கேரளாவில் காணாமல் போன மாணவி தமிழ்நாட்டில் எரித்துக் கொலை!!

கேரளாவில் காணாமல் போன மாணவி ஒருவர் காஞ்சிபுரத்தில் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற நோக்கில் விசாரணை நடத்த கேரள போலீசார் காஞ்சிபுரம் வருகின்றனர்.

கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் பகுதியில் தன் தந்தை மற்றும் சகோதரனுடன் இருந்தவர் ஜேசா. இவர் கேரளாவில் உள்ள காஞ்சிரப்பள்ளியில் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ஜேசா உள்ளூர் மக்களால் முக்கு தட்டு பேருந்து நிலையத்தில் கடைசியாக மார்ச் 22ம் திகதி பார்க்கப்பட்டார். அதன் பின் மாயமான ஜேசாவை பத்தானம் திட்டா போலீசார் தேடி வருகின்றனர்.

50 நாட்கள் ஆன பின்னும் இவ்வழக்கில் முன்னேற்றம் ஏற்படாததை அடுத்து ஜேசாவை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் பரிசு தொகை அறிவித்தது கேரளா அரசு.

இதற்கிடையில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகில் உள்ள பழவேலி பகுதியில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாரிடம் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கேரளாவில் காணாமல் போன ஜேசாவின் அங்க அடையாளங்கள் சில இறந்த சடலத்துடன் ஒத்து போவதால் அது ஜெசாவாக இருக்கலாம் எனக் கருதிய காஞ்சிபுரம் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி கேரளா காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படியில் கேரளா போலீசார் செங்கல்பட்டு வந்து விசாரணை மேற்கொள்கின்றனர்.

50 நாட்களாக பதிலேதும் கிடைக்காத மாணவி ஜேசா வழக்கு தற்போது ஏற்பட்டுள்ள திருப்பு முனையால் பரபரப்பாகியுள்ளது.

மட்டக்களப்பை உலுக்கிய குடும்பத் தலைவனின் கொலை : சந்தேக வலையத்தில் பிள்ளைகள்!!

 

கொக்கட்டிச்சோலை – மாவடி முன்மாரி விடுதிக் கல் பகுதியில் வீட்டிற்குள் இருந்து அடி காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட நபரின் பிள்ளைகள் மேல் சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க 3 பிள்ளைகளின் தந்தையான குழந்தைவேல் குருசாந்த ராஜா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் உயிரிழந்தவரின் மனைவியின் முதல் கணவரின் பிள்ளைகளுடன் நேற்று மாலை வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் அதன் போதே இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவருடைய மனைவி அனுராதபுரத்தில் உள்ள தனது பெண் பிள்ளையை பார்க்கச் சென்றிருந்த நிலையில், குறித்த நபரும் அவரது மூன்று பிள்ளைகளும், மற்றும் மனைவியின் மூத்த கணவரின் இரண்டு ஆண் பிள்ளைகளும் இருந்து வந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்த நபர் மதுபோதையில் பிள்ளைகளுடன் சண்டையிட்ட நிலையில் மாலை அங்கிருந்து ஐந்து பிள்ளைகளும் அனுராதபுரத்திற்கு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியினால் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு சென்றுபார்த்தபோது குறித்த நபர் அடிகாயங்களுடன் சடலமாக காணப்பட்டார்.

இந் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினரும் குற்றத்தடயங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்துடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் பணிப்புரை விடுத்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவியின் முதல் கணவனின் பிள்ளைகள் இருவர் மீது சந்தேகம் நிலவுவதன் காரணமாக அனுராதபுரத்தில் உள்ள அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் இளைஞன் வெட்டிக் கொலை : கடித்து துன்புறுத்திய நபர் கைது!!

முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – செல்வபுரம், கள்ளுத்தவறணை பகுதியில் உள்ள பனங்கூடலுக்குள் இருந்து கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் கடந்த 23 ஆம் திகதி இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டபோது சடலத்தில் வெட்டுகாயங்களுடன் கடித்த அடையாளங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடித்து துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருக்கின்றதா? என குற்றவியல் தடுப்பு பிரிவு பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தேடியுள்ளனர்.

இதன்போது கஞ்சா போதைப்பொருள் பாவித்துவிட்டு தனது கணவர் தன்னை கடித்து துன்புறுத்துவதாக பெண் ஒருவர் செய்திருந்த முறைப்பாடு குற்றவியல் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

மேலும், குறித்த பெண்ணின் கணவரும், சடலமாக மீட்கப்பட்ட இளைஞனும் நண்பர்கள் என பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் குறித்த நபரை நேற்று கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (01.06) காலை 9.30 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேரூந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில்,

2 கிலோகிராம் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு பகுதியினை சேர்ந்த 48 வயதுடைய மோகன்ராஜ் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரையும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியாவில் கடத்தில் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாக தந்தை பொலிசாருக்கு தகவல்!!

வவுனியா குட்சைட் வீதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாக வவுனியா பொலிசாருக்கு கைக்குழந்தையின் தந்தை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை வருமாறு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலை வெளிநாட்டிலுள்ள கணவர் வவுனியா பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கடத்திச் செல்லப்பட்டு கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாகவும் அதனை ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் குழந்தையின் தயாருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று காலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற கைக்குழந்தையின் தாயார் மற்றும் உறவினர்கள் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தையின் வரவினை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சிறுமியை தடுத்து வைத்து அச்சுறுத்திய 15 வயது சிறுவனொருவர் உட்பட மூவருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை – சாம்பல்தீவு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை தடுத்து வைத்து அச்சுறுத்திய 20 மற்றும் 23 வயதுடைய இருவரையும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு 15 வயது சிறுவனை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவி பிரத்தியேக வகுப்பிற்கு சென்று வரும் போது பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த மூவர் தடுத்து வைத்து அச்சுறுத்தியதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்கள் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாம்பல்தீவு, ஆத்திமேடு பகுதியை சேர்ந்த ஜெ.ஜெராட் (20 வயது) மற்றும் அதே இடத்தை சேர்ந்த கோவிந்தா ஜதூர் (23 வயது) ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாகராஜா ஜெயராஜா (15 வயது) எனும் சிறுவன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய உணவகத்தில் பாத்திரங்களை வீதியோர குட்டைகளில் கழுவிய அவலம்!!

மலேசியாவில் உள்ள பிரபல உணவகத்தில் பாத்திரங்கள் தெருவோர குட்டைகளில் உள்ள நீரில் கழுவப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

மலேசியாவில் உள்ள Raj’s Banana Leaf என்ற உணவகம் பிரபலமானது. இங்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் தெருவோர குட்டைகளில் உள்ள அசுத்தமான நீரில் கழுவப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலான நிலையில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள நிறுவனம், குறித்த உணவகத்தை காலவரையின்றி மூடியுள்ளது.

மேலும் ஊழியர்கள் புதியவர்கள் என்பதால் இந்த தவறு நடந்துவிட்டதாகவும், தங்களது முதல் குறிக்கோளே சுத்தம் சுகாதாரம் என்பதே எனவும் விளக்கம் அளித்துள்ளது.

 

அப்பா வயது நபரை திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவதற்காக வயதான நபரை பெண்ணொருவர் போலியாக திருமணம் செய்த நிலையில் இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமை சேர்ந்தவர் ஹோ தி லன் (42). இவருக்கு அதிகளவு பணத்தேவை இருந்த நிலையில் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று அங்கு சென்று பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். இதையடுத்து ஹூ லான் (66) என்ற முதியவரை மதுபான விடுதியில் அவர் சந்தித்துள்ளார்.

சிங்கப்பூரை சேர்ந்த லானை போலியாக திருமணம் செய்ய விரும்புவதாக ஹே தி கூறிய நிலையில் அவரும் சம்மதித்துள்ளார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்த பொய் திருமணம் இரண்டாண்டுகள் நீடித்த நிலையில் சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனை சாவடிக்கு சில ஆவணங்களை சரி பார்க்க ஹே தியும், லானும் சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் போலி திருமணம் செய்தததை கண்டுப்பிடித்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் ஹு லானுக்கு எட்டு மாதங்கள் மற்றும் அதனோடு தனியாக நான்கு வாரங்களும் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போலியாக திருமணம் செய்தது மற்றும் நீண்ட கால குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது பொய் தகவல்களை கூறியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பயணி ஒருவரின் தாங்க முடியாத துர்நாற்றம் : விமானத்தை பாதியிலேயே திருப்பிய விமானி!!

நெதர்லாந்தில் இருந்து ஸ்பெயினில் உள்ள பிரபல சுற்றுலாத் தீவுக்கு சென்ற விமானம் ஒன்று பயணி ஒருவரின் உடல் துர்நாற்றத்தால் பாதி வழியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Transavia விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று நெதர்லாந்தில் இருந்து ஸ்பெயின் நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத் தீவான Gran Canaria-கு புறப்பட்டு சென்றுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பயணிகள் ஒவ்வாமையால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மட்டுமின்றி விமானத்தில் திடீரென்று பரவிய துர்நாற்றம் சில பயணிகளுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து விமான ஊழியர்கள் நடத்திய விசாரணையில், சுற்றுலாப்பயணி ஒருவரின் உடல் துர்நாற்றமே இதற்கு காரணம் என கண்டுபிடித்தனர்.

பல வாரங்களாக அவர் குளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நபரை கழிவறைக்கு அனுப்ப ஊழியர்கள் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே விமானியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விமானத்தை உடனடியாக போர்த்துக்கள் நாட்டில் உள்ள ஃபாரோ நகரில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்து, அந்த நபரை வெளியேற்றவும் முடிவு செய்தனர்.

ஃபாரோ நகரில் விமானம் தரையிறங்கியதும், மருத்துவ உதவிக்குழுக்கள் விரைந்து வந்து வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்ட பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

மருத்துவ காரணங்களுக்காக Gran Canaria செல்லும் Transavia விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக குறித்த விமான சேவை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மருமகளை சுட்டுக் கொலை செய்தது ஏன் : மாமனார் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மாமனாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் ரத்தன் சிங். இவர் மனைவி சுலீந்தர் கவுர். தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த எட்டு மாதங்களாக இத்தாலியில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தங்களது மகனின் மனைவியான அனிதாவை ரத்தனும், சுலீந்தரும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் அனிதாவை ரத்தன் கோபத்தில் அடித்துள்ளார். இதையடுத்து ஏன் என்னை அடிக்கிறீர்கள் என அனிதா மாமனாரான ரத்தனிடம் கேள்வி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரத்தன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் அனிதாவை சுட்டு கொலை செய்துள்ளார். இதற்கு அங்கிருந்த ரத்தனின் மனைவி சுலீந்தரும் உதவி செய்துள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் ரத்தவெள்ளத்தில் கிடந்த அனிதாவின் சடலத்தை கைப்பற்றி விட்டு ரத்தனையும், சுலீந்தரையும் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து ரத்தனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணம் கேட்டு அடிக்கடி மருமகளை கொடுமைப்படுத்தி வந்ததை அவர் ஒப்பு கொண்டுள்ளார். மேலும், அவரை கொல்ல ஏற்கனவே திட்டம் போட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆக்ரோஷமாக சீறிய பாம்பு : தன்னுயிரை தியாகம் செய்து எஜமானை காப்பாற்றிய நாய்!!

தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் எஜமானரை காப்பாற்றுவதற்காக சீறிய நல்லபாம்புடன் சண்டையிட்டு நாய் உயிரிழந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளாங்குடியை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் தனது வீட்டில் 3 நாய்களை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று அனைவரும் தூங்க செல்கையில் வழக்கத்திற்கு மாறாக நாய்கள் குரைக்க ஆரம்பித்தன.

இதனைப்பார்த்த நாகேந்திரன் வீட்டினர் வெளியில் வந்துள்ளனர். அப்போது நல்லபாம்பு ஒன்று படமெடுத்தபடி ஆக்ரோஷத்துடன் சீறிக்கொண்டிருந்தது. இதனைப்பார்த்து நாகேந்திரன் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தபடி நின்றனர்.

ஆனால், நாய்கள் துரத்திசென்று பாம்பை கடிக்க ஆரம்பித்தன. பதிலுக்கு பாம்பும் நாய்களுடன் மல்லுக்கட்டியது. சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த சண்டையில், பாம்பு இறந்துபோனது. மேலும் இரண்டு நாய்களுக்கு பாம்பு கொத்தியதில் அதிக காயம் ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு நாய் இறந்துவிட்டது. தனது எஜமானரை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை தியாகம் செய்த நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் முன்பு குதித்து உயிரை விட்ட பெற்றோர் : அதிர்ச்சியில் மகள் செய்த செயல்!!

இந்தியாவில் தந்தை, தாய் மற்றும் மகள் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேந்தவர் துங்கா வெங்ய்யா (45). இவர் மனைவி ரஜானி (39). தம்பதிக்கு கிருஷ்ண வேணி (19) என்ற மகளும், சாய் கோபினாத் என்ற மகனும் உள்ளனர்.

கிருஷ்ணவேணிக்கு அவர் பெற்றோர் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில் தான் வேறு நபரை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்யபோவதாகவும் அவர் கூறியுள்ளனர்.

ஆனால் குடும்ப கெளரவம் கருதி அதை ஏற்காத பெற்றோர் திருமணத்துக்கு கிருஷ்ணவேணி சம்மதிக்கவில்லை எனில் தாங்கள் தற்கொலை செய்வோம் என மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து மகளுடன் வெங்கய்யாவும், ரஜானியும் ரயிலில் பயணம் செய்த நிலையில் நடைமேடையில் இறங்கிய பின்னர் திடீரென ரயில் முன்பு வெங்கய்யாவும், ரஜானியும் குதித்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணியும் ரயில் முன்னால் குதித்த நிலையில் மூவரும் உயிரிழந்தார்கள்.

இதையடுத்து பொலிசார் மூவரின் சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கய்யா குடும்பத்தில் தற்போது உயிருடன் இருக்கும் சாய் கூறுகையில், நான் பெற்றோரை வெளியில் போகவேண்டாம் என கூறினேன், அவர்கள் தவறான முடிவு எடுக்க மாட்டோம் என என்னிடம் கூறினார்கள். ஆனால் மனதை மாற்றி கொண்டு இவ்வாறு செய்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.

யாழில் தொடரும் மர்மம் : ஒரே இடத்தில் தொடர்ந்து மீட்கப்படும் சடலங்களால் அச்சம்!!

யாழ். நல்லூர் யமுனா ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று அதிகாலை யமுனா ஏரியில் மிதந்து வந்த நிலையில் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் கோவில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடை மாரிமுத்து கோவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், கடந்த மூன்று நாட்களிற்கு முன்னர் இவர் காணாமல் போயிருந்ததாகவும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அண்மையில் தவில் வித்துவான் ஒருவர் யமுனா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அந்தச் சம்பவம் நடந்து ஓரிரு வாரங்களில் மீண்டும் யமுனா ஏரியில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை அந்தப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 வயதுச் சிறுமியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய முச்சக்கரவண்டி சாரதிக்கு நேர்ந்த கதி!!

15 வயதான சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். குருணாகல் – நாரம்மலை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது உறவு முறை மகள் ஒருவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு ஹோட்டல் ஒன்றுக்கு செல்வதாக சிறுமியின் உறவினர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் முறையற்ற மனைவி எனக் கூறப்படும் பெண்ணுக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதுடன், பெண்ணை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, முதல் முறையாக சிறுமியை அயல் வீட்டில் வசிக்கும் சந்தேகநபரும் அவரது முறையற்ற மனைவியும் இணைந்து கொஸ்வத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பல நபர்களுடன் சிறுமியை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதுடன், அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுள்ளதுடன் 4 ஆயிரம் ரூபா பணத்தையும் கொடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பணத்தை கொடுத்து சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் சம்பள உயர்வு கோரி தேசிய நீர் வழங்கல் அமைப்புச் சபை ஊழியர்கள் போராட்டம்!!

 

வவுனியா தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் அலுவலக ஊழியர்கள் சம்பள உயர்வினை கோரி இன்று (01.06.2018) காலை 9 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை 30 வீதத்தினால் சம்பவ உயர்வு வழங்கப்படுவதாகவும் இந்த வருடம் சம்பள உயர்வு அதிகரிக்கப்படவில்லை இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 30வீதம் அதிகரிக்க விட்டாலும் பரவாயில்லை 25 வீதம் எனினும் அதிகரிக்குமாறு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் எமது உயர் அதிகாரியோருவர் 25வீதம் சம்பள உயர்வு வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

ஆனால் இது வரையில் அக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. மாறாக சிறிய அளவிலான கொடுப்பனவே வழங்கப்பட்டது. குறைந்தது 25வீத சம்பள அதிகரிப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்தே வவுனியா தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையின் அலுவலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

வருகின்ற திங்கட்கிழமைக்கு முன்பாக தீர்வு கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் அனைத்து ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும், இன்றைய தினம் பொதுமக்களும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சில சேவைகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் நீதிமன்றத்திற்கு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

வவுனியா நகரசபைத் தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (01.06.2018) காலை 10.30 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பாக (நீதிமன்றத்திற்கு அருகே) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த வாரம் நகரசபை தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்டோர் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள நீதிமன்றத்தின் வாகனத்தரிப்பிடத்திற்கு என ஒதுக்கப்பட்ட வெற்றுக்காணியைப் பார்வையிடச் சென்ற சமயத்தில் அங்கு கடமையிலிருந்த சிறைக்காவலர் ஒருவரினால் நகரசபை தலைவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த சிறைக்காவலருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் அது நடைபெறவில்லை

இதையடுத்து இன்று (01.06) காலை வவுனியா நகரசபை மைதானத்திற்கு முன்பாக ஒன்றிணைந்தவர்களினால் நகரசபை தலைவர், செயலாளரை அவமதித்த சிறைக்காவலர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராசா வவுனியா நகரசபை உப தலைவர், வவுனியா செட்டிகுளம் பிரதேசபை தலைவர், உறுப்பினர்கள்,

தமிழ் தெற்கு பிரதேசபை தலைவர், உறுப்பினர்கள், வவுனியா வடக்கு நெடுக்கேணி பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், வர்த்தகர் சங்கப்பிரதிநிதிகள், முச்சக்கரவண்டிசாரதிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் வவுனியா நகரசபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறைக்காவலர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதுடன் அவர் நகரசபை தலைவர், செயலாளரிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் கோசமிட்டனர்.