கொலம்பியாவில் படகு மூழ்கி விபத்து : 9 பேர் பலி, 28 பேர் மாயம்!!

 
கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் 170 பயணிகளை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 9 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதோடு 28 பேரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

படகில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றி சென்றமையாலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். படகு கரைக்கு அருகில் வரும் போது பாரம் தாங்காமல் மூழ்கியுள்ளது. அதில் பயணித்த பாதி பேர் மற்ற படகுகளின் மூலம் மீட்கப்பட்டனர்.

ஆனால் படகு மிக வேகமாக மூழ்கியதால் மற்றவர்களை காப்பாற்ற முடியவில்லை என மீட்புபணியினர் தெரிவிக்கின்றனர்.

உலகின் 2வது உயரமான கேபிள் கார் அறுந்து விழுந்து 7 பேர் பலி!!

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் குல்மார்க்கில் உள்ள உயரமான சுற்றுலா விடுதி மீது உலகின் இரண்டாவது உயரமான கொண்டோலா கேபிள் கார் நொறுங்கி விழுந்ததில் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.

​டெல்லியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தையும் மற்றும் மூன்று உள்ளூர் பணியாளர்களின் மரணத்தையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

குல்பர்க்கில் உள்ள மிக உயரிய சிகரங்களிலிருந்து இயக்கப்படும் ஆறு இருக்கைகளை கொண்ட கேபிள் கார் வலுவான காற்று காரணமாக துண்டிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னும், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆறு இருக்கைகளை கொண்ட கேபின்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தவித்து வருகின்றனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

டைல்லியை சேர்ந்த சுற்றுலா தம்பதி மற்றும் அவர்களுடைய இரு மகள்களின் சடலங்களை மீட்டுள்ளோம். இந்த விபத்தில் பராமரிப்பு பிரிவில் வேலைப்பார்த்து வந்த மூன்று உள்ளூர்வாசிகளும் பலியாகியுள்ளனர், என பாரமுல்லா மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரி இம்தியாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்விட்டரில் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

பலத்த காற்று வீசும்போது கேபிள் கார் சேவையை நிறுத்தி வைப்பதுதான் வழக்கமான நடைமுறை. அதைச் செய்யாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வதந்திகள் தொடர்பில் மஹேல பதில்!!

இந்திய அணியின் முழுநேர பயிற்றுவிப்பாளராக எதிர்பார்க்கவில்லை என, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் பதவி மஹெலவுக்கு வழங்கப்படவுள்ளதாக, அண்மையில் செய்திகள் வௌியாகின. இந்தநிலையில், இதனை மறுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், தான் தற்போது இந்தியன் பிரிமியர் லீக் போட்டி அணியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பங்களாதேஷ் பிரிமியர் லீக் அணியான குல்னா டய்டன்ஸ் ஆகியவற்றின் பயிற்சியாளராக தொடர்ந்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

7 கோடி பணம் என்னுடையது அல்ல : மறுக்கும் நடிகை!!

ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 7 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சினிமா தயாரிப்பு மேலாளர்கள் ஸ்ரீநிவாஸ், ரவி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனை நடந்த நிறுவனத்தின் முதல் மாடியில் நடிகை ஜீவிதாவின் சினிமா தயாரிப்பு அலுவலகம் உள்ளது. மேலும் கைதான ஸ்ரீநிவாஸ், நடிகை ஜீவிதாவின் மேலாளர் ஆவார்.

இதனால் பறிமுதல் செய்யப்பட்ட 7 கோடி ஜீவிதாவுக்கு சொந்தமானதா என்றும், ஸ்ரீநிவாஸ் அவரது சகோதரர் என்றும் தகவல் பரவியது. இதுதொடர்பாக விளக்கம் அளித்து நடிகை ஜீவிதா கூறியதாவது..

கைதாகி உள்ள ஸ்ரீநிவாஸ் எனது கணவர் நடித்து வரும் கருடலேகா படத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதேபோல் பலருக்கும் மேலாளராக பணியாற்றி வருகிறார். எனது சகோதரர் பெயர் முரளி ஸ்ரீநிவாஸ். அவர் சிறுநீரகம் பாதிப்பு அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட 7 கோடி என்னுடையது அல்ல. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

டெங்கு உயிரிழப்புக்களுக்கு குப்பைகளே காரணம்!!

கொழும்பில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அதிகரித்து வரும் குப்பைகள் தான் காரணம் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை விரைவாக சமாளிக்கத் தவறினால் சூழ்நிலை மேலும் மோசமாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த ஏப்ரலில் கொழும்பில் குப்பை மேடு சரிந்ததில் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததை தொடர்ந்து, நகரில் குப்பைகளை அள்ளும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. தெருக்களில் தேங்கும் அழுகிப்போன குப்பைகள் அதிகரித்து வருவதால் கொசுக்களின் இனப்பெருக்கும் அதிகரித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.

-பிபிசி-

3 பிள்ளைகளை தீ வைத்து எரித்த தந்தை தானும் தற்கொலை!!

மாத்தறை – கம்புறுபிடிய பகுதி வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எரிகாயங்களுடன் மூன்று சிறுவர்களின் சடலமும், அவர்களது தந்தை எனக் கருதப்படும் நபரின் சடலம் தூக்கில் தொங்கி பலியான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது.

இதன்படி, தனது 16, 14 மற்றும் 10 வயதான பிள்ளைகளுக்கு தீ வைத்த 44 வயதான குறித்த நபர், பின்னர் தூக்கி தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

மாத்தறையில் இரண்டு பெண் சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்ட சிறார்களின் தாய் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குடும்பத் தகராறொன்றின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

தபால் ஊழியர்கள் மற்றும் அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு!!

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி, நுவரெலியா மற்றும் காலி கோட்டை தபால் நிலையங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதை உடன் நிறுத்துதல், கொழும்பு கோட்டை ஜனாதிபதி வீதியிலுள்ள மத்திய தபால் பறிமாற்றகத்தில் தபால் நிலையமொன்றை ஸ்தாபித்தல் மற்றும் 2006 ஆம் ஆண்டு சுற்று நிரூபத்திற்கு அமைய ஊழியர்களை இணைத்து கொள்ளும் செயற்பாடுகளில் தபால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கலை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை எவ்வித உரிய தீர்வும் வழங்கப்படவில்லை என்பதால் பணிப்பகிஷ்கரிப்பு மீள ஆரம்பிக்கப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பில் 25,000 மேற்பட்ட தபால் ஊழியர்கள் இணைந்துக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  எவ்வாறாயினும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துக் கொள்ளப்போவதில்லை என ஐக்கிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் எச்.ஏ.ஆர்.நிஹால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்னவிடம் வினவியபோது…

தபால் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு பகிஷ்கரிப்பை முன்னெடுப்பது நியாயமில்லை என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தபால் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக திட்டமிடப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுமாறும் தபால் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இரண்டு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கோரி அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மாகாண சுகாதார சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமராநந்த வடுகே குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்தில் பணியாற்றிய 11 சாரதிகளை வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், உடன் அமுலுக்கு வரும் வகையில் அந்த இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை சில மாகாணங்களில் பணியாற்றும் சுகாதார துறைக்கான சாரதிகளின் நியமனங்களை நிரந்தரமாக்குமாறும் வலியுறுத்தப்பட்டமைக்கு அமைவாக மாகாண அதிகாரிகள் செயற்படவில்லை எனவும் அகில இலங்கை மாகாண சுகாதார சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமராநந்த வடுகே தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இதற்கான பணிப்புரைகளை விடுத்துள்ள நிலையில் மாகாண அதிகாரிகள் அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே உடன் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார துறை சாரதிகளுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறும் அகில இலங்கை மாகாண சுகாதார சாரதிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கை!!

 
புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடு பூராகவும் விழிப்புணர்வூட்டும் செயற்பாட்டில் மூவின இளைஞர், யுவதிகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளால் கடந்த 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘மக்கள் ஆட்சிக்கான அரசியல் யாப்பு’ என்னும் தொனிப்பொருளினான இவ் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் கீழ் 1250 விழிப்புணர்வு கூட்டங்களை கிராம மட்டத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த கால அரசியல் யாப்புக்களில் உள்ள குறைபாடே தமிழ் மக்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளியது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நாட்டில் உள்ள இனப்பிரச்சனையை தீர்ப்பதற்காக கொண்டு வருவதாக கூறப்படும் புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மூவின மக்களும் இன, மத, பேதமின்றி ஐக்கியமாக வாழ வழி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.

இதில் மூவின இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து தமது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா செல்வோருக்கு ஓர் முக்கிய செய்தி : விசா கட்டணம் அதிகரிப்பு!!

இந்தியாவிற்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி ஒரு ஆண்டுக்கான சுற்றுலா விசா கட்டணம் 100 டொலரில் இருந்து (ரூ. 6,449) 153 டொலராக (ரூ.9,867) அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் பிரிட்டன் மக்கள், ஒரு ஆண்டுக்கான சுற்றுலா விசாவிற்கு 162 டொலருக்கு பதில் (ரூ.10,448), 248 டொலர் (ரூ.15,994) செலுத்த வேண்டும்.

ஐந்து ஆண்டுகளுக்கான விசா கட்டணத்திற்கு, 484 டொலருக்கு (ரூ.31,215) பதில், 741 டொலர் (ரூ.47,790) செலுத்த வேண்டும் என இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கனடா, அயர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து வருபவர்கள் வேலை வாய்ப்புக்கான விசாவிற்கு 300 டொலருக்கு (ரூ.19,348) பதில், 459 டொலர் (ரூ.29,603) செலுத்த வேண்டும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் புதிய விசா கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ள நிலையில், இந்திய மத்திய அரசும் இந்தியாவிற்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாடு திரும்ப உதவி கோரும் ஸ்கொட்லாந்து பெண்!!

இலங்கையில் கணவன் கொலை செய்யப்பட்ட நிலையில், தான் நாடு திரும்ப உதவுமாறு ஸ்கொட்லாந்து பிரஜையான பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

டயனி டி சொய்சா என்ற இந்த பெண்ணின் கணவரான 26 வயதான பிரியஞ்ஜன டி சொய்சா கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த பெண் கடந்த வருடம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோவில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்து விட்டு இலங்கையில் தனது கணவருடன் குடியேறியுள்ளார்.

அனைத்தையும் கைவிட்டு இலங்கையில் வந்து குடியேறியதாகவும் தற்போது சகலமும் துயரமாக முடிந்து விட்டதாகவும் டயனி கூறியுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சென்றிருந்த டயனி, தான் தங்கியிருந்த ஹொட்டலில் பணி புரிந்த பிரியஞ்ஜனவை சந்தித்துள்ளார்.

இருவரும் தமது தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டதுடன் ஸ்கொட்லாந்து திரும்பிய டயனி இணையத்தளம் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

இதனையடுத்து ஏழு மாதங்களுக்கு பின்னர் டயனி, விடுமுறையில் இலங்கை சென்றிருந்ததுடன் கடந்த 2012 ம் ஆண்டு பிரியஞ்ஜனவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

டயனி, அஹூங்கல்லை நகரில் உள்ள கணவனின் நகருக்கு பல முறை சென்றுள்ளார்.

கணவனின் குடும்பம் வறிய குடும்பம் என்பதால், ஸ்கொட்லாந்தில் உள்ள தனது வீட்டை விற்று இலங்கையில் வீடு ஒன்றை கட்டியதுடன் கணவனுக்கு தொழில் செய்ய மினி பஸ் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 30ம் திகதி நண்பர்கள் வீட்டில் இருந்த போது தனது கணவன் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும் கணவரிடம் கப்பம் கேட்டு சிலர் மிரட்டி வந்துள்ளதாகவும் டயனி கூறியுள்ளார்.

மேலும் தனது கணவருக்கு இரண்டாவது மனைவி இருப்பதாக டயனி சந்தேகம் கொண்டுள்ளார்.

வீட்டில் திருமண பதிவு பத்திரம் ஒன்றை பார்த்ததாகவும் அது திருமணம் பத்திரம் தனது கணவருடையதாக இருக்க வேண்டும் அதில் திருமணப் பெண்ணின் வயது 18 என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு பிரியஞ்ஜனவுக்கும் தனக்கும் இடையில் 33 வருட வயது வித்தியாசம் எனவும் டயனி குறிப்பிட்டுள்ளார்.

கணவனின் மரணத்தின் போதே தான் அவரை மிகவும் வயதானவர் என்பது தனக்கு தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

கணவன் இறந்துள்ள நிலையில், இலங்கையில் உள்ள வீட்டை விற்பனை செய்து விட்டு, ஸ்கொட்லாந்து சென்று தனது வாழ்க்கை மீள கட்டியெழுப்புவதற்காக சட்டத்தரணி ஒருவரின் உதவியை எதிர்பார்த்துள்ளதாகவும் இது சம்பந்தமாக பிரித்தானிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் டயனி குறிப்பிட்டுள்ளார்.

விடியும் வரை பல்கனியில் பதுங்கியிருந்த காதலன் : காதலி கொடூரமாக படுகொலை!!

கொட்டாவ மத்தேகொட வீதியில் கோடீஸ்வர வர்த்தகர் குடும்பத்தின் மூத்த மகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹக்மன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம பதில் நீதவான் பிரியங்கா மந்துமஹேவா பட்டபெதிகே முன்னால் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் கொலை செய்வதற்கு முதல் நாளான கடந்த 21ஆம் திகதி வீட்டுக்குள் இரகசியமாக நுழைந்து மூன்றாம் மாடி பல்கனியில் விடியும் வரை ஒழிந்திருந்துள்ளார். பின்னர் தரிந்தியின் தாய் மற்றும் தந்தை கொட்டாவ ஹொரனை வீதியில் அமைந்துள்ள அவர்களின் கடைக்கு செல்லும் வரை காத்திருந்திருந்து இந்த கொலை செய்துள்ளார் என விசாரணகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொலையாளி தொடர்பில் பல்வேறு சாட்சிகள் CCTV காணொளியின் ஊடாக வெளியாகியுள்ள நிலையில், குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து, சந்தேக நபர் சட்டதரணிகள் ஊடாக கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

அங்கு குறித்த கொலை தொடர்பில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

“எனக்கும் தரணிக்கும் இடையில் இரண்டு வருட காதல் தொடர்பு காணப்பட்டது. இருவரின் சம்மதத்திற்கு மத்தியில் சில காலங்களுக்கு முன்னர் இந்த தொடர்பு நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் தான் மாத்தறை ஹக்மன பிரதேசத்தை சேர்ந்த வேறு பெண்ணை காதலித்தேன். எனினும் அந்த பெண்ணுக்கு தரணி தொடர்ந்து தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக தனது இரண்டாவது காதல் தொடர்பும் முறிந்து விட்டது.

அந்த கோபத்தினால் நான் அவரை கொலை செய்து விட்டேன்”.. என அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக 29 வயதான தரிந்தி ஆலோக்கா படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரின் உடலில் 20 கத்திக் குத்துக்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கொழும்பு நகரில் குப்பை வீசிய 454 பேருக்கு ஏற்பட்டநிலை!!

கொழும்பு நகரங்களில் குப்பைகளை வீசிச் சென்ற 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கொழும்பு நகரங்களில் பிரதான இடங்களில் குப்பை வீசிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 454 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் வாகனங்களில் வந்து குப்பைகளை வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

வவுனியாவில் திருடப்பட்ட நகைகள் பிடிபட்டது : சந்தேகநபர் தப்பியோட்டம்!!

திருடப்பட்ட நகைகள் மூன்றரைப் பவுண் நகைகள் வவுனியா பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அத் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் தப்பி ஓடியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மத்திய பேரூந்து நிலையப்பகுதியில் குறித்த நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் மது, போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிசார் கடமையில் நின்ற போது சந்தேகத்திற்கு இடமான முறையில் கைப்பை ஒன்றுடன் நின்ற ஒருவரது கைப்பையை சோதனை செய்ய முயன்ற போது குறித்த நபர் தனது கைப்பையை விட்டுவிட்டு அவ் இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

அக் கைப்பையை மீட்ட பொலிசார் அதனை சோதனை செய்த போது அதில் காப்பு, தோடு, மோதிரம் உள்ளடங்கிய மூன்றரைப் பவுண் நகைகள் காணப்பட்டுள்ளது.

அதனை மீட்ட மது போதைவஸ்து தடுப்பு பிரிவுப் பொலிசார் அதனை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த நகைகள் திருடப்பட்ட நகைகளாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள பொலிசார் அவற்றை தொலைத்தவர்கள் உரிய வகையில் அடையாளம் காட்டி அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்!!

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது இன்னுமொரு முஸ்லிம் குழு தாக்குதல் மேற்கொண்டமையால் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று(26.06.2017) காலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் நாடு பூராகவும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல்திடல் தொழுகையில் முஸ்லிம்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அவ் இடத்திற்கு சென்ற பிறிதொரு முஸ்லிம் குழுவினர் அவ்வாறு வழிபடுவது தவறு எனவும் அவ் வழிபாட்டை நிறுத்துமாறு கோரியும் தர்க்கத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்ட ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா உலுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய நுழைவாயில் திறப்பு!!

 
நேற்று (25.06.2017) வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய முன் மதில் மற்றும் நுழைவாயில் கதவு என்பன ஆலயத்தின் ஆரம்பகால உறுப்பினர்களான திரு.செல்லப்பா மற்றும் திரு.கனகரெட்ணம், ஆலய நிருவாக சபை உறுப்பினர் திரு.புலேந்திரன் ஆகியோர்களால் சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது.

ஆலய பரிபாலனசபைத் தலைவர் ம.நீலாக்காரன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் நரசிங்கர் ஆலய சீருடை அறிமுக நிகழ்வும் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பெரும்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் வரும் சனிக்கிழமை(01.07.2017) வருடாந்தத் திருவிழா மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகர பள்ளிவாசலில் விஷேட இப்தார் நிகழ்வு!!

 
வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (24.06.2017) விஷேட இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், முஸ்ஸிம் சமுகத்தினர், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.​