கொழும்பு – பதுளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடையிலிருந்து பெல்மடுல வரை பயணித்த பேருந்து ஒன்று எதிர் திசையில் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டதினாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
அத்துடன், சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான தீர்மானத்தை ஆராய்வதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யோசனை தொடர்பாக நேற்று(15.02) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பாக யோசனைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள செயலணி இவற்றை பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த பரிந்துரையினை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் நேற்று(14) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளனர்.
அத்துடன்,மரண தண்டனையைக் குறைத்தல், சிறைத்தண்டனைக்கு பதிலாக சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைகளை பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தல், அபராதம் செலுத்த முடியாதவர்களுக்கு பகுதியளவில் அதனை செலுத்துவதற்கு சந்தர்ப்பமளித்தல், பொலிஸ் பிணை வழங்கல் மற்றும் புதிய சிறைச்சாலைகள் அமைத்தல் என்பன இந்த பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், அவை அனைத்தும் அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோபிகா என்ற ஈழத்துப் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 02 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது குடியிருப்பு பகுதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பெண் தொடர்பில் பொலிஸ் மற்றும் அம்புலன்ஸ் வண்டி உதவிகோரியிருந்த போதிலும், அவர்கள் தாமதமாகவே அந்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் நைஜீரிய நாட்டு அகதி ஒருவர் தொடர்புப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கொலைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட ஈழத்து பெண் சோபிகா ஜேர்மனிக்கு அகதிகளாக வரும் மக்களுக்கு உதவி செய்யும் நற்பணிமன்றங்களுடன் இணைந்து சேவை செய்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் விவேகம் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், திருவான்மியூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டை அஜித் கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வீட்டை அதிக பொருட்செலவில் அரண்மனை போன்று கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த வீட்டிற்குள்ளேயே உயர்தர உபகரணங்கள் கொண்ட நவீன ஜிம்மையும் அஜித் உருவாக்கவிருக்கிறாராம். இதற்கான பணிகளை அஜித்தின் மனைவி ஷாலினி மேற்பார்வையிட்டு கவனித்து வருகிறாராம். இந்த வீட்டில் கட்டிடப் பணிகள் கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிவடைந்துவிட்டதாம். விரைவில், புதுவீட்டில் மனைவியுடன் அஜித் குடிபுக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜித் தற்போது நீலாங்கரையில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார். இங்கு பணிபுரியும் வேலையாட்களுக்கு தனியாக வீடு கட்டிக் கொடுத்து, அவர்கள் தினமும் வேலைக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து ஏற்பாட்டையும் செய்துகொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாம்பு ஒன்றை கையில் வைத்திருந்து புகைப்படம் பிடித்துக்கொண்டதால், இந்திய தொலைக்காட்சி நடிகை ஸ்ருதி உல்ஃபட், உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஸ்ருதி உல்ஃபட் மற்றும் நடிகர் பியர்ல் புரி ஆகியோர் பாம்பை கையில் வைத்திருக்கும் வீடியோவும் புகைப்படங்களும் கடந்த ஒக்டோபர் மாதம் வெளியாகின.
அதையடுத்து இவர்கள் இருவரும் பாம்பை துன்புறுத்தியதாக விலங்கு நல ஆர்வலரான சுனீஷ் சுப்ரமணியன் உட்பட சிலர் இந்திய வனத்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தனர்.
இந்நிலையில், தான் கையில் பிடித்து வைத்திருந்த பாம்பு உண்மையான பாம்பு அல்ல என நடிகை நடிகை ஸ்ருதி கூறினார். அதனால் அப் புகைப்படங்களையும் வீடியோவையும் இந்திய வனத்துறை அதிகாரிகள் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில், நடிகை ஸ்ருதியும், நடிகர் பியர்ல் புரியும் உண்மையான நல்ல பாம்பை கையில் பிடித்து வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
நாகார்ஜூனா எனும் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்புக்கு கொண்டு வரப்பட்ட அந்த நல்ல பாம்பை அவர்கள் பிடித்து வைத்திருந்தனர் எனவும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து நடிகை ஸ்ருதி, நடிகர் பியர்புரி மற்றும் அந்த தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களான உட்கர்ஷ் பாலி, நிதின் சோலங்கி ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். வனத்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்துவதற்காக 20 நாய்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விமானப் பயணிகள், பணியாளர்கள், செயற்பாட்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சிவில் விமான சேவையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 20 நாய் குட்டிகளை கொள்வனவு செய்து, பயிற்சியளித்து விமான நிலையத்தில் விமானங்களின் பாதுகாப்புக்காக இணைத்துக் கொள்வதற்கு, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அனைத்து அரசுகளினதும் பொறுப்பு என்பதுடன், வெடிபொருட்கள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள், பணம் மற்றும் சட்டவிரோதப் பொருட்களை கண்டுபிடிப்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்கள் மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று நடத்த தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு அதிகரித்து நிலவுகிறமை முன்னிட்டு அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
சமூக வலைத்தளங்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கு முயற்சிக்கின்றோம் என்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ நாம் தீர்மானிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்பு பணியகம் இன்று (15.02) பிற்பகல் 3 மணியளவில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
குறித்த பணியகம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 இலட்சம் ரூபா நிதி உதவியில் அமைக்கப்பட்ட இப்பணியகத்தினை ஜக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ரிம்சுட்டான், ஜக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உணா மககுலி, ஜரோப்பிய சங்கத்த்தின் இலங்கை, மாலைதீவு, வதிவிடப்பிரதிநிதி துங் லாய் மாகு, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபயகோன், ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
சிம்பாவேயில் கொடூர பசியில் இருந்த சிங்கத்தின் அருகில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சி செய்த பெண்ணை அச்சிங்கம் கடித்து குதறியதில், பயங்கரமாக காயமடைந்துள்ளார்.
காதலர் தினத்தை முன்னிட்டு சிம்பாவேயில் அமைந்துள்ள Eco Game என்ற பூங்காவிற்கு Ngoni Hera என்ற பெண், தனது காதலனுடன் சென்றுள்ளார்.
பூங்காவில் நின்று விதவிதமான புகைப்படங்களை எடுத்துக்கொண்ட அவர், அங்கிருந்த சிங்கத்தின் அருகில் இருந்து புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.
ஆனால், அந்த சிங்கமானது கொடூர பசியில் இருந்தது என்பதை இவர் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில், சிங்கத்தின் அருகில் நின்றுகொண்டிருந்த இவரை அவரது காதலன் புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளார்.
அப்போது, கொடூர பசியில் இருந்த சிங்கம், அப்பெண்ணை கோபத்துடன் பாய்ந்து கடித்துள்ளது. இதனால் அப்பெண்ணின் தொடைப்பகுதியில் உள்ள சதை தனியாக வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அப்பெண்ணின் காதலன் அவரை மருத்துவனையில் அனுமதித்துள்ளார். அப்பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவரை இரண்டு மாதங்களாக மிரட்டி பலாத்காரம் நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் Kala Brown. இவர் Charles Carver என்னும் நபரை காதலித்து வந்தார்.
இவர்களுக்கு Todd Kohlhepp (45) என்னும் ரியர் எஸ்டேட் தொழில் செய்யும் நபர் நண்பராகியுள்ளார்.
நிலம் வாங்குவது தொடர்பாக Kala மற்றும் Charles ஆகிய இருவரும் Todd உடன் அவர் ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது ஆளில்லா இடத்துக்கு காதல் ஜோடிகளை அழைத்து சென்ற Todd தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் Charlesஐ சுட்டுள்ளார்.
இதில் Charles உயிரிழந்தார், பின்னர் இளம் பெண் Kalaவை அங்கிருந்து ஒரு இடத்துக்கு கடத்தி சென்ற Todd ஒரு சிறிய சரக்கு லொறியில் அவரை கட்டி வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
தப்பிக்க முயன்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியே இரண்டு மாதங்களாக Kalaவை Todd பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் ஒருநாள் அந்த வழியே சென்ற கும்பலிடம் Kala சத்தம் போட்டு உதவி கேட்க அவர்கள் Kalaவை விடுவித்தார்கள்.
பின்னர் இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட Todd கைது செய்யப்பட்டுள்ளார்.
சசிகலா, அளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சரணடைவதற்கான கால அவகாசம் மறுக்கப்பட்ட நிலையில் உடனடியாக நீதிமன்றில் சரணடைய நீதிமன்றம் சசிகலாவுக்கு உத்தரவிட்டது.
தொடர்ந்து இன்று காலை சசிகலா மற்றும் இளவரசி போயஸ் இல்லத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் காரில் புறப்பட்டார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற அறையில் மாலை 5.20 மணியளவில் இருவரும் சரணடைந்தனர். நீதிமன்றில் நீதிபதி அஸ்வத் நாராயணன் முன்னிலையில், சசிகலா மற்றும் இளவரசி சரணடைந்தார்.
ஆவணங்களை பரிசீலனை செய்துவிட்டு, அவரையும், இளவரசியையும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவருக்கும் சிறையில் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.
உயரம், எடை, ரத்த கொதிப்பு, ரத்தத்தின் சர்க்கரை அளவு, இதய துடிப்பு உள்ளிட்ட அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகின்றன.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி கெடு விதித்த அரை மணிநேரத்தில் சுதாகரனும் நீதிமன்றில் சரணடைந்தார்.
பெங்களூரு பரப்பன அக்ரகார சிறை வளாக சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலாவும் இளவரசியும் சரணடைந்து பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் சுதாகரன் சரணடையவில்லை. சுதாகரன் சார்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சுதாகரனுக்கு உடல்நலக் குறைவு என்பதால் இன்று சரணடையவில்லை. நாளை நீதிமன்றத்தில் சரணடைவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்து சுதாகரன் சரணடைய அரை மணிநேரம் கெடுவிதித்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த அரை மணிநேரத்தில் சுதாகரனும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராயணனிடம் சரணடைந்தார்.
அவரும் உரிய சோதனைகளுக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
வவுனியாவில் இன்று (15.02.2017) பிற்பகல் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு சென்ற நபர் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவருடைய மோட்டார் சைக்கிலைத் திருடிக் கொண்டு சென்ற நபர் ஒருவரை போக்குவரத்துப் பொலிசார் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்துள்ளனர்.
தலைக்கவசம் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக தெரிவித்து விசாரணைகள் மேற்கொண்டபோது குறித்த நபர் ஆசிரியர் ஒருவரின் சைக்கிளை தேக்கவத்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டபோது திருடிச் சென்றுள்ளதாக ஆசிரியர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து பொலிசார் தேடிக் கொண்டிருந்தபோதே மேற்படி நபரை போக்குவரத்துப் பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Polar Satellite Launch Vehicle C37 (PSLV C37) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரொக்கெட்டினை ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீ ஹரிக்கோட்டாவுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது இஸ்ரோ.
ஒவ்வொரு கட்டங்களையும் சரியான நேரத்தில் கடந்து செய்ற்கைக்கோள்கள் அதன் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளன.
இயற்கை வளங்களைப் பல்வேறு கோணங்களில் துல்லியமாகப் படம் பிடிக்க உதவும் 3 கமராக்கள் செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 2 நானோ வகை செயற்கைக்கோள்களும் வெளிநாடுகளைச் சேர்ந்த 101 நானோ வகை செயற்கைக்கோள்களுமே விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த எடை 664 கிலோ.
பூமி கண்காணிப்பு, தொலையுணர்வுக்காக 2005 ஆம் ஆண்டு கார்ட்டோ சாட் வகையான 5 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ – ISRO) முடிவு செய்தது.
இதன்படி, 2005ம் ஆண்டு மே 5 இல் PSLV C6 ராக்கெட்டில் முதல் கார்ட்டோ சாட் 1 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, PSLV C7, PSLV C9, PSLV C15, PSLV C34 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் கார்ட்டோ சாட் வகை செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டிருந்தன.
இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு ரஷ்யா ஒரே ரொக்கெட்டில் 37 செயற்கைக்கோள்களை ஏவியிருந்தமையே சாதனையாக இருந்தது.
தற்போது, இந்தியா 104 செயற்கைக்கோள்களை ஏவி, ரஷ்யாவின் சாதனையை முறியடித்துள்ளது.
ஒஸ்திரியா நாட்டில் ஹிட்லரைப் போல தோற்றம் கொண்டு, ஹிட்லர் பிறந்த நகரமான ப்ரானாவ் என்ற இடத்தில் சுற்றித் திரிந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்கு காரணமான அடால்ப் ஹிட்லர், 1889 ஆம் ஆண்டில் ஒஸ்திரிய நாட்டில் ப்ரானாவ் என்ற இடத்தில் பிறந்தவர்.
ஒஸ்திரியாவில் பிறந்தாலும், சிறு வயதிலேயே ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்து, ஜேர்மனியை ஆட்சி செய்து வரலாற்றில் இடம் பிடித்தவர்.
நாஜி கொள்கைகளை தனது உயிர் மூச்சாக கொண்ட சர்வாதிகாரி ஹிட்லர், இரண்டாம் உலகப் போரில் எதிரிகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ஹிட்லரின் மரணத்தை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஒஸ்திரியாவின் ப்ரானாவ் நகரில் ஹிட்லர் பிறந்த வீட்டின் அருகே, ஹிட்லரைப் போல தோற்றம் கொண்ட நபர் ஒருவர், ஹிட்லரைப் போலவே உடையலங்காரம் செய்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
இந்தப் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், உடனே தீவிரமாக தேடி அந்த நபரை கைது செய்துள்ளனர்.
ஹிட்லரைப் போலவே சிறிய மீசை வைத்து, சிகையலங்காரம் செய்துள்ள அந்த நபர், தனது பேரை ஹரால்டு ஹிட்லர் எனக் கூறியுள்ளார்.
ஹிட்லரின் நாஜிக் கருத்துக்கள் பின்பற்றப்படுதலும், பரப்புதலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும் இதன் காரணமாக, ஹிட்லரின் உருவத்தை பின்பற்றிய, ஹரால்டு ஹிட்லர் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.