கதிர்காமம் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!

கதிர்காமத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் மஹியங்கனையில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

மட்டக்களப்பு, வாழைச்சேனை, பேத்தாழை, முருகன் கோயில் வீதியை சேர்ந்த கணேசன் யசோராஜ் (வயது 26) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் வீட்டில் இருந்து கதிர்காமத்திற்கு செல்வதற்காக மஹியங்கனை வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது மாலை மூன்று மணியளவில் இளைப்பாறுவதற்காக மஹியங்கனை பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றில் நீராடியுள்ளார்

இதன்போது திடீரென நீர்மட்டம் அதிகரித்தமையாலும் நீரோட்ட வேகம் அதிகரித்ததாலும் குறித்த இளைஞன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உயிரிழந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் இன்று(26) காலை கண்டெடுக்கப்பட்டது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள கால்வாய் பகுதியில் “நீரில் இறங்க வேண்டாம்”எனும் அறிவுறுத்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

11 மாவட்டங்களில் கடும் வறட்சியால் 11 லட்சம் மக்கள் பரிதவிப்பு!!

இலங்கையின் 11 மாவட்டங்களிலுள்ள 118 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தசுமார் 11 லட்சம் மக்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி இவர்களுக்கான நிவாரணங்களைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய இலங்கை விவசாயிகள் சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்தச் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை, திருகோணமலை, மஹாஓயா, பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் குடிதண்ணீருக்கே பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. விவசாயக் காணிகளுக்கு சுழற்சி முறையில் நீர் விநியோகம் செய்யப்படாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் மொரகஹாகந்த நீர்த்தேக்கத்திலிருந்து இப்போது நீர் வழங்கப்பட்டு வந்த போதிலும் அது காலங்கடந்த ஏற்பாடானதால் நீர் வெறுமனே விரயமாகிக் கொண்டிருக்கிறது.

2015, 2016ம் ஆண்டுகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகள் சரியாக வழங்கப்படவில்லை. ஏக்கரொன்றுக்கு 8,650 ரூபா மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 10 ஆயிரம் ரூபா விவசாயக் காப்புறுதிக்கான தவணைப் பணமாகக் கழிக்கப்பட்டுள்ளது. இது ‘மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தகதை’ போலாகும் என அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

யாழில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி!!

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்படவுள்ளது.

ஜீ.எம். சரத் ஹேமச்சந்திர என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் அண்மையில் நல்லூர் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலரே இவ்வாறு உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் உப பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இந்தப் பதவி உயர்வினை வழங்கியுள்ளார்.

உயிரிழந்த சரத் ஹேமச்சந்திரவின் மனைவி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பொலிஸ் சேவையிலிருந்து விலகிக் கொண்டிருந்தார்.

அவருக்கு பதவி உயர்வுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சரத் ஹேமச்சந்திரவுக்கு கௌரவம் அளிக்கும் நோக்கில் இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் செய்த மனதை நெகிழவைக்கும் கைமாறு!!

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினருக்கு யாரும் எதிர்பாராத உதவியை நீதிபதி இளஞ்செழியன் செய்துள்ளார்.

தன்னுடன் 15 வருடங்களாக சேவையாற்றி தன்னுயிரை காப்பாற்றிவிட்டு உயிர்நீத்தவரின் இரு பிள்ளைகளையும் நீதிபதி இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இரு பிள்ளைகளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல் பராமரித்து, தான் இறக்கும் வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நீதிபதியின் உயிரை காப்பாற்றுவதில் தாக்குதல் தாரியுடன் சண்டையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையல் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் சிலாபம் பகுதியைச்சேர்ந்த 51 வயதாகிய சரத் ஹேமச்சந்திர என்ற மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்திருந்தார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளுமாக இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.

இவருடைய இறுதிச்சடங்கு சிலாபம் பகுதியில் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

குறித்த இறுதி நிகழ்வுக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், பல தமிழ் சிங்கள நீதிபதிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இரட்டை குழந்தைகளில் ஒருவரின் உயிரைப் பறித்த புட்டிப்பால்!!

மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் புட்டிப்பால் புரைக்கேறியதில் ஆறு மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், இரட்டையர்களில் ஒரு குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு தாயார் புட்டிப்பால் ஊட்டி உறங்கச் செய்துள்ளார். எனினும் சற்று நேரத்தில் குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதேவேளை, புட்டிப்பால் புரைக்கேறியதாலேயே குழந்தை உயிரிழந்துள்ளதாக செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை தொடர்பான விசேட அறிவித்தல்!!

இலங்கையில் இன்று நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு, ஊவா, வட மத்திய மாகாணத்திலும், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள

இத்தாலியில் கடும் வறட்சி: செயற்கை நீரூற்றுக்களை மூடியது வத்திகான்!!

இத்தாலியின் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருவதுடன், வத்திகானில் உள்ள செயற்கை நீரூற்றுக்களுக்கான நீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்களைப் பாதித்துள்ள வறட்சி, இத்தாலிய விவசாயத்தில் 2 பில்லியன் யூரோ மதிப்பிலான இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.

சுமார் 100 செயற்கை நீரூற்றுக்கள் வத்திக்கானில் கட்டப்பட்டுள்ளன. அவைஅனைத்தும் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வசந்தகாலம் கடந்த 60 ஆண்டு காலப்பகுதியில் இத்தாலியில் நிலவும் 3 ஆவது மிகவும் வறட்சியான காலமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோம் நகரம் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவையே பெற்றிருக்கிறது.

இந்த வாரத்தின் இறுதியில் கடும் நீர் கட்டுப்பாட்டு வழிமுறைகளை அறிமுகப்படுத்த நகர ஆட்சியாளர்கள் முடிவு செய்யவுள்ளனர்.

ரோமின் மிகவும் புகழ்பெற்ற செயற்கை நீரூற்றுகள் சில ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ளன.

இரண்டு வடக்கு மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இத்தாலியின் தெற்கு பகுதியில் காட்டுத் தீ பரவி, மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கால்பந்து போட்டி சவாலில் தோல்வி : எலி இறைச்சி சாப்பிட்ட மேயர்!!

கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பாரிஸ் அணி தோல்வி அடைந்ததால் மேயர் ஒருவர் எலி இறைச்சி சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள மோன்ட் டி மர்சான் நகர் மேயராக உள்ளார் சார்லஸ் டயோட். கால்பந்து விளையாட்டு ரசிகரான இவர் போட்டிகள் நடக்கும்போது யார் வெற்றி பெறுவார்கள் என பந்தயத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பாரிஸ் ஜெயின் ஜெர்மன் அணிக்கும் பார்சிலோனா அணிக்கும் இடையே கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் பந்தயம் கட்டிய மேயர், பாரிஸ் அணி தோல்வியடைந்தால் எலி இறைச்சி சாப்பிடுவதாக சவால் விட்டார்.

விளையாட்டுப் போட்டி தொடங்கியதும் முதல் சுற்றில் பாரிஸ் அணி வெற்றி பெற்றது. ஆனால், இரண்டாவது சுற்றில் பாரிஸ் அணி படு தோல்வியை சந்தித்தது.

இதனைத் தொடர்ந்து சவால் விட்டவாறு மேயர் எலி இறைச்சி சாப்பிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

சில நாட்களுக்கு பின்னர், எலி இறைச்சி சாப்பிடுவதாக மேயர் ஒப்புக்கொண்டதையடுத்து, கடந்த சனிக்கிழமை ஹோட்டல் ஒன்றில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேஜையில் எலி இறைச்சி பரிமாறப்பட்டதும், மேயர் எவ்வித தயக்கமும் இன்றி எலி இறைச்சியை முழுவதுமாக சுவைத்து முடித்துள்ளார்.

”கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன். எலி இறைச்சி மிகவும் சுவையாக, முயல் இறைச்சியைப் போல் நன்றாக இருந்தது” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மேயர்.

பிடியெடுக்க முயற்சித்த அசேல குணரத்னவிற்கு ஏற்பட்ட நிலை!!

இலங்கை அணியின் வீரர் அசேல குணரத்னவிற்கு கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக நான்கு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடன் இன்று காலை இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது அவர் உபாதைக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

லஹிரு குமார வீசிய 14 ஆவது ஓவரில் ஷிகன்தர் தவான் அடித்த பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் சென்றபோது அதை பிடியெடுக்க முயற்சித்த குணரத்னவின் இடது கை மணிக்கட்டு பகுதியில் இருக்கும் கட்டை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

திருமணத்திற்குச் சென்ற மூவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாகப் பலி!!

அத்துருவெலை – கிரிஉல பகுதியில் மூவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று இரவு அப் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்ற ஒருவர், அங்கு பலகைகளைக் கொண்டு மூடி வைக்கப்பட்டிந்த கிணற்றில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இவரைக் காப்பாற்றும் முற்சியில் இருவர் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த போதும் அங்கு 38,39 மற்றும் 41 வயதான அவர்கள் மூவரும் பலியாகியுள்ளனர்.

 

வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுப்பு!!

 
வவுனியா மாவட்ட செயலகத்தின் வளாகத்திற்குள் இன்று (26.07.2017) முதல் வெளியாரின் வாகனங்கள் உட்செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு தங்கள் தேவைகள் நிமித்தம் வரும் பொது மக்கள் வாகனங்களை பாதுகாப்பாக மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் நிறுத்திவிட்டு செல்வது வழமை.

அந்தவகையில் நேற்றையதினம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கட்டப்பட்டிருந்த இலங்கை தேசியக்கொடியை நபரொருவர் அகற்றிய சம்பவத்தைத் தொடர்ந்து வெளியாரின் வாகனங்கள் மாவட்ட செயலகத்தின் வனாகத்திற்குள் உட்செல்வது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பொது மகன் ஒருவர்,
மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வாகனத் தரிப்பிடம் ஏதுவும் இல்லாத நிலையில் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு சிரமப்படுகின்றனர்.

மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு பாரிய இடவசதியுடன் மர நிழலும் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி மக்கள் தங்கள் கருமங்களை ஆற்றக்கூடியதாக இருந்தது.

நேற்றைதினம் பட்டபகலில் மாவட்ட செயலகத்தின் முற்றலில் தேசியக்கொடி இறக்கப்பட்டதானது பாதுகாப்பு ஊழியர்களின் கவனயின்மையை காட்டுகிறது. சுமூக நிலையிலிருந்த மாவட்ட செயலகத்தின் நிலைமை மனநோயாளி ஒருவரின் செயற்பாட்டால் பொது மக்களுக்கு இடையூறாக மாறியுள்ள நிலையில் இம் முடிவை அரசாங்க அதிபர் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

வவுனியா தாலிக்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

 
வவுனியா தாலிக்குளம் மக்கள் இன்று (26.07.2017) தமது கிராமத்தில் உள்ள பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று காலை ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

வவுனியா பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள தாலிக்குளம் கிராமத்தில் கடந்த பத்து வருடங்களாக வசித்து வருகின்ற சுமார் முப்பது குடும்பங்களிற்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.

அத்துடன் அங்கு வசிக்கும் உப குடும்பங்கள் பலவற்றிற்கும் இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இதன்காரணமாகவே அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

போரினால் பாதிக்கப்பட்டு எமது உடைமைகள் அனைத்தையும் இழந்து அகதி வாழ்வு வாழ்ந்து இங்கு குடியேறியிருந்த நிலையில் கூட, எமக்கு தற்போது வரை வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையினால் எமது சொந்த நிலத்திலேயே அகதி போன்று வாழ வேண்டிய நிலையே தற்போது உள்ளது.

அத்துடன் சமுர்த்திக் கொடுப்பனவுகள் எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை. எமது கிராமத்திற்கான வீடுகள் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது இருப்பதுடன் குடிநீர் பிரச்சனையையும் எதிர்நோக்கி வருகின்றோம். எமது கிராமத்தை அரச அதிகாரிகள் கைவிட்டு விட்டார்களா…? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

வவுனியா மாவட்ட இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!!

 
வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பதிவுசெய்யப்பட்ட நான்கு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 103 இளைஞர் கழகங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்வர் ஊடாக கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைவாக பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு நிதி ஒதுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக இளைஞர் கழகங்களுடையான கலந்துரையாடல் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் தலைமையில் கடந்த 20.07.2017 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட் , வன்னி மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் முனவ்வர், அமைச்சரின் நகர இணைப்பாளர் பாரி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி சுகானி, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

5 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது மாப்பிள்ளைக்கு சிக்கல்!!

பாகிஸ்தானில் ஐந்து வயது சிறுமியை 22 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் Dakhan பகுதியில் உள்ள Raman Shar கிராமத்தில் 5 வயது சிறுமிக்கும், 22 வயது இளைஞருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் திருமணம் நடைபெறும் இடத்திற்கு தாமதமாக சென்றுள்ளதால், அங்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இருப்பினும் 5 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக மணமகன் Habibullah Shar, திருமணத்தை பதிவு செய்த பதிவாளர் Molvi Kifayatullah Bhutto(40) மற்றும் மணமகனின் தந்தை ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 18 வயது குறைந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் மீறி மணமகன் 5 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளதால், அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூறு மரணத்தின் வலியைச் சந்தித்த 16 வயதுச் சிறுமி!!

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு தொடர்ந்து பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட யாசிதி இளம்பெண் ஒருவர் தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

ஈராக்கின் வடக்கு பகுதியில் குடியிருந்து வந்தவர் Ekhlas. இவருக்கு 14 வயது இருக்கும்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்த பகுதியில் முதன்முறையாக நுழைந்துள்ளனர்.

அங்குள்ள பெரும்பாலான ஆண்களை கொன்று குவித்த ஐ.எஸ் அப்பகுதியில் உள்ள சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை ஆயிரக்கணக்கானோரை சிறைப்பிடித்தனர். அந்த போராட்டத்தில் மாணவி Ekhlas ன் தந்தையை கொலை செய்துள்ளனர்.

தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்ட சிறுமிகள் உள்ளிட்ட இளம்பெண்களை சந்தை ஒன்றில் ஏலம் விட்டதாக கூறும் அவர், ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவரால் விலைக்கு வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த நபருடன் ஆறு மாத காலம் பாலியல் அடிமையாக தாம் துன்புறுத்தப்பட்டதாக கூறும் Ekhlas, தினமும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அந்த நபர் தம்மை உள்ளாக்கியதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த கொடுமையில் இருந்து தப்பிக்கும் பொருட்டு பல முறை தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் அதில் இருந்து காப்பற்றப்பட்டதாகவும் அவர் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

150 சிறுமிகள் உள்ளிட்ட இளம்பெண்களின் மத்தியில் இருந்து தம்மை விலைக்கு வாங்கிய அந்த நபர் நீளமான முடி வளர்த்திய கோர மிருகம் என கூறும் Ekhlas, மிகவும் மோசமானவர் எனவும் தெரிவித்துள்ளார்.

பலமுறை தப்பிக்கும் வாய்ப்புக்காக காத்திருந்த Ekhlas, அந்த நபர் சண்டைக்கு செல்லும் வரை காத்திருந்ததாக கூறும் அவர், அந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கிருந்து தப்பியுள்ளார்.

தற்போது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவரின் உதவியால் ஜேர்மனியில் தஞ்சமடைந்துள்ள Ekhlas உளவியல் நிபுணர் ஒருவரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐ.எஸ் பயங்கரவாதியுடன் கழிந்த அந்த ஆறு மாத காலமும் தமக்கு 100 மரணத்திற்கு சமம் என கூறும் Ekhlas மனதளவில் மிக ஆழமாக காயம் பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து 10 பேர் பரிதாபமாக பலி!!

 
இந்தோனேசியாவின் போர்னியோ தீவில் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர்னியோ தீவில் ஏற்பட்ட இந்த படகு விபத்தில் ஏராளமானோர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான படகில் எத்தனைபேர் பயணம் செய்துள்ளனர் என்பது இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகாததால் மாயமானவர்களின் பட்டியல் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குறித்த படகில் 40 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் காணவில்லை என உறவினர்கள் தரும் புகாரின் அடிப்படையில் முழுமையான எண்ணிக்கையை அதிகாரிகள் தரப்பில் வெளிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே இதுபோன்று படகு விபத்து ஏற்படுவது வாடிக்கையாகவே நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அதிக எண்ணிக்கையிலான பயணிகளை படகில் ஏற்றிச் செல்வதே என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் சிங்கப்பூரின் தென் பகுதியில் அமைந்துள்ள பாடாம் தீவில் பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளான படகில் பயணம் மேற்கொண்ட 101 பேரில் பாதிக்கும் மேலான மக்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதேபோன்று மலேசியாவில் இருந்து பாடாம் தீவுக்கு பயணமான படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். இதில் 34 பேர் மீட்கப்பட்டனர்.