நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்ற இளைஞனொருவன் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து ஏறாவூர் – கோரளன்கேணி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், மாவடிவேம்பைச் சேர்ந்த யோகநாதன் சஜீவன் (வயது 20) என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
நண்பர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மாவடிவேம்பு பகுதியில் முடித்து விட்ட நிலையில், பின்னர் களுவன்கேணி கடற்கரைக்கு குளிப்பதற்காக நண்பர்கள் அனைவரும் சென்றுள்ளனர்.
இதன்போதே, உயிரிழந்த நபரும் அவருடைய நண்பரொருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
அவர்களுடன் சென்ற ஏனைய நண்பர்களுக்கு களுவண்கேணி கடற்கரைக்கு சென்ற பின்னர்தான் குறித்த விபத்து தொடர்பாக தொலைபேசி அழைப்பு ஒன்றின் ஊடாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு ஏனைய நண்பர்கள் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் விபத்து இடம்பெற்ற பின்னர் சந்திவெளி வைத்தியசாலைக்கு சிகிக்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்ட போது சஜீவன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த வந்தாறுமூலையைச் சேர்ந்த எஸ்.சிறிநாத் என்பவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், விபத்துக்குள்ளான இளைஞர்கள் தலைக்கவசம் அணியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இதன்போது இளைஞர்கள் மதுபோதையிலும் இருந்துள்ளதாகவும் ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த இளைஞனின் உயிரிழப்பு மாவடிவேம்பு கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வுனியா குருமன்காடு முதலாம் ஒழுங்கையில் இன்று (24.06.2017) மதியம் 1.30 மணியளவில் பூட்டியிருந்த வீட்டினுள் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா குருமன்காடு முதலாம் ஒழுங்கை பகுதியில் நல்லையா சிவராசா (வயது 73) என்பவரும் அவரின் மனைவியும் வசிந்து வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை ( 21.06.2017) ம் திகதி இவரின் மனைவி அவரது சொந்த ஊரான வட்டக்கச்சிக்கு சென்றுள்ளார். இவர் தனிமையில் வீட்டில் இருந்த சமயத்தில் மதுபானம் உபயோகித்துள்ளார். அதிகளவு மது பாவித்தமையினால் இவர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது வீட்டின் மேல் பகுதியில் குடியிருப்பவர் குறித்த நபரின் நடமாட்டங்கள் எவையும் காணப்படவில்லை என வீட்டின் யன்னல் வழியாக எட்டிப்பார்த்த சமயத்தில் இவர் இறந்த நிலையில் இருந்துள்ளார். உடனே கிராம சேவையாளருக்கு தகவலை வழங்கி கிராம சேவையாளர் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் குற்றவியல் அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் கடந்த 1970ம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் 23 வது சர்வதேச யோகா தினம் இன்று (24.06.2017) வவுனியா நகரசபை மைதானத்தில் இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
வடமாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் இணை அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டிருந்தார்.
இந்திய உயர் ஸ்தானியர் காரியலாயத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களையடுத்து வவுனியாவில் சர்வதேச யோகா தினம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா நகர பாடசாலையிலுள்ள 1000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று இடம்பெற்ற சர்வதேச யோகா தினத்தில் பங்குபற்றியிருந்ததுடன் இந்திய தூதரக கலைக்கூட யோகாசன ஆசிரியரும் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளருமாகிய எஸ்.சூரியகுமார் யோகாசன பயிற்சிகளை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் இறுதியில் யோகாசன சிறப்பு மலரும் (புத்தகம்) நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களுக்கு இந்தியத் துணைத்தூதுவரால் வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன், தமிழருவி சிவகுமாரன், தமிழ்மணி அகளங்கன், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரி சுகாதார அமைச்சு அமைந்துள்ள வளாகத்திற்கு முன்பாக கடந்த (21.06.2017) மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்களை பொலிஸார் கலைக்க மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 90 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் (22.06.2017) தொடக்கம் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் நேற்று முன்தினம் (22.06.2017) தொடக்கம் ஆரம்பித்த காலவரையரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் (24.06.2017) மூன்றாவது நாளாக இடம்பெறுகின்றது.
இதன்காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் சேவைகள் இயங்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை காட்டிற்கு பாலப்பழம் பறிக்கச் சென்றவேளை உயிரிழந்த 53 வயதான முத்துக்கறுப்பன் குமாரவேல் குடும்பம் மிகவும் வறுமைப்பட்டது. மனைவி கு.ராஜேஸ்வரி தனது நான்கு பிள்ளைகளுடன் குடும்பத்தை காப்பாற்ற வகை தெரியாது நிற்கின்றார்.
இறந்தவர் மதுபாவனை காரணமாக வீட்டில் குடும்ப வன்முறை நடைபெற்றுள்ளது. சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.கெனடி மூலம் பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்பிள்ளை வேப்பங்குளம் அன்பகம் இல்லத்திலும் ஆண்பிள்ளைகள் சாயி சிறுவர் இல்லத்திலும் சேர்க்கப்பட்டுள்ளனர். தாயார் ராஜேஸ்வரி அன்பகம் இல்லத்தில் வேலை பார்த்து வந்தவர் . இவரின் கணவரின் மரணச்செலவுகளை அன்பக இல்ல பொறுப்பாளர் பொறுப்பேற்று நடாத்தியுள்ளார்.
உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் மூலம் செட்டிகுள பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.மதி வனஇலாக நிறுவனத்தின் நட்டஈடாக ரூபா 50000 வழங்கி உதவியுள்ளார்.
வீட்டில் சமையல் பாத்திரங்கள் உலர் உணவுகள் எதுவுமற்ற நிலையை மெனிக்பாம் கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி நி.ஞானசௌந்தரி மூலம் அறிந்து கொண்ட வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் இன்று (24.06.2017) சனிக்கிழமை காலை சுமார் இருபதாயிரம் ரூபா பெறுமதியான சமையல் பாத்திரங்கள் மற்றும் உலர்உணவுகளை வழங்கி வைத்துள்ளனர்.
லண்டன் புலம் பெயர் உறவுகளான V3 அமைப்பினரின் நிதி உதவியில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாஸன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வஸந்தன் கிராமசேவை நிலைய அலுவலகர் திருமதி வஸந்தி சமூக ஆர்வலர் திரு.புருசோத்தமன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடும் வறுமையில் உள்ள இந்த குடும்பத்திற்கு மலசலகூடவசதிகள் தண்ணீர் வசதிகள் சரியான முறையில் இல்லாமையால் நலன்விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்களின் உதவி இவர்களுக்கு உடனடியாக அவசியம் என மாவட்ட சமூகசேவை அதிகாரி குறிப்பிட்டார்.
வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சி.சிவபாக்கியம். இவரது கணவர் நடக்கமுடியாமலும், கண் பார்வையற்றவராகவும் உள்ளார். அவருடைய இரண்டு பெண் பிள்ளைகளும் மாணவர்களாக உள்ளனர்.
இவர் சிதம்பரபுரம் வைத்தியசாலை முன்பாக சிறிய பெட்டிக்கடை வியாபாரம் செய்து குடும்பத்தை பேணி வருகிறார். தனது வியாபாரத்தை விரிவாக்கும் நோக்குடன் புளொட் அமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மூலம் உதவி கோரியிருந்தார்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புளொட் அமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர் த. சிவபாலன் 20000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இப்பணம் நேற்று (23.06.2017) மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் அலுவலகத்தில் வைத்து திருமதி. சி.சிவபாக்கியத்திடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் தேசிய அமைப்பாளர் த.யோகராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
இன நல்லுறவை மேலும் கட்டியெழுப்பும் நோன்புப்பெருநாளாக அமையட்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
நோன்புப்பெருநாள் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த செய்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..
கடந்து சென்ற ரமழான் மாதம் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஒரு பொறுமையையுடன் கூடிய சோகத்தையும் ஏற்படுத்திய மாதமாக அமைந்து இருந்தமையை யாரும் மறுக்க முடியாது. ஒருபகுதி மக்கள் வெள்ளத்தாலும் மற்றுமொரு பகுதி மக்கள் வறட்சியாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் மீதான இனவாத தாக்குதல்களும் குறையவில்லை.
அண்மைக்காலமாக இலங்கைவாழ் முஸ்லிம்களுடைய மதஸ்தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மூலம் பெரும்பாண்மை மற்றும் சிறுபாண்மை சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் இன விரிசலை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் சிறுபாண்மை மக்களின் பங்களிப்போடு கொண்டுவரப்பட்ட நல்லாட்சியின் இருப்பு தொடர்பில் சிறுபாண்மையினர் அதிகம் சிந்திக்க தொடங்கிவிட்டனர். எனவே இந்த விடயம் தொடர்பில் ஆட்சியாளர்கள் விரைவாக தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும்.
கடந்த கால ஆட்சியில் சிறுபாண்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட செயற்பாடுகளால் ஏற்பட்ட இழப்புக்களையே இன்னும் ஈடு செய்ய முடியாத நிலையில் மீண்டும் அதே நிலை தொடர்வதை முஸ்லிம்கள் விரும்பவில்லை.
அதே நேரத்தில் கடந்து சென்ற ரமழான் மாதத்தில் முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வுகளில் அதிகளவிலான சிங்களஇ தமிழ் சகோதர சகோதரிகள் கலந்துகொண்டமை மகிழ்ச்சியளிக்கின்றது. இவ்வாறான தங்களின் வருகை இனங்களுக்கிடையிலான சகவாழ்வை கட்டியெழுப்ப உதவிபுரியும் என நான் நினைக்கின்றேன்.
மேலும் இவ்வாறு சிங்கள தமிழ் மக்களது நிகழ்வுகளில் முஸ்லிம்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பதுடன் இந்த நல்ல நாளில் எமது சகோதர இன நண்பர்களையும் உபசரித்து அதன் மூலமாகவும் ஏனைய சமூகத்துடனான சகவாழ்வை கட்டியெழுப்ப முனைய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
எமது வன்னி மாவட்டத்திலுள்ள எல்லா இன மக்களுடனும் நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம். இந்த ஒற்றுமை ஏனைய மாவட்டங்களிலும் உறுதிப்படுத்தப்படுவதற்கு சமயத்தலைவர்களும் புத்திஜீவிகளும் மக்கள் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டும்.
மேலும் இந்த நாளில் புனித நோன்புப்பெருநாளை கொண்டாடும் உலகம்வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும்
எமது சகோதர இன மக்களுக்கும் எனது சாந்தியும் சமாதானமும் நிறைந்த நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இயங்கிவரும் சிறு வியாபாரிகள் சந்தையை புனரமைக்க வவுனியா நகரசபையின் செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இப்புனரமைப்பு தொடர்பாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சிறுவியாபாரிகள் சங்கம் மற்றும் நகரசபை செயலாளர் ஆர் தயாபரன் தலைமையில் நகரசபையின் மண்டபத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த நகரசபைச் செயலாளர்..
வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்கு இருசக்கர தரிப்பிடமொன்று அவசியம் என வர்த்தக சங்கத்தலைவர் கோரிக்கை விடுத்ததையடுத்து மாவட்ட அரசாங்க அதிபர் இரு சக்கர தரிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நகரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியமைக்கு அமைவாக தற்சமயம் தற்காலிகமாக இயங்கிவரும் சிறுவியாபாரிகள் சந்தையை வேறு இடத்திற்கு இடமாற்றி அவ்விடத்தில் இருசக்கர வாகன தரிப்பிடம் அமைக்கவிருப்பதாக தெரிவித்த நிலையில் சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் யூ.அயுப்கான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் சிறு வியாபாரிகள் அவ்விடத்தை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதாகவும் இருசக்கர வாகன தரிப்பிடம் அமைப்பதற்கு தாங்கள் எதிர்க்கவில்லை அவ்விடத்தை சுற்றி கடைகளை அமைத்து நடுவில் வாகன தரிப்பிடத்தை அமைக்குமாறும் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நகரசபை நிர்வாகம் எதிர்வரும் 15.07.2017 சிறுவியாபாரிகள் சந்தையை மறு சீரமைக்கும் பணியை மேற்கொள்ளவுள்ளநிலையில் தற்சமயம் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் 33 பதிவுசெய்யப்பட்ட வியாபாரிகளுக்கு மாத்திரமே அவ்விடத்தில் கடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடிய விஷமுள்ள பாம்புகளை தனதுநண்பர்களாக மாற்றி, அவைகளுடன் அன்பாக பழகி வருகிறார் கார்க்கி விஜயராகவன் என்ற பெண்.
மனிதனின் அறியாமைதான் பாம்பு களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கின்றன என்று நம்பும் அவர் அதைத் தடுக்க மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.
காடுகளில் இருந்து ஊர்களுக்குள் நுழையும் பாம்புகளை பாதுகாத்து, அவைகளுக்கு நல்லதொரு சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்துஅவற்றை மீண்டும் காட்டுக்குள்ளேயே அனுப்பி வைக்கிறார்.
கடந்த பத்து வருடங்களில் கிட்டத்தட்ட 2000 பாம்புகள் வரை இவரால் காப்பாற்றப் பட்டிருக்கின்றன.
சென்னையில் வங்கியொன்றில் வேலை பார்த்த சமயங்களில் தனது மதிய உணவுப் பொழுதினை முதலைப் பண்ணையில் இருக்கும் பாம்புகளிடையேதான் செலவிடுவாராம். இப்படித் துவங்கிய பாம்புகளின் மீதான அவரது ஈடுபாடு என்னையும் தொற்றிக் கொண்டது. சின்ன வயதிலிருந்தே பாம்புகளுடன் எனக்கு நட்புணர்வு ஏற்பட்டது.
இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் நான்கு வகைப் பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை. மற்றவையெல்லாம் எந்த ஆபத்தும் விளைவிக்காது.
பாம்புகளைக் காப்பாற்ற போகுமிடங்களில் எல்லாம் நான் இது குறித்து மக்களிடம் விளக்க முயற்சிக்கிறேன். பள்ளிக் காலத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் பலரும் என்னை கிண்டலடிப்பதும், பாம்பு போன்ற சீறல் ஒலியெழுப்பி என்னைக் கேலி செய்வதும் சகஜமானது.
என் வருத்தங்களை என் தாயிடம் பகிர்ந்து கொண்டபோது இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களால் நான் சோர்வடையக் கூடாது என்று எனக்கு சொல்லித் தந்தார். தற்போது பட்டப் படிப்பை முடித்துவிட்டு ‘மைவெட்ஸ்’ (MyVetsCharitable Foundation) எனும் வனவிலங்குகளை காப்பாற்றும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன் என்கிறார் கார்க்கி.
சமூகவலைதளங்களில் முன்னணி தளமாக இருந்து வந்த பேஸ்புக்கை, வட்ஸ் அப் பின்னுக்கு தள்ளியுள்ளது.
பேஸ்புக்கை விட வட்ஸ்ப் அப்பில் தான் அதிகமாக செய்திகள் பகிரப்படுகின்றன என்று டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட் 2017 ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
5 கண்டங்களில், 30 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து வெளியான டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட் 2017 என்ற ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
வட்ஸ் அப் செயலியின் மூலம் 15 சதவீதமும், பேஸ்புக் மெசஞ்சர் மூலம் 8 சதவீதமும், ஸ்நாப்சாட், வைபர் மூலம் 2 சதவீதமும், வீசாட் மூலம் 1 சதவீதமும் செய்திகள் பகிரப்படுகின்றன என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
அதிகபட்சம் மலேசியாவில் 51 சதவீதம் பேர் வட்ஸ் அப் மூலம் செய்திகளைப் பகிர்கின்றனர் எனவும் அமெரிக்காவில் 3 சதவீதம் மட்டுமே செய்திகளைப் பகிர்கின்றனர் எனவும் அந்த ஆய்வு கூறுகின்றது.
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் கிண்ணத்தை வெல்ல முடியாமல் இலங்கை அணி தோற்று வெளியேறியது. இதையடுத்து, தோல்விக்கு பொறுப்பேற்று அந்த அணியின் பயிற்சியாளர் கிரஹாம் போர்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 15 மாதங்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக போர்ட் இருந்து வருகிறார்.
தென் ஆபிரிக்காவை சேர்ந்தவரான போர்டின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி அவுஸ்ரேலியாவை 3-0 என படுதோல்வி அடையச் செய்தது.
ஆனால், பின்னர் தொடர்ந்து தோல்விகளையே இலங்கை அணி சந்தித்து வருகிறது. 2016ம் ஆண்டுக்கான ஐசிசியின் டி20 உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறியது.
மேலும், வங்கதேச அணியுடன் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், வரும் 30ஆம் திகதி சிம்பாவே அணியுடன் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர் பதவியை பீல்டிங் பயிற்சியாளர் நிக் போதாஸ் ஏற்கவுள்ளார்.
3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு சொந்தகாரரான மறைந்த தொழில் அதிபர் ஜே.பி.ஆரின் குடும்பத்தினர் சொத்துக்களை தரமறுத்து தன்னை வீட்டில் சிறை வத்திருப்பதாக இரண்டாவது மகள் ஷீலா பரபரப்பு புகார் கூறி இருக்கிறார்.
சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தின் நிறுவனர் ஜே.பி.ஆர், எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரிய தலைவர், தமிழக சட்டமன்றத்தின் மேல்சபை உறுப்பினர், தமிழக மீன்வளத்துறை இயக்குனர் உள்ளிட்டபொறுப்புகளை வகித்தவர்.
1987ல் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் அரசியலில் இருந்து விலகி சத்யபாமா பல்கலைகழகம், பனிமலர் பாலிடெக்னிக், ஜேபிஆர் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங்களையும்,டயர்,மெட்டல், சிமெண்ட், பால் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சாலைகளையும் தொடங்கிய ஜேபிஆர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி காலமானார்.
அப்போது அவரது சொத்து மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேபிஆருக்கு பின்னர் அவரது சொத்துக்களை அவரது மனைவி ரெமிபாய் அவரது மகள்கள் மரியா ஷீனா, ஷீலா , ரெஜீனா ஆகியோரும் அவர்களது குடும்பத்தினரும் நிர்வகித்து வந்தனர்.
இந்த நிலையில் ஜே.பி.ஆரின் இரண்டாவது மகள் ஷீலா சொத்து பாகபிரிவினை தொடர்பாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், தனது தந்தை ஜே.பி.ஆரின் சொத்துக்களை முறையாக பங்கீடு செய்யாமல் 2 கல்லூரிகளை மட்டும் தனக்கு கொடுத்து ஏமாற்றியதோடு, வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுத்து பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள வீட்டிற்குள் பூட்டி சிறைவைத்துள்ளதாகவும் குடிநீரின்றி தவிப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஓடும் ரயிலில் நான்கு இளைஞர்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பல்லப்கிராவின் கண்டவளி கிராமத்தைச் சேர்ந்த ஜுனைத், ஹஷீம், ஷாகிர் மொசின் மற்றும் மொயின் ஆகிய நான்கு இளைஞர்களும் துக்லகாபாத்தில் இருந்து ரயிலில் சென்றுள்ளனர்.
ரமலான் திருநாளிற்காக பொருட்கள் வாங்கச் சென்ற சென்றபோது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரயில் கூட்டமாக இருந்தபோது நால்வர் மீதும் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் ரயிலில் இருந்து விரைவாக வெளியேறிவிட்டதாகவும், அதனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை நேரடியாகத் தாக்கும் வகையில் வடகொரியா புதிய ரொக்கெட் என்ஜின் ஒன்றை பரிசோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த என்ஜின் சோதனை, அமெரிக்காவை நோக்கி செலுத்தப்படவுள்ள ஏவுகணைகளில் பயன்படுத்தப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தென் பகுதியை தாக்கி அழிக்கும் நோக்கில் உருவாக்குகின்ற ஒரு முயற்சியாக இந்த சோதனை நடவடிக்கை இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையானது அமெரிக்காவை தாக்கக்கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பேலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பின் ஒரு நிலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான தென்கொரியா ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தென்கொரியா அமெரிக்காவின் இராணுவ படைப்பிரிவுகளின் வலுவைப்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரிய தீபகற்பத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், கொரியா பிராந்தியத்தில் பதற்றத்தை தடுக்க விரும்பினால் இராஜீய ரீதியில் அதிக அழுத்தங்களை சீனா பயன்படுத்த வேண்டுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, வடகொரியாவின் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவற்றைப் புறந்தள்ளி மீண்டும் ஒரு சோதனை மேற்கொண்டுள்ளது.
தன் மரணத்தால் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் உலுக்கினார் சுவாதி. பொது இடங்களில் ஒரு பெண்ணுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லையா… ஒரு இளம்பெண் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பும்போது யாருமே உதவிக்கு வர மாட்டார்களா… எவருக்கும் கேட்காமலே உதவி செய்யும் இயல்பான உணர்வை நம் சமூகம் எப்போது தொலைத்தது?’ என ஏராளமான கேள்விகள் அந்த நிமிடத்தில் எழுந்தன. ஆனால், அந்த வழக்கு விசாரணை தொடர்ந்த நாட்களில், இன்னும் ஏராளமான கேள்விகள் எழ ஆரம்பித்தன.
கடந்த 2016 ஜூன் 24-ம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் சுவாதி. ஓராண்டு முடிந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளும் விலகாத மர்மங்களுமே சுவாதியின் மரணத்தைச் சூழ்ந்திருக்கின்றன.
சுவாதி கொலை வழக்கை ஆரம்பத்தில் ரயில்வே போலீஸ் விசாரித்தது. பிறகு தமிழக போலீஸ் வழக்கைக் கையில் எடுத்தது. நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் 8 தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. எட்டாவது நாளில், ராம்குமாரைக் குற்றவாளி என அறிவித்து, கைது செய்தது போலீஸ்.
சுவாதி இறந்து சரியாக 87-வது நாள். ‘மின் கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார்’ என்றது சிறை நிர்வாகம்.
சுவாதி கொலையில் குற்றவாளி ராம்குமார் இறந்து விட்டதால், வழக்கை முடித்துக்கொண்டது காவல்துறை. நீதிமன்றமும் கடந்த பெப்ரவரி மாதம் இந்த வழக்கை முறைப்படி முடித்து வைத்து விட்டது. ஆனால், ராம்குமார் மரணத்தையொட்டி புதுப் புது சந்தேகங்களை எழுப்புகிறது,
ராம்குமாருக்கு நீதி வேண்டி போராடி வரும் முற்போக்கு வழக்கறிஞர் குழு.இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் மார்க்ஸ்,
திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் கைதான உடனே, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், ‘தன்னைத் தேவாங்கு என்று திட்டியதால் கோபமுற்று சுவாதியை ராம்குமார் கொன்றுவிட்டார்’ என்றார்.
பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டதாகச் சொல்லப்பட்ட ராம்குமாரால் பேசவே முடியாது. அப்படியிருக்க எப்படி அவரால் இப்படியொரு வாக்குமூலம் கொடுத்திருக்க முடியும்?
மேலும் கமிஷனரே இவ்வாறு கூறியதால், அடுத்து இந்த வழக்கை விசாரித்த போலீஸ் டீம், ராம்குமாரைக் கடந்து வேறு திசையில் விசாரணையைக் கொண்டு செல்லவில்லை.
சுவாதிக்கு ஒரு இஸ்லாமியருடன் காதல் ஏற்பட்டு, அவர்களுக்கு பெங்களூரில் பதிவுத் திருமணமும் நடந்துள்ளதாகக் கேள்விப்பட்டோம். இதையொட்டி அங்கு ஒரு பஞ்சாயத்தும் நடந்ததாகச் சொன்னார்கள். இந்துத்வா அமைப்புகளும் இதில் களமிறங்கின.
90 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு இயல்பாகவே ராம்குமாருக்கு ஜாமீன் கிடைக்க சட்டரீதியாக வாய்ப்பிருந்தது. ஆனால், வெளியே வந்தால் உண்மைகள் தெரிந்துவிடும் என்று, அதற்குச் சில நாள்கள் முன்பாக அவர் சிறையில் கொல்லப்படுகிறார்.
சுவாதி மரணத்தின் பின்னணியில் மிகப் பெரிய நெட்வொர்க்கே உண்டு’’ என நிறுத்தினார்.‘‘அதை விரிவாக நான் சொல்கிறேன்’’ என்று தொடங்கினார், ராம்குமாரின் வழக்குகளைப் பார்த்துவரும் வழக்கறிஞர் ராம்ராஜ்.
சுவாதி, ராம்குமார் வழக்குக் குறித்து இதுவரை எந்த ஆவணங்களையும் கோர்ட் எங்களுக்குத் தரவில்லை. ராம்குமாரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையைக்கூட எங்களுக்குத் தரவில்லை. இதையொட்டி ‘அனைத்து ஆவணங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று 20.3.2017 அன்று எழும்பூர் 14-வது நீதிமன்ற நீதிபதி கோபிநாத்முன் மனுதாக்கல் செய்தோம்.
வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனைச் சரிபார்த்துவிட்டு அழைக்கிறோம்’ என்று இரண்டு வாரங்களுக்கு வழக்கைத் தள்ளி வைத்தார்.
ஆனால், செய்தித்தாளில், ‘ராம்குமார் இறந்து விட்டதால் வழக்கை முடித்து வைக்கக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற குற்றவியல் நடுவர், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்’ என்று செய்தி வெளியாகி இருந்தது.
இதைச் சுட்டிக் காட்டி ஆவணங்களைக் கேட்டோம். இன்றுவரை எங்களுக்கு எந்த ஆவணங்களையும் தரவில்லை. ஒரு வழக்கு முடிந்து விட்டால், அதுகுறித்த ஆவணங்களைத் தரவேண்டும் என்பது சட்டவிதி. ஆனால், ஏன் தர மறுக்கிறார்கள்? காரணம், இதன் பின்னுள்ள பகீர் விவகாரங்கள்தான்.
ராம்குமார் நிரபராதி என்பதை நிரூபிக்க, சுவாதி கொலை குறித்த உண்மைகளை அறியும் விசாரணையில் நாங்கள் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சங்கிலித் தொடர்பு உண்டு.
சுவாதி பணியாற்றிய நிறுவனத்தில் முக்கியமான ஒருவருக்கு, ஹவாலா நபர்களுடன் தொடர்பு உள்ளது. அவரின் பரிவர்த்தனைகள் தொடர்பான சில முக்கியக் கோப்புகள் கொண்ட டிஸ்க் சுவாதியிடம் இருந்தது.
இதைத் தேடி மிகப் பெரிய அளவில் ஒரு டீம் சுவாதியைச் சுற்றியபடியே இருந்துள்ளது.சுவாதி மென்பொருள்களைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்.
ஆளும்கட்சித் தலைமைப் பீடத்தில் இருந்த ஒருவருக்குத் தெரியாமல், அவருடைய பன்னாட்டு வங்கிக் கணக்கில் இருந்து, அவருக்கு விசுவாசமாக இருந்த பெண்மணி ஒருவரே பணத்தை அபகரிக்கத் திட்டமிட்டார்.
இதைச் சாமர்த்தியமாக செய்து முடிக்க அந்தப் பெண்மணிக்கு ஒரு நிபுணர் தேவைப்பட்டார். அப்படி அந்த ‘விசுவாசமானவருக்கு’ இந்த விவகாரத்தில் உதவுவதற்காக அழைத்து வரப்பட்டார் சுவாதி. இது தலைமைப் பீடத்துக்குத் தெரிய வந்தபோது, சுவாதி எச்சரிக்கப்பட்டார்.
மூன்றாவது விஷயம், சுவாதிக்கும் இஸ்லாமியர் ஒருவருக்கும் நடந்த காதல் பதிவுத் திருமணமும், அதையொட்டி எழுந்த பஞ்சாயத்துகளும். சுவாதியின் படுகொலைக்கு மேற்கண்ட அனைத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
கூலிப்படைதான் சுவாதியைக் கொன்றது. போஸ்ட் மார்ட்டம் செய்த மருத்துவக் குழுவில் இருந்த நண்பர்கள், ‘ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தக் கொலையில் பங்கு இருக்கிறது’ என்று எனக்குச் சொன்னார்கள்.
இந்தக் கொலையில் பெரும் புள்ளிகள் தொடர்பும், மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தமும் ராம்குமாரைச் சிக்க வைத்து விட்டது. வெளியே வந்தால் உண்மைகள் தெரிந்துவிடும் என்றே ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டார்.
இவை அனைத்துக்கும் எங்களிடம் வலுவான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போகிறோம். சுவாதி, ராம்குமார் மரணங்களைத் தேசியப் புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளோம்.
சுவாதி கொலை வழக்கு’ என்று ஒரு படம் தயாரானது. ‘காவல்துறையின் இயலாமையைத்தான் பதிவு செஞ்சுருக்கேன்’ என்று படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் என்னிடம் சொன்னார். இது தெரிந்துதான் அந்தப் படத்துக்கு சுவாதியின் அப்பா தடை கேட்கிறார். காவல்துறையும் படத்தைத் தடை செய்ய முயல்கிறது’’ என்றார் அழுத்தம் திருத்தமாக.
வழக்கறிஞர் ராம்ராஜ் சொன்ன விஷயங்கள் குறித்து விளக்கம் பெறுவதற்காக உதவி ஆணையர் தேவராஜைத் தொடர்பு கொண்டோம். ‘மீட்டிங்கில் இருக்கிறேன்’ என்று இரண்டு முறை கூறியவர், அதன்பிறகு நமது அழைப்பை ஏற்கவேயில்லை.
சுவாதியின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட பிலால் சித்திக்கிடம் பேசினோம். “எங்களை தயவுசெய்து நிம்மதியா இருக்க விடுங்க. சுவாதி மரணத்தில் சந்தேகம் இருப்பவங்க தாராளமா வழக்குப் போடுங்க. எங்களை விடுங்க. நான் எதுவும் பேச விரும்பல’’ என்றார் கெஞ்சல் தொனியில்.
சுவாதியின் முதலாமாண்டு அஞ்சலி நிகழ்ச்சியில் இருந்ததால் சுவாதியின் அப்பாவைத் தொடர்புகொள்ள இயலவில்லை.
அடுத்து நாம் ராம்குமார் பெரியப்பா ஆதிமூலத்திடம் பேசினோம். “எங்க பையனுக்கும், இந்தக் கொலைக்கும் சம்மந்தமில்லைங்க. என் தம்பிக்கு ஒரே பையன் ராம்குமார். அவனை இழந்து அவங்கம்மா பித்துப் பிடிச்ச மாதிரி இருக்காங்க. என் தம்பி பரமசிவமோ, மனநிலை பாதிக்கப்பட்டது போல இருக்காரு. இன்னும் அந்தப் பாதிப்பில் இருந்து மீள முடியல. சுவாதியைக் கொடூரமாக் கொன்ற குடும்பம்னு சமூகம் பேசுறதைத் தாங்கிக்க முடியல. உண்மையில ராம்குமார் அந்த கொலையைச் செய்யலைங்க. அவன் நிரபராதி. அது நிரூபணம் ஆனாதான் அவன் ஆத்மா சாந்தியடையும்’’ என்றார் கண்ணீரோடு.
சுவாதிக்கு முதலாமாண்டு அஞ்சலி செலுத்தும் நிலையிலும் அவர் மரணத்தைச் சுற்றிய மர்மங்கள் மட்டும் கன்னித்தீவு தொடராக நீண்டு வருகின்றன.
ஓர் உயிரைக் கொல்வது குற்றம் என்றால் உண்மைகளைக் கொல்வது பெருங்குற்றம்.