யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். சாவகச்சேரியை சேர்ந்த 23 வயதான சந்திரகுமார் கஜிபன், 15 வயதான கிருஷ்ணகுமார் நிறுஜன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று காலை வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்.
வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களே கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் கணவன் ஒருவரின் செயற்பாடு பலரின் இதயங்களை கனக்க செய்துள்ளது. இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த தனது மனைவிக்காக நினைவாலயம் அமைந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த ஆ.சுந்தரலிங்கம் என்பவர், தனது வீட்டில் மனைவிக்காக நினைவாலயம் அமைத்து வழிபட்டு வருகிறார்.
2009 ஆண்டு முள்ளிவாயக்கால் பகுதியில் இடம்பெற்ற போரின் போது படுகாயமடைந்த அவரது மனைவி, போதிய மருத்துவ வசதிகள் அற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இறுதிக்கட்ட போர் முடிவடைந்து ஒன்பது வருடங்களை கடந்துள்ள நிலையில், தனது மனைவிக்காக நினைவாலயம் அமைந்துள்ள அஞ்சலி செலுத்தும் கணவனின் செயற்பாடு இதயங்களை கனக்கச் செய்வதாக அந்தப்ப பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றித்திரியும் தரகர்களை தண்டிப்பதற்கு வழி செய்யும் வகையிலான சட்டமூலமொன்று நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
விமான நிலையத்தில் சுற்றித் திரியும் தரகர்கள் விமானப் பயணிகளின் உறவினர்கள் போன்று நடித்து அவர்களை ஏமாற்றி உடைமைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் செல்லும் நிகழ்வுகள் நாளாந்தம் நடைபெற்று வருகின்றது.
அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக உழைத்து விட்டுத் திரும்பி வரும் கிராமப்புற அப்பாவிப் பெண்களே இவ்வாறான தரகர்களினால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தின் பிரகாரம் ஏமாற்று, மோசடி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்படும் தரகர்களுக்கு 25 ஆயிரம் அபராதம் அல்லது பத்து மாத சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தேவைப்படும் பட்சத்தில் மேற்குறித்த இரண்டு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் விதிப்பதற்கான ஏற்பாடுகளும் சட்டமூலத்தில் இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அதிபரின் அடாவடியான கடும் நெருக்கீடு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் ஆசிரியையின் இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்றுள்ளன.
தமிழ்ப் பாட ஆசிரியரான கவிதா ஜெயசீலன் என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இவரது இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் யாழ். திருநெல்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், உறவினர்கள், கல்வி அதிகாரிகள், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியிலுள்ள கலவன் பாடசாலை ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஆசிரியை கடமையாற்றியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாடசாலையின் அதிபர் ஆசிரியையை பழிவாங்கும் நோக்குடன் தொடர்ச்சியாக பல நெருக்கீடுகளைக் கொடுத்துவந்ததன் விளைவாக ஆசிரியை அப்பாடசாலையிலிருந்து கடந்த வாரம் இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
எனினும் குறித்த அதிபர் ஆசிரியைக்குரிய ஆவணங்களை வழங்க மறுத்துள்ளதுடன், இடமாற்றம் பெற்றுச் சென்றாலும் தனது பாடசாலைக்கு வந்து மாலை நேரத்தில் கற்பிக்க வேண்டும் என்று நெருக்கீடுகள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த பாடசாலையில் ஆசிரியை கடமையாற்றியதை உறுதிப்படுத்தும் சம்பளப் படிவம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை உறுதிப்படுத்தி வழங்காது நிறுத்தியுள்ளார்.
அதிபரின் இந்த செயல் காரணமாக மனமுடைந்து ஆசிரியை தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் குறித்த ஆசிரியையால் வலயக்கல்விப்பணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்த உயரதிகாரிகளுக்கு முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சு நேரடியாகத் தலையிட்டு நீதியான விசாரணைகளை நடத்த வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் கல்வி சமூகத்தை சோகத்தை ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு சென்று இருவர் வவுனியா நொச்சிமோட்டை பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். வலம்புரி சங்குகை விற்பனைக்காக தம்புள்ளைக்கு எடுத்துச் சென்ற இரு சந்தேகநபர்களே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவின் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கார் ஒன்றை சோதனையிட்ட பொலிஸார் அதில் வலம்புரி சங்குடன் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சியை சேர்ந்த இந்த சந்தேக நபர் தம்புள்ளையில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு ஒன்றரை கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக இந்த வலம்புரி சங்கை கொண்டு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த 24 மற்றும் 21 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வவுனியா நீதவான நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். வவுனியா பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் புத்தாண்டு விழா நேற்று (11.05) பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
புத்தாண்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக தெற்கு வலயத்தின் கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.அமிர்தலிங்கம் கலந்துகொண்டு ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு கைவிசேடம் வழங்கி வைத்திருந்தார்.
நிகழ்வில் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் பேச்சு, நடனம், குழுப்பாடல், சிங்களப்பாடல் போன்றவற்றுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ததுடன் புத்தாண்டு நிகழ்விற்கு கலாசார உடையணிந்து மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.
நிகழ்வில் வவுனியா தெற்கு வலயத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராஜா, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் மேற்கொண்ட நபர் ஒருவரை கஞ்சாவுடன் நேற்று (11.05.2018) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மகாறம்பைக்குளம், ஸ்ரீராமபுரம் பகுதியில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் அவரது வீட்டிற்கு கஞ்சா வியாபாரம் செய்பவர் போல பொலிஸார் சென்று நபருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டபோதே அவரது வீட்டில் வைத்திருந்த 3கிலோ 400கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 25 வயது சந்தேகநபரோருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவினையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 160 ரூபாவை தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இந்நிலையிலேயே, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 160 ரூபாவை தொடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி, 159.26 ரூபாவாக பதிவாகியிருந்தது. இது கடந்த செவ்வாய்க்கிழமை இருந்த நிலையை விட 30 சதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 25ம் திகதி அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி, 159.04 ரூபாவாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்து வந்த நிலையில் தற்போது சரிவை சந்தித்துள்ளது.
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இன்று பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் நாட்டின் அநேகமான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேடமாக மேல் , மத்திய , தென் மற்றும் ஊவா மாகாணங்கள் போன்று அம்பாறை , மட்டக்களப்பு , குருணாகலை போன்ற மாவட்டங்களில் சுமார் 100 மில்லி மீட்டர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும ்என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பதுளை – முதுமால கிளை வீதி மேல் பிரிவு பிரதேசத்தில் இரண்டு வயது குழந்தையொன்று பாரவூர்தியில் மோதி உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குழந்தையின் தாய் தேயிலை கொழுந்து சேகரிக்கும் பாரவூர்திக்கு தேயிலை கொழுந்து வழங்குவதற்காக குழந்தையை தனிமையில் விட்டு விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் வீடு வந்த போது , அங்கு குழந்தை இல்லாததால் அவரை தேடிய போது வீதியில் இரத்த வௌ்ளத்தில் குழந்தை கிடந்துள்ளது.
அதனை தொடர்ந்து உடனடியாக குழந்தை கஹடருப்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் குறித்த பெண் தேயிலை கொழுந்து பெற்றுக்கொடுத்த குறித்த பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
லுனுகம்வெஹர, எல்ல மற்றும் மீகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். லுனுகம்வெஹர – உடமத்தல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று உந்துருளியில் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லுனுகம்வெஹர – உடமத்தல பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனிடைய வீதியை கடக்கும் போது நபர் ஒருவர் பாரவூர்தியில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
தெமாதர பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் பாரவூர்த்தியின் சாரதி காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகஹவத்த – கதுபொட பிரதேசத்தில் அதி வேகம் காரணமாக உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடைய கைபேசியை குரங்கு ஒன்று எடுத்துக் கொண்டு ஓடி அதனை சேதப்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை சிறைக்குவரும் பொதுமக்களின் விபரங்களை பதிவு மேற்கொள்ளும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடைய கைபேசியை எடுத்துக்கொண்டு ஓடிய குரங்கை பின் தொடர்ந்த குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்
குறித்த கைபேசியை மரத்திலிருந்த குரங்கிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக கல் ஒன்றினை குரங்கினை நோக்கி எறிந்தபோது குரங்கு கைபேசியின் கவரினை கீழே போட்டுள்ளது மீண்டும் ஒரு கல்லினை எறிந்தபோது பற்றறியை கீழே போட்டது இதையடுத்து வாழைப்பழம் ஒன்றினை குரங்கை நோக்கி வீசியபோது கைபேசியை கீழே போட்டு விட்டு வாழைப்பழத்தைப் பெற்றுக்கொண்டு குரங்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மரத்திலிருந்து கீழே வீழ்ந்த கைபேசியானது கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் பாவனை செய்ய முடியாத நிலையிலுள்ளது.
இவ்வாறு குரங்குகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது இதனைக்கட்டுப்படுத்தவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் நடைமுறைப்படுத்த முடிவதில்லை இதனால் பல இழப்புக்களையும் சந்திக்க நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமீர் கான் நடித்த தங்கல் படத்தில் நடித்திருந்தவர் சாயிரா வாசிம். இந்த படம் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் சாயிரா வாசிம் தனக்கு நீண்ட காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ரசிகர்கள் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளன.
அவருக்கு 12 வயதில் இருந்தே டிப்ரஷன் எனும் மனஅழுத்தம் இருந்து வருகிறதாம். அதனால் பல்வேறு இன்னல்களை அவர் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனால் கொஞ்ச நாளைக்கு வேலை, நடிப்பது, ஸ்கூல் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொது நல வழக்கு தாக்கல் செய்த இயக்குனரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
துபாயில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ம் திகதி காலமானார்.முதலில் மாரடைப்பு என கூறப்பட்டு வந்த நிலையில், மது அருந்தி குளியலறை தொட்டிக்குள் விழுந்ததே காரணம் என கூறப்பட்டது.
இவரின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என கூறிய துபாய் பொலிசார் ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைத்தனர். இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இயக்குனர் சுனில் சிங் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறியிருந்தார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சுனில் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், ஸ்ரீதேவி பெயரில் 240 கோடி காப்புறுதி உள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளில் மரணமடைந்தால் மட்டுமே இது கிடைக்கும், இந்த நிலையில் தான் ஸ்ரீதேவி மரணமடைந்துள்ளார், எனவே அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என வாதாடினார்.
ஆனால் துபாய் பொலிசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படுவதற்கு ஏதுமில்லை என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்தியாவில் வேண்டுதலுக்காக பெண் ஒருவர் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் தராஸ்மா பகுதியை சேர்ந்தவர் குத்தி தோமார், இவர் மொரேனா அருகே உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை வழக்கம் போல் கோவிலுக்கு சென்றவர், அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தமது நாக்கை அறுத்துக் கொண்டார்.
இதனால் மயங்கி விழுந்தவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், வேண்டுதலுக்காக, தோமார் தமது நாக்கை அறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.