இரண்டு குழந்தைகளை சூடாக இருக்கும் காரில் தாய் விட்டு சென்ற நிலையில், இருவரும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் Cynthia Marie Randolph (24) இவருக்கு Juliet Ramirez (2) என்ற மகளும், பிறந்து 16 மாதங்களே ஆன Cavanaugh Ramirez என்ற மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று, Cynthiaவின் இரு குழந்தைகளும் காரில் உட்கார்ந்து விளையாடியுள்ளனர். இதை பார்த்து கோபமடைந்த Cynthia, அவர்களுக்கு தண்டனை தர எண்ணி இருவரையும் தன் காரின் உள்ளே தனியாக உட்கார வைத்து விட்டு சென்றுவிட்டார்.
பிறகு மூன்று மணி நேரம் கழித்து Cynthia, கார் அருகில் சென்று பார்த்த போது உடலில் காயங்களுடன் இருவரும் உயிரிழந்து சடலமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து பொலிசார் Cynthiaவை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தன் குழந்தைகள் தானாக காரை லாக் செய்து கொண்டதாக முதலில் கூறியுள்ளார்.
அதன்பின்னர், குழந்தைகளுக்கு தண்டனை தரும் விதமாக காரில் தனியாக விட்டு சென்றதை ஒப்பு கொண்டுள்ளார். மேலும், தனது மகள் Juliet காரிலிருந்து வெளியில் வந்து விடுவார் என தான் நினைத்ததாகவும் பொலிசாரிடம் Cynthia கூறியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள முக்கிய வீதிகளை அங்கிருக்கும் தமிழக இளைஞர்கள் சுத்தப்படுத்தியுள்ளனர்.
பாரிசில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் தமிழக இளைஞர்கள் பாரீஸ் மாநகர சபையுடன் இணைந்து அங்குள்ள வீதிகளை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றனர்.
இதுகுறித்து அங்குள்ள தமிழ் இளைஞர் ஜே கூறுகையில், பாரீஸ் நகரின் முக்கிய வீதிகளை சுத்தப்படுத்தவும், மக்களுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பிரான்ஸ் கமலஹாசன் நற்பணி மன்றம் இயக்கத்தின் தலைவர் பிரான்சுவா கஸ்தோன் ஏற்பாடு செய்திருந்தார்.
அதன்படி பாரீஸ் மாநகர சபையுடன் இணைந்து, குப்பைகள் அதிகமாக இருக்கும் வீதிகளில் குப்பைகளை அகற்றி அங்குள்ள மக்களிடம் இனி இதுபோல் குப்பைகளை வீசாதீர்கள் என்று கூறி, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம் என்று கூறினார்.
ஜல்லிக்கட்டு மற்றும் விவசாயிகள் பிரச்னைகள் போதெல்லாம் அங்குள்ள தமிழ் இளைஞர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்ததுடன் பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகத்தையும் முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகளால் சுடப்பட்ட போது மரணம் கூட தனக்கு ஆதரவாக இருந்ததாக மலாலா யூசப்சாய் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய், பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.
பின்னர், பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிர் பிழைத்த அவர், அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார்.
இந்நிலையில் பேஸ்புக் தலைமை இயக்குனர் Sheryl Sandberg, மலாலா யூசப்சாயை நேர்காணல் செய்தார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அப்போது மலாலா கூறுகையில், எனது குரலை ஒடுக்க அவர்கள் நினைத்தனர். ஆனால், நான் உயிர்பிழைத்து விட்டேன். அந்த தருணத்திலேயே மரணம் கூட எனக்கு ஆதரவாகவே இருப்பதை நான் உணர்ந்தேன் என்று நெகிழ்ந்திருக்கிறார்.
பெண் கல்விக்கான அவரது பங்களிப்பைக் கௌரவிக்கும்பொருட்டு நோபல் பரிசு உள்ளிட்ட உலகின் பல்வேறு அங்கீகாரங்கள் மலாலாவுக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மகளை தந்தையே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மொரடாபாத்தைச் சேர்ந்தவர் முஸ்ரப் ராஸா கான். இவரது மகள் 22 வயதான குல்பாஷா பீ. குல்பாஷா பீ, அதே பகுதியைச் சேர்ந்த சஜீத் அலி என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார் குல்பாஷா பீ. அவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.
திருமணத்துக்கு பிறகு தனது தந்தை வீட்டுக்கு குல்பாஷா பீ செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அவர் வீட்டுக்கு ராஸா கான் சென்றுள்ளார். தமது தந்தை திடீரென்று வந்ததால் பதற்றமடைந்து உட்கார்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்த குல்பாஷா பீயிடம் இருந்து அவருடன் வந்திருந்த உறவினர்கள் குழந்தையை பிரித்துள்ளனர்.
பின்னர் வலுக்கட்டாயமாக கட்டிலோடு சேர்த்து குல்பாஷாவை கட்டியுள்ளனர். மேலும் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றியுள்ளனர். தன்னை விட்டு விடும்படி கெஞ்சிய குல்பாஷாவை அவர்கள் இரக்கமின்றி தீயை வைத்து கொளுத்திவிட்டு ஓடிவிட்டனர். கதறிய குல்பாஷாவின் சத்தம் சிறிது நேரத்தில் அடங்கிவிட்டது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் எரிந்து கரி கட்டையானார் குல்பாஷா பீ. இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 2.3 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து ஜுன் மாதம் இறுதி வரையிலான காலப்பகுதியில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை வரை அமெரிக்க டொலரின் பெறுமதி நூற்றுக்கு 154.97 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கடந்த வருடம் இலங்கை ரூபாயை, அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 3.8 வீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த மாதங்களில் ஏற்றுமதி வீதங்கள் அதிகரித்த போதிலும், இறக்குமதி செலவுகளில் அதிகரிப்பான நிலையே காணப்படுகிறது.
இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு நாணய மாற்று வீதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொட்டாவ மத்தேகொட வீதியில் கோடீஸ்வர வர்த்தகர் குடும்பத்தின் மூத்த மகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹக்மன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹோமாகம பதில் நீதவான் பிரியங்கா மந்துமஹேவா பட்டபெதிகே முன்னால் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் கொலை செய்வதற்கு முதல் நாளான கடந்த 21ஆம் திகதி வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து மூன்றாம் மாடி பால்கனியில் விடியும் வரை ஒழிந்திருந்துள்ளார். பின்னர் தரிந்தியின் தாய் மற்றும் தந்தை கொட்டாவ ஹொரனை வீதியில் அமைந்துள்ள அவர்களின் கடைக்கு செல்லும் வரை காத்திருந்திருந்து இந்த கொலை செய்துள்ளார் என விசாரணகள் மூலம் தெரியவந்துள்ளது.
கொலையாளி தொடர்பில் பல்வேறு சாட்சிகள் CCTV காணொளியின் ஊடாக வெளியாகியுள்ள நிலையில், குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து, சந்தேக நபர் சட்டதரணிகள் ஊடாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு குறித்த கொலை தொடர்பில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
“எனக்கும் தரணிக்கும் இடையில் இரண்டு வருட காதல் தொடர்பு காணப்பட்டது. இருவரின் சம்மதத்திற்கு மத்தியில் சில காலங்களுக்கு முன்னர் இந்த தொடர்பு நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் தான் மாத்தறை ஹக்மன பிரதேசத்தை சேர்ந்த வேறு பெண்ணை காதலித்தேன். எனினும் அந்த பெண்ணுக்கு தரணி தொடர்ந்து தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக தனது இரண்டாவது காதல் தொடர்பும் முறிந்து விட்டது. அந்த கோபத்தினால் நான் அவரை கொலை செய்து விட்டேன்”.. என அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக 29 வயதான தரிந்தி ஆலோக்கா படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் உடலில் 20 கத்திக் குத்துக்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதிர்காமம் புண்ணிய பூமியில் யாசகம் செய்த 48 சிறுவர் சிறுமியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று நாள் தொடர் விடுமுறை என்ற காரணத்தினால் இவ்வாறு சிறுவர் சிறுமியர் யாசகத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
யாசகத்தில் ஈடுபட்டிருந்த சிறுவர் சிறுமியரை ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
பெற்றோருடன் இணைந்து சிலர் யாசகத்தில் ஈடுபட்டிருந்தனர் எனவும் ஐந்து பொலிஸ் குழுக்களின் உதவியுடன் சிறுவர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் சிறுவர் சிறுமியரை கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் யாசகத்தில் ஈடுபட்டு வந்தனர் எனவும், அதிகாரிகள் சுற்றி வளைப்பு மேற்கொள்வதனை அறிந்து கொண்ட சிறுவர் சிறுமியர் தப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் கடற்படுகையில் 60 வருடங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் உள்ளமை கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ஐந்து பில்லியன் கன அடி கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஒன்பது டிரில்லியன் கன அடி உள்ளதாக அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது கணக்கு குழு அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் எண்ணெய் ஆய்வு நடவடிக்கையின் தற்போதைய நிலையை தெளிவுபடுத்தும் அறிக்கையின் ஊடாக குறித்த எண்ணெய் மற்றும் எரிவாயு சுமார் 60 வருட காலத்திற்கு இந்த நாட்டு பயன்பாட்டுக்கு போதுமானதென தெரியவந்துள்ளது.
இந்த எண்ணெய் கிணறு அகழ்விலிருந்து எண்ணெய் தயாரிப்பு வரையிலான நடவடிக்கைகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான செலவை ஏற்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் கடற்படுகையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளமையினால், பொருத்தமான ஆய்வாளர் ஒருவரை இணைத்துக் கொண்டு அந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் கடற்படுகையில் இனங்காணப்பட்டுள்ள எண்ணெய் வளங்களை தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.
இதற்காக தமது நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்தப் பகுதியில் செயற்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாக சம்பியன் கிண்ணத்தினை வென்றது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் பாகிஸ்தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பக்ஹர் சமான் 3 ஓட்டங்களை பெற்று இருந்த நிலையில் விக்கட்காப்பாளர் டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால் பும்ரா வீசிய அந்த பந்து, நோ-போலாக வீசியது தெரிய வந்ததால் மறுவாழ்வு பெற்ற பக்ஹர் சமான் அதன் பிறகு தனது கன்னிச்சதம் அடித்து (114 ஓட்டங்கள்) பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இந்த நிகழ்வு நடைபெற்று ஒரு வாரம் கூட கடக்காத நிலையில் பும்ரா வீசிய நோ போலின் படத்தை இந்தியா – ஜெய்பூரில் உள்ள போக்குவரத்து பொலிஸார் வித்தியாசமாக போக்குவரத்து விதிமுறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயன்படுத்தி இருக்கிறர்கள்.
அதாவது இரண்டு கார்கள் ஒரு பக்கத்தில் சாலையில், சிக்னல் எல்லைக்கோட்டுக்கு பின்னால் நிற்கிறது. இன்னொரு பகுதியில் பும்ரா நோ-போலாக வீசும் காட்சி இடம் பெற்று இருக்கிறது. அதற்கு கீழ் வாகன சாரதிகளை எச்சரிக்கும் வகையில் ”வீதி விதிக்குரிய எல்லையை கடக்காதீர். மீறினால் அதிக விலையை கொடுக்க வேண்டியது வரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படத்தால் கோபமடைந்த பும்ரா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெல்டன் ஜெய்ப்பூர் போக்குவரத்து பொலிஸ் நாட்டுக்காக நாம் செய்யும் சாதனைக்கு கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும், கவலைப்படாதீங்க ஜெய்ப்பூர் பொலிஸ் நீங்க தப்பு செஞ்சுட்டீங்கன்னு சொல்ல மாட்டேன். தவறு செய்வது மனித இயல்பு என்றும் நக்கலடித்துள்ளார்.
பும்ராவின் டுவிட்டுக்கு பதிலளித்துள்ள ஜெய்ப்பூர் பொலிஸ் இதற்காக மன்னிப்புகேட்டுள்ளது. அதேசமயம், வேண்டும் என்றே இதைச் செய்யவில்லை என்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வுக்காகவே இதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த புகைப்படம் அங்கு பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் தங்கல். இந்திய மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட தங்கல் இந்தியாவில் மொத்தமாக 512 கோடியை வசூல் செய்தது. இந்தியாவில் கிடைத்த வரவேற்பை அடுத்து, கடந்த மாதம் டப் செய்யப்பட்டு சீனா மற்றும் தைவானில் ரிலீஸானது.
சீன மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட இப்படம், சீனாவில் மட்டும் சுமார் 1200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. மொத்தமாக உலகம் முழுவதும் 1993 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட அனைத்து இந்திய படங்களின் சாதனைகளையும் தங்கல் முறியடித்துள்ளது. சீனாவில் வெளியான ஹாலிவுட் அல்லாத படங்களில் தங்கல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
தங்கல் படத்திற்கு சீனாவில் கிடைத்த வரவேற்பை அடுத்து, ஹாங் காங் நாட்டிலும் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற ஓகஸ்ட் 31ம் திகதி படம் ஹாங் காங்கில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
என் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஊழல் செய்ததாகக் கூறப்படும் தொகையின் இரண்டு மடங்கு பணத் தொகையை நான் தருவேன், என வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (25.06) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் அமைச்சர்கள் தொடர்பாக நடைபெற்ற பிரச்சினை பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். என்னை ஒரு மாதகால விடுப்பில் செல்லுமாறு எனக்கு பணிக்கப்பட்டது.
ஆனால் நான் அவ்வாறு செல்லவில்லை. நான் ஊழல் செய்யவில்லை. அதனால் நான் விடுப்பில் போக தயாரக இல்லை.
நீதியான முறையில் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளபடக் கூடிய விசாரணைக் குழு அமையுமாயின் அந்த விசாரணைக்கு நான் தயார். அதற்கு ஒரு மாதகாலம் அல்ல, தேவை ஏற்படின் எனது அமைச்சு பதவியில் இருந்து விலகி இந்த விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பேன்.
என்மீது ஊழல் குற்றச்சாட்டுத் தொடுத்த சாட்சி வரவில்லை என்றும் என்னை ஒன்றும் கேட்கவில்லை என்று பலர் கூறுகின்றார்கள். அந்தச் சாட்சி அந்த நாளில் ஜெனிவாவில் உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்தச் சாட்சி அந்த நாளில் யாழ்ப்பாணத்தில்தான் இருந்துள்ளார் என்பதனை நான் நன்கு அறிவேன்.
என்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றசாட்டு முறையான விசாரணைக் குழு மூலமாக நிருபிக்கப்பட்டால் அந்தத் தொகையின் இரண்டு மடங்கை நான் தருவேன். இன்னமும் நான் பயன்படுத்தும் வாகனத்துக்கு எரிபொருள் செலவு போதாமல் உள்ளது. ஒரு மாதத்துக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
இது எனக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் செலவை விட அதிகமாகவே எனக்குச் செலவு ஏற்படுகின்றது. இது தொடர்பாக நான் முதலமைச்சரிடம் தெரிவிப்பேன்.
நான் தமிழ் அரசுக்கட்சியுடன் இணைந்து விட்டேன், கட்சி மாறிவிட்டேன் என்று கூறுகின்றார்கள். அதில் எந்த உன்மையும் இல்லை. நான் இப்போதும் ரெலோ கட்சியில் தான் உள்ளேன். 2013 ஆம் ஆண்டு நான் கட்சி மூலமாகத்தான் அமைச்சராக பதவிஏற்றேன். இன்றும் அதே கட்சியில் தான் உள்ளேன். எனது கட்சி ஜனநாய முறையை விட்டு வழி தவறி நடந்தால் நான் கட்சி மாறவேண்டிய நிலை ஏற்படும்.
அமைச்சர்கள் மீது யாரும் எந்த குற்றச்சாட்டும் வைப்பார்கள். அதனை உரிய விசாரணைக்குழு மூலமாகப் பரிசீலினை செய்த பின்னர் அவர்கள் பற்றிய தகவல்களை விசாரணைக்கு உட்படுத்துங்கள். இல்லை என்றால் மக்களுக்காக செயற்படும் மாகாண சபை என்ற பெயர் இல்லாமல் போய் வடக்கு மாகாண சபை விசாரணை சபையாக மாறும்.
அவைத் தலைவர் என்பவர் மரியாதைக்கு உரியவர். அதனால்தான் அவரின் ஆசனம் அண்மையில் புதிதாக வடிவமைக்கப்பட்டது. அது எமக்கு ராசி இல்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது. அந்தக் கதிரை வந்த பிறகு வடக்கு மாகாண சபையில் அமைதியின்மை காணப்படுகின்றது. ஆனால் கடந்த வடக்கு மாகாணசபை அமர்வு மிக அமைதியாக நடைபெற்றது மிகவும் வரவேற்கத்தக்கது´ என்றார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளியில் கடத்தப்பட்டு விபத்தில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழந்துளள்துடன் இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் நிரோஷன் பெர்ணாண்டோ தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி, மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவமொன்றில் மட்டக்களப்பு ஏரிக்கரை வீதியைச் சேர்ந்த 19 வயதான யுவதி தலையில் படுகாயமேற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை இரவு திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருக்கையில் இரவு 10 மணியளவில் தேநீர் அருந்துவதற்காக சந்திவெளியில் கார் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்தக் காரில் மேற்படி அசம்பாவிதத்தில் பலியான யுவதி, அவரின் தாய், பெரியப்பா, கார்ச் சாரதி ஆகியோர் இருந்துள்ளனர்.
அந்நேரம் அங்கு திடீரென மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய இரண்டு இளைஞர்கள் யுவதியைப் பிடித்து மோட்டார் சைக்கிள் ஆசனத்தின் நடுவில் ஏற்றிக் கொண்டு அதிவேகமாகப் பயணித்துள்ளனர்.
அவ்வேளையில் யுவதியின் தாய் மற்றும் பெரிய தந்தை ஆகியோர் தாம் வந்த காரில், யுவதியைக் கடத்திக் கொண்டு அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்துள்ளனர்.இவ்வேளையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதால் விபத்துச் சம்பவித்துள்ளது.
அச்சம்பவத்தில் கடத்தப்பட்ட யுவதியும், கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் உடனடியாக அருகிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த யுவதி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மரணமாகியுள்ளார்.
யுவதியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் காயங்களுக்குள்ளான இரு இளைஞர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை யுவதியையும் தாங்கள் இருவரையும் காரில் வந்தவர்கள் காரால் மோதியும் அதன் பின்னர் கடுமையாகத் தாக்கியதாகவும் இதன் காரணமாகவும் தாங்கள் படுகாயங்களுக்குள்ளானதாக மோட்டார் சைக்களில் பயணித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வாக்குமூலத்தின்படி காரில் வந்த யுவதியின் உறவினர் மற்றும் கார்ச் சாரதின் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வினோபா இந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, சந்தேக நபர்களை ஜுலை மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதேவேளை யுவதியின் உடற் கூற்றுப் பரிசோதனை நேற்று குருணாகல் பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி இலங்கரத்னவினால் குருணாகலில் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே குறித்த யுவதிக்கும் சம்பந்தப்பட்ட ஒரு இளைஞனுக்கும் ஏற்கெனவே பல வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட காதல் தொடர்பு குறித்த மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து வழக்கு தொடரப்பட்டு சமரசமாகத் தீர்த்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த யுவதியை உயர் கல்விக்காக அவரது தாய் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்கின்ற விவரமும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
குறித்த யுவதி சமீபமான சில நாட்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியிருந்த நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த யுவதி இந்தியாவிலிருக்கும் போதும் தொடர்ந்து தனது காதலனுடன் தொடர்பிலிருந்து வந்துள்ளார் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸின் வழிநடத்தலில் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் நிரோஷன் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஈ.எல். பதூர்தீன் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அதிகாலை வரகாபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொள்ளையர்களை நோக்கி பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
நகரில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர், தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு வந்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொள்ளையர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வரகாபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா செட்டிகுளம் பகுதியில் 17 வயது சிறுவனுடன் தங்கியிருந்த 15 வயது சிறுமியையும் குறித்த சிறுவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா காரியாலயத்தின் தமிழ் மொழி சேவைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இந்த நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா செட்டிகுளம் பகுதியில் அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவரை 17 வயதுடைய மதவாச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடன் வைத்திருந்துள்ளார்.
இதை அடுத்து வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அலுவலகத்தின் தமிழ் மொழி பொலிஸ் சேவைப்பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் செட்டிகுளம் பொலிஸாருடன் இணைந்து நேற்று மாலை குறித்த இருவரையும் செய்துள்ளனர்.
குறித்த இருவர் தொடர்பிலும் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இததையடுத்து எப்பாவல பொலிஸ் நிலையத்தில் இரண்டு தினங்களாக தமது மகளைக் காணவில்லை என்ற முறைப்பாட்டை குறித்த சிறுமியின் உறவினர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்தே செட்டிகுளம் பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரையும் எப்பாவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்டி கொத்மலைப்பிரதேசத்தில் வாழ்ந்தபோது இடம்பெற்ற மண்சரிவால் தமது உறவுகளை இழந்து பின்னர் வவுனியா கற்குளம் பகுதியில் வவுனியா பிரதேச செயலகம் மூலம் வழங்கிய காணியில் குடியேறி வாழும் வறிய குடும்பத்திற்கு இன்று(25.06) மாவட்ட சமூக சேவை அலுவலகம் மூலம் வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.
லண்டன் V3 என்ற அமைப்பின் ஊடாக இன்று தனது 83வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற இலங்கை வங்கி வட பிராந்திய முகாமையாளர் எஸ்.பொன்னுத்துரை அவர்களின் மகன் லண்டன் வாழ் சமூக ஆர்வலர் பொ.மோகனரூபன் கற்குளத்தில் இருந்து தினமும் நீண்ட தூரம் சென்று கூலித்தொழில் செய்து வரும் குப்புசாமி பாலசுப்ரமணியம் என்பவருக்கு அவரது வேலைகளை இலகுவாக மேற்கொள்ள துவிச்சக்கர வண்டி வழங்கி உதவியுள்ளனர்
.
கண்பார்வை குறைபாடான மனைவி , மூன்று கல்வி கற்கும் ஆண் பிள்ளைகளுடன் ஒரு காட்டுப்பிரதேசத்தில் வசித்து வரும் இவரது குடும்பம் அன்றாடம் உழைத்தே சீவித்து வருகின்றது.
இவர்களது நிலைமையை கிராம சேவையாளர் திரு.கஜந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.லோகேஸ்வரன் குறித்த பிரதேச கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உறுதி செய்ததற்கு அமைய இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு அவரது இல்லத்தில் வைத்து இந்த உதவி வழங்கப்பட்டது.
மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வஸந்தன், தாய்மார்கள் சங்கச்செயலாளர் திருமதி ரட்ணமாலா, கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் செ.குகனேசன், செயலாளர் ஆர்.சுஜீபன், உறுப்பினர் பகீரதன் மற்றும் இந்த குடும்பத்தில் அக்கறை கொண்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.