏப்ரல் 13-ஆம் திகதி வீட்டுக்கு வந்த நிலையில் ஜாஸ்கிரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இதயம் துடிப்பது நின்றுள்ளது.

இதையடுத்து கவல் மருத்துவமனைக்கு போன் செய்த நிலையில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஜாஸ்கிரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மூலம் ஜாஸ்கிரண் இதயத்தை செயல்பட வைத்தனர்.

பின்னர் பத்து நிமிடம் கழித்து மீண்டும் இதயம் நின்று போனது, இதையடுத்து மீண்டும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மூலம் இதயத்தை செயல்பட வைத்தனர்.

இதே போல சிறிய இடைவெளியில் மீண்டும் இரண்டு முறை இதயம் நின்று மரணமடைந்துள்ளார்.

பின்னர் சிறப்பு இதய மருத்துவர்கள் பலரின் தீவிர சிகிச்சையால் ஜாஸ்கிரணின் இதயம் செயல்பட தொடங்கியது.

தற்போது பேஸ்மேக்கர் எனப்படும் இதயத்தை இயங்க செய்யும் கருவி ஜாஸ்கிரணுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஜாஸ்கிரண் கூறுகையில், 13-ஆம் திகதி என்பது ராசியில்லாத நாள் என கூறுவார்கள், ஆனால் அந்த நாள் தான் என் உயிரை காப்பாற்றியுள்ளது.

நான் உயிருடன் இருப்பதை நம்பமுடியாத அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.

பெட்ஷீட்டில் கட்டி கர்ப்பிணியை மருத்துவமனை கொண்டு சென்ற அவலம்!!

ஒரு கம்பில் பெட்ஷீட்டை கட்டி அதில் நிறை மாத கர்ப்பிணியை மருத்துவமனைக்கு எடுத்து சென்ற அவலம் நடத்துள்ளது.

கேரளா பாலக்காடு அருகே அட்டப்பாடி எனும் கிராமம் இருக்கிறது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் எடவன்னி எனும் ஊரை சேர்ந்தவர் தனலி.

இவரது மனைவி மணிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து புதூர் மருத்துவமனை ஆம்புலன்ஸை அனுப்ப சொல்லி கேட்டுள்ளனர். மூன்று மணிநேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. காரணம் கேட்டதற்கு சாலை சரியில்லை அதனால் ஆம்புலன்ஸ் வராது என்ற காரணம் கூறப்பட்டுள்ளது.

இதற்கு பின் மலை கிராமத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கம்பு ஒன்றில் பெட்ஷீட்டை எடுத்து கட்டி அதில் கர்ப்பிணி பெண்ணை படுக்க வைத்து காட்டின் வழியே ஏழு கிமி தூரம் தூக்கி சென்றுள்ளனர்.

மலை கிராமத்தில் சாலை வசதிகள் இல்லை ஜீப் மட்டுமே வந்து போகும், அதுவும் மழை பெய்யும் சமயங்களில் ஜீப்பும் வரமுடியாததால் ஏழு கிமி நடந்தே கர்ப்பிணியை தூக்கி வர வேண்டி இருந்தது.

இருப்பினும் பிரசவம் நல்லபடியாக முடிந்து அழகிய குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் அந்த கர்ப்பிணி. இந்த வீடியோ இணையத்தில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி விபத்தில் பலியான பரிதாபம்!!

தமிழ்நாட்டில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய வீட்டிலிருந்து வெளியேறி பைக்கில் சென்ற காதல் ஜோடியினர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமாரும், அவரது கல்லூரியில் படித்து வரும் ஜெயப்பிரதா என்ற மாணவியும் காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிற்கும் இவர்களது காதல் விடயம் தெரிந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்றிரவு சரத்குமார், ஜெயபிரதாவை அவரது வீட்டிலிருந்து பைக்கில் அழைத்து கொண்டு சோளிங்கருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்கள் சென்ற பைக் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காலா படத்தால் ஒரே நாளில் உலக பிரபலமான நாய் : கோடி ரூபாய்க்கு பேரம் பேசும் பணக்காரர்கள்!!

காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் திரையில் தோன்றும் மணி என்ற நாய்க்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. 2 கோடி வரை கொடுத்து வாங்க பணக்காரர்கள் சிலர் தயாராக உள்ளனராம்.

கதைக்கு தேவை என்பதற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்களை பார்வையிட்டு, அதில் மணிதான் சிறப்பாக இருப்பதாக கூறி தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.

மணியின் பயிற்சியாளர் சைமன் கிறிஸ்டோபர், சூட்டிங் ஸ்பொட்டில் ரஜினிகாந்த்துடன் ஈஸியாக பழகி வந்ததாம் மணி. இதனால் சைமனுக்கு வேலை எளிதாகிவிட்டது.

இப்போது, இந்த நாய்க்கு பயங்கர மவுசு. மணியை 2 கோடிக்கு விலை பேசுகிறார்களாம் சில பணக்காரர்கள்.
ஆனால் தான் ஒரு பிள்ளையை போல வளர்ப்பதாக சைமன் கூறிவிட்டார். இப்போது பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க மணிக்கு வாய்ப்பு வந்துள்ளதாம்.

வவுனியாவில் தமிழர்களின் வளங்கள் பறிபோகும் அபாயம்!!

வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் விசாலமாக 800 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் நீர்த்தேக்கமும் அதனை சுற்றியுள்ள வளங்களும் தமிழர்களிடமிருந்து பறிபோகவுள்ளதாக குறித்த நீர்தேக்கத்தினை சுற்றியுள்ள கிராமவாசிகள் அச்சம் கொள்கின்றனர்

சுமார் 8 கிராமங்களில் உள்ள மக்களின் விளைநிலங்களும் வயல் காணிகளையும் உள்ளடக்கி அதற்கு மாற்றீடாக வேறு காணிகள் வழங்கப்பட்டே அரசினால் குறித்த நீர்தேக்கம் உருவக்கப்பட்டுள்ளது. வவுனியா மக்களின் எதிர்கால மற்றும் தற்போதைய குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக அமைக்கப்பட்ட நீர்த்தேக்கத்தில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது

மேலும் குறித்த நீர்தேக்கம் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு பின்பே நீர்வழங்கள் அதிகாரசபையிடம் ஒப்பந்தகாரர்களால் கையளிக்கப்பட உள்ளது எனினும் குறித்த நீர் தேக்கத்தில் சூடுவந்தபுலவு, காக்கையன்குளம், பாவற்குளம் பகுதியில் இருந்து வரும் இஸ்லாமியர்கள் அடாத்தாக மீன் பிடித்து வருவதாகவும் அதற்கு நீர்வழங்கள் அதிகாரசபையின் உயரதிகாரிகளும் அவர்களுடன் இணைந்து வருவதுடன் கிராம மக்களை அலட்சியப்படுத்தும் முகமாக நடந்து கொள்வதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்

இதேவேளை குறித்த நீர்தேக்கத்தினை சுற்றிலும் காடுகள் உள்ளதனால் குறித்த நபர்களை நாம் கிராமத்திற்குள் உள்நுழைய விடும் பட்சத்தில் எதிர்காலத்தில் குடியேற்றங்கள் மற்றும் சுற்றலா விடுதிகளை அமைத்துகொண்டு இஸ்லாமியர்கள் குடியேறிவிடுவார்கள் இதனால் குறித்த நீர்த் தேக்கத்தை சுற்றியுள்ள மக்கள் தமது வளங்களை பறிகொடுத்துவிட்டு நடுவீதியில் தான் நிற்கவேண்டிய சூழ்நிலையில் தள்ளப்படுவோம் என கிராமவாசிகள் குற்றம் சுமத்துகின்றதுடன்,

குறித்த நீர்வழங்கள் அதிகார சபையின் அதிகாரி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்றும் இதனாலேயே அவர் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறார் எனவும் தெரிவித்த கிராமவாசிகள் இதன் பின்னனியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பின்புலமும் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் குறித்த நபர்கள் கிராமத்தினுள் வரும்போது தனியார் கல்வி நிலையங்களுக்கு வகுப்பிற்கு சென்றுவரும் பெண்பிள்ளைகளுடன் அங்கசேஷ்டை விடுவதாகவும் ஓரிரு தடவைகள் கிராமாவாசிகளால் எச்சரிக்கை செய்யப்பட்டும் உள்ளார்கள் என்றும் குறித்த அத்துமீறிய மீன் பிடித்தல் தொடர்பாக 2016ம் ஆண்டளவில் தரணிக்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடும் செய்யபட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிப்பதுடன்,

கறித்த நீர்தேக்கமானது நீர்வழங்கள் அதிகாரசபையின் கீழ் வழங்கப்பட்டபின்பு மீன் பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டால் குறித்த நீர்தேக்கத்தினை சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நீர்த் தேக்கத்தினை பார்வையிடுவதற்கு தினமும் மக்கள் குறித்த பகுதியிற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். இதனால் அந்த பிரதேசத்தை சுற்றுலா பகுதியாக அறிவித்து குறித்த பகுதியில் சிற்றுண்டிச்சாலை, சிறுவர் பூங்காக்கள் அமைத்து கிராமத்து சனசமூக நிலையத்தினூடக நிர்வகிப்பதன் மூலமோ அல்லது வடமாகாண சபையின் கீழோ நிர்வகிப்பு செய்யப்படுமாயின் குறித்த பகுதியில் அத்துமீறிய செயற்பாடுகளை தடுக்க முடியும் என்பதுடன் கிராமவாசிகளுக்கும் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் முடியும் என்பதும் பலரின் கருத்தாக உள்ளது.

 

இரவு நேரம் நடந்துள்ள கொடூர சம்பவம்!!(CCTV காணொளி)

மஹியங்கனை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு கடந்த 03 ஆம் திகதி இரவு வந்துள்ள சில நபர்கள் ஹோட்டலில் பணி புரிந்த இளைஞர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். குறித்த ஹோட்டல் உரிமையாளரின் மகனையே இவ்வாறு தாக்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான 21 வயதுடைய இளைஞர் தற்போது மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து 6 பேர் மஹியங்கனை காவற்துறையினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து மஹியங்கனை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. குறித்த நபர்கள் இளைஞரை தாக்கும் காட்சி ஹோட்டலில் பெருத்தப்பட்டுள்ள C.C.T.V கெமராவில் பதிவாகியுள்ளது.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை பரிதாபமாக பலி!!

தெரணியாகலையில் குடியிருப்பொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று பலியானது. தெரணியாகலை உடமாலிபொட பகுதியில் இந்த அனர்த்தம் இன்று முற்பகல் ஏற்பட்டுள்ளது.

பலியான குழந்தையின் உடலம் தெரணியாகலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெரணியாகலை உடமாலிபொட பகுதியில் இந்த அனர்த்தம் இன்று முற்பகல் ஏற்பட்டுள்ளது.

பலியான குழந்தையின் உடலம் தெரணியாகலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எங்கள் உறவை தவறாக பேசாதீர்கள் : ராஜா ராணி செம்பா!!

ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் தான் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ஜோடி. அவர்கள் நிஜத்திலும் காதலித்து வருகின்றனர் என கிசுகிசு வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ‘வித் மை பேபி’ அவர் பதிவிட்டார் என கூறப்படுகிறது. இருவருக்கும் காதலா என ரசிகர்கள் கேள்வி எழுப்பவே, உடனே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.

அதன் பின் “எங்கள் உறவை பற்றி தவறாக பேச வேண்டாம். யாரையும் குழப்ப விரும்பவில்லை.. இது ஒரு டேர் கேம். அதனால் தான் அப்படி பதிவிட்டேன்” என விளக்கம் தெரிவித்துள்ளார் ஆல்யா மானசா.

திருமண கோலத்தில் வந்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி : சினிமா பாணியில் நடந்த சம்பவம்!!

இலங்கையில் சினிமா பாணியில் மணமகனை ஏமாற்றிய மணப்பெண், தன் காதலனுடன் தப்பிச் சென்றுள்ளார். பலங்கொடையில் திருமணத்திற்கு தயாராக மணக்கோலத்தில் மணமகன் வரும் போது காதலனுடன், மணமகள் தப்பி சென்றுள்ளார்.

பலங்கொடை நகரத்தில் இருந்து 6 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பிரதேசத்தின் பிரதான வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் ஏறிய நிலையில் மணமகள் ஒருவர் இளைஞருடன் வேகமாக செல்லும் காட்சியை வீதியில் செல்லும் பலர் அவதானித்துள்ளனர்.

மணமகளை குழப்பி பார்க்கின்றார்கள் என்றே வீதியில் சென்றவர்கள் நினைத்துள்ளனர். எனினும் அவ்வாறான ஒன்று இல்லை என பின்னரே தெரியவந்துள்ளது.

பலங்கொடை நகரத்தில் உயர்தரம் வரை கற்று தொழில் ஒன்றுக்காக காத்திருந்த இளம் பெண் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். பாடசாலை காலத்தில் இருந்து காதலித்த இளைஞனை வீட்டவர்களுக்கு விருப்பம் இல்லை. இதனால் இருவரும் இரகசியமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் விருப்பம் இன்றி பலவந்தமான இந்த திருமணம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு பெண் தனது காதலனுக்கு அறிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் திருமண தினத்தன்று ஆடைகளை அணிவிக்கப்பட்ட பின்னர் தனது பையை காரில் இருந்து எடுத்து வருவதாக கூறி மணமகள் சென்றுள்ளார். காருக்கு அருகில் சென்றவர் அங்கு நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

சற்று நேரத்தின் பின்னர் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பேற்படுத்திய மகள், நாங்கள் ஹப்புத்தளையில் இருக்கின்றோம். காதலித்த இளைஞனை திருமணம் செய்து கொள்ளபோகின்றேன் என மகள் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்திற்காக வந்து கொண்டிருந்த மணமகனுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர் பாதி வழியிலேயே திரும்பி சென்றுள்ளார் என தெரிவிக்கபபடுகின்றது.

எனினும் ஏற்பாடு செய்யப்பட்ட மணமகன் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் என பின்னரே தெரியவந்துள்ளது. இதனால் இந்த மணமகனை தேடி கொடுத்த தரகரை குடும்பத்தினர் இணைந்து தாக்கியுள்ளனர்.

வவுனியா பழைய பேரூந்து நிலையம் வெறிச்சோடிய நிலையில் : அழகுபடுத்த நடவடிக்கை!!

 

வவுனியா பழைய பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. அங்குள்ள வியாபார நிலையங்களில் வியாபாரமின்றி இழுத்து மூடவேண்டிய நிலைக்கு கடை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் மக்கள் வரவின்றி வியாபாரம் மேற்கொள்ளமுடியாமல் இருப்பதால், வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை எற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை பேருந்து நிலையத்திற்குச் சென்ற நகரசபை ஊழியர்கள் பேருந்து நிலையத்திலுள்ள கடைத் தொகுதிகளை அளவீடு செய்து வருகின்றார்கள்.
இதையடுத்து அவர்களிடம் எதற்காக அளவீடுகளை மேற்கொண்டு வருகின்றீர்கள் என வினவியபோது,

வியாபார நிலையங்கள் அமைந்துள்ள கட்டடங்களுக்கு வர்ணம் பூசுவதற்கும் அழகுபடுத்துவதற்கும் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வடமாகாண முதலமைச்சரின் அதிரடி முடிவால் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து சேவைகள் இடம்பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதுடன் பேருந்து சேவைகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பழைய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற சேவைகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டபோது பழைய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் மக்கள் வரவின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது.

இதையடுத்து நஸ்டமடைந்த நான்கு வியாபார நிலையங்கள் பழைய பேருந்து நிலையத்தில் இழுத்து மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கரையொதுங்கிய அபூர்வ விலங்கினத்தின் உடல்!!

யாழ். அல்லைபிட்டி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் மீனின் உடற்பகுதி இன்று கரையொதுங்கியுள்ளது.

இந்நிலையில்,உயிரிழந்து கரையொதுங்கிய டொல்பினை மக்கள் பலர் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டுள்ளனர். தற்போது மீனவர்களால் புதைக்கப்பட்டது.

இதேவேளை, கடல்வாழ் உயிரினங்களில் டொல்பின் மீன் அபூர்வமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.