பயணிகள் வாகனம் மீது பாய்ந்த லொறி : 78 பேர் பலி, 72 பேர் படுகாயம்!!

மத்திய ஆபிரிக்க குடியரசு நாடு ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 78 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ஆபிரிக்க குடியரசு நாட்டில் உள்ள பம்பரி மற்றும் இப்பி பகுதிகளுக்கு இடையே நிகழ்ந்த சாலை விபத்தில் 78 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த 60 பேரின் உடல்கள் பம்பரியில் உள்ள மருத்துவமனையில் உள்ள பிணவறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. 18 பேரின் உடல்களை, உறவினர்கள் வந்து பெற்று சென்றதாகவும் மருத்துவமனை நிர்வாகி மைக்கேல் சாகான்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாலோம் பகுதியில் உள்ள சந்தையில் பொருள் வாங்கச் சென்ற மக்கள் மீது 10 சக்கரங்களை கொண்ட சரக்கு ஏற்றிக் கொண்டு சென்ற லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது.

லொறியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என தெரிய வந்துள்ளது. படுகாயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மக்கள் நோயினால் மரணிக்க நேரிடும் : பிரதமர் ரணில்!!

குப்பை போடுவதை தடை செய்வதனால் மக்கள் நோயினால் மரணிக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நகரக் கழிவுகளை அகற்றுவதற்கு பொருத்தமான இடமில்லை. இதனால் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்காக நிலையான ஓர் இடத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

குறித்த பகுதிகளுக்கு பொருத்தமான இடங்களில் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கழிவகற்றல் மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்காக இயந்திர சாதனங்கள் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கடன் மலையைப் போன்றே குப்பை மலையொன்றையும் மீதம் வைத்து சென்றுள்ளனர். ராஜபக்சக்களைப் போன்று பிரச்சினைக்கு பயந்து ஓடப் போவதில்லை.

நீதிமன்ற உத்தரவுகளினால் கொழும்பின் கழிவுகள் அதிகரிக்கக் கூடும். இவை அத்தியாவசிய தேவைகளாகும். இவற்றுக்கு எவ்வாறு உத்தரவு பிறப்பிப்பது?

காரணிகளை கண்டறிந்து அனைத்து தரப்பினையும் அழைத்து விளக்கம் கோரி நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிப்பது பொருத்தமாக அமையும்.

கழிவற்றல் மிகவும் முக்கியமான ஓர் பிரச்சினையாகும். கழிவுகளை அகற்றாவிட்டால் மக்கள் நோயினால் மரணிக்கக் கூடும் என பிரதமர் தெரிவித்துள்ளார்

நடுரோட்டில் படுத்துக்கிடந்த 7 அடி நீள மலைப்பாம்பு : கையில் பிடித்த வீரப்பெண்!!

 
பிரேசில் நாட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 7 அடி மலைப்பாம்பை பெண் ஒருவர் அசால்டாக கையில் தூக்கி சென்று வனப்பகுதியில் விட்டுள்ளது அங்கிருந்த ஆண்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவின் வனப்பகுதியை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் திடீரென போக்குவரத்து ஸ்தம்பித்தது.

காரணம் தெரியாமல் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருந்த போது, 7 அடி மலைப்பாம்பு நெடுஞ்சாலையில் படுத்திருந்துள்ளது.

இதனைக்கண்டு வாகன ஓட்டிகள் அருகில் செல்ல அச்சப்பட்டுக்கொண்டு ஒதுங்கி நின்று அதனை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது, பெண் ஒருவர் மலைப்பாம்பை அசால்டாக கையில் எடுத்துக்கொண்டு அனைவரையும் பார்த்து சிரித்தபடியே அதனை கொண்டு போய் வனப்பகுதி அருகே விட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரத்தக்கண்ணீர் வடிக்கும் 3 வயதுச் சிறுமி : கதறும் பெற்றோர்!!

 
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது சிறுமி ஒருவர் கண்களில் இருந்து ரத்தம் வழியும் அரிதான நோயால் தாக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருவது மருத்துவர்களை திணறடித்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் நகரில் வசித்துவருபவர்கள் முகமது அப்சல் மற்றும் நஜிமா பேகம் தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் அஹானா அப்சல் என்ற குழந்தை உள்ளது.

இவர்தான் தற்போது கண்களில் ரத்தம் வழியும் அரிதான நோயால் பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி அஹானாவுக்கு திடீரென்று மூக்கு வழையாக ரத்தம் கசிந்துள்ளது.

இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிகப்படியான காய்ச்சல் காரணமாக மூக்கு வழையாக ரத்தம் கசிந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சிறுமியின் கண்கள், காது, மூக்கு, வாய் என தினசரி ரத்தம் கசிந்து வருவது அவரது பெற்றோரை அவதிக்கு உள்ளாக்கியுள்ளது மட்டுமின்றி, மருத்துவர்களையும் திணறடித்துள்ளது.

சிறுமியின் இந்த அரிய நிலையின் காரணம் அறிய இதுவரை சில லட்சம் ரூபாய் செலவு செய்தும் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறை ரத்தக்கசிவுக்கு பின்னரும் சிறுமிக்கு போதிய ரத்தத்தை அவருக்கு செயற்கையாக செலுத்தி வருவதாக கூறும் அவரது பெற்றோர், தங்களது உலகமே தற்போது இருள் சூழ்ந்து காணப்படுவதாக வருத்தமுடன் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறப்பு பரிசோதனை செய்வதற்காக ரூ.2 லட்சம் வரை தேவைப்படுவதாக கூறும் முகமது அப்சல், மருத்துவர்கள் உறுதியான ஒரு முடிவை தெரிவித்தால் மட்டுமே மேற்கொண்டு சிகிச்சைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

மட்டுமின்றி போதிய வருவாய் இல்லாத காரணத்தால், தமது மகளின் சிகிச்சை செலவினங்களுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி உதவி கோரி அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற நிலை உலகில் எந்த மூலையில் வசிக்கும் குழந்தைக்கு நேர்ந்திருந்தாலும், அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவரை தாங்களும் தொடர்பு கொள்ள வேண்டும், அதற்கு பொதுமக்கள் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா- சீனா பிரச்சனை : எச்சரிக்கை விடுத்த சீனா!!

இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோகாலம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகள் ஒரு முனையில் சந்திக்கின்றன.

அங்கு சீனாவுக்கும், பூடானுக்கும் இடையே எல்லைத்தகராறு நிலவி வருகிறது. பூடானுக்கு சீனாவுடன் தூதரக உறவு இல்லாததால், இந்தியாவின் ராணுவ பலத்தையே நம்பி இருக்கிறது.

பூடானை ஆக்கிரமிக்கும் வகையில், சீன ராணுவத்தினர் அப்பகுதியில் சாலை அமைத்து வருகிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு, அவர்கள் சிக்கிம் மாநிலத்துக்குள் புகுந்து, இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தனர்.

மேலும், இந்தியப் படைகளை திரும்பிச் செல்லுமாறு மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்களை சமாளிக்க கூடுதலாக இந்திய படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

இதனால், ஒரு மாத காலமாக அங்கு போர் அபாயம் நிலவி வருகிறது. இந்தியா தன்னுடைய படைகளை திரும்ப பெற மாட்டோம் என கூறிவிட்டது. பிரச்சனையை தீர்க்கும் பொறுப்பு இந்தியாவிடம் உள்ளது என சீனா கூறிவருகிறது.

இந்திய ராணுவம் எந்தஒரு நிபந்தனையுமின்றி வெளியேற வேண்டும், இந்தியா – சீனா இடையில் ஒரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை வேண்டும் என்றால் இதுதான் முன்நிபந்தனையாகும் என சீனா கூறிஉள்ளது.

இந்நிலையில் இந்தியாவிற்கு வரும் சீனர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்போவதாக சீன வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்தியாவிற்கு எதிராக தூதரக ரீதியிலான நடவடிக்கையில் இறங்கி உள்ள சீனா இந்நகர்வுக்கு வந்து உள்ளது. சீன வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், சீனாவின் நம்பிக்கையை பெறும் வகையில் இந்தியா படைகளை திரும்ப பெற வேண்டும். சீன பகுதியில் இந்திய ராணுவம் நிலைக்கொண்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் வெளியுறவுத்துறை விவகாரங்கள் துறை அலுவலகம், இந்தியா முழுவதும் சீனர்களுக்கு பயண எச்சரிக்கையை வழங்க பரிசீலனை செய்வதாக கூறிஉள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் நாய்க்கு நடந்த இறுதிக் கிரியைகள்!!

 
களனியில் உயிரிழந்த நாயொன்றுக்கு இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டுள்ளன. மனிதர்கள் உயிரிழக்கும் போது நடைபெறும் இறுதிச் சடங்கு போன்று, இந்த நாய்க்கும் சடங்கு நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை இளம் நாடாளுமன்ற பிரதி பிரதமராக செயற்படும் மலித் சுதுசிங்க என்பவரினால் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளது.

மலித் சுதுசிங்கவினால் வளர்க்கப்பட்ட ஆறு வயது நாய் உயிரிழந்துள்ளது. அந்த நாயின் சிறுநீரகம் பாதிப்படைந்தமையினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மனிதர்களுக்கு இணையாக நாய்க்கும் இறுதி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டுள்ளது.

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக ஏமாற்றும் மோசடிக் கும்பல் : எச்சரிக்கை!!

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக சூட்சுமான முறையில் பண மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவிலுள்ள உணவு விடுதிகளில் அதியுயர் சம்பளத்திற்கு தொழில் வழங்குவதாக குறிப்பிட்டு, கும்பல் ஒன்றினால் மோசடி செய்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பலர் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர்.

18 பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு கனடா செல்கின்றது. அரசாங்கத்தினால் சிலர் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என போலி பிரச்சாரம் செய்யப்படுகிறது.

விசாவை கையில் வழங்கும் வரை எந்தவொரு பணமும் கொடுக்கத் தேவையில்லை என அந்த கும்பலால், கனடா செல்ல விரும்புவோரிடம் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு செயற்படும் கும்பலில் தன்னை ஒரு அதிகாரி போன்று காட்டிக் கொள்வதற்கு நபர் ஒருவர் அடையாள அட்டையும் காண்பித்து மற்றவர்களை நம்ப வைக்கின்றனர்.

அதன் பின்னர் இந்த கும்பல் தொழிலுக்கு செல்ல எதிர்பார்க்கும் நபர்களின் கடவுச்சீட்டுகளை பெற்று கொள்கின்றார்கள்.

கடவுச்சீட்டு பெற்று கொள்பவர் இந்த நபர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தங்களுக்கான விசா வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்ள பணம் செலுத்துமாறும் கூறுகின்றார்கள்.

அவ்வாறு கடவுச்சீட்டை வழங்கிய அனைவரும் ஒரு லட்சம் ரூபாய் பணம் வைப்பு செய்து விட்டு விசா பெற்றுக் கொள்ளச் சென்றால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விடும் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

நுவரெலியாவில் இப்படியும் ஓர் அதிசயம்!!

 
அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை பழ மரம் அதிக குளிரான நுவரெலியாவில் வளர்ந்துள்ளது. நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் இந்த மரம் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மரத்தில் தற்போது 5 கொப்பு பேரீச்சை பழங்கள் வளர்ந்துள்ளன.

அவற்றில் 2 கொப்புகள் நேற்றைய தினம் பொலிஸ் அதிகாரிகளினால் வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மூளையைப் பாதிக்கும் ஸ்மார்ட்போன் பாவனை!!

ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்து உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அட்ரியன் வார்ட் என்பவர் தலைமையிலான குழு, ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்தது.

சுமார் 800 ஸ்மார்ட் போன் பயனாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

அதில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தாலும் மூளையின் செயல் திறன் குறையும் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

ரஜினியின் மகளுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை நீதிமன்றம்!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அஸ்வின் தம்பதியருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யா. இவர், கோச்சடையான், கோவா ஆகிய படங்களை தயாரித்துள்ளார். சவுந்தர்யாவுக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணம் நடந்த சில ஆண்டுகளிலேயே சவுந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் இனி சேர்ந்து வாழ முடியாது என்று முடிவு செய்து விவாகரத்து பெற முடிவு செய்தனர்.

இதற்காக, அவர்கள் சென்னை குடும்ப நல நீதிமன்றில்; பரஸ்பரம் விவாகரத்து கேட்டு கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி மரியா முன்பு கடந்த ஜூன் 23ம் திகதி விசாரணைக்கு வந்தது.

அப்போது சவுந்தர்யாவும், அஸ்வினும் நீதிமன்றில்; ஆஜரானார்கள். அவர்களிடம் பரஸ்பரம் விவாகரத்து பெறப் போகிறீர்களா? இருவரும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். ஆனால், அவர்கள் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக கூறினர்.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை ஜூலை 4 ஆம் திகதிக்கு தள்ளிவைத்தார். அதன்படி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. சவுந்தர்யா – அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கப்படுவதாகவும், அவர்களின் திருமணம் ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார். இந்து திருமண சட்டத்தின்படி 6 மாத அவகாசத்திற்குப் பின் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை : காணொளி இணைப்பு!!

 
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு மூன்று பெண்கள் ஒன்றிணைந்து தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரின் கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு 3 பெண்கள் இணைந்து பொல்லுகள் மற்றும் தடிகளால் தாக்குவது போன்ற காட்சி குறித்த காணொளியில் பதியப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரிய கயிற்றின் மூலம் கட்டப்பட்ட நபரை மைதானமொன்றில் அங்குமிங்குமாக இழுத்து குறித்த 3 பெண்களும் தாக்குதல் மேற்கொள்ள அந்தக் காட்சியை ஏனைய பெண்களும் சிறுவர்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இச் சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதுடன் இந்தியாவில் பாலியல் துஷ்பிரயோக செயல்கள் மலிந்து காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான தண்டனை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குப்பைகளை கொட்டிய 112 பேர் கைது!!

அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் குப்பைகளை கொட்டிய 112 பேர் இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 02ம் மற்றும் 03ம் திகதிகளில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

அதன்படி கொழும்பு மாவட்டத்தில் 47 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 63 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக உரிய பொலிஸ் நிலையங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 08ம் திகதி முதல்!!

இம்முறை கபொத உயர்தரப் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ம் திகதி முதல் செப்டம்பர் 02ம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

நாடு பூராகவும் 2230 நிலையங்களில் பரீட்சைகள் நடைபெற உள்ளதாக இன்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சைக்காக 315227 பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளனர்.

இதேவேளை தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை நாடு பூராகவுமுள்ள 3014 பரீட்சை நிலையங்களில் இடம்பெற உள்ளதுடன், 356728 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்ற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!!

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் – வெல்லாவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை இரவு (05.06) புளியடிபாலம் அருகே, அறுவடை இயந்திரத்தை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த மண்டூரைச் சேர்ந்த தங்கதுரை வயது (38) என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார் உழவு இயந்திரத்தின் சாரதியை கைதுசெய்துள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணையை வெல்லாவெளிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் அன்பளிப்பு!!

 
இந்த வருடம் வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடணப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து திறமையாகக் கல்வி கற்கும் மாணவர்களின் வறுமையைத்தணிப்பதற்கு வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் பல்வேறுபட்ட செயல்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் போரினால் பாதிக்கப்பட்டு தமது தாய் தந்தையரை இழந்துள்ள மாணவ மாணவிகளுக்கான பாதணிகள் இன்று மாவட்ட சமூக சேவை அலுவலகமூடாக லண்டன் ‘சரஸ்வதி’ நம்பிக்கை நிதியம் வழங்கி வைத்தது.

பாடசாலை அதிபர் இ.தேவராஜா தலைமையில் இன்று புதன்கிழமை (05.06.2017) காலை பாடசாலை முன்றலில் நடைபெற்ற நிகழ்வில் 23 மாணவர்களுக்கு பாதணிகள் காலுறைகள் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், பாடசாலை உப அதிபர் த.ஸ்ரீகாந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வஸந்தன் சமூக ஆர்வலர் திரு.புருசோத்தமன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

வவுனியா ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவி!!

 
வவுனியா ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் இன்று(05.07.2017) மாலை 3.30 மணியளவில் பல்கலைக்கல்வியை மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் க.திலீபன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹண புஸ்பகுமாரவும், சிறப்பு விருந்தினராக உதவி ஆணையாளர் ஆர்.விஜயகுமார் (கமநல அபிவிருத்தி திணைக்களம்) கலந்து கொண்டு ஓமந்தை கமநல அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக பல்கலை செல்லும் வசதியற்ற ஓமந்தை பகுதி விவசாயிகளின் பிள்ளைகள் 4 பேருக்கு முதற்கட்டமாக மாதாந்த உதவி புலமைப்பரிசில் வழங்கினர்.

ஓமந்தை கமநல பிரதேச விவசாயிகளின் பிள்ளைகளின் கல்வியினை அபிவிருத்தி செய்வதே கமநல கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் இச் செயற்றிட்டத்தினூடாக எதிர்காலத்தில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகை வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனுடன் இணைந்ததாக வசதியற்ற 7 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இன்றைய நிகழ்வில் நிதியத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர், கமநல சேவைகள் நிலையத்தின் உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.