1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மாற்றம்!!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பல்வோறு மாற்றங்கள் இடம்பெறுகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டிக் பிராந்தியத்தில் சராசரியை விட 20 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பக்காற்று வீசுவதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியை விட சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பம் இருக்கும். ஆனால், இம்முறை இந்த நிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இதேவேளை, 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுபோன்ற அரிதான நிகழ்வுகள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பூமி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், வட துருவத்தின் கடல் பகுதியிலும், நிலப் பகுதியிலும் மூடியிருக்கும் பனிக்கட்டிகள் உருகி வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களை தெரியுமா : உடன் தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை!!

கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வெயங்கொட பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த இருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.

பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு தேடப்படுவதாகவும், குறித்த பெண் சந்தேகநபருடன் இரசிய தொடர்பை பேணிவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் வெயங்கொடை பொலிஸ் நிலையத்தின் 033 2287222 / 033 2287223 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், 071 8591624 என்ற இலக்கத்திற்கு அழைத்து வெயங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்தைக் கைப்பற்ற வெடித்த யுத்தம்!!

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சசிகலா புஷ்பா ஆதரவாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் தாக்கப்பட்டதால் அவர் காயமடைந்தார்.

ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை சசிகலா புஷ்பா எம்.பி. வருவதாக தகவல் பரவியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகர் வந்தார்.இன்று வியாழக்கிழமை அ.தி.மு.க பொதுக்குழு கூடவிருக்கும் நிலையில், லிங்கேஸ்வர் ஒரு ஆவணத்தை கொடுக்க வந்திருப்பதை அறிந்த அ.தி.மு.கவினருக்கும், சசிகலா புஷ்பா கணவர் லிங்கேஸ்வர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதற்குப் பிறகு அது பெரும் கலவரமாக மாறியது. கட்சியினருக்குள் ஏற்பட்ட கைகலப்பில் லிங்கேஸ்வர திலகர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த லிங்கேஸ்வரை காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வைத்து அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் வழக்குரைஞர் மீது அ.தி.மு.க தொண்டர்களே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இது இவ்விதமிருக்க மறைந்த முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவை வழிநடத்தப் போவது யார்? அ.தி.மு.கவின் அடுத்த பொதுச் செயலர் யார்? என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு இன்று சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கூடுகிறது.

பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.கவின் பொதுச்செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகளில் சசிகலாவின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் சசிகலாவுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலாவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அ.தி.மு.க பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வரவுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தனர்.

இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் வழக்குரைஞர் ஒருவர் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குள் வந்தார். அவரை அடையாளம் கண்டு கொண்ட ‘சின்னம்மா’ என்று கூறப்பட்டு வரும் சசிகலாவின் ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

அ.தி.மு.கவினரின் தாக்குதலில் பலத்த காயமடைந்த வழக்குரைஞரை பொலிஸார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இதனால் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அ.தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த வந்த நடிகர் ஆனந்தராஜ், ஜெயலலிதாவால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அ.தி.மு.கவுக்கு ஒரு தலைமையை காட்டுகின்றனர். அது ஏற்புடையதாக இல்லை. மக்கள் அனைவரும் ஏற்கக் கூடிய தலைமை ஒன்றுதான் வரவேண்டும். யாரையும் கட்டாயப்பபடுத்தி வரவைக்க கூடாது. சுயஇலாபத்திற்காக அமைச்சர்கள் செயல்படுகின்றனர். நிகழும் சம்பவங்கள் அனைத்தும் ஏற்புடையதாக இல்லாததால் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அ.தி.மு.க தலைமையகத்திற்கு வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகிய இருவரையும் அ.தி.மு.க தொண்டர்கள் தாக்கினார்கள். இது சரியானதுதான் என்றும் சதிகாரியான சசிகலா புஷ்பாவின் உறவினர்களை இதைவிட மென்மையாக தாக்க முடியாது என்றும் ஆவடி குமார் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

இது இவ்விதமிருக்க, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்துவிட்டதால், கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா வருவார் என்பதுதான் ஆரம்ப நாட்களில் நிலவிய சூழல்.

அதை உறுதிசெய்யும் வகையில் கட்சியின் முன்னணித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று சசிகலாவுக்கு ஆதரவளித்தனர். ஆனால், கடந்த ஒருவார காலமாக அவர்களுடைய குரலில் ஒரு பெருமாற்றம் தெரிகிறது.

பொதுச்செயலாளராக மட்டுமல்ல, நாட்டின் முதல்வராகவும் சசிகலா வர வேண்டும் என்ற குரல் கேட்கத் தொடங்கியிருக்கிறது.சட்டபூர்வமாக ஒரு முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வேறொரு முதலமைச்சர் வேண்டும் என்ற குரல் கட்சியின் முக்கியத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகள் மத்தியிலிருந்து எழுந்தால், அதனை ஒரு கட்சிக்காரனின் கருத்து, தொண்டனின் உணர்வு என்று இயல்பாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்களே அந்தக் கருத்தைப் பகிரங்கமாகவும் ஊடகங்களிலும் சொல்லும் போது, அது கூடுதல் கவனத்துடன் அணுக வேண்டிய ஒன்றாகப் பரிணாமம் பெறுகிறது.

இன்று முதலமைச்சராகியிருப்பவர், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வராக அடையாளம் காட்டப்பட்டவர். ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலில், அவரது விருப்பத்தின் பேரிலேயே முதல்வருக்கான பொறுப்புகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை அறிவித்தது.

ஆக, கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒற்றைத் தலைமை வேண்டுமா, அல்லது இருவேறு தலைமைகள் வேண்டுமா என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான விடை தேடி வேறெங்கும் செல்லத் தேவையில்லை.

அதிமுகவின் கடந்த கால வரலாற்றிலேயே சில வழிகாட்டும் நெறிமுறைகள் உள்ளன.அ.தி.மு.கவை நிறுவிய எம்.ஜி.ஆர் ஆரம்ப காலத்தில் அதன் பொதுச்செயலாளராகச் செயல்பட்டார்.

ஆட்சியைப் பிடிக்கும் வரை அந்தப் பதவியில் இருந்த அவர், முதலமைச்சரான பிறகு, கட்சியின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியைத் தனது நம்பிக்கைக்குரிய ப.உ.சண்முகத்திடம் கொடுத்தார்.

பிறகு, மூத்த அமைச்சரும் எம்.ஜி.ஆரின் மதிப்புக்குரியவருமான நாவலர் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தார். அடுத்து, அந்தப் பதவியை மூத்த தலைவர் ராகவானந்தத்திடம் கொடுத்தார்.

எம்.ஜி.ஆர் மறைவதற்கு முன்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டார். ஆக, எம்.ஜி.ஆரின் காலத்தில் பெரும்பாலும் கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடமே இருந்திருக்கிறது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, ஒருங்கிணைந்த அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, ஆட்சியைப் பிடித்து முதல்வரான பிறகும்கூட கட்சித் தலைமையைத் தன்வசமே வைத்திருந்தார்.

எந்தக் காலத்திலும், யார் வசமும் அந்தப் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை. நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக முதல்வர் பதவியை இழக்க வேண்டிய இரண்டு தருணங்களிலும் கூட ஆட்சித் தலைமையை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தாரே தவிர, கட்சித் தலைமையை எப்போதும் போல் தன்வசமே வைத்திருந்தார்.

மேற்கண்ட இரண்டு நடைமுறைகளும் வெவ்வேறாக இருந்தாலும், அணுகுமுறையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. எம்.ஜி.ஆர் தன் காலத்தில் பொதுச் செயலாளர் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்திருந்தாலும், அவர்கள் எம்.ஜி.ஆரை மீறிச் செயல்படக் கூடியவர்களாக இருந்திருக்கவில்லை.

எம்ஜிஆர் ஒன்று, நாங்களெல்லாம் பூஜ்ஜியம். எம்ஜிஆர் இல்லாவிட்டால் எங்களுக்கு மதிப்பில்லை என்று பெருமிதப்பட்ட வர்கள்.கொஞ்சம் நுணுக்கமாகக் கவனித்தால், அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் பதவிக்கு வருவதற்குக் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதற்காகவே கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் கூடிப் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் விதியைக் கவனமாகச் சேர்த்திருந்தார் எம்.ஜி.ஆர்.

அதேபோல, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றிருந்தாலும், அவர் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடப்பவராக இருந்தார்.

ஜெயலலிதா சொன்னார் என்பதற்காக ஒருமுறை அல்ல, இரண்டு முறை முதலமைச்சர் பதவியிலிருந்து எவ்விதமான தயக்கமும் இல்லாமல் விலகியவர் ஓ.பன்னீர்செல்வம்.

தற்போது ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமையின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க எந்த மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றப் போகிறது என்பது முக்கியமான கேள்வி. எம்.ஜி.ஆர் பாதையா, ஜெயலலிதா பாதையா? எதைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் அ.தி.மு.கவுக்கு இருக்கும் சவால்களுள் முக்கியமானது.

ஏனென்றால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மக்கள் சக்தி பெற்ற மாபெரும் ஆளுமைகள். ஆனால், இன்று இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இருவருக்குமே அத்தகைய பலம் எதுவும் இப்போது வரை இல்லை என்பதுதான் களயதார்த்தம்.

ஒருவேளை, கட்சியும் ஆட்சியும் தனித்தனி நபர்களிடம் இருக்கட்டும் என்று முடிவு செய்து, அதிகாரக் குவிப்பைத் தவிர்த்து அதிகாரப் பகிர்வை அமுல்படுத்தும் பட்சத்தில், அங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது.

ஏனென்றால், அதிகாரப் பகிர்வு என்பது எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் அதிகார மையங்களாக மாற வாய்ப்பு இருக்கிறது. ஓ.பி.எஸ் பிரிவு, சசிகலா பிரிவு என்றெல்லாம் பிரிந்து நிற்கும் பட்சத்தில், அது கட்சிக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் ஆபத்து.

ஆக, இதுவரை இல்லாத வகையில் அ.தி.மு.கவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. அது எவ்வளவு பெரியது என்பது இன்று கூடும் அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு எடுக்கும் முடிவில் இருக்கிறது.

2016 வாகன விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

வாகன விபத்துக்களில் இந்த ஆண்டில் 2900 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 25ம் திகதி வரையில் 41000 பேர் வாகன விபத்துக்களில் சிக்கியுள்ளனர்.

2015ம் ஆண்டில் வாகன விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2816 ஆக சுகாதார அமைச்சிற்கு தகவல் கிடைத்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 25, 26 மற்றும் 27ம் திகதிகளில் மட்டும் வாகன விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 817 பேர் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வாகன விபத்துக்களினால் உயிர்ச் சேதங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போரே அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றனர்.

சவூதியில் இலங்கைப் பணிப்பெண் மர்மமான முறையில் மரணம்!!

சவூதி அரேபியாவிற்கு வீட்டு பணிபெண்ணாக சென்று சித்திரவதைகளுக்கு உள்ளாகி மர்மமான முறையில் மரணமாகியுள்ள பெண் தொடர்பில் கொலன்னாவ கொடிக்காவத்தை பிரதேசத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் கடந்த நவம்பர் மாதம் சவூதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றிருந்தார் எனவும் , 44 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரினால் கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்பட்டமையை தொலைபேசியின் ஊடாக தனக்கு தெரிய படுத்தியிருந்ததாக குறித்த பெண்ணின் கணவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் முறையிட்ட போதிலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காற்றினால் இயங்கும் நவீன படகு இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டது!!

 
திடீர் வெள்ள அனர்த்த நிலை­மை­க­ளுக்கு முகம்­கொ­டுக்கும் வகை யில் காற்றின் சக்தியை பயன்படுத்தி இயங்கும் படகு ஒன்று கடற்­படையினரால் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

கடற்­ப­டையின் ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்தி பிரி­வி­ன­ரினால் இந்த படகு நிர்­மா­ணிக்கப்பட்­டுள்­ளது. இதற்­காக 1.7 மில்­லியன் ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ள­தாக கடற்­ப­டை­யினர் தெரி­விக்­கின்­றனர்.

நீரில் மூழ்­கிய பிர­தே­சங்­க­ளுக்கு இல­குவில் சென்று அனர்த்­தத்தில் சிக்­குண்­ட­வர்­களை மீட்­டு­வ­ரு­வ­தற்கு உகந்த வகையில் இந்தப் படகு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ள­தாக கடற்­ப­டை­யினர் மேலும் தெரி­வித்­தனர்.

இதன் காற்­றாடி இறக்கை பகுதி நீர் மட்­டத்­துக்கு மேலாக அமைக்­கப்­பட்­டுள்ளமையினால் நீரில் மூழ்­கி­யுள்ள பகு­தி­க­ளுக்கு செல்­வ­தற்கு இல­கு­வாக அமை­யு­மென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாது­காப்பு செய­லா­ளர், பொறி­யி­ய­லாளர் கரு­ணா­சேக ஹெட்டி ஆர
ச்­சியின் முன்­னி­லையில் வெலி சர கடற்­படை முகாமில் அமைந் துள்ள கஜுகஹகும்புர வாவியில் கடந்த 20 ஆம் திகதி இந்த படகின் வெள்ளோட்ட நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் கழிவறைத் தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு தப்பியோட்டம்!!

 
அமெ­ரிக்­கா­வி­லுள்ள சிறை­யொன்றில் அடைக்­கப்­பட்­டி­ருந்த கைதிகள் அறுவர், கழி­வறை சுவரை உடைத்­துக்­கொண்டு தப்பிச் சென்­றுள்­ளனர். டென்­னஸி மாநி­லத்தின் நியூபோர்ட் நக­ரத்தில் நத்தார் தினத்­தில் இச்­ சம்­பவம் இடம்பெற்றுள்ளது.

சிறைக்குள் சுவர் ஒன்­றுடன் இணைத்து பொருத்­தப்­பட்­டி­ருந்த உலோ­கத்­தா­லான கழி­வ­றை­த்தொட்டியை அகற்­றிய பின்னர் இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக உள்ளூர் காவல்­துறை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

ஜோன் மர்க் ஸ்பெயர், ஸ்டீவன் லூயிஸ், ஜோன் தோமஸ் ஷெஹீ, ஹார்ஸ் வாட் அலென், எரிக் கிளிக், டேவிட் வெய்ன் பிரேஸர் ஆகி­யோரே இவ்­வாறு கழி­வ­றைக்கு ஊடாக தப்பிச் சென்­ற­வர்­க­ளாவர்.

இதை­ய­டுத்து பொலிஸார் மேற்­கொண்ட தேடு­தலில் ஜோன் மர்க் ஸ்பெயர், ஸ்டீவன் லூயிஸ், ஆகிய இரு­வரும் கைது செய்­யப்­பட்­டனர். ஏனைய நால்­வரும் தொடர்ந்தும் தேடப்­ப­டு­கின்­றனர்.

தப்பிச் சென்ற­வர்­களில் ஒரு­வ­ரான 54 வய­தான டேவிட் வெய்ன் பிரேஸர் ஆபத்­தான ஒருவர் எனவும் அவர் ஆயுத முனையில் கொள்­ளை­ய­டித்த குற்­றச்­சாட் டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தந்­தை­யை இழந்த 236 பெண்­க­ளுக்கு திரு­மணம் செய்துவைத்த தொழிலதிபர்!!

 
இந்­தி­யாவின் மகேஷ் சவானி என்ற தொழி­ல­திபர் கிறிஸ்­மஸ் தினத்­தன்று தந்­தையை இழந்த வறுமை நிலை­யி­லுள்ள 236 இளம்­பெண்­க­ளுக்கு திரு­மணம் செய்து வைத்­துள்ளார்.

இந்த திரு­மண நிகழ்வு டிசம்பர் 25 ஆம் திகதி நடை­பெற்­றது. இதில் 100,000க்கும் அதி­க­மான விருந்­தி­னர்கள் கலந்து கொண்­டனர்.

மேலும் இந்த திரு­மண நிகழ்வில் மணப்­பெண்­க­ளுக்கு வீட்டு உப­யோகப் பொருட்கள், நகைகள், ஆடைகள் என இல்­லறம் நடத்த தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்­கப்­பட்­டன.

இது குறித்து வைர வியா­பா­ரி­யான மகேஷ் சவானி கூறும்­போது, “கடந்த வருடம் இதே போன்று தந்­தையை இழந்த 151 இளம்­பெண்­க­ளுக்கு திரு­மணம் செய்து வைத்தேன்.

2008ஆம் ஆண்டு முதல், தந்­தையை இழந்து பிற ஆத­ர­வு­களும் கிடைக்­காமல் இருக்கும் பெண்­களின் திரு­ம­ணத்­துக்கு உதவி புரிந்து வரு­கிறேன். இதனால் சுமார் 800 பெண்கள் என்னை அப்பா என்று அழைக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு நான் வளர்ப்புத் தந்­தை­யாகி உள்ளேன்.

சமூக சேவை செய்யும் குடும்பப் பின்­ன­ணி­யி­லி­ருந்து நான் வந்­தமையால், வறுமை நிலை­யி­லி­ருக்கும் பெண்­க­ளுக்கு உதவி செய்து வரு­கிறேன்.

ஒவ்­வொரு பெண்­ணையும் என் மகள் போல நினைத்து செலவு செய்­துள்ளேன். யாரா­வது மகளின் திரு­ம­ணத்தை நடத்த கணக்கு பார்ப்­பார்­களா-? எனவே நான் எந்தக் கணக்கும் பார்க்­க­வில்லை.

கடந்த வருடம் நடத்­தப்­பட்ட திரு­ம­ணத்­துக்கு 5 கோடி வரை செலவு செய்தேன். இந்த வருடம் இந்தத் தொகை கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. 2008 ஆம் ஆண்டு எனது பணி­யாளர் ஒருவர் அவ­ரது மகளின் திரு­மண நிகழ்­வுக்கு முன்­ன­தாக இறந்து விட்டார்.

அப்­போ­தி­லி­ருந்து தந்­தை­க­ளற்று வறு­மை­யி­லி­ருக்கும் பெண்­களின் திரு­ம­ணத்­துக்கு உதவி செய்து வரு­கிறேன். உதவி புரி­வதில் நான் இந்து, கிறிஸ்­தவர், முஸ் லிம் என மத வேறு­பாடோ, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வேறு­பாடோ பார்ப்­ப­தில்லை.

யார் என்­னிடம் உதவி கோரி­னாலும் அவர்­களை வர­வேற்பேன். என்­னிடம் உதவி கேட்டு வரும் இளம் பெண்­களின் தந்தையின் இறப்பு சான்­றி­தழை மட்­டுமே கேட்­கிறேன். இந்த மிகப் பெரிய திரு­மண விழாவில் 50,000க்கும் மேற்­பட்டோர் கலந்து கொண்­டனர்” இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.

ஒவ்­வொரு ஜோடிக்கும் மகேஷ் சவானி நகைகள், புத்­தா­டைகள் கொடுத்து வாழ்த்­தினார். அத்தோடு திரு­ம­ண­மான ஒரு பெண் புகுந்த வீட்­டுக்கு செல்லும் போது, கொண்டு செல்ல வேண்­டிய சீர்­வ­ரிசைப் பொருட்­க­ளுக்­கான அனைத்து செல­வு­க­ளையும் மகேஷ் சவானியே ஏற்றுக் கொண்டார்.

இதுவரை குஜராத்தைச் சேர்ந்த, 800 இளம் பெண்களுக்கு மகேஷ் சவானி திரு மண உதவி புரிந்துள்ளமை குறிப்­பி­டத்­தக்­க­­து.

36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டி சாதனை!!

தெலுங்கானாவில் தொழிலாளர்களின் தீவிர பணியால் 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டப்பட்டது. 90 நாளில் ஜாகித் யாலா மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவும் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

இதில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தீவிர கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டது. ஜாகித்யாலா மாவட்ட கலெக்டர் சரத் தசை மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. மேஸ்திரிகள், கூலி தொழிலாளர்கள், கட்டுமான பொருட்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையடுத்து நடிக்குடி கிராமத்தில் கலெக்டர் சரத், கழிப்பறைகள் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் மற்ற கிராமங்களில் கழிப்பறைகள் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கலெக்டர் ஒவ்வொரு கிராமமாக சென்று கழிப்பறை கட்டும் பணியை பார்வையிட்டார். தொழிலாளர்களின் தீவிர பணியால் 36 மணி நேரத்தில் 820 கழிப்பறைகள் கட்டப்பட்டது. 90 நாளில் ஜாகித் யாலா மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

14 வருடங்களின் பின்னர் விஜயுடன் நடிக்கும் ஜோதிகா!!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

பைரவா படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தின் நாயகியாக பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.
கதைப்படி இப்படத்தில் 3 நாயகிகள் நடிக்கவுள்ளார்கள், ஜோதிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் நாயகிகளாகவும், ஜோதிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

விரைவில் படப்பிடிப்பு திகதிகள் முடிவானவுடன் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

மேலும், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்ற படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது .

குஷி மற்றும் திருமலை படத்துக்குப் பிறகு விஜய் – ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் இது, சென்னையில் தொடங்கப்படவுள்ள முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவில் 2 ஆம் கட்டப் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஊளைச்சதையை குறைக்க 6 வழிகள்!!

துரித உணவுகளின் அதிகரிப்பால் உடல் பருமன் மற்றும் ஊளைச்சதை பிரச்சனையால் மனிதன் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளான். எனவே, ஊளைச்சதையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை பின்பற்றுங்கள்,

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்

பப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.

சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும் மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும்.

இதுதவிர வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும். உடல் எடையும் குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.

வவுனியாவில் தனியார் பேரூந்து விபத்து!!

 
வவுனியாவில் இன்று (29.12.2016) காலை 8.15 மணியளவில் தனியார் பேரூந்து ஒன்று பட்டா வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்டி வீதி மூன்றுமுறிப்பு இ.போ.ச. சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ள இச்சம்வம் குறித்த மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலிருந்து இன்று காலை 8.15 மணியளவில் கொழும்பு நோக்கிச் பயணித்த தனியார் பேருந்தின் மீது குருணாகலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மூன்றுமுறிப்பு இ.போ.ச. சாலைக்கு அருகாமையில் பேரூந்தின் நடுப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினரின் மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய சகோதரர்கள்!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள், குழந்தையின் தாயான தமது உறவு முறை சகோதரரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக குடாஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் கடந்த 21 ஆம் திகதி தனது குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். காலை வீட்டுக்கு வந்த கணவரின் சித்தப்பாவின் இரண்டு மகன்மார், அண்ணன் இருக்கின்றாரா எனக் கேட்டுள்ளனர்.

அவர் வேலைக்கு சென்றுள்ளதாக பெண் கூறியுள்ளார். அப்போது ஒரு சந்தேக நபர் குழந்தையை தூக்கி வைத்து கொண்டதுடன் மற்றைய சந்தேக நபர் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார்.

பெண், தண்ணீர் கொண்டு வர சமையல் அறைக்கு சென்ற போது சந்தேகநபர் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்ய போவதாக கூறி அச்சுறுத்தி அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த சந்தேக நபர் குழந்தையை தூக்கிக் கொண்ட பின்னர், மற்ற சந்தேக நபர் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாரிடமாவது கூறினால் , குழந்தையை கொலை செய்து விடுவதாக கூறி சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து பெண்ணின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று (28.12.2016) மதியம் 1.30 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழி நடத்தலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இன்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் மாவா எனப்படும் போதைப் பொருளுடன் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சோதனையை மேற்கொண்ட பொலிசார் வவுனியா, மன்னார் வீதியில் வைத்து குறித்த நபரிடம் இருந்து 3 கிலோகிராம் 500 கிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டது.

விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூமியை நோக்கி வரும் விண்கற்களால் பாரிய சுனாமி அனர்த்தம் ஏற்படுமா?

பூமியை இலக்கு வைத்து 100 மீற்றர் அளவிலான சில பாரிய விண்கற்கள் வந்து கொண்டிருப்பதாக நாசா நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

100 மீற்றர் அளவிலான விண்கற்கள் பூமியில் மோதினால் பாரிய அளவிலான உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அவ்வாறான ஒரு விண்கல் கடலில் விழுந்தால் எதிர்பார்க்க முடியாத அளவு பெரிய சுனாமி நிலைமை ஒன்று ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் இந்த கருத்துற்கு மாற்றாக மெக்சிகோவின் லொஸ் அலாமோஸ் தேசிய ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிய அளவிலான விண்கல் பூமியில் மோதுவதனால் ஏற்படும் பாதிப்பை விடவும் அரை பகுதியிலான பாதிப்பே கடலில் மோதினால் ஏற்படும் என பல ஆய்வுகளின் பின்னர் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய பாரிய அளவிலான விண்கற்கள் பூமியில் விழுந்தால் அதன் மூலம் பெரிய அளவிலான சுனாமி நிலைமை ஒன்று ஏற்படாதென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மெகா சுனாமியாக கருதப்படும் 100 மீற்றர் அளவிலான சுனாமி நிலைமை ஏற்படுவதனால் உயர்மட்ட நில அதிர்வு ஏற்படும். அந்த நில அதிர்வில் இருந்து வெளியாகும் சக்தி மிக பெரியவைகள் என அண்மையில் ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும் விண்கல் கடலில் விழுந்தால் பாரிய சுனாமியை ஏற்படுத்தும் அளவிற்கு சக்தி வெளியாகாதென இந்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறு கடலில் வீழும் அல்லது மோதும் போது நீரின் அழுத்தம் அலைகளாக பிரித்து செல்லும் எனவும், அதனால் அருகில் உள்ள பகுதிகளுக்கு சிறிய அளவிலான பாதிப்புகள் மாத்திரமே ஏற்படும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவில் கோர விபத்தில் பலியான இரு ஈழத் தமிழர்கள் : பொலிஸார் சந்தேகம்?

கனடாவில் பிக்கறிங்கில் Taunton வீதி மற்றும் Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்ட நிலையில் குறித்த இளைஞர்கள் பயணித்த Honda மற்றும் Toyota ஆகிய வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நேருக்கு நேர் மோதுண்ட வாகனத்தில் இருந்த இரண்டு ஈழத் தமழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்றும், குறித்த விபத்தில் சதீஸ் லோகநாதன் என்ற 35 வயதுடைய நபர் மற்றும் அதீஷ் பாலசுப்பிரமணியம் என்ற 21 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் இலங்கை சந்தத்தியை சேர்ந்தவர்கள் என அவர்களின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

சதீஸ் லோகநாதன்..

லோகநாதன், நல்ல வாழ்க்கை ஒன்று வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆறு வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றுள்ளார், அவர் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்துள்ளார்.

அவரது மனைவியையும் கனடாவிற்கு அழைத்து வந்து இருவருமாக பண சேமிப்பில் ஈடுப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சதீஸ் லோகநாதன், Whitbyயில் உள்ள Charley Ronick’s pub இல் கடமை முகாமையாளராக கடமை புரிகின்றார்.

அவரது திடீர் மரணம் தொடர்பில் உலக செய்திகளில் ஒளிபரப்பப்பட்ட நேரத்தில் அவருடன் பணியாற்றிய சக தொழிலாளர்கள் கலங்கிப் போயுள்ளனர்.

அதீஷ் பாலசுப்பிரமணியம்..

இதேவேளை, அதீஷ், ஒன்ராறியோ நிறுவனம் பல்கலைக்கழகத்தில் வணிக பட்டம் முடித்துள்ளார் என்றும் அவர் கருணை உள்ளம் கொண்டவராவார்.

இவர் நன்றாக பணிபுரிபவர் என்று அதீஷ் பாலசுப்ரமணியத்தின் சகோதரர் நிரோஜன் கூறியுள்ளார்.

விபத்து..

லோகநாதன் தனது காரின் கட்டுப்பாட்டை இழக்க காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மது பாவனையோ, காலநிலையோ இந்த பாரிய விபத்துக்கு காரணமாக இருக்க இயலாது என “டர்ஹாம்” பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரின் கார்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தால் 1-888-579-1520 மற்றும் 1-800-222-8477 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த தகவலை கனடாவின் பிரதான செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன.

-தமிழ்வின்-