பண்டிதர் வீரசிங்கம் பிரதீபன் எழுதிய ‘வழிப்படுத்தும் இந்துமத வழிமுறைகள்’ எனும் நூல், வவுனியா பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (25.06) நடைபெற்றது.
நூலாசிரியரின் முதல் படைப்பான இந்நூலில் இந்து மதம் காட்டும் கூட்டு முயற்சியும் ஒற்றுமையும், விருந்தோம்பல் பண்பாடு, இந்து மதம் கூறும் நடை, உடை, பாவனை போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, திடீர் மரண விசாரணை அதிகாரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநாதன் கிஷோர், மற்றும் தமிழ் மொழி அகளங்கன், தமிழருவி சிவகுமாரன், மூத்த ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், கல்விமான்கள், கல்வியற்கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியா மாவட்ட பாடசாலை மட்டத்திலான கடின பந்து துடுப்பாட்டத்தினை ஊக்குவித்து தேசிய மட்டத்திலான வீரர்களை உருவாக்கும் நோக்கில் கடின பந்து துடுப்பாட்ட அணிகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர் றதீபன் தலைமையில் நேற்று(25.06) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வின்போது மாவட்டத்தின் துடுப்பாட்டத்தின் வளர்ச்சிக்காக குறித்த சங்கம் எடுத்து வருகின்ற முயற்சிகள் தொடர்பாகவும் வீரர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும், கடின பந்து தொடர்பாக பாடசாலைகளினது பங்களிப்பு தொடர்பாகவும், விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் 2004 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களின் அனுசரணையுடன் இடம்பெற இருக்கின்ற பாடசாலை மட்டத்திலான கடினப் பந்து சுற்று போட்டிக்கான வெற்றிகிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், ம.தியாகராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா , சட்டத்தரணிகளான கெங்காதரன், இளங்குமரன் ஆகியோரும், மாகாண , மாவட்ட மட்ட பயிற்றுவிப்பாளர்களும், மாவட்ட மட்ட துடுப்பாட்ட சங்க நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (25.06.2017) காலை 8 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மல்லாவி இராணுவ முகாமில் பணியாற்றி வரும் டினேஸ் குமார ( வயது 32 ) என்பவர் இன்று (25.06.2017) விடுமுறையினையடுத்து அவரது சொந்த ஊரான காலி மாவட்டத்திற்கு இ.போ.ச பேரூந்தில் சென்றுள்ளார்.
இதன் போது வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து 68 கிராம் 62 மில்லிகிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவை வைத்திருந்த குறித்த இராணுவ வீரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்வரும் நாட்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான யோசனையை போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உதவி வணிக கண்காணிப்பாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
இறுதியாக ரயில் கட்டண திருத்தம் 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விலை பல முறை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் ரயில்வே திணைக்களம் நட்டத்தில் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்படும் பஸ் கட்டணத்திற்கு சமமான அளவு ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக நாடு தழுவிய ரீதியில் அரசாங்க வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால், வைத்தியசாலை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய பொலநறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வைத்தியர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் அந்த மாவட்டத்தின் புலஸ்திகம அரசாங்க வைத்தியசாலையில் ஒரே ஒருவர் வைத்தியர் மாத்திரம் தனியாக வைத்திய பணியை மேற்கொண்டுள்ளார்.
அவர் நூற்றுகணக்கிலான நோயாளர்களுக்கு நாள் முழுவதும் சிகிச்சை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வைத்தியசாலையில் 4 வைத்தியர்கள் மாத்திரமே சேவை செய்வதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த வைத்தியர் எந்தவொரு நாளும் பணி பகிஷ்கரிப்பில் கலந்து கொண்டதில்லை என கூறப்படுகின்றது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது. எனினும் நேற்றையதினம் பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை செய்வதற்கு புதிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சரால் நால்வர் அடங்கிய புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சரால் முன்னதாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரனே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் புதியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணையை ஒரு மாத காலத்தினுள் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவினர் தமது அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.
அதில் இரு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதுடன், இரு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை.
தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் பதவி விலக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அந்த அமைச்சுக்களை தற்காலிகமாக பொறுப்பேற்றார்.
இதேவேளை, சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் மீது முறைப்பாடு கொடுத்தவர்கள் விசாரணைக்கு வருகை தரவில்லை என்பதால் மீளவும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கால்பந்து போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் எதிரணி வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை கொடுக்கப்படும்.
சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற வேண்டும். மீதமிருக்கும் நேரத்தில் அந்த அணி 10 வீரர்களுடன்தான் விளையாட முடியும்.
ஆனால், கிரிக்கெட்டில் அப்படியில்லை. அந்த போட்டி முழுவதும் விளையாடிய பின்னர் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
இதனால் தகராறில் ஈடுபட்ட வீரர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவதில்லை. இதனால் ஸ்லெட்ஜிங் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இதனால் கிரிக்கெட்டிலும் கால்பந்து போட்டி போன்று அத்துமீறும் வீரர்களை மைதானத்தில் இருந்து வெளியே அனுப்ப நடுவர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரை குறித்து லண்டனில் நடைபெற்ற ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டது. அப்போது ஒருமனதாக சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு வீரர் மிகவும் மோசமான வகையில் மைதானத்திற்குள் நடந்து கொண்டால் உடனடியாக வெளியேற்றும் அதிகாரம் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதி அக்டோபர் 1ம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகிறது.
இங்கிலாந்தில் இல்ஃபொர்ட், ரெட்பிரிட்ஜ் இல் உள்ள ஆராதனா நாட்டியப் பள்ளியில் நடனம் பயிலும் பிரகதா என்ற ஈழத்துச் சிறுமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு அண்மையில் லண்டன் பார்க்கிங் புறோட்வே அரங்கில் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக, ரெட்பிரிட்ஜ் மேயர் பாம்ரா மற்றும், ஈஸ்ட் ஹாம் அவை துணைத்தலைவர் போல் சத்திய நேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறுமியை வாழ்த்தியுள்ளனர்.
பிரகதாவின் இந்த சாதனை கின்னஸ் பட்டியலுக்கான பரிந்துரைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரகதா என்ற சிறுமி ஆராதனா நாட்டியப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்ரீமதி சுஜந்தினி மகேஸ்வரனின் மாணவியாவார்.
பிரகதாவின் குரு சுஜந்தினி மகேஸ்வரன் மற்றும் பெற்றோர் என அனைவருமே ஈழத்தில் உரும்பிராயைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர் நதீ ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்னாரில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையிலான கடல் பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மழை பெய்யும் போது ஏற்படும் மின்னல் ஆபத்துக்களில் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் முச்சக்கர வண்டி ஒன்றும்டிப்பர் வண்டி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை ஹூங்கம – லுணம பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 40, 34 மற்றும் 19 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்குள் தந்தை மற்றும் அவரது மகன் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொழும்பு – கதிர்காமம் வீதியின் தங்காலை நோக்கி பயணித்த டிப்பர் வண்டி மற்றும் கதிர்காமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ளது.
விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியில் 5 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் இருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு(CASINO) சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பாரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்ட பெண் ஒருவர் கனடாவில் Montreal சூதாட்ட நிலையத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பெண் முதல் முறையாக சூதாட்ட நிலையத்திற்கு சென்று முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
35 வது பிறந்த நாளை கொண்டாடிய பாலகௌரி குணசீலன் என்ற தமிழ் பெண்ணே பரிசு தொகையை பிறந்த நாள் பரிசாக வென்றுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 1,000 டொலர் அல்லது 675,000 டொலராக மொத்த தொகையை பெற்றுக் கொள்வதா என்பதை பாலகௌரியே தீர்மானிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கிட்டு பார்த்தால் 1000 டொலர் என்ற ரீதியில் 13 வருடங்களுக்கு அந்த பணம் செலுத்த நேரிடம். இதனால் தடவையில் முறையில் 675,000 டொலர் பணம் பாலகௌரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கனேடி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்ற இளைஞனொருவன் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து ஏறாவூர் – கோரளன்கேணி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், மாவடிவேம்பைச் சேர்ந்த யோகநாதன் சஜீவன் (வயது 20) என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
நண்பர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மாவடிவேம்பு பகுதியில் முடித்து விட்ட நிலையில், பின்னர் களுவன்கேணி கடற்கரைக்கு குளிப்பதற்காக நண்பர்கள் அனைவரும் சென்றுள்ளனர்.
இதன்போதே, உயிரிழந்த நபரும் அவருடைய நண்பரொருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
அவர்களுடன் சென்ற ஏனைய நண்பர்களுக்கு களுவண்கேணி கடற்கரைக்கு சென்ற பின்னர்தான் குறித்த விபத்து தொடர்பாக தொலைபேசி அழைப்பு ஒன்றின் ஊடாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு ஏனைய நண்பர்கள் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் விபத்து இடம்பெற்ற பின்னர் சந்திவெளி வைத்தியசாலைக்கு சிகிக்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்ட போது சஜீவன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த வந்தாறுமூலையைச் சேர்ந்த எஸ்.சிறிநாத் என்பவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், விபத்துக்குள்ளான இளைஞர்கள் தலைக்கவசம் அணியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இதன்போது இளைஞர்கள் மதுபோதையிலும் இருந்துள்ளதாகவும் ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த இளைஞனின் உயிரிழப்பு மாவடிவேம்பு கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வுனியா குருமன்காடு முதலாம் ஒழுங்கையில் இன்று (24.06.2017) மதியம் 1.30 மணியளவில் பூட்டியிருந்த வீட்டினுள் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா குருமன்காடு முதலாம் ஒழுங்கை பகுதியில் நல்லையா சிவராசா (வயது 73) என்பவரும் அவரின் மனைவியும் வசிந்து வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை ( 21.06.2017) ம் திகதி இவரின் மனைவி அவரது சொந்த ஊரான வட்டக்கச்சிக்கு சென்றுள்ளார். இவர் தனிமையில் வீட்டில் இருந்த சமயத்தில் மதுபானம் உபயோகித்துள்ளார். அதிகளவு மது பாவித்தமையினால் இவர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது வீட்டின் மேல் பகுதியில் குடியிருப்பவர் குறித்த நபரின் நடமாட்டங்கள் எவையும் காணப்படவில்லை என வீட்டின் யன்னல் வழியாக எட்டிப்பார்த்த சமயத்தில் இவர் இறந்த நிலையில் இருந்துள்ளார். உடனே கிராம சேவையாளருக்கு தகவலை வழங்கி கிராம சேவையாளர் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் குற்றவியல் அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் கடந்த 1970ம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் 23 வது சர்வதேச யோகா தினம் இன்று (24.06.2017) வவுனியா நகரசபை மைதானத்தில் இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
வடமாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் இணை அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டிருந்தார்.
இந்திய உயர் ஸ்தானியர் காரியலாயத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களையடுத்து வவுனியாவில் சர்வதேச யோகா தினம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகர பாடசாலையிலுள்ள 1000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று இடம்பெற்ற சர்வதேச யோகா தினத்தில் பங்குபற்றியிருந்ததுடன் இந்திய தூதரக கலைக்கூட யோகாசன ஆசிரியரும் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளருமாகிய எஸ்.சூரியகுமார் யோகாசன பயிற்சிகளை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் இறுதியில் யோகாசன சிறப்பு மலரும் (புத்தகம்) நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களுக்கு இந்தியத் துணைத்தூதுவரால் வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன், தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.