தினேஸ் சந்திமலுக்கு சில நாட்கள் ஓய்வு தேவை : உபுல் தரங்க!!

தினேஸ் சந்திமல் மீண்டும் தனது சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு சில தினங்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தினேஸ் சந்திமல் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது அனவரும் அறிந்த விடயம். அவருக்கு நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டமையானது மிகவும் கடினமான தீர்மானமாகும். ஏனெனில் அணியில் இடம்பிடித்துள்ள அனுபவம் வாய்ந்த வீரர் அவர் மட்டும்தான்.

எனினும் அவரது துடுப்பாட்டம் கடந்த சில போட்டிகளில் சிறப்பானதாக அமையவில்லை. இதனால் அவருக்கு சில நாட்களுக்கு ஓய்வளிப்பது சிறந்த விடயம்.

இதன்மூலம் அவர் தன்னை வலுப்படுத்திக்கொண்டு, ஆஸி அணிக்கெதிரான தொடரில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுப்படுத்துவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினேஸ் சந்திமல் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான சாத்தியங்கள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 8 பேருக்கு பன்றிக்காச்சல் பாதிப்பு : பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

8 நோயாளர்களுக்கு H1N1 நோய் தொற்று (பன்றிக்காய்ச்சல்) இனம்காணப்பட்டுள்ளதாக, பிபிலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிபிலை வைத்திய ஆய்வு பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைமூலம் குறித்த 8 நோய் தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதம வைத்திய பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நோய் தொற்றுடையவர்களாக சந்தேகிக்கப்படும் 28 இலிருந்து 30 வரையான நோயாளர்கள் தொடர்ச்சியான சிகிச்சைக்கு உட்பட்டு வருவதாக குறித்த வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு நோய்க்கான அறிகுறியாக தொடர்ச்சியான இருமல், தலைவலி, வயிற்றோட்டம், உடம்புவலி மற்றும் தொண்டை வலி என்பன தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நீடிக்கும் பட்சத்தில் உடனடியாக வைத்தியரை நாடும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பன்றிக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுபவர்களில் கர்ப்பிணி பெண்கள், 2 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், நீண்டகாலமாக புற்று நோய், நீரிழிவு நோய், மற்றும் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் H1N1 நோய் தொற்றை வேகமாக பெறக்கூடியவர்களாக, இனம்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் செய்த வயோதிபர் மீது வியாபார நிலைய உரிமையாளர் தாக்குதல்!!

 
வவுனியாவில் நடைபாதையில் வெற்றிலை வியாபாரம் மேற்கொண்டு வரும் வயோதிபர் மீது வியாபார நிலைய உரிமையாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தனது வியாபார நிலையத்திற்கு முன்னால் நின்று வியாபாரம் மேற்கொள்ளவேண்டாம் என்று தெரிவித்து வயோதிபரை தள்ளியதுடன் கையில் வைத்திருந்து வியாபாரம் மேற்கொள்ளும் வெற்றிலை, வெற்றிலை சுருள் என்பனவற்றையும் வீதியில் வீசியுள்ளார்.

இச் சம்பவம் வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இன்று (08.02.2017) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலம் மீட்பு !!

தூக்கில் தொங்கிய நிலையில் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் அதே பிரதேசத்தினை சேர்ந்தவர் 22 வயதுடையவர் என்றும் (விநாயகம் தனா பிரியன்) , ஒரு பிள்ளையின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சடலமாக மீட்கப்பட்டவரின் கால்களில் இரத்த கறை காணப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்ற ரீதியில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வைத்தியர்கள்,மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

 
வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவபீட மாணவர்கள் ஒன்றிணைந்து இன்று (08.02.2017) பிற்கபல் 1 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலிருந்து பேரணியாக இலுப்பையடி, பசார் வீதி, வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்று கண்டிவீதியில் நின்று மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு மீண்டும் மத்திய பேருந்து நிலையம் ஊடாக நீதிமன்ற வீதிவழியாக வைத்தியசாலையினைச் சென்றடைந்தனர்.

இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதுடன், வைத்தியர்கள் தமது உடையில் கறுப்புப்பட்டி அணிந்து தமது கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? போலி சைட்டம் வைத்தியர்கள் மிக விரைவில் வவுனியா வைத்தியசாலையில், வைத்தியசாலையின் இதயம் இலங்கை மருத்துவக் கல்லூரியைக் காப்போம், போலி பட்டம் விற்கும் சைட்டத்தினைமூடு போன்ற வாசங்களை தாங்கியவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)

 
வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் துர்முகி வருடத்துக்கான மகோற்சவம் கடந்த 31.01.2017 கொடியேற்றதுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து நேற்றையதினம் சப்பறத்திருவிழா நடைபெற்றதுடன் இன்றைய தினம்(08.02.2017) வருடாந்த தேர்த்திருவிழா நடைபெற்றது.

முதலாம் குருக்குத்தெரு வீதி வழியாக பயணித்த தேர் வவுனியா மணிக்கூட்டுசந்தி , கந்தசுவாமி கோவில் வீதியுடாக ஆலயத்தினை வந்தடைந்தது.

இத் தேர்த்திருவிழாவில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்தனர். மேளவாத்தியம் முழங்க பக்த அடியவர்கள் அரோகரா அரோகரா கூறியவாறு தேரினைப் பிடித்து இழுப்பதனை அவதானிக்க முடிந்தது.

நாளை (09.02.2017) தீர்த்தோற்சவமும் , நாளை மறுதினம் (10.02.2017) 1008 சங்காபிஷேகம், திருக்கல்யாணம் என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் புதையல் தோண்டிய நால்வர் கைது!!

 
வவுனியா உளுக்குளம், அலியாப்பிட்டடிய சந்திப் பகுதியில் நேற்று (07.02.2017) அதிகாலை 1 மணியளவில் புதையல் தோண்டிய நால்வரை ஈரப்பெரியகுளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது 38, 42, 59, 44 வயதுடைய ஆண்கள் எனவும் இவர்களிட்மிருந்து கார் ஒன்றும் நிலத்தில் புதையல் கண்டுபிடிக்கும் ஸ்கானர் சாதனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண்மணி சிகிச்சை பலனின்றி பலி!!

யாழ். குப்பிளானில் பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 05ம் திகதி பிற்பகல் 06.30 மணியளவில் யாழ். குப்பிளான் சந்திக்கருகாமையில் மோட்டார்ச் சைக்கிளில் வேகமாக வந்த நபரொருவர் வீதியின் ஓரமாக வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்மணியை மோதியிருந்தார்.

குறித்த வயோதிபப் பெண்மணி பின்தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண்மணியின் நிலைமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாள் முதல் கவலைக்கிடமாகியிருந்த நிலையிலேயே இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

250,000 அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள திருமண ஆடையை தீயிட்டுக் கொளுத்திய பொப் பாடகி மரியா கரே!!

பிரபல பொப் நட்சத்திரங்களில் ஒருவர் மரியா கேரி. இவர் கவர்ச்சிகரமாக பாப் இசை நிகழ்ச்சிகளுக்குப் பெயர் பெற்றவர்.

அமெரிக்காவின் பிரபல பொப் பாடகியான இவருக்கும், முன்னாள் கணவர் நிக் கேனனுக்கும் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

நிக் கேனனைப் பிரிந்துள்ள மரியா கேரி, அவுஸ்திரேலிய தொழிலதிபரான ஜேம்ஸ் பெக்கரைக் காதலித்து திருமணம் செய்யவிருந்தார்.

இதற்கென மரியா கேரிக்கு 250,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான திருமண ஆடை வடிவமைக்கப்பட்டு தயாராகவிருந்தது.

இந்நிலையில், மரியாவும் ஜேம்ஸ் பெக்கரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இதனால் விரக்தியடைந்த மரியா, 250,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான திருமண ஆடையை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.

விலை மதிப்பு மிக்க தனது திருமண ஆடையை தீயிட்டுக் கொளுத்துவதையும் அது எரிந்து சாம்பலாகும் காட்சியையும் தனது இசை அல்பத்தில் வெளியிட்டுள்ளார் மரியா

அவதானம் : வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8697 டெங்கு நோயாளர்கள் பதிவு!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 8697 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர குறிப்பிட்டார்.

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுற்றாடலை சுத்தம் செய்வதற்காக குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், ஆனால் பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு நோய் பரவுதல் தொடர்பில் விசேட விழிப்புணர்வு தேவைப்படுவதாகவும் டொக்டர் பிரசீலா சமரவீர கூறினார்.

பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து கொழும்பில் உள்ள 170 பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் சமூக வைத்திய நிபுணரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இது தொடர்பான சட்டமூலம் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் பதிலளித்தார்.

விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமியைக் காப்பாற்றிய பணிப்பெண்!!

அமெரிக்காவில் இயங்கி வரும் அலாஸ்கா எயார்லைன்ஸ் விமானத்தில் ஷீலா ஃப்ரடெரிக் (49) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாகப் பணிப்பெண்ணாக சேவையாற்றி வருகின்றார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சீட்டில் நகரிலிருந்து விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது 14 வயதுடைய சிறுமியை அவதானித்துள்ளார்.

சிறுமிக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் நாகரீக உடையிலும், சிறுமி பழுதான ஆடையிலும் இருந்ததால் பணிப்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனைத் தீர்த்துக்கொள்ள சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். ஆனால், சிறுமியிடம் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவர் அருகில் அமர்ந்திருந்த நபர் மட்டுமே இடைமறித்து பதிலளித்துள்ளார்.

நபரின் நடவடிக்கை சந்தேகத்தை அதிகரிக்க, சிறுமியிடம் கண் ஜாடை ஒன்றைக் காட்டிவிட்டு விமானத்தில் இருந்த கழிவறைக்கு சென்றுள்ளார்.

பின்னர், கழிவறையில் ‘நீ எதாவது சிக்கலில் இருக்கிறாயா, உனக்கு உதவி தேவையா?’ என தாளில் எழுதி வைத்துவிட்டு பணிப்பெண் திரும்பியுள்ளார்.

பணிப்பெண் திரும்பியதும் சிறுமி கழிவறைக்கு சென்று அந்த கடிதத்தைப் படித்துவிட்டு ‘ஆமாம், என்னை அந்த நபர் கடத்திச் செல்கிறார். எனக்கு உங்களுடைய உதவி தேவை’ என பதில் எழுதி வைத்து விட்டு இருக்கைக்குத் திரும்பியுள்ளார்.

கழிவறைக்கு மீண்டும் சென்ற பணிப்பெண் சிறுமியின் பதிலைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதனை விமானிகளுக்கு உடனடியாகத் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, விமானிகள் சான் பிரான்ஸிஸ்கோ நகர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சில மணி நேரத்திற்கு பிறகு விமானம் தரையிறங்கியதும், அங்கு காத்திருந்த பொலிஸார் நபரைக் கைது செய்து சிறுமியை மீட்டனர்.

சிறுமியை தனது சமயோசித திறமையால் மீட்க உதவிய பணிப்பெண்ணை பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தென்னிந்திய சினிமா பாணியிலான வாள்வெட்டுக் குழு மோதல் : நீதிமன்ற தண்டனைகளுக்கும் சவாலாக அமைந்துள்ளது : நீதிபதி இளஞ்செழியன்!!

யாழ்ப்­பா­ணத்தில் தற்­போது உரு­வெ­டுத்­துள்ள புதிய வாள்­வெட்டு கலா­சா­ர­மா­னது நீதி­மன்­றங்­க­ளுக்கும் நீதி­மன்­றங்­களின் தண்­ட­னை­க­ளுக்கும் சவா­லாக அமைந்­துள்ள நிலையில் இத்­த­கைய சமூக விரோத செயல்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு அதி­க­பட்­ச­மாக தண்­ட­னை­களை வழங்­கு­வதன் மூலமே இவற்றைக் கட்­டு­ப­டுத்த முடியும் என யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் தெரிவித்துள்ளார்.

மேலும் நீதி­மன்­றங்­களால் வழங்­கப்­படும் பிணை­க­ளா­னது சமூ­கத்தின் பாது­காப்பை கருத்தில் கொண்டே இது­வரை யாழ்.மேல் நீதி­மன்றால் வழங்­கப்­பட்டு வந்­த­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ஒன்­பது மாதங்­க­ளுக்கு முன்பு யாழ்.மாந­கர சபை எல்­லைக்குள் கைக்­குண்டு ஒன்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டி கைது செய்­யப்­பட்டு நீதிவான் நீதி­மன்றால் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள ஒருவருக்கு பிணை வழங்கக் கோரி அவர் தரப்பு சட்­டத்­த­ர­ணியால் யாழ்.மேல் நீதி­மன்றில் முன்­வைக்கப்­பட்ட பிணை விண்­ணப்­பத்தின் போதே அவர் மேற்­கண்ட விட­யத்தை கூறி பிணையை நிராக­ரித்­தி­ருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித் அவர், தென்­னிந்­திய சினிமா பாணி­யி­லான வாள்­வெட்டுக் குழு மோதல் கலா­சா­ர­மா­னது யாழ்ப்­பா­ணத்தில் உரு­வெ­டுத்து யாழ்ப்­பா­ணத்து இளை­ஞர்­களை சீர­ழித்து வருகின்றது.

கடந்த ஒன்­பது மாத கால­மாக கட்­டு­பாட்­டுக்குள் வைக்­கப்­பட்­டி­ருந்த வாள்­வெட்டு குழு மோதல் கலா­சாரம் இவ்­வ­ரு­டத்தின் தை மாதத்தின் இறுதி பகு­தியில் மீண்டும் புதி­ய­தொரு குழுவால் முன்னெடுக்கப்­பட்­டுள்­ளது.

இன்­றைய யாழ்ப்­பா­ணத்தின் நிலை­யா­னது தெற்கு அர­சியல் மட்­டத்தில் கூட யாழ்ப்­பா­ணத்தின் பாது­காப்பு தொடர்பில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் அள­வுக்கு மோச­மா­ன­தா­கவும் கேள்விக்குறியாகவும் உள்­ளது.

இந்­நி­லையில் இத்­த­கைய குற்றச் செய்­ல­களை கட்­டு­ப­டுத்த வேண்­டு­மாயின் நீதி­மன்­றங்கள் இக் குற்றங்­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­க­ளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

பிணை கோருவது என்பது எதிரியின் உரிமையாக இருப்பினும் அவ் பிணையை வழங்குவதில் நீதிமன்றமானது சமூக அக்கறையை பிரதானமாக கருத்திலெடுத்தே பிணையை வழங்கும் என்றார்.

700 இணையதங்களை முடக்கிய ஹேக்கிங் குழுக்கள்!!

இணைதளங்களை முடக்கும் ஹாக்கிங் குழுக்கள் தொடர்ந்து அரசு இணையதளங்களையும் முடக்கி வருகின்றனர். இதில், கடந்த 2013-2016 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பல்வேறு ஹாக்கிங் குழுக்களால் இந்திய அரசின் 700க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் மத்திய, மாநில அரசுகளின் 199 இணையதளங்கள் முடக்கப்பட்டது. முன்னதாக 2015ல் 164 இணையதளங்களும், 2014ல் 155 இணையதளங்களும், 2013ல் 189 இணையதளங்களும் முடக்கப்பட்டதாக மத்திய அரசின் செர்ட்-இன் அமைப்பு தெரிவித்துள்ளதாக மாநிலத்திற்கான மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக விளக்கினார்.

இந்த காலகட்டத்தில் இணைய குற்றங்களுக்காக பல்வேறு வழக்குகளின் கீழ் 8,348 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 2014-15 காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 315 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அரசின் பொதுத்துறை இணையதளங்களை முடக்க ஹேக்கர்கள் முயற்சி செய்ததாகவும், பொதுத்துறை இணையதளங்களின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

அரசு இணையதளங்களில் பொதுமக்களுக்கு தேவையான தகவல் மட்டுமே இருக்குமென்றும், மற்றபடி அரசின் முக்கிய தகவல்கள் இணையத்திலிருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சூடுபிடிக்கும் அரசியல் : பிரம்மாண்ட மாநாடு நடத்தும் ரஜினி!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்கள் பலரின் வேதவாக்காக உள்ளது. அவரும் அப்போது வருவார், இப்போது வருவார், இதோ இறங்கிவிட்டார், அரசியலில் குதித்துவிட்டார் என சில உண்மையல்லாத தகவல்களும் வருகின்றன.

ஆனால் அவரோ நமக்கு எதுக்கு வம்பு, படம், ஆன்மீகம் என அதிலேயே முழ்கிவிட்டார். தற்போது தமிழகத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

அரசியல் வட்டாரங்கள் பலவும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் வரும் மார்ச் மாதம் ரசிகர்களை ஒன்று திரட்டி பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

இதற்காக மாவட்டம் முழுக்க இருக்கும் ரசிகர்களை கணக்கெடுக்கும் பணி சத்தமில்லாமல் நடந்து வருகிறதாம். மேலும் பல இடங்களுக்கும் விசிட் அடிக்கவுள்ளாராம். இதன் பிறகு அவர் அரசியல் குறித்த முடிவை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.

இறுதிவரை போராடித் தோற்ற இலங்கை அணி!!

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் ​வெற்றுபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் சிறப்பாக ஆடிய பிளிஸ்சிஸ் 185 ஓட்டங்களை விளாசினார். மேலும் ஏ.பி.டி வில்லியஸ் 64 ஓட்டங்களையும் டி குக் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த தென்னாபிரிக்கா 367 ஓட்டங்களை குவித்தது.

இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக உபுல் தரங்க 119 ஓட்டங்களையும், திக்வெல்ல 5 ஓட்டங்களையும், வீரக்கொடி 58 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா 4-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

வீதியில் சிக்கிய சிறார் பாலியல் தொழிலாளிகள்!!(வீடியோ)

வெளியுலகத்தவர் எளிதில் பார்க்க முடியாத அமெரிக்காவின் அதிர்ச்சியானதொரு பக்கம் அந்நாட்டின் சிறுமிகள் வர்த்தக ரீதியிலான பாலியல் தேவைக்காக துஷ்பிரயோகம் செய்யப்படும் போக்கு.

ஆயிரக்கணக்கான சிறுவயது அமெரிக்கப் பெண்கள் தம்மை பாலியல் தேவைகளுக்காக விற்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதாக கடந்த ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இதனை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்ட லாஸ்ஏஞ்சலீஸ் காவல்துறையினர் சுமார் ஐநூறு பேரைக் கைது செய்து, ஐம்பது பேரை மீட்டனர்.

அந்த நடவடிக்கையை நேரில் படம்பிடிக்க பிபிசிக்கு சிறப்பு அனுமதி கிடைத்தது.