அனாதையாக விட்டு சென்ற மகன்: செத்துப்போக மாத்திரை கேட்ட தாயின் பரிதாபம்!!

பெற்றெடுத்த தாயை பராமரிக்க முடியாத காரணத்தால் அவரை திருப்பதி கோயிலுக்கு அழைத்து சென்று அனாதை மகள் விட்டு வந்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ரத்தினவள்ளி(70) என்பவருக்கு 4 மகன்கள். இதில் இரு மகன்கள் இறந்துவிட்ட நிலையில், எஞ்சியிருந்த இரண்டு மகன்களில் அசோகன், கணேசன் ஆகிய இருவரில் யாரோ ஒருவர், இவரை திருப்பதி கோயிலுக்கு அழைத்து சென்று அனாதையாக விட்டு வந்துள்ளார்.

இதனால், கோயில் வளாகத்தில் படுத்திருந்த மூதாட்டி தன் நிலையை தாங்கிகொள்ள முடியாமல் கோயிலுக்கு வந்து செல்பவர்களிடம் இறப்பதற்கு மாத்திரை இருந்தால் கொடுங்கள் என கேட்டுள்ளார்.

இதனைப்பார்த்த பொதுமக்கள் ரத்தினவள்ளியின் மகன் கணேசனிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, நான் சிறுகடை நடத்தி வருகிறேன், என்னால் எனது தாயை பராமரிக்க முடியவில்லை. இதனால் அவரை அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டேன். அங்கு இவர் இருந்த இடத்திலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருவதால் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

இதனால் சென்னையில் வசித்து வரும் எனது அண்ணன் அசோகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். அவரும் என்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி திருப்பதிக்கு அழைத்து சென்றுவிட்டுள்ளார்.

இந்த தகவலை என்னிடமும் தெரிவித்தார். என்னால் எங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ளவே சிரமமாக உள்ளது. இதில் எங்களது தாயை பார்த்துக்கொள்வது கடினம் என கூறியுள்ளார்.

தற்போது, பொதுமக்கள் , ரத்தினவள்ளியை தன்னார்வ தொண்டு அமைப்பினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

கேரளாவை உலுக்கிய மாணவி!!

கேரளாவை சேர்ந்த அக்சரா என்ற மாணவி எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் பிஏ சைக்காலஜி பயின்று வருகிறார்.

ஆனால் தனது நோயினை அறிந்துகொண்ட மாணவிகள் இவருடன் விடுதி அறையில் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து முதியோர் இல்லத்தில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார்.

+2 வில் அதிக மதிப்பெண் எடுத்த அக்ஷராவை அவரது தாய் ரிமா, கண்ணூரில் உள்ள விராஸ் கல்லூரியில் பி.ஏ சைக்காலஜி சேர்த்துவிட்டதில், அக்ஷரா மகிழ்ச்சியோடு படித்து வந்தார்.

ஆனால், இவருக்கு எச்ஐவி இருப்பது இவருடன் விடுதி அறையில் தங்கியிருந்த மாணவிகளின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து, தங்களது மகள்களை இனிமேல் விடுதியில் தங்க வைக்க முடியாது என கூறி வெளியேறிவிட்டனர்.

இதனால், அக்ஷராவையும் விடுதிக்குள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து அக்ஷரா தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கேரளாவில் தலைப்பு செய்தியாகியுள்ளது.

அக்ஷரா கூறியதாவது இந்த சம்பவத்தில் இருந்து என்னால் கல்லூரிக்குள் தலைகாட்டவே கஷ்டமாக இருக்கிறது. என்னை வெளியேற்றச் சொன்ன மாணவிகளை கல்லூரியில் சந்தித்தபோது, அவர்கள் என்னிடம் நல்லமுறையில்தான் நடந்து கொண்டனர்.

எனக்கு மற்ற விடுதிகளில் அனுமதி கிடைக்காது எனவும் சொல்லிவிட்டனர். நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கல்லூரிக்குச் செல்லவே நான்கு மணி நேரம் ஆகிறது. தினசரி வகுப்புக்களுக்குச் செல்வதும் மிகக் கடினம்.

அடுத்த மாதம் இரண்டாவது செமஸ்டருக்கான தேர்வுகள் நடக்க இருக்கிறது. இருக்கும் ஒரே தீர்வு, கல்லூரியில் இருந்து நான் வெளியேறுவதுதான் என வேதனையாக கூறியுள்ளார்.

அக்ஷராவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் அக்ஷராவை வெளியேற வேண்டும் என நாங்கள் வற்புறுத்தவில்லை. சக மாணவிகளின் பெற்றோர் தவறாக புரிந்துகொண்ட காரணத்தால் இப்படி நடந்துள்ளது.

அக்ஷரா கல்லூரி விடுதியில் தங்கி படிப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அக்ஷராவின் தாயை தத்தெடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், எனது தாயை தத்தெடுக்க வேண்டாம், அவரும் அதை விரும்ப மாட்டார் என கூறிய அக்ஷரா, எனது படிப்பினை தொடர வேண்டும் என்பதே ஆசை என கூறியுள்ளார்.

இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 2 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு அகற்றியுள்ளது.
அந்த வகையில் இரத்தினபுரி, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதுடன், கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அகற்றப்பட்டுள்ளது.
அதேவேளை மாத்தறை மாவட்டத்திற்கு புதிதாக மண்சரிவு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்களை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு அந்தமான் தீவிற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் தினங்களில் மத்திய வங்காள விரிகுடா ஊடாக இந்தியாவிற்குள் நுழையும் சாத்தியம் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த தாழமுக்கம் டிசம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இலங்கையின் கிழக்கு திசையில் நாட்டுக்கு அருகில் பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏஞ்சலினா ஜூலி போலாக ஆசைப்பட்டு கோரமாக மாறிய இளம்பெண்!!

 
ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு இளம்பெண் ஒருவர் 50 முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

ஏஞ்சலினா ஜூலியின் ஈரான் நாட்டைச் சேர்ந்த தீவிர ரசிகை ஒருவரே ஒவ்வொரு கட்டமாக 50 தடவைகள் அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ளார்.

ஈரான் நாட்டைச் சேர்ந்த ஷாகர் தபார் (வயது 19) ஏஞ்சலினாவிற்காக எதையும் செய்வேன் என்பதில் விடாப்பிடியாக இருந்துள்ளார். அந்த ஆர்வம் தான் அவரை ஏஞ்சலினா போல் மாற அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.

கடந்த சில மாதங்களாக 50 முறைகள் அறுவை சிகிச்சை செய்து கொண்டது மட்டுமின்றி, ஏஞ்சலினாவின் உடல் தோற்றம் போலாகக் கடும் உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொண்டுள்ளார்.

இதனால் 40 கிலோவைக் குறைத்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஷாகர் தபார் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

இப்போது அவரை இன்ஸ்டாகிராமில் தொடர்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பின் தொடர்வோர் சிலர் அவரைப் பாராட்டியுள்ளனர். பலர் அவரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஏஞ்சலினா போலாக வேண்டும் என நினைத்து சோம்பை போலாகிவிட்டீர்கள் எனவும் கேலி செய்து வருகிறார்கள்.

யாழில். பயணிகள் பேருந்தை களவாடிச் சென்ற திருடன் : இப்படியும் ஓர் சம்பவம்!!

யாழ்ப்பாணம் – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்தை நபர் ஒருவர் களவாடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“யாழ்ப்பாணம் – மன்னாருக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து நேற்றைய தினம் வழமை போன்று சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், யாழ்பாணத்திற்கு பயணிகளை ஏற்றி வந்திருந்தது.

இந்நிலையில், பயணிகளை இறக்கி விட்டு, நகரை அண்மித்த பகுதியில் பேருந்தை நிறுத்தி விட்டு சாரதியும், நடத்துனரும் உணவருந்த சென்று விட்டனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட யாழ்.பொம்மை வெளி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேருந்தை திறப்பு இன்றி இயக்கி, அதனை களவாடிச் சென்றுளார்.

எனினும், குறித்து பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்ற போது பேருந்து சகதிக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், தொடர்ந்து செல்ல முடியாது மாட்டிக்கொண்டது.

இதன்போது அந்த வழியாக வந்த மற்றுமொரு தனியார் பேருந்தின் சாரதி, களவாடிச் சென்ற பேருந்தினை அவதானித்ததுடன், பேருந்தின் சாரதி வேறு ஒருவராக இருப்பதனையும் கண்டுள்ளனர்.

இதன் காரணமாக சந்தேகம் கொண்டு, பேருந்தின் சாரதிக்கு தொலை பேசி ஊடாக தொடர்பு கொண்டனர். இந்நிலையில், பேருந்து களவாடிச் சென்றமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்”. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கரைவலைகளில் சிக்கிய பெருந்தொகை பாம்புகள் : ஆபத்தின் அறிகுறியா?

 
மட்டக்களப்பு, நாவலடியில் இன்று காலை கரைவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் மட்டுமே பிடிபட்டுள்ளன.

அண்மைக்காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய துன்பங்களுக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்றும் மீன்கள் பிடிபடாமை பாரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் அரசாங்கமும் தங்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் வழங்குவது இல்லை என்று மீன்பிடி தொழிலை ஜீவனோபாயமாக கொண்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு அதிகளவிலான பாம்புகள் ஏன் பிடிபடுகின்றன என்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் இலங்கையில் சுனாமி அனர்த்தம் ஏற்படலாம் என அண்மைக்கால பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் பெருந்தொகை பாம்புகள் கடற்கரையை அண்மித்த பகுதியில் பிடிபட்டுள்ளன. இது ஆபத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தின் போதும் இவ்வாறு பெருந்தொகை பாம்புகள் கரைக்கு வந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கடற்பரப்பின் மாற்றங்களால் அச்சமடையத் தேவையில்லை!!

முல்லைத்தீவு கடற்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கரையோரப் பகுதி மக்கள் குறிப்பிட்டனர். கடற்பரப்பின் நீரோட்டத்தில் வித்தியாசம் தென்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, அச்சம் காரணமாக முல்லைத்தீவு நகர்ப்புறம், கள்ளப்பாடு, சிலாவத்தை, தீர்த்தக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இரவு வேளையில் முள்ளியவளை பகுதியில் இருக்கும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று தங்கிவிட்டு காலையில் தமது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் சுனாமி குறித்து தகவல்கள் பகிரப்படுவதால் தாம் அவ்வாறு செய்வதாக மக்கள் கூறினர்.

எவ்வாறாயினும், கடலின் மாற்றம் சுனாமிக்கான அறிகுறி இல்லை எனவும் மழைக்காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படும் எனவும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிறு­மியை கடத்தி துஷ்­பி­ர­யோகம் செய்த இரு­வ­ருக்கு 18, 27 வருட கடூ­ழிய சிறைத்தண்டனை!!

14 வயதுச் சிறு­மியை கடத்திச் சென்று வீடொன்றில் வைத்து துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய இரு­வ­ருக்கு தலா 18, 27 வருடங்கள் கடூ­ழிய சிறைத் ­தண்­டனை விதித்து கல்­முனை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி நவ­ரட்ண மார­சிங்க தீர்ப்­ப­ளித்தார்.

கடந்த புதன்­கி­ழமை மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போதே மேற்படி தீர்ப்பை வழங்­கினார்.

திருக்­கோவில் பிர­தே­சத்தை சேர்ந்த சிறு­மியை கடந்த 2015 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மோட்டார் சைக்­கிளில் கடத்திச் சென்று அட்­டா­ளைச்­சேனை சம்­பு­நகர் பிர­தே­சத்தில் உள்ள வீடொன்றில் அடைத்து வைத்து இருவர் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இச் ­சம்­பவம் தொடர்­பாக அப்­போது விசா­ரணை மேற்­கொண்ட அக்­க­ரைப்­பற்று பொலிஸார் சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் கைது செய்து அக்­க­ரைப்­பற்று நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்தி வழக்கு தொடர்ந்­தனர்.

அதன்­ பின்னர் சட்­டமா அதிபரினால் இவ்­வ­ருடம் பெப்­ர­வரி மாதம் 21ஆம் திகதி கல்­முனை மேல் நீதி­மன்­றத்தில் வழக்கு தொட­ரப்­பட்டு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டதை தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்­பட்­டது.

குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட எதி­ரி­களில் 1ஆம் எதி­ரிக்கு 18 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் 2 ஆம் எதி­ரிக்கு 27 வருட கடூ­ழிய சிறைத்­தண்ட­னையும் 40 ஆயிரம் ரூபா தண்­ட­ப் ப­ணமும் 4 இலட்சம் ரூபா நஷ்­ட­ஈடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனை வழங்கப்பட்ட இருவரும் அட்டாளைச் சேனை சம்பு நகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

மரணத்திற்கு பயந்து தாயிடம் ஓடிய மகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு : பாதாள உலகச் செயல்!!

கொட்டாவை ருக்மல்கம பிரதேசத்தில் பெண்ணொருவர் அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் இரவு (30.11) குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டினுள் புகுந்த சந்தேகநபர்கள் இருவரும் இரண்டு துப்பாக்கிகளைக் கொண்டு உயிரிழந்த பெண்ணை தேடி வந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் கொலையுண்ட பெண் தனது தாயை நோக்கி ஓடியுள்ளார்.

அந்த தருணத்தில் ஒரு துப்பாக்கிதாரி பெண்ணை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ள போது அவர் கீழே விழுந்துள்ளார்.

அதன்போது, மற்றைய துப்பாக்கிதாரி பெண்ணின் மீது 14 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் ருக்மலே மகளிர் விடுதி பாதையில் வசித்த மஞ்சுளா சந்துனி (42) என்ற இரண்டு பெண்களின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் அத்துருகிரிய பிரதேசத்தில் சிகையலங்கார நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

கடந்த ஜனவரி 17 ஆம் திகதி குறித்த பெண்ணின் சிகையலங்கார நிலையத்தில் அத்துருகிரிய பண்டா எனப்படும் டனில் பண்டார என்பவர் கொலை செய்யப்பட்டமைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சுமத்தப்பட்ட நிலையில் மூன்று மாதங்கள் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

உயிரிழந்த பெண் விளக்கமறியலில் இருந்து விடுதலையாகி வந்தபின்னர் பல இடங்களில் தலைமறைவாகியிருந்த நிலையில் அண்மையில் பிள்ளைகளும் கணவரும் தங்கியிருந்த வீட்டுக் சென்றிருந்த போது இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கும் இயக்குனர்!!

சிம்பு நடிப்பில் கடைசியாக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியாகி பெரும் தோல்வியடைந்தது. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு குறித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. பின்னர், முறையாக படப்பிடிப்புக்கு வரவில்லை. சரியான முறையில் திகதிகள் வழங்கவில்லை.

படத்தின் கதைப்படி படத்தையும் எடுக்க விடவில்லை. பாதி படம் நடித்தபோது இரண்டு பாகமாக படத்தை தயாரியுங்கள். எது வந்தாலும் நான் பொறுப்பு என்றதுடன், 2ம் பாகத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறேன் என்றார்.
சிம்புவுக்கு கேட்ட சம்பளம் தரப்பட்டது.

ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இதனால் எனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஈடு தரச் சொல்லி கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு தர சிம்புதான் பொறுப்பு ஏற்க வேண்டும். சிம்புவால், வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்.

இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தில் அளித்த புகாரில் கூறி உள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஒரு மாதம் ஆகியும் இதற்கு தீர்வு ஏற்படவில்லை. சிம்புவிடம் நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும் என்று மைக்கேல் ராயப்பன் கூறினார்.

இயற்கை சீற்றம் : 13 பேர் பலி, 5 பேர் மாயம்!!

சீரற்ற காலநிலை காலநிலை காரணமாக அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

5 காணாமல் போய் இருப்பதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 56 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

மீட்டியாகொட மற்றும் அம்பலன்கொட கடற்கரை பகுதியில் மீனவர்கள் நான்கு பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

மீட்டியாகொட தெல்வத்தை பகுதியை சேர்ந்த 55 மற்றும் 58 வயதுகளைச் சேர்ந்த இருவரின் சடலங்கள் அவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பலன்கொட ஊருவத்தை பகுதியில் வசித்த 39 வயதான ஒருவரும், அங்குறல பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஒருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் பலப்பிட்டிய மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. மரண விசாரணைகள் இன்று இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தீப்பிடித்து எரிந்த வர்த்தக நிலையம் : நகரசபை மீது மக்கள் விசனம்!!

 
வவுனியா மன்னார் வீதி 6ம் ஒழுங்கைக்கு அருகே அமைந்துள்ள இரும்பக்கத்தில்(ஹாட்வெயார்) நேற்று (01.12.2017) மாலை 5.45 மணியளவில் திடீரென தீப்பற்றியது. அதனையடுத்து பொதுமக்கள் உடனடியான வவுனியா நகரசபைக்கு தகவல் வழங்கியதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினார்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் சரியான முறையில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லையெனவும் இவர்கள் சரிவர செயற்பட்டிருந்தால் ஒரு சில மணித்தியாலயங்களிலே தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் எனவும் வவுனியா நகரசபையின் அசமந்தப் போக்கினால் மூன்று மணித்தியால போராட்டத்தின் பின்னரே தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் இ.தயாபரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,

எமது நகரசபைக்கென ஒரு தீயணைப்பு வாகனமே தரப்பட்டுள்ளது. அதனை வைத்து நாங்கள் பாரிய சிரமத்திற்கு மத்தியில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம் .

மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் எமக்கு தேவையாகவுள்ளது. இவ்விடயம் தொடர்பாக உள்ளுராட்சி அமைச்சுக்கு தெரியப்படுத்தி விரைவில் வவுனியா நகரபைக்கு மேலும் ஒரு தீயனைப்பு வாகனத்தினை கொள்வனவு செய்வதாகவும். இன்றைய தினம் எமது ஊழியர்கள் பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

சுமார் மூன்று மணிநேர போராட்டத்தின் பின்னர் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் நேற்று இரவு 10 மணியளவில் மின்சாரமும் வழமைக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!!

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.12.2017) காலை 9.30 மணியளவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

இப் போராட்டத்தில் கலந்து கொண்ட வேலையற்ற பட்டதாரிகள் 20,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியமனம் எங்கே?, எதிர்கட்சி தலைவரே ஏன் மௌனம், நியமன இழுத்தடிப்பு எதற்காக?, அரசே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே?, 143 நாள் வீதியில் இருந்தோம் தலைவிதி மாறவில்லை, பேச்சுவார்த்தை போதும் நியமனம் வழங்கு, விண்ணப்பம் கோரியது காலத்தை வீணடிக்கவா? என பல்வேறு வாசகங்களை ஏந்திய பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் 50க்கு மேற்ப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டதுடன் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் எமக்கான தொழில் உரிமையை வேண்டி பல்வேறு வகையான போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் மேற்கொண்டு வந்திருந்ததை தாங்கள் அறிவீர்கள். எனினும் இதுவரை எமக்கான நியாயமான தீர்வொன்று கிடைக்கப்பெறாமல் அரசியல்வாதிகளாலும் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்துள்ளோம்.

எமது 143 நாள் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக எம்மை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பல்வேறு வாக்குறிகளை எமக்கு வழங்கியிருந்தனர். ஆனால் அதற்க்கு நடந்தது என்ன என கேள்வி எழுப்பினர்.

வவுனியா மாவட்டத்தில் 399 வேலையற்ற பட்டதாரிகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தீப்பற்றியெரிந்த வர்த்தக நிலையம் : பல பிரதேசங்களுக்கு மின்தடை!!

 
வவுனியா மன்னார் வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அருகே அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்று இன்று (01.12.2017) மாலை 5.45 மணியளவில் திடீரென தீப்பற்றியெறிந்தமையினால் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டு வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் வவுனியா பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மன்னார் வீதி 6ம் ஒழுங்கைக்கு அருகே அமைந்துள்ள ஹாட்வெயாரில் இன்று மாலை திடீரென தீப்பற்றியுள்ளது. அதனையடுத்து பொதுமக்கள் உடனடியான வவுனியா நகரசபைக்கு தகவல் வழங்கியதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினருடன் வவுனியா, நெளுக்குளம் பொலிஸாரும் இணைந்து சுமார் மூன்று மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இத் தீவிபத்து காரணமாக வேப்பங்குளம், குழுமாட்டுச்சந்தி, காத்தான்கோட்டம், தாஸ்கோட்டம், கணேசபுரம், சுந்தரபுரம், கூமாங்குளம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளின் மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டதுடன் வவுனியா – மன்னார் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைசெய்யப்பட்டு மாற்று வீதியூடாக வாகனங்கள் பயணித்தன.

30க்கும் மேற்பட்ட வாயு சிலின்டர்கள் வர்த்தக நிலையத்திலிருந்து பொதுமக்களின் உதவியுடன் வெளியே அகற்றப்பட்டு இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் தீவிபத்து தொடர்பாக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு வாகன விழிப்புணர்வுப் பேரணி!!

 
உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1ம் திகதி உலக ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வுட்டும் வாகன விழிப்புணர்வு பேரணி இன்று (01.12.2017) காலை 10.30 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் கு.சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் , சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமான வாகன விழிப்புணர்வு பேரணியானது,

மன்னார் வீதியூடாக வந்து புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தினை வந்தடைந்து, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வரை சென்று மீண்டும் அதே பாதையுடாக வவுனியா மணிக்கூட்டு சந்தியினை வந்தடைந்து பஜார் வீதியூடாக ஹேரவப்பொத்தானை வீதியுடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினை வந்தடைந்தது.

2001 இல் எச்.ஐ.வி/எயிட்சுடன் வாழ்வோர் எண்ணிக்கை 7500 ஆக இருந்தபோதும் 2011 இல் 2800 ஆக குறைந்துள்ளது. இதனால் எச்.ஐ.வி/எயிட்சுடன் வாழ்வோரைக் கொண்ட 162 நாடுகளில் இலங்கை 129வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணைக்க முடியாத நெருப்புக் கிடங்குகள் : 59 ஆண்டுகளாக பற்றி எரியும் தீ!!

 
சீனாவில் நெருப்புக் குழிகள் என்னும் நிலப்பரப்பில் உள்ள சில குழிகளில், 59 ஆண்டுகளாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

சீனாவின் Chongqing பகுதியில், 1958ஆம் ஆண்டு எண்ணெய் எடுப்பதற்காக கிணறு ஒன்றை தோண்டியுள்ளனர். ஆனால், அங்கு அவர்கள் நினைத்த அளவிற்கான வளங்கள் இல்லை என்பது தெரிந்ததும், அதனை சரியாக மூடாமல் சென்றுள்ளனர்.

அப்போது எரியத் தொடங்கிய இந்த நெருப்புக் குழிகள், இன்னும் அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கின்றன. பசுமையான வயல்வெளிக்கு நடுவே உள்ள வறண்ட நிலத்திலேயே இந்த நெருப்புக் குழிகள் உள்ளன.

கணக்கிட்டால் 7 அல்லது 8 குழிகள் இருக்கும். Chongqing பகுதியில் உள்ள மக்கள், எரிந்துக் கொண்டிருக்கும் இந்த நெருப்பில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை, இங்கு வந்து தண்ணீரை சூடு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மேலும் சமையலுக்கு விறகு இல்லாத சமயங்களிலும், மக்கள் இந்த குழிகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த பழக்கங்கள் ஆபத்தானவை என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த குழிகள் எரிவதற்கு காரணம், பூமியின் கீழ் இருக்கும் நிலக்கரி போன்றவை ஆக்ஸிஜனோடு இணையும் போது, அது ’தீ’யாக மாறுவது தான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எரியும் இந்த நெருப்பை அணைக்க பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தண்ணீரை ஊற்றினாலும் அணைந்து, அடுத்த மூன்று நிமிடங்களுக்குள் மீண்டும் பற்றி எரியத் தொடங்கிவிடுகிறது.

இந்த நிலை நீண்டகாலம் தொடர்ந்தால், நிலத்தின் அடுக்குகளில் சரிவு ஏற்பட்டு, அந்தப் பகுதியில் மிகப் பெரிய குழிகள் ஏற்படலாம். அந்தப் பகுதியிலிருக்கும் கட்டிடங்களும் இடிந்து விழலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால் இதனை முற்றிலுமாக அணைப்பதற்கான வழி, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.