உலகை வியப்பில் ஆழ்த்தி உயிரிழந்த ஈழத் தமிழன் ஈழவனின் யாரும் அறியாத தருணங்கள்!!

 

ஜேர்மன் நாட்டில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவனின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன. புலம்பெயர் தமிழரான ஈழவனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தினையும் Braunschweig விளையாட்டுக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழவனின் இழப்பை அனைத்து தமிழர்கள் மாத்திரம் அல்லாமல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் பேரிழப்பாக கருதுகின்றனர், அத்துடன் ஜேர்மன் மிகச்சிறந்த எதிர்கால வீரனை இழந்துவிட்டது என ஜேர்மனி பத்திரிக்கைகள் பல ஈழவனின் இழப்பை பிரசுரித்துள்ளன.

ஈழவன் பாடசாலையிலும், விளையாட்டிலும் சிறப்பாக செயற்பட்டார் எனவும் ஈழவனின் பெற்றோர்கள் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து தங்களை அர்ப்பணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈழவனின் பிரத்தியேக தகைமைகள்

14 வயதுக்கும் கூடிய பிரிவில் விளையாடியது மாத்திரம் அல்லாமல் கேப்டன் ஆகவும் இருந்துள்ளார், அத்துடன் ஜேர்மனி தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டு ஆயத்த நிலை வீரராக இருந்துள்ளார்.

ஜேர்மனியின் மிகப்பெரிய கழகங்களான Hannover 96, Schalke 04, Hamburger SV, Werder Bremen, Mönchengladbach, Wolfsburg ஆகிய கழகங்கள் ஈழவனை தமது கழகங்களுக்கு இணைப்பதற்கு முயற்சிசெய்துள்ளன.

7 வயதில் 4000 மீற்றர் தூரத்தினை சாதார வீரர்களின் வேகத்தில் ஓடி முடித்துள்ளார், அத்துடன் தடகள விளையாட்டில் முதன்மை வீரராக சிறந்து விளங்கியுள்ளார்.

மேலும், Niedersachsen மாநிலத்தில் தொடர்ந்து 3 வருடங்கள் தடகள சாம்பியனாக திகழ்ந்துள்ளார், அதன் பின்னர் கால்பந்தாட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதால் அந்த துறையினை விட்டு வெளியேறியுள்ளார்.

ஜேர்மன் கால்பந்தாட்ட வரலாற்றில் 14 வயதில் பெரும் தொகை பணத்தினை ஒப்பந்தம் செய்ய இருந்த ஒரே ஒரு வீரர் ஈழவன் மாத்திரமே என குறிப்பிடப்படுகின்றது.

இவரது முதல் பயிற்சிவிப்பாளர் இவரது தந்தையாகும், இடக்கால்பலம் மற்றும் அதிவேகம் இவருக்கு கால்பந்தாட்டத்துறையில் பலமாக இருந்துள்ளது.

சிறிய போட்டிகளில் ஈழவன் தொடர்பான விளம்பரங்களை அவரின் பெற்றோர் தவிர்த்து வந்துள்ளனர், சர்வதேச போட்டியிலேயே ஈழவனை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் கனவுகளுடன் பெற்றோர் இருந்துள்ளனர்.

மேலும், ஈழவனின் தந்தை இலங்கையில் பல்துறை விளையாட்டு வீரனாக இருந்துள்ளார், ஈழவன் தந்தை பிரபாகரன் சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் திகழ்ந்துள்ளதுடன், அதேத்துறையில் தன் மகனை சாதனையாளனாக ஆக்கவேண்டும் எனும் உறுதியுடன் செயல்பட்டுள்ளார்.

வவுனியாவில் பகலில் வயோதிபப் பெண்ணிடம் மயக்க மருந்தை தூவி நகைகள் கொள்ளை!!

வவுனியா பஜார் வீதியில் பொருட் கொள்வனவிற்காக சென்ற வயோதிப பெண்ணிடம் மயக்க மருந்தை தூபி அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம் என்பற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (15.05) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பஜார் வீதியில் உள்ள கடையொன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நடந்து சென்ற வயோதிப பெண்ணிடம் கைக்குட்டையில் சுற்றப்பட்டிருந்த கல் ஒன்றினை காட்டி அது தொடர்பாக பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் வினவியுள்ளனர்.

குறித்த பெண்மணியும் அவர்களிற்கு பதில் கூற முற்பட்ட போது குறித்த கைக்குட்டையினை திடீரென முகத்தில் அழுத்தி மயக்கமடைய செய்து அவர் அணிந்திருந்த நான்கரைப் பவுண் தங்கச்சங்கிலி, ஒன்றரைப் பவுண் மோதிரம், கைப்பையில் இருந்த எண்பதாயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் குறித்த பகுதியில் உள்ள சிசீரீவி கமராக்களில் உள்ள பதிவுகளை பொலிஸாரினால் பார்வையிடப்பட்டு வருகின்றனர்.

இக்கொள்ளை தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.

வவுனியாவில் நாளை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் கவனயீர்ப்புப் போராட்டம்!!

வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக நாளைய தினம் (16.05.2018) 9 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இக் கவனயீர்ப்புப் போராட்டமானது வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இப் போராட்டமானது 35 வயதிற்கு மேற்பட்டவர்களை நியமனங்களில் உள்ளீர்க்க வேண்டும், 2017 வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்குதல் வேண்டும், பட்ட சான்றிதழ் இறுதித் திகதியினடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படுதல் வேண்டும்,

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுவதோடு, கொழும்பில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு எதிராக வேலையற்ற பட்டதாரிகள் மீது நீர்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை கண்டித்தும் நாடளாவியரீதியில் நாளை நடைபெறும் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட 35 வயதிற்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் நாளைய தினம் சேகரிக்கப்பட்டு உரிய அமைச்சுக்கு பெயர் விபரங்கள் வழங்கப்படவுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தொழில் உரிமைக்கு வலுச்சேர்க்குமாறு வவுனியா வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் கிறிஸ்டி குகராஜாவின் 19வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜாவின்(குகன்) 19வது நினைவு தினம் இன்று காலை வவுனியா வைரவப்புளிங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபைத் தலைவர் து.நடராஜசிங்கம் (ரவி) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் குறூஸ், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் தோழர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி நிகழ்வினை மேற்கொண்டனர்.

வவுனியாவில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு!!

இலங்கை உள்ளுர் ஆழுகை நிறுவனம் மற்றும் யு.என்.டி.பி. ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் அண்மையில் தேர்ந்தேடுக்கப்பட்ட வவுனியா மற்றும் மன்னார் உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு உள்ளுராட்சி திணைக்களத்தின் ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (15.05.2018) நடைபெற்றது.

இச் செயலமர்வானது கட்சி பேதமின்றி உள்ளுராட்சி மன்றங்களின் நடைமுறைகளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தவும், உள்ளுராட்சி மன்ற முத்திரைத் தீர்வை, நீதிமன்ற தண்டப்பணம் தொடர்பான மாகாண சபையின் வகிபாகம், பொதுக் கணக்காய்வு, உள்ளக கணக்காய்வு போன்றன பற்றிய தெளிவுபடுத்தல்களும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் வளவாளர்களாக வடமாகாண பிரதம செயலாளர் (நிதி) எஸ்.யு.சந்திரகுமாரன், பிரதி கணக்காய்வாளர் நாயகம் ஜி.தேவஞானன், பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எஸ்.சண்முகானந்தன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி எஸ்.சரோஜினி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் மொழி மூலம் இடம்பெற்ற செயலமர்வில் சிங்கள மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருந்ததுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதாக தெரிவித்திருந்த நிலையிலும் சுகயீனம் காரணமாக இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!!

வவுனியா சிறைச்சாலையிலுள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று (15.05) காலை உணவு பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அதனைத்தடுத்து நிறுத்துமாறும் வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக்ககைதிகளை வவுனியா சிறைச்சாலையில் வைத்திருக்குமாறு கோரியே இன்று காலை உணவு தவிர்ப்புப் போராட்டத்ததை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகளும் இன்று காலை உணவைப் பெற்றுக் கொள்ளாமல் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் சிறைச்சாலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வவுனியா மாவட்டத்திலுள்ள சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டால் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் சென்றே கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடவேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்திற்கு படையெடுக்கும் இந்தியர்களால் ஆபத்து : கர்ப்பிணிப் பெண்கள் அவதானம்!!

வடமாகாணத்திற்கு செல்லும் இந்தியர்களினால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட பகுதிக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.விஜிதன் தெரிவித்துள்ளார்.

மலேரியா முழுமையாக ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை ஐ.நா சுகாதார ஸ்தாபனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியர்கள் தொடர்ந்து வட மாகாணத்திற்கு செல்வதனால் மலேசியா மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விசேடமாக கர்ப்பிணி தாய்மார் காய்ச்சலில் பாதிக்கப்படும் போதும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிக்குமாறு குடும்ப சுகாதார சேவையாளர்களுக்கு வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேரியா நோய் முழுமையாக இலங்கையில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், நோயை பரப்பும் எனோபிலஸ் என்ற நுளம்பை இன்னமும் முழுமையாக நாட்டை விட்டு ஒழிக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து மலேரியா நோய் தொற்றுடைய நபர் ஒருவர் வருகைத்தந்தால், அவரது உடம்பில் உள்ள ப்லேஷ்மோடியம் வைவெக்ஸ் (Plasmodium vivax) என்ற மலேரிய நோயை பரப்பும் நுளம்பு ஊடாக வேறு ஒருவரின் உடலுக்குள் செல்ல கூடும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் திடீரென தோன்றிய அதிசயம்!!

அண்மைக்காலமாக இலங்கை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், பல்வேறு பகுதிகளில் புதிய நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டு இலங்கைக்கு அழகு சேர்த்துள்ளன.

அண்மைய நாட்களாக ஊவா மாகாணத்தில் பெய்து வரும் அடை மழையை காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதியின் இருமருங்கிலும் திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள மலைகளில் வழிந்தோடும் நீர்வீழ்ச்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

பொதுவாக டிசம்பர் மாதங்களில் நிலவும் காலநிலை காரணமாக இவ்வாறான நீர்வீழ்ச்சிகள் ஏற்படுவது வழமை. எனினும், நாட்டின் கடும் வறட்சியான காலநிலை நிலவி வரும் வேலையில் புதிய நீர் சிவீழ்ச்சியின் உருவாக்கம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது

எனினும் எதிர்பார்க்காத வகையில் தற்போது திடீரென இந்த நீர்வீழ்ச்சிகள் இயங்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

விசேடமாக இந்த நாட்களில் பதுளை கொழும்பு பிரதான வீதியில் பண்டாரவளையில் இருந்து பலங்கொடை வரையிலான பகுதியில் உள்ள மலைகளில் இவ்வாறான 15 திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவெடுத்துள்ளது.

அதிகாலையில் இடம் பெற்ற கோர விபத்து : இரு உயிர்கள் பரிதாபமாக பலி!!

 

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. அதில் மூவர் உயிரிழந்தனர். மாடு ஒன்றும் உயிரிழந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் கொள்வனவு செய்வதற்காக பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாதையின் குறுக்காக பயணித்த மாடு ஒன்றுடன் மோதி பின்னர், எதிரில் வந்த வான் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது.

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியின் முன்னேஸ்வரம் பகுதியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் விலத்தவ பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் தங்கொட்டுவை பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் சிலாபம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எனக்கூறி ஒரு கோடிக்கும் மேல் மோசடி!!

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் இணைப்பாளர் என தெரிவித்து பொது மக்களை ஏமாற்றி சுமார் 1 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் அளவில் சுமார் 110 000 ரூபாய் பெறுமதியுடைய குழாய் கிணற்றை மீள் குடியேற்ற அமைச்சின் மூலம் 45 000 ஆயிரம் ரூபாய்க்கு மின்சார நீர் இறைக்கும் பம்பி பொருத்தி தருவதாக தெரிவித்து வவுனியா செட்டிகுளம் பிரதேசத்துக்குட்பட்ட வாழவைத்த குளம், ஆண்டியா புளியங்குளம், புதுக்குளம், கணேசபுரம், சின்ன சிப்பிக்குளம் முதலியார்குளம், சூடுவெந்த புலவு, பாவற்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலுள்ள மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த நபரால் பணம் பெறப்பட்ட பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் நீர் பெறுவதற்காக நிலம் துளையிடப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை மின்சார நீர் இறைக்கும் பம்மிகள் வழங்காது மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து நாம் இது தொடர்பில் அவ்வமைச்சிடம் வினவியபோது, இவ்வாறான எந்த செயற்திட்டத்தையும் தாம் செய்யவில்லை என்றும், வவுனியாவிற்கான இணைப்பாளராக கருணாதாச என்பவரே நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தனர்.

மேலும் ஏதேனும் இவ்வாறான செயற்திட்டங்களை தாம் செயற்படுத்துவதாக இருந்தால் அங்குள்ள பிரதேச செயலங்களூடாக பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டே வழங்கப்படும் எனவும் வட மாகாணத்துக்கான மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் கொஸ்தா தெரிவித்ததுடன், இது தொடர்பில் தாம் அமைச்சருடன் பேசி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களால் அங்குள்ள அரசியல்வாதிங்களிடம் நீதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தும் பயனில்லை என குறிப்பிட்டனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் செட்டிகுளம் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட குறித்த நபர் இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் அனைத்து மக்களுக்கும் நீர்ப்பம்பிகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். எனினும் இவ்வாறு பல காலக்கெடு வழங்கியும் அவர் தம்மை ஏமாற்றி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

எனவே இவ்வாறு செட்டிகுளம் பிரதேசத்தில் தமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான நீரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பாதிக்கப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையல்லவா?

வவுனியாவில் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கி 61 ஆடுகளை கடத்த முற்பட்ட நபர் கைது!!

 

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் 61 ஆடுகளை சட்டவிரோதமாக கடத்தியமை, பொலிஸாருக்கு லஞ்சம் வழங்க முற்பட்டமை என இரு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புத்தளம் பகுதியினை சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரை இன்று (15.05.2018) அதிகாலை 1.30 மணியளவில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக 61ஆடுகளை கடத்த முற்பட்ட வாகனத்தினை வவுனியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மகிந்த வில்வோராச்சி அவர்களின் தலமையில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொருப்பதிகாரி இ.எம்.பி சுபசிங்க வழிகாட்டலின் கீழ் வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் விஷேட சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில் அனுமதிப்பத்திரமின்றி, போதிய இடவசதியின்றி 61 ஆடுகளை புத்தளத்திற்கு கடத்த முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதனையடுத்து குறித்த வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்த 52 வயதுடைய நபர் பொலிஸாருக்கு ரூபா 2000 லஞ்சம் வழங்க முற்பட்ட சமயத்தில் பொலிஸார் அதனை வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் குறித்த சாரதி நான் அரசியல்வாதிகளின் உதவியுடனே இச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளேன் என்னை கைது செய்ய முற்பட்ட உங்களை இடமாற்றம் செய்வேன் என மிரட்டியுள்ளார்.

குறித்த வாகனத்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்ததுடன் வாகனத்தினையும் ஆடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளை பல நாட்களாக மேற்கொண்டு வந்துள்ளது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் பகுதியில் பலரின் கவனத்தையும் ஈர்த்த தமிழன்!!

தமிழனை ஆளவிட்டால் முன்னேறிவிடுவான் என்றுதான் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டு அழித்து வருகின்றார்கள் என யாழ். பொன்னாலை மீள்குடியேற்ற கிராமத்தில் வாழும் ஒரு சாதனை இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நிழக்கீழ் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்காக புதிய முறைமை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதன்காரணமாக பெரிதும் பயன்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு புதிய முயற்சி என்பதுடன், இதன் பலன் அனைவரிடத்திலும் சென்றடைய வேண்டும் என்பதோடு, இதனை ஊக்குவிக்க அரசும் சமூகநலன் நிறுவனங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பலராலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் இடம்பெற்ற கோர யுத்தத்தின் காரணமாக இதுபோன்ற பல சாதனை தமிழர்கள் இழக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழர்கள் ஆட்சி செய்யும் நிலை ஒன்று ஏற்பட்டால், அனைத்திலும் முன்னேற்றமடைந்து அனைவருக்கும் சவாலாகிவிடுவார்கள் என்ற காரணத்தினால்தான் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருகின்றனர் என இத்தருணத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சாதனை தமிழர்கள் தமிழர் தாயகம் முழுதும் இளைமறை காய்களாக உள்ளார்கள் என்பதோடு, அவர்களது திறமை வெளி உலகிற்கு சரியான முறையில் வெளிப்படுத்தப்படவேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=nQyGPcbb8Nw

கொழும்பில் அழகிய பெண்ணின் மோசமான செயல் : தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்!!

கொழும்பு – கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 150 இலட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். சிராதாரா பதிக் என்ற பெயரில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி சென்ற பெண்ணே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

ஆடை வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு மோசடியான முறையில் காசோலைகள் வழங்கி ஒன்றரை கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட சித்தாரா கீதானி களுஆராச்சி என்ற பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவி கோரியுள்ளனர். குறித்த சந்தேக நபர் கெஸ்பேவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்தால் கல்கிஸ்ஸ குற்ற விசாரணை பிரிவின் 011-2729621 என்ற இலக்கத்திற்கு அல்லது கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையக பொலிஸ் விசாரணை பிரிவின் 071 8591664 என்ற இலக்கத்திற்கும் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஆளையே உயிருடன் விழுங்கும் மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமிகள்!!

இந்தொனேசியாவில் ஆளையே முழுசாக விழுங்கும் மலைப்பாம்பு ஒன்றுடன் இரு பெண் பிள்ளைகள் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மலைப்பாம்புடன் சிறுமிகளை விளையாட அனுமதித்த பெற்றோரை குறித்த காணொளியை காண நேர்ந்த அனைவரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

குறித்த வீடியோவை இதுவரை 3 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். உலகின் மிகவும் நீளமானதும் மிகவும் எடை கூடியதுமான அந்த மலைப்பாம்புடன் அந்த இரு சிறுமிகளும் கொஞ்சி விளையாடுகின்றனர். விஷத்தன்மையற்ற அந்த மலைப்பாம்பானது மனிதர்களை கொன்று முழுவனாக விழுங்கும் திறன் படைத்ததாகும்.

குறித்த ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவில் அந்த மலைப்பாம்பின் மீதேறி சிறுமி விளையாடுகிறார். இன்னொரு சிறுமி அதன் மீது அமர்ந்தவாறே கமெராவுக்கு முகம் காட்டுகிறார். குறித்த காட்சிகளை கண்ட மக்கள், சிறுமிகளின் பெற்றோரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இன்று அல்லது நாளை ஒரு நாள், அந்த மலைப்பாம்பு சிறுவர்களை தின்றுவிடப்போகிறது. இதற்கு காரணமான பெற்றோரையே குற்றஞ்சாட்ட முடியும் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இது மிகவும் ஆபத்தானது, பெற்றோர்கள் கண்டிப்பாக கவனமுடன் எதிர்கொள்ள வேண்டும் என பெண் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

முகத்தில் துளைத்த கத்தியுடன் உயிருக்கு போராடிய இளம்பெண்!!

மலேசியாவில் இளம்பெண் ஒருவர் முகத்தில் கத்தி ஒன்று சொருகப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளம்பெண் தமது பணி நேரம் முடிந்த நிலையில் இரவு குடியிருப்பு நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென்று வழி மறித்த கொள்ளையன் அவரது பையை பறித்துக் கொண்டு ஓட முயன்றுள்ளான். ஆனால் அதை விட்டுத்தர மறுத்த இளம்பெண் அந்த கொள்ளையனுடன் போராடியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த கொள்ளையன் திடீரென்று கத்தியை உருவி குறித்த இளம்பெண்ணின் முகத்தில் தாக்கியுள்ளான். பின்னர் அவரது கைப்பையுடன் சம்பவ இடத்தில் இருந்து மாயமாகியுள்ளான். முகத்தில் சொருகப்பட்ட கத்தியுடன் குறித்த இளம்பெண், உதவிக்கு கோரியபடி அங்கேயே இருந்துள்ளார்.

இதனிடையே பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பொலிசார், அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், கொள்ளையனை தேடி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை சேகரித்து கொள்ளையனை தேடும் பணி துரிதப்படுத்தப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

யாழில் துணிகரம் : வாள் முனையில் பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை!!

யாழ். தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நல்லிரவு பொழுதில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளையர்கள் நால்வர், குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தியுள்ளனர்.

இதன்போது தாலிக்கொடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பவுண் நகைகளும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணம், பெறுமதியாக கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.