வாயால் எழுதி பரீட்சையில் சாதித்த சிறுவன்!!

 
இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வாயால் தேர்வு எழுதி சாதித்துள்ளதுடன், பிரித்தானியாவின் ஸ்டீபன் ஹாக்கிங் தான் தன்னுடைய இன்ஸ்பிரேசன் என்று கூறியுள்ளான்.

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரைச் சேர்ந்த சிறுவன் துகின் தேவு. இவன் பிறக்கும் போதே arthrogryposis multiplex congenita என்கிற நோய் தாக்கியுள்ளது.

இதனால், கருவில் இருக்கும்போது, கை, கால் மூட்டுகளில் வளர்ச்சி குன்றியது. பிறந்தது முதல் இருபது அறுவைசிகிச்சைகள் செய்தும் எந்தப் பலனுமில்லை. மண்ணைத் தொட்டது முதலே வீல்சேர் வாழ்க்கை.

இந்த சூழ்நிலையிலும் துகின் தேவு சி.பி.எஸ்.இ தேர்வும் எழுதியுள்ளார். முழுத்தேர்வையும் வாயில் பேனா பிடித்தபடி எழுதியிருந்தார். எழுதுவது மட்டுமல்ல, செல்போனை இயக்குவதிலிருந்து பல விஷயங்களை வாயினாலேயே செய்ய கற்றுக்கொண்டார்.

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வில், துகின் 88 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்று அசத்தியிருக்கிறார்.

இதனால், பெற்றோரும் துகினும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். துகினின் இலக்கு 95 சதவிகிதமாக இருந்தது. மதிப்பெண் குறைந்தது சற்று வருத்தத்தைத் தந்தாலும், மேற்படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகக் கூறுகிறார்

ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் ஐஐடி நுழைவுத்தேர்வுக்காகத் தன்னைத் தயார்படுத்திவருகிறார். கோட்டாவில் உள்ள ஆலென் கரியர் இன்ஸ்டிட்யூட், ஐஐடி பயிற்சியை முற்றிலும் இலவசமாக வழங்கவுள்ளது.

பிரித்தானியாவின் ஸ்டீபன் ஹாக்கிங்போல ஆக வேண்டும். வருங்காலத்தில் ஐஐடி-யில் சேர வேண்டும் என உற்சாகத்துடன் கூறும் துகின், கடந்த 2012-ஆம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும், 2013-ஆம் ஆண்டு சிறந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைக்கான விருதையும் பெற்றிருக்கிறார்

துகின் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ஸ்டீபன் ஹாக்கிங், துகின் இருவரையும் தாக்கிய நோய்கள் வெவ்வேறானவை.

ஆனால், இருவரது மூளை வளர்ச்சி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால், இதுபோன்றோருக்கு மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் 17,500 வீடுகள் சேதம்!!

அடைமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும், 2 ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்வடைந்துள்ளது. காணாமல் போயுள்ள 79 பேரைத் தேடும் பணி தொடர்கின்றது. 147 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயந்தவர்களும், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டவர்களும் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். இதனால் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை 21 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

பகுதியளவில் சேதமடைந்துள்ள வீடுகளைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முழுமையாக தேசமடைந்துள்ள வீடுகளுக்கு அரசு நட்டஈடு வழங்கவுள்ளது.

அதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நேற்றிலிருந்து மீண்டும் ஆரம்பமாகின. எனினும், வெள்ளநீர் இன்னும் வழிந்தோடாத பகுதிகளிலுள்ள சில பாடசாலைகள் தொடர்ந்தும் பூட்டப்பட்டிருந்தன.

இரத்தினபுரி உள்ளிட்ட சில இடங்களில் மாணவர்கள் வர்ண உடையுடன் பாடசாலைகளுக்கு வருகின்றனர். சீருடை வழங்கப்படும்வரை வர்ண உடை பாவிப்பதற்குரிய அனுமதியை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.

கொப்பி, புத்தகம் உள்ளிட்ட வசதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு செய்துகொடுக்கப்படவுள்ளது. ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சால் விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்ணொருவரை பணய கைதியாக பிடித்த தீவிரவாதி : பொலிஸார் சுட்டுக்கொலை!!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பொது மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த ஒருவரை முற்றுகையிட்ட பொலிஸார் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

பிரிங்டன் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றமையை கேள்வியுற்ற பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர். இதன்போது தீவிரவாத தடுப்பு பொலிஸார் கனரக ஆயுதங்களுடன் அங்கு சென்றனர்.

அதன்போது, மாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்தவர்கள் ஆயுததாரி ஒருவரினால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனா். அவா்களை மீட்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டனர்.

Yacqub Khayre என்ற பெயருடைய மற்றொரு நபர் அங்கு ஒரு பெண்ணை பணய கைதியாக பிடித்து வைத்திருந்தார். Khayre என்ற 29 வயதுடைய நபரை முற்றுகையிட்ட போது அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பெயரில் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது ஆயுததாரிக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் போது பொலிஸார் ஆயுததாரியை சுட்டுக்கொன்றனர்.

இந்த நிலையில் அங்கு துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளும் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த பணையக்கைதியும் காயமடைந்துள்ளார்.

ஏற்கனவே பலியானவர், ஒரு கட்டட ஊழியர் எனவும் அவர் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததாகவும் விக்டோரியா பொலிஸ் தலைமை ஆணையர் Graham Ashton தெரிவித்துள்ளார்.

அங்கு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக Khayre பொலிஸ் அதிகாரிகளை அங்கு வரவழைத்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56000 டெங்கு நோயாளர்கள்!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 56,000 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தெற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகமான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளங்காணப்பட்டுள்னர்.

கொழும்பு மாவட்டத்தில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 12,610 ஆகும். கொழும்பு மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 2,994 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8,324 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தில் 4,256 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தெற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனியாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு பெரிய அளவில் உடல்நலக் கோளாறு ஏற்படும்!!

தற்போதைய காலக் கட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தனி படுக்கை அறை கொடுத்து அதில் டி.வி. வசதியும் செய்து கொடுக்கின்றனர்.

அதனால் தங்கள் அறை கதவை மூடிக் கொண்டு மணிக் கணக்கில் அவர்கள் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டே இருக்கின்றனர்.

அவ்வாறு டி.வி.பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது பெரிய அளவில் உடல்நலக் கோளாறு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது அவர்களுக்கு உடல் எடை அதிகரித்து குண்டாக தெரிவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அறையில் தனியாக அமர்ந்து டி.வி.பார்க்கும் 7 வயது சிறுமிகளில் 30 சதவீதம் பேரின் உடல் எடை அதிகரித்தது. அதே நேரத்தில் டி.வி. பார்க்காத 11 வயது சிறுமிகளுக்கு உடல் எடை அதிகரிக்கவில்லை.

அதே நேரத்தில் தனியாக அறையில் அமர்ந்து டி.வி. பார்க்கும் சிறுவர்களில் 20 சதவீதம் பேரின் உடல் எடை அதிகரிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் சுதந்திரமாக டி.வி. பர்ப்பதால் அவர்களது உடல் எடையும், கொழுப்பும் அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ள 5 நாடுகள்!!

கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை 5 நாடுகள் துண்டித்துள்ளன. தமது நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதற்கு மூன்று வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கட்டார் அரசு கவலை தெரிவித்துள்ளது.

கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிக்கவும் எல்லைகளை மூடிவிடவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன்,எகிப்து மற்றும் யேமன் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன.

இந்தத் தீர்மானம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அடிப்படைகள் அற்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் எடுக்கப்பட்டுள்ளதை கட்டார் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதாக கொழும்பிலுள்ள கட்டார் தூதரகம் அறிவித்துள்ளது.

அண்மைக்காலமாக கட்டார் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற முரண்பாடுகளை தூண்டும் பிரசாரங்களின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாகவும் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எகிப்து அரசின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் கட்டார் மீது மேலாதிக்கத்தை திணிக்கின்ற அதன் இறையாண்மையை மீறுகின்ற செயற்பாடாகும் எனவும் கட்டார் அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்த குற்றத்திற்காக சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை இடைநிறுத்தியுள்ளது.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கள் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு கட்டார் ஆதரவளிப்பதாக இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

கட்டாருடனான வான், கடல் மற்றும் தரை எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக சவூதி அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத ஆபத்துக்களில் இருந்து தேசத்தை காத்துக் கொள்ளும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பணியாற்றும் கட்டார் இராஜதந்திரிகளை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

லொறியுடன் பஸ் மோதியதால் 22 பேர் உடல்கருகி பலி!!

நெடுஞ்சாலையில் பயணித்த லொறியுடன் பஸ் மோதியதால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி சுமார் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில பரேலி நெடுஞ்சாலையில், தலைநகர் புது டில்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநில கோன்டா மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்தமையால், எதிரில் வந்த லொறியுடன் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் குறித்த விபத்தின் காரணமாக பஸ் மற்றும் லொறி என்பவற்றில் வேகமாக தீ பரவியதால் பஸில் பயணித்தவர்களில் 17 சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததுடன், 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 20 பேர் வரையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

200 யானைகளின் எடை கொண்ட ரொக்கெட் விண்ணில் பாய்ந்தது!!

நாற்பத்து மூன்று மீட்டர் உயரமுள்ள ஜிஎஸ்.எல்.வி எம்.கே 3 – டி1 (GSLV MkIII-D1) ரொக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

ராட்சத ராக்கெட் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் இந்த ராக்கெட், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து செலுத்தப்படும் சக்திவாய்ந்த ராக்கெட்டாகும். மேலும் இதன் எடை முழுவதுமாக வளர்ந்த 200 யானைகளின் எடையாகும்.

ஜி.எஸ்.எல்.வி.எம்.கே 3-டி1 புவியோடு இணைந்த சுற்று வட்டப்பாதையில் 4000 கி.கி எடை கொண்ட செயற்கைக் கோளையும், மேலும் சாதாரணமான புவி சுற்றுப் பாதையின் சற்று கீழ் உள்ள பாதையில் 10,000கிகி எடையுள்ள செயற்கைக்கோளையும் செலுத்தும் வல்லமை கொண்டதாகும்.

திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரோஜன் ஆகியவற்றை எரிப்பொருளாக பயன்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதீத குறைவான எரிபொருளில் இயங்கும் எஞ்சினால் இந்த ராக்கெட் இயங்கவுள்ளது.

மேலும், இந்த ராக்கெட் 3,136 கிலோகிராம் எடை கொண்ட ஜி-சாட்-19 தொடர்பு செயற்கைக்கோளை சுமந்துச் சென்று, பூமிக்கு 36,000 கி.மீ தூரத்தில் செலுத்தவுள்ளது.

ஜிசாட் – 19 செயற்கைக்கோள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிலிருந்து ஏவப்படும் மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகும்.

முதல்முறையாக ஜி-சாட் 19 செயற்கைக்கோள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லித்தியத்தால் ஆனா மின்கலங்களால் இயங்கப்படவுள்ளது.

உயர் கற்றை அகலம் கொண்ட சமிக்ஞை கடத்தியை தவிர்த்து, மின்னூட்டத் துகள்களின் இயல்பு மற்றும் செயற்க்கைக்கோள் மற்றும் அதன் மின்னணு பாகங்களில் விண்வெளி கதிர்வீச்சின் தாக்கம் குறித்து கண்காணிக்கவும், அறிந்து கொள்ளவும் புவியின் பகுதிகளில் கதிரியக்கம் மற்றும் ஒளியை கணக்கிடும் கருவியை செலுத்தவுள்ளது.

சிறிய வடிவ வெப்ப குழாய்கள், ஃபைபர் ஆப்டிக் கைரோஸ்கோப், மைக்ரோ எலக்ட்ரோ மெகானிகல் சிஸ்டம் ஆசிலிரோமீட்டர் மற்றும் உயர் பாண்ட்விட்த்தை பயன்படுத்தும் சமிக்ஞை கடத்தி என ஜிசாட்-19 செயற்கைக்கோளில் சில மேம்பட்ட அம்சங்களும் உள்ளன.

இந்த முயற்சி வெற்றியடைந்துவிட்டால், புவியின் சுற்றுவட்டப் பாதையில் 4 டன் எடைகொண்ட செயற்கைக் கோள்களை இந்திய நாட்டிலிருந்து செலுத்த முடியும் என்ற நிலையை இது உருவாக்கும் என இந்த முயற்சியில் முக்கிய நபராக திகழும் இஸ்ரோ தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் தெரிவித்துள்ளார்.

இன்று வரை, இந்தியா, 2,300 கி.கி எடைக்கு அதிகமான தொலைதொடர்பு செயற்கைக் கோள்களை செலுத்த வெளிநாடுகளில் தயாரித்த ராக்கெட்டுகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருந்தது.

640 டன் எடை கொண்ட ராக்கெட்டை செலுத்துவது இஸ்ரோவின் சாதனைகளில் மேலும் ஒன்றாகும்.

இந்த ராக்கெட் 104 செயற்கைக் கோள்களை ஒரே சமயத்தில் செலுத்தி, ஜூன் 2014 ஆம் ஆண்டு ஒரே முறையில் 39 செயற்கைக் கோள்களை செலுத்திய ரஷியாவின் சாதனையை முறியடிக்கவுள்ளது.

15 வருடங்களாக உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட் எதிர்காலத்தில், விண்வெளிக்கு இந்தியா மனிதர்களை அனுப்ப உதவக்கூடும். மேலும் இதற்காக அரசாங்கத்திடமிருந்து 15,000 கோடி ரூபாயை இஸ்ரோ கோரியுள்ளது.

கட்டாரில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு சிக்கல்!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டாரில் இருந்து வரும் பயணிகள் நாணயங்களை மாற்றீடு செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விமான நிலையத்திலுள்ள வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாயாக மாற்றித்தர மறுக்கின்றமையே இதற்குக் காரணம் என, பயணிகள் முறையிட்டுள்ளதாக, விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை. ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கின் சில நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளன என, நேற்றையதினம் செய்திகள் வௌியாகின.

தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டியே அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இதனையடுத்து, அந்தநாட்டுக்கான விமான சேவைகளை இடைநிறுத்துவதாக எமிரேட், பிளை துபாய், எதிஹாத் எயார்லைன்ஸ் ஆகியன அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா பன்றிக்கெய்தகுளம் அ.த.க.பாடசாலையில் உலக சுற்றுச் சுழல் தினம் 2017!!

 
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (05.06) வவுனியா பன்றிக்கெய்தகுளம் அ.த.க.பாடசாலையில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வானது வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் வி.சிறிஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்களுடன் பாடசாலை மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

அத்துடன் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சுற்றுச் சூழல் தொடர்பான கண்காட்சி நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கே.பரந்தாமன் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து சுற்றுச் சூழல் தொடர்பான கண்காட்சி நிகழ்வையும் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்து நிகழ்வை பார்வையிட்டதுடன் தயாரிக்கப்பட்ட பொருட்களின் செயற்பாடுகள் குறித்து மாணவர்களிடம் விளக்கங்களை கேட்டறிந்துகொண்டார்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்களால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுடன் அதில் சிறப்பான தயாரிப்புக்களை மேற்கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.

முட்டையின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!!

நாட்டில் சில வர்த்தக நிலையங்களில் முட்டையின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 15 ரூபாவாக இருந்த முட்டையின் விலை தற்போது 8 ரூபாவாக விற்கப்படுகின்றது.

இதனால் தங்களுக்கு 15,000 தொடக்கம் 20,000 ரூபா வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், முட்டை ஒன்றின் உற்பத்தி விலை 11 ரூபாவாக இருக்கின்ற போது, அதன் விற்பனை விலை 8 ரூபாவாக இருப்பதால் தங்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வு!!

 
வவுனியா விபுலாந்தா கல்லூரியில் இன்று (05.06) திங்கட்கிழமை சர்வதேச சூழல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் இ.மாதவன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக தெற்கு கல்வி வலய சுற்றாடல் ஆலோசகர் ஏ. ஜெய்கீஸன் கோட்டக் கல்வி வலய சுற்றாடல் ஆலோசகர் திருமதி ஸ்ரீரஞ்சன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

பாடசாலைப்பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களின் விழிப்புணர்வு தொடர்பான பேச்சுக்கள், நாட்டியம் நாடகம் என்பன இடம்பெற்றன.

வரவேற்புரையை ஆசிரியர் திரு.ஈஸ்வரன் வழங்கினார். பாடசாலை கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கென இலண்டன் V3 அமைப்பினர் கழிவகற்றும் வாளிகளை அன்பளிப்பு செய்தனர். இதனை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் வழங்க ஆசிரியர் குரூஸ் பெற்றுக்கொண்டார். அதிபர் விருந்தினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன. சுற்றாடல் குழு பொறுப்பாசிரியர் திருமதி வசந்தி ஸ்ரீநிவாசன் நன்றியுரை வழங்கினார்.

சூழல் தொடர்பான விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்வதற்கு இந்நிகழ்வு பெறுமதி மிக்கதாக அமைந்தது. ஓவியம் கட்டுரை கண்காட்சிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மாங்குளத்தில் பருப்புக் கறி சட்டிக்குள் விழுந்த 9 மாதக் குழந்தை!!

அடுப்பில் இருந்து இறக்கி வைக்கப்பட்டு, கொதி நிலையில் காணப்பட்ட பருப்புக்கறி சட்டிக்குள் விழுந்து, ஒன்பது மாதக் குழந்தை, எரிகாயங்களுக்கு உள்ளான சம்பவம், மாங்குளம் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குழந்தை மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சுலக்ஷன் அபிசாந் என்ற ஒன்பது மாதக் குழந்தையே இவ்வாறு எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குழந்தையை அருகில் இருத்தி விட்டு, தாயார் சமையில் வேலையில் கவனம் செலுத்தியுள்ளார். இதன்போது, அடுப்பில் சமைக்கப்பட்ட பருப்புக் கறியை கொதி நிலையில் இறக்கி கீழே வைத்து விட்டு இதர வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, தவறுதலாக குழந்தை பருப்புக் கறி சட்டிக்குள் விழுந்துள்ளது

யாழில் பணப்பிரச்சினை காரணமாக இளைஞன் குத்திக் கொலை!!

பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலவாய் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான குறித்த இளைஞன் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் உடல் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் கிடைத்த பாரிய பூசணி : வியப்பில் தம்புள்ளை வர்த்தகர்!!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து பாரிய பூசணிக்காய்கள் கிடைத்துள்ளன.

சந்தையில் ஒரு கிலோ கிராம் பூசணிக்காய் 110 முதல் 120 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த பூசணிக்காய்களுக்குள் பாரிய அளவிலான பூசணிக்காய் ஒன்று சிக்கியுள்ளது. அதன் நிறை 28 கிலோ 100 கிராம் ஆகும்.

இந்த பூசணிக்காய் கிட்டத்தட்ட 3160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரியளவில் பூசணி கிடைத்தமையால் நல்ல விலைக்கு விற்க முடிந்ததாக தம்புள்ளை சந்தை வர்த்தகர் தெரிவித்துள்ளார். இது குறித்து வர்த்தகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிரித்துக் கொண்டிருந்த நண்பிக்கு இப்படியொரு நிலையா : நண்பனின் உருக்கமான வேண்டுகோள்!!

ரயில் பாதையில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட மாணவி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தவறான விடயங்கள் பரப்பப்பட்டு வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேராதனை பல்கலைக்கழக மாணவி ஒருவர் ரயில் பாதையில் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தொடர்பில் போலி தகவல்கள் வெளியிடுவதனால் நண்பர்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் தனது நண்பி தவறான முறையில் விமர்சிக்கப்படுவது தொடர்பில் பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “தரணி அல்லது BPK. அப்படி தான் நாம் அவரை அழைப்போம். அவர் எந்த நேரமும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஒரு பெண். இன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் ஒருவராக மாறியுள்ளார்.

அவரது மரணத்தை பலர் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார்கள். பலர் அவர் தற்கொலை செய்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்கள். பல பேஸ்புக் பக்கங்களில் அவரது மரணத்திற்கு கதை ஒன்றை உருவாக்கி விமர்சித்து வருகின்றனர்.

இவற்றில் பல கதைகள் பிழையானவை. தரணியை உண்மையாக நேசிப்பவர்களுக்கு, அவரது மரணத்தினால் வருத்தத்தில் உள்ளவர்களுக்கு இவ்வாறான விடயங்கள் மேலும் வருத்தமளிக்கின்றது.

உண்மையாக சிலர் வெளியிட்டுள்ள பின்னூட்டங்களை பார்ப்பதற்கு அசிங்கமாக உள்ளது. அவர்களில் பலர் குறைந்த பட்சம் அவரை பார்த்ததில்லை, பேசியதில்லை எனினும் மரணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஒரு தவறான தீர்மானத்தினால் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. எனினும் ஒரு தவறினால் அவர் இதுவரை அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு செய்த நல்ல விடயங்களை மறந்துவிட முடியாது.

அவரது தற்கொலை புகைப்படங்கள் பகிர்வதனை தவிர்த்து கொள்ளுமாறு அனைவரிடம் தயவாக கேட்டு கொள்கின்றேன். அவற்றில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? அவதானம் குறித்து காட்டுவதற்கு முயற்சிக்கின்றீர்கள்? உண்மையாக நல்ல மனது இருந்தால் அந்த அப்பாவி சிரிப்புடனான அழகான புகைப்படங்களை பகிருங்கள்.

தரணி முட்டாள் பெண் அல்ல, அவர் பல்கலைக்கழத்திற்கு வரும் அளவிற்கு திறமையானவர், விசேட பட்டதாரி பட்டம் ஒன்றையும் வெற்றிகரமாக அவர் பெற்று கொண்டார்.

எனினும் ஒரு வருத்தமான விடயம் அவரது வாழ்க்கையை அழித்து விட்டது. எங்களிடம் இருந்து அவரை தூரப்படுத்தியது . அவரை விமர்சிப்பதற்கு முன்னர், உங்கள் வாழ்க்கையில் எத்தனை முறை உடைந்து போனீர்கள் என்ற விடயத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

எனினும் நீங்கள் அதனை தாங்கி கொண்டு வாழ்வதனாலேயே இந்த பதிவை வாசிக்கின்றீர்கள். எனினும் தரணியினால் அவரை கட்டுப்படுத்தி கொள்ள முடியவில்லை. நாம் அனைவரும் மனிதர்கள். நாங்களும் தவறு செய்கின்றோம்.

சில விடயங்கள் பெரிய பிரச்சினையாகி விட்டால் அதனால் துன்பங்களை அனுபவிக்கின்றோம். இறுதியாக தரணி பட்டம் பெற்ற தினத்தன்று, பட்டம் பெறுவதற்கு முன்னர் தனது சந்தர்ப்பத்திற்காக சிரித்த முகத்துடன் காத்திருந்த புகைப்படத்தை பதிவிடுகின்றேன்… என குறிப்பிட்டு அவர் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.