வவுனியா நீதிமன்றத்தால் புளொட் நெடுமாறனுக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை!!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கி வந்த புளொட் முகாமிற்குப் பொறுப்பாளராக இருந்த சிவநாதன் பிரேமநாத் (போமரன்) நெடுமாறன் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

புளொட் நெடுமாறன், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒருவருடகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2014.08.11அன்று சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

நேற்றைய தினம் வழக்கு தீர்ப்பிற்காக நியமிக்கப்பட்டு வழக்கினை விசாரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த எதிரி தனது உடமையில் துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகக் கண்டு 2வருடம் கடூழியச்சிறைத் தண்டனை விதித்ததுடன் வழக்கை 7 வருடங்களுக்கு ஒத்திவைத்தார்.

அத்துடன் 5 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தண்டப்பணம் செலுத்தத் தவறிமையால் ஒரு மாதகாலம் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார். வழக்குத் தொடுநர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்கினேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தினார்.

உலகின் சிறிய குழந்தைக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை : சாதித்த மருத்துவர்கள்!!

இந்தியாவின் உதய்பூர் பகுதியில் 12 அங்குலத்தில் பிறந்த உலகின் மிகச் சிறிய குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைப்பெற்றுள்ளது.

உதய்பூரை சேர்ந்த எஸ்.பி.ஜெயின் என்பவருக்கு 470 கிராமில் 12 அங்குலமுடைய குழந்தை பிறந்தது. 28 வாரங்களில் பிறந்த இந்த குழந்தையின் உடல் வளர்ச்சி முழுமையடையாமல் இருந்தது. மேலும், குழந்தைக்கு இருதயக் கோளாறு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறந்து 15 நாள்களே ஆன உலகின் மிக சிறிய குழந்தையாக கருதப்படும் இக்குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதாக முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கீதாஞ்சலி மற்றும் ஜீவாந்தா மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். தற்போது, குழந்தை நலமாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் எடை 600 கிராமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், ‘இனி தான் எங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டவுள்ளோம். எங்கள் குழந்தை உயிர் பிழைத்தது மிகப்பெரிய அதிசயம்’ என கூறியுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் இடம்பெறும் சைபர் தாக்குதல் மூலம் இலங்கையின் நிறுவனமொன்றும் பாதிப்பு!!

ரன்சம்வேர் இணைய தாக்குதலால் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுவதும் 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை ரன்சம்வேர் என்ற ஒரு வகை வைரஸ் தாக்கியது.

இ-மெயில்கள் மூலம் நடந்த இந்த சைபர் தாக்குதலால் கணனிகள் முடங்கின இது உலக அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை கடுமையாக பாதித்து உள்ளது.

அதன்படி சீனாவின் மிகப்பெரிய எரிசக்தி விநியோக நிறுவனமான பெற்றோசீனா, தனது கட்டுப்பாட்டில் உள்ள சில பெற்றோல் நிறுவனங்களின் நிதி கட்டமைப்பு முடங்கியதாக அறிவித்துள்ளது.

நாட்டின் பொலிஸ், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும் இந்த தாக்குதலால் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜப்பானின் ஹிட்டாச்சி தொழிற்சாலை, சில மருத்துவமனைகள் இந்த சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல இந்தோனேஷியாவின் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனையில் கணனிகள் முடங்கியதால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தென்கொரியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்கள் இணையதளம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இவ்வாறு இந்த சைபர் தாக்குதல் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

உலகளாவிய இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் சர்வதேச வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பிரித்தானிய தேசிய சுகாதார சேவை உட்பட உலகில் உள்ள பிற நிறுவனங்கள் மீதான இந்த இணைய தாக்குதல் மூலம் இலங்கையின் நிறுவனமொன்றும் பாதிக்கப்பட்டதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது.

கணினியொன்றில் ரன்சம்வேர் இணையத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கணினியில் காணப்பட்ட தரவுகளின் பிரதிகள் குறித்த நிறுவனத்தினால் ஏற்கனவெ பராமரிக்கப்பட்டதால், பாரியளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் இளம் வயதினர் உயிரிழப்பு : முக்கிய காரணங்களை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு!!

உலகெங்கும் 10 முதல் 19 வயதுடைய இளம் வயதினரின் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பது வீதி விபத்துகளே என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஒவ்வொரு நாளும் 3000 பேர் என்ற வகையில், ஆண்டுக்கு 12 இலட்சம் பேர் வீதி விபத்துக்களால் தங்கள் இன்னுயிரை இழப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2015 இல் ஏற்பட்ட உயிரிழப்புகளில் வீதி விபத்துக்கள், சுவாச நோய்த்தொற்றுகள், தற்கொலை ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.

2015 இல் 10-19 வயதினர் பிரிவில் வீதி விபத்தால் ஏற்பட்ட காயங்கள் மூலம் 1,15,302 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவாசத் தொற்றுப் பிரச்சினையால் 72,655 பேரும் தற்கொலையால் 67,149 பேரும் வயிறு சம்மந்தமான உபாதைகளால் 63,575 பேரும் தண்ணீரில் மூழ்கி 57,125 பேரும் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வீதி விபத்துக்களில் பாதசாரிகள், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான விபத்துக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளான ஆப்பிரிக்கா மற்றும் தென்-கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ளன.

எச்.ஐ.வி, எய்ட்ஸ், மூளைக்காய்ச்சல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய்த்தொற்று காரணமாகவே பெரும்பாலான இளம் வயதினர் ஆப்பிரிக்க நாடுகளில் உயிரிழந்துள்னர்.

19 வயதுடைய பெண்கள் பலர் மகப்பேறு சிக்கல்களால் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

MP3 இசை கோப்பு வடிவம் விரைவில் நிறுத்தப்படுமென அறிவிப்பு!!

உலகின் பிரபல இசை கோப்பு வடிவமான MP3 (Format) விரைவில் நிறுத்தப்படுமென அதனை உருவாக்கியவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்து வரும் MP3 கோப்பு வடிவம் குறைந்த மெமரியில் பாடல்களை வழங்கி வந்தது.

இந்நிலையில், நிதியுதவி வழங்கி வந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வு மையம் MP3க்கான உரிமத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. அத்துடன், MP3 சார்ந்த சில காப்புரிமைகள் துண்டிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

பாடல் பதிவுகளுக்கு MP3 பிரதான வடிவமாக இருந்தாலும், இன்றைய காலத்தில் பல்வேறு இதர வடிவங்கள் சிறப்பான ஒலி அனுபவத்தை வழங்கி வருகின்றன.

இன்றைய பல்வேறு சாதனங்களும் அட்வான்ஸ்ட் ஓடியோ கோடிங் (AAC) வடிவத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், MPEG-H எனும் புதிய Audio Format இனை உருவாக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை வடிவம் குறைந்த மெமரியில் சிறப்பான ஒலி அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றளவும் பிரபலமாக இருந்து வரும் MP3 வடிவம், 1980 மற்றும் 1990களில் வடிவமைக்கப்பட்டு அவை ஓடியோ ஃபார்மேட்களின் நிலையான ஒன்றாக இருந்து வருகிறது.

அப்பிளின் iPad களில் 2001 முதல் பிரபலமாக இருந்து வரும் MP3 அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்க முடியும் : அஞ்சலோ மத்யூஸ் நம்பிக்கை!!

இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தெரிவித்தார்.

தாம் இங்கிலாந்து சென்று 12 முதல் 14 நாட்கள் வரை பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும், அதன் ஊடாக சிறப்பாக விளையாட முடியும் என நம்புவதாகவும் அஞ்சலோ மத்யூஸ் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் இன்று காலை இங்கிலாந்து நோக்கிப் பயணமாகின்றது. இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.

நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

பாதிரியார் ஒருவராலும் பொது அமைப்புக்களாலும் முள்ளிவாய்க்கால் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் நாளைய தினம் நடத்தப்படவிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடையுத்தரவில்,

சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைய முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் செய்வதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படும் எனக் கருதி பாதிரியார் இராயேந்திரன் எழில்ராயன் உட்பட அனைவருக்கும் குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106ற்கு இணக்க 14 நாட்களுக்கான இடைக்கால தடையுத்தரவை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் விதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

அந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்களை வைத்து நினைவேந்தல் செய்வதாக கூறப்பட்டது. அதில் பொறிக்கப்பட்ட பெயர்கள் யாருடையது என்பது பற்றி எம்மால் அறிந்து கொள்ள முடியாதுள்ளது.

இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படலாம் என சந்தேகித்து பொலிசாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவிற்கு இன்று விண்ணப்பம் செய்யப்பட்டமைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் மட்டுமே நினைவேந்தல் செய்ய தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் நினைவேந்தல் மேற்கொள்ள முடியும், ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்படாதவாறு நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

குவைத் சென்ற இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத் Oyoun பகுதியில், இலங்கை பணிப் பெண் நடந்துச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கைப் பணிப்பெண் அந்நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

“தான் Oyoun பகுதியில் உள்ள வீதியில் நடந்துச் சென்ற போது வெள்ளை நிற ஜீப் ரக வாகனத்தில் வருகை தந்த இருவர் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள்.

பின்னர் வாகனத்தில் ஏறுமாறு கட்டாயப்படுத்தினார்கள். நான் மறுத்து விட்டேன். எனவே அவர்கள் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி தகாத முறையில் என்னிடம் நடந்துக் கொண்டார்கள்.

யாராவது உதவி செய்யுங்கள் என நான் உரத்து கத்திய போது அவர்கள் தப்பிச் சென்றனர்” என இலங்கைப் பணிப்பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள இலங்கையில் சைபர் மத்திய நிலையம்!!

சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எல்லை சைபர் மத்திய நிலையம் ஒன்றை இலங்கையில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தொலைத்தொடர்பு மற்றும் ஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக மைக்ரோசொப்ட் நிறுவனம் உட்பட மேலும் பல நிறுவனங்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாக இலங்கையின் கணினி கட்டமைப்பின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்யமுடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நாட்களில் உலகில் வேகமாக பரவும் கணினி வைரஸ் இலங்கைக்கு இதுவரையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், இது தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் ஆயத்தமாக இருப்பதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

காப்பாற்றுங்கள் என கதறிய சிறுமியை கண்டுகொள்ளாத அப்பா : உயிரிழந்த பரிதாபம்!!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தன்னை காப்பாற்றும் படி கெஞ்சியும், அதற்கு அவர் தந்தை உதவாததால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரபிரதேசத்தின் விஜயவாடாவை சேர்ந்தவர் சாய் ஸ்ரீ (13) இவருக்கு எலும்பு புற்று நோய் இருந்துள்ளது. அவரின் நோயை குணப்படுத்த மருத்துவ சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது.

இதையடுத்து தனது வீட்டை விற்று சாய் ஸ்ரீ-யின் சிகிச்சைக்கு பணம் தயார் செய்ய அவர் அம்மா முடிவெடுத்துள்ளார்.
ஆனால், மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து வாழும் சாயின் தந்தை வீட்டை விற்க ஒத்து கொள்ளவில்லை.

இதையடுத்து, சிறுமி சாய் தனது தந்தையிடம், தன் உயிரை காப்பாற்ற பணம் தருமாறு கெஞ்சி அதை வீடியோவாக பதிவு செய்து அவருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பிறகும் அவர் தந்தை வீட்டை விற்க ஒத்து கொள்ளவில்லை.

இந்நிலையில், புற்று நோயின் தாக்கம் அதிகமாகி சிறுமி சாய் ஸ்ரீ இரு தினங்களுக்கு முன்னர் பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி சாய் ஸ்ரீ, தன் தந்தையிடம் சிகிச்சைக்கு பணம் வேண்டி கெஞ்சிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

யாழில் வாகன விபத்து : சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் பலி!!

 
யாழில் இன்று தனியார் பேருந்துடன் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி இன்று காலை பயணித்த தனியார் பேருந்து, துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் மீது மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த ஜெயக்குமார் அகிலன் என்ற மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், உயிரிழந்த மாணவனின் சடலம் ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதுடன், பேருந்து சாரதியையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் 1988க்கு அறிவிக்கவும்..!!

கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில், உயர்தரத்துக்கான கல்வியைத் தொடர்வதற்காக, வேறு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அம்மாணவர்களிடம் இருந்து, பாடசாலையினால் அறவிடப்படும் தொகை தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய அறிக்கையை, தன்னிடம் கையளிக்குமாறு கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

சில பாடசாலைகளில் நடத்தப்படும் நேர்முகப் பரீட்சைகள் மற்றும் மாணவர்களிடம் அறவிடப்படும் பணம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே, மேற்படி அறிக்கையைத் தயாரித்து தன்னிடம் சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் அகில விராஜ் காரியவசம், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக, பாடசாலை அபிவிருத்திக்கென எவரேனும் பணம் திரட்டுவார்களாயின், அதற்கு கல்வி அமைச்சின் செயலாளரோ அல்லது கோட்டக் கல்வி வலயத்தின் செயலாளராலோ, அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியது.

அவ்வாறின்றி, பாடசாலை மாணவர்களிடம் பணம் அறிவிடுவதற்கு, உரிய அதிகாரிகளுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிகுளம் கல்லாறு மக்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வு!!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு கிராமம் பழமையான குடியேற்றக்கிராமமாகும். 1975களில் இங்குள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் தலா 03 ஏக்கர் வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

இவற்றிற்கான காணி அனுமதிப்பத்திரங்களும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக இங்குள்ள மக்கள் இந்தியாவுக்கும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது மீள்குடியேறி வருகின்றனர்.

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி எதுவும் செய்யாத நிலையில் பற்றைக்காடுகளாக இருக்கும் காணிகளை காணி உரிமையாளர்கள் துப்பரவாக்கச் சென்றபோது வனவளத்திணைக்களத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டுவரப்பட்டதையடுத்து சுகாதார அமைச்சர் நேற்று முன்தினம் வவனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மீள்குடியேறும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படல் வேண்டுமென கேட்டுக்கொண்டார்

இதன்போது அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் விபரங்களை பிரதேச செயலாளர் உறுதிப்படுதும் பட்சத்தில் வனவளத்திணைக்களம் மேற்படி காணிகளை துப்பரவாக்குவதற்கு அனுமதிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.

வவுனியா விபுலாநந்தா கல்லூரி அணிகளுக்கான வர்ண சீருடை வழங்கல்!!

 
வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட மற்றும் எல்லே அணிகளுக்கான கல்லூரியின் வர்ண சீருடை அறிமுக விழா முதல்வர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் நேற்று (16.05.2017) வெகுசிறப்பாக நடைபெற்றது.

இவ் வர்ண சீருடைகளை பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக கல்லூரி பழைய மாணவன் பொறியியலாளர் எ.நிலின்ஸ் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பழைய மாணவனும் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவருமான சு.காண்டீபன், பழைய மாணவர் சங்க பொருளாளர் எஸ்.கார்த்திக், பழைய மாணவன் வ.பிரதீபன் ஆகியோர் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டனர்.

வவுனியா இளைஞர் யுவதிகளை தேசிய இளைஞர் விருதுப்போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2017 ஆம் ஆண்டுக்கான 39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்போட்டியானது பிரதேசம், மாவட்டம், தேசியம் என மூன்று மட்டங்களில் நடாத்தப்படவுள்ளன.

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளை இத் தேசிய இளைஞர் விருதுப் போட்டியில் பங்கேற்று, வெற்றிபெற்று மாவட்டத்தின் பெருமையை பறைசாற்ற வேண்டும் என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

போட்டிக்காக விண்ணப்பிப்பவர்கள் 13 வயதிற்கும், 29 வயதிற்கும் உட்பட்டவர்களாக இருக்க வேண்டியதோடு, நாடகப் போட்டிக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 வயதிற்கும், 35 வயதிற்கும் இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்திலக்கிய விருதுப் போட்டிகள், அறிவிப்பாளர் (ஆங்கிலம், தமிழ்), பேச்சு (ஆங்கிலம், தமிழ்), இளம்பாடகர் (ஆங்கிலம், தமிழ்), கிராமியப் பாடல், கிராமிய நடனம், புத்தாக்க நடனம், பரத நாட்டியம், அபிநயம், சாஸ்திரிய இசைக்குழுக் கருவிகள் இசைத்தல், புகைப்பட வடிவமைப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இளைஞர் யுவதிகளின் கலை, கலாசார திறமைகளை தேசிய ரீதியில் கொண்டுசெல்வதற்கு மிகச் சிறந்த தளமாக இது அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி போட்டிக்கான விண்ணப்பிக்கும் திகதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான விண்ணப்பம் தொடர்பான மேலதிக விபரங்களை மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன் (0763806990) அல்லது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன் (0775058672) எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் பெண்களின் புகைப்படங்களை காட்டி ஆண்களை ஏமாற்றும் மோசடி வர்த்தகம்!!

இணையத்தளத்தில் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவற்றில் விருப்பமான பெண்களுடன் ஒரு இரவை கழிப்பதற்கு வாய்ப்பு என கூறி ஈசி கேஷ் ஊடாக பணம் கொள்ளையடிக்கும் செயற்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.

குருணாகல் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெயரை குறிப்பிட்டு பேஸ்புக் கணக்கு ஒன்று தயாரிக்கப்பட்டு இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பெண்களின் புகைப்படங்கள் அந்த பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அந்த பெண்களின் பெயர், வசிக்கும் இடங்கள், வயது மற்றும் ஒரு பெண்ணுக்கான செலவு ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண்களை விரும்புபவர்கள் ஒரு பெண் அல்லது பல பெண்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அதற்கமைய விருப்பமான பெண்ணின் புகைப்படத்தை தெரிவு செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்டதன் பின்னர், முதலாவதாக வழங்கப்படும் இலக்கத்திற்கு ஈசி கேஷ் ஊடாக பணம் செலுத்துமாறு தொலைபேசி அழைப்பினை ஏற்கும் நபர் தெரிவிப்பார்.

பணம் வைப்பிலிட்டதன் பின்னர் அந்த பெண் தங்கியிருக்கும் விலாசம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

அத்துடன் பணம் வைப்பிலிடாமல் பெண் தங்கியிருக்கும் இடத்தை அறிவிக்க முடியாதெனவும், முழுமையான பணத்தை வைப்பிலிட்டால் மாத்திரமே விலாசம் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பெண்களையும் தொடர்பு கொள்வதற்காக ஒரே தொலைபேசி இலக்கம் மாத்திரமே காணப்படுகின்ற நிலையில் ஈசி கேஷ் செய்வதற்காக வேறு தொலைபேசி இலக்கம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்களை பார்த்து ஏமாற்றமடைந்து பணம் வைப்பிலிட்ட பலர் உள்ளதாகவும், பணம் வைப்பிலிட்ட பின்னர் குறித்த தொலைபேசி இலக்கத்தை அடைய முடியாமல் போய்விடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரகசியமாகவே இவ்வாறான மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இது தொடர்பில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.