அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வாழ்க்கைச் செலவு குழு தீர்மானம்!!

வரையறையின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்குவதற்கு வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.

நேற்று (03.10) நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் அரிசி, பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம், டின்மீன், ஆகியவற்றை இறக்குமதி செய்யவுள்ளதாக வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களை குறைந்த விலையில் சதோச ஊடாக விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 8 அரிசி வகைகள் மற்றும் நெத்தலி மீனின் விலைகள் கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் குறைவடைந்தன.

இந்த கோப்பையின் விலையைக் கேட்டால் வாயடைத்துப் போவீர்கள்!!

படத்தில் காணப்படும் இந்தச் சிறிய பீங்கான் கோப்பை, 37.7 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

சீனாவை ஆண்ட சோங் ராஜ வம்சத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த இந்தப் பீங்கான் கோப்பை ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்தது.

ஐஸ் துகள்கள் படர்ந்ததுபோலக் காட்சியளிக்கும் 13 சென்றிமீற்றர் அளவு விட்டம் மட்டுமே கொண்ட இந்தக் கோப்பை, அந்நாட்களில் தூரிகைகளைக் கழுவுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

ஏலத்தின்போது சுமார் 13 மில்லியன் டொலர் ஆரம்ப விலையாக அறிவிக்கப்பட்டது. எனினும், இருபதே நிமிடங்களில், அதைவிட சுமார் இருபத்து நான்கு மில்லியன் டொலர் அதிக விலைக்கு இந்தக் கோப்பை கோரப்பட்டது.

இதை ஏலத்தில் எடுத்தவர் தனது விபரங்களைப் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

பளு விழுந்ததில் பரிதாபமாக பலியானார் இளைஞர்!!

பளுதூக்கும் உபகரணம் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

உடற்பயிற்சி கூடத்தில் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இறந்தவர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதுடைய பென் ஷாவ் எனும் இளைஞராவார்

அந்த இளைஞர் சுமார் 100 கிலோ எடையுள்ள பளுவை தூக்க முயற்சிக்கும்போது குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

பின்னர் அவரது உடல் உடற்பயிற்சி கூடத்தின் ஊழியர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சில பகுதிகளில் இன்று மின்தடை!!

வட மாகாணத்தின் வவுனியாவின் சில பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வட மாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மின்தடையானது மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகவே அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இன்று காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை தாண்டிக்குளத்திலிருந்து புளியங்குளம் வரை, ஓமந்தை வீட்டுத் திட்டம், ICT கல்லூரி, Union Alliance Ltd, ஓமந்தை AMP, ஓமந்தை மீன்பிடித் தொழிற்சாலை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

தாடி பாலாஜியிடம் விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு!!

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.

தாடி பாலாஜி மீது சென்னை பொலிஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நித்யா முதலில் புகார் செய்தார். அதில் குடித்து விட்டு வந்து பாலாஜி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி இருந்தார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் மனைவி நித்யா மீது தாடி பாலாஜி புகார் அளித்தார். அதில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், சினிமா ஜிம் பயிற்சியாளரும் எனது மனைவியை மிரட்டி வைத்துள்ளனர். பேஸ்புக் தொடர்பால் எனது குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி இருந்தார்.

இருப்பினும் நித்யாவுடன் சேர்ந்து வாழ்வதற்காக ஆசைப்படுகிறேன் என்றும் பாலாஜி பேட்டி அளித்தார்.

ஆனால் பாலாஜியின் மனைவி நித்யாவோ, கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும், விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கும்போது..

பாலாஜியுடன் இனி சேர்ந்து வாழ்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை. என்னைப் பற்றி தேவையில்லாமல் அவதூறுகளை பரப்பி வருகிறார். அவர் கூறி இருப்பது போல யாருடனும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

சப்-இன்ஸ்பெக்டர், ஜிம் பயிற்சியாளர் என 2 பேரின் பெயரை குறிப்பிட்டு அவர்களோடு என்னை தொடர்புபடுத்தி பேசியுள்ளார். இதனால் அவர்களது குடும்பத்திலும் பிரச்சினை.

பாலாஜி கூறியது போல இவர்களோடு நான் பழகவில்லை என்பதை அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. எனது குழந்தையை என்னிடமிருந்து பிரிக்க முயற்சி நடக்கிறது. அவளை நானே நல்ல படியாக வளர்த்துக் கொள்வேன் என்று நித்யா தெரிவித்தார்.

மருத்துவமனை பக்கமே செல்லாத 101 வயது மூதாட்டி!!

கேரளாவில் வசித்து வரும் 101 வயது மூதாட்டி சாரம்மாள் இதுவரை மருத்துவமனை பக்கமே சென்றதில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மூணாறு செல்லும் சாலையில் முல்லைபெரியார் அணை அருகே வசித்து வந்தவர் பைலி.

இவரது மனைவி சாரம்மாள் (வயது 101) சாரம்மாளின் கணவர் பைலி கடந்த 1962-ம் ஆண்டு இறந்து விட்டார். அதன்பின்னர் சாரம்மாள் மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோருடன் வசித்து வருகிறார்.

சாரம்மாள் எள்ளு, கொள்ளு பேரக்குழந்தைகளுக்கு பழங்கதைகள், ராஜா கால வீரக்கதைகள் கூறி வருகிறார்.
தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். தனது வேலைகளை தானே செய்து கொள்கிறார். செய்தி தாள்களை தினந்தோறும் படித்து வருகிறார்.

சிறிய எழுத்துக்கள் மட்டும் தெரிவதற்காக கண்ணாடி அணிந்து கொண்டு படிக்கிறார். சாரம்மாள் இதுவரை மருத்துவமனை பக்கமே போனதில்லை என்று அவரது உறவினர்கள் கூறினர்.

உடல் ஆரோக்கியம் குறித்து மூதாட்டியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, உணவு பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் காரணமாகவே நான் இன்றும் ஆரோக்கியத்துடன் இருக்க காரணம். மேலும் கடந்த கால கவலைகளை சுமந்து கொள்ளமாட்டேன்.

எதிர்காலம் குறித்து அச்சப்படமாட்டேன். இருக்கும் நாள் உண்மை என்று நினைத்தேன். 101 வருடம் மகிழ்ச்சியோடு வாழ்கிறேன். இன்னும் பல ஆண்டுகள் இதே உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வேன் என்றார்.

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா பயணம்!!

இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (நவம்பர்) மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16ம் திகதியும், 2வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நவம்பர் 24ம் திகதியும், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் டிசம்பர் 2ம் திகதியும் நடைபெறவுள்ளது.

இரு அணிகள் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி தரம்சாலாவில் டிசம்பர் 10ம் திகதியும் , 2வது ஒருநாள் போட்டி மொகாலியில் 13ம் திகதியும், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் 17ம் திகதியும் நடைபெறவுள்ளது.

இரு அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி கட்டாக்கில் டிசம்பர் 20ம் திகதியும், 2வது 20 ஓவர் போட்டி இந்தூரில் 22ம் திகதியும், 3வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பையில் 24ம் திகதியும் நடைபெறவுள்ளது.

கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதத்தில் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடியது.

இதில் அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அவதானம் : இலங்கையில் பேஸ்புக் கணக்குகள் குறித்து 2500 முறைப்பாடுகள்!!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தலங்கள் தொடர்பில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 2500 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலும் பல்வேறு நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி பேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்தமை தொடர்பிலேயே முறையிடப்பட்டுள்ளதாக, அந்தப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.

முன் அறிமுகம் இல்லாதவர்களை தமது பேஸ்புக் கணக்குகளில் நண்பர்களாக இணைத்துக் கொள்வதே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணமாகிறது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிலரின் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி சமூக வலைத் தலங்கள் மூலம் பல்வேறு குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலும், அண்மைக் காலங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ரொஷான் சந்திரகுப்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மகனைக் கொன்று விட்டு தந்தை தற்கொலை!!

தொம்பே – மல்வான பகுதியில் தனது மகனை கொன்ற தந்தை ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை தனது மகனை கழுத்தை வெட்டிக் கொன்ற அவர், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் 31 வயதான இளைஞர் என்பதோடு, தற்கொலை செய்து கொண்ட தந்தைக்கு 74 வயதாகும்.

அத்துடன், கொலை செய்யப்பட்டவர் உளவளம் பாதிக்கப்பட்ட ஒருவர் என, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய சப்பர திருவிழா!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா கடந்த (26.09.2017) செவ்வாய்கிழமை பகல் 11.00மணிக்கு சிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில் கொடிஏற்றத்துடன் ஆரம்பமானது.

மேற்படி ஆலயத்தில் 10 நாட்கள் இடம்பெறும்பிரம்மோற்சவத்தில்சப்பர திருவிழா -03.10.2017 செவ்வாய்கிழமை இரவு 8.00 மணியளவில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து இடம்பெற்றது .

வவுனியா சின்னப்பூவரசங்குளம் விக்கினேஸ்வரா பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!!

 
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் வவுனியா சின்னப்பூவரசங்குளம் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் பல பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிறுவர் தின கட்டுரைப்போட்டியில் முதலாமிடம் ம.சங்கவி (கனிஸ்ட பிரிவு) , மூன்றாமிடம் ப.அக் ஷயா (கனிஸ்ட பிரிவு) , மூன்றாமிடம் சு.அனித்தா (சிரேஸ்ட பிரிவு)

முதியோர் தின கட்டுரை போட்டியில் முதலாமிடம் ம.சங்கவி (மத்திய பிரிவு) , இரண்டாமிடம் சி.திசானா (மத்திய பிரிவு) , ஆறுதல் பரிசு சி.மகிந்தன் மற்றும் கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் ஜ.விதுசிகா

பேச்சுப் போட்டியில் பங்கு பற்றி சான்றிதழ்களை தட்டிச் சென்ற மாணவர்கள் து.கபினேஸ், அ.லோஜிதா, தி.பிரியந்தினி ஆகிய மாணவர்ளே பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர்களாவார்.

பாடசாலை அதிபர் க.செல்வதேவன் தலமையில் செல்வி.தெ. துர்க்காஜினி ஆசிரியையின் நெறிப்படுத்தலில் இம் மாணவர்கள் வெற்றியீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய பறக்கும் தட்டு : உண்மைக் காரணம் வெளியானது!!

 
அண்மையில் களுத்துறை, பாத்தகட பிரதேச வான் பரப்பில் விசித்திரமான முறையில் பறந்த ஹெலிகொப்டர் குறித்து பரவலாக செய்திகள் வெளியாகி இருந்தன.

குறித்த பகுதியில் நிலத்தடி சுரங்கங்கள் இருப்பது கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும், நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த சுரங்கங்களில் புதையல் தேடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கான உண்மையான காரணங்கள் வெளியாகி உள்ளது.

களுத்துறை, பாத்தகட பிரதேசத்தில் உள்ள கிராஃபைட்டை கண்டுபிடிப்பதற்கான தனியார் நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆயுவு நடவடிக்கை என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கிராஃபைட் – (கிராஃபைட் என்பது தாது பொருள், ஒரு crystalline allotrope கார்பன், ஒரு கனிமப்பொருளாகும்). உலகிலேயே சிறந்த தரம் வாய்ந்த கிராஃபைட் இலங்கையில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆராய்ச்சிக்காகவே குறித்த ஹெலிகொப்டர் வித்தியாசமான முறையில் பறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி ஆராய்வதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணமே சக்கரம் போன்ற பகுதியாகும்.

இது தொடர்பில், குறித்த தனியார் நிறுவனத்தால் அப்பகுதியிலுள்ள பிரதேசசெயலகங்களுக்கு தகவல் தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்னறிவித்தல் இன்றி குறித்த ஹெலிகொப்டர் பறந்து சென்றமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20 பிள்ளைகள் பெற்று உலக சாதனை படைக்கவுள்ள இலங்கைத் தாய்!!

 
இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உலக சாதனைகள் படைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 20 பிள்ளைகளை பெற்ற தாயொருவர் உலக சாதனை படைத்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

கலேவெல பம்பரகஸ்வெவ கட்டுபொத்த பிரதேசத்தை சேர்ந்த ஹஸ்திமு ஆராச்சிலாகே ரொசலின் என்ற தாயே இந்த உலக சாதனைக்கு சொந்தக்காரராகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகமான பிள்ளைகள் பெற்று உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த தாய்க்கு 19 பிள்ளைகளே உள்ளதாக, தேசிய முதியோர் செயலகத்தின் இயக்குனர் சிங்கப்புலி தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பாக உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிக குழந்தைகளை பெற்ற தாயாக இவர் கடந்த முதியோர் தினத்தன்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.

80 வயதுடைய இந்த தாயின் 20 பிள்ளைகளின் 15 பிள்ளைகள் தற்போது உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது மூத்த மகளுக்கு தற்போது 60 வயதாகின்ற நிலையில் கடைசி பிள்ளைக்கு 30 வயதாகின்றது. அவரது 5 பிள்ளைகள் பெரியவர்களாகிய பின்னர் பல்வேறு நோய்களின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

15 வயதில் 21 வயது நபரை திருமணம் செய்த இந்த தாயர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தையை பெற்றுள்ளார். தற்போது அவருக்கு பிள்ளைகள், பேரபிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என 151 பேர் உள்ளனர்.

சில மணித்தியாலங்களில் பிரிந்த செவ்வந்தியின் உயிர் : சுகாதார அமைச்சரிடம் அழுது புலம்பிய தந்தை!!

 
இதய மாற்று சத்திரசிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்த களுவாமோதர பகுதியைச் சேர்ந்த சவினி செவ்வந்தியின் உயிரிழப்புக்கான காரணங்கள் குறித்து கண்டி போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கண்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

சவினி செவ்வந்திக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்னர் உட்செலுத்தப்பட்ட மயக்க மருந்து தொடர்பில் அவரது பெற்றோர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

நாடே எதிர்பார்த்துகொண்டிருந்த இரண்டாவது இதய மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்த சவினி செவ்வந்தியின் தந்தை களுப்பெறும சமிந்த சுகாதார அமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

சவினி செவ்வந்தியின் இறுதி சடங்கிற்காக சுகாதார அமைச்சர் வருகை தந்திருந்த போதே இவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

குறித்த கோரிக்கையில், சுகாதார அமைச்சரிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகின்றேன். தயவு செய்து எதிர்காலத்தில் இவ்வாறான ஒரு விடயம் எந்தவொரு நோயாளிக்கும் ஏற்படாதவாறு சிகிச்சை அளியுங்கள்.

எனது மகளின் சத்திர சிகிச்சைக்கு முன்னர் மயக்க மருந்தினை உட்செலுத்திய பெண் வைத்தியர்கள் குழாம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுங்கள். எனது பிள்ளைக்காக நான் இறந்தாலும் பரவாயில்லை. எனது மகளுக்கு வாழ்வதற்கு காணப்பட்ட ஆர்வம் சில மணித்தியாலங்களில் இல்லாமல் போனமையை நானும் எனது மனைவியும் எவ்வாறு சகித்து கொள்வது? இவ்வாறு செவ்வந்தியின் தந்தை அழுது புலம்பியபடி சுகாதர அமைச்சரிடம் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த கோரிக்கையின்படி, நாளைய தினம் கண்டி போதான வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணர்களுடன் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ள சமன் ரத்னாயக்க இதய மாற்று சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட இதயம் உட்பட மருந்து பொருட்கள் அனைத்தும் இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கை இன்று மாலை கிடைக்கப்பெற்றவுடன் நாளைய தினம் கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் சமன் ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.

வவுனியா புகையிரத வீதியின் புகையிரதக் கடவை உடைந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து தடை!!

 
வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத பாதையில் இருந்த புகையிரத பாதுகாப்பு கடவை உடைந்து வீழ்ந்தமையினால் அவ் வீதியில் போக்குவரத்துத் தடை ஏற்ப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் இன்று (03.10.2017) மாலை 5.30 மணியளவில் வவுனியாவை அண்மித்தது. இதனால் வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகேயுள்ள (வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில்) புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்ட சமயத்தில் கடவை உடைந்து வீழ்ந்தது. இதனால் வவுனியா வைரவப்புளிங்குளத்திற்கான வீதியில் போக்குவரத்து தடை ஏற்ப்பட்டது.

தற்போது அவ்விடத்தில் புகையிரத சமிச்சை ஒளி சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பதுடன் புகையிரத கடவை காப்பாளர், புகையிரத நிலைய ஊழியர்கள் இணைந்து உடைந்து வீழ்ந்த கடவையினை கழற்றி போக்குவரத்தினை சீர்செய்து வருகின்றனர்.

​புகையிரத நிலைய வீதியில் காணப்படும் இவ் புகையிரத கடவையானது அடிக்கடி உடைந்து வீழ்வதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்​.

வவுனியாவில் குடிநீர் கேட்டு வீதியிலிருந்து போராட்டம் : மூடப்பட்ட A9 வீதி!!

 
வவுனியாவில் பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள இன்று (03.10.2017) மதியம் 3 மணியளவில் ஏ9 பிரதான வீதியை மறித்து குடிநீர் கேட்டு மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்டத்திலுள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் ஏ9 பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.

குறித்த மரையடித்தகுளம் பகுதியிலுள்ள இந்தியன் வீட்டுத்திட்டத்தில் 45ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போதுள்ள வறட்சியான காலநிலையினையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட ஏழு குளாய்க் கிணறுகளில் தற்போது ஒரு குளாய்கிணறிலிருந்தே குடிநீரினைப் பெற்று வருகின்றனர்.

எனவே இது தொடர்பாக பல தடவைகள் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்து அப்பகுதிமக்கள் தமது அடிப்படை தேவையினை நிவர்த்தி செய்யக்கோரி தமது பாடசாலை செல்லும் பிள்ளைகளுடன் வீதியிலிருந்து குடிநீர் கேட்டு வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் தமது குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்வதாகவும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்

மரையடித்தகுளம் பகுதி மக்களின் போராட்டம் காரணமாக பிரதான வீதியான ஏ9 வீதியின் போக்குவரத்து சுமார் 45நிமிடங்களுக்கு மேல் தடைப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வீதியின் இருபுறமும் தரித்து நின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை உதவி பொலிஸ் பொருப்பதிகாரி மகிந்த ஜெயசென தலைமையிலான பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மூன்று நாட்களுக்குள் உரிய தீர்வினை பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கியதையடுத்து போராட்டகாரர்கள் போராட்ட இடத்திலிருந்து விலகிச்சென்றனர்.

ஒமந்தை போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்தனர். தற்போது ஏ9 வீதியின் போக்குவரத்து சீராக காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.