வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளுர் பேருந்து சேவைகளை மத்திய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டம் நடாத்துவதற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்று (02.01.2018) காலை 9.30 மணியளவில் வவுனியா வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சங்கத் தலைவர் இராசரத்தினம் கிரிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நேற்று 1ம் திகதியிலிருந்து வவுனியா மத்திய பேருந்து நிலையம் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக நகரசபையினால் மூடப்பட்டுள்ளது.
இதையடுத்து பேருந்து நிலையப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு முயன்றபோதும் பலனளிக்கவில்லை.
தற்போதும் வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சாதகமான பதில் ஏற்படுத்தப்படாவிட்டால் நாளைய தினம் புதன்கிழமை வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்களின் நியாயமான போராட்டத்திற்கு வர்த்தகர் ஆதரவினை வழங்குமாறும்,
இ.போ.ச தனியார் பேரூந்துகளின் வெளியூர் சேவைகள் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெற்று பழைய பேரூந்து நிலையத்திற்கு சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். அத்துடன் பழைய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.ச, தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடும் பட்சத்தில் வர்த்தகர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இடம்பெறாதென மேலும் தெரிவித்தார்.
வவுனியா பழைய பேருந்து நிலையம் வவுனியா நகரசபை செயலாளர் எஸ்.தயாபரனின் உத்தரவிற்கு அமைய நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தின் இரண்டு பக்க நுழை வாயில்களும் பரல்கள் கொண்டு வாகனங்கள் உட்செல்வதற்கு தடை செய்யப்பட்டு பேரூந்து நிலையத்திற்கு செல்வதற்கான பாதை மூடப்பட்டதுடன் பாதுகாப்பிற்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் கேட்டபோது,
வடமாகாண முதலமைச்சரின் பணிப்புரைக்கமைய வவுனியா நகரசபைக்குரிய பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு 12 மணியில் இருந்து மூடப்படவுள்ளதால் இன்றில் இருந்து பொதுமக்கள் தமது பிரயாணங்களை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று தொடக்கம் காலவரையரையற்ற பணிபுறக்கணிப்பில் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகள் ஈடுபடவுள்ளன.
வவுனியாவிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் குறும்படங்கள் வரிசையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவன் பூபாலசிங்கம் கேசவன் இயக்கத்தில் இருள் குறும்படம் வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் அமைந்துள்ள ICC நிறுவன கட்டடத் தொகுதியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (31.12.2017) காலை 11.30 மணியளவில் வெளியிடப்பட்டது.
பிரதான நடிகர்களாக இளம் நடிகர் சி.ஜதுர்ஷன், ஜே.தர்ஷன்ஜெயகனேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் மு.கதிர்காமத்தம்பி ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக ICC நிறுவனத்தின் பணிப்பாளர் சந்ரு, வவுனியா இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஜனகன், உறுப்பினர் சதீஸன், வவுனியா திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் சுபாஷ்கரன், செயலாளர் வினோத், வெளிச்சம் அறக்கட்டளையின் பணிப்பாளர் லம்போதரன், வவுனியா பசங்க அமைப்பின் உறுப்பினர் பிரதீபன், Sucide படத்தினுடைய இயக்குனர் கௌதமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இருள் குறும்படத்தின் திரையிடலை தொடர்ந்து அதன்பின் கலந்து கொண்டவர்களின் ஆசியுரைகளுடன் இறுதியில் பூபாலசிங்கம் கேசவனின் ஏற்புரையுடன் வெளியீடு நிறைவு கண்டது.
இருளிட்கு எவ்வாறு இரண்டு வெளிப்பாடுகள் இருக்குமோ.. அதுபோல் இதன் மையக்கரு இதுதான்.. அதாவது இன்றும் எம்மில் பலருக்கு இருக்கும் விளங்க முடியாத விபரிக்க முடியாதா விடைகான முடியாத அமானுஷ்யம் மற்றும் ஆத்மா சார்பான பிரச்சனைகள் பேய் பற்றிய கருத்துக்களை மருத்துவ ரீதியில் சிறிய விளக்கமே இக் குறும்படம்.
அமெரிக்கா – வடகொரியா பிரச்சனை, ஐ.எஸ் வீழ்ச்சி, ரோஹிஞ்யா அகதிகளின் சோக கதை, சுப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசம் என இந்த ஆண்டில் நடந்த சில முக்கிய உலக நிகழ்வுகளை காணலாம்
ட்ரம்பின் அதிரடி
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக ஜனவரி 20 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். குடியரசுக்கட்சியை சேர்ந்த ட்ரம்ப் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார். பதவியேற்றது முதலே சில அதிரடி நடவடிக்கைகள் மூலம் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் ட்ரம்ப் பிரபலமடைந்து வந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு, வெள்ளை மாளிகை அதிகாரிகள் பந்தாடப்பட்டது, மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவது, 7 முஸ்லிம் நாடுகளின் அகதிகளுக்கு தடை, ஜெருசலேம் விவகாரம், வடகொரியாவுடன் தகராறு என ட்ரம்ப்உலகச்செய்திகளில் தொடர்ந்து தனி இடம் வகித்து வந்தார்.
ஆறுதல் இல்லாத சோகம்
மியான்மரின் ராக்கீன் மாகாணத்தில் உள்ள ரோஹிஞ்யா முஸ்லிம்கள் சொந்தநாட்டு இராணுவத்தால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டது இந்த ஆண்டின் மிகப்பெரிய சோகம். பல்லாயிரக்கானோர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சுமார் 6 இலட்சம் ரோஹிஞ்யா மக்கள் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சுகியின் நிலை இந்த விவகாரத்தில் முற்றிலும் சிதைந்தது. ஐ.நா சபை மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனத்தை அடுத்து தற்போது, அகதிகளை திரும்ப பெறுவதற்கான ஒப்பந்தத்தில் மியான்மர் கையெழுத்திட்டுள்ளது.
ஏவுகணை சோதனைகள்
அடுத்தடுத்த ஏவுகணை சோதனை, அணுகுண்டுகள் பரிசோதனை என உலக நாடுகளை பதற்றத்தில் வைத்திருந்தவர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன். வடகொரியாவில் எந்த நேரத்தில் என்ன சோதனை நடக்கும் என அண்டை நாடுகள் முதல் அமெரிக்கா வரை வைத்த கண் வாங்காமல் கவனித்து கொண்டிருந்தன. மூன்றாம் உலகப்போருக்கு வித்திட்டு விடுமோ என்று அனைவரும் அச்சப்பட்ட நிலையில், வெறும் வாய் தகராறுடன் நின்று கொண்டது.
கிம் ஜாங் உன்னும், டொனால்ட் ட்ரம்ப்பும் தங்களை ஜனாதிபதிகள் என்பதையே மறந்து தரைமட்ட அளவில் இறங்கி விமர்சித்துக் கொண்டனர். யாரையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டதன் விளைவாக தடை மேல் தடையாக வடகொரியா மீது விழுந்தது. பெட்ரோல், டீசல் முதல் நிலக்கரி வரை அத்தியாவசிய பொருட்களை வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், கொஞ்சம் கீழே இறங்கி வருவதற்கு வடகொரியா தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரக்கர்களின் அழிவு
கடந்த 2014 முதல் வல்லரசு நாடுகளுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் இந்த ஆண்டில் அடக்கப்பட்டது. ஈராக்கின் மொசூல் நகரை தலைமையகமாக அறிவித்து உலகம் முழுவதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள இவர்கள், சர்வதேச கூட்டுப்படையினரால் மொசூல் நகரை விட்டே விரட்டியடிக்கப்பட்டனர்.
ஐ.எஸ் ஒழிக்கப்பட்டு விட்டதாக ஈரான், ஈராக் நாடுகள் அறிவிக்க, அந்த இயக்கத்தின் தலைவர் அல் பக்தாதி உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்று குழப்பமான தகவல்கள் மிஞ்சுகின்றன. அடி வாங்கிய பாம்பாக உள்ள ஐ.எஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாம் என்ற எச்சரிக்கையையும் பல்வேறு தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.
நவீன களவு
சர்வதேசமும் கணினிகளின் பிடியில் இயங்கிங்கொண்டிருக்க கடந்த மே மாதத்தில் ரன்சம்வேர் என்ற வார்த்தை இணைய உலகை புரட்டிப்போட்டது. வான்னாகிரை எனும் ஹேக்கிங் குழுவினர்கள் மருத்துவமனை, தொழிற்சாலை உட்பட பல நிறுவனங்களின் கணினிகளை முடக்கி தகவல்களை திருடியது. பணம் தந்தால், தகவல்களை திரும்ப தருவோம் என ஹேக்கிங் குழு பேரம் பேச, இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகளை கணினி பாதுகாப்பு நிறுவனங்கள் வெளியிட்டன.
வெள்ளை மாளிகையில் கல் விழுந்தாலே வடகொரியாதான் காரணம் என சொல்லும் அமெரிக்கா, இந்த பிரச்சினையிலும் வடகொரியாவை நோக்கி கை நீட்டியது. எது நடந்தாலும் எங்களையே குறை சொல்வது நல்லதற்கல்ல என வடகொரியா பதிலளிக்க, வைரஸ் விவகாரத்தை விட அமெரிக்கா – வடகொரியா சண்டை சூடுபிடித்தது.
தூக்கி எறியப்பட்ட அதிகாரம்
ஆபிரிக்காவின் குட்டி நாடான சிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபராக இருந்த ராபர்ட் முகாபே இராணுவம் மூலம் வீழ்த்தப்பட்ட நிகழ்வு அதிக காலம் அதிகாரத்தை வைத்துள்ளவர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. முகாபேவுக்கும், துணை அதிபராக இருந்த எம்மெர்சன் நங்காக்வாவுக்கும் இடையே அதிகார போட்டி நிலவ எம்மெர்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதத்தின் ஒரு நாள் காலையில் தலைநகர் ஹரரேவை இராணுவம் முற்றுகையிட, சிம்பாப்வேயில் இராணுவப் புரட்சி என செய்திகள் வெளியானது.
ஆனால் ஜனாதிபதி முகாபே பதவியை விட்டு நீக்க வேண்டும் என்பது மட்டுமே இராணுவத்தின் நோக்கம் என்று கூறப்பட்டதை அடுத்து தான், இதன் பின்னர் எம்மெர்சன் இருப்பது தெரியவந்தது. சுற்றிலும் தனக்கு தடுப்பு கட்டப்பட்டதை அடுத்து பதவியை முகாபே இராஜினாமா செய்ய, மக்கள் ஆதரவுடன் புதிய அதிபராக எம்மெர்சன் நங்காக்வா பதவியேற்றார்.
சவுதி இளவரசரின் அதிரடி
வளைகுடா நாடான சவுதியின் பட்டத்து இளவரசராக ஜூன் மாதம் பொறுப்பேற்ற முகம்மது பின் சல்மான், செய்த அதிரடி மாற்றங்கள் சவுதி மீதான பழமைவாத பார்வைவை மாற்றியது.
மன்னர் சல்மானின் மூன்றாவது மனைவிக்கு பிறந்தவரான இளவரசர் சல்மானுக்கு முக்கிய அதிகாரங்களை மன்னர் வழங்கியது அரச குடும்பத்தில் சலசப்பை உண்டாக்கியது.
சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி, மீண்டும் சினிமா அரங்குகள் திறக்க முடிவு என 2030 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா நவீன மாற்றங்களை அடைந்திருக்கும் என்று சல்மான் கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் உச்சமாக, கோடீஸ்வரர் அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அரசின் சொத்துக்களை, அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். எனினும், ட்ரம்ப் உடன் அதீத நெருக்கம் வைத்து கத்தார் உடனான உறவு துண்டிக்கப்பட்டதில் சல்மான் மீது சரமாரியான விமர்சனங்கள் விழுந்தது.
தலைநகர் பிரச்னை
புராண காலம் தொட்டே ஜெருசலேம் நகரில் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு புனித தலங்கள் உண்டு. நவீன காலத்திலும் ஜெருசலேம் பிரச்சனை, இஸ்ரேல் – பாலஸ்தீன் நாடுகளுக்கு மட்டுமல்ல உலகிற்கே தீராத தலைவலியாக உள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக ட்ரம்ப் அறிவிக்க, காஸா முனையிலும், மேற்கு கரையிலும் தீ பற்றிக்கொண்டது. இதற்காக போராடிய பாலஸ்தீனியர்களில் சிலரது உயிர்களையும் இஸ்ரேல் வாங்கியது.
உலக அளவில் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ள ட்ரம்ப் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஐ.நா.விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்தாலும், அமெரிக்காவும், இஸ்ரேலும் அசைந்து கொடுப்பதாக இல்லை. ஜெருசலேமில் அமைய உள்ள புகையிரத நிலையத்திற்கு ட்ரம்ப் பெயர் சூட்டப்படும் என இஸ்ரேல் அமைச்சர் பேட்டியளிக்க, ஜெருசலேம் விவகாரம் முடிவு எட்டப்படாமலேயே முடிந்து விடும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
மனிதம் குடித்த துப்பாக்கிகள்
சிரியா, ஏமன், ஈராக், ஆப்கான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் எப்போதும் போல இப்போதும் துப்பாக்கிகளுக்கும், வெடிகுண்டுகளுக்கும் அப்பாவிகள் பலியாகிக்கொண்டு இருக்க, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் நடந்துள்ளன. ஐரோப்பாவில் லண்டன், மன்செஸ்டர், பார்சிலோனா, பாரீஸ், இஸ்தான்புல், மொஸ்கோ ஆகிய நகரங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கியது.
கூட்டமாக மக்கள் இருக்கும் போது வாகனம் மூலம் மோதி தாக்குதல் நடத்தும் யுக்தியை ஐ.எஸ் தீவிரவாதிகள் லண்டனில் செயல்படுத்த, இதே விதமாக பல நகரங்களிலும் தாக்குதல்கள் அரங்கேறின.
அக்டோபர் மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பண்டிகை உற்சாகத்தில் பொதுமக்கள் கூடியிருக்க பக்கத்து கட்டிடத்தில் இருந்து துப்பாக்கியால் ஒருவன் சரமாரியாக சுட்டுத்தள்ள 29 பேர் உயிரிழந்தனர். நவம்பர் மாதத்தில் டெக்சாஸில் உள்ள சர்ச்சில் புகுந்து இதே போல ஒருவன் நடத்திய தாக்குதலில் 29 உயிர்களை துப்பாக்கி குடித்தது.
சூடான ஆபத்து
கரியமல வாயு காரணமாக புவி அடைந்துள்ள வெப்பநிலை இந்த ஆண்டு இரண்டாவது அதிகபட்சமாக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு பரிசில் உலக நாடுகள் ஒன்று கூடி ஒப்பந்தம் போட்டன.
ஆனால், பரிசில் ஒப்பந்தம் அமெரிக்காவின் வளர்ச்சியை பறிப்பதால் அதிலிருந்து வெளியேறுவதாக அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் அறிவித்தார்.
புவி வெப்பமயமாதலின் எதிர்மறை விளைவுகளாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய புயல்கள் உண்டானது. புயல் ஏற்படுத்தியுள்ள சேதங்களின் மதிப்பு மட்டும் 290 பில்லியன் அமெரிக்க டொலர்களை தொடும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புவி சூடாவதை சிறிதளவாவது கட்டுப்படுத்தும் பரிஸ் ஒப்பந்தமும் தூக்கி எறியப்படும் நிலையிலேயே உள்ளது. இந்த ஒப்பந்தத்தை தூசு தட்டி செயல்படுத்தினால் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தலாமே ஒழிய வேறு வழியே இல்லை.
சுப்பர் ஸ்டாரின் அரசியல் பிரவேசம்
அரசியலுக்கு வருவது உறுதியென நடிகர் ரஜினிகாந்த் இன்று (31.12) அறிவித்துள்ளார் இது காலத்தின் கட்டாயமென தெரிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மிக நீண்ட குழப்பங்களுக்கு மத்தியில் பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரது எதிர்ப்பார்ப்புகளுக்கும் மத்தியில் தனது தீர்மானத்தை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இறைவனின் ஆசியும் மக்களின் ஆதரவும் தமக்கு கிடைக்குமெனவும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சில மைல் தொலைவில், நீர் இறங்கு விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
விமானத்தின் சிதைவுகளுக்கு மத்தியில் இருந்து மூவரின் உடல்களை பொலிஸார் கைப்பற்றிவிட்டபோதும், எஞ்சி மூவரையும் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர்கள் குறித்த விபரம் எதுவும் அறிவிக்கப்படாத அதேவேளை, விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கார் தொடர்பில் அனைவரது அவதானமும் செலுத்தப்பட்டிருந்தது.
உலகின் நவீன வாகனங்களே தற்போது இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது. நாட்டில் காணப்படும் தீர்வையற்ற வரியே அதிநவீன வாகனங்கள் இலங்கைக்கு கொண்டுவர காரணமாகும்.
எப்படியிருப்பினும் ஓரிரு நாட்களில் நாட்டுக்குள் மூன்று அதிநவீன கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மூன்றாவது மோட்டார் வாகனம் கடந்த 29ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
தனியார் மோட்டார் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட இந்த மோட்டார் வாகனம் பெராரி 488 ரகத்தை சேர்ந்ததாகும். பெராரி ரக வாகனங்கள் உலகின் பணக்காரர்கள் மாத்திரமே பயன்படுத்துள்ளனர்.
கிம் கார்டஷியன் பரிஸ் ஹில்டன், ஜஸ்டின் பீபர், டேவிட் பெக்கம், ஆர்னோல்ட் ஸ்வாகனேகர், நிகலஸ் கேஜ் போன்ற கோடீஸ்வர நட்சத்திரங்களே இந்த மோட்டார் வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் இதுவரையில் 3 பரிஸ் பெராரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றது. என்ஜின் திறனுக்கமைய வரி அறிவிடப்படுவதற்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் அதிக விலையுடனான வாகனங்களுக்கு வரி பணம் குறைவடைகின்றது.
இதன் காரணமாக இலங்கைக்கு மேலும் இவ்வாறான அதிக வாகனங்கள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்துக்களை குறைப்பதற்கு பொலிஸார் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக அனுராதபுரம் பொலிஸாரினால் புதிய வழிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் நிஜப் பொலிஸார் கடமையில் நிற்பது போன்ற பொம்மைகளை காட்சிப்படுத்துவதன் மூலம் விபத்துக்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி கடமையில் நிற்பதாக எண்ணும் சாரதிகள், குறைவான வேகத்தில் வாகனத்தை செலுத்துவர். இதன்மூலம் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் தவிர்க்கப்படும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சம்மாந்துறை – வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் 12 வருடங்களாக கல்வி கற்ற ஜெயசீலன் கிஷோர் என்ற மாணவன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் 3A சித்தியை பெற்று அம்பாறை மாவட்டத்தில் 6ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கல்முனை – துரைவந்திய மேட்டை பிறப்பிடமாகக் கொண்ட கிஷோர் தந்தை இல்லாத காரணத்தினால் வீரமுனையிலுள்ள சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் 3ஆம் வகுப்பில் இணைந்துள்ளார். தொடர்ந்து 12 வருடங்கள் இல்லத்தில் வாழ்ந்து நன்றாக படித்து க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
இவர் தனது வெற்றிக்கு, வீரமுனை இல்லமும் அதன் நிர்வாகி விநாயகமூர்த்தியும் எனது தாய் கௌரி அம்மாவும் தான் என தெரிவித்ததுடன், மேலும் தமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
தாம் ஒரு வழக்கறிஞராக வந்து பின்னர் இலங்கை நிர்வாக சேவைக்குள் இணைந்து சேவையாற்ற வேண்டும் என்பதே இலட்சியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, “இந்த இல்லம் இருந்திராவிட்டால் இன்றைய இந்த நிலை இல்லை. எனது ஒட்டுமொத்த நன்றியும் விசுவாசமும் இல்லத்திற்கே. எதிர்காலத்தில் எனது பூரண பங்களிப்பும் இல்லத்திற்கு கிடைக்கும்” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
உலகம் எப்படி எல்லாம் அழியும் என்று ஸ்டிபன் ஹாக்கிங் நிறைய காரணங்கள் சொல்லி இருக்கிறார். இதில் மிக முக்கியமான ஐந்து காரணங்களை பட்டியலிட்டு இருக்கிறார்.
டைம் டிராவல் தொடங்கி உலகம் உருவானது வரை பேசி வரும் ஸ்டிபன் ஹாக்கிங் இந்த முறை உலக அழிவு குறித்து பேசியுள்ளார். இவரது கருத்துக்கு அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளிலும் அறிஞர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர் பட்டியலிட்டு இருக்கும் 5 காரணங்களும் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி இருக்கின்றது.
இதில் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில் டொனால்ட் டிரம்பும் பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றார்.
‘ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ்’ எனப்படும் புதிய தொழில்நுட்பம் தான் உலக அழிவிற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் ரோபோட்கள் மனித அழிவிற்கு கண்டிப்பாக காரணமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ரோபோட்கள் மனித இனத்தை முந்திவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். உலகில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் மக்களை தொகையும் உலக அளவிற்கு காரணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் காரணமாக உலகில் மக்கள் வசிக்க இடமின்றி பெரிய அளவில் பிரச்சனை உருவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது இருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
வானத்தில் இருந்து விழும் எரியும் விண்கற்கள் கூட உலகின் அழிவிற்கு காரணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் இந்த விண்கற்களை விட காலநிலை மாற்றம் உலகில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
உலக வெப்பமயமாதலை இப்போதே குறைக்கவில்லை என்றால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நடக்கும் அணு ஆயுத போர் கண்டிப்பாக உலக அழிவிற்கு காரணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி வடகொரிய நாடு போன்ற அணு ஆயுத பலம் பொருந்திய நாடுகள் கண்டிப்பாக அணு ஆயுத போரில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பெரிய அளவில் உலகில் பிரச்சினையும், போரும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இவர் சொல்லும் காரணங்களில் மிக முக்கிய காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்பும் இருக்கிறார். அமெரிக்க அதிபரின் இயற்கைக்கு முரணான நடவடிக்கையும் சட்ட திட்டமும் உலக அழிவிற்கு காரணமாக இருக்கும் என்று கூறுகிறார். அவரது சட்டம் அனைத்தும் மக்களை அழிவை நோக்கி அழைத்து செல்கிறது என்றும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை எதிர்த்து கடுமையான அரசியல் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பில் சென்னையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ்நாட்டில் மட்டும் தான் அனைவரும் ஜனநாயகமும் பேசுவார்கள், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று இந்த தேசத்தில் மட்டும் தான் சொல்வார்கள்.
காவிரிப் பிரச்சினையின் போது சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகளைப் போல விரட்டியடிக்கப்பட்டார்களே அப்போது எங்கே போனார் இவர். பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, ஆண்களும், பெண்களும் தாக்கப்பட்டனர். அப்போது ஏன் மக்களை அடித்து விரட்டுகிறார்கள் என்று யாரும் கேட்கவில்லையே.
ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம். ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது மக்களிடம் கொண்டு செல்ல, அவர் என்ன சொல்கிறார் சிஸ்டம் சரியில்லை என்கிறார். சிஸ்டம் என்றால் அமைப்பு, அதைத் தான் நாங்களும் அமைப்பு சரியில்லை, எந்தெந்த அமைப்பு சரியில்லை என்று சொல்லி வருகிறோம்.
ரஜினியின் அரசியல் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. பெங்களூரு எங்களின் வாழ்விடம், கர்நாட்காவிற்குள்ளேயே நாங்கள் போகவில்லை. பெங்களூரில் இருக்கும் 90 சதவீதம் பேர் தமிழர்கள், அவர்களை என்ன மாதிரி பார்க்கிறார்கள் அவர்கள் கன்னடர்கள். எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழனே, எங்கு வாழ்ந்தாலும் அயலான் அயலானே.
ஒருவர் ஏன் இனம் மாறுகிறார் அதில் இருந்தே தொடங்குகிறது ஏமாற்றம். ஏன் தமிழ் இனத்திற்கு மாற வேண்டும். மராட்டிய மாநிலத்தில் 26 இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தமிழர்களா மராட்டியர்களா? இனம், மொழி என்று பேசும் போது ஒருவர் நடுங்குகிறார் என்றால் அவர் மற்றொரு நிலத்தில் நிற்கிறார் என்பதே அர்த்தம்.
மலையாளிக்கு தெரிகிறது முல்லைப்பெரியாறு பிரச்சினை வந்தால் உடனே தமிழர்களை அடையாளம் கண்டு அடித்து விரட்டுகிறான். கன்னடருக்கு தெரிகிறது காவிரி நீர் பிரச்சினை வந்தால் உடனே தமிழனை விரட்டி அடிக்கிறான்.
வெள்ளைக்காரன் நாட்டை 300 ஆண்டுகள் ஆண்டதால் அவன் இந்தியன் ஆகி விட முடியமா? ஆண்பிள்ளையாக இருப்பவர் எல்லாம் என்னுடைய அப்பாவாகி விட முடியாது.
வெள்ளைக்காரன்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தான் தண்டவாளம் போட்டார்கள், அணை கட்டினார்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டினார்கள். 8 கோடி தமிழனில் எவனுக்குமே தகுதியில்லை, யாருமே யோக்கியன் இல்லை என்பதைத் தான் சொல்ல வருகிறார்களா இவர்கள்.
அறத்தின் வழியில் ஆட்சி செய்த மறவர் கூட்டம் தமிழர் கூட்டம், எங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரத் தேவையில்லை. நீங்கள் ஒதுங்கி இருந்தாலே போதும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். இவர் வந்து கட்சி தொடங்கி ஆட்சி செய்தால் நிச்சயம் அண்டை மாநிலங்கள் எங்களைப் பார்த்து காறி உமிழும். இப்போது சிரிப்பவர்கள் பின்னர் காறித் துப்புவார்கள்.
நடித்துவிட்டு ரசிகர்களின் கைதட்டல்களை வாங்கிவிட்டால் எளிதில் அரசியலுக்கு வந்துவிடலாம் என்பதே கீழ்த்தரமான பார்வை. திரையுலகில் உள்ள புகழை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவேன் என்று சொல்வது சந்தர்ப்பவாதம் தானே என்று சீமான் கொந்தளித்துள்ளார்.
இதேவேளை வரும் ஜனநாயகப் போரில் நமது படையும் இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக ரஜினி அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதையடுத்து ராகவேந்திரா மண்டபம் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாடசாலையினால் பரீட்சை எழுத அனுமதி மறுக்கப்பட்ட போதும், உயர்தரத்தில் தோற்றிய மாணவி ஒருவர் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையின் வணிக பிரிவில் தோற்றிய ஹரினி நிஹாரா கஜசிங்க என்ற மாணவியே இந்த மகத்தான சாதனை செய்துள்ளார்.
தங்காலை மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற ஹரினி நிஹாரா என்ற மாணவி உயர்தரத்தில் ஆரம்பத்தில் உயிரியல் பிரிவை தெரிவு செய்துள்ளார். எனினும் ஒன்றரை வருடங்கள் கழிந்த பின்னர் உயிரியல் கற்கையை தொடர அவருக்கு கடினமாகியுள்ளது.
அதன் பின்னர் வர்த்தக பிரிவினை தெரிவு செய்தமையின் ஊடாக அந்த பாடசாலையின் சட்டத்திட்டங்களுக்கமைய அங்கு வர்த்தக பிரிவில் உயர் தர பரீட்சை எழுத அவர் அனுமதிக்கப்படாமையினால், வெளி மாணவியாக பரீட்சை எழுதியுள்ளார்.
வணிக பிரிவில் தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், வர்த்தகம் ஆகிய பிரிவுகளை தெரிவு செய்த ஹரினி குறுகிய காலத்தில் அந்தப் பாடங்கள் தொடர்பான திறனை பெற்றுள்ளார்.
“நான் பல்கலைக்கழகத்திற்கு செல்ல விரும்பியே உயிரியல் பிரிவை தெரிவு செய்தேன். எனினும் என்னால் பல்கலைக்கழகம் செல்ல கடினமான நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் வணிக பிரிவை இடையில் தெரிவு செய்தேன். நான் இவ்வாறு பாடத்தை மாற்றியமையால் எனக்கு கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் அச்சமடைந்தனர்.
எனினும் உயர்தரத்தில் சிறந்த சித்தியை பெற்றுள்ளேன் என மாணவி ஹரினி பெருமையாக தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி வவுனியா யங்ஸ்டார் மைதானத்தில் நேற்று (30.12) நடைபெற்றது. இப் போட்டிகளை பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
ஆதிவாசிகளுடன் வவுனியா மாவட்ட இளைஞர்கள் குழு, பொலிஸ் குழு, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்கள் குழு மற்றும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் குழு போட்டியிட்டனர்.
இன் நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன், உதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிய ஸ்ரீ பெர்ணான்டோ, வவுனியா பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி மஹிந்தவில்லு ஆராய்ச்சி மற்றும் ஆதிவாசிகளின் உப தலைவர் புஞ்சி பண்டியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வுகளில் இறுதியில் கலந்துகொண்ட அணிகளுக்கும் வெற்றபெற்ற அணிகளுக்கும் சான்றிதழ்களும் வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டதுடன் வெற்றிபெற்ற அணியினர் தமது வெற்றிக் கிண்ணத்தை ஆதிவாசிகளின் அணியினருக்கு ஞாபகமாக வழங்கினர்.
கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து ஆதிவாசிகளின் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இன் நிகழ்வுகளை பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
புதுவருடத்தை முன்னிட்டு தங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அங்காடி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நகரசபைக்கு சொந்தமான இடத்தில் வியாபாரம் செய்து வந்த அங்காடி வியாபாரிகள் துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்காக அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு நகரசபைக்கு முன்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி ஓரங்களில் புதிதாக வியாபாரம் செய்வதற்கு வேறு நபர்களுக்கு வவுனியா நகரசபை அனுமதி வழங்கியுள்ளதால் புதுவருட தினத்திற்கான தங்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் நகரசபை வாக்குறுதி வழங்கியது போல் மிக விரைவாக பழைய இடத்தை செப்பனிட்டு தங்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறு தம்மை கட்டாயப்படுத்தினால் முதலாம் திகதியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கத்தின் தலைவர் வாமதேவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பேருந்து நிலையம் தொடர்பாக வழக்கொன்று நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் வட மாகாண முதலமைச்சரினால் வவுனியாவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் தொடர்பாக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் முதலாம் திகதியில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு எம்மையும் செல்லுமாறு தெரிவித்ததுடன் பழைய பேருந்து நிலையத்தினை மூடுமாறும் தெரிவித்துள்ளார்.
இதன் போது எமக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனினும் இந்த விடயத்தில் சம்பந்தப்படாதவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். 1800க்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட எமது சங்கத்தினை வெளியேறுமாறு தெரிவித்து முதலமைச்சர் கூட்டத்தை நடத்தியதனால் எம்மை அவமதித்து விட்டார் என தெரிவித்தார்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது ஓர் நீதியரசராக இருந்தவர் நீதிமன்றத்தையே அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நாம் கடந்த 53 வருடங்களாக செயற்பட்டு வரும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து எம்மை வெளியேற்ற கோருவது நியாயமற்றது. நாம் 2018 ஆம் ஆண்டுக்கான நிதியை நகரசபைக்கு செலுத்தியுள்ளோம். எனினும் அந்த பணத்தை மீண்டும் எமக்கு செலுத்திவிட்டு எம்மை வெளியேற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லுமாறு தெரிவிக்கின்றனர்.
எனவே எமது சேவைகளை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செயற்படுத்துமாறு தெரிவித்தால் எமது தொழிலாளர்களின் நலன்கருதி முதலாம் திகதியில் இருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா பழைய பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு முதல் மூடப்படுகின்றது என்று அறிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட பின்னர் பேருந்து நிலையம் தொடர்பான பிரச்சினை பூதாகரமானது. தனியார் பேருந்து போக்குவரத்துத் தரப்பினருக்கும், இ.போ.ச. பேருந்துத் தரப்பினருக்கும் இடையில் இந்த விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துச் சேவைகளை நடத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனிக்கவில்லை.
இந்த விடயம் தொடர்பாக நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
வவுனியா நகர சபைச் செயலர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர், செயலாளர், இ.போ.சபையின் வடக்கு மாகாண ஆணையாளர், வவுனியா சாலையின் முகாமையாளர் எனப் பல தரப்புக்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்குகொண்டன.
கலந்துரையாடலின் முடிவில் வவுனியா நகர சபைச் செயலாளருக்கு இந்த உத்தரவை வடக்கு மாகாண முதலமைச்சர் பிறப்பித்தார். நகர சபைச் செயலாளரின் நடவடிக்கைகளுக்குப் பொலிஸார் துணை நிற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பணித்தார்.
“வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தரவுப்படி இன்று இரவு 12 மணி முதல் இ.போ.ச. பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுப்போம் என்று வவுனியா நகர சபைச் செயலாளர் தெரிவித்தார்.
இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளின் மரணம் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டது. தாய்மையை வெளிப்படுத்தும் வகையில் அவரின் மரணம் உலக மக்களின் மனங்களை நெகிழச் செய்தது.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இந்திரா ஜயசூரிய, அவரது மகன் வயிற்றில் இருக்கும் போதே மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
புற்றுநோயால் பீடித்திருந்த இந்திரா, கர்ப்பமுற்ற நிலையில் குழந்தையை குறை மாத நிலையில் சத்திரசிகிச்சை செய்து வெளியே எடுக்க மறுத்திருந்தார். தனது குழந்தை சரியான வளர்ச்சியோடு, தனது வயிற்றிலேயே பிறக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.
நீண்ட போராட்டத்தின் பின்னர் பிள்ளையை பெற்ற இந்திரா ஜயசூரிய, சிகிச்சையின் பலன்றி கடந்த வருடம் நவம்பர் மாதம் 2ம் திகதி உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்திராவினால் வெளியுலகிற்கு கொடுத்த மகனின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தனது பேரனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இது குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேவி பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் புனித பிரிட்ஜட் கன்னிமடம் ஆகிய பாடசாலைகளில் இந்திரா ஜயசூரிய ஆரம்ப கல்வியை பயின்றார். இலண்டன் பிரட்பொர்ட் பல்கலையில் பொருளியல் கற்கைக்கான பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்ததோடு, பிரித்தானியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
பிரித்தானியாவை சேர்ந்த மார்ட்டின் டிக்கர் என்பவரை இந்திரா ஜயசூரிய திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.