யாழில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பெண் : விசாரணைகளில் வெளிவந்துள்ள புதிய தகவல்!!

யாழ்ப்பாணம் – மானிப்பாய், ஆனைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், கொலை நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தடயப்பொருட்கள் தொடர்பிலும் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.

திருட்டிற்காக இந்த கொலை சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என்று ஆரம்பத்தில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

எனினும் இந்த கொலை நடைபெற்ற இடத்திற்கு அருகில் இருந்த மூதாட்டியின் கைப்பையில், 3 சங்கிலிகள், 2 காப்புகள், மற்றும் 40,500 ரூபாய் பணம் என்பன காணப்பட்டுள்ளன.

ஆனால் கொலையை செய்தவர்கள் மூதாட்டியின் கையில் இருந்த மோதிரத்தையும், காதில் இருந்த தோடு என்பவற்றை மட்டுமே எடுத்துச்சென்றுள்ளனர்.

பணத்திற்காகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது என்று வழக்கை திசை திருப்புவதற்காக இவர்கள் தோடு மற்றும் மோதிரத்தை எடுத்துச்சென்றிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தடயப்பொருட்களாக நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐவரும் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 22 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஆனைக்கோட்டை வீதியில் உறவினர் ஒருவரின் உதவியுடன் தனிமையில் வாழ்ந்து வந்த 72 வயதுடைய ஜெகநாதன் சத்தியபாமா என்ற மூதாட்டி அண்மையில் தலையில் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவரது பெறாமகன் கிளிநொச்சியில் வசித்து வருகின்றார். வழமையாக பெறாமகன் வந்து பார்வையிட்டு செல்வதுடன், இவருக்கான உணவுகளை வேறு நபர்களிடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

அதேநேரம் இந்த மூதாட்டிக்கு பாதுகாப்பாக அவரது மைத்துனர் ஒருவர் வழமையாக இரவில் தங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த மூதாட்டி சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் இவர் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பாடசாலை மாணவன் பாலியல் துஷ்பிரயோகம் : தலைமறைவாகிய ஆசிரியர்!!

ஏறாவூரில் உள்ள பிரபல பாடசாலையில் மாணவன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தலைமறைவாகிய ஆசிரியர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

குறித்த ஆசிரியர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை நீதிமன்றில் முன்லைப்படுத்த உள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஏறாவூரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் குறித்த ஆசிரியரால் மாணவன் ஒருவர் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவில் அரிய வகை இறால் இலங்கை கடலில் கண்டுபிடிப்பு!!

 
இலங்கையில் மிகவும் அரிய வகை இறால் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை கடற்படை முகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில் இறால் கிடைத்துள்ளதாக, தேசிய நீரியியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி மீனவர்களால் இறால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த இறாலை நாரா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக நிறுவனத்தின் ஆய்வாளர் உப்புல் லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த இறால் தெற்காசிய கடலில் அரிய வகையில் கிடைக்கும் எனவும் இவை அழிந்து வரும் உயிரினமாக உள்ளதெனவும் உப்புல் தெரிவித்துள்ளார்.

கடல் அலையில் சிக்கிய நிலையில் இறால் இலங்கை கடற்பரப்பிற்கு வந்திருக்கலாம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

28 வருடங்களின் பின்னர் இறால் பிடிக்க சென்ற சந்தர்ப்பத்தில் அரிய வகை இறால் சிக்கியதாக சித்தன புஷ்ப குமார என்பவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கடலோரப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!!

வடஅமெரிக்காவில் கனடாவின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாநிலத்தின் சினியக் நகரின் தென்கிழக்கே 256 கிலோமீட்டர் தூரத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 4.31 மணியளவில் (இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 3 மணி) பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுக்கோலின்படி 8.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடாவின் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி முழுவதற்கும் சுனாமி கண்காணிப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்ட ஒரு வருட நிறைவை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டம்!!

 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் இன்று (23.01) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 334 வது நாளாக தொடரும் நிலையில், தங்கள் பிள்ளைகளை விடுதலை செய்யக்கோரி 23.01.2017 அன்று சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் நடைபெறும் கொட்டகை முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘தமிழரின் தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் உலகமே உருக வைத்த நாள் ஒரு வருடம் நிறைவு, ஸ்ரீலங்காவினால் தமிழர்களுக்கு தீர்வைத்தர முடியாது என்பதை உலகுக்கு உணர்த்திய நாள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதையை தாங்கி நின்றனர்.

இப்போராட்டத்தில் வவுனியா, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், “காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளை விடுவிக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் 14 பேருடன் செய்திருந்தோம். இருந்த போதும் எமக்கு தீர்வு வழங்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களில் எமது பிள்ளைகளை மீட்க போராட்டம் மேற்கொண்டுள்ளோம். எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம் என்பதுடன் அமரிக்க ஐரோப்பிய நாடுகள் எங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. எந்த அரசியல்வாதிகளுக்கும் எந்த கட்சிகளுக்கும் நாங்கள் ஆதரவு இல்லை அரசியல்வாதிகளில் எமக்கு நம்பிக்கை இல்லை” எனத் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் சடலம் மீட்பு!!

பயணித்துக் கொண்டிருந்த ரயிலின் மலசலகூடத்திற்குள் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர தபால ரயிலில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் பாதுகாப்பு பிரிவினரால் பண்டாரவளை ரயில் நிலையத்தில் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கிட்டத்தட்ட 55 வயதுடையவர் எனவும், அவர் இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைக்காக சடலம் பண்டாரவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமையாக மாறிய தாய் : பிள்ளைகளின் கொடூர செயல்!!

இலங்கையில் பெற்ற தாயை பாரமாக நினைத்து பொலிஸ் நிலையத்தில் விட்டுச் சென்ற பிள்ளைகள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

வெலிமடை, நுகத்தலாவ பிரதேசத்தில் வயோதிப தாயை பொலிஸ் நிலையத்தில் விட்டுச் செல்ல பிள்ளைகள் முயற்சித்துள்ளனர்.

83 வயதான குறித்த தாயை பார்த்துக் கொள்ள முடியாதென அவரது மகள், மகன் மற்றும் மருமகள் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாய் உடல் நிலை சரியில்லாத நிலையில் தனது மகளிடம் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரை பார்த்துக்கொள்ள முடியவில்லை என கூறி அவரது மகள், கம்பளை பிரதேசத்தில் உள்ள அவரது மருமகளின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் மருமகளாலும் பார்த்து கொள்ள முடியவில்லை என கூறி தாயை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் பிள்ளைகளை அழைத்து தாயை பொறுப்பேற்குமாறு பொலிஸ் அதிகாரிகள் கூறிய போதிலும் தம்மால் பார்த்துக் கொள்ள முடியாதென பிள்ளைகள் நிராகரித்துள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸார் அவரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் நால்வர் விளக்கமறியலில்!!

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் வருட சிங்கள மாணவர்கள் நால்வரை, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்காம் வருட மாணவர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மாணவர்களுக்கு பிணை வழங்குமாறு அவர்களது சார்பில் ஆஜரான சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்தார்.

எனினும் தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் நீதவான் குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே!!

அக்‌ஷய் குமார்- ராதிகா ஆப்தே நடித்துள்ள பேட்மேன் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி…

“பாலியல் தொல்லை பற்றி நடிகைகள் யாரும் தைரியமாக பேசுவது இல்லை. அப்படி பேசினால் அவர்களுடைய எதிர்காலம் நாசமாகிவிடும். அவர்களுடைய திரை உலக கனவு, கனவாகவே முடிந்துவிடும். இதனால் தான் நடிகைகள் யாரும் பாலியல் தொல்லை குறித்து வாய் திறப்பது இல்லை.

பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேச வேண்டும். பேசினால் மட்டும் போதாது. வற்புறுத்தல் வரும்போது முடியாது என்றும் கூற வேண்டும். இல்லையென்றால், அதை நிறுத்த முடியாது. பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசுவோருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

இந்த மாற்றம் உடனே நடந்துவிடாது. மாற்றம் ஏற்பட மக்களுக்கு தைரியம் வர வேண்டும். எனக்கு மோசமான பாலியல் தொந்தரவு அனுபவம் எதுவும் இல்லை.
எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் பற்றி ஏற்கனவே பேசிவிட்டேன். நான் எதையும் மறைப்பது இல்லை. அதே வேளை, மற்றவர்களின் பாலியல் தொல்லை விவகாரம் பற்றியும் பேசமாட்டேன்” என்றார்.

பிறந்து குழந்தையை குப்பையில் வீசிய தந்தை : சிசிடிவியால் சிக்கினார்!!

சீனாவில் சான்வெய் பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று கிடப்பதை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் ஒரு வாலிபர் அந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி சென்றது பதிவாகி இருந்தது. அந்த பதிவைக் கொண்டு ஒரு நபரை கைது செய்து பொலிஸார் விசாரித்தனர். விசாரணையில் அது தன்னுடைய குழந்தை என்றும் குழந்தை பிறந்தவுடன் ஊதா நிறத்தில் மாறியதால் குழந்தைக்கு கொடிய நோய் இருப்பதாக கருதி குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதாகவும் கைது செய்யப்பட்ட நபர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், குளிரான சமயத்தில் குழந்தை பிறந்ததால், நிற மாற்றம் ஏற்பட்டதாகவும், மற்றபடி குழந்தை அரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த குழந்தை பின்னர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர்களை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரியான நேரத்தில் குழந்தையை காப்பாற்றிய பெண்மணியை பலர் பாராட்டி வருகின்றனர்.

வவுனியாவில் வீட்டினுள் புகுந்த முதலை பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு!!

 
வவுனியா நெளுக்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த முதலை ஒன்றினை அப்பகுதியிலுள்ளவர்களினால் மடக்கிப்பிடிக்கப்ட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றிற்குள் திடீரெனப் புகுந்து மறைந்துகொண்ட ஆறு அடி நீளமான முதலையினை அவதானித்த வீட்டு உரிமையாளர் அயலவர்களின் உதவியுடன் முதலையினை மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தற்போது குளங்களின் நீர் மட்டம் இன்றி முதலைகள் வெளியேறி வீடுகளை நோக்கியும், வயல்களை நோக்கியும் செல்வதைக்காணக்கூடியதாகவுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலயத்திற்குப் பயணிப்பதில் பயணிகள் சிரமம்!!

 
பழைய பேருந்து நிலை­யத்­தி­லி­ருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தனி­யார் பேருந்து ஒன்று சேவை­யில் ஈடுபட்டு வருகின்றது.

அது இல­வச சேவையை நடத்­தி­னா­லும் உரிய நேரத்­துக்­குப் புறப்­ப­டு­வ­தில் சிக்­கல் காணப்­ப­டு­கி­றது.பேருந்­தின் ஆசனங்கள் அனைத்­தும் நிறை­வ­டைந்த பின்­னரே அப் பேரூந்து புறப்படுகின்றது. இத­னால் கால­தா­ம­தம் நிலவுகின்றது.

மணிக்­க­ணக்­கில் பய­ணி­கள் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது. அத­னால் உரிய மாற்று ஏற்­பாடு தேவை என்று பய­ணி­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

இது ­தொ­டர்­பில் அரச பேருந்­து­க­ளின் அதி­கா­ரி­க­ளு­ட­னும் தனியார் பேருந்­து­க­ளின் சங்­கத்­து­ட­னும் தொடர்பை ஏற்படுத்தி­ய­ போ­தும் பதில் ஏதும் கிடைக்­க­வில்லை.

வவுனியாவில் சந்தைக்கு வாழைக்குலையுடன் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

 
வவுனியா தாண்டிக்குளம் சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது கன்டர் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வவுனியா சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் வாழைக்குலைகள் கொண்டுசென்ற வேளையிலேயே இன்று (23.01.2018) காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.​

இலங்கையை வியக்க வைத்த திருமணம் : வியந்து போன விருந்தாளிகள்!!

 
இலங்கையில் பலரும் வியக்கும் வகையில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

பெருந்தொகை பணத்தை செலவிட்டு, ஆடம்பர ஹோட்டல்களில் திருமணங்கள் நடைபெறுவது வழமை. எனினும் லசித மற்றும் திலினி முனசிங்க தம்பதிகளுக்கு நடந்த திருமணம் அனைவரும் பேசும் அளவுக்கு பிரபல்யம் அடைந்துள்ளது.

திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் மணமகன் மற்றும் மணமகளால் பரிசு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பரிசுப் பொதியில், சீத்தா மரக்கன்று ஒன்றை தம்பதியினர் வழங்கியுள்ளனர்.

சீத்தா மரக்கன்றினை கட்டாயமாக நாட்டுமாறு தம்பதியினர் அன்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இளம் தம்பதியினர் முன்னெடுத்த நடவடிக்கை குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வர்த்தக நோக்கம் காரணமாக காடுகளை அழித்து வரும் நிலையில், இந்த தம்பதியினரின் செயற்பாடு பலருக்கு முன்னூதாரணமாக உள்ளது.

உலகளாவிய ரீதியில் காடுகளை அழிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொப் பாடகர் ஏ.ஈ.மனோகரன் காலமானார்!!

இலங்கையின் தமிழ் பொப் பாடகரும், நடிகருமான ஏ.ஈ.மனோகரன் தனது 73வது வயதில் இன்று காலமானார்.

சென்னை கந்தன்சாவடி பகுதியில் வசித்து வந்த நிலையில் அவர் இன்று இரவு 7.20 அளவில் காலமாகியுள்ளார்.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மனோகரன், இன்று (22.01.2018) மாலை காலமானார் என அவரது மனைவி எல்.திரேசா மனோகரன் தெரிவித்தார்.

இவர் இந்திய மற்றும் இலங்கை திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.

அத்துடன் சின்ன மாமியே, சுராங்கனி சுராங்கனி போன்ற பல தமிழ், சிங்கள பொப் பாடல்களை பாடியதன் மூலம் உலகளவில் பிரபலம் அடைந்தவராவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தந்தையையிழந்து வாழும் இளைஞனுக்கு உதவிகள் வழங்கல்!!

 
வவுனியா விநாயகபுரத்தில் தந்தையினையிழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் ரஞ்சரூபன் (வயது 34) தீடிரென ஏற்பட்ட கண்டுபிடிக்க முடியாத நோயினால் நடக்க முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தனக்கு உதவி செய்யுமாறு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனிடம் விடுத்த வேண்டுகோளிக்கிணங்க அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் ரமேஸ் அவர்களினால் சக்கரநாற்காலி, சாரம்,போர்வை , ஆடைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இப் பொருட்களை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், மற்றும் செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் இன்று (22.01.2018) நேரில் சென்று வழங்கினர்.