இலங்கையில் வாகனங்களை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் ஜப்பானில் தயாரிக்கப்படும் வாகனங்களை குறைந்த பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் யென்னுடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் விலை வலுவாக உள்ளமையினால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது சங்கத்தின் தலைவர் நிஷாந்த மீகல்லகே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஜப்பானில் இருந்து கொண்டு வரப்படும் அதிகளவான வாகனங்கள், தயாரிப்பின் போது சிறு தவறுகளுக்கு உட்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது சங்கத்தின் ஊடாக வாகனம் ஒன்றை இறக்குமதி செய்யும் போது நுகர்வோருக்கு பொருத்தமான வாகனம் ஒன்றை கொண்டுவர முடியும் என்பதற்கான பொறுப்பினை தாம் ஏற்பதாக அவர் கூறியுள்ளார்.

சமகாலத்தில் இலங்கையில் பிரபலமடைந்துள்ள வெகன்ஆர் மோட்டார் வாகனம் ஜப்பான் சந்தையில் 14 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனினும் இலங்கையில் 20 இலட்சம் ரூபா வரி அறவிடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழையில் உடைந்து விழுந்த வீடுகள் : உதவுமாறு கோரிக்கை!!

‌​

வவுனியா பரசன்குளம் இரணைஇலுப்பைக்குளத்தில் கடந்த 08.05.2018 அன்று கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையின் காரணமாக, பல குடும்பங்களின் வீடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இவ் அனர்த்தத்திற்கு 06 குடும்பங்களினைச் சேர்ந்த 21 அங்கத்தவர்களே முகம் கொடுத்துள்ளனர். தற்போதய நிலையில், இவர்கள் அனைவரும் நிரந்தர வதிவிடங்கள் அற்ற நிலையில் அன்றாட ஜீவியத்தை செவ்வனே கொண்டு செல்ல இயலாத நிலையில் இன்னலுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் நிலையினை அறிந்து உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தவும் 077 – 075 5740

முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயம்!!

 

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, கம்பளை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி, பத்துனுப்பிட்டிய புகையிரத கடவைக்கு அருகில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபமாக பலி!!

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

வாகனேரி சுற்றுலா விடுதி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் (வயது 34) என்பவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாடுகளை மேய்த்து பட்டியில் கட்டி விட்டு பின்னர், வாகனேரி குளத்தில் குளிப்பதற்காக நேற்று இரவு சென்ற போது குளத்திற்கு வந்த யானையால் தாக்குதலுக்கு இலக்கி உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் பிரச்சினை காரணமாகவே அவர் குளத்திற்கு குளிக்க சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடுவீதியில் வீசப்பட்ட முதியவர் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!!

 

காரைதீவில் இனந்தெரியாத நபர்களால் நடுவீதியில் விட்டுச் செல்லப்பட்ட வயோதிபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த வயோதிபரின் பெயர் தெய்வநாயகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயோதிபரை அவரது அண்ணனின் மகன் மருத்துவமனையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக தனது பொறுப்பில் அழைத்துச் சென்றுள்ளார்.

மட்டக்களப்பு – தாழங்குடாவை சேர்ந்த அண்ணனின் மகன் ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்தே தனது சித்தப்பாவை இனங்காண முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவரது மகன் கட்டாரில் இருக்கிறார். அவர் ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து எமக்கு அறிவித்ததையடுத்தே நான் இங்கு வந்தேன். தெய்வநாயகம் திராய்க்கேணியில் பிறந்தவர்.

மனரீதியாக பாதிக்கப்பட்ட அவர் புத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் தானாகவே சுமார் 20மைல் தூரம் வரையில் நடந்து சென்று விடுவார். இவ்வாறு தான் அவர் இங்கு வந்திருக்க கூடும். உண்மையில் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்து என்பது பற்றித் தெரியாது.

எனினும் நடுத்தெருவில் கிடந்த எனது சித்தப்பாவை பாதுகாப்பாக வைத்தியசாலையில் சேர்த்த காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

இலங்கையில் அதிசய பூ : துர்நாற்றத்திற்குள் இத்தனை நன்மையா?

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் புத்தளம் பிரதேசத்தில் மலர்ந்துள்ளது. புத்தளம் பிரதேசத்தில் உள்ள கே.ஜீ.காந்தி என்ற பெண்ணின் வீடொன்றின் முற்றத்தில் இந்த மலர் பூத்துள்ளது.

அபூர்வ மலரை பார்க்க பிரதேச மக்கள் குறித்த வீட்டிற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். ஒரு அடி உயரத்தில் வளரும் இந்த மலரில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றது. இந்த மலர் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

வீக்கம், பசியின்மை, கல்லீரல் நோய், இருமல், ஆஸ்துமா, ஒற்றை தலைவலி உட்பட நோய்களுக்கு இந்த மலரின் கிழக்கு பயன்படுத்தப்படுகிறது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம்.அப்துல்லா நியமனம்!!

மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.

மேலும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளதுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.

அத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற திருமதி சிறிநிதி நந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாகவும், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட நீதிபதியான என்.எம்.எம் அப்துல்லா, இலங்கை நீதிச் சேவையில் சிறப்புத் தரத்தில் உள்ளவர். வடக்கு – கிழக்கில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் அவர் கடமையாற்றினார். சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக 2010ஆம் ஆண்டு காலப் பகுதியில் கடமையாற்றினார்.

மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம் அப்துல்லா, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக வரும் திங்கட்கிழமை கடமையைப் பொறுப்பேற்பார்.

இதேவேளை சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதியான டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். அவருடன் இணைந்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரனும் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பேரூந்துடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

 

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று (11.05.2018) மதியம் மாலை 4.20 மணியளவில் இடம்பெற்ற தனியார் பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் பாடசாலை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் ஹொரவப்பொத்தானை வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரிலிருந்து இறம்பைக்குளம் பாடசாலை வீதிக்கு திரும்ப முற்பட்ட தனியார் பேரூந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்டபொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அக்காவும் தம்பியும் செய்த மோசமான காரியம்!!

மூன்று பயண பொதிகளில் 72,700 அமெரிக்க டொலர்களை நூதன முறையில் மறைத்து வைத்து சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு பேரை சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த 50 வயதான அக்காவும், 40 வயதான தம்பியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் செல்விருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் சிறைக்கைதிகளுக்கு அநீதி : களத்தில் இறங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழு!!

வவுனியா சிறைச்சாலைக்கு இன்று (11.05.2018 காலை 10.45 மணியளவில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர்.எம்.வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர் சிறைக் கைதிகளிடம் பல மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அண்மையில் சிறைக் கைதி ஒருவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல்கள், அராஜகங்கள் தொடர்பாக முறையிட்டதையடுத்து சிறைச்சாலை விவகாரம் சூடு பிடித்துள்ளதுடன் நீதவான் சிறைச்சாலை அதிகாரியிடம் இது குறித்த அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று திடீரென வவுனியா மாவட்ட சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதிகளிடம் நீண்ட விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமாக ஆர். எம் வசந்தராஜா,

சிறைச்சாலையிலுள்ள கைதிகளிடமும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் சிறைக்காவலர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது.

பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கைகளை கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆணைக்குழுவின் அறிக்கைகள் எமக்கு கிடைத்த பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.


​வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நேற்றையதினம் (10.05.2018) வவுனியா சட்டத்தரணிகள் ஒரு மணிநேரம் (11 மணி தொடக்கம் 12 மணி வரை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.​

வவுனியாவில் இயங்கிவந்த மசாஜ் நிலையம் இழுத்து மூடப்பட்டது : பிரதேச சபை அதிரடி!!

 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் உள்ள நெளுக்குளம் பகுதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினால் இழுத்து மூடப்பட்டுள்ளது

இன்று காலை 11 மணியளவில் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம்(ரவி) மற்றும் உப தவிசாளர் மகேந்திரன் தலைமையில் மேலும் சில பிரதேசசபை உறுப்பினர்களுடன் அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதேச சபை குழுவினர் குறித்த மசாஜ் நிலையத்தை இழுத்து மூடியதுடன் பெயர் பலகையையும் அகற்றியுள்ளனர்.

குறித்த மசாஜ் நிலையம் பிரதேச சபையில் சரியான அனுமதி பெறாமலே இதுவரை காலமும் இயங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல் : சிறுவர் உட்பட 7 பேர் பலி!!

அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவின் Margaret ஆற்று பகுதியிலுள்ள Osmington என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை 5.15 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. 4 சிறுவர்கள் மற்றும் 3 இளம் வயதுடையோர் இந்த சம்பவத்தினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

பொது கட்டடம் ஒன்றிலிருந்து ஐந்து சடலங்களும் கட்டடத்திற்கு வெளியில் இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எந்தவொரு இழப்பும் துயரமானது, ஆனால் நான்கு குழந்தைகள் மற்றும் மூன்று இளம் வயதினரின் இழப்பு கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.

தாக்குல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சந்தேகநபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

1996 ஆம் ஆண்டிற்கு பின்னர் மிக மோசமான துப்பாக்கி சூட்டு சம்பவம் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் இருந்து விடைபெறும் நீதிபதி இளஞ்செழியன் : திருகோணமலை மேல்நீதிமன்றத்திற்கு இடமாற்றம்!!

மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது.

இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.

மேலும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளதுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.

அத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற திருமதி சிறிநிதி நந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாகவும், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதியான டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.

அவருடன் இணைந்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரனும் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்தில் வருடத்தின் முதல் 3 மாதங்களில் 951 விபத்துக்கள் : 18 பேர் மரணம்!!

போக்குவரத்து சட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் தமது மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் பெட்டியை திறந்துவைத்துக் கொண்டு இலஞ்சம் வாங்குகிறார்கள்.

மக்கள் மத்தியிலும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வில்லை என வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் வடமாகாணத்தில் 951 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

வடமாகாணத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்ககோரி வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா வடமாகாணசபையின் 122வது அமர்வில் நேற்று பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

வீதியில் உள்ள தொடர் கோட்டில் வாகனங்களை முந்தி செல்ல இயலாது. வாகனங்களை நிறுத்த இயலாது. ஆனால் அந்த தொடர்கோடு உள்ள இடங்களில் நின்று வாகனங்களை மறிக்கும் பொலிஸார் தமது மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள பெட்டியை திறந்துவைத்துக் கொண்டு இலஞ்சம் வாங்குகிறார்கள்.

இந்த நிலையில், மக்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை. இதனாலேயே விபத்துக்கள் அதிகரிக்கின்றன.

மாகாணசபை உறுப்பினர் த. குருகுலராஜா கூறியதைபோல் இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் 951 விபத்துக்கள் நடந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா, கடந்த 2017ம் ஆண்டில் சுமார் 1500இற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. அவற்றில் 68 பேர் மரணமடைந்துள்ளார்கள், 315 பேர் தலையில் பலத்த காயமடைந்துள்ளார்கள்.

2018ம் ஆண்டில் முதல் 3 மாதங்களில் 951 பேர் விபத்துக்களில் சிக்கியுள்ளார்கள். அவர்களில் 16பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த தரவுகள் இலங்கையில் உள்ள மற்றய மாகாணங்களை விடவும் அதிகமாகும்.

எனவே இவ்வாறான வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக முதலமைச்சர் பொருத்தமான நடவடிக்கையில் இறங்கவேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்ந்தும் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில், வீதி விபத்துக்களை தடுக்க தனியே விழிப்புணர்வூட்டல் மட்டும் போதாது. கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியம். வீதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் போக்கு வரத்து சமிக்ஞை விளக்குகள் சரியாக ஒளிர்வதில்லை.

நடைபாதையில் கடைகள் போடப்படுகின்றது. இவையும் விபத்துக்களுக்கு காரணமாகின்றது. முதலமைச்சர் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் இவ்வாறான விபத்துக்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியும் பெற்றோரா : இலங்கையில் நடந்த சம்பவம்!!

பிள்ளைகளை அனாதை இல்லங்களில் சேர்த்துவிட்டு கணவனும் மனைவியும் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலி, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒர் தம்பதியினரே இவ்வாறு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்த தம்பதியினரை காலி பொலிஸார் நேற்று கைது செய்திருந்தனர். வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட கணவரிடமிருந்து 1906 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபரின் மனைவியிடமிருந்து 1260 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த தம்பதியினரின் ஐந்து பிள்ளைகள் காலி பகுதியை அண்டிய சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபருக்கு 53 வயது எனவும், குறித்த பெண்ணுக்கு 33 வயது எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலையில் நபரொருவர் சுட்டுக்கொலை!!

திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் இருந்த நபர் மீது இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கார் ஒன்றில் வந்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்பே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

45 வயதுடைய ஹேந்தவித்தாரன செலின் குமார எனப்படும் தெல் குமார என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என குறிப்பிட்ட திருகோணமலை பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.