வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய மானம்பூ திருவிழா மற்றும் கௌரி விரத ஆரம்பம்!

வவுனியா ஓமந்தை அர்சர்பதி ஸ்ரீ கண்ணகை  அம்பாள் ஆலயத்தின்  மானம்பூ திருவிழா  கடந்த30.09.2017  சனிக்கிழமை இடம்பெற்றது .

தொடர்ந்து    கௌரி விரத ஆரம்பநிகழ்வும் அன்றைய தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில் குளத்தில் பள்ளிகொள்ளும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலய வருடாந்த பிரம்மோற்சவத்தில் இன்று (04.10.2017 புதன்கிழமை ) காலை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.

இன்றுகாலை 7.00 மணியளவில் உற்சவம் ஆரம்பமாகி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணுமூர்த்திக்கு அபிசேகம் நடைபெற்று எட்டரை மணியளவில் தம்பப் பூசை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பது மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று பத்து மணியளவில் உள்வீதி வலம் வந்து பத்தரை மணியளவில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு பகவான் தேரில் ஆரோககணி த்தருளினார்.

தொடந்து எம்பெருமான் ரதத்தை ஒரு புறம் ஆண் பக்தர்களும் மறுபுறம் பெண் பக்தர்களும் இழுத்து வர சரியாக காலை பதினோன்றரைமணியளவில் இருப்பிடத்தை வந்தடைந்தார். அதன்பின் அர்ச்சனைகள் இடம்பெற்று தொடந்து பச்சை சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. மேற்படி உற்சவத்தில் வவுனியாவின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மஹா விஷ்ணுவின் பக்கதர்கள் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் பிரமிட் வியாபாரம் : பொலிஸாரினால் முற்றுகை!!

 
வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள இந்திரன் விருந்தினர் விடுதியில் இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினரை இன்று (04.10.2017) மாலை 5.30 மணியளவில் வவுனியா 119 பொலிஸார் முற்றுகையிட்டனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் வியாபாரம் தொடர்பாக கூட்டம் வவுனியா இந்திரன் விடுதியில் நடைபெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியினை முற்றுகையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன் போது கூட்டத்தினை ஒழுங்கமைத்தவர்கள் இது பிரமிட் வியாபாரம் இல்லை, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குலோபல் நிறுவனம் என தெரிவித்தனர்.

இதன் போது பொலிஸ் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டமைக்கான சான்றிதழையும் இவ் வியாபாரம் தொடர்பாக தெளிவு படுத்துமாறு பொலிஸார் கேட்டனர்.

எங்களிடம் நிறுவனம் பதிவு செய்யப்பட்டமைக்கான மூலப்பிரதி எம்மிடம் இல்லை அதன் பிரதியே உள்ளது. மற்றும் எமது வியாபாரம் முதலில் அவர் ஒரு பொருளை கொள்வனவு செய்ய வேண்டும் முதல் வாரத்தில் 6 பேருக்கு அறிமுகம் செய்ய வேண்டும் இரண்டாவது வாரத்தில் 8 பேருக்கு அறிமுகம் செய்ய வேண்டும் , மூன்றாவது வாரத்தில் 3 பேருக்கு அறிமுகம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதிகளவு சம்பாதிக்களாம் என தெரிவித்தனர்.

பொலிஸார் அவர்களிடமிருந்து வாக்குமுலத்தினை பெற்றுக் கொண்டதுடன் நாளை வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்குமாறும் கூட்டத்தினை நிறுத்துமாறும் தெரிவித்தனர். இக் கூட்டத்தில் 20க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உடமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நால்வர் கைது!!

வவுனியா சாம்பல்தோட்டம் பகுதியில் நேற்று (03.10) இரவு 8.30 மணியளவில் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வரை வவுனியா நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மன்னார் பகுதியிலிருந்து சூடுவந்தபுலவு நோக்கி பயணித்த நபர்களிடம் கேரளா கஞ்சா இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நெளுக்குள பொலிஸ் பொறுப்பதிகாரி எ.எம்.எஸ்.அத்தநாயக்க தலைமையிலான பொலிஸ் சாஜன் திலகரத்ன (21124), பொலிஸ் கொஸ்தாபில்களான நிறோசன் (88567), சுரவீர (89437) ஆகிய குழுவினர் குறித்த நபரை சாம்பல்தோட்டம் பகுதியில் வைத்து சோதனையிட்ட போது உடமையுடன் மறைத்து வைத்திருந்த கேரளா கஞ்சா பொதியினை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்கள் 24,26,27,39 வயதுடையவர்கள் எனவும் எங்கிருந்து இவர்கள் கஞ்சாவினை பெற்றுக்கொண்டார்கள் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையத்தினுடாக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் பால் கொள்வனவு நிறுத்தம் : பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா கணேசபுரத்திலுள்ள பால் சபையில் பால் கொள்வனவு நிறுத்தப்பட்டுள்ளதால் இன்று (04.10) காலை 7 மணியளவிலிருந்து பால் உற்பத்தியாளர்கள் தமது பாலை கொள்வனவு செய்யுமாறு கோரி பால் சபைக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா கணேசபுரபுரம் பகுதியிலுள்ள பால் கொள்வனவு நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக பாலினை கொள்வனவு செய்யவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக பாலினை கொள்வனவு செய்து வந்தவர்கள் திடீரென பாலில் தரம் இல்லை என்ற காரணத்தை கூறி பாற் சபைக்கு கொண்டு வந்து கொடுக்கும் சில பண்ணையாள்ர்களிடம் இருந்து மாத்திரமே பாலினை கொள்வனவு செய்யாது விடுகின்றார்கள்.

எங்களுக்கு ஓர் முடிவு கிடைக்கும் வரை பாற்சபையை திறக்க சம்மதிக்க மாட்டோம். அதுவரை யாரிடமும் பால் கொள்வனவு செய்ய முடியாது. அதனை கண்டித்தே நாம் இவ் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பிராந்திய பால் சபை முகாமையாளர் கருத்துத் தெரிவிக்கையில், பாலின் தரம் குறைந்துள்ளதால் தமது நிறுவனங்களின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப தற்போது பால் கொள்வனவு நிறுத்தப்பட்டுள்ளது.

பாலின் தரத்தினை வைத்தே பால்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாலினை சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் பருகிவருகின்றனர். இந்நிலையில் தரத்தின் தன்மை குறைந்து காணப்படும் பாலினையே நாங்கள் கொள்வனவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பாலினை எடுத்து வந்த உற்பத்தியாளர்கள் பல கிராமங்களிலிருந்து பாலினைக் கொண்டு வந்துள்ளனர். பல ஆண்டுகளாகவே இங்கு பாலினை கொடுத்து வருகின்றோம். திடீரென்று பால் கொள்வனவை நிறுத்தியுள்ளதால் நாம் என்ன செய்வது எமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் இதையே நாங்கள் நம்பியுள்ள நிலையில் எம்மிடமிருந்து பால் கொள்வனவை எமது ஊருக்குள் கடந்த காலங்களில் முகவர்கள் மூலம் 55ரூபாய்க்கு பெற்று வந்தனர்.

தற்போது நாங்கள் நேரடியாக பால் சபையில் கொடுக்கும்போது 63 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளனர். இதனால் எமது தொழிலினை மேற்கொள்வதற்கு இசைவான நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த பால் சபை நிலையத்திற்கு நெளுக்குளம் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஏ.அத்தநாயக்க சென்று உற்பத்தியாளருடனும் பிராந்திய பால் சபை முகாமையாளருடனும் கலந்துரையாடியதில் பால் கொள்வனவை நாங்கள் தடுக்கவில்லை என்று தெரிவித்ததுடன் வழமையான வாடிக்கையாளர்களிடமிருந்து பால்கொள்வனவு இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாலினை கொள்வனவு செய்ய மறுக்கப்பட்டவர்கள் மதவாச்சியிலுள்ள மில்கோ நிறுவனத்திற்கு தமது பாலினைக் கொடுப்பதாக தீர்மானித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து சென்றனர்.

கணேசபுரம் பகுதியிலுள்ள பால் சபையில் கொள்வனவு செய்யப்படும் பாலினை நெஸ்லே நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பாற்பண்ணையாளர்கள் சிலருக்கு மாத்திரம் கொள்வனவை நிறுத்தியுள்ளதால் வழமையாக பால் கொடுக்கும் பால் உற்பத்தியாளர்கள் பாலினைக் கொண்டு வந்து ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக வைத்துக்கொண்டு நிற்பதனையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

திருமணமான 18 நாளில் பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை!!

திருமணமான 18 நாளில் காவலர் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காவலர் தங்கசாமி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.

இதுகுறித்து சிறப்பு காவல் படை பொலிசார் கூறுகையில், கடந்த 15ம் திகதி தான் தங்கசாமிக்கும், அனுசுயா என்ற ஆசிரியைக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்காக தங்கசாமி விடுமுறையில் சென்றிருந்த நிலையில் திருமணத்துக்குப் பிறகு சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது, அவர் மூளைக் காய்ச்சல் காரணமாக இறந்ததாக மருத்துவமனை தரப்பில் சொல்லப்படுகிறது. அவரது இறப்பு எங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

 

இலங்கையரின் வயிற்றில் ஒரு கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கம் : ஆச்சரியத்தில் வைத்தியர்கள்!!

 
இந்தியா – விசாகப்பட்டடினம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையரின் வயிற்றில் இருந்து 14 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த தங்க பிஸ்கட்டுகள் ஒவ்வொன்றினதும் நிறை 100 முதல் 150 கிராம் எடை கொண்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில், இருந்து சென்ற குறித்த நபர் விசாகபட்டினம் விமான நிலையத்தை சென்றடைந்த போது, அவரின் நடத்தையில் அந்நாட்டு சுங்க பிரிவினர் சந்தேகம் கொண்டனர்.

இதனையடுத்து, அவரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முதலில், குறித்த நபர் கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தி வந்ததாகவே சந்தேகம் வெளியிடப்பட்டது.

எனினும், பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த நபர் நூதனமான முறையில் வயிற்றில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபர் பொலிதீன் பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளை விழுங்கியுள்ளமையை ஒப்புக்கொண்டிருந்தார். இதனையடுத்து King George வைத்தியசாலையில் குறித்த நபர் பரிசோதிக்கப்பட்டார்.

இதன் போது அவரின் வயிற்றின் குடல் பகுதியில் 14 தங்க பிஸ்கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சை இன்றி தங்க பிஸ்கட்டுகளை வெளியேற்றியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

54 வயதான சந்தேகநபர் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அந்நாட்டு சுங்க பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

எவ்வாறாயினும், 1 கிலோ கிராமுக்கும் மேற்பட்ட தங்க பிஸ்கட்டுகள் நபரின் வயிற்றில் இருந்தமை வைத்தியர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுபானம் என நினைத்து கிருமிநாசினியை பருகிய நபர் பரிதாபமாக மரணம்!!

மதுபானம் என நினைத்து கிருமி நாசினியை பருகிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் மதுபான போத்தலில் வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினியை, குறித்த நபர் மதுபானம் எனக் கருதி அருந்தியுள்ளார்.

கம்பஹா, வதுரகம, படேபொல என்னும் முகவரியைச் சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.  சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பயணிகளை காப்பாற்ற தன்னுயிரை விட்ட சாரதி : மனதை உருக்கும் சம்பவம்!!

பேருந்தில் பயணித்த பயணிகளின் உயிரை காப்பாற்ற சாரதி ஒருவர் உயிர் துறந்த இரண்டாவது சந்தர்ப்பம் இலங்கையில் நேற்று பதிவாகியுள்ளது.

தான் ஓட்டிய பேருந்து பாதையை விட்டு விலகியமையினால் அதில் பயணித்த பயணிகளை காப்பாற்றுவதற்காக சாரதி ஒருவர் தனது உயிரை தியாகம் செய்துள்ளார்.

பண்டாரவளை போக்குவரத்து சபையில் சேவை செய்த எச்.எம்.கீர்த்தி பண்டார என்பவரே இந்த தியாகத்தை செய்துள்ளார்.

ஊவா கொஸ்கம பிரதேசத்தை சேர்ந்த அவர் 2009ஆம் ஆண்டும் பண்டாரவளை போக்குவரத்து சபையில் சேவையில் இணைந்துள்ளார்.

விபத்துக்குள்ளான பண்டாரவளை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 63-0581 என்ற பேருந்து நேற்று மாலை 4.15 மணியளவில் பண்டாரவளையில் இருந்து சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த பேருந்து ஹப்புத்தளை – பெரகல பிரதேசத்தின் விஹாரகல வீதியில் வைத்து வீதியை விட்டு விலகியுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் குறித்த பேருந்தில் சுமார் 35 – 40 பயணிகள் பயணித்துள்ளனர்.
பேருந்தின் பிரேக் செயற்படாமையினால் பாரிய பள்ளம் ஒன்றில் பேருந்து விழும் நிலைக்கு சென்றுள்ளது. இதன்போது உடனடியாக செயற்பட்ட சாரதி பேருந்து பள்ளத்தில் விழாமல் இருப்பதற்காக அடுத்த பக்கத்தில் இருந்து கல்லின் மீது திருப்பியுள்ளார்.

கல்லில் மோதினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அறிந்தே அவர் செய்த இந்த செயலினால் 10,000 அடி பள்ளத்தில் விழும் நிலையில் இருந்த பேருந்து விழாமல் தவிர்க்கப்பட்டதுடன், பயணிகளின் உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் சாரதி உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் போக்குவரத்து சபையின் பரிசோதகராக செயற்படுகின்ற நிலையில் மறைய நபர் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சாரதி இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். அவரது ஒரு மகன் 11ஆம் தரத்திலும் மகள் இரண்டாம் தரத்திலும் கல்வி கற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு பகுதிக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில், பயணிகளை உயிரை காப்பாற்ற சாரதி ஒருவர் தன் உயிரை தியாகம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் இலங்கையரின் கொடூரம் : இளம் மனைவி மரணம் : மற்றொருவர் ஆபத்தில்!!

வெளிநாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் மேற்கொண்ட அசிட் தாக்குதல் காரணமாக இலங்கையை சேர்ந்த மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.

சார்ஜாவில் பணியாற்றிய தனது மனைவி மீது இலங்கையை சேர்ந்த கணவன், அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளமையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒரு வார காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையை சேர்ந்த பெண், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மனைவியின் முறையற்ற உறவு முறை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறையொன்றில் பிறிதொரு ஆணுடன் மனவைி இருந்த வேளையில், ஆத்திரமடைந்த கணவன், இருவர் மீதும் அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

எனினும் மனைவி உயிரிழந்துள்ள நிலையில், அவரது காதலன் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்நாட்டு வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இலங்கையர் ஒருவர் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர் இலங்கை சென்ற நேரத்தில் அவரது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட கணவர், மனைவிக்கு தெரிவிக்காமல் ஷார்ஜாவில் உள்ள விடுதி ஒன்றில் அவர் தங்கியுள்ளார். அங்கிருந்து தனது மனைவி அவரது காதலருடன் Nasiriyah பகுதியில் உள்ள வீட்டிற்கு செல்லும் வரை அவதானித்துள்ளார்.

பின்னர் அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளார். வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த கணவர், இருவர் மீதும் அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் அவர்களை உள்ளேயே வைத்து கதவை மூடி விட்டு ஷார்ஜா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 25 வயதுடைய மனைவி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

23 வயதான அவரது காதலன் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட 30 வயதுடைய இலங்கையரான பிரிஷ்னி என்பவர் அங்கிருந்து இலங்கைக்கு தப்பி செல்ல முயற்சித்த வேளை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 பேர் கைது!!

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இலவசமாக தங்கியிருந்த 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேகத்திற்கிடமாக, விமான நிலையத்தில் இலவசமாக தங்கியிருந்த 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 60 பேரையும் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களுக்கு தலா 1,500 வீதம் மொத்தம் 90,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புகையிரத விபத்துக்களால் இதுவரை 380 பேர் பலி!!

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப் பகுதியில் ரயில் விபத்துக்களினால் 380 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரட்ன, கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ரயிலில் மோதுதல், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொள்ளல், பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பயணித்தல், ரயில் பாதையில் செல்பீ புகைப்படம் எடுத்தல் போன்ற காரணிகளினால் அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஒரு வார காலப்பகுதியில் கரையோர ரயில் பாதையில் ரயிலில் மோதுண்டு எட்டு பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வலைவீசும் பொலிஸார் : இவர்களை கண்டால் உடனே அழையுங்கள்!!

கம்பஹா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைபிரிட் காரிலிருந்து டீ 56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

சமிதிபுர – மட்டக்குளிய பகுதியை சேர்ந்த அசங்க சம்பத் குமார என்ற முதலாம் சந்தேகநபரினதும், உடஹமுல்ல, அமரதுங்க மாவத்தையை சேர்ந்த தாரக உயங்க என்ற இரண்டாம் சந்தேகநபரினதும் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், கம்பஹா பிரதான பொலிஸ் பரிசோதகர் 0178591611, கம்பஹா பொலிஸ் நிலையம் 033-2222226 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறியத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர், மேற்படி காரை பன்னிப்பிட்டியவிலிருந்து வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வாழ்க்கைச் செலவு குழு தீர்மானம்!!

வரையறையின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்குவதற்கு வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.

நேற்று (03.10) நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் அரிசி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், டின்மீன், ஆகியவற்றை இறக்குமதி செய்யவுள்ளதாக வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களை குறைந்த விலையில் சதோச ஊடாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 8 அரிசி வகைகள் மற்றும் நெத்தலி மீனின் விலைகள் கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறைவடைந்தன.

இந்த கோப்பையின் விலையைக் கேட்டால் வாயடைத்துப் போவீர்கள்!!

படத்தில் காணப்படும் இந்தச் சிறிய பீங்கான் கோப்பை, 37.7 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

சீனாவை ஆண்ட சோங் ராஜ வம்சத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த இந்தப் பீங்கான் கோப்பை ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்தது.

ஐஸ் துகள்கள் படர்ந்ததுபோலக் காட்சியளிக்கும் 13 சென்றிமீற்றர் அளவு விட்டம் மட்டுமே கொண்ட இந்தக் கோப்பை, அந்நாட்களில் தூரிகைகளைக் கழுவுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

ஏலத்தின்போது சுமார் 13 மில்லியன் டொலர் ஆரம்ப விலையாக அறிவிக்கப்பட்டது. எனினும், இருபதே நிமிடங்களில், அதைவிட சுமார் இருபத்து நான்கு மில்லியன் டொலர் அதிக விலைக்கு இந்தக் கோப்பை கோரப்பட்டது.

இதை ஏலத்தில் எடுத்தவர் தனது விபரங்களைப் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

பளு விழுந்ததில் பரிதாபமாக பலியானார் இளைஞர்!!

பளுதூக்கும் உபகரணம் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

உடற்பயிற்சி கூடத்தில் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இறந்தவர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதுடைய பென் ஷாவ் எனும் இளைஞராவார்

அந்த இளைஞர் சுமார் 100 கிலோ எடையுள்ள பளுவை தூக்க முயற்சிக்கும்போது குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

பின்னர் அவரது உடல் உடற்பயிற்சி கூடத்தின் ஊழியர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.